
அகம்-33

லூசா டி நீ? அசால்ட்டா சொல்றே? ஒருவேளை உன் ஃபோட்டோ இருந்து ஃமார்ஃபிங் அது இதுன்னு பண்ணியிருந்தால் என்னடி பண்ணுவ? தாத்தாவுக்கு, உங்கப் பாட்டிக்கெல்லாம் தெரிஞ்சால் என்ன ஆகும்?”
“நான் என்ன தப்பு பண்ணினேன் பயப்படறதுக்கு? பொண்ணுங்களை ஏமாத்தறவனே தைரியமா நெஞ்சை நிமிர்த்திட்டு திரியறான். நான் ஏன் பயப்படணும்? அழகர் சொன்னிச்சு, நாம தப்பு பண்ணாதப்போ ஏன் பயப்படணும்? எதுவா இருந்தாலும் எதிர்த்து நிக்கணும்ன்னு சொன்னிச்சு! ஒருவேளை இதில் என் பேர் அடிபட்டுச்சுன்னா நானே போய் ரோஹனுக்கு எதிரா சாட்சி சொல்லுவேன்.!” துளி பயமில்லாது நிமிர்வாய் சொன்ன கருவிழியை அதிர்வு தேங்கிய முகத்துடன் பார்த்தாள் மது.
“நீ நினைக்கிற மாதிரி சின்ன விஷயம் இல்லைடி! ரோஹன் விஷயம் ரொம்பப் பெரிய இடம்! உனக்கு இதோட சீரியஸ்னஸ் புரியலை டி! நீ இதில் சம்மந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சது, உரு தெரியாமல் அழிச்சுடுவாங்க டி! இது விளையாட்டு இல்லை டி விழி!”
“நானும் விளையாடலை மது! உண்மையைத்தான் சொல்றேன். அதிலிருக்கிற எந்தப் பொண்ணும் விட்னஸா வரலைன்னாலும் நான் போவேன். எத்தனை பொண்ணுங்களை காதல் வலை விரிச்சு ஏமாத்தியிருப்பான்.? இவனெல்லாம் இந்த நாட்டில் சுதந்திரமா நடமாட தகுதியே இல்லாதவன். தகுதியில்லாதவனெல்லாம் ஏன் வெளியே இருக்கணும்? இருக்க வேண்டிய இடத்தில் இருக்கட்டும்.!” கோபத்தில் முகம் சிவக்க உரைத்த கருவிழியைப் பார்க்க மதுவிற்கு பயமாக இருந்தது.
“எனக்கு பயமா இருக்குடி! தேவையில்லாமல் எதையாவது செஞ்சு அதில் போய் மாட்டிக்காத டி! நீ இவ்வளவு தைரியமாய் பேசறதைப் பார்த்தால், நீ தான் ஏதோ செஞ்சிருக்கியோன்னு தோணுது.!”
“செஞ்சிருக்கேன் இல்லை, செஞ்சு முடிச்சுட்டேன்.! அந்த ரோஹன் மேலே எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. காலேஜில் எத்தனையோ பொண்ணுங்க அவனைப் பார்ப்பாங்க, ஆனால் அவன் கண்ணு என்னைப் பார்க்கும் போது, உள்ளுக்குள்ள ஒரு குளுகுளு ஃபீல் இருந்துச்சு. ஆனால் அந்தப் பிடித்தம் காதலான்னு எனக்குத் தெரியலை. அவன் கிட்டே காதலை நான் உணரவும் இல்லை. வீட்டில் நடந்த பிரச்சனையைச் சொல்லி, அவன்கிட்டே பேசினப்போ தான், அவன் என்கிட்டே லிவ்-இன் கேட்டான். இப்போ அது சாதாரணமா இருக்கலாம்! ஆனால் என்னால் ஏத்துக்கவே முடியலை. அந்த நேரத்தில் தான் நீ சொன்னதோட அர்த்தமும் எனக்கு புரிஞ்சது. அவன் பக்கத்தில் இருக்கும் போது பாதுகாப்பா என்னால் உணரவே முடியலை. பெயரிடப் படாத இந்த உறவே வேணாம்ன்னு விலகி வந்துட்டேன். ஆனால் அதன் பிறகு தான் அவனைப் பற்றின உண்மை எனக்கு தெரிஞ்சது. உண்மை தெரிஞ்ச பிறகு சும்மா இருக்க என்னால் முடியலை!” நிதானமும் அழுத்தமுமாய் சொன்னாள் கருவிழி.
“அப்போ அந்த ஆதாரத்தைக் கொடுத்ததே நீ தானா?” எனக் கேட்ட மதுவிற்கு குரல் நடுங்கியது. அமர்ந்திருந்த ஊஞ்சலிலிருந்து எழுந்து கருவிழியின் எதிரே வந்து நின்றாள் மது. துளி பயமில்லாது பதில் பேசாது,எதிரே அமர்ந்திருக்கும் கருவிழியைப் பார்த்தவளுக்குப் புரிந்து போனது, இவள் தான் எதையோ செய்திருக்கிறாளென்பது.
“என்ன ஆதாரம்? உனக்கு எப்படி கிடைச்சது?” கேள்விகள் சரம் தொடுத்தது மதுவிடமிருந்து.
“ஏய்.. ஏன் இவ்வளவு பதற்றம் மது? கொஞ்சம் பொறுமையாய் இருடி!”
“உனக்குப் புரியலைடி விழி! பதவி அவங்கக் கிட்டே இருக்கு டி! இதை வச்சு, அவங்க என்ன வேணும்ன்னாலும் பண்ணுவாங்க! பணம் அவங்க செய்ய நினைக்கிற எல்லாத்தையும் சாதிச்சுக் கொடுக்கும். நாம அப்படி இல்லை டி! அவனை விட்டு விலகி வந்ததும் நீ அமைதியாய் இருக்க வேண்டியது தானே? முட்டாள்தனம் பண்ணி வச்சிருக்கேடி விழி!” தொண்டை அடைக்கச் சொன்ன மதுவின் கண்களில் நீர் தேங்கி நின்றது.
“அவள் என்ன முட்டாள்தனம் பண்ணிட்டா? அவள் எல்லாமே சரியாகத்தான் செஞ்சு இருக்கா! நீ ஏன் பக்கி அவளைப் பயமுறுத்துற?” கருவிழியின் தோளில் கரம் போட்டபடியே வந்து நின்றான் துடிவேல் அழகர்.
“ம்ப்ச்! உங்களுக்குப் புரியலை! அவங்க பெரிய இடம். விழிக்கு எதாவது ஆகிடுச்சுன்னா..!” எனத் துவங்கியவளின் குரல், அழகரின் முறைப்பில் பட்டெனத் தடைபட்டு நின்றது.
“நான் உயிரோடு இருக்கும் வரை, இவளுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.! நீ போய் உன் வேலையைப் பாரு!” வெடுக்கென பதில் சொன்னான் அழகர்.
“அழகரு! சும்மா அவளைப் பயமுறுத்திட்டே இருக்காதே! பாரு மிரண்டு போய் நிக்கறா! நீ வா மது.. நாம உள்ளே போவோம்!” மதுவின் கரம் பற்றி உள்ளே அழைத்தாள் கருவிழி.
“இல்லை டி! அம்மா திட்டுவாங்க! பெரியவங்க இன்னும் பேசி முடிவு பண்ணலை இல்லையா? இங்கே வர்ரதே அம்மாவுக்குத் தெரியாது. பேசி முடிச்சப் பிறகு வரணும்ன்னு தான் தாத்தாவைப் பார்க்கக் கூட வரலை!” சொல்லி முடிப்பதற்குள் மதுவின் முகம் நாணத்தில் சிவந்தது.
“ஹேய்! வெட்கப் படறியா டி? அழகா இருக்க மது! இப்போ நெடு மாமா உன்னைப் பார்க்கணும்!” நாணத்தில் சிவந்த அவள் முகத்தை ஆட்காட்டி விரல் கொண்டு நிமிர்த்த முயற்சித்தாள் கருவிழி.
“விழி சும்மா இரு டி!” நாண மிகுதியில் தோழியின் தோளிலேயே முகம் புதைத்தாள் மது.
“நெடு மாமா உனக்கு சின்ன வயசிலிருந்தே தெரிஞ்சவர் தானே? உனக்கு மட்டும் எப்படிடி வெட்கமெல்லாம் வருது? எனக்கு அழகரைப் பார்த்தால் ஒண்ணுமே வர மாட்டேங்குது..!” அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்டாள் விழி.
“இருந்தால் தானே வரும்! கிறுக்கச்சி.. எந்நேரமும் தோளில் தொத்திக்கிட்டே திரிஞ்சா எப்படிடி வரும்?” சிரிப்பை அடக்கியபடியே அழகர் பேசவும்,
“போ மாமா! ஒருநாள் இல்லை ஒருநாள், உனக்கு வெட்கமே வராதான்னு நீயே கேட்கப் போற பாரு!”
“பொண்ணுன்னா வெட்கப்பட்டு தான் ஆகணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்லைடி கிறுக்கச்சி! நீ தன்னைப் போல இரு, அதுவே போதும்!” அவளை அவளாகவே ஏற்றுக் கொள்ளுமளவிற்கு பக்குவமாய் இருந்தான் அழகர்.
“ஏய்! சீமை சித்தராங்கி! யாரோட பேசிக்கிட்டு நிக்கிறே டி?” கரத்தினை சுருங்கியக் கண்களின் மேல் குடையாய்ப் பிடித்தபடி உற்றுப் பார்த்தபடியே நிதானமாய் நடந்து வந்தார் அங்கயற்கண்ணி.
“அச்சச்சோ! பாட்டி வர்ராங்க டி! என்னை இங்கே பர்த்தால் என்னமும் சொல்லிருவாங்களோ?” பதற்றமாய் வினவினாள் மது.
“அதெல்லாம் அம்மாச்சி ஒண்ணும் சொல்ல மாட்டாங்க டி!”
“அம்மாச்சி! என் ஃப்ரெண்டு மது இவ தான்.!”
“ம்க்கும்! மது புள்ளையைத்தேன், எனக்கு முன்னமே தெரியுமே டி! எம் பேரனைக் கட்டிட்டு வரப் போறவன்னு சொல்லு!” என்றபடியே மதுவை நெட்டி முறித்தார் அங்கயற்கண்ணி.
“ஆமா! பெரிய பேரன்! நானும் தான் உம் பேரனைக் கட்டப் போறேன்? என்னையெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதே?” பொய்க் கோபம் பூசினாள் கருவிழி.
“போடி! கேணைக் கிறுக்கச்சி! பிறந்ததிலிருந்து இந்த வீட்டில் தானே வளர்ந்தே? உனக்கு இங்கே எல்லாம் பழக்கந்தானே? மது அப்படி இல்லையே.? பயத்தோடயும், பதற்றத்தோடயும் வர்ர புள்ளைக்கு, இதுவும் உன் வீடுதேன், பயமெல்லாம் தேவையில்லையிங்கிற உணர்வை நாமதேன் கொடுக்கணும்! நீ வா மதும்மா!” என உள்ளே அழைத்துப் போனார் அங்கயற்கண்ணி.
மதுவை விறுவிறுவென அழைத்துப் போய் சொக்கேசனின் முன்னால் நிறுத்தினார் அங்கயற்கண்ணி.
சில நிட்களுக்குப் பின் மனைவியைக் கண்டதும் சொக்கேசனின் விழிகளில் ஒரு திடீர் பளிச்சிடல். கண்களில் ஒரு ஒளி வந்திருந்தது. மனைவியைப் பெயர் சொல்லி அழைக்க முயன்றார் உடலும் மனமும் சேர்ந்தே ஒத்துழைக்க மறுத்தது. ஆதரவாய் தோளும், அனுசரனையான பேச்சும் கொடுக்க ஆளில்லாது அரையாளாய் தேய்ந்து ஓய்ந்து போயிருந்தார் சொக்கேசன். இரண்டு மருமகள்களில் யாரையுமே அவர் கிட்டே நெருங்க விடவில்லை.
மருமகள்களை மகள் போல் நினைத்தாலும் கூட, சங்கடமாய் உணர்ந்தார் சொக்கேசன். ‘மருமக கையால் வாங்கித் திங்கணுமா?’ என்ற வீராப்பும் அவருக்குள் இருந்தது.
அவ்வப்போது மீனாட்சி மட்டும், தந்தைக்கு உணவு ஊட்டவோ, பேசிக் கொண்டிருக்கவோ வருவார். ஒவ்வொரு முறை தங்க மீனாட்சியைப் பார்க்கும் போதெல்லாம், தான் செய்த பாவம் தானே, தன் மகளை இப்படியொரு நிலையில் நிறுத்தியிருக்கிறது? என்றக் குற்றவுணர்வு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்று தின்றுக் கொண்டிருந்தது.
இப்போதும் கூட, தங்க மீனாட்சி தன் தகப்பனின் பக்கத்தில் அமர்ந்திருக்க, மகளின் பாசத்தில் நெகிழ்ந்தாலும், சொக்கேசனின் மனதில் உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாய், இத்தனை வருடங்களாய், ஓருயிர் ஈருடலாய் வாழ்ந்த மனைவியின் ஒதுக்கம் அவரை நிரம்பவும் பாதித்தது. அந்தப் பாதிப்பே உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின்னடைவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் சுவற்றைப் பிடித்துப் பிடித்து மெதுவாய் நடந்துக் கொண்டிருந்தவர், இப்போது சக்கர நாற்காலியே கதியென்று மாறிவிட்டார்.
மனைவியைப் பார்த்ததும், மனம் மழலையாய் மாறிப் போக, மனைவியைப் பெயர் சொல்லி அழைக்க முயன்றார். உடல் ஒத்துழைக்க மறுக்க, கண்களிலிருந்து கண்ணீர் இறங்கவாரம்பித்தது. ‘ஒண்ணுமில்லைங்க! சீக்கிரமே எழுந்து நடமாடிருவீங்க பாருங்களேன்.!’ என்ற மனைவியின் ஆறுதல் வார்த்தைகளுக்காக அவர் மனம் ரொம்பவே ஏங்கியது.
நொடிக்கு நொடி தனக்குள்ளேயே சித்திரவதைப்பட்டுக் கொண்டிருந்தார் சொக்கேசன்.
“இந்தப் பொண்ணு தான் மதுரிமா! நீங்க பார்த்ததாய் நினைச்சுட்டு இருக்கிற பொண்ணு தான். ஆனால், நம்ம அரசியும், பூங்கொடியும் இந்தப் பொண்ணு வீட்டில் பேசிட்டு வந்ததைத் தெரிஞ்சிக்கிட்டு, தரகர் மூலமா ஜாதகம் வாங்கிட்டு வரச் சொன்னது நான் தான். ஏன்னா எம் பேரன் நெடுமாறனுக்கு இந்தப் புள்ளையைத்தேன் புடிச்சிருக்கு. நெடுமாறன் விஷயத்தில் மட்டுமில்லை, அழகர் விஷயத்திலும், அவன் ஆசைப்பட்டது மட்டும்தேன் நடக்கும்! உங்க ஆசையும் அது தான்னு எனக்குத் தெரியும்! புள்ளையை ஆசீர்வாதம் பண்ணுங்க! உங்களுக்கு எதுவும் ஆகும் முன்னே புள்ளைகளுக்கு கல்யாணத்தை முடிச்சுப்புடணும்! நான் சொல்றது சரித்தானே?” எனக் கேட்ட மனைவியை கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தார் சொக்கேசன்.
‘உங்க ஆசையும் அதுதேன்னு எனக்குத் தெரியும்!’ என்ற வார்த்தைகளில் மனைவி தந்த அழுத்தத்திலே அவருக்குப் புரிந்தது, ‘உனக்குப் பிடிக்காவிட்டாலும், இந்தத் திருமணம் நடக்கும்!’ எனச் சொல்லாமல் சொல்கிறார் என்பதும் புரிந்ததது.
“எம்மா! ஏம்மா இப்படியெல்லாம் பேசுறீக? அப்பா அதெல்லாம் திடனா எந்திரிச்சு வந்து பேரன் பேத்தி கல்யாணத்தை பார்க்கிறாகளா இல்லையான்னு பாருங்க! ஒருநேரம் அவரை வந்துப் பார்த்துக்கிட்டால் தான் என்ன? அப்படி என்ன கோபம் உங்களுக்கு அப்பா மேலே?”
“நெருப்புன்னு சொன்னதும் வாய் சுட்டுடுமா? எல்லாரும் ஒருநாள் சாகத்தான்டி வேணும்! உங்க அப்பாரு மட்டும் சாகா வரம் வாங்கிட்டு வந்திருக்கிறாரா என்ன? உன் மவ கல்யாணத்தை இவர் பார்க்கணும்ன்னு உனக்கு ஆசையில்லையா டி?” கேள்வியை மகள்புறமாய் திருப்பினார் அங்கயற்கண்ணி.
“எனக்கும் ஆசை இருக்கத்தான் செய்யுது. ஆனால், அவர் முன்னவே வச்சு நீ இப்படியெல்லாம் பேசறது சரியில்லைம்மா! நல்லா இருக்கும் போது எங்க அப்பா உனக்குத் தேவைப்பட்டாரு! அவர் முடங்கினதும், ஏதோ வேண்டாத பொருள் மாதிரி தூக்கி போட்டுட்டீங்க! அவ்வளவு தான் இல்லை? இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் இவ்வளவு தானா? அப்பா மேல உனக்கு பாசமே இல்லைம்மா! ஆனால், நீ இப்படி இருப்பேன்னு நான் நினைச்சே பார்க்கலைம்மா!” என்ற மீனாட்சியின் பேச்சில் அங்கயற்கண்ணிக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
“இந்தாருடி! சில விஷயங்கள் கடைசி வரை இரகசியமா இருக்கிறது தான் நல்லது. யார் மனசும் சங்கடப்படாமல் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். எமன்கிட்டே சண்டை போட்டு உங்க அப்பன் உயிரை மீட்டுட்டு வர்ரதுக்கு நான் சாவித்திரியும் இல்லை! கட்டின கணவன்னு கூடையில் வச்சு சுமந்துட்டுப் போக நான் நளாயினியும் இல்லை! நான் அங்கயற்கண்ணி.! என் மனசுக்கு சரின்னு பட்டதைத்தேன் நான் செய்யறேன்.!” என்றவர்,
“நீ ஆசீர்வாதம் வாங்கிக்கம்மா!” என மதுவை சொக்கேசனிடம் ஆசி வாங்க வைத்தவர், அவளைக் கூட்டிக் கொண்டே வெளியேறிவிட்டார். அங்கே நின்றிருந்த அழகருக்கும், கருவிழிக்கும், ஏன் தங்க மீனாட்சிக்கும் கூட எதுவுமே புரியவில்லை. ஆனால் அங்கயற்கண்ணிக்கும் சொக்கேசனுக்கும் எதுவோ ஒன்று சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
“தாத்தா! அம்மாச்சி பேசுறாங்கன்னு எதுவும் நினைச்சுக்காதீங்க! சீக்கிரம் சரியாகி வாங்க தாத்தா! உங்க ஆசீர்வாதத்தோடும், அன்போடும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறோம். உங்களை இப்படி என்னால் பார்க்கவே முடியலை தாத்தா! முன்ன மாதிரி கம்பீரமா நிமிர்வா எழுந்து வாங்க!” அழுகைக் குரலில் சொக்கேசனின் முகம் பார்த்துப் பேசினாள் விழி.
“அய்யா! நீங்க வளர்த்தப் புள்ளைங்க நாங்க! நல்லதோ, கெட்டதோ, எங்களுக்கு எது நடந்தாலும் நீங்கக் கூட இருக்கணும்!” அவரின் உணர்வில்லாத கரம் பற்றி பேசினான் அழகர்.
‘தான் செய்த காரியத்தின் வினை, சூது வாதறியாத இந்தப் பிள்ளைகளைப் பிரிக்கப் போகிறதே?’ என்ற எண்ணம் தோன்ற, சொக்கேசனின் மனம் வேதனையில் விம்மித் தவித்தது. கத்திக் கதறியழுது, அழகரின் தோளில் முகம் புதைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆனால், எதற்குமே அவர் உடல்நிலை ஒத்துழைக்கவே இல்லை! வாய் திறந்து பேசவே வெகு சிரமாமய் இருந்தது. ‘உயிரோடு இருந்துக் கொண்டே மெல்லச் சாவது தான்.. எனக்கான தண்டனையா?’ மனதில் கேள்வியெழ பதிலைத் தேட திராணியற்று இறுக விழிகளை மூடிக் கொண்டார் சொக்கேசன்.
மூடிய விழிகளுக்குள் எப்போதும் போல், இரஞ்சிதத்தின் குரல் கேட்கத் துவங்கியிருந்தது. பாவமோ, புண்ணியமோ, எதைச் செய்தாலும் அதற்கான பலனை பைசா பாக்கியில்லாது அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும். ஆம்! அனுபவித்தே தீர வேண்டும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா நம்ப கரு கரு வா இது!
இம்புட்டு தைரியம் எங்க இருந்து வந்தது. தோள் கொடுக்க அழகர் இருக்கவும் துணிஞ்சு இறங்கிட்டா போலவே.
அவளை அவளாகவே ஏற்றுக்கொள்கின்றான் அழகர்.😍
சொக்கேசன் செய்த வினையின் பயனாய் ஓய்ந்து போன நேரத்தினில் ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோளும், அன்பான வார்த்தைகளும் அற்று கிடக்கின்றார்.
அங்கயற்கண்ணி பாட்டியின் பேச்சுகளும் செயல்களும் சுயகௌரவத்துடன் நிமிர்வாக உள்ளது. 👌🏼
“என் மனசுக்கு சரினு பட்டதை தான் செய்றேன்” 👏🏼👏🏼
பாவம் புண்ணியம் என்று எது ஒன்று செய்தாலும் அதன் பலன் எவ்வகையிலாவது கிட்டியே தீரும்.
உண்மை தான் டியர். எதை விதைக்கிறோமோ அதோட பலன் தான் திரும்பக் கிடைக்கும். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 💛