
சபதம் – 14
“உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை” (திருக்குறள் 761)
பொருள்: நான்கு அங்கங்களும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) சிறப்பாக அமைந்து, போர்க்களத்தில் வரும் துன்பங்களுக்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையானது, அரசனுக்குரிய செல்வங்கள் அனைத்திலும் தலைமையான செல்வம் ஆகும். இது படையின் வலிமையையும், அதுவே ஒரு அரசின் மிகச்சிறந்த செல்வத்தையும் வலியுறுத்துகிறது.
இருள் நிறைந்த அறையின் மங்கலான ஒளியின் கீழ், கனமான தேக்கு மேசையின் பின்னால் அமர்ந்திருந்தான் ப்ரிதவேந்தர சௌகான். அவன் கையில் இருக்கும் விஸ்கி கோப்பையை மெதுவாகச் சுழற்றிக் கொண்டே, விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
அவனது மோனநிலையைக் கலைக்கத் துடித்த கைப்பேசி அதிர்வதை அவன் கவனிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை கைப்பேசி ஒளி எழுப்ப, புருவத்தைச் சுருக்கி அதனைப் பார்த்தவன், திரையில் தெரிந்த தனது உதவியாளனின் எண்ணைக் கண்டதும் ஒரு சலிப்புடன், “இப்போ என்ன?”என்றான்.
அதற்கு மறுமுனையில் பதிலளித்த அந்தப் பதற்றமான குரல், “சார்…உடனே செய்தியைப் பாருங்கள். சீக்கிரம்” என்றதும் சௌகானின் புருவங்களைச் சுருக்கியபடி தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
திரை முழுவதும் அவசரச் செய்தி பட்டைகள் ஓடிக்கொண்டிருந்தது.
“மஹாராஜ சமர் சிங் – அரசின் நிலம் கைப்பற்றும் ஆணைக்கு எதிராக வழக்கு தாக்கல்.”
“உதயபூர் அரசவம்சம் அரசாங்கத்தை எதிர்த்து மனு தாக்கல்.”
“கர்ஹ் அதிவார் விவகாரம் தீவிரம்.”
அதைக் கண்ட சௌகானின் கையிலிருந்த கண்ணாடிக் கோப்பை தவறி தரையில் விழுந்து சிதறியது.
திரையில் தெரிந்த செய்தியில் சௌகானின் உதடுகள் அவனை மீறி,”இல்லை…இல்லை, இல்லை, இல்லை..” என்று முனங்கிக் கொண்டிருந்தன.
அந்த நேரம் திரையில் தோன்றிய செய்தியாளர்,”ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கர்ஹ் அதிவார் அரண்மனை மற்றும் அதன் சுற்றுப்புற நிலத்தை அரசு கைப்பற்ற முயல்வதை எதிர்த்து அரச குடும்பம் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்தக் கைப்பற்றல் அரசியலமைப்புக்கு முரணானது, பூர்வீக உரிமைகளை அரசு தரப்பு மீறுகிறது என மனு குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்.”
அதனைக் கேட்ட சௌகானின் முகம் வெளுத்து,”சமர் சிங்…கிழட்டு நரி” என்றபடி ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியின் ஒலியை அதிகரித்தான்.
மேலும் தொடர்ந்த செய்தி வாசிப்பாளர்,”மகாராஜா சமர் சிங், ராஜ்புத் குலங்களை ஒன்றிணைத்து இந்தக் கைப்பற்றலை பொதுவில் எதிர்க்க அழைப்பு விடுத்துள்ளார் என்றும்
ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இது அரசுக்கு மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றதும் கோபத்துடன் எழுந்த சௌகான் எதிரில் இருந்த மேசையை ஆத்திரத்துடன் முஷ்டியை மடக்கிக்குத்திக்கொண்டான்.
அடிபட்ட மிருகத்தைப் போல் அந்த அறையில் அங்கும் இங்கும் நடந்தவன், “ராஜபுத் குலங்கள் ஒன்றிணைந்தால்…நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டால்…முழு திட்டமும் சிதறும்” என்றவனின் நடை திடீரென்று நின்றது.
மூச்சு வேகமாகத் துடிக்க, வியர்வைத்துளிகள் முகம் எங்கும் முத்துமுத்தாய் பூக்க, அவன் உதடுகள் மெல்ல உச்சரித்த அந்த பெயர், “மாலிக்.. அவருக்குத் தெரிந்தால்..”என்று இழுத்தவனின் மனதுக்கு தெரியும் ‘அவன் உயிர் உடம்பில் மிஞ்சாது’ என்று.
தனக்குள் புலம்பிய சௌகான், ஒரு முடிவுடன் தன் தொலைப்பேசியில் நடுங்கும் விரல்களால் அந்த எண்ணை அழுத்தினான்.
ஒரு முறை ரிங்.
இரண்டாவது முறை.
மூன்றாம்முறை ஏற்கப்பட்ட அழைப்பில் எச்சில் விழுங்கிய சௌகான், “மாலிக்..” என்றவன் அந்தப்பக்கம் ஆள் இருப்பதாக தெரிவித்த உருமலில் தன்னை தேற்றிக் கொண்டு,”மாலிக்…சமர் சிங் வழக்கு தொடர்ந்திருக்கிறான். அரசுக்கு எதிராக. கைப்பற்றல் மனுவை எதிர்த்து” என்றதும் அங்கு நீண்ட அமைதி நிலவியது.
அந்த அமைதி சௌகானின் இதயத் துடிப்பை ஏகத்துக்கும் ஏற்றியிருக்க, இறுதியில் சவுஹானால் மாலிக் என்று அழைக்கப்பட்டவன் அமைதியான, ஆனால் ஆழ்ந்த குரலில், “மஹாராணா வம்சம் அல்லவா.. அந்த திமிர் இருக்கத்தான் செய்யும். போருக்கு துணிந்துவிட்டானா….” என்றதும் சௌகான் கண்களை ஒருமுறை இறுக மூடித்திறந்தவன்,”மாலிக்… நாம் அடுத்து என்ன செய்வது?“
மாலிக்கின் குரல், “நாம் எப்போதும் செய்வதையே செய்வோம். தடைகளை அகற்றுவோம்” என்றதும் சௌகான் உறைந்து நின்றவன், தன்னை மீட்டு கொண்டு, “அப்படியானால்….” என்றவனிடம் மாலிக்,”ஆம். மகாராஜாவின் காலம் முடியட்டும்..” என்றவன் சற்று இடைவெளியிட்டு, “அதோடு சௌகான்…” என்றதும் எதிரில் இருப்பவன் நடுங்கத் தொடங்கினான்.
அதை உணர்ந்து கொண்ட மாலிக்கின் உதடுகள் வளைந்து,”சமர் சிங் இந்த வழக்கில் வென்றால்…நீ தீர்ப்பை பார்க்க உயிரோடிருக்க மாட்டாய். உனது உயிரா? மகாராஜாவின் உயிரா? நீயே முடிவு செய்” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
சௌகான் அந்த இருண்ட அறையில் தனியாக நின்றவனின் உடல் நடுங்க மெல்ல முணுமுணுத்தான்,”சமர் சிங்…நீ புலி வாலைப் பிடித்துவிட்டாய் அது உன்னை இறையாக்காமல் விடாது.”
அரண்மனை வாயில்கள் மெதுவாக திறக்கப்பட்டன. மாலை இருளின் நடுவே, நீண்ட வாகனப் படை ஒன்று உள்ளே நுழைந்தது. முதலில் இறங்கியது அம்ஜத். அவனைத் தொடர்ந்து மீனாட்சி அவளது பெற்றோர்களுடன். காவலர்கள் மரியாதையுடன் வணங்கினர்; அவள் வருவதை angu அனைவரும் முன்கூட்டியே அறிந்திருந்தனர்.
ஆனால் மீனாட்சி முகம் வெளுத்து கண்கள் தொலைவில் உறைந்திருந்து.
அவளது தாய் ராதை மெல்ல மீனாட்சியின் தோள்களைப் பிடித்து,”மீனு…பாப்பா என்னடா ஆச்சு?” enra கேள்விக்கு மீனாட்சி பதில் சொல்லவில்லை.
அவள் பார்வை அரண்மனைச் சுவர்களில் ஒட்டிக் கொண்டு இருந்தது. “இங்கே… ஓசை அதிகமாக இருக்கிறது,” என்று மெல்ல சொன்னவள், மேலும் தொடர்ந்து, “நிழல்கள் கூட அதிகம்.”
அதைக்கேட்ட அம்ஜத்தும், அவளது தந்தை சுந்தரமும் கவலையுடன் பார்வை பரிமாறி கொண்டனர்.
மீனாட்சி மற்றும் அவளது பெற்றோருக்காக தனிப்பட்ட பாதுகாக்க நிறைந்த அறை தயார் செய்யப்பட்டு இருந்தது. antha அரை முழுதும் கனமான திரைகள், எரியும் தூபத்தின் மணம், கதவுக்கு வெளியே காவலர்கள் என்று அந்த அரண்மனையில் அவளுக்காக ஒரு தனி உலகையே உருவாக்கியிருந்தனர்.
அறையின் ஓரம் இருந்த பெரிய சாளரத்தின் அருகில் மீனாட்சி தரையில் பத்மாசனமிட்டு அமர்ந்தாள். அவளது பெற்றோர் அந்த அறையின் பிரம்மாண்டத்தில் அதிசயித்து அந்த சூழலில் ஒட்ட முடியாமல் மகளுக்காக அனைத்தையும் ஒருவித மோன நிலையில் அனைத்தையும் ஏற்று கொண்டிருந்தனர்.
மீனாட்சியை பார்த்தபடி அருகில் அமைதியாக அமர்ந்திருந்த ராதைக்கு மகளது மூச்சு சீராகி , கண்கள் மூடப்பட்டதை பதைபதைப்புடன் பார்த்திருந்தார்.
மீனாட்சி தன்னை மறந்த ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்திருந்தாள். அவளது விரல்கள் நடுங்கின. உதடுகள் ஒலியில்லாமல் அசைந்தன. அம்ஜத் மூலையில் நின்று பதட்டமாக அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.
திடீரென அவள் கண்களைத் திறந்து,“மன்னரை நான் சந்திக்க வேண்டும்…உடனடியாக,” என்று கிசுகிசுத்ததும் அம்ஜத் ஒரு நொடியும் தாமதிக்காமல் மன்னரின் அலுவலக அறை நோக்கி சென்றான்.
சில நொடிகள் கழித்து,கதவு திறந்து மஹாராஜ சமர் சிங் அந்த அறையின் உள்ளே பிரவேசித்தார். அவருடன் அம்ஜத் மட்டுமே இருந்தான். அமைச்சர்களும் இல்லை, காவலர்களும் இல்லை. அரண்மனையின் சுவர்களுக்குள் மறைந்திருக்கும் அபாயத்தை உணராமல் வந்து நின்றார்.
அவரின் காலடி ஓசையில் மீனாட்சி கண்களைத் திறந்தாள். அந்த கண்கள் கருவிழியை மொத்தமாக விழுங்கியது போல் வெள்ளை நிறமே இல்லாமல் ஆழமான இருளின் குளம் போல முற்றும் கரிய சாயம் பூசிக் கொண்டு அரசரை நேருக்கு நேர் நோக்கியது.
அவளின் நிலையை கண்ட ராதையும் சுந்தரமும் உள்ளம் துடிக்க மகளை பார்த்திருந்தனர். பெற்றவர்களின் நிலை உணர்ந்த அரசரும் சரி அம்ஜத்தும் சரி அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.
“அபாயம் உங்கள் சுவர்களுக்குள் இருக்கிறது, மஹாராஜா,” என்று மீனாட்சியின் வார்த்தையில் மன்னர் உறைந்தார்.
“என்ன அபாயம் பேட்டி?” என்ற மன்னருக்கு பதிலாக அவளது குரல் வெறுமையுடன்,“உங்கள் நம்பிக்கைக்குரிய மனிதர்களில் ஒருவர்…நிழலின் ஆள்.” என்றதை கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
அம்ஜத் அதிர்ச்சியில் தன் உடைவாளை உருவிக்கொண்டு அரசரின் அருகில் பாதுகாப்புக்கு நின்று கொண்டான்.
மன்னரின் தாடை இறுக,”யார்?” என்று கேட்க, அதற்கு,”தெரியவில்லை அரசே!”என்று மீனாட்சி தலையசைத்தவள், மேலும் தொடர்ந்து,”அவர் விசுவாசம் ,மரியாதை, கடமை என்ற காட்டுக்கு பின்னால் பதுங்கி இருக்கிறார்” என்றவளின் மூச்சு வேகமெடுக்க,”ஆனால் இப்போது அவர் இங்கே. இந்த அரண்மனையின் உள்ளே. உங்கள் அருகிலே தான் இருக்கிறார்.”
மீனாட்சியின் அருகே வந்த மன்னர்,”அவர்களின் திட்டம் என்ன பேட்டி?” என்ற கேள்விக்காக காத்திருந்தது போல மீனாட்சியின் குரல் ஆழமாக ஒலித்தது,”அரசரை கொல்வதே அவர்களது திட்டம். அதுவும் இன்றிரவுக்குள்” என்று முடித்தாள்.
அதைக்கேட்டு அந்த அறை முழுவதும் உறைந்து போனது போல் ஒரு அமைதி, ராதை அங்கிருந்த சூழ்நிலை புரியாமல் மகளுக்காக கண்கலங்க, அவரது தோளை அனைத்து பிடித்தபடி மகளை பதைபதைப்புடன் பார்த்திருந்தார் சுந்தரம்.
அம்ஜத் ஆயுதத்தைத் கைகளில் இறுக்கி பிடித்தபடி , அந்த அறைக்குள் யாரோ தாக்க வருவது போல் சுற்றி சுற்றி எச்சரிக்கையுடன் பார்வையை ஓட்டினான்.
மீனாட்சியிடம் “எப்படி?” என்று மன்னர் கேட்டார்.
மீனாட்சி மெதுவாக கையை உயர்த்தி, அரண்மனை வழித்தடங்களை நோக்கி சுட்டி காட்டினாள்.
“நிழலின் ஆட்கள் மூன்று பேர் ஏற்கனவே அரண்மனையின் உள்ளே நுழைந்துவிட்டனர்.தொழிலாளர்களாக வேடமிட்டு. மற்றவரின் சைகைக்காக காத்திருக்கிறனர்” என்றதும் மன்னரின் முகம் இருண்டது.
“சைகை யாரிடமிருந்து?” என்ற மன்னரின் கேள்விக்கு மீனாட்சியின் கண்கள் ஒரு நொடிக்கு பின்தள்ளப்பட்டு, பேசியவள்,”உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடமிருந்து. உங்களுக்குப் அருகில் இருப்பவரிடம் இருந்து. நீங்கள் எதிர்பாராத ஒருவரிடம் இருந்து.”
அதனை சொல்லி முடித்த மீனாட்சியின் உடல் நடுங்க, அவளது பெற்றோர் அவளைத் தழுவிக் கொண்டனர். அவர்களை பார்த்து நின்ற அரசருக்கு அதற்கு மேல் என்ன கேட்பது என்றும் புரியவில்லை.
அம்ஜத் அரசரின் அருகில் வந்து,”மஹாராஜா, உடனே அரண்மனையைப் பாதுகாக்க வேண்டும்” என்றதும் ஆமோதிப்பை தலையசைத்த அரசரின் மணிக்கட்டை இறுக்கி பிடித்த மீனாட்சி,”இன்றிரவு எந்த வித பாணத்தையும் அருந்தாதீர்கள். தனித்து இருக்கவும் வேண்டாம். முக்கியமாக பழக்கமானவர்களை நம்பாதீர்கள்” என்றாள்.
அதைக்கேட்ட மன்னர் அதிர்ச்சியுடன் அவளை நோக்கி,”இவை எல்லாம் உனக்கு எப்படி பேட்டி தெரியும்?” என்றதும் மீனாட்சி குரலில் மென்மையுடன்,”இந்த நிலம் என்னுடையது.
அன்னையின் உத்தரவு. கர்ஹ் அதிவார் விழித்தெழுகிறது… ஆரவள்ளி அன்னை அழைக்கிறாள். அவள் உங்களை காக்க விரும்புகிறாள்” என்றவள் தொடர்ந்து kulanthai தனத்துடன்,” இன்று அம்ஜத் உங்கள் பாதுகாப்புக்கு இருக்கட்டும்” என்றவள் தலையில் ஆசிர்வதிப்பது போல் கைவைத்த அரசர் சின்ன சிரிப்புடன்,”அம்ஜத் உனக்கு காவலுக்கு இருக்கட்டும். நான் இல்லாமல் போனால் இன்னொரு அரசன் வருவான். ஆனால் நீ…. எங்களின் பொக்கிஷம் அம்மா” என்றவர் அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
மீனாட்சியின் உடல் இதற்கு மேல் தாங்காது என்பது போல் தாயின் மடியில் சரிந்து விழுந்தாள்.
வெளியே சென்ற மன்னர் அசையாமல் நின்றார். ஆரவள்ளி மலைத்தொடரை வெறித்தபடி நின்றவரிடம், அம்ஜத் மெதுவாக கேட்டான்,”மஹாராஜா… தங்கள் ஆணை?”
மன்னரின் கண்கள் கோபத்தில் கொத்தித்தபடி,”உனக்கான கட்டளை மீனாட்சியை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. இன்று இரவு நான் வீழ்ந்தாலும் அவள் வாழவேண்டும்” என்ற ஆணையை எச்சில் விழுங்கியபடி ஏற்று கொண்டான்.
மேலும் தொடர்ந்தவர்,”அரண்மனையை மூடுச் சொல். துரோகி தானாக என்னிடம் வரவேண்டும். மெய்க்காப்பாள படையை தயார் படுத்து. இது ஆரவள்ளிக்கான முதல் யுத்தம்” என்றவறால் அபாயத்தின் தாளங்கள் இரவின் இருளில் துடிப்பதை உணர முடிந்தது.
ரணசூரன் வருவான்….

