
அத்தியாயம்-15
தன் கைகளில் தன்னை ஆச்சரியமாய் பார்த்தபடி தவழும் தன்னவளைக் கண்டு புரியாது விழித்தவன், அவளை மெல்ல நிமிர்த்தி நிற்கச் செய்ய, கண்கள் கலங்க அவனை இறுக அணைத்துக் கொண்டு “அ..அகர்” என்று அழுதே விட்டாள்.
யாவர் கண்களிலும் அதிர்ச்சி பிரவாகம் செய்ய, “மாமா.. அகாவுக்கு சீனியர எப்படி தெரியும்?” என்று விஷ்வேஷின் காதை ப்ரியா கடித்தாள்.
“என்னடி சொல்ற?” என்று விஷ் அவளைப் புரியாமல் பார்க்க,
“மாமா.. நான் சொல்லுவேன்ல என்னோட சீனியர் ஃப்ரண்டு” என்று வினவினாள்.
“ம்ம்.. ஆமா யூஜி படிக்கிறப்போ ஏதோ ரேகிங்ல ஃப்ரண்டானாங்கனு சொன்னியே?” என்று அவன் வினவ,
“ம்ம்.. அவர் இவருதான்” என்றாள்.
அமிர்தப்ரியா இளநிலை படித்த அதே பல்கலைக்கழகத்தில் தான் அகர்ணனும் படித்தான். ஒருமுறை ரேகிங்கில் அவளை பாட்டுப்பாட சொல்லி சில சீனியர்கள் ஓட்டவும், முதல் வருடம் அதுவும் முதல் நாளே கொடுத்த அனுபவத்தில் பயந்து அழுதேவிட்டாள்.
அப்போது அங்கு வந்த அகர்ணன், “டேய் என்னடா பண்றீங்க?” என்று தன் ஜுனியர்களைக் கண்டிக்க,
“சீனியர் சும்மாதான் ரேக் பண்ணோம், அதுக்குபோய் அழுறா” என்று ஒருவன் கூறினான்.
“எல்லாம் கிளாஸுக்குப் போங்க” என்று துறத்தியவன் அமிர்தப்ரியாவைப் பார்த்து, “ஹலோ உன் பேரென்ன?” என்று வினவ,
“அ..அமிர்தப்ரியா” என்றாள்.
“ம்ம்.. நைஸ் நேம்” என்றவன், “இதுக்கெல்லாம் அழுவாங்களா? காலேஜ் முதல் நாளே அழுதுட்டேவா உள்ள வருவ? காலேஜ்னா அப்டி இப்டினு நாலு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதுக்குலாம் அழுவியா? போல்டா இருக்கணும்” என்று அறிவுரை கூற,
“இ..இல்ல அ..அவங்க அதட்டுறாங்க ரொம்ப. ப..பயந்துட்டேன்” என்று தடுமாறினாள்.
“ம்ம் புரியுதுமா. அதுக்காக சும்மா பயந்து அழுதா அதையே யூஸ் பண்ணிட்டுதான் கலாய்ப்பாங்க” என்று அவன் கூற,
கண்ணீரை துடைத்தபடி தலையசைத்தாள்.
“எந்த கிளாஸ்?” என்று அவன் வினவ,
“ஃபர்ஸ்டியர் பேஷன் டிசைனிங்” என்றாள்.
“ஓ ஃபர்ஸ்டியரா? அதான் இந்த அழுகை.. போக போக பழகிடும் பாரு” என்றவன் தன் கைநீட்டி,
“அகர்ணன் இன்ஜினியரிங் ஃபைனல் இயர் (கடைசி வருடம்)” என்று கூறினான்.
தானும் நட்புக்கரம் நீட்டியவள் அவன் வழிகாட்டல்படி தன் வகுப்பை அடைய, அவ்வப்போது பார்த்தால் சிரிப்பது என்று துவங்கி படிப்படியாக இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர்.
விஷ்வேஷ், அமிர்தாவுக்கு இப்படி ஒரு தோழன் இருக்கின்றான் என்று அறிந்திருந்தானே தவிர பார்த்தது கிடையாது.
இங்கு அவள் அணைப்பு மற்றும் கண்ணீரில் குழம்பி இருந்த அகர்,
“அ..அவி” என்க, அந்த அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“எ.. என்னை தெரியுமா?” என்று இருவரும் ஒன்றுபோல கேட்டுக் கொள்ள, மேலும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மீண்டும் தன் அத்தை பெற்ற இரத்தினம் புறம் திரும்பிய விஷ், “இவனுக்கு அகாவை எப்படி தெரியும்?” என்று வினவ,
“அது ஒரு தனி கதை மாமா” என்றாள்.
“இதுக்குனுலாம் தனி கதை எழுத முடியாது அடுத்து ரெண்டு பேர் கதை வேற இருக்கு.. நீயே சட்டுனு ஷார்டா சொல்லு” என்று விஷ் கூற பாவையும் அதைக் கூறினாள்.
அன்று ப்ரியாவை கூட்டிக் கொண்டு சில தோழர்கள் மற்றும் தோழிகளுடன் பல்பொருள் அங்காடிக்கு வந்திருந்த அகர்ணன் அங்குள்ள திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.
படம் முடிந்து யாவரும் வெளியே வந்த நேரம் அவன் யார் மீதோ மோதிவிட, அந்தப்பெண் சற்றே தடுமாறியப்போதும் கையிலுள்ள பாப்கார்ன் கீழே விழாது தடுத்துக் கொண்டு, “சாரீ..” என்று கத்தியபடி உள்ளே சென்றுவிட்டாள்.
சென்ற பெண்ணை சிரிப்போடு பார்த்த அகர்ணன் திரும்புவதற்குள், “அட.. அகா..” என்று ப்ரியா கூற,
“யாருமா? உனக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேட்டான்.
“ம்ம்.. மாமாவோட ஃப்ரண்ட்” என்று சற்றே அந்த மாமாவில் மட்டும் வெட்கம் கொண்டு கூற,
“யாரு நீ கட்டிக்கபோற மாமாவா?” என்று சிரிப்போடே கேட்டான்.
“எதுக்கு சீனியர் சிரிக்குறீங்க?” என்றவள், “அவருதான்” என்று கூறி கண்களால் அவனைத்தேட,
அவளது தேடல் புரிந்தவனாக “உள்ள போய் பார்ப்போமா?” என்றான்.
“இ..இல்ல இருக்கட்டும்” என்று அவள் கூற, சிரித்தபடி அவள் கைபற்றியவன் உள்ளே சென்றான். ஆனால் அன்று அகா மற்றும் துருவன் மட்டுமே வந்திருந்தனர் போலும். துருவனிடம் சென்று தான் மட்டும் பேசிவிட்டு அவள் வந்திட, தான் இடித்த பூங்கொத்தை தேடிப்பிடித்து விழிவழி பருகிக் கொண்டிருந்தான். பார்த்த மாத்திரத்தில் காதலா என்றால் நிச்சயம் இல்லை. அவளைக் காணவேண்டுமென்று ஒரு ஆர்வம் அவன் கண்களில் குடிபுகுந்தது. ஆனால் அதுதான் அவனது ஆழ்மனக் காதலுக்கான வித்தென்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
அப்போது ஏதும் கூறிக்கொள்ளாமல் அவன் கடந்துவிட்ட போதும் அன்று கிளம்பும் முன்பே அவளை மூன்று முறைக்கும் மேலாக அங்கு பார்த்திருந்தான். சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருந்தது, அவள் மீது சாயும் மனதிற்கு அவன் கட்டியக் காரணங்கள் அனைத்தும். ஆனால் காதல் குழந்தைத்தனத்தின் உச்சம் அல்லவா?
சிலநாட்கள் அமைதியாக சென்றவனுக்கு நண்பர்கள் மத்தியிலோ வீட்டிலோ திருமணம் பற்றி பேச்செடுத்தாலே அவள் தன் மனதில் ஓடி மறைவது மெல்லப் புரிந்தது.
‘அதெப்படிடா பார்த்ததும் லவ் வரும்?’ என்று தன்னையே கடிந்துவிட்டு கடந்துவிட்டவனை கடக்கவிட தயாராக இல்லாத விதி, மீண்டும் ஒரு போக்குவரத்து நெரிசலில் அவளைச் சந்திக்க வைத்தது.
அதன் பின் ப்ரியாவிடம் அவளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டவனுக்கு அவள் மேல் சற்றே ஆர்வம் துளிர்த்தது. அகர்ணன் தாய் அமுதாவும் தந்தை ராகவனும் காதல் திருமணம் செய்தவர்கள். அதனால் அவனுக்கு வீட்டில் காதலுக்கு தடையில்லை.
கல்லூரி காலங்களில் உடன் படித்த யார் மீதும் அவனுக்கு காதல் வரவும் இல்லை. ஏன் தன்னை விட சிறிய பெண், அழகான பெண் என்று ப்ரியாவிடம் கூட அவனுக்கு ஏதும் சலனமில்லை. காதலெனும் உணர்வு, எதிர்பாரத நேரத்தில், எதிர்பாராதோரின் மீது வருவதில் தானே சுவாரஸ்யம் உள்ளது?
இந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து தனக்குள் ‘ஏன் இப்படி அவள் மீது ஈடுபாடு? என்ன செய்கின்றாள் தனக்குள்?’ என்று அறியாதவன் அவளைப் பற்றி பலதும் தெரிந்துகொள்ளத் துவங்கினான். அவளது விருப்பு வெறுப்பிலிருந்து, பழக்கம் மற்றும் குணம் வரை தெரிந்து கொண்டவன் ஒருவித திருப்தியடைந்தான்.
தான் அறிந்த வரை அவளது நல்ல குணமும் குறும்பு பேச்சும் யாரையும் புண்படுத்தாத செயலும் மட்டும் அவளைத் தன் சரிபாதியாக தேர்ந்தெடுத்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.
மேலும் தான் தெரிந்துகொள்ள ஏதுமிருந்தால் வாழ்ந்து புரிந்துகொள்வோம் என்ற முடிவுடன் முதலில் ப்ரியாவிடமே தன் காதலைக் கூறினான். அகாவின் வீட்டில் காதலுக்கு ஒப்புக்கொள்வரா என்று தெரியாத போதும் அவர்கள் ஜாதி மதம் பார்ப்பவர்கள் இல்லை என்பது அறிந்த ப்ரியா ‘ஒரு நல்ல நிலைக்கு வந்துட்டு பொண்ணு கேளுங்க சீனியர். தாராளமா உங்களுக்கு தூக்கி தந்திடுவாங்க’ என்று கூறியிருந்தாள்.
அதில் தானும் உறுதியாக இருந்தவன் தோழி சொல்படி முன்னேறி வந்தபிறகு முதலில் தன் காதலை தன்னவளுக்குத் தெரிவிக்க வேண்டி, அதை கடிதமாகக் கொடுக்க ஆசைப்பட்டான். நேரில் சென்று கூறிட தயக்கமா? இல்லைக் காதலைக் கடிதம் வழி சேர்ப்பிக்கும் ஆர்வமா? அது அவனே அறியாதது..
எழுதி ப்ரியாவிடம் கொடுத்தனுப்பியிருக்க, அவள்தான் கல்லூரி காலத்தில் காதல் கடிதம் கொடுத்ததற்கு யாரையோ அகா துறத்தி துறத்தி அடித்த கதையின் நினைவில் பயந்து அதை கொடுக்கத் தயங்கினாள். அவளுக்கு எப்படித் தெரியும் அது ஜானுக்காக இவளிடம் கொடுக்கப்பட்ட தூது கடிதம் என்று?
அன்றே தங்கள் நிறுவனத்தில் அகநகை வேலை கேட்டு வந்த விபரங்களைக் கண்டிருந்தவன் நிச்சயம் அவளுக்கு வேலை கிடைக்கும் என்பதை கண்டறிந்துக் கொண்டு இனி நேரில் கூறிக் கொள்ளலாம் என்று பொறுமையாக இருந்தான்.
கதையை முடித்த ப்ரியா வானை நோக்கிய பார்வையை விலக்கி விஷ்ஷைப் பார்க்க, அவன் இன்னும் வானத்தையே தான் பார்த்திருந்தான்.
அவன் தோளிடித்தவள், “கதை முடிஞ்சது” என்க,
“ஓ.. அவ்ளோதானா..? நைஸ்” என்றான்.
அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படித் தெரியும் எனக் கேட்டுக் கொண்டதில் சுருக்கமாக அகர்ணன் அவளைக் காதலித்ததைப் பற்றி கூற, அதிர்வோடு அவனைப் பார்த்தாள்.
‘பரவாலயே.. நம்மளும் வர்த் ஃபிகர் தான் போல’ என மனதோடு பெருமைப்பட்டுக் கொண்டவள் தோள் பற்றி உலுக்கியவன் “உனக்கு என்னை எப்டி தெரியும்?” என்று வினவ,
“சபாஷ் சரியான கேள்வி” என்று கைகளைத் தட்டியபடி ஜான் கூறினாள்.
அதில் அகா சட்டென அவளைத் திரும்பிப் பார்த்து முறைக்க,
ஒலிக்காத அலைபேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டு, “ஹலோ அமேரிக்க அதிபரா? நான் இங்க ஒரே பிஸி..” என்றபடி சென்றாள்.
அதில் துருவனும் விஷ்வேஷும் சிரித்துக் கொள்ள,
“தெரியும்.. ராஜ் சாரோட பி.ஏ.. நான் மனதார நேசிப்பவர். முன்பே உங்கள கோவில்ல பார்த்திருக்கேன். எங்க உங்கள பார்க்காமலே போயிடுவேனோனு பயந்துட்டேன்” என்று முற்றும் முழுதும் அவள் உரைத்த உண்மை, அவனுக்கு ஏற்றார்போன்ற காரணமாகவும் பொருந்திக் கொண்டது.
அதில் தான் நேசித்தவளும் தன்னையே நேசித்திருப்பதை உணர்ந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர பார்த்தவன், “நிஜமாவா?” என்க,
அவனை இறுக அணைத்துக் கொண்டு, “ஆமா.. ரொம்ம்ப பிடிக்கும்” என்றாள்.
“இ..இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்ல அவி.. இ..இட்ஸ் ரியலி சர்பிரைஸிங்” என்று அவன் கூற,
கண்களில் இன்ப நீரோடு, “எனக்கும் தான்” என்று கூறினாள்.
அவனைக் காணமல் தவித்த தவிப்பும், காண முடியாதோ என்ற பரிதவிப்பும், அவன் வதனம் கண்டு, அவன் ஸ்பரிசம் உணர்ந்து, குரல் கேட்ட நொடி, தவிடுபொடியான உணர்வு. மனதிலிருந்த காதல் வலியெனும் பெரும் பனிப்பாறையை ஆதவன் அவன் தன் இருப்பால் உருக்கி, கண்ணீரால் கசிந்துருக வைத்திருந்தான்.
தோழர்கள் யாவரும் புன்னகைக்க, “மாமா.. செம்ம ஹேப்பியா இருக்கு. அகாவுக்கு சீனியர் பெஸ்ட் சாய்ஸ்” என்று கூற,
தன்னவள் கரம் பற்றி தன்னோடு இழுத்துக் கொண்டவன், அவள் நெற்றி முட்டி “ஆமா..” என்றான்.
யாவரும் மகிழ்வான மற்றும் நிறைவான மனதோடு புன்னகைக்க, அகநகை அறையிலிருந்த அந்த சீட்டுக் கட்டு ஒவ்வொன்றாக பறந்து காற்றில் மிதந்தன. மிதந்த சீட்டுக்கள் சிலவற்றில் தங்க நிற எழுத்துக்கள் மினுமினுக்க, அவற்றில் ‘Its just a beginning’ என்ற வாக்கியம் ஒளிர்ந்து சீட்டுகள் மீண்டும் டப்பாவிற்குள் சென்று அடைபட்டுக் கொண்டன..!

