
விடியும் முன்..!
அத்தியாயம் 27
தன் முன்னே வந்து நின்றவனைக் கண்ணாடியின் ஊடு கண்டதுமே தூக்கிப் போட்டது,பெண்ணவளின் உடல்.
“வாசு சைக்கோ..” தன்னை மீறி இதழ்கள் உச்சரிக்க பக்கத்தில் இருந்த செழியனின் முகத்தைப் பார்த்திட அவன் முகத்திலும் கலவர ரேகைகள்.
வாசு வந்திருப்பதாக தந்தை சொன்ன தகவலைக் கேட்டிருந்தாலும் எதிர்பாராமல் வாசுவைக் கண்டதும் செழியனின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி.
அண்ணனின் வாழ்வில் விளையாடிய அரக்கன் என்பதால் கோபமும் சேர்ந்து வந்தது.
மிதர்ரஸ்ரீயின் புறம் திரும்ப அவளோ பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாது அமர்ந்திருக்க வண்டியில் இருந்து இறங்கி வந்த வாசு காரின் முன்னே நிற்க ஏதோ ஒரு உத்வேகத்தில் மித்ரஸ்ரீ சொல்லியும் கேளாது வண்டியில் இருந்து இறங்கினான்,செழியன்.
நிச்சயம் அது குருட்டு தைரியம் தான்.சமயோசிதமாய் யோசிக்காது கீழே இறங்கியவனின் செயலில் தலையில் அடித்துக் கொண்டவளின் அலைபேசியும் சார்ஜ் தீர்ந்து அணைந்து போயிருக்க பயமாகிற்று.
தன் முன்னே வந்து நின்ற செழியனைக் கவனியாது உள்ளே அமர்ந்திருந்தவளையே தன் பார்வையால் அளவெடுக்க செழியனின் கோபம் எல்லை கடந்தது.
“என்னடா அங்க பாக்கற..?” வாசுவின் சட்டையை பிடித்து எகிறிக் கொண்டு வந்தவனை இகழ்ச்சியாக பார்த்தவனோ செழியனுக்கு அறை விட சமநிலை தவறி கீழே விழுந்தவனைப் பார்த்துக் கத்திக் கொண்டு வண்டியில் இருந்து கீழே இறங்கினாள்,அவள்.
வாசுவின் உடல் வலிமையைக் உணர்ந்து கொண்டவனுக்கு அவனை தன்னால் எதிர்க்க முடியாதென்று தோன்றிட தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவனுக்கு மித்ரஸ்ரீயை காப்பாற்றுவது மட்டுமே இப்போது மனதின் எண்ணமாய்.
“செழியா..” கத்திக் கொண்டு பெண்ணவள் நெருங்கி வரும் முன்னரே “பேப்ஸ்” என்ற அழைப்புடன் வாசு அவளை நெருங்க பயத்தில் மொத்தமாய் தளர்ந்து விட்டவளுக்கு விழிகள் வியர்ததன.
“பைத்தியக்காரி அமைதியா யோசி..” ரிஷியின் குரல் செவிகளில் எதிரொலிக்க செழியனைப் பார்த்தவளுக்கு அவன் விழிகளாலே சைகை செய்ய ஏதோ யோசித்தவளோ வாசுவைப் பார்த்த படி பேசாமல் நின்றாள்.
“என்ன பேப்ஸ் எதுவும் பேசாம அமைதியா நின்னுட்ட..?” கேட்ட படி கன்னத்தை தொட முயன்றவனின் கரத்தை விலக்கி விட்டு இதழ்களை இறுகப் பூட்டி அழுத்தமாய் நிற்க வாசுவுக்கு கோபம் வந்தது.
“என்னடி..விட்டா ஓவரா பண்ற..ஒருத்தன் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கான்னு ஓவரா தான் பண்ற நீ..” பின்னந்தைலை சிகையை இழுத்து இறுக்கி தன்னைப் பார்க்கச் செய்த படி அவன் கேட்க அவனின் நெருக்கத்தில் அவளுக்கு உடல் அறுவறுத்தது.
“விடு வாசு..” திமிறிய படி தன்னை விடுவிடுத்துக் கொண்டவளுக்கு தற்போது தப்பிக்கும் எண்ணமே முதன்மையாய்.
“இங்க பாரு பேப்ஸ்..நா உன்ன ரொம்ப லவ் பண்றேன்னு உனக்கே தெர்யும்..அதுக்கப்றம் எதுக்கு பேப்ஸ் இப்டி அவாய்ப் பண்ற..உனக்குப் புரிதுல..ஐ லவ் யூ..ஐ லவ் யூ ஸோ மச்..” என்று உருகிய படி வசனம் பேச அப்படியே ஓங்கி ஒன்று விட்டிருந்தாள்,கன்னத்தில்.
சுதாரிக்கும் முன்னே மண்ணை எடுத்து அள்ரி அவனின் முகத்தில் வீசி விட்டு பக்கத்தில் இருந்த காட்டின் வழி புகுந்து ஓடிட தன் கண்களை கசக்கிக் கொண்டு இயல்பு மீள சில நிமிடங்கள் தேவைப்பட்டது,வாசுதேவனுக்கு.
அவளின் செயலை உணர்ந்த பின் கோபம் தலைக்கேறிட சுற்றும் முற்றும் விழிகளால் தேடியவனின் விழி வீச்சுல் விழவில்லை,பெண்ணவள்.
எந்தப் பக்கம் ஓடியிருக்கக் கூடும் என்று சரியாய் ஊகித்தவனும் இரை மாட்டிய திருப்தியில் சாவகாசமாய் நடக்கத் துவங்கினான்,அவள் சென்ற அந்த காட்டின் ஊடு.
களைப்பை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஓடியவளுக்கு ஒரு கட்டத்தில் இருட்டிக் கொண்டு வர அருகே இருந்த புதரொன்றுக்கு கீழே குனிந்தாலும் பயத்தில் உயிர் வரை நடுக்கம்.
கைகளால் வாயைப் பொத்திய படி மூச்சு வாங்கியவளின் செவியைப் பாதச் சத்தமொன்று நிறைக்க வாசு தான் என்கின்ற எண்ணம் தோன்றிட விழிகள் கலங்கி விட்டன.
நிச்சயம் தனக்கு ஏதாவது செய்து விடுவான் என மனம் உறுதியாக நம்ப கண்களை துடைத்துக் கொண்டு இன்னும் ஒடுங்கியவளின் வாயைப் பொத்தியது,வலிய கரமொன்று.
●●●●●●●●
நேரம் மாலை நான்கு மணி முப்பது நிமிடம்.
கோயிலின் வெளிப்புறமாய் இருந்த மதிலோ முன்புறத்திலும் பக்கப்புறத்திலும் பெரும் உயரமாய் இருக்க பிற்புறத்தில் மட்டும் இலேசாக இடிந்து கிடந்தது.
அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து வைத்து அதில் ஏறி மதிலுக்கு தாவி முதலில் உள்ளே நுழைந்தது,தர்ஷினி தான்.
“மித்ராவ கூட்டிட்டு வந்துருந்தா நல்லாருக்கும்..” உள்ளே குதித்த கணத்தில் மனதில் தோன்றிய எண்ணம் இது தான்.
எட்டி காவேரியின் கையில் இருந்த சிறு கொள்கலனை வாங்கிக் கொள்ள அதனைத் தொடர்ந்து காவேரியும் உள்ளே குதிக்க தூசு படிந்து பழமையுடன் காட்சியளித்த கோயிலை பிரமிப்புடன் பார்த்திட அந்த இடமே பட்டுத் தெறித்த சூரிய ஒளியில் வித அழகாய் தெரிந்தது.
பல வருடம் மூடப்பட்டு இருந்தது என்று கூறியதற்கு இணங்க அவள் எண்ணி வைத்தது போல் அத்தனை அசுத்தமாய் இல்லை,அந்த இடம்.
ஆங்காங்கே இலை தழைகள் விழுந்து பாசி படிந்து கிடந்தாலும் ஆட்கள் நடமாட ஏதுவாய்த் தான் இருந்தது,அவ்விடம்.தர்ஷினியோ இப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
“காவேரி..”
“ஷ்ஷ்..உஷ்ஷ்ஷ் மெதுவா..”
“சாரி சாரி..இந்தக் கோயில் ரொம்ப நாளா மூடித் தான இருந்துச்சு..ஆனா கொஞ்சம் க்ளீனா தான இருக்கு..”
“இப்ப ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யாருக்கும் தெரியாம கொஞ்சம் பசங்க கீழ் வழியா வந்து ரெண்டு நாள் தங்கி கோயில க்ளீன் பண்ணிட்டுப் போனாங்க..அதான்..” என்க உள் நுழைந்தவளுக்கு கீழே செல்லும் படிக்கட்டு ஒன்று தென்பட விழிகளில் ஆர்வம் மின்னியது.
“இது என்ன படிக்கட்டு..இதுக்குள்ளால போகலாமா..?” என்று ஆர்வத்துடன் கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்த காவேரியும் அலைபேசி டார்ச் வெளிச்சத்துடன் அழைத்துச் சென்றாள்.
தந்தை இருக்கையில் அவருடம் பலமுறை அந்த கீழ் தளத்துக்கு நுழைந்து அவ்விடத்தை ஆராய்ந்து இருப்பதால் பயமேதும் இல்லை,பெரிதாய்.அண்மையில் மருதவேலுடனும் வந்து சென்றிருந்தாள்.
அந்தப் படிக்கட்டு வழியே இறங்கும் போது அது ஒரு மண்டபம் புலப்பட படிக்கட்டை ஒட்டியிருந்த சுவற்றில் சில ஓவியங்கள் கிறுக்கப்பட்டு தெரியாத மொழியில் அதற்கு கீழே ஏதோ எழுதப்பட்டு இருந்தது.
தர்ஷினியோ அவற்றைப் பார்த்த படி ஐந்தாம் படியில் நிற்க கீழிருந்து திரும்பி அவளைப் பார்த்தாள்,காவேரி.
“என்ன தர்ஷினி..?” அவளின் மெல்லிய குரல் அவ்விடத்தில் தெளிவாய்க் கேட்க கூடவே அதற்கான எதிரொலியின் சத்தமும் செவியை அடைந்தது.
“இல்ல..எஃகோ கேக்குது..”
“இந்த மண்டபத்துல ஒன்னும் இல்ல..அதான் எஃகோ கேக்கும்..ஆமா நீங்க எதுக்கு அங்க நின்னுகிட்டு இருக்கீங்க..?”
“அது..இந்த எழுத்த பாத்தா சமஸ்கிருத எழுத்து மாதிரி இருக்கு..அந்த லெங்குவேஜ் தானா..? ஆமா இங்க என்ன எழுதி இருக்கு..?” குழந்தை ஓவியம் ஒன்றுக்கு கீழ் எழுதப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டி கேட்டாள்.
“ஆமா அந்த லெங்குவேஜ் தான்..நீங்க கேக்கறது நாலாவது ஃபோட்டோக்கு கீழ எழுதி இருக்கிறதோட மீனிங் என்னான்னு தான..கருவில் முதலில் உருவாகும் சிசுவே வம்சத்தின் முதல் வாரிசுன்னு எழுதி இருக்கு..”
“ஓஹ்..அப்டின்னா இது என்ன..?” அதற்கு கீழிருந்த ஓவியத்துடனான வசனங்களை சுட்டிக் காட்டியாது,அவளின் விரல்கள்.
“அதுவா..தவமின்றி கிடைக்கும் வரம் இது..” என்ற படி கீழே இறங்க ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கேட்ட படி கீழே நடந்து அந்த மண்டபத்தின் மையத்தை அடைந்தவளின் பார்வை நாலாப்புறமும் சுழன்றது.அத்தனை பெரிய மண்டமில்லை அது.நால்வர் வசிக்கக் கூடிய வீட்டின் அளவு இருக்கும்.
அந்த மண்டபத்தின் சுவர் முழுக்க ஓவியங்கள்.அலைபேசி டார்ச் வெளிச்சத்தில் பெரிதாய் பார்க்க முடியாதிருக்க அவசரத்தில் மின்சூளொ மறந்து விட்டு வந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்,காவேரி.
“இது ஃபுல்லா அந்த வரம் பத்தின கத தான்..” என்ற படி மண்பத்தின் முன் பக்க இடது புற மூலைக்கு அழைத்துச் சென்றாள்,தர்ஷினியை.
“ஆரம்பத்துல இந்த மண்டபமும் இதுக்கு மேல ஒரு சின்ன மண்டபமும் தான் கோயிலா இருந்திச்சாம்..அதுக்கப்றமா தான் புதுசா கட்டுனாங்களாம்..”
“ம்ம்ம்ம்..”
“இந்த செவரு ஃபுல்லா இருக்குறது ஒரு கத..இங்க இருந்து ஆரம்பிக்கும்..இது யாரோட கதன்னு கன்ஃபார்ம் பண்றதுக்கு எந்த ஆதாரமும் இல்ல..அப்பா தான் இந்த பெய்ன்டிங்க் எல்லாம் பாத்து பழய புக்ஸ், ஊர்ல ஒவ்வோரு எடத்துல இருந்து கெடச்ச ஆதாரம், பழய ஆளுங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்ட விஷயம் எல்லாத்தயும் வச்சு ஒரு கதய சொன்னாரு..நூத்துக்கோ எழுபத்தஞ்சு பர்சன்ட் கரெக்டா இருக்கும்..” என்க ஆவலுடன் காவேரியை நோக்கின,தர்ஷினியின் விழிகள்.
●●●●●●●
மீண்டும் தாங்கள் வந்த இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த நிவேதாவுக்கு அந்த பெண் கூறிய விடயங்களில் தான் மனம் உழன்று கொண்டிருந்தது.
“தோப்பு வீட்டுப் பக்கம் போகாதீங்க..” எச்சரித்து விட்டு அந்தப் பெண் நகர்ந்திட இவளுக்குத் தான் அந்த விழிகளில் தெரிந்த கடுமையை கண்டு பயம் பரவிற்று.
பார்ப்பதற்கு தைரியமான பெண்ணாக தோன்றினாலும் ஏன் அப்படி சொல்ல வேண்டும் என்பதே பெரிய குழப்பம்.
யோசனையுடன் திரும்பியவளின் பார்வை தன் பின்னூடு வந்த ஜீவாவிலும் விஜய்யையும் தழுவ சத்யாவிடம் வாங்கப் போகும் திட்டை நினைத்து மனதுக்குள் பயம் வேறு.
பாதி திரட்டிய தகவல்களுடன் சத்யாவுக்கு அழைப்பெடுக்க அவன் அவசர கதியில் வரச்சொல்லவும் தான் தற்சமயம் கிளம்பி இருப்பது.
அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திட பதினைந்து நிமிடங்கள் பிடிக்க அந்த வீட்டுக்குள் நுழைய அவர்களின் குழுவை தவிர மற்றைய அனைவரும் அங்கு தான் குழுமியிருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை,அவள்.
முன் முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்த சத்யாவைக் கண்டதும் இன்னும் அதிர்வே.
அவனின் முகத்தில் தீவிரம் கொட்டிக் கிடந்தது.
சத்யாவிடம் கேட்க முடியாமல் மனதை பயம் கவ்விட வீட்டினுள் நுழைந்தவளின் விழிகளில் முதலில் வீழ்ந்தது என்னவோ,
கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் சீரான சுவாசத்துடன் சயன நிலையில் இருந்த ரகு தான்.
“இந்தப் பைத்தியம் வேற..ஒரு எடம் கெடச்சா போதும்..அப்டியெ தூங்கி தொலச்சுரும்..மெண்டல்..” நடந்தது எதுவும் தெரியாது மனதால் அர்ச்சித்த படி அவனருகே தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த கிருஷ்ணாவைப் பார்க்க அவனோ விழி நிமிர்த்தி பார்க்கவில்லை,யாரையும்.
“என்னடி ஆச்சு..?எல்லாரும் இங்க இருக்கீங்க” அருகே நின்றிருந்த தோழியரின் காதைக் கடிக்க தமக்குள் பார்த்துக் கொண்டவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.
“என்னாச்சுன்னு சொல்லுங்கடி..”
“நிவி..ரகு அந்த கோயில்ல ஏதோ பாத்து மயங்கி விழுந்துட்டானாம்..என்ன பண்றதுன்னு புரியாம அவங்க டீம் கெளம்பி வந்துருக்காங்க..எங்க டீமும் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண போன எடத்துல எதுவும் கெடக்காததனால திரும்பி வந்துட்டோம்..யாரோ ஃபோன் பண்ணி ரகு மயங்கி விழுந்தத சொன்னதால சத்யாவும் கிருஷ்ணாவும் உடனே வந்துட்டாங்க..அதான் எல்லாரும் இங்க இருக்கோம்..”
“ஓஹ்ஹ்ஹ்ஹ்..” என்ற படி கிருஷ்ணாவைப் பார்க்க அவனோ சோமபல் முறித்த படி எழுந்து நின்றான்.
சத்யா தான் அவனை ரகுவின் பக்கத்தில் இருக்குமாறு பணித்து விட்டு வெளியே இருக்க வளவளவென்று பேசிக் கொண்டு இருப்பவனுக்கு சிறிது நேரமும் அமைதியாய் இருக்க முடியவில்லை.
விழி சுழற்றி தேடி தூணின் அருகே அலுப்புடன் நின்றிருந்த பாலாவை அருகே அழைக்க முறைத்த படி தோழனை நெருங்கினான்,பாலா.
●●●●●●●●
தன் ஜீப்பின் கதவில் சாய்ந்து வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு நின்றிருந்தான்,பிரகாஷ்.அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டர்.
அருள் ஏதோ முக்கியமான விடயத்தை எத்தி வைக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்க தம்பியை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அழைப்பெடுக்க முயன்ற சமயம் வேறொரு அழைப்பு வரவே இவ்விடத்துக்கு வந்தான்.அதன் பின் வேறெங்கும் அசையவும் நேரம் இருக்கவில்லை.
கையில் சில கண்ணாடிப் பைகளில் சேமிக்கப்பட்ட விபரங்களுடன் அவனருகே வந்தான்,ஒரு தடயவியவல் நிபுணன்.
“எனி இன்பார்மேஷன்ஸ்..”
“யாஹ் சார்..பாடி டெம்பரேச்சர் அன்ட் லாஸ் ஆகி இருக்குற ப்ளட்டோட டென்சிட்டி பாக்கும் போது எறந்து ஒரு எய்ட் ஹவர்ஸ்கு மேல இருக்கும்..அரொண்ட் மார்னிங்க செவன்..எய்ட் அந்த டைம்ல..அன்ட் அந்த எடத்துல அடிச்சு இருக்குறதுக்கான எந்த எவிடன்ஸும் இல்ல..ஸோ வேற ஏதோ ஒரு எடத்துல வச்சி தான் அட்டேக் பண்ணியிருக்காங்க..அதுக்கப்றம் தான் பாடிய இங்க கொண்டு வந்து இருக்கனும்..”
“கைல கட்டிப்போட்ட மார்க் இருக்கு..ஸோ கட்டிப்போட்டு தான் அடிச்சி இருக்கனும்..ஆனா தப்பிக்க முயற்சி செஞ்சதா தோணல..பிகாஸ் கைகால்ல எந்த விதமான சிராய்ப்பும் இல்ல..பின்னந்தலைலை பலமான அடி..அதனால வந்த ஹெவி ப்ளாட் லாஸ் தான் டெத்துக்கு ரீசனா இருக்கும்..இன்னும் பிய்வ் மினிட்ஸ்ல போர்ஸ் மாட்டான் ரிப்போர்ட் வந்துரும்..” என்ற படி முன்னே கேட்ட இருவரும் கூறிய தகவல்களை மொழிந்து விட்டு நகர தன் ஜீப்புக்கு ஓங்கி உதைத்தான்,அவன்.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.26

