Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 29

 

நேரம் பத்தரை மணியை கடந்து இருந்தது.வண்டியை அவர்கள் தங்கவிருக்கும் விடுதியின் முன்னே நிறுத்திட,இயல்பான பேச்சு வார்த்தை கூட இல்லை,அவர்களுக்குள்.

 

காரில் இருந்து யாரும் இறங்கவும் முற்படாது இருக்க,அந்த சூழ்நிலையின் கனத்தை எப்படி கரைப்பதென்று புரியாமல் நொந்து கொண்டான்,டாக்டர்.

 

அதே எண்ணத்துடன் அவன் இருக்கையில்,இங்கோ கண்ணீர் கரையுடன் யன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து இருந்தாள்,தென்றல்.

கண்களில் நீர் கோர்த்திருந்தது.

 

இலக்கின்றி பார்வை இருட்டில் திரிந்து கொண்டிருக்க எதையோ தேடிக் கொண்டு திரிந்தது என்னவோ உண்மை தான்.

 

அவளின் மனதில் இருப்பது அவனுக்கான தேடல் மட்டுமே.

அவனை எங்கே சென்று தேடுவதென்று தெரியாமல் தான் அந்த இருட்டில் அவள் விழிகள் சுழன்று கொண்டிருந்தன,போலும்.

 

அவளின் நிலமையைக் கண்ட தோழிக்கு மனம் பாரமாக,முன்னே அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்க்க,அவன் பார்வையில் கோபம்.

 

சடாரென கதவு திறக்கும் ஓசை.டாக்டர் திரும்பும் முன்னர்,கதவைத் திறந்து இருந்தாள்,அவள்.

 

கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடியவளைக் கண்டு அதிர்ந்து விட்டிருந்தாள்,

தோழி.

 

அவளின் செயலில் பயந்து மற்றைய வாசுவை விடுத்து மற்றைய மூவரும், அவள் பின்னூடு இறங்கி ஓட அவளோ எதையோ துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள்,எதுவும் புரியாது.

 

அந்த இருளில் தெரிந்த அந்த உருவத்தில் மட்டுமே நிலைத்திருந்தது,அவள் பார்வை.

 

ஐந்து நிமிடங்களுக்கு மேலாக ஓடியிருப்பாள்.

அவள் ஓட்டம் நின்றது என்னவோ தனக்கு முதுகு காட்டி திரும்பி நின்றிருந்த ஆடவனின் பின்னே தான்.

 

அவளின் ஏக்கமான அழைப்பு முன்னே நின்றிருந்தவனின் செவியை ஊடுருவிட,அதன் ஆத்மார்த்தத்தில் அந்த ஆடவனின் விழிகளும் விரிந்து கொண்டன.

 

உடைந்த குரலில் உள்ளத்தை ஊடுருவும் வலியுடன் அவனுக்கான காதலை பறைசாற்றிக் கொண்டு உயிரின் அடி ஆழத்தில் இருந்து ஒரு அழைப்பு.

 

அவளின் ஒட்டுமொத்த ஏக்கங்களும் அவளின் அவனுக்கான தேடலும் அந்த அழைப்பில் நிரம்பியிருந்தன,என்றால் மிகையல்ல.

 

புருவம் சுருக்கி பார்த்தவாறு திரும்பினான்,அந்த ஆடவன்.அவன் முகம் காட்டும் வரை கடந்திட்ட ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மீள்ஜனனம் தான்.

 

அவனாய் இருக்க வேண்டும்..

அவனாய் இருக்க வேண்டும்..

படபடவென இதயம் அடித்துக் கொள்ள மனமும் இதழ்களும் கடவுளிடம் கோரிக்கை வைத்தன.

 

வேகப் பெருமூச்சுக்கள் வெளியாகின.

சுவாசம் அழுந்தி அடைத்துக் கொண்டது.

அவனுக்காக துடிக்கும் இதயம் எம்பிக் குதித்தது.இனம் புரியா பதட்டத்தில் நெற்றியிலும் கழுத்திலும் வியர்வைத் துளிகள் அரும்பின.

 

பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்ள தொண்டைக்குழி ஏறி இறங்கியது.விழத் துடிக்கும் விழிநீரை இமைகள் சிமிட்டி அடக்க முயன்றன.

 

அவனுக்கான காதலையும் தேடலையும் அவன் பிரிவின் வலியையும் அவள் விழிகள் ஒருசேர பிரதிபலித்துக் கொண்டு நிற்க மனதைத் தாண்டி அவள் ஆன்மாவும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

 

அவள் மீண்டும் பிரத்தியேகமான அவள் அழைப்புடன்,அழைக்க முன்னே நின்றிருந்தவனின் இதழ்கள் மெலிதாய் விரிய சுவாரஷ்யம் நிரம்பிய விழிகளுடன் திரும்பியவனைக் கண்டவளின் விழிகளில்அப்பட்டமான ஏமாற்றம்.

 

அவ்வப்போது நடப்பது தான் என்றாலும் உயிர்த்துடிக்கும் வலியைத் தான் உணர்ந்து உடைகிறாள்,ஒவ்வொரு தடவையும்.

 

நிறைந்திருந்த விழிநீர் அணை கடக்க பட்டென மறுபுறம் திரும்பியவளின் இதழ்களில் விரக்தியின் உச்சமாய் முறுவலொன்று தோன்ற அப்படியே சரிந்து மடங்கி அமர்ந்து விட்டிருந்தாள்,அந்த புதியவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு.

 

புறங்கையோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்க நீர்த்திரள் இன்னும் வற்றியபாடில்லை.

 

மூச்சிறைக்க ஓடிவந்த தோழிக்கு அவள் உடைந்து அமர்ந்திருந்த தோற்றம் அத்தனை வலியைத் தர மனதளவில் தளர்ந்து தான் போனாள்,தோழியும்.

 

அவளின் காதல் தோழிக்கு பெரும் பைத்தியக்காரத்தனமாய்த் தான் தோன்றியது.

எத்தனை முறை சொல்லியும் கேட்காமல் அவன் தான் வேண்டுமென்று அடம் பிடிப்பவளை என்ன தான் செய்திட அவளும்..?

 

அழுது கொண்டிருந்தவளின் அருகே வந்து தானும் மடங்கியமர்ந்து அவள் முகம் நிமிர்த்தி விட்டாள்,ஒரு அறை.பொறி கலங்கியது,அவளின் அறையில்.

 

டாக்டருமே இத்தைகய செயலை அவளிடம் இருந்து எதிர்பாராது இருக்க,அகல்யா உச்ச கட்ட அதிர்ச்சியில் நின்று இருந்தாள்.

 

தோழி மட்டும் கை நீட்டியிருக்காவிடின்,டாக்டரின் கரம் நிச்சயம் அவளின் கன்னத்தை பதம் பார்த்து தெறிக்க வைத்திருக்கும்.

 

தோழியை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்து விட்டு அவள் அழத் துவங்க நின்றிருந்த இருவருக்கும் அப்பட்டமான அதிர்வு.உச்ச கட்ட சினமும் வேறு.

 

“ஏன் டீ இப்டி இருக்க..? பைத்தியமா உனக்கு..?

யாரு எதுவும் என்னன்னு பாக்காம ரோட்ல ஓடி வர்ர..? கிறுக்கு புடிச்சி இருக்கா உனக்கு..?

பைத்திமயாடி நீ..? ஏன்டி இப்டி பண்ற..?”அழுகையுடன் முடித்தவளுக்கு,தோழியின் நடத்தையக் காண்கையில் இத்தனை நாள் அவளுக்கு ஒத்து ஊதியதோ என்கின்ற எண்ணம் மிளிராமல் இல்லை.

 

ஆயினும்,அந்த எண்ணத்தை சட்டென சில, நினைவுகள் குறுக்கிட்டு இடை மறித்தன.

 

“எனக்கு அவர பாக்கனும் டி..ப்ளீஸ்..” விம்மி விம்மி அழுதவளோ, கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தோழிக்குள் ஆழமாய் உள்ளிறங்கி அத்தனை வலித்தது.

 

அவளின் அழுகையில்..

கரை கடந்த கண்ணீரில்..

உயிர் வலிக்கும் வலியில்..

அகல்யாவுக்கும் என்னவோ போலானது.

 

வலிப்பவரை விட அந்த வலியை யாரால் தான் உணர்ந்திட முடியும்..?

நிதர்சனம் அவளுக்கும் புரியத் தான் செய்கிறது.

ஆனால்,மனம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமே..?

 

அழுது கொண்டே எழுந்து காரை நோக்கி நடந்தவளின் நடையில் இருந்த தொய்வு அங்கிருந்த மூவருக்குமே புரியாமல் இல்லை.

 

“சாரி..சார் அவ ஏதோ தெரியாம இப்டி நடந்துகிட்டா..சாரி..” அந்தப் புதியவனிடம் தோழி மன்னிப்பு கேட்க அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு தோழியைப் பார்த்து புன்னகைத்தவனின் மனதில் அவளைப் பற்றி எண்ணம் தான் மின்னி மறைந்து கொண்டிருந்தது.

 

“ஏதாச்சும் லவ் மேட்டரா..?இப்டி ஒடஞ்சு போய் இருக்காங்க..?” அந்நியன் கேட்க,பெருமூச்சுடன் நெற்றியை நீவிக் கொண்டான்,டாக்டர்.

 

“ஆமா சார்..ஒரு சின்ன ப்ராப்ளம்..ரொம்ப நன்றி சார்..அவளுக்கு ஏதும் திட்டாம விட்டதுக்கு..”தோழி விளக்கம் சொல்லப் போக,அவளை பார்வையால் அடக்கினான்,டாக்டர்.

 

“ஹா இட்ஸ் ஓகே..ஆனா அவங்கள பாக்கவும் பாவமா இருக்கு..டேக் கேர்..அவங்க எமோஷனலா ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு தோணுது..”

 

“ஓகே சார்..தேங்க் யூ..” என்றவர்கள் விடை பெற தூரத்தில் தெரிந்த அவளின் புள்ளி உருவத்தை ஒரு கணம் தொட்டு விட்டு மீண்டன,டாக்டரின் விழிகள்.

 

தமக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அனைவரும் அடைக்கலம் புக,அழுதழுதே உறங்கி இருந்தாள்,தென்றல்.அவளின் கூந்தலை வருடியவாறே விழித்திருந் தோழிக்கு தான் மனதில் அத்தனை பாரம்.

 

இவர்கள் சொல்வதைப் போல,அவளின் அவனுக்கு நிஜமாகவே திருமணம் நடந்து இருக்கக் கூடுமோ என்று அவளுக்குமே ஒரு எண்ணம் வர,வந்த வேகத்தில் அது மறைந்தது,செவி மோதிய சில அசரீரிகளால்.

 

இங்கோ,

 

நிலைக்கண்ணாடியின் முன்னே நின்று முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்த டாக்டருக்கு,தென்றலை விட்டு விட்டு அவனைத் தேடி வந்து இருக்கலாம் என்கின்ற எண்ணம்,தாமதமாக தோன்றிட,தலையை உலுக்கியவாறு நிமிர்ந்தான்.

 

வாசுவிடம் அப்படியொரு அமைதி.தென்றலின் நடத்தை அவனுக்கு பிடிக்கவில்லை என்று,அவனின் முகமே மௌனம் பேச,டாக்டருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

 

அவன் நிலை அப்படியிருக்க,அறைக் கதவு தட்டப்பட,திறந்தவனுக்கு அகல்யாவைக் கண்டதும் தலை வலித்தது.

 

“இவ இப்போ என்ன பண்ணப் போறாளோ..?” தனக்குள் முணகியவனோ,அவளிடம் என்னவென்று பார்வையால் கேட்க,தனியாக கதைக்க வேண்டும் என்றாள்,அவள்.

 

“என்னக்கா..?” பால்கனியின் வந்து நின்றவளிடம் கேட்டான்.

 

“நா ஒன்னு சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத சித்து..”

 

“ம்ம்..”

 

“தென்றல் அவன் மேல பைத்தியமா இருக்கான்னு தோணுது..அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு அரசல் பொரசலா தான் நமக்கு தெர்யும்..ஒரு வேள அவனுக்கு கல்யாணம் ஆகலன்னா அவன் கூடவே கால்ல விழுந்தாச்சும் இவள சேத்து வச்சுரு..” என்க,டாக்டரின் இதழ்களில் புன்னகை.

 

“என்னாச்சு திடீர்னு..?”

 

“தெரில அவன் நல்லவனா கெட்டவனா எதுவும் தெரில..ஆனா அவனுக்கு கல்யாணம் ஆகலன்னா இவ கனவுல வேற ஆள யோசிக்க மாட்டான்னு தோணுது..”

 

“சரி அப்போ கல்யாணம் ஆகி இருந்ததுன்னா..?”

 

“அப்போ கட்டிக்கோ..”உறுதியாய் உரைத்தாள்,அவள்.

 

“இதுவே நீ லவ் பண்ண பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயான்னி தெரியாம நீ தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருந்து ஒருத்தி உன்ன வந்து கட்டிக்கிறேன்னு சொன்னா நாங்க என்ன பண்ணுவோம் வேணாம்னா சொல்லுவோம்..?”

 

“இல்லல உங்க ரெண்டு பேரயும் கன்வின்ஸ் பண்ணி கட்டி வக்க தான பாப்போம்..தென்றலோட நா கோவப்பட்டு கத்துனேன் தான்..நா பேசுனது தப்பாவும் இருக்கலாம்..ஆனா அதுக்குன்னு அவள பத்தி யோசிக்க மாட்டேன்னு நெனச்சியா..?”

 

“தென்றல் எங்க கூட வளந்த பொண்ணு..அவ பாசம் எப்டி இருக்கும்னு பாத்தும் யோசிக்காம பேசி இருக்கக் கூடாது..என்ன பண்றது நீங்க ஏமாத்திட்டீங்கன்ற கோவத்துல கத்திட்டேன்..”

 

“அவள பொறுத்த வர இன்னும் அவன் லவ்வர் தான்..அவ கண்ல காணும் வர அவனுக்கு கல்யாணம் ஆகனத அவ நம்ப போறதில்ல..ஸோ அவ லவ்வருக்காட துடிக்கிற நா தப்பு சொல்ல மாட்டேன்..ஆனா அவனுக்கு கல்யாணம் ஆனது கன்ஃபார்மா தெரிஞ்சா அவ அப்டி இருக்க மாட்டா..”

 

” நீ அவள கட்டி கிட்டு மீட்டு கொண்டு வா பழசுல இருந்து..எப்பவும் ஒரு பொண்ணு தான் காதலிச்சு பழச மறக்க வக்கனும்னு எந்த அவசியமும் இல்ல..ஒரு பையன் அத பண்ணாலும் தப்பில்ல..கண்டிப்பா உன் லவ் அவள மாத்திரும்..அவளும் உன்ன கட்டிகிட்டா உனக்காகவாச்சும் மூவ் ஆன் ஆகத் தான் பாப்பா..அவ எந்த உறவுக்கும் உண்மயா இருக்குற ஆளு..” என்று அவள் நீளமாய் பேசி முடிக்க,டாக்டரின் இதழ்களில் புன்னகை தோன்றிற்று.

 

மறுநாள்,

 

வாசுவிடம் அவனைப் பற்றி தீவிரமாகக் கதைத்துக் கொண்டிருந்தான்,டாக்டர்.

 

“அவனுக்கு சோஷியல் மீடியா அது இதுன்னு எந்த அக்கவுண்டும் இல்லயா..?”

 

“ம்ம்ஹூம் இல்ல வாசு..அவன் பேர்ல முழுசா சர்ச் பண்ணிட்டேன்..”

 

“சரி இந்த பொண்ணு எதுக்கு ரெண்டு வருஷமா அவன தேடாம வெயிட் பண்ணிட்டு இருந்துச்சாம்..?”

 

“அவ தேடாம எல்லாம் இருந்தது இல்ல..தேடியிருக்கா..இன்ஃபாக்ட் மாமா கூட தேடித் தான் இருக்காரு..ஆனா அவன பத்தி தான் எந்த டீடெய்ல்ஸும் கெடக்கல..”

 

“அப்டி எதுவும் கெடக்காம இருக்க சான்ஸ் இருக்கா என்ன..? எனக்கு என்னவோ அவன் வேணும்னே பண்ற மாதிரி இருக்கு..?”

 

“ம்ம்..எனக்கும் அவன் ஃபோட்டோ இருக்குல..என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான்..அவன் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லி இருக்கேன்..இதுக்கு அப்றமும் இல்லன்னா ஃபோட்டே ஷேர் பண்ணி போஸ்டர் போட வேண்டியது தான்..” என்று முடிக்கும் முன்பே,அவனின் அலைபேசி ஒலித்தது.

 

பத்து நிமிடங்கள் அழைப்பில் கழிந்திருக்க,வாசுவின் எண்ணங்கள் அதையே சுற்றி வந்தது.

 

“என்னடா ஏதாச்சும்..? இம்பார்டன்ட்..”

 

“இல்ல இல்ல இது ஹாஸ்பிடல் விஷயம்..ஒரு பேஷண்ட் அவருக்கு கேன்ஸர்..அதுக்கு அடிக்கடி கன்சல் பண்ணுவாங்க அவரு ஃப்ரெண்டும் இன்னொரு டாக்டரும்..இந்த மன்தும் டைம் அலோகேட் பண்ண ஃபோன் பண்ணி இருக்காங்க..”

 

“ஓஹ்!” வாசு சொல்லிடவும்,டாக்டரின் அலைபேசி ஒலித்திட ,மறுமுனையில் இருந்தது,அவனின் தோழன் தான்.

 

“ஹலோ சித்தார்த்..நீ கேட்ட ஆளு..இங்க தான இருக்காரு..உங்க ரெஸோர்டுக்கு பக்கத்துல தான் அவர் ஃப்ளாட்டே இருக்கு..” திகைப்புடன் கூறியவாறு,அவனின் வீட்டு விலாசத்தை அனுப்பி வைத்திட,டாக்டருக்கு நம்ப முடியவில்லை.

 

அவன் அடுக்கு மாடிக் குடியிருப்பின் முன்னே நிற்பதை புகைப்படம் எடுத்து,வாட்ஸ் அப்பில் அனுப்பியும் இருக்க,ஒரு நொடி அனைத்தையும் நம்ப இயலாமல் தான் போனது,இருவராலும்.

 

அவனைக் கண்டு பிடிக்கையில் காலம் தாழ்த்தப்படலாம் என அனைவரும் வீடு செல்ல முனைந்து இருக்கையில்,இச்செய்தி அதிர்வு தான்.

 

வீங்கிய முகத்துடன் கிளம்ப உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தென்றலோ,அவன் கதவு தட்டும் வேகத்தில் சற்று மிரண்டு கதவைத் திறந்திட,அவனின் முகத்தில் இருந்த பதட்டம் அவளுக்கும் யோசனையைத் தந்தது.

 

“என்னத்தான்..? என்ன விஷயம்..?” அவள் நைந்த குரலில் வினவ,எதுவும் பேசாமல் கிளம்பி வரச் சொன்னான்,டாக்டர்.

 

வண்டி ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பு முன் நிற்க,இறங்கிக் கொண்டவளின் இதயம் ஏனென்று இல்லாமல்,தடதடத்து ஓடியது.

 

துடிப்பும் தவிப்பும் தேகத்துடன் அகத்தையும் நிறைத்திட,விழிகளில் தன்னாலே நீர் கோர்த்தது.அவனின் இருப்பை அவளின் உள்ளுணர்வு உணர்த்தியது போலும்.

 

“அ…அவ..அவரு..இங்க தான் இருக்காரா..?” கண்ணீரும் புன்னகையுமாக,ஏகப்பட்ட உணர்வுகள் முகிழ்ந்து கிடந்த குரலில் கேட்டாள்,அவள்.

 

டாக்டரின் சிரசு,மேலும் கீழும் அசைந்து,ஆமோதிப்பை ஒப்புவிக்க,அவளிதயம் நின்று துடித்தது.

 

காதல் தேடும்.

 

2025.04.27

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்