Loading

அத்தியாயம் 96

     “என்ன பண்றீங்க, எல்லோரும் இருக்காங்க.” சிறிய குரலில் ருக்கு சொல்லவும் தான் தெய்வா சமநிலைக்கு வந்தான்.

     தன்னுடைய சகோதரர்களின் மனைவிமார்களைக் கண்டவனுக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் செய்தது நினைவுக்கு வர வெட்கம் கொண்டு அறைக்கு ஓடி விட்டான்

     “என்ன ருக்கு நாங்க கண்ணைத் திறக்கலாமா.” லீலா சிரிப்புடன் கேட்க, “ருக்குக்கா இதுக்கு மேலேயும் எப்படி இங்க இருப்பாங்க. தெய்வா மாமா பின்னாடி அவங்க ரூமுக்கு இல்ல போய் இருப்பாங்க.” கிண்டல் செய்தாள் ஊர்மி.

     “என்னக்கா, தனி வீட்டுக்குப் போய் நேரம் காலம் பார்க்காம ரொமான்ஸ் பண்ணலாம் னு நினைச்சோமே, இப்படி அநியாயமா கெட்டுப் போச்சேன்னு ஹாலிலே ஆரம்பிச்சுட்டீங்களா?” தேவகி கேட்க, அடி கழுதை என்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு வேக நடையில் அறைக்குள் சென்றாள் ருக்கு.

     அவள் ஓடுவதைப் பார்த்து மற்ற மூவரும் கொல்லென்று சிரிக்க, அந்த சிரிப்பு சத்தத்தை கேட்டவாறே வீட்டிற்குள் வந்தான் செல்வா.

     “இது உண்மையில் நம்ம வீடு தானா இல்ல அட்ரஸ் எதுவும் மாறி வந்துட்டோமா. காலையில் போகும் போது துக்கம் நடந்த வீடு மாதிரி இருந்துச்சு. இப்ப கல்யாண வீடே தோற்றுப் போயிடும் போல இருக்கே.” என்று நினைத்தவாறு உள்ளே வந்தவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த லீலாவைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான். அவன் கண்கள் அவன் மனைவியை இரசிப்பதை நிறுத்த மாட்டேன் என்று அடம்பிடிக்க, கழுத்தும் திரும்பாமல் நின்று அதற்கு உதவி செய்தது.

     “தேவகி அங்க பாரு ரூமுக்குள்ள போறதுக்கு அடுத்த ஜோடி ரெடி.” ஊர்மி சொல்ல, அதன் பிறகே லீலா செல்வாவைக் கவனித்தாள்.

     ஊர்மியின் குரலில் கவனம் கலைந்த செல்வா, சாதாரணமாகத் தன்னைக் காட்டிக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைய, “கிண்டலா பண்றீங்க உங்களை அப்புறமா கவனிச்சுக்கிறேன்.” என்றுவிட்டு கணவனைத் தொடர்ந்து தங்களுடைய அறைக்குள் சென்றாள் லீலா.

     “என்ன ஆச்சு லீலா, முகம் எல்லாம் ரொம்ப பூரிச்சு போயிருக்கு. அந்த அளவுக்கு சந்தோஷமான விஷயமா இருந்தா அதை எனக்கும் சொல்லலாமே, நானும் சந்தோஷப்படுவேன்.” மனைவியின் அதீத சந்தோஷத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை யூகிக்க அவனுக்குப் பெரிய புத்தி ஒன்றும் தேவை இருக்கவில்லை. இருந்தாலும் அது சாத்தியம் தானா என்கிற குழப்பத்தோடு கேட்டான்.

     “நடந்தது உங்களுக்கு சந்தோஷமான விஷயமான்னு தெரியல. ஆனா என்னைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். என் தங்கச்சி ருக்கு திரும்ப என்கிட்ட வந்து சேர்ந்துட்டா.” லீலா சொல்ல சட்டைப் பட்டன்களை கழட்டிக் கொண்டிருந்த செல்வா ஒருநிமிடம் அமைதியானான்.

     அவன் எதிர்பார்த்தது தான், ஆனால் சட்டென்று நம்ப முடியவில்லை. “நீங்க சொல்றது உண்மைன்னா தெய்வா திரும்ப வந்துட்டானா?” சாதாரணக் குரலில் கேட்டான்.

     “அவர் திரும்ப வந்தது மட்டும் இல்ல. இனிமேல் வேற எங்கேயும் போக மாட்டாராம்.” அத்தனை ஆனந்தமாகச் சொன்னாள்.

     “என்ன சொல்றீங்க லீலா?”

     “அவரோட ட்ரான்ஸ்பர் கேன்சல் ஆகிடுச்சு. இனிமேல் உங்க தம்பியும் இந்த ஊரில் தான் இருப்பார், அவரோட சேர்ந்து என் தங்கச்சியும் என் கூட இருப்பா.

     பொதுவா நாம தொலைச்ச ஒன்னு நமக்கு திரும்பக் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. ஆனா என் கையை விட்டுப் போகப் பார்த்த பொக்கிஷம், திரும்ப என் கைக்கு வந்து சேர்ந்திடுச்சு.” என்ற லீலா, செல்வா அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

     காலையில் தங்கை கிளம்புகிறாள் என்றதும் அவனை சுத்தமாக மறந்ததும், அவன் அழைக்க அழைக்க பேசாமல் இருந்ததும் நினைவு வர, தான் அதிகப்படி செய்கிறோம் என்று புரிந்து வருந்தினாள் லீலா.

     தங்கைகள் அளவுக்கு கணவனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தங்கைகளை நினைத்து கணவனை வருத்தக் கூடாது என்று அவளுக்குப் புரிகிறது தான். ஆனாலும் சட்டென்று அதைச் செயல்படுத்த முடியவில்லை.

     இதைச் செல்வாவும் புரிந்தே இருந்தான். அவனுள் ஆயிரம் யோசனைகள். ஒருவேளை தான் கணவனாக அவளிடம் நடந்துகொள்ள ஆரம்பித்தால், தன்னுடைய முக்கியத்துவம் புரியுமோ. கோபித்து சண்டை போட்டால் தங்கைகள் அளவுக்கு தனக்காகவும் யோசிப்பாளோ. அவளிடம் எனக்கான  உரிமையை அவள் உணரவில்லை என்பதற்காக அமைதியாக இருக்காமல் தானே இறங்கிச் சென்று உணர்த்தி இருக்கவேண்டுமோ எனப் பலவாறாக யோசித்துக்கொண்டிருந்தான்.

     சகோதரர்களின் வரிசையில் நாகா வீட்டிற்குள் வர, “என்ன ஊர்மிக்கா அடுத்து உங்க டேர்னா.” என்றாள் தேவகி.

     “ஆமா அப்படியே உன் மாமா ரொமான்ஸ் பண்ணி கிழிச்சிடுவார். போடி போய் ஏதாவது வேலை இருந்தா அதைப் பாரு. இல்லன்னா உன் ஆளு வர வரைக்கும் வெயிட் பண்ணு.” என்றுவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள் ஊர்மி.

     “என்ன நான் வெளியே போகும் போது ஜீரோ வாட்ஸ் பல்பு மாதிரி டிம்மா இருந்த, இப்ப இப்படி டியூப்லைட் மாதிரி பளிச்சுன்னு இருக்கியே என்ன விஷயம்” நாகா கேட்க, “நடந்தது என்னைப் பொறுத்த வரைக்கும் ரொம்ப சந்தோஷமான விஷயம் தான். ஆனால் உங்களுக்கு ரொம்ப ரொம்ப கெட்ட விஷயம்.” பொடி வைத்துப் பேசினாள் ஊர்மி.

     “அப்படி என்ன மேடம் பெரிய கெட்ட விஷயமா இருந்திடப் போகுது. தினம் தினம் உன்னையே சமாளிக்கிறேன் அந்தக் கஷ்டத்தை சமாளிக்க மாட்டேனா.” விருது வாங்கிய பெருமையுடன் நாகா சொல்ல,

     “இந்த வாய் இருக்கே வாய், அதால் என்னைக்கும் நல்ல முறையில் பேசவே முடியாதா?” என்று அவனுடைய உள் பனியனை பிடித்து இழுத்தாள் ஊர்மி.

     இருவருக்கும் இடையே இடைவெளி மிகக் குறைவாக இருக்க, அந்த இடைவெளியை மேலும் குறைக்க எண்ணி நாகா ஊர்மியை நெருங்க, ஊர்மியின் மேடிட்ட வயிறு அவனைத் தடுத்தது.

     காற்றடைத்த பலூனில் இருந்து காற்று மொத்தமும் வெளியேறுவது போல் பெருமூச்சுவிட்ட நாகா, “ஊர்மி, எத்தனை முறை சொல்றது. வயித்துல புள்ளைங்களை வைச்சிக்கிட்டு என்கிட்ட வராதன்னு.” தவிப்பாய் கேட்டான்.

     “நான் என்ன தெரிஞ்சேவா கிட்ட வரேன். உங்களுக்கு எப்படியோ அதே மாதிரி தான் எனக்கும். அதுதான் நீங்களோ நானோ நம்மை மறந்து ஒருத்தருக்கொருத்தர் கிட்ட வந்தா கூட நம்ம பிள்ளைங்க உஷாரா தடுத்துடுறாங்களே அப்புறம் என்ன?” ஊர்மி சொல்ல, “என் பிள்ளைங்களைக் குறை சொல்லாதடி.” என்றவண்ணம் அவளைத் திருப்பியவன் முதுகோடு கட்டிக்கொண்டான்.

     “அப்படித்தான் இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பிடிங்க. முதுகுவலிக்கு நல்ல இதமா இருக்கு.” என்க, “அடிப்பாவி ஒரு மனுஷன் ஆசையாக் கட்டிப்பிடிச்சா என்ன பண்ண வைக்கிற நீ.” சிரித்தான் நாகா.

     “கட்டிப்புடி வைத்தியம் கேள்விப்பட்டதில்லை நீங்க.” என்க, “சரிதான் ஆமா ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே என்ன அது.” பேச்சுவார்த்தையின் ஆரம்பப் புள்ளிக்கு அவளை இழுத்து வந்தான்.

     “அதுவா, எங்களை எல்லாம் வருத்தப்பட வைச்சுட்டு உங்க அண்ணன் எங்க அக்காவைத் தனியாக் கூப்பிட்டுப் போனாரு இல்ல. அவரோட திட்டம் மொத்தமா ஊத்திக்கிச்சு. ஏதோ முக்கியமான கேஸாம். அவர் இல்லாம டீல் பண்றது கஷ்டம் னு சொல்லி மேலதிகாரி அவரோட ட்ரான்ஸ்வரை கேன்சல் பண்ணிட்டாராம். இனி உங்க நொண்ணன் நினைச்சாக் கூட வேற ஊருக்குப் போக முடியாதாம்.” நக்கலடித்தாள் ஊர்மி.

     “ஏய் என்ன வாய் ரொம்ப நீளுது. அவன் உன் அக்கா புருஷன் கொஞ்சம் மரியாதையா பேசிப் பழகு.” தன்னையும் அறியாமல் பட்டென்று சொல்லிவிட்டிருந்தான் நாகா.

     “இங்க பாருடா, இது எப்ப இருந்து. இப்பெல்லாம் இந்த வீட்டில் நிறைய மாறிடுச்சு.” குத்தலாகச் சொன்னாள் ஊர்மி. மாரியாத்தாவுக்கு சந்தேகம் வராமல் இருக்கும் வரை தான் நம்ம பாட்சா பலிக்கும். ஓடிடு டா நாகா என மனதோடு சொல்லிக்கொண்டு அறையில் இருந்து வெளியேறி இருந்தான் அவன்.

     தெய்வாவின் அறையில், “ஏன்டி அறிவில்லை உனக்கு. நான் கட்டிப்பிடிக்கும் போதே சொல்லி இருக்க வேண்டியது தானே. சுதாரிச்சு இருப்பேனே, இப்பப் பார் அவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க.” தவிப்பாய் கேட்டான் தெய்வா.

     அவன் சங்கடத்தை இரசித்தபடி, “என்ன நினைச்சிருப்பாங்க என் புருஷனுக்கு என் மேல் ரொம்பத்தான் பாசம் னு நினைச்சிருப்பாங்க.” என்று அவன் மீசையைப் பிடித்து இழுத்தவள், “ரொம்பத்தான் சங்கடப்படாதீங்க. அவங்க புருஷன் பொண்டாட்டி செய்யாததையா நாம செஞ்சுட்டோம்.” என்க, அதுவும் சரிதான் இருந்தாலும் என்று இழுத்தான் தெய்வா.

     விட்டால் இவன் இதையே பேசிக்கொண்டிருப்பான் என்று நினைத்த ருக்கு அவன் கவனத்தை மாற்றுவதற்காக, “இன்னொரு தடவை இப்படித் தேவையில்லாமல் என்னை அலைய வைக்காதீங்க. உடம்பெல்லாம் ஒரே வலி தெரியுமா?” என்றவாறு நெட்டி முறித்தாள்.

     “நானே கேட்க நினைச்சிருந்தேன். காரில் இருந்து எதுக்காக இறங்கிப் போன. உன்னை எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா? பைத்தியம் பிடிக்காத குறை தான். குறைந்தபட்சம் எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கக் கூடாதா?” உண்மையான அக்கறையில் கேட்டான்.

     “ரொம்ப பயந்துட்டீங்களா?” என்ற ருக்குவிற்கு, “இப்ப அவன் மேல் பாவப்பட்டு, போன் பண்ணி வீட்டுக்கு வந்துட்டங்கிற விஷயத்தைச் சொன்னன்னு வைச்சுக்கோ, அவன் உன்மேல் கோபம் தான் படுவான். இதுவே நீ அமைதியா இருந்தா, அவனால் தான் நீ இப்படி ஒரு முடிவுக்கு வந்தங்கிற உண்மை அவனுக்குப் புரியும். அதன் விளைவா அவன் இனிமேல் இதே மாதிரி எப்பவும் செய்ய மாட்டான்.” என்று சொல்லித் தன் வாயடைத்த அரசுவின் நினைவு வந்தது அவளுக்கு.

     “பயந்துட்டேனாவா? உயிரே போயிடுச்சு டி. நான் போலீஸ்காரன், தினம்தினம் பொண்ணுங்களுக்கு என்னென்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு தானே இருக்கேன். எங்க உன்னை அப்படிப் பார்க்க வேண்டியதாகிடுமோன்னு நான் பயந்த பயம் அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும். நான் அங்க அப்படி பதறி துடிச்சுக்கிட்டு இருந்திருக்கேன். அம்மணி இங்க அக்கா, தங்கச்சிங்க கூட ஜாலியா பேசி சிரிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க இல்ல.” கடுப்பாகவே சொன்னான்.

     “நல்லாத் தூங்கிட்டு இருக்கும் போது, நீங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம எங்கேயோ போயிட்டீங்க. நான் என்னன்னு நினைக்கிறது. ஊர் பெயர் கூடத் தெரியாத இடத்தில் புருஷனும் பக்கத்தில் இல்லாம போய் நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? உங்களைத் தேடி நான் கீழே இறங்கினதை வைச்சு, டைம் கேட்கிறேன்னு ஒரு கடன்காரன் கார் கண்ணாடியைத் தட்டிக்கிட்டே இருந்தான் வேற.

     உங்களுக்குப் போன் பண்ணலாம் னு பார்த்தா போனை வேற காரிலே வைச்சிட்டு போயிட்டீங்க. உங்க அறிவைக் கொண்டு போய் சேட்டு கடையில் வைச்சா நல்ல இலாபம் கிடைக்கும் போங்க.” கோவமாய் சொல்லிவிட்டு ருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

     “சரி எப்படி வீட்டுக்கு வந்த அதைச் சொல்லு.” என்க, “அரசு அண்ணாவுக்கு போன் பண்ணேன். என் நல்ல நேரம் இன்னைக்குன்னு பார்த்து அவருக்கு அங்க பக்கத்தில் தான் வேலை இருந்திருக்கு. அதனால் உடனே வந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்திட்டார்.” என்றாள்.

     தெய்வா எதையோ யோசிப்பது கண்டு, “ஏங்க நாம இங்கேயே இப்படியே இருந்திடலாமா?” அவன் முதுகோடு முதுகு சாய்ந்திருந்த நிலையில் கேட்டாள் ருக்கு.

     “இப்படியே இருந்திடலாம் தான். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா இங்க இருக்க முடியாது நாளைக்கு நாம அங்க போய் ஆகனும்.” தெய்வா சொல்ல ருக்குவிற்கு உள்ளுக்குள் சங்கடமாக இருந்தது.

     சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும் இது தான் என் நிலைப்பாடு என்பதில் ஆரம்பத்தில் இருந்து தெய்வா நேர்மையாகத் தான் இருந்தான். ஆனால் தான் இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்னு நடந்துகொள்வதை நினைக்க அவளுக்கு அசிங்கமாக இருந்தது.

     அவள் கணவன் அவளை அவள் சகோதரிகளிடம் இருந்து பிரிக்க நினைத்து போடும் சதித்திட்டங்கள் தெரிந்தால் இப்படி யோசிப்பாளா என்றால் சந்தேகம் தான்.

     தன் வார்த்தைகளுக்கு மனைவியின் பதில் வேண்டி தெய்வா காத்திருந்த நேரத்தில் அருணிடம் இருந்து போன் வர, அதன் பின்னரே அவன் பேசியது அனைத்தும் நினைவுக்கு வந்தது.

     “கடவுளே இவரை எப்படிச் சமாளிக்கப் போறேனோ தெரியலையே.” மனதோடு நினைத்தபடியே அழைப்பை ஏற்று காதில் வைத்து, “சார் அது வந்து” தயக்கமாக பேச்சை ஆரம்பித்தான்.

     “தெய்வா உங்க மெயிலுக்கு ஒரு ஆடர் காப்பி வந்திருக்கு. அதை முதலில் பாருங்க. அப்புறம் நாளைக்கு காலையில் சீக்கிரம் என்னை வந்து பாருங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார் அருண்.

     “கடுப்பில் இந்த ஆளு டிபிரமோஷன் ஏதும் பண்ணிட்டாரா என்ன?” தெய்வா பதறிக்கொண்டே தன் இணையத்தொடர்பை உயிர்பிக்க, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. உங்களோட ட்ரான்ஸ்வர் ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சு அவ்வளவு தான்.” தன்னை மீறி சொல்லிவிட்ட பின்னால் வாயைக் கைகொண்டு மறைத்தாள் ருக்கு.

     அவள் வார்த்தைகளை சரியாகக் கவனிக்காமல் அதன் அர்த்தத்தை மட்டும் கிரகித்துக்கொண்டவன், “கடவுளே அப்படி மட்டும் ஏதும் நடந்திருக்கக் கூடாது.” பயந்தவனாய் அருண் சொன்னதைச் செய்ய, அந்தோ பரிதாபம் அவன் ஆசைஆசையாய் கண்டிருந்த கனவெல்லாம் அந்த நான்கு வரி மெயிலால் கலைந்து போனது. வந்த கோபத்திற்கு போனைத் தூக்கி எறிய வேண்டும் போல் வந்தது தெய்வாவிற்கு. ஆனால் அதன் விலையுணர்ந்து மெத்தையில் எறிந்துவிட்டு அமைதியாய் அமர்ந்துவிட்டான்.

     கணவனின் அருகில் அமர்ந்து அவன் கையில் கை வைத்தவள், “என்னங்க நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.

     “என்ன” என்க, “இல்ல நாளைக்கு ஒருநாள் லீவ் போடுறீங்களா? நாம இரண்டு பேரும் எங்கேயாவது வெளியில் போயிட்டு வரலாம்.” என்றாள்.

     அந்த ஒரு வாக்கியத்தில் தெய்வாவின் கோபம் பாதியாய் குறைந்திருக்க, “என்ன திடீர்னு” என்றான் ஆசை பாதி, ஆர்வம் மீதியாய்.

     “இல்ல நாளைக்கு என்னோட பிறந்தநாள்.” ருக்கு இதைச் சொல்லவும் மற்ற அனைத்தும் மறந்து போனது அவனுக்கு.

     “ஹே ருக்கு நிஜமாவா, அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே பொண்டாட்டி. இதை ஏன் இவ்வளவு லேட்டா சொல்ற. கவலையே படாதே நாளைக்கு நாள் முழுக்க நான் உன்கூட தான் இருக்கப் போறேன். நீ ஆசைப்பட்டது எல்லாத்தையும் பண்ணித் தரேன்.

     நீ என்னோட கொண்டாடப் போற முதல் பிறந்தநாள். அதை நீ என்னைக்கும் மறக்காத மாதிரி கொண்டாட வேண்டியது என்னோட பொறுப்பு.” என்ற தெய்வா அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய செயல்களை மனதிற்குள் பட்டியலிட ஆரம்பித்தான்.

     அப்போது தான் அவனுக்கு ஒன்று உரைத்தது. ருக்குவிற்குப் பிறந்தநாள் என்றால் மற்ற மூன்று பெண்களுக்கும் சேர்த்து தானே பிறந்தநாள். இதைத் தன் சகோதரர்களிடம்  சொல்ல வேண்டும் என்று மனதோடு நினைத்துக்கொண்டான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நாலு பேருக்கும் பிறந்தநாள் கொண்டாட்டமா. ஒண்ணு சேர்ந்து கொண்டாடுவாங்களோ 😍😍😍