Loading

என்னுள் நீ காதலாய்💞

அத்தியாயம் 32

“என்னாச்சு தமிழ்.. பழச நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத” என்று இளமாறன் சொல்ல, கண்ணீரை துடைத்து கொண்ட செந்தமிழ் வெளியே சென்று சோபாவில் அமர்ந்தாள். புனிதா அவள் ஏற்கனவே போட்டிருந்த நகைகள், திருமணத்தன்று போட்ட நகைகளை எடுத்து வந்து மருமகளுக்கு போட்டு விட, அவள் ஒன்றும் பேசாமல் ‘இதெல்லாம் கனவில்லையே’ என்பது போல் அவர்களை பார்த்தாள்.

முதலில் இனியன், சரவணன், ரேவதி மூன்று பேரும் அங்கு வந்தார்கள். செந்தமிழை அலங்காரத்தோடு பார்த்தவர்கள் திகைத்து போனார்கள். அவள் கழுத்தில் தாலி செயினை பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இளமாறனை பார்த்த அவனுடைய நண்பர்கள், “என்ன மச்சான்?கல்யாணத்தன்னைக்கு பார்த்ததை விட பளிச்சுன்னு அழகா இருக்க! ஒரே லவ்ஸ் தான் போல” என்று சொல்ல, வெட்கத்தில் சிரித்தவனின் ட்ரிம் செய்த லேசான தாடிக்குள் தெரிந்த கன்னக்குழிகள் அவனை கூடுதல் அழகாக காட்டின.

இளமாறனும் அவன் நண்பர்களும் ஹாலில் இருந்த பொருட்களை, ஓரமாக ஒதுக்கி வைத்து ஆட்கள் வந்து அமர ஏற்பாடு செய்தார்கள். ஆட்கள் வர ஆரம்பிக்க ஒரு சேரில் செந்தமிழும், அவளுக்கு அருகில் மற்றொரு சேரில் இளமாறனும் அமர்ந்திருந்தனர்.

நல்ல நேரம் பார்த்து புனிதா தன் தோழி ஒருவரை அவளுக்கு முதல் வளையல் போட சொல்ல.. “புனிதாம்மா.. நீங்க வந்து முதல்ல வளையல் போடுங்க” என்றாள் செந்தமிழ். “வேணாம் டா.. நான் போடக்கூடாது” என்று அவர் தயங்கி நிற்க, அவளுக்கு அவர் மனதில் இருப்பது புரிந்தது.

“உங்க பையனும் குழந்தையும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற நீங்க போடலாம் ம்மா. நீங்க தான் எனக்கு முதல்ல வளையல் போடணும். இல்ல எனக்கு வளைகாப்பே வேணாம்” என்று செந்தமிழ் பிடிவாதமாக பேச மொத்த கூட்டமும் அதிர்ந்து போனது.

புனிதா சிரித்து கொண்டே வந்து செந்தமிழ் கன்னங்களில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமம் வைத்து அவள் கரங்களில் முதல் வளையல்களை போட்டு விட்டார். ‘இத்தனை நாட்களாக நான் சொல்லி கேட்காத அம்மா, மருமகள் சொன்னதும் கேட்கிறாரே’ என்று சிரித்துக் கொண்டே அவரை பார்த்தான் இளமாறன்.

அதன் பிறகு அங்கிருக்கும் எல்லோரும், அவள் தோழியும், அண்ணன்களும் வளையல் போட்டு முடிக்க “நானும் போட்டு விடுவேன் என்ற இளமாறன்.. அவளுக்கு வளையல்கள் போட்டு , அவள் கன்னத்தில் சந்தனம் பூசி விட்டான். (கிடைச்ச கேப்ல எல்லாம் கோல் போட பார்க்கிறான். ஹ்ம்ம் எவ்ளோ தூரம் இது போகுதுன்னு பார்க்கலாம்)

செந்தமிழோடு சேர்த்து இளமாறனுக்கும் சந்தன நலங்கு செய்தார்கள். இருவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்தார்கள்.

செந்தமிழுக்கு முதலில் வளைகாப்பு சாப்பாட்டை எடுத்து வந்து புனிதா ஊட்டி விட , இளமாறனும் அவளுக்கு ஊட்டினான். அதன் பிறகு வந்திருந்த எல்லோருக்கும் இனியனும் சரவணனும் உணவு பரிமாறினார்கள்.

“செந்தமிழ் போய் ட்ரெஸ் மாத்திட்டு முகம் கழுவிக்கோ. ரெஸ்ட் எடு” என்று புனிதா சொல்ல, செந்தமிழ் அறைக்கு சென்றாள். இளமாறனும் வேகமாக அவள் பின்னாடியே சென்றான். உள்ளே நுழைந்தவன் அறையை பூட்ட, “என்ன வேணும் இளா?” என்று கேட்டு கேள்வியாக அவனை பார்த்தாள்.

அவன் பதிலேதும் பேசாமல் அவளுக்கு அருகில் சென்று, அவள் கன்னங்களை கைகளில் தாங்கி, அவள் இதழை தன் இதழால் கவ்விக் கொண்டான்.

முதலில் திடுக்கிட்டு தன் கண் இமைகளை படபடவென அசைத்து விழித்தவள், அவன் முத்தத்திற்கு இசைந்து கொடுக்க, அவளை விழிகள் விரித்து பார்த்துக் கொண்டே முத்தமிட்டுக் கொண்டிருந்தவன், ஆச்சரியத்தில் இன்னும் விழிகளை பெரிதாக விரித்தான். அவள் இதழை பிரிந்து தன்னிதழ் விரித்து சிரித்தவன் “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க தமிழ்!” என்று சொல்ல, அவள் சிரித்தாள்.

“உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? குழந்தை வேணுமா?” என்று அவள் கண்களை சுருக்கி கொஞ்சலாய் கேட்க, “நீ வேணும் தமிழ்! எனக்கு பொண்டாட்டியா வாழ்க்கை முழுக்க என் கூட இப்படியே இருந்திடு” என்றான்.

அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் கண்களை பார்த்தாள். அவன் இதழை நெருங்கி, அவள் இதழால் அவன் இதழை ஒற்றி முத்தம் வைக்க தெரியாமல் முத்தம் வைத்தாள். அவள் செய்ததை பார்த்து சிரித்தவன் அவள் இதழை மீண்டும் கவ்விக் கொள்ள, மீண்டும் இருவரும் அந்த இதழ் முத்தத்தில் மெய்மறந்து போனார்கள்.

“இப்படிதான் முத்தம் வைக்கணும் தெரிஞ்சுக்கோ டி..” என்று அவன் சொல்ல, “இதை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்?” என்றவள் நகைகளை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, குளியலறைக்குள் சென்று சேலையை மாற்றி சுடிதார் போட்டு வந்தாள்.

வளைகாப்பு விசேஷம் முடிந்து எல்லோரும் சென்றிருக்க.. இனியன், ரேவதி, சரவணன் மட்டும் அங்கிருந்தனர். இவர்களுடன் சேர்ந்து இளமாறன், செந்தமிழ், புனிதாவும் ஹாலில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன இனியா? உன் கோபமெல்லாம் போயிடுச்சா?” என்று புனிதா கேட்க, “உங்க கிட்ட கோபப்பட்டு நான் எங்க போகப்போறேன் ம்மா. எனக்குனு இருக்கது நீங்க மட்டும் தான். ஒரு சின்ன வருத்தம் இளமாறன் மேல அவ்ளோதான்” என்று சிரித்தான் இனியன்.

“இப்போ தான் அவன் எங்க தங்கச்சியை நல்லா வச்சிருக்கான்ல, அதனால எங்களுக்கு அவன் மேல எந்த கோபமும் இல்ல” என்ற சரவணனை பார்த்து, “இவனை எங்க டா பிடிச்சீங்க? என்று புனிதா கிண்டலாக கேட்க, நடந்த கதைகளை எல்லாம் சொன்னார்கள்.

ரேவதியின் கதையை கேட்டவர், “ஆமா இனியா.. உனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும். உன் குழந்தையையும் பார்க்கணும்” என்று புனிதா சொல்ல, “இந்த புனிதாம்மாக்கு வேற வேலையே இல்ல. கல்யாணம் பண்ணனும், குழந்தைய பார்க்கணும். இந்த டயலாக்க கேட்டு கேட்டு போர் அடிக்குது” என்று சிரித்தான் இளமாறன்.

“ரேவதி உன் அப்பா திருந்திட்டார் போல, ஏடிஎம் ல வாட்ச்மேனா வேலை பார்க்கிறார். அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்கிறார். நாங்க வந்து நம்ம கல்யாணம் விஷயமா வீட்ல உன் அப்பா அம்மா கிட்ட பேசட்டுமா?” என்று இனியன் கேட்க, ரேவதி வெட்கத்தோடு சிரித்து தலையை குனிந்து கொண்டாள்.

“ரேவதி வெட்கமெல்லாம் படுற!” என்று செந்தமிழ் அவளை பார்த்து கிண்டலாக சிரிக்க, “ஒருவழியா நாங்க ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டோம். அடுத்து நீ மட்டும் தான் இனியா. சீக்கிரம் உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்” என்று சரவணன் சொல்ல, இப்போது இனியனும் வெட்கத்தில் சிரித்தான்.

“கடைக்கு ஆள் வந்திருக்கிறார்..” என்று புனிதா கிளம்பி விட, “இனியன், ரேவதி திருமணத்தை எங்கு எப்படி செய்யலாம்? எவ்வளவு செலவு ஆகும்?” என்று நண்பர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். செந்தமிழ் எல்லோருக்கும் காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.

“நீ நல்லா சுறுசுறுப்பா இருப்ப, இப்போ ஏன்டி எல்லாமே மெதுவா பண்ணிட்டு இருக்க?” என்று ரேவதி செந்தமிழிடம் கேட்க, “தெரியல ரேவதி.. அடிக்கடி சோர்வா இருக்கு. அம்மா மாசம் ஏற ஏற அப்படிதான் இருக்கும்னு சொன்னாங்க” என்றாள்.

“அப்போ எதுக்கு வேலைக்கு வர்ற? வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான” ரேவதி தோழியின் மீதிருக்கும் அக்கறையில் சொல்ல,

“குழந்தை பிறந்த பிறகு நான் ஹாஸ்டலுக்கு போயிட்டா எனக்கு செலவுக்கு பணம் வேணுமே. அதனால வேலையை நிறுத்த வேணாம்னு பார்க்குறேன். நம்ம ஃபேக்டரில தான் பிரசவ லீவ் தருவாங்களே. அதுக்குள்ள உடம்பை தேத்திட்டு வேலைக்கு போகணும்” என்று செந்தமிழ் சொல்லிக் கொண்டிருக்க, ரேவதி மட்டுமல்லாது பேசிக் கொண்டிருந்த ஆண்களும் அதிர்ச்சியாய் அவளை பார்த்தார்கள்.

“அப்போ குழந்தைய என்னடி பண்ணுவ?” என்று ரேவதி கேட்க, “புனிதாம்மா கிட்ட குழந்தையை குடுத்திருவேன். அவங்க நல்லா பார்த்துப்பாங்க” என்றாள்.

“என்ன செந்தமிழ் இப்படி சொல்ற? மறுபடியும் இளமாறன் எதுவும் உன்கிட்ட பிரச்சனை பண்றானா? சொல்லு. அவனை இன்னும் ரெண்டு அடி போட்டு சரி பண்ணிடலாம்” என்று சிரித்துக் கொண்டே சரவணன் கேட்க, பதறிப் போனவளாய் “அய்யோ அண்ணா அவர் எதுவும் பிரச்சனை பண்ணல என்றாள்.

“அப்போ இங்க இருக்கிறதுல உனக்கு வேறென்ன பிரச்சனை?அண்ணனுங்க கிட்ட சொல்லு. நாங்கெல்லாம் இருக்கும் போது நீ ஏன் தனியா இருக்கணும்?” என்று இனியன் கேட்க,

“நான் தனியா இருக்கணும் அப்படிங்கிறது தான் என்னோட தலைவிதி. என்னோட வீட்டுலயும் அப்படிதான் இருந்தேன். நான் இங்க கல்யாணம் பண்ணிட்டு வரும் போது எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருந்தது. அதெல்லாம் எதுவுமே நடக்காதப்போ ரொம்ப கஷ்டமா இருந்தது. நான் எவ்ளோ முயற்சி பண்ணாலும் சில கஷ்டங்களை என்னால மறக்க முடியல.

“அவரும் அம்மாவும் என்கிட்ட அன்பா நடந்துகிட்டாலும் ‘இதெல்லாம் எத்தனை நாளைக்கு? குழந்தை பிறந்த பிறகு இதெல்லாம் மாறிடுமா?’ அப்படின்னு பயமா இருக்கு. அவரும் அம்மாவும் தப்பா நினைச்சுப்பாங்களோ, கோபப்படுவாங்களோ அப்படிங்கிற யோசனைல என்னால மனசுல இருக்கிறதை கூட பேச முடியல.

“எனக்கு இந்த வீட்ல இருக்கிறது சந்தோஷமா இல்ல. இந்த வீட்ல சாப்பிட கூட பிடிக்கல. இதெல்லாம் இவங்களுக்காக குழந்தைக்காக மட்டும்தான் பண்றேன். அவர் மேல எந்த தப்பும் இல்ல, அவர் மனசுல இருக்கிற வலியால என் மேல கோபப்பட்டிருக்கலாம். என்னை திட்டியிருக்கலாம். நான் என் சித்தி கிட்ட வாங்காத பேச்சு இல்ல, அடி இல்ல. ஆனா அதெல்லாம் என்னோட இளா பேசினாரு அப்படிங்கிறது தான் எனக்கு ரொம்ப வலியா இருக்கு.

“நான் பண்ண முதல் தப்பே யாருன்னே தெரியாத இவரை மனசார நேசிச்சது தான். அதோட விட்டிருக்கலாம். இவர் கல்யாணத்தை பத்தி அப்படி சொன்னப்போ நான் வேணாம்னு சொல்லியிருக்கணும். அதே போல இவர் குழந்தை வேணாம்னு சொன்னப்போ நானும் அப்படி பண்ணியிருக்க கூடாது.

“புனிதாம்மா ரொம்ப நல்லவங்க. என்னோட வாழ்க்கையில என்னை நேசிச்ச ஒருத்தர் அவங்க தான். என் மேல ரொம்ப அன்பு காட்டினாங்க. எனக்கு ஒண்ணுனா துடிச்சு போனாங்க. என் அம்மா உயிரோட இருந்திருந்தா கூட என் மேல இவ்வளவு அன்பு காட்டியிருப்பாங்களா அப்படின்னு தெரியல. அவங்க என்கிட்ட கேட்டது ஒன்னு தான். இளாவோட குழந்தை வேணும்னு கேட்டாங்க.

“எனக்கு இவ்ளோ அன்பு காட்டுறவங்களுக்கு நான் ஏதாவது பதிலுக்கு செய்யணும்னு நினைச்சு புத்தியில்லாம அதை பண்ணி இப்போ யாருக்கும் நிம்மதி இல்லாம போயிடுச்சு. அன்னைக்கு அவர் சொன்னப்போவே நான் அபார்ஷன் கூட பண்ணியிருக்கலாம். என்னோட அர்த்தமே இல்லாத இந்த வாழ்க்கையில ஒரு குழந்தை வேற!

“எனக்கு கொஞ்ச நாள் கொடுத்த அன்பையும் சந்தோஷத்தையும் கடவுளே பறிச்சுக்கிட்டாரு. என்னால திரும்ப இது எதையும் ஏத்துக்க முடியல. இந்த வேதனைகளை விட என் அப்பா வீட்லயே இருந்து அங்கேயே அப்படியே அழிஞ்சு போயிருக்கலாம்” என்று செந்தமிழ் கண்ணீரோடு பேசிக் கொண்டிருக்க, இளமாறனோ மனம் நிறைந்த வலியோடு அவளை பார்த்திருந்தான்.

காதலாய் வருவாள்💞 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்