
அழகியே 32
வேதா கூறி முடித்ததும் திவ்யா அவளை பார்க்க, “இதெல்லாம் ஜனனி அக்கா (என் உயிரின் ஜனனம் நீயடி ஹீரோயின்) சொன்னது என்றவள் தமயனிடம் திரும்பி இதுல அன்னைக்கு இவங்க உங்ககிட்ட சொல்ல நினச்சு சொல்லாம விட்டது அவங்க கர்ப்பமா இருக்கறததான். அவங்க நினைச்சுருந்தா அந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லி உங்களை தடுத்து உங்களோட சேர்ந்துருக்க முடியும். ஆனா அவங்க உங்களோட கடமைகளையும் உணர்ச்சிகளையும் சேர்த்து காதலிச்சிருக்காங்க. அதனாலதான் உங்ககிட்ட அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க” என்று கூற அதிரனோ அத்தனை கண்ணீருடன் அவளை பார்த்தான்.
இன்னொரு விசயம் திவ்யாக்கா, “எங்கண்ணன் அடுத்த ஒரு வருசத்துலயே உங்களை தேடி வந்துருக்கான். அங்க நீங்க இல்லை. இப்போ வரைக்கும் உங்களுக்கான தேடல் அவன்கிட்ட இருந்துகிட்டே இருக்கு. இன்னுமும் உங்களை நினைச்சி தவிச்சுக்கிட்டுதான் இருக்கான் இந்த விஷயம் ஆதி என் ஹஸ்பண்ட்கிட்ட சொன்னது.” என்றதும் பெற்றோரை பார்த்த ஆதி தலைகுனிந்தான்.
“உங்க லைப்ல நடந்த எல்லாமே நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கீங்க. ஊர்ல வந்ததுல இருந்து பாப்பா பிறந்த வரைக்கும் எல்லாம். ஆனா அது என் அண்ணண்தான்னு எனக்கு நேத்து காலைல நாங்க உங்க வீட்டுக்கு வந்தப்போ அதிக்குட்டி அண்ணாவோட போட்டோ எடுத்துட்டுவந்து இதுதான் என் டாடின்னு சொல்லும்போதுதான் தெரிஞ்சது, அப்புறம்தான் நான் ஜனனி அக்காகிட்ட கேட்டு மத்தத தெரிஞ்சுகிட்டேன். இப்போ சொல்லுங்க இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை. என்னாலதானே இதெல்லாம் நடந்துச்சு. என்னாலதானே அதிக்குட்டி அப்பா கூட இல்லாம தவிக்குறா” என்று தவிப்புடன் கேட்டவளை செழியன் சேர்த்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
திவ்யாவோ, “நடந்த எல்லாமே ஓகே வேதா. இப்போ இதுல நான் என்ன செய்யணும்னு நினைக்குற” என்று கேட்க, அதிரன் உடைந்தே போய்விட்டான்.
மீண்டும் அவளை விட்டுவிடுவோமோ என்று பயந்துபோனான். அவளோ அதிர்ந்து போய் பார்த்தவள், “அப்போ நீங்க அண்ணா கூட சேர்ந்து வாழ மாட்டிங்களா?” என்று கேட்க, அவளோ, “வேணாம்டா முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். எனக்கு இப்போதைக்கு இதுலயும் இஷ்டம் இல்லை. எனக்கு என் பொண்ணு போதும். இப்படியே இருந்துக்குறேன் நான்” என்று கூறினாள்.
தாமரை அவளருகில் வந்தவர், “அம்மாடி எல்லாமே எங்க தப்புதான். முன்னாடியே இந்த விசயம் தெரிஞ்சிருந்தா நாங்க உன்னை ஏத்துகிட்டு இருப்போமா தெரியல. ஆனா இப்போ உன்னோட இந்த பொறுமையும் புரிதலையும் பார்த்தபிறகு உன்னைவிட என் பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கமாட்டா. நீ எங்ககூடயே வந்துடு” என்று உருக்கமாக பேச அவளோ, “வேணாம் ஆண்ட்டி ப்ளீஸ்” என்று கூறியவளுக்கு கண்ணீர் முட்டியது.
வேதாவோ கண்களை துடைத்தவள், “சரி ஓகே, அப்போ உங்களுக்கு எங்க அண்ணா வேண்டாம் அப்படிதானே. அப்போ ஒண்ணு பண்ணுங்க. உங்களுக்கு உங்க குழந்தைக்கும் எங்க அண்ணாக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு சொல்லி எழுதி சைன் பண்ணி குடுத்துருங்க. உங்களுக்கு பிடிக்காத விஷயத்த எதுக்கு செய்யணும். நம்ம ஆபீஸ்ல வேலை பாக்குற ப்ரீத்தா இவனை ரொம்ப நாளா காதலிக்குறா. அவ பேமிலிகிட்ட பேசி நான் கல்யாணம் பண்ணி வச்சுறேன்” என்றவள் பேச பேச அவளையே அதிர்ச்சியாய் பார்த்து கொண்டிருந்த தமையனை பார்த்து கண்ணசைத்தாள்.
அவனிடம், “காதலை மட்டும் யார்கிட்டயும் கெஞ்சக்கூடாது அண்ணா. உன்னை வேண்டாம்னு சொல்ற இவங்களைவிட ப்ரீத்தாவ கல்யாணம் பண்ணிக்க உன் லைப் ஹாப்பியா இருக்கும்” என்று கூறியவளை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர் மீனாட்சி உட்பட.
அதிரனோ கண்களை துடைத்துக்கொண்டவன், “ஓகேடா மித்துமா நீ அவ நம்பர் குடு. நான் அவகிட்ட பேசுறேன்” என்று அலைபேசியை எடுத்தவனின் நெற்றியில் டம்ளர் ஒன்று வேகமாய் பறந்து வந்து வெட்டி செல்ல, நெற்றியை பிடித்து கொண்டவன் அதிர்ச்சியாய் பார்க்க திவ்யாவோ அங்கு கனல் கக்கும் விழிகளுடன் இடுப்பில் கைவைத்து முறைத்து கொண்டிருக்க, செழியன் சிரித்தேவிட்டான்.
வேகமாக அவனாருகில் வந்தவள் அவனின் சட்டையை பிடித்து, “இடியட், என் முன்னாடியே அவ நம்பர் கேக்குறியா?” என்று கோபத்தில் கத்தியவள் அவனின் மீதே சாய்ந்து அழ, அவளை அணைத்துக்கொண்டவனுக்கும் கண்ணீர்தான்.
அன்பரசனுக்கும் தாமரைக்கும் அத்தனை மகிழ்ச்சி. தங்களுக்காக கஷ்டப்பட்டவனின் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அவ்வளவு மகிழ்ச்சி. அவர்களின் மகிழ்வுடன் அங்கு இருந்தவர்களின் இதழ்களும் விரிந்தது.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, தன்வியுடன் உள்ளே வந்த அதிதியின் பார்வை அப்போதுதான் அங்கே கண்கலங்க நின்றுகொண்டிருக்கும் அதிரனை கண்டு விட, அழகாய் இதழ் விரித்த சிறு மழலையோ, “அப்பா” என்று கத்திக்கொண்டே அதிரனை நோக்கி ஓட, அவனோ பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டான் தன் மகளை.
அதுவரை அப்படி ஒரு குழந்தை இருப்பதை அறியாதவன் அல்லவா. மகளை கட்டிக்கொண்டு முத்திரைப்பதித்தவன் கணவனின் அணைப்பில் கண்கள் கலங்க அவனையே பார்த்திருந்த வேதாவையும் மற்றொரு கைநீட்டி அழைக்க, அவளும் ஓடிவந்து தமையனின் அணைப்பில் சேர்ந்துகொள்ள, அதிரனுக்கு அந்த நிமிடம் கனவுபோல தோன்றியது. தான் தவறவிட்டதாய் நினைத்த பொக்கிஷம் மகளுடன் சேர்த்து இரண்டாய் கிடைத்ததில் மகிழ்வென்றால் அதற்கு காரணம் அவனின் இரண்டாம் தாயான தங்கை அல்லவா.
தமையனின் அணைப்பில் இருந்த வேதாவின் கண்களில் அங்கே அவர்களையே இளப்பமாக பார்த்து கொண்டிருந்த மீனாட்சி கண்களில் பட, அதிரனுக்கு பின்னால் நின்றிருந்த திவ்யாவிடம், “அக்கா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தானே. தாலி எங்கே?” என்று கேட்க, அதிரனுமே குழப்பத்துடன் திவ்யாவை பார்க்க அவளோ, “போட்ருக்கேன் வேதாமா, என்னாச்சு? எதுக்காக கேட்கிற” என்றவள் கழுத்தில் இருந்த சைனில் கோர்த்த்திருந்த தாலியை எடுத்து காட்டினாள்.
அவளோ, “ஓ சாரி அது பார்க்கறதுக்கு தாலி செயின் போல இல்லை. அதான் ஒரு டவுட்ல கேட்டேன்” என்று கூறினாள் மீனாட்சியை பார்த்து கொண்டே.
திவ்யா, “இது உன் அண்ணன் என் பர்த்டேக்கு கிபிட் பண்ண செயின். அதனால தாலியை இதுலையே சேர்த்து போட்ருக்கேன். எப்போவும் என்னோடையே இருக்க மாதிரி இருந்துச்சு” என்றவளின் கண்கலங்க, வேதாவோ அவளை தமயனிடம் தள்ளியவள், “அதான் இனிமேல் கூடவே இருக்கப்போறீங்கதானே, கூடவே வச்சுக்கோங்க” என்று கூற, அதிரனோ தங்கையின் கன்னம் வருடியவன், “தேங்க்ஸ்டா மித்து குட்டி” என்று கூற, கண்சிமிட்டி சிரித்துக்கொண்டாள்.
வீடே மகிழ்வாய் இருந்தது. தேவ், அனன்யா இருவருக்குமான சடங்குகள், விருந்துகள் அனைத்தையும் மூன்று நாட்களாய் கொண்டாடி தீர்த்தனர்.
அன்றைய இரவு செழியனின் கைவளைவிற்குள் மார்பின் மேல் வேதா படுத்திருக்க, “எல்லாம் ஹாப்பியா இருக்காங்க இல்லை. நானும் சந்தோசமா இருக்கேன்” என்று வேதா மகிழ்வுடன் கூற செழியனோ, “நானும் உன்னால சந்தோசமா இருக்கேன். நாளைல இருந்து மறுபடியும் டூட்டி போகணும் ஒரு லாங் லீவுக்கு அப்புறம். ரொம்ப ஹாப்பியா இருக்கு” என்றவர்கள் காரணமே இல்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தனர் அன்றே கடைசியாக பேசுவது போல்.
ஆனால் அதுதான் உண்மை என்று அறியவில்லை இருவரும்.
மறுநாள் காலை அழகாய் விடிந்தது. அன்றையநாள் செழியன் வேதாவின் வாழ்வை புரட்டிப்போட்டது. காலை வேதா சமையலறையில் சமைத்துகொண்டிருக்க அவளை பின்னிருந்து அணைத்தவனோ, “குட் மார்னிங் தங்கமே. ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்த” என்று கேட்டுக்கொண்டே அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் காதுகளில் முத்தமிட, அதில் சிணுங்கியவள், “மாமா ப்ளீஸ் இன்னிக்கு ஒருநாள் என்னோட இருங்களேன், எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கூறினாள் சோர்ந்துபோன குரலில்.
அவளின் குரலில் இருந்த மாற்றத்தை கண்டுபிடித்தவன், “என்னடா என்ன பண்ணுது, எங்காச்சும் வலிக்குதா, வ… வயிறு எதுவும் வலிக்குதா” நடுக்கத்துடன் கேட்க அவளோ, “வலி எல்லாம் இல்லை மாமா. எனக்கு ஏதோ ஒரு மாதிரி பீல் ஆகுது. உங்களை விட்டு தூரமா போற மாதிரி” என்று கூற,
அதில் சிரித்தவன், “தங்கமே ஒரு மாசமா நான் உன் கூடயே இருந்துட்டு இன்னிக்கு வேலைக்கு போறேன். சோ உனக்கு அப்படி பீல் ஆகுது. அப்புறம் உனக்கும் இன்னிக்கு ஒர்க் இருக்குல்ல. சோ இப்போ ஆபீஸ் போங்க. நான் டைம் இருக்கும் போது இடைல கால் பண்றேன். ஈவினிங் சீக்கிரமா வந்ததும் வெளியே போவோம்” என்று பள்ளி செல்லும் குழந்தைக்கு சொல்வது போல் சமாதானம் கூறி அவனும் கிளம்பி செல்ல, வண்டியை எடுக்கும் முன் அவளை திரும்பி பார்த்தவனுக்கு தெரியவில்லை மீண்டும் அவன் அவளை காணும் போது அவள் உயிர் அவளைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுகொண்டிருக்கும் என்று.
அவன் சென்ற சிறிது நேரத்திலேயே வேதாவும் ஆட்டோவில் கிளம்பி சென்றுவிட்டாள்.
தேவ்வுக்கும் அனன்யாவுக்கும் தாமரையின் வீட்டில் இன்று விருந்து இருக்க, செழியனுக்கு அன்று வேலையில் சேரவேண்டும் என்பதால், வேதாவும் செழியனும் வர முடியாது என்று மறுப்பு கூறி இருக்க, அதிரனும் விடுமுறை எடுத்திருக்க, செழியன் மட்டுமே சென்றிருந்தான்.
அங்கு சென்றதும் அவனுக்கும் மனம் ஒருநிலையில் இல்லை. வேதாவின் நினைவாகவே இருந்தது. முடிந்தவரை கட்டுப்படுத்திக்கொண்டு வேலை செய்தவனால் மதியத்திற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளின் அலைபேசிக்கு அழைக்க, போன் சுவிட்ச் ஆப் என்று வர, நெஞ்சம் படபடவென அடித்துக்கொள்ள, தன்விக்கு அழைக்கலாமா என்று யோசித்தவனுக்கு அன்றுதான் தாமரையின் வீட்டில் வைத்தே தன்வி அகரன் திருமணத்தை முடிவு செய்வதாக அரவிந்தன் கூறியிருந்தது நினைவு வந்தது. அங்கும் மீனாட்சி வருவார் என்றே வேதாவை அங்கே அனுப்பாமல் வேலைக்கு செல்ல கூறியிருந்தான்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அது தோல்வியில் முடிந்தது. அதற்குமேல் தாங்க முடியாதவன், வீட்டிற்கு சென்று பார்க்க, அங்கும் அவள் இல்லை, துளசியம்மாள் காலை அவன் சென்றதுமே அவளும் கிளம்பிவிட்டாள் என்று கூற, அவளின் அலுவலகத்திற்கு சென்றவன் ரிசப்ஷனில் வேதாவை பார்க்க வேண்டும் என்று கூற, அவளோ மேடம் இன்னிக்கு வரல என்று கூறி அவனுக்கு அதிர்ச்சி அளிக்க, ஒருவேளை அவளின் வீட்டுக்கு சென்றிருப்பாளோ அப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்தவன் அவர்கள் வீட்டிற்கு சென்றான்.
அகரனின் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் நிச்சயமும் ஆறுமாதத்தில் திருமணமும் முடிவு செய்யப்பட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் இல்லத்திற்கு கிளம்ப தயாராகி கொண்டிருக்க, செழியன் பதட்டமாக உள்ளே, “தங்கமே” என்று அழைத்து கொண்டே வர, அனைவரும் அவனை கண்டு மகிழ்ந்து போயினர்.
தேவ், “டேய் இவ்ளோநாள் லீவு போட்டதுக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு கூட போகமாட்டேன்னு நினைச்சேன். ஆமா குட்டிமா எங்க” என்று கேட்க, அவனோ விழிவிரித்தவன், “அப்போ அவ இங்க இல்லையா?” குரலில் நடுக்கத்துடன் கேட்க ஆதியோ, “செழியன் நீ வரும்போது அவளை கூப்பிட்டுதானே வந்த. அப்போ அவ இங்க இருக்கானு நினைச்சு வந்தியா? அவ இங்க வரவே இல்லடா. இன்னிக்கு ஆபீஸ் போறேன்னு சொன்னா. அங்க இருப்பா” என்று கூறினான்.
திவ்யா, “ஹேய் அம் பீலிங் சிக்ன்னு மெஸேஜ் போட்ருக்கா. வீட்டுலதான் இருப்பாள்” என்று அவள் கூற, செழியனின் அதிர்ந்த முகம் நடுங்கிய குரலும் அதிரனுக்கு சந்தேகமாக இருக்க அவனருகில் சென்றவன், “என்ன செழியன் மித்து வீட்டுல இல்லையா, போன் பண்ணி பாரு” என்று கூறினான்.

