
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவர்களின் திருமணம் நடைபெறுவது உசிதம்.”
“ஏன் ஜோசியரே இவ்வாறு கூறுகிறீர்கள்? ஜாதகத்தில் ஏதேனும் குறை உள்ளதா?”
“அப்படி இல்லை தளபதி, தங்களது அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறினீர்கள். அதனால் தான் இவ்வாறு கூறினேன்.”
“எப்படி இருந்தாலும் கொற்றவை தேவி திருவிழா முடியாமல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க முடியாது. அதனால் சிறிது நாட்கள் பொறுத்திருப்போம். சரி நாங்கள் வருகிறோம் ஜோதிடரே.”
ஜோதிடர், அவர்கள் விடை பெற்றுச் சென்றதும் திரும்பவும் சோழிகளை உருட்டிப் பார்த்தார்.
“தாயே இது என்ன சோதனை கன்னிப் பலி ஒன்று நடக்கப் போவதாக சோழி கூறுகின்றதே! இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிற்றே.”
ஜோதிடர் தனது குருதேவரான சாந்தகுரு அடிகளாரை மனதில் நினைத்து வேண்டினார்.
“குருதேவா இந்த பிரச்சினையில் இருந்து, இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இது அழிவின் ஆரம்பம் தான் என்று எனக்கு தோன்றுகின்றது. கெட்ட சக்திகள் நாட்டுக்குள் ஊடுருவ இதுவே முதன்மையான காரணமாக அமையப்போகின்றது. வரப்போவது தெரிந்தும், அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் தவிக்கின்றேன். தயை கூர்ந்து எங்களுடன் இருந்து எங்களை காப்பாற்றி தாருங்கள்.”
நாளை காலையிலேயே அரண்மனைக்கு சென்று அரசரை சந்தித்து, நாட்டிற்கு வர போகும் ஆபத்தை பற்றி கூற வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துக் கொண்டார்.
அதே நேரம் அகத்தியர் மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த சாந்தகுரு அடிகளார், தமது கண்களை திறந்து, தமக்கு எதிரில் உள்ள சிவலிங்கத்தை நோக்கினார்.
சிவலிங்கத்தின் மீது இருந்த மலர்கள் ருத்ராட்ச மாலையோடு கீழே விழ, அதை கண்டு புன்னகை புரிந்தவர்,
“ஆண்டவா உமது கட்டளையை ஏற்று அங்கு செல்கிறேன். நான் அங்கு சென்று சேரும் முன் எந்த ஆபத்தும் அங்கு நெருங்காமல் இருக்க வேண்டும்.”
சிவலிங்கத்தின் பாதத்தில் இருந்த மலர்களையும் ருத்ராட்ச மாலையையும் கைகளில் எடுத்துக் கொண்டு, மகிழபுரியை நோக்கி, தமது பயணத்தை தொடங்கினார், சாந்தகுரு அடிகளார்.
மேனகா தேவி தனது அண்ணியாரிடம் மடலில் வந்துள்ள சேதியையும், தனது மனதில் உள்ள குழப்பத்தையும் கூறி அதற்கான தீர்வு வேண்டி கொற்றவை தேவி கோவிலுக்கு செல்லலாமா, என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தாரகை தேவியார் அங்கிருந்த மித்ரனிடம் திரும்பி, நாங்களும் உடன் வரலாமா என்று அவனிடம் அனுமதி வேண்டினார்.
ஏற்கனவே மதுராவை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்ற சிந்தனையில் இருந்தவன், இப்போது குடும்பமாக கிளம்பலாம் என்ற தன் அன்னையின் கோரிக்கைக்கு, என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையை மட்டும் சரி என்று ஆட்டி வைத்தான்.
தனது அறையில் மோகனா தன் சேவகியான யோகினிக்கு, நாளை செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பற்றி கட்டளையிட்டு கொண்டிருந்தாள்.
“நாளை அரண்மனையில் இருந்து இவர்கள் எல்லோரும் வெளியேறும் முன்பே, அந்த காட்டினில் இருந்து தாயும் மகளும் வெளியேறி இருக்க வேண்டும்.
அரண்மனையில் இருந்து இவர்கள் வெளியேறிய அடுத்த நிமிடம், நான் நமது இடத்திற்கு வந்து விடுவேன். அங்கு அந்த ஏந்திழையின் மகளை வசியப்படுத்தி, அவள் கையாலேயே கொற்றவை தேவியின் அருள் பெற்ற அவளை, காலக்கோடருக்கு பலியாக்குகிறேன்.”
யோகினி தயங்கி தயங்கி மோகனாவிடம் தனது சந்தேகத்தை கேட்டாள்.
“தேவி எனக்கு ஒரு சிறு குழப்பம், அதை தங்களிடம் கேட்கலாமா?”
“கேள், குழப்பத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க இயலாது, உனது சந்தேகத்தை கூறி தெளிவுபடுத்திக் கொண்டு காரியத்தில் இறங்கு.”
“நாம் இப்போது ஏந்திழையையும் அவளின் மகளையும் பலி கொடுத்து விட்டால், எவ்வாறு நமக்கு கொற்றவை தேவி திருவிழாவின் போது இங்கு வர அனுமதி கிடைக்கும்? இது தெரிந்தும் எதற்காக அனுமதி கேட்டு அரசருக்கு மடல் எழுதச் சொன்னீர்கள்?”
மோகனா புன்னகைத்துக் கொண்டே அவளைப் பார்த்து கூற தொடங்கினாள்.
“இப்போது காட்டுவாசி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை யார் செய்ததாக முதலில் எண்ணுவார்கள்?”
“நமது ரத்னபுரியைத்தான் கூறுவார்கள்.”
“நாம் இங்கு கொற்றவை தேவி திருவிழாவிற்கு வருவதற்காக அனுமதி கேட்டு அரசரிடம் மடல் அனுப்பி உள்ளோம். எனவே, இப்போது சந்தேகம் யார் பக்கம் திரும்பும்?
மடல் அனுப்பிவிட்டு பின்னாலேயே, இவர்களை நாம் கொல்ல துணிவோம் என்று அவர்கள் நினைப்பார்களா? அல்லது அரசர் தான் அவ்வாறு எண்ணுவாரா?”
“இல்லை தேவி இப்போது புரிகிறது, நமது ராஜ்யத்தின் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் முதலிலேயே மகிழபுரி அரசருக்கு நமது ரத்தினபுரி அரசரின் மூலம் மடல் அனுப்பி விட்டீர்கள். இப்போது அந்த ஏந்திழையின் மகளை பலி கொடுக்கப் போகிறீர்கள்.”
“ஆம் நடக்கப் போகும் இந்த நாடகத்தில், நமது ரத்னபுரி ராஜ்ஜியத்தின் பெயர் ஏதாவது ஒரு இடத்தில் வெளியே வந்து விட்டாலும், நான் இவ்வளவு நாள் இந்த ராஜ்ஜியத்தில் கட்டி காத்த எனது நற்பெயரும், என் அத்தானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் கனவாகவே கலைந்து போய்விடும்.
சற்று நிதானமாகத்தான் மறைந்திருந்து எதிரிகளை நாம் வேட்டையாட வேண்டும். சரி யோகினி, பேச்சை விடுத்து நீ காரியத்தில் கண் வை.”
கொற்றவை தேவி கோவிலை சுற்றி வாழும் குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள் அனைவரும், தமது வாழ்வாதாரத்திற்காக மலையடிவாரத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அந்த மலையின் உச்சியில், மேகங்கள் தொட்டுச் செல்லும் இடத்தில், சில மக்கள் வாழ்ந்து வந்தனர். அது மேக காடு என்று அழைக்கப்பட்டது, அங்கு வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள பழங்களை உண்டும், தேன் எடுத்தும் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடியும் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
ஒரு சில சமயம் குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள் விளைவித்துள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விடுவர்.
அவர்களிடமிருந்து தமது விளைநிலங்களை காப்பாற்ற குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள், அந்த மலை அடிவாரத்தில் ஒருவர் மாற்றி ஒருவராக, குழுவாக காவலுக்கு நிற்பர்.
ஒரு சில சமயம் காவலுக்கு இருப்போரை தாக்கி விட்டும், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டும், பாதி அவர்களின் தேவைக்கு என்று எடுத்துக் கொண்டு சென்று விடுவர்.
இவர்களின் அட்டகாசம் எல்லை தாண்டும் போது, ஏந்திழை அம்மையார் வந்து, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை விரட்டி அடிப்பார்.
அந்த மலை மீது வாழும் மக்கள் தங்களது வழித்தடங்களுக்கு, மலையின் மறுபக்கத்தை தான் உபயோகித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சில காலமாக மாந்திரீகங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருவதாக கேள்விப்பட்டதால், ஏந்திழை அம்மையார் மந்திர நடுகல்களை, மலையடிவாரத்தின் எல்லையில் நட்டு வைத்து, தமது மக்களை அவர்களிடமிருந்து காத்து வந்தார்.
இன்று அதிகாலையிலேயே ரகுநந்தனின் தாயார் அவனிடம், தன் அன்னைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை சென்று பார்த்து வருவதாக கூறிச் சென்றிருந்தார்.
இன்று அரண்மனையிலும் ரஞ்சனி எங்குமே தென்படாததால், தனது பாட்டிக்கு என்ன ஆனதோ என்ற கவலையுடன் ரஞ்சனியின் வீட்டிற்கு சென்றான் ரகுநந்தன்.
தளர்ந்து போய் சோர்வாக படுத்திருந்த தெய்வநாயகியை சுற்றி ரகுநந்தனின் அம்மாவும் அத்தையும் அமர்ந்திருந்தனர்.
தனது கணவர் போரில் இறந்ததும் தன் இரு மக்களையும் நல்ல முறையில் வளர்த்து, தமது மகனை நாட்டை காக்கும் போர் வீரனாக மாற்றிய அந்த வீரத்தாயை, ரகுநந்தனுக்கு மிகவும் பிடிக்கும்.
தனது பாட்டியின் தைரியத்தை எண்ணி அவன் வியக்காத நாளே இல்லை! ஒரு தனி மனுசியாக தமது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தவர். அவர் படுத்திருந்த கட்டிலின் அருகில் சென்று, அதற்கு கீழே அமர்ந்து கொண்டு அவர் கைகளை பற்றி கொண்டன் ரகுநந்தன்.
“அன்பே எனது நாயகிக்கு என்ன ஆனது? எப்போதும் காணப்படும் அந்த கம்பீரமான சிரிப்பை காண ஓடி வந்த என்னை இவ்வாறு ஏமாற்றலாமா?”
அவனது குரலை கேட்டு கண்களை மூடிய படியே சிரித்துக் கொண்டிருந்த நாயகி அம்மாள், கண்களை திறந்து அவனைப் பார்த்தார்.
“இப்போதும் எனது கம்பீரம் அப்படியே தான் உள்ளது எனது அருமை பேராண்டி. உனக்கும் ரஞ்சனிக்கும் நடக்கும் திருமணத்தை காணாமல் எனது உயிர் போகாது.”
“இவ்வளவு கம்பீரமான வீரப் பெண்மணியை விட்டு விட்டு, உன் கோழை பேத்தியை போய் நான் திருமணம் செய்து கொள்வேனா? உன்னோடு என்றால் சரி, இல்லை என்றால் நான் சன்னியாசம் வாங்கிக் கொள்கிறேன்.”
இவன் கூறியதைக் கேட்டு சோகமாக அமர்ந்திருந்த அவனது தாயும் அத்தையும் கூட சிரித்து விட்டனர்.
“பருவப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொன்னாள், இந்தப் பல்லு போன கிழவியை கட்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறாயே? உங்கள் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை கண்டு விட்டால், நான் நிம்மதியாக கண்களை மூடுவேன்.”
“யார் கூறினார்கள்? இந்த உலகத்தில் உள்ள அத்தனை ராஜகுமாரிகளும், உங்கள் மன உறுதிக்கு முன்பு வெறும் தூசு தான். எங்கள் திருமணத்தை மட்டும் பார்த்தால் போதுமா? பிறகு எங்கள் குழந்தைகளின் திருமணத்தை யார் முன் நின்று நடத்தி வைப்பது? அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளை முதன் முதலில் கையில் தாங்க போவதும் நீங்கள் தானே?”
அவனுக்கு பின்னால் டம் என்ற சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான். அங்கு ரஞ்சனி கோபத்தோடு கைகளில் இருந்த செம்பு நீரை அவனுக்கு பக்கத்தில் வைத்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டு அவன் அன்னையின் அருகில் போய் நின்று கொண்டாள்.
ரகுநந்தன் தனது முகத்தில் குறும்பு புன்னகையை தவழ விட்டு, தனது பாட்டியை நோக்கி பேச ஆரம்பித்தான்.
“நான் எவ்வாறு உனது பேத்தியை திருமணம் செய்து கொள்வேன்? அவளுக்குத்தான் சிறுவயதிலிருந்தே என்னை கண்டாலே ஆகாதே, முகத்தை திருப்பிக் கொண்டு செல்வாளே. இப்போது கூட நீங்கள் கண்டீர்கள் தானே, நீரினை கைகளில் கூட கொடுக்கவில்லை. இதனால் நான் குருகுலத்தில் இருக்கும்போதே ஒரு பெண்ணை நேசிக்க தொடங்கி விட்டேன்.”
ரகுநந்தன் தனது தாயையும் அத்தையையும் நோக்கி கண்களை சிமிட்டினான். ஆனால் அதிர்ந்து நின்ற ரஞ்சனி இவன் காட்டிய சைகையை கவனிக்கவில்லை.
“பெண்கள் என்றால் கூச்சம் அதாவது நாணம் இருக்கும். இவர் என்னைப் பார்த்து சிரிக்கும் போதெல்லாம் ஈஈஈஈ என்று சிரித்து வைக்க முடியுமா, என்று கேளுங்கள் அத்தை.”
“அது எனக்கு எப்படி தெரியும் என்று நீங்களும் கூறுங்களேன் எனது அத்தையே.”
“மருமகனே உனது மனம் கவர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் என்ன? மிகவும் அழகானவளா? அவளின் குணம் எப்படி? நமது குடும்பத்திற்கு தகுந்தவள் தானே.”
ரஞ்சனி தனது அன்னையை பார்த்து கத்தினாள்.
“அம்மா என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? அவர் என்ன கூறுகிறார், நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?”
“நமது வீட்டுக்கு வரப்போகும் பெண்ணைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நான் சரியாகத்தானே கூறுகிறேன் மருமகனே?”
“ஆம் அத்தை நீங்கள் எப்போதுமே சரியாகத்தான் கூறுவீர்கள். விரைவிலேயே அவளை இங்கு அழைத்து வருகிறேன்.”
“வருவீர்கள் வருவீர்கள் என்னை பார்த்தால் எப்படி தெரிகின்றது? அப்படி யாரையாவது கூட்டி வந்தால் அவளையும் கொல்வேன் கூட்டி வந்த உங்களையும் கொல்வேன். சிறுவயதில் இருந்து தங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என்னை, மோசம் செய்து விட்டு வேறொருத்தியின் கழுத்தில் தாலியை கட்டி விடுவீர்களா? உங்கள் கைகளை முறித்துவிட்டு எனது கையாலேயே நான் தாலியை கட்டி கொள்வேனே ஒழிய, வேறொருத்தியின் மீது உங்கள் கண்கள் போக கூட நான் அனுமதிக்க மாட்டேன். மீறிப் போகுமேயானால், அப்படியே உங்கள் இரண்டு கண்களையும் நோண்டி விடுவேன் ஜாக்கிரதை.”
ரஞ்சனி படபடவென்று பட்டாசாக பொரிந்து விட்டு, கொல்லைப்புறத்தில் உள்ள தோட்டத்தை நோக்கி சென்று விட்டாள்.
ரஞ்சனி பேச ஆரம்பித்ததுமே அதிர்ந்து நின்ற ரகுநந்தன், சுயநினைவுக்கு வந்த பிறகு, சத்தமாக சிரிக்க தொடங்கி விட்டான். அவனது அன்னை அவன் முதுகில் இரண்டு அடி போட்டு விட்டு,
“எதற்காகடா அவளை இப்படி வெறுப்பேற்றுகிறாய்? பார் பிள்ளை மனம் நொந்து போய் விட்டது. ஒழுங்காக நீயே சென்று அவளை சமாதானப்படுத்து.”
“விடுங்கள் அண்ணி, இவ்வாறு கூறியதால் தானே அவள் மனதில் உள்ளவைகள் அனைத்தும், இப்போது அவள் வாய் வழியாகவே வெளிவந்தது. எல்லாம் நல்லதற்கு தான்.”
“நீ கொடுக்கும் செல்லத்தில் தான் அவன் இவ்வாறெல்லாம் ரஞ்சனிடம் நடந்து கொள்கிறான். இன்னும் இங்கு நின்றுகொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? போய் என் மருமகளை சமாதானப்படுத்து. அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிவரக் கூடாது, ஜாக்கிரதை.”
“அத்தையும் மருமகளும் ஒன்று போலவே இருக்கிறீர்கள். எப்படித்தான் என் வாழ்நாள் எல்லாம் சமாளிக்க போகின்றேனோ?”
ரகுநந்தன் புலம்பிக்கொண்டே கொல்லைபுறத்தில் உள்ள தோட்டத்தை நோக்கி சென்றான்.
ரஞ்சனி அங்கிருந்த பூச்செடியின் இலைகளை பிய்த்து எறிந்து, தனது கோபத்தை அதனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.
புன்னகை முகத்துடன் அவளை நோக்கி வந்த ரகுநந்தன்,
“அடடா என் செல்ல குட்டி ரஞ்சிக்கு எவ்வளவு கோபம் வருகின்றதே?”
“ஏன் வரக்கூடாதா? நீங்கள் பேசிய பேச்சு அப்படி.”
“நான் என்ன செய்ய என்னை கண்டாலே பயந்து ஓடும் பெண்ணிடம், துரத்திச் சென்று என் அன்பை தெரிவிக்க முடியுமா?”
“அதற்கு வெட்கம் நாணம் என்று இன்னொரு பெயரும் உண்டு.”
“அப்படியா! இப்போது மட்டும் அந்த நாணம் எங்கு போய்விட்டது?”
அப்போதுதான் அவனுக்கு சரிசமமாக தான் வாயாடி கொண்டிருப்பதை உணர்ந்த ரஞ்சனி, அவனுக்கு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்
“ரஞ்சி, என்னை பார். என்னை உனக்கு பிடித்து இருக்கின்றதா? என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாயா? குருகுலத்தில் இருந்தாலும், நான் தினந்தோறும் என் மனதில் நேசித்துக் கொண்டிருந்த பெண் யார் தெரியுமா?”
அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, அருகில் இருந்த தாமரை குளத்திற்கு அவளை அழைத்துச் சென்று, குளத்தில் தெரியும் ரஞ்சனியின் உருவத்தை காட்டினான்.
அந்த குளத்தில் தெரியும் தனது உருவத்துக்கு அருகில், நின்று கொண்டிருந்த தனது ஆசை அத்தானுடன் சேர்ந்து நின்றிருக்கும் தனது கோலத்தை கண்டு, ரஞ்சனியின் கண்களில் ஆனந்த கண்ணீர் மின்னியது.
அப்போது திடீரென்று கேட்ட கொம்பின் ஒலியில் ரகுநந்தனின் முகம் தீவிரமானது. ரஞ்சனியின் கைகளை இறுக பிடித்தவன்,
“நான் இப்போது அவசரமாக செல்ல வேண்டும் ரஞ்சனி, நான் பிறகு வந்து உன்னை சந்திக்கிறேன்.”

