
அகம்-32

லேசான காலை வெயில் மரங்களின் இடைவெளியில் மஞ்சளும் ஆரஞ்சுமாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கையில் காபியுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் கருவிழி. அவள் பக்கத்திலேயே மார்பின் குறுக்கே கைகட்டியபடி யோசனையுடன் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்திருந்தான் துடிவேல் அழகர். அவனுக்கான காபி ஆறிப் போய் ஏடு படிந்து கிடந்தது.
“மாமா! அழகரு! லூசு அழகரு..!” யோசனையிலிருந்தவனை நான்காம் முறையாய் விளித்தாள் கருவிழி.
“இத்தனை தடவை கூப்பிடுறேனே காது கேட்குதா இல்லையா உனக்கு?”எனக் கேட்டவள் யோசனை சுமந்திருந்த அவன் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.
“நானே.. வீட்டில் நடக்கற சங்கதியெல்லாம் பார்த்து மண்டை காய்ஞ்சு போய் இருக்கேன். நீ என்னடான்னா லூசு மாதி பேசிட்டு இருக்கே? போடி கிறுக்கச்சி!” எரிச்சலுடன் பதில் சொன்னான் துடிவேல் அழகர்.
சொக்கேசனின் தற்போதைய நிலை, அங்கயற்கண்ணியின் பேச்சு எல்லாம் சேர்ந்து அவனிடம் ஓர் குழப்பமான மனநிலையைத் தோற்றுவித்திருந்தது.
“நீ யோசிக்கிறதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன் அழகரு! நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசின பிறகு தான் இதெல்லாம் நடக்குது. நம்ம கல்யாணப் பேச்சு தான் இத்தனைக்கும் காரணமோன்னு தோணுது! பே.. பேசாமல் நிறுத்திடலாமா?” குரல் தடுமாறி தொண்டை அடைத்தது அவளுக்கு.
முல்லைப் பந்தலின் கீழிருந்த ஊஞ்சலில் அழகரின் அருகே அமர்ந்திருந்தவளின் கரம் அவளையும் அறியாது அவன் கரம் பற்றியது. அவளின் இதழ்கள் நிறுத்திவிடலாம் எனச் சொன்னாலும், அவளின் கரம் அனிச்சை செயலாய் அவனை விட முடியாது என்பதை தெளிவாகவே உணர்த்தியது.
“கிறுக்கச்சியா டி நீ? அறிவே வளராதா உனக்கு? மூளை இருந்தால் தானே அறிவு வளர்றதுக்கு. மண்டைக்குள்ளே களி மண்ணு தானே கொட்டிக் கிடக்கு! கிறுக்குத்தனமா பேசிட்டு இருந்தேன்னு வையி.. அடிச்சு பல்லு கில்லெல்லாம் கழட்டிடுவேன் பார்த்துக்கோ! நான் இல்லாமல் அரை நாள் இருந்துடுவியா டி? உன்னால் முடியும்ன்னா சொல்லு! இப்போவே எல்லாத்தையும் நிறுத்த நான் தயார். ஆனால் என்னால் முடியாது டி! நீ இல்லாமல் அரை நிமிஷம் முடியாது. ஒரே வீட்டில் உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கப் போய் உசிரோட இருக்கிறேனோ என்னவோ? தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைங்கிறது எனக்கும் வருத்தம் தான். சொல்லப் போனால், உன்னை விட எனக்குத்தான் ரொம்ப அதிகமான கவலையும் வருத்தமும் இருக்கு. ஆனால் எதேச்சையா நடந்ததையெல்லாம் நம்மளால் தான்னு நம்ம தலையில் போட்டுக்க வேண்டிய அவசியமில்லை! விளங்குதா?” உறுமலாய் செவிக்கருகில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு ஊஞ்சலிலிருந்து பின்னால் விழப் போனவளை, இடையோடு கையிட்டு இழுத்து, தன்னோடு சேர்த்தணைத்து தாங்கினான் அழகர்.
“ஏன் இப்படி பயமுறுத்துறே.? உன்கிட்டே பேச மாட்டேன் போ!” அவன் கரம் உதறி, முகம் திருப்பினாள் கருவிழி.
“இந்தாருடி, கரு கரு..! இனியொரு முறை, இந்தக் கல்யாணம் வேணாம், இது நடக்காதுன்னு உன் வாயிலிருந்து வரக் கூடாது. என்ன நடந்தாலும், இந்த ஜென்மத்தில் உனக்கு நான்.. எனக்கு நீ..! இதை மாற்ற யாராலும் முடியாது!” அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி சொன்னவனின் குரலில் இருந்த தீவிரத்தில் ஒருநொடி ஆடிப் போனாள் கருவிழி. அவனின் தீவிரமான முகமும், அழுத்தமானக் குரலும் அவளுக்குக் கொஞ்சம் புதிது தான்.
“நா..ன் நான் இனிமே சொல்ல மாட்டேன் அழகரு! நீ.. நீ அமைதியாய் இரு!”அவன் காதலின் தீவிரத்தில் ஒருபுறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், இன்னொருபுறம் அவளுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
“எந்நேரமும்.. ஒண்ணா ஒட்டி உரசிக்கிட்டே திரிங்க! ஆனால் என் கடல் கன்னியை மட்டும் கண்ணில் காட்டாதீங்க டா! என்னோட மெர்மெய்டை (mermaid) அறைக்குள்ளேயே சிறை வச்சிட்டீங்களா?” எனப் புலம்பியபடியே வந்து நின்றான் காத்தவராயன். என்னதான் தன்னை இயல்பாய்க் காட்டிக் கொள்ள முயன்றாலும், காத்தவராயனின் முகத்தில் கவலை தெரிந்தது.
“ஏன் அழகு, பெரியவரு இப்போ எப்படி இருக்காரு? ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தேன் ரொம்ப சங்கடமா போச்சு அழகு! எப்படி நிமிர்ந்து நின்ன மனுஷன், ரொம்ப வேதனையாய் இருக்கு. என்னதான் சாதாரணமா இருக்க முயற்சி பண்ணினாலும் முடியலை அழகு! அவர் கயலை இங்கே கூட்டியாந்தது எனக்காகத்தேன்னு கிழவி சொன்னுச்சு. எனக்கு கட்டி வைக்கணும்ன்னுதேன் கூட்டியாந்தாருன்னு தெரிஞ்சதும், என்னையும் குடும்பத்தில் ஒருத்தராய் நினைச்சு, நல்லது பண்ண நினைச்சவருக்கு இப்படியொரு நிலையான்னு மனசு விட்டுப்போச்சு!” எனச் சொன்ன காத்தவராயனின் கண்களில் நீர் நிரம்பியிருக்க, அவன் குரலில் நிஜமான வருத்தமும் வேதனையும் தெரிந்தது.
“இப்படித்தேன் நடக்கணும்ன்னு விதி இருந்தால் நடந்து தான் தீரும். நீ சங்கடப் படாதே! நல்லதே நடக்கும்ன்னு நினைப்போம்! சீக்கிரம் மீண்டு வருவார் தாத்தா!” நம்பிக்கையாய் பேசினான் அழகர்.
“ஒரு வாரமாய் எந்தச் சோலியும் பார்க்கலை! நடந்ததை நினைச்சுட்டே உட்கார்ந்திருந்தால், எதுவும் மாறாது. வா! சோலியைப் பார்ப்போம்! உன் கடல்கன்னி கிட்டே சொல்லி, காப்பியைப் போடச் சொல்லு! குடிச்சுப்புட்டு கிளம்புவோம்!” என்றபடியே ஊஞ்சலிலிருந்து எழுந்தவன், காத்தவராயனின் தோளில் கையைப் போட்டபடியே வீட்டினுள் சென்றான்.
*******
அதே நேரம், ஊஞ்சலில் மெதுவாய் ஆடியபடியே, மஞ்சள் வெயில் மந்தகாசமாய், முல்லைக் கொடிகளுனூடே இறங்கிக் கொண்டிருந்த மாலை வேளையில், மனதிற்குள் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் கருவிழி. ஏனோ இப்போதெல்லாம் இந்த ஊஞ்சலில் அமர்வது அவளுக்குப் பிடித்திருந்தது. அதுவும் அழகருடன் கதை பேசிக் கொண்டே அமர்வதெல்லாம் அதிகமாய் பிடித்தது.
“ஏய் விழி!” செவிக்கருகில் கேட்ட குரலைக் கூட உணராமல், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.
“அடியேய் விழி! உட்கார்ந்துக்கிட்டே கனவு காணுறியா? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி யோசிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கிற?” ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் கேட்ட அந்தக் குரலில் சிந்தைக் கலைந்து நிமிர்ந்தாள் கருவிழி.
“ஏய் மது! என்ன அதிசயம்? இரு மழை எதுவும் வருதான்னு பார்த்துட்டு வர்ரேன்.! என்னைத் தேடியெல்லாம் வந்திருக்கியே அதிசயம் தான்!” வேண்டுமென்றே கிண்டலாய்ப் பேசினாள் கருவிழி. உண்மையாகவே மது இங்கு வந்திருப்பது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
“ம்ப்ச்! உனக்கு விஷயம் தெரியுமா டி? நான் சொல்றதை முதலில் கேளு!” ஏதோ சொல்வதற்காய் தீவிரமாய் முயன்றாள் மதுரிமா.
“நெடு மாமா பிஸியா? அதனால் தானே இங்கே வந்தே? முதலில் நான் தான்டி உனக்கு ஃப்ரெண்ட்டு, எனக்குப் பிறகு தான், அந்த நெட்டை நெடுமானஞ்சியெல்லாம்! என் ஃப்ரெண்டை என் கிட்டேயே பேச விட மாட்டேங்குது இந்த நெடு மாமா!” தோழியின் மீதிருந்த கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது கருவிழிக்கு. ஆனால், முக்கியமாய் எதையோ சொல்வதற்காய் வந்திருந்த மதுவிற்கு கருவிழி சொன்னது காதில் ஏறவே இல்லை.
“அம்மா தாயே.. முதலில் நான் சொல்றதைக் கேளு! ரோஹன் விஷயம் உனக்கு தெரியுமா தெரியாதா?!” கருவிழியின் கரத்தில் அழுத்த தந்து அவள் முகம் பார்த்து வினவினாள் மதுரிமா.
“எந்த ரோஹனு..!” கருவிழி யோசனையாய்ப் புருவம் சுருக்க,
“சுத்தம்! அடியேய் லூசு! லவ் பண்ணுறேன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சியே அந்த ரோஹனைத்தான் சொல்றேன்.” என விளக்கினாள் மதுரிமா.
அழகரின் மீதான காதலை உணர்ந்தபின் ரோஹன் நிஜமாகவே அவளின் நினைவுகளிலிருந்து காணாமல் போயிருந்தான்.
“நிஜமா மறந்துட்டேன்டி! நான் தான் அவனை ப்ரேக்-அப் பண்ணிட்டேனே.. அதனால் மறந்துட்டேன்.” மிகச் சாதாரணமாய்ச் சொன்னாள் கருவிழி.
“உன்னைக் கடவுள் இம்புட்டு அறிவாளியாய் படைச்சிருக்கரேன்னு அதிசயமாய் இருக்கு டி! வாக்கப்பட்டு போகப் போற வீடு, கல்யாணத்திற்கு முன்னால் போகக் கூடாதுன்னு எங்க அம்மா வஞ்சதையும் மீறி உனக்காக வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்! நீ தான் ரோஹனை மறந்துட்டியே, நான் எதுக்கு மறந்தவ கிட்டே பேசி திரும்ப ஞாபகப் படுத்தணும்? நான் கிளம்பறேன்! நீ ஊஞ்சல் ஆடு!” இத்தனை நேரமாய் இழுத்துப் பிடித்து வைத்திருந்த பொறுமை கற்பூரமாய்க் காற்றில் கரையச் சொன்னாள் மதுரிமா.
“ஏய் மது, நில்லுடி! என்னன்னு சொல்லிட்டு போ!” தோழியை நிறுத்த முயன்றாள்.
“சொல்ல முடியாது போடி! நான் சொல்ல வர்ரதைக் காது கொடுத்து கேட்டியா?” கருவிழியின் கெஞ்சலுக்கு காதுகொடுக்காமல், நடந்தாள் மதுரிமா.
“ஸாரி! ஸாரி! மன்னிச்சுரு டி! நான் கேட்கிறேன் வா!” தோழியை சமாதானம் செய்து இழுத்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினாள் கருவிழி.
“ஏன் விழி, நிஜமாவே ரோஹனுக்கும் உனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை தானே? உன் ஃபோட்டோஸ் எதுவும் அவன்கிட்டே இருக்கா?”கொஞ்சம் பதற்றமாகவே வினவினாள் மது. தோழி எதிலும் சிக்கிவிடக் கூடாதென்கிற பயம் மதுவிற்குள் இருந்தது.
“இல்லையே! என்னத்துக்குடி இதெல்லாம் கேட்கிறே?” குழப்பமாய்க் கேட்டாள் கருவிழி.
“ரோஹனை போலிஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க! டெல்லியில் ஏதோவொரு பொண்ணை லவ் பண்ணுறேன்னு ஏமாத்தி, அந்தப் பொண்ணுக் கூட பர்ஸ்னலா இருந்த ஃபோட்டோஸ் வீடியோஸ் எல்லாத்தையும் நெட்டில்
. அந்தப் பொண்ணு, தன்னோட ட்விட்டர் பேஜில், இவன் தான் காரணம்ன்னு போஸ்ட் போட்டுட்டு தற்கொலை முயற்சி பண்ணியிருக்கு. மாடியிலிருந்து குதிச்சதால் ரொம்ப சீரியஸ் கண்டிஷன். கோமா ஸ்டேஜ்க்கு போய்டுச்சு அந்தப் பொண்ணு. ரோஹனோட அப்பா சென்ட்ரல் மினிஸ்டராம். அவரோட பதவியை யூஸ் பண்ணி, நம்ம ஊர் காலேஜில் அவனைச் சேர்த்திருக்கிறார். நேத்து அந்தப் பொண்ணு ஹாஸ்பிட்டலில் இறந்து போச்சு. தற்கொலை கேஸ் இப்போ கொலை கேஸாய் மாறிடுச்சு. அதனால் தான் ரோஹனை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க!” நீளமாய் சொல்லி முடித்தாள் மது.
“அவனை அரெஸ்ட் பண்ணினால் நமக்கு என்ன டி? தப்பு பண்ணினால் அரெஸ்ட் பண்ணத்தானே செய்வாங்க! நல்லவேளை நான் தப்பிச்சேன்.! தெரியாமல் நான் போய் மாட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” சாதாரணமாய் பேச முயன்றாலும் அவளுக்குள் பயம் இருந்தது.
அவன் முறையற்ற வாழ்க்கைக்கு கேட்டது, காதல் என்ற பெயரில் தன்னிடம் அத்துமீற முயன்றதெல்லாம் யோசிக்கையில் பயத்தில் வியர்த்து வழிந்தது அவளுக்கு.
“அதைக் கேட்கத்தான் டி நான் வந்தேன். ஏதோ அவனுக்கு எதிரா ஆதாரம் கிடைச்சதாகவும் எங்க காலேஜில் பேசிக்கிறாங்க! நிறைய பொண்ணுங்க ஃபோட்டோஸ், வீடியோஸ் அதில் இருக்கிறதாகவும் சொல்றாங்க! அதில் இருக்கிற பொண்ணுங்களையெல்லாம் லிஸ்ட் எடுத்து விசாரிக்கப் போறாங்களாம்! அவன் டெல்லியில் யார் கூட வேணும்னாலும் பழகி இருக்கட்டும்! மதுரையில் அவன் பழகின ஒரே பொண்ணு எனக்குத் தெரிஞ்சு நீ தான். ஒருவேளை உன் ஃபோட்டோ அதில் இருந்து, உன்னைக் கூப்பிட்டு விசாரிச்சாங்கன்னா..? எனக்கு பயமா இருக்குடி விழி! திரும்பத் திரும்ப கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே டி! நிஜமாவே உன் ஃபோட்டோ எதுவும் அதில் இல்லை தானே?” பதற்றமும் பயமும் நிறைந்தக் குரலில், நிஜமான அக்கறையுடன் வினவினாள் மது.
“தெ.. தெரியலையே டி..! எனக்குத் தெரிஞ்சு இல்லை. ஒருவேளை தெரியாமல் எடுத்திருந்தால்..?” எனக் கருவிழி யோசனையும், பயமுமாய் வினவ, அதிர்ந்து, அசையாமல் நின்றிருந்தாள் மதுரிமா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தோழமைகள் அனைவருக்க்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 💜