Loading

சபதம்-13

வல்வினை வலியரோ?

வலியர் தம் செய்கை வலியரோ?

மெல்லியல் அறியேன்;

மனிதர் தம் செய்கை

வல்லது அல்ல எனில்

வாழ்தல் இனிதோ?”

பொருள்:

வலிமையான விதியா (ஊழ்) அல்லது மனிதனின் முயற்சியும் செயலுமா, எது உண்மையில் அதிக வலிமை கொண்டது? இதற்கான இறுதியான பதிலை நான் தெளிவாக அறியேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி: மனிதனின் செயல் வலிமை இல்லையென்றால், இந்த வாழ்க்கை வாழத் தகுதியானதில்லை.

அரண்மனை மண்டபம் அமைதியில் திளைத்திருக்க, செதுக்கப்பட்ட ஜரோக்காக்கள் வழியாக விழும் சூரிய ஒளி பளிங்குத் தரையில் பொற்கோலங்களை வரைவது போலப் பரவி இருந்தது.

அந்த மண்டபத்தின் மத்தியில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்து தங்கள் ஆடிட்டருடன் முக்கியமான எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார் அரசர் சமர் சிங். அந்த நேரத்தில், இரண்டு அரண்மனைக் காவலர்கள் ஒரு அரசு அதிகாரியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அவரின் கையில் முத்திரை இடப்பட்ட, ரகசியம் எனக் குறிக்கப்பட்ட உறை இருந்தது.

அரசருக்கு வணக்கம் தெரிவித்த அந்த அதிகாரி, “உதய்ப்பூர் அரசருக்கு வணக்கம். இது நில வளத்துறை அமைச்சகத்திலிருந்து வந்தது. அவசரம் மற்றும் ரகசியம் நிறைந்தது.”

மன்னன் சைகை செய்து அவரை அருகில் அழைத்தார்.

அதிகாரி உறையை மரியாதையுடன் நீட்ட, மன்னன் முத்திரையை உடைத்து, ஆவணத்தைத் திறந்து படிக்கத் தொடங்கினார்.

அடுத்த கணத்தில் அவரின் முகம் உறைந்து போக, அந்த அறையில் இருந்த நால்வரும் காற்றில் திடீரென்று ஏற்பட்ட இறுக்கத்தை உணர்ந்து கொண்டனர்.

சில நொடிகள் கழித்து, பேசத் தொடங்கிய மன்னரின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிய, “அராவள்ளி மலைத்தொடரில் உள்ள கர்ஹ் அதிவார் அரண்மனையும் அதன் சுற்றுப்புற நிலமும் நிதி இழப்பீட்டின் மாற்றாக இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றப்பட வேண்டும்’ என்று கூறுகிறார்கள்.” என்றபடி ஆவணத்தை மெதுவாகத் தாழ்த்தினார்.

அந்த ஆவணத்தைப் பற்றி இருந்த அரசரின் விரல்கள் நடுங்கின. அதில் சுற்றி இருந்தவர்களுக்கு அவரின் கோபத்தின் அளவு நன்கு தெரிய, மேலும் தொடர்ந்த அரசர், “அரசு கர்ஹ் அதிவாரை விலை பேசியிருக்கிறார்கள்.”

அதற்குள் விஷயம் அரண்மனை முழுவதும் பரவ, மண்டபத்திற்குள் நுழைந்த அமைச்சர்,”மகாராஜா வாழ்க! நாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?”

தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த அரசரின் முகத்தில் சலனம் இன்றி, “ஆம் அமைச்சரே! இதோ டெல்லியில் இருந்து ஆவணத்தைக் கொண்டுவந்த அதிகாரி, நமது பதிலுக்காகக் காத்திருக்கிறார்” என்றபடி ஆவணத்தை தனது அமைச்சர்கள் மூவருக்கும் காட்டினார்.

அதைப் பார்த்தவர்கள்,“வாங்குவதா? கர்ஹ் அதிவார் விற்பனைக்கான பொருளா?” என்ற அமைச்சரின் கோபம் எதிரில் இருந்த அதிகாரியைச் சுட, அதற்குப் பதிலளிக்கும் முன், அடுத்தவர்,”அந்த நிலம் புனிதமானது! இது ராஜ்புதானாவுக்கு நேரடியான அவமதிப்பு!” என்று மாற்றி மாற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மன்னர் கை உயர்த்த, அந்த சைகையில் மண்டபம் மீண்டும் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது.

மன்னரின் குரல் எஃகைப் போல இறுக்கத்துடன் வெளிவந்தது,”“கர்ஹ் அதிவார் எங்கள் வம்சத்தின் தாய் மடி. எங்கள் முன்னோர்களின் முதல் கோட்டை. அவர்கள் ரத்தம் சிந்திய நிலம். அதை டெல்லி…ஒரு நிலத் துண்டு போல வாங்க முடியும் என்று நினைப்பதா?” என்றபடி சிம்மாசனத்திலிருந்து இறங்கினார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் மண்டபத்தின் சுவர்களில் பட்டு அதிர்வை ஏற்படுத்தியது.

அரசு அதிகாரியின் அருகில் வந்த அரசர்,“உங்கள் பணத்தின் மதிப்பு எதற்கு என்று சொல்ல முடியுமா? வரலாற்றுக்கு என்ன விலை? தியாகத்துக்கு என்ன விலை?
அந்த மண்ணின் கீழ் புதைந்திருக்கும் எங்கள் முன்னோர்களின் ரத்தத்திற்கு என்ன விலை?” என்றபடி ஆவணத்தை உயர்த்திப் பிடித்தார்.

அரசர்,“இது அரசு எங்களுக்குச் செய்யும் சலுகை அல்ல. இது ராஜபுத்திரர்களுக்கு அவமதிப்பு. எங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்ட இழிவு. எங்கள் பாரம்பரியத்துக்கு விலைப்பட்டியல் வைத்திருக்கிறது உங்கள் அரசு.” என்ற வார்த்தைகளைக் கேட்ட அமைச்சர்கள் கோபத்துடன் தலையசைத்தனர்.

எதிரே இருந்த அதிகாரியை ஒரு பார்வை பார்த்த அமைச்சர்,” மகாராஜா! இதற்கான நமது பதில் என்ன?” என்றதும் மன்னர் கண்களில் நெருப்புடன்,”நிராகரிக்கப் போகிறோம். ராஜ்புத்திரர்களின் சார்பாக டெல்லிக்கு ஒரு செய்தி அனுப்புங்கள்:

‘ராஜ்புத் நிலம் விற்பனைக்கு அல்ல.'” என்று.

அதைக்கேட்ட அமைச்சர் ஒருவர் தயக்கத்துடன் முன்வந்து,”ஆனால், மகாராஜா…நிராகரித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவில்…” என்றவரின் வார்த்தை முடியும் முன் மன்னர் உரக்க சிரித்தார், அதில் அங்கிருந்த அதிகாரிக்கு வேர்க்கத் தொடங்கியது.

மன்னரின் சிரிப்பில் இருந்த ஒருவித குரூரம், எதிரில் இருப்பவர்களை பயத்தில் நடுங்க வைத்தபடி, மேலும் தொடர்ந்தவர், “அவர்கள் முயற்சி செய்யட்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வம்சத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லட்டும். அவர்கள் ஏன் அந்த அரண்மனையை கைப்பற்ற விரும்புகிறார்கள் என்று நாட்டுக்கு விளக்கட்டும். அது அவர்களின் அரசியலமைப்பை விடப் பழமையான ரகசியங்களைக் காப்பது மக்களுக்கும் தெரியட்டும்” என்றபடி அவர் ஆவணத்தை இரண்டாகக் கிழித்தெறிந்தார்.

மேலும் தொடர்ந்த அரசர், “அனைத்து ராஜ்புத் குலத்திற்கும் செய்தி அனுப்புங்கள். அரசு நமது பெருமைக்கு விலை வைத்துள்ளது என்று சொல்லுங்கள். ஆனால் ராஜ்புத்திரர்கள் பணத்துக்கு விலை போக மாட்டார்கள்” என்றபடி தன் செயலாளரை நோக்கி திரும்பியவர், “ஒரு அறிக்கை தயார் செய்யுங்கள். நாம் அரசின் கோரிக்கையை எதிர்க்கிறோம் என்று. ராஜபுத்திர வரலாறு விற்பனைக்கு அல்ல என்று. இந்த மனு நமக்கும் இந்த பாரத நாட்டு மக்களுக்குமான அவமதிப்பு என்று சொல்லுங்கள்” என்றவர் சிறு இடைவெளிவிட்டு,”கர்ஹ் அதிவார் எங்களுடையது. அது எங்களுடையதாகத்தான் இருக்கும். இறுதி ராஜ்புத் மூச்சு இருக்கும் வரை” என்று மன்னர் முடித்ததும் மண்டபத்தில் இருந்த ராஜபுத்திரர்கள் அனைவரும் சிலிர்த்தபடி,

“ஜய் ராஜ்புதானா!”
“கர்ஹ் அதிவார் ஹுமாரா ஹை!”

என்று கோஷம் எழுப்ப,அதில் மகாராஜா சமர் சிங் தன் உறைவாலை உயர்த்திப்பிடித்தபடி கண்களில் எரியும் நெருப்புடன் நிமிர்ந்து நின்றார்.

மகாராஜாவின் வாள் உயர்ந்து அந்த மண்டபம் எங்கும் எதிரொலிக்கும் படி,”டெல்லி எங்கள் நிலத்தை விரும்பினால்…அவர்கள் எங்கள் சாம்பலின் மீது நடந்து வந்து கைப்பற்ற வேண்டும்” என்று அந்த அரசு அதிகாரிக்கு பதில் சொல்லாலும், செயலிலும் உணர்த்தினார்.

இருள் நிறைந்த அறையின் ஓரம் ஒரே ஒரு பித்தளை விளக்கின் மங்கலான ஒளியில்
அரண்மனை ஜன்னலருகே நின்று, ஆரவள்ளி மலைத்தொடரை பார்த்திருந்தார் மஹாராஜா சமர் சிங்.

கோபமும் கவலையும் கலந்திருந்த அவரது முகத்தில் சுருக்க ரேகைகள், அவர் பலத்த யோசனையில் இருப்பதை உணர்த்தியது.

அந்த நேரம் உத்தரவு வாங்கிக் கொண்டு உள்ளே வந்த அரசு உதவியாளர்,”மஹாராஜா… லண்டனுக்கு இணைப்பு கிடைத்துள்ளது” என்றதும் மன்னர் தலையசைத்து, அரச குடும்பத்தின் ரகசிய பாதுகாப்பு கொண்ட அழைப்பு கருவியை பெற்றுக்கொண்டார்.

லண்டனில் இருந்து கரண் மற்றும் ஆசாத் கான் இணைப்பில் இருக்க, மன்னர் நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வந்தார், “கரண்… ஆசாத்…இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன்… ஒரு அவசர செய்தி..அதனால் தான் உங்களை எழுப்ப நேரிட்டது” என்றதும் கரண் நிமிர்ந்து அமர்ந்தான்.

கரண், தந்தையிடம்,”என்ன நடந்தது பாபா(papa)?”

மன்னர் அரசின் ஆணையை உயர்த்திக் காட்டியவாறு, “டெல்லியில் இருந்து நிலம் கையகப்படுத்தும் மனு வந்துள்ளது. அவர்கள் கர்ஹ் அதிவார் அரண்மனை, நிலம், எல்லாம்
வாங்க விலை பேசியிருக்கிறார்கள்.”

அதைக்கேட்ட ஆசாத் கண்களை சுருக்கியபடி,”விலைக்கா? அந்த நிலம் பூர்வீக நிலம். அவர்கள் எப்படி..” என்ற கேள்வி முடிவதற்குள் முன் குறுக்கிட்ட மஹாராஜா “அவர்களால் முடியும்.
மேலும் அதற்கு விலை வைத்துள்ளனர்.”

அந்த வார்த்தையைக் கேட்ட கரணின் தாடை இறுக,”எவ்வளவு?”என்றதும் சில பல கோடிகளை மன்னர் சொன்னதும், கசப்பான சிரிப்பை வெளியிட்டான் கரண்.

அதனை தொடர்ந்து கரண்,”வரலாற்றுக்கு விலை உள்ளதா? இது பாரத நாட்டுக்கே அவமதிப்பு அல்லவா?” என்றதற்கு ஆசாத் ஆமோதிப்பாகத் தலையசைத்தவர், “இது அரசியல் அழுத்தம்.
அவர்கள் ஆரவள்ளி மலைத்தொடரைக் கட்டுப்படுத்த முயலுகிறார்கள்.”

அதைக்கேட்ட மன்னர் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி,”நான் நமது நிலத்தை விற்கப்போவது இல்லை. ஆனால் நாம் மறுத்தால்…அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்” என்றதும் அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது.

அனைத்தையும் கேட்ட கரணின் கண்கள் கூர்மையடைய, நிமிர்ந்து அமர்ந்தவன்,”அவர்களுக்கு முன் நாம் முந்திக்கொண்டால்?”

அதைக்கேட்ட மன்னர் கூர்மையுடன், “என்ன சொல்கிறாய் பேட்டா?” என்றதும் கரணின் குரல் உறுதியுடன், “நாம் முதலில் வழக்கு தொடர்வோம். கைப்பற்றுதலுக்கு எதிராக சட்டரீதியாக சவாலிடுவோம். அதை மக்களுக்கு வெளிப்படுத்துவோம். கர்ஹ் அதிவாரை தொடுவது அரசாங்கத்தின் தற்கொலைக்குச் சமம் என்பதை காட்டுவோம்.”

ஆசத் புருவத்தை ஆச்சரியத்துடன் உயர்த்தியவர், “இளவரசே! தாங்கள் அரசாங்கத்தை நீதிமன்றத்துக்கு இழுக்க விரும்புகிறீர்களா?” என்றதும் ஆமோதிப்பாய் தலையசைத்தான் கரண்.

அதற்கு பதிலாக, “ஆம். பூர்வீக உரிமை, கலாச்சார பாதுகாப்பு, அரசியலமைப்பு மீறல். இந்த அடிப்படைகளில். நாம் முதலில் தாக்குவோம்.”

அதைக்கேட்ட அரசரின் கண்கள் பெருமையில் மின்ன கரணை பார்த்தவர், “கரண்… இந்த யோசனை…” என்று இழுக்க, அதற்கு கரண், “இது ஒன்று தான் ரத்தம் சிந்தாமல் அரசாணையை நிறுத்தும் வழி” என்று உறுதியுடன் கூறினான்.

அதைக்கேட்டு மெதுவாக சிரித்த ஆசாத், “சரிதான், மஹாராஜா. சட்டப் போராட்டம் அவர்களை மந்தமாக்கும். மக்கள் போராட்டம் அவர்களை மூலையில் தள்ளும்.”

அதற்கு ஆமோதித்த கரண்,”இன்றே மனுவைத் தாக்கல் செய்யுங்கள். அவர்கள் அடுத்த அடி வைப்பதற்கு முன். இந்த திட்டத்தின் பின்னால் இருப்பவன் விழிப்பதற்கு முன், நாம் செயல்பட வேண்டும்” என்றதும் மன்னர் சம்மதமாகத் தலையசைத்தார்.

“சரி. நாம் வழக்கு தொடர்வோம். ஆனால்..”என்று சிறிது இடைவெளியிட்டவர் கரண் கண்களை நேராக பார்த்தபடி,”உன் பெயரில், வழக்கு தொடருவோம் பேட்டா” என்றதும் கரண் உறைந்து நின்றான்.

“என்… பெயரில்?” என்றவனை இடைமறித்த மஹாராஜா,”நீ தான் அதிவாரின் நேரடி வாரிசு. உதய்ப்பூர் மற்றும் அதிவார் வம்சத்தின் எதிர்காலம். அரசு யாருடன் மோதுகிறது என்பதை அறிந்து கொள்ளட்டும்.”

அரசரின் வார்த்தையை கேட்ட கரணின் கண்களில் மென்மை, அதிர்ச்சி, பொறுப்பு, விதி என அனைத்தும் கலந்து பிரகாசித்தது.

அதைக்கேட்டிருந்த ஆசாத் தன் மார்பில் கை வைத்தபடி,”நான் உங்கள் இருவருடனும் என் இறுதி மூச்சு வரை நிற்பேன்” என்று சத்தியம் செய்தார் .

அனைத்தையும் மனதில் ஓட்டிப்பார்த்த மன்னரின் குரல் ஆழத்துடன், “அப்படியானால் இந்த முடிவே இறுதியானது. இன்றிரவு…அதிவார் வம்சம் மீண்டு எழட்டும்”என்றபடி அழைப்பை துண்டித்தார்.

லண்டன் குடியிருப்பில் ஆசாத்துடன் அமர்ந்திருந்த கரண் வெற்று திரையை ஆழ்ந்து பார்த்திருந்தான்.

அவனது கண்களில் உருவான புயலுடன்,மெல்ல கிசுகிசுத்தான்.

“கர்ஹ் அதிவார்…
மே ஆ ரஹா ஹூ! மேகர் ஆ ரஹா ஹூ”

என்றவனின் வார்த்தையை கேட்டு மெய்சிலிர்த்து நின்றார் ஆசாத் கான்.

ரணசூரன் வருவான்…..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்