
அத்தியாயம் 1
ஆதவன் உதித்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்கள் கடந்து சென்றிருக்க, அந்தப் பகல் நேர வெயிலின் பிரதிபலிப்பில் மின்னிக் கொண்டிருந்த சமுத்திரத்திற்கு மத்தியில், தன் படகில் நின்று கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான் அந்த மீனவன்.
அவன் வீசிய வலையில் சிக்கிய மீன்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்தது அந்த கருநிறக் கல்.
முதலில் அதை கவனிக்காமல், படகை கரை நோக்கி செலுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தவனின் கண்களை கூசச் செய்தது அந்தக் கல் வெளிப்படுத்திய வெளிச்சம்.
அந்தக் கருநிறக் கல்லை கண்டவனின் மனதினுள் இனம்புரியாத ஆசை உண்டாக, அதைத் தன் கையில் எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்து அதிசயித்து போனான் மீனவன்.
அதன் ஜொலிப்பில் மனம் லயித்தவன், அது தன் கைவிட்டுப் போய் விடக்கூடாது என்று எண்ணி, அதைக் கயிற்றில் கோர்த்து அவனது வலப்புற புஜத்தில் அணிந்து கொண்டான்.
அந்தக் கல் அவன் வசம் வந்ததிலிருந்து எதையோ சாதித்ததைப் போல திரிந்து கொண்டிருந்தவன், மற்றவர்களின் கண்களில் சிக்காமல் போவானா? இல்லை, அவன் புஜத்தை அலங்கரித்த கருநிறக் கல் மற்றவர்களின் பொறாமையை தூண்டாமல் இருக்குமா?
அடுத்த ஒரு வாரத்தில், அந்தக் கருநிறக் கல் அலங்கரித்த அவனின் வலப்புற புஜம் தனியாக வெட்டப்பட்டது. அதில் உண்டான அதிக உதிரப்போக்கினால், அவன் மரணமடைந்தான். அந்தக் கருநிறக கல்லோ அதன் அடுத்த எஜமானனை அலங்கரிக்கக் காத்திருந்தது!
*****
வரைப்பட்டிகையில் (டேப்) மின்னணு பேனாவைக் (எலெக்ட்ரிக் பென்) கொண்டு அவள் ஓவியத்தைத் தீட்டிக் கொண்டிருக்க, “ப்பே…” என்று பின்னிலிருந்து வந்த சத்தத்தில் அதிர்ந்து, அவள் கரம் பட்டு அந்த வரைப்பட்டிகை கீழே விழுந்து அணைந்து போனது.
வரைப்பட்டிகை கீழே விழுந்ததை விட, அதில் அவள் தீட்டிய ஓவியங்கள் பத்திரமாக இருக்கிறனவா என்ற கவலை அவளை ஆட்கொள்ள, “பிசாசே, இப்படித்தான் பின்னாடி வந்து பயமுறுத்துவியா?” என்று தன் கவலையை கோபமாக வெளிக்காட்டினாள் அவள்.
அவளால் ‘பிசாசு’ என்று அழைக்கப்பட்டவளோ, “ச்சு, உனக்கு மென்மொழின்னு பெயர் வச்சதுக்கு பதிலா வன்மொழின்னு வச்சுருக்கலாம்.” என்று சாவதானமாகக் கூறியபடி, தோழியின் கையிலிருந்த வரைப்பட்டிகையை வாங்கி ஆராய்ந்து பார்த்தாள்.
“அதான் ஒன்னும் ஆகலைல. அப்புறம் எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுருக்க?” என்று கேட்டபடி, மென்மொழி வரைந்த ஓவியங்களைப் பார்வையிட ஆரம்பித்தாள் அவளின் ஒரே தோழி சுடரொளி.
“என்னடி அடுத்த வெப்டூன்னா? ஆமா, இதெல்லாம் பார்க்குறாங்களா என்ன? நீயும் வரைஞ்சு வரைஞ்சு உன் பிளாக்ல அப்லோட் பண்ற. ஆனா, வியூஸ் என்னவோ ஒரு டிஜிட்லதான் இருக்கு.” என்று சுடரொளி கூற, “நான் வரையுறது என் நிம்மதிக்காக சுடர். மத்தவங்க பார்த்து ரசிக்கிறது ரெண்டாவது பட்சம்தான்.” என்றாள் மென்மொழி.
“ஹ்ம்ம், எல்லாம் சரி, அதென்ன கருப்பு கலர் கல்லு? ஏன் இந்த பிங்க் கலர்ல போட்டா ஆகாதா?” என்ற சுடரொளியின் கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை மென்மொழியால்.
“அது… நான் பிளாக் அண்ட் ஒயிட்லதான வரையுறேன். அதான் கருப்பு கலர் கல்.” என்று எதையோ கூறி வைத்தாள் மென்மொழி.
அப்போது டப்டப்பென்று சத்தம் கேட்க, “இதோ வந்துட்டா உன்னோட ‘நான்-ஐடென்டிகல் ட்வின்’. அவ மாடலிங் பண்றா, ரேம்ப் வாக் நடக்குறா, எல்லாம் சரிதான். அதுக்குன்னு இப்படி வீட்டுக்குள்ள கூட ஹை-ஹீல்ஸ் போட்டுட்டு சுத்தனுமா என்ன?” என்று சுடரொளி மென்மொழியிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தாள் யாழ்மொழி.
சர்வ அலங்காரத்துடன் கிளம்பி வந்திருந்த யாழ்மொழியைக் கண்ட மென்மொழியோ, “என்ன யாழ், இன்னைக்கு எதுவும் ப்ரோகிராமா? வரதுக்கு லேட்டாகுமா?” என்று வினவ, யாழ்மொழியோ அவளின் வேலையை பார்த்துக் கொண்டே, ‘ஆம்’ என்னும் விதத்தில் அலட்சியமாக தலையசைத்தாள்.
அதில் கடுப்பான சுடரொளியோ, “கொஞ்ச நாளாவே அவ ஓவரா பண்ணுறான்னு தெரியுதுல, அப்பறம் எதுக்கு அவளை தாங்கிட்டு இருக்க?” என்று கேட்டுவிட, இது யாழ்மொழியின் காதுகளிலும் விழுந்து விட்டது.
“லுக், அவ என் ட்வின். எனக்காக கேர் பண்ணி கேட்குறா. உனக்கு என்ன? எங்க ரெண்டு பேருக்கு நடுவுல நீ யாரு?” என்று யாழ்மொழி கேட்க, “அடடே, அவ கேர் பண்றது எல்லாம் உனக்கு தெரிஞ்சுருக்கே!” என்று போலியாக ஆச்சரியப்பட்ட சுடரொளியோ, “நீ வேணும்னா வந்து சேர்ந்துப்ப, வேண்டாம்னா இக்னோர் பண்ணிட்டு போவ. என்னை என்ன உன்னை மாதிரின்னு நினைச்சியா? நான் அவ ஃபிரெண்டு. எப்பவும் அவ கூடவே நிக்கிற ஃபிரெண்டு.” என்று அழுத்தமாகக் கூறினாள்.
இதற்கு மேல் என்றால் கண்டிப்பாக சண்டை வலுக்கும் என்பதை உணர்ந்த மென்மொழியோ, “ப்ச், ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? யாழ், நீ கிளம்பு.” என்று சூழ்நிலையை சமாளிக்க முயன்றாள்.
ஏனோ சுடரொளியை பார்த்தாலே யாழ்மொழிக்கு பிடிப்பதில்லை. இப்போது சுடரொளியின் பேச்சு அந்த பிடித்தமின்மையை அதிகரிக்கவே செய்தது.
“போகத்தான் போறேன். பின்ன, உங்களை மாதிரி வெட்டியா டேபும் கையுமாவா இருக்கப் போறேன்?” என்று யாழ்மொழி அவளின் எரிச்சலை வெளிப்படுத்த, தன் வேலையைப் பற்றி பேசியதும் மென்மொழிக்கே கோபம் வந்து விட்டது.
“யாழ், இதென்ன பேச்சு? உனக்கு உன் வேலை பெருசுங்கிற மாதிரி, எங்களுக்கும் எங்க வேலை பெருசு. இன்னொரு முறை இப்படி பேசாத.” என்று அப்போதும் கோபத்தை கட்டுப்படுத்தியபடி கூறினாள் மென்மொழி.
யாழ்மொழிக்கோ மென்மொழி கூறியதெல்லாம் கருத்தில் ஏறவில்லை. அவள் நினைவில் இருந்ததெல்லாம், ‘ப்ச், இவளும் அவளோட சேர்ந்துட்டு என்னைப் பேசுறா!’ என்பதே.
அப்படியே விட்டிருந்தால் கூட, ஒரு முணுமுணுப்புடன் யாழ்மொழி கிளம்பியிருப்பாளோ என்னவோ, அன்றைய தினம் மூவருக்குமிடையே சண்டை நிகழ்ந்தே ஆக வேண்டும் என்று விதித்திருந்தால், அதை யாரால் மாற்ற இயலும்?
“அதான, நாங்க வெட்டியா இருக்கோம்னு நீ பார்த்தியா?” என்று மென்மொழிக்கு ஆதரவாக சுடரொளி கூற, அது யாழ்மொழியை மேலும் வெறுப்பேற்றியது.
“நீ என்னதான் ஓடியாடி வேலை செஞ்சாலும், மாசத்துக்கு அம்பதாயிரம் தாண்டுமா உன் சம்பளம்? ஆனா, நான்… ஹ்ம்ம், இன்னும் ஒரு மாசத்துல என் ரேஞ்சே வேற! ச்சு, இதெல்லாம் ‘உன்’கிட்ட போய் சொல்லிட்டு இருக்கேன் பாரு!” என்ற யாழ்மொழி, அத்துடன் நிறுத்தாமல், “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?” என்று முணுமுணுத்தாள்.
அவளின் பேச்சு மென்மொழிக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்க, “நிறுத்து யாழ்! என்ன பேசிட்டு இருக்க நீ?” என்று கத்த, “நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்? அழகைப் பத்தி அழகா இருக்கவங்க கிட்டதான பேச முடியும்?” என்று அப்போதும் புரிந்து கொள்ளாமல் பேசினாள் யாழ்மொழி.
“அழகா? வெளித்தோற்றம் மட்டும்தான் அழகுக்கான இலக்கணம்னு நினைச்சா, நீ ஒரு முட்டாள் யாழ். இவ்ளோ படிச்சு என்ன பிரயோஜனம்? உன்னை சுத்தி என்ன நடக்குது, யார் உன் நன்மைக்காக யோசிச்சு உன்னோட நிற்பாங்கன்னு கூட உன்னால யூகிக்க முடியல. நீயெல்லாம் லட்சத்துல சம்பாதிச்சாலும் என்ன யூஸ்? உனக்காகன்னு பார்த்து பார்த்து நாங்க சொல்றதெல்லாம் வேஸ்ட். பட்டுத்தான் நீ திருந்துவன்னா என்ன பண்ண முடியும்? இனி, உனக்காகன்னு நான் எதுவும் பண்ண போறதில்ல. உன் வாழ்க்கை உன் கையில. என்ன வேணுமோ பண்ணிக்கோ.” என்றாள் மென்மொழி.
மென்மொழியின் இந்த பேச்சு மனதோரம் உறுத்தினாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு அசட்டுச் சிரிப்புடன் வெளியேறினாள் யாழ்மொழி.
அலையடித்து ஓய்ந்தது போலிருக்க, தோய்ந்து விழுந்த மென்மொழியை சுற்றி ஆதரவாக அணைத்துக் கொண்ட சுடரொளி, “இன்னைக்கு உனக்கு என்னாச்சு?” என்று வினவினாள்.
தோழியின் கரத்தைப் பற்றிக் கொண்ட மென்மொழியோ, “சாரி சுடர், அவ சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன்…” என்று பேச, அவளை இடைவெட்டிய சுடரொளி, “ஹே, லூஸா நீ? அவளைப் பத்தித்தான் தெரியுமே. என்ன பேசுறோம்னு யோசிக்காம எதையாவது பேசிடுவா. அவளுக்காக நீ மன்னிப்பு கேட்பியா?” என்றாள்.
“இல்ல சுடர். இன்னைக்கு அவ பேசுனது…” என்று ஆரம்பித்த மென்மொழியை நிறுத்திய சுடரொளி, “என் அழகைப் பத்தி பேசுனதா? அதெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கல மொழி. நான் கருப்புன்னு எனக்கு தெரியும். அழகுக்கான டெஃபனிஷன் கலர் இல்லன்னும் எனக்கு தெரியும். சோ, ஃப்ரீயா விடு.” என்று தோழியை சமாதானப்படுத்தியவள், “இப்படியே அழுது வடியாம, உன் வெப்டூன்னை போஸ்ட் பண்ணிட்டு வா, வெளிய போலாம். நாளைக்கு புது கதைக்கு படம் வரைய ஆரம்பிக்கணுமாம். சோ, நாம பிஸியாகிடுவோம்.” என்றாள்.
மென்மொழியும் தான் வரைந்தவற்றை வலைப்பதிவாக பதிவிட்டவள், “சுடர், தாத்தா வீட்டுக்கு போவோமா?” என்று வினவ, “ஆரம்பிச்சுட்டியா? அப்படி என்ன இருக்கு அந்த வீட்டுல? மியூசியமும் லைப்ரரியும் கலந்து வச்ச மாதிரி இருக்கும்.” என்று புலம்பிய சுடரொளியை இழுத்துக் கொண்டு கிளம்பினாள் மென்மொழி.
*****
எரிச்சலும் ஏமாற்றமுமாக வெளியே வந்த யாழ்மொழியை மேலும் கோபப்படுத்தும் விதமாக, அவளின் மகிழுந்து பழுதாகிக் கிடந்தது.
“ச்சே, இன்னைக்கு என்னை டென்ஷனாக்கணும்னே எல்லாம் நடக்குமோ?” என்று எரிச்சலில் மகிழுந்தின் சக்கரத்தை உதைத்தாள் யாழ்மொழி.
அப்போது, “யாழு…” என்று பின்னிருந்து குரல் கேட்க, அது யாரென்று அறிந்தவளாக, ‘ஹையோ, இவனா?’ என்று எண்ணியபடியே திரும்பிப் பார்க்க, அங்குத் தன் வழக்கமான புன்னகையுடன் நின்றிருந்தான் இன்பசேகரன்.
இன்பசேகரன், இரு மொழிகளுக்கும் பொதுவான நண்பன். பக்கத்து வீடு என்பதால் சிறுவயதிலிருந்தே தொடர்கிறது இவர்களின் நட்பு.
ஆனால், சமீபமாக ‘அழகு’ என்னும் மோகத்தில் சிக்கியிருக்கும் யாழ்மொழி, இன்பசேகரனை தவிர்க்க முயல்கிறாள். காரணம், அவளின் ‘அழகு’க்கான இலக்கணத்தில் அவன் பொருந்தாமல் போனதே!
இது தெரிந்தும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை இன்பசேகரன். அதனாலேயே, யாழ்மொழி எத்தனை முயற்சித்தும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் அவளிடமே வருகிறான் அவன்.
“யாழு, கார்ல என்ன பிரச்சனை? நான் வேணும்னா டிராப் பண்ணவா?” என்று இன்பசேகரன் கேட்க, அவனின் பழைய மகிழுந்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சரி என்று தலையசைத்தாள்.
அதிலேயே மகிழ்ந்து போனவன், செல்லும் வழி முழுவதும் பேச, பேசியவை அவளின் வேலை பற்றியது என்பதால், சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு யாழ்மொழியும் அதில் ஒன்றி விட்டாள்.
“***** குரூப்ஸ் நடத்துற ஈவண்ட் இன்னைக்கு. நான்தான் அதுல ஷோ-ஸ்டாப்பர் தெரியுமா?” என்று உற்சாமாக யாழ்மொழி பேச, அதை ரசித்தபடி வந்தான் அவளை ஒருதலையாகக் காதலிக்கும் இன்பசேகரன்.
அவள் விரட்டியடித்தாலும் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளச் சொல்லும் இந்த பைத்தியக்காரத்தனத்தின் பெயர் காதல் என்றால், அவனும் காதலனே!
என்ன, அவளிடம் தன் காதலை பகிராத ஒருதலைக் காதலன் அவன்!
அவளது அழகின் இலக்கணம் பற்றி அவனும் அறிவான் தானே, அதனால் உண்டான தயக்கமே அவனது காதல் ஒருதலையாக இருப்பதற்கான காரணம்.
“இன்பா, என்ன யோசிச்சுட்டு இருக்க? நான் எவ்ளோ பெரிய நியூஸ் சொல்லியிருக்கேன்.” என்று யாழ்மொழி சிணுங்க, “சாரி யாழு. ஏதோ ஒரு யோசனை. நீ சொன்னதைக் கவனிக்கல.” என்று நிதானமாக எடுத்துரைத்தான் இன்பசேகரன்.
“ப்ச், அப்படி என்ன யோசனை? அந்த மெக்கானிக் ஷெட் பத்திதான? உன் டேலண்ட்டை அந்த மெக்கானிக் ஷெட்ல வேஸ்ட் பண்ணாதன்னு சொன்னா கேட்குறியா? ஓடாத மெக்கானிக் ஷெட்டை வித்துட்டு வேற பிசினஸ் பண்ணலாம்ல?” என்று யாழ்மொழி கூற, எதுவும் பேசாமல் வாகனத்தை செலுத்தினான் இன்பசேகரன்.
ஆனால், அவனின் கோபம் அவனது இறுகிய பிடியில் தெரிந்தது. காரணம், அவன் தந்தை நினைவாக இருப்பது அது மட்டுமே!
அது தெரிந்தும், யாழ்மொழியின் இப்படிபட்ட பேச்சினை அவன் ரசிப்பதில்லை. அதற்காக, அவள் மீது கோபப்படவும் முடியாததாலேயே இந்த மௌனம்.
“ம்ச், உடனே சைலண்ட்டாகிடுவ. உன் பிசினஸ், என்னவோ பண்ணு!” என்றவள், தன்னைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாள்.
“அடுத்த மாசம் ஒரு பெரிய ஆஃபர் வருதுன்னு வருண் சொன்னான் இன்பா. கண்டிப்பா, பட ஆஃபராதான் இருக்கும். எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா? இந்த மேட்டரை உன்கிட்டதான் முதல்ல சொல்லியிருக்கேன்.” என்று யாழ்மொழி மகிழ்ச்சியுடன் கூற, ஏனோ அவளின் இந்த மகிழ்ச்சி அவனிற்கு தொற்றவில்லை.
காரணம் வருண்!
“யாழு, அந்த வருண்…” என்று இன்பசேகரன் ஆரம்பிக்க, “நிறுத்து இன்பா. நீ என்ன சொல்லப் போறன்னு எனக்குத் தெரியும். வருண் சரியில்ல. அவன் பார்வை சரியில்ல. அவன் என்னைத் தப்பா கைட் பண்றான். இதைத்தான சொல்லப் போற? ப்ச், நான் சந்தோஷமான விஷயத்தை உன்கிட்ட ஷேர் பண்ணா, நீ அந்த மூடையே கெடுத்துட்ட இன்பா. இதனாலதான், உங்க யாருக்கிட்டயும் எனக்குப் பேச பிடிக்கல. வருண், எனக்காக எவ்ளோ பண்ணியிருக்கான் தெரியுமா? சும்மா, அவனைத் தப்பா பிரோஜெக்ட் பண்ணாதீங்க.” என்று அவள் கூற, சரியாக அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, இன்பசேகரன் கூறுவதைக் கூட கேட்க விரும்பாதவளாக, வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று விட்டாள்.
‘மத்தவங்க எப்படின்னு யூகிக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல யாழு. தப்பானவங்க கையில சிக்கிடுவியோன்னு பயமா இருக்கு.’ என்று எண்ணியவன் அறியவில்லை, அதற்கான இடத்தில்தான் அவளை விட்டு வந்திருக்கிறான் என்பதை.
*****
தாத்தா வீட்டிற்குச் செல்லலாம் என்ற மென்மொழியை சரிகட்டி வெளியே சுற்றிவிட்டு, இறுதியாகத்தான் அங்கு அழைத்து வந்தாள் சுடரொளி.
உள்ளே நுழையும் போதே, “இந்த வீட்டை விற்கப் போறதா ஆண்ட்டி அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்களே மொழி?” என்று சுடரொளி வினவ, “ஹ்ம்ம் ஆமா சுடர். நான்தான் பிடிவாதமா விற்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்.” என்றாள் மென்மொழி.
“ஏன்டி? நீயும் அவளும் ஒரு பக்கம், உங்க அப்பா, அம்மா, அண்ணன் ஃபேமிலின்னு ஒரு பக்கம் – எதுக்கு இது? இதை வித்துட்டு டெல்லில போய் செட்டிலாக வேண்டியதுதான?” என்று சுடரொளி கேட்க, “என்னவோ எங்க ரெண்டு பேருக்குமே அங்க செட்டாகல சுடர். அதுலயும், இந்த வீடு… ம்ச், இதை விற்கக் கூடாதுன்னு மனசு அடிச்சுக்குது.” என்ற மென்மொழி ஆழ்ந்து சுவாசிக்க, அந்த வீட்டின் வாசனை அவளுள் நிரம்பியது.
“ஏனோ, இங்க வந்தாலே மனசு அமைதியா இருக்கு. தாத்தாவோட இங்க நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணதால இருக்கலாம்.” என்றவள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவளின் தாத்தாவின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
அந்த புகைப்படத்தைச் சுற்றி இருந்த சுவரைப் பல காகிதங்களும், செய்தித்தாள் துணுக்குகளும் அலங்கரித்திருந்தன.
“மொழி, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உங்க தாத்தா எதுவும் சீக்ரெட் ஏஜெண்ட்டா இருந்துருப்பாரோ? எங்க பார்த்தாலும், நியூஸ் பேப்பர் கட்டிங், சீக்ரெட் கோட்ஸ்னு இருக்கு.” என்றாள் சுடரொளி.
அதில் சிரித்த மென்மொழியோ, “அவருக்கு தமிழ் மேலயும், பண்டைய தமிழ் மக்கள் மேலயும் தீரா காதல் சுடர். அவங்களைப் பத்தின கலெக்ஷன்தான் இது.” என்றவள், “உனக்கு தெரியுமா, பழைய ஓலைச்சுவடிகளை கூட அவரு கலெக்ட் பண்ணி வச்சுருந்தாரு.” என்றவள், பக்கவாட்டு அறையை திறக்க, அந்த அறையோ கலைந்து கிடந்தது.
“என்னடி இது, எப்பவும் கிளீனா வச்சுருப்ப. இப்போ பார்த்தா, ஏதோ திருடன் வந்து கலைச்சு போட்ட மாதிரி இருக்கு?” என்று சுடரொளி வினவ, “யாழ்…” என்று பல்லைக் கடித்தாள் மென்மொழி.
*****
“யாழ் பேபி, டைமாச்சு. நீ ரெடியா?” என்றபடி வந்தான் வருண்.
“எஸ் வரு. எப்படி இருக்கேன்?” என்று கேட்ட யாழ்மொழியை தலை முதல் கால்வரை அலசி ஆராய்ந்த வருண், “உனக்கென்ன பேபி, அழகா அம்சமா இருக்க!” என்று இளிப்புடன் கூறினான்.
அவன் எண்ணம் அறியாத பேதையோ, அதைப் பாராட்டாக எண்ணி, “அந்த பெரிய ஆஃபர் என்னாச்சு வருண்?” என்று கேட்டாள்.
“அதைப் பத்திப் பேசணும் யாழ் பேபி. முதல்ல ஷோ முடியட்டும். அப்பறம் நிதானமா டிஸ்கஸ் பண்ணலாம்.” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
அவன் ‘நிதானமா’வை நிறுத்தி நிதானமாகக் கூறியதைக் கண்டு கொள்ளாமல், கனவுகளில் மூழ்கி விட்டாள் யாழ்மொழி, அவளின் கனவு கனவாகவே இருந்து விடும் என்பதை அறியாமல்!
அவளின் நல்ல மனநிலையை கெடுப்பது போல அலைபேசி ஒலியெழுப்ப, அதில் தெரிந்த மென்மொழியின் பெயரைப் பார்த்ததும், ‘இவ எதுக்கு இப்போ கால் பண்றா?’ என்ற எண்ணத்துடன் அதை உயிர்ப்பித்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “தாத்தா வீட்டுக்கு எதுக்கு வந்த?” என்று மென்மொழியின் கோபக்குரலே கேட்டது.
“அவரு என்ன உனக்கு மட்டும்தான் தாத்தாவா? எனக்கும் அந்த வீட்டுல உரிமை இருக்கு.” என்று உரிமைக்குரல் உயர்த்தினாள் யாழ்மொழி.
“அதுக்கு இப்படித்தான் கலைச்சு போடுவாங்களா? இங்க எவ்ளோ முக்கியமான பொருட்கள் இருக்கு தெரியுமா? நானே இன்னும் முழுசா எல்லாத்தையும் ஆராயல. அதனாலதான், வீட்டை விற்க வேண்டாம்னு போராடிட்டு இருக்கேன். நீ என்னன்னா சர்வ சாதாரணமா நுழைஞ்சு எல்லாத்தையும் கலைச்சுருக்க.” என்று மென்மொழி கோபத்தில் பொரிய, “ப்ச், உன் பேச்சை கேட்கவெல்லாம் எனக்கு நேரமில்ல. அது என்ன பெரிய மியூசியமா? அப்படி கலைஞ்சுருந்தாலும் என்ன ஆகிடப் போகுது. ச்சு, எனக்கு நேரமாகிடுச்சு, நைட் வீட்டுக்கு வந்து பேசுறேன்.” என்று அழைப்பை துண்டித்து விட்டாள் யாழ்மொழி.
‘ஒரு ஓட்டை வீட்டுக்கும் அதுக்குள்ள அடைஞ்சு கிடக்க குப்பைக்கும் இவ்ளோ சீனு.’ என்று எண்ணிய யாழ்மொழியின் கரமோ தன்னிச்சையாக அவளின் கழுத்தணியைத் தடவியது.
அவள் அங்கு சென்ற போதே அந்த இடம் கலைந்துதான் இருந்தது என்பது அவளின் நினைவில் இல்லாமல் போனது யாரின் துரதிர்ஷ்டமோ!
*****
விமான நிலையம்…
ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்தவனிற்கு அலைபேசி சத்தம் சுத்தமாக கேட்கவில்லை. சில அழைப்புகள் தவறிப் போயிருக்க, அருகில் அமர்ந்திருந்தவர் உசுப்பியதுமே நிகழ்விற்கு வந்தான் அவன்.
அவருக்கு ஒரு நன்றியைக் கூறிவிட்டு அழைப்பை ஏற்க, எதிர்முனையிலிருந்து, “சார், நீங்க போன விஷயம் என்னாச்சு? அந்த வீட்டுல தேடிப் பார்த்தீங்களா? பொருள் கிடைச்சதா?” என்று கேள்விகள் அடுக்கப்பட, அவனோ என்ன நடந்ததென தெரியாமல் குழம்பினான்.
எவ்வளவுதான் யோசித்தாலும், அவனால் கடந்து போன அரை நாளில் நடந்த நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வர முடியவே இல்லை.
“ஃபிளைட் போர்ட் பண்ணப் போறேன். அப்புறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தவன், அலைபேசியை மேல்சட்டைப் பைக்குள் வைக்க முயல, அவன் கையில் தட்டுப்பட்டது அந்தப் பொருள்.
புருவச்சுழிப்புடன் அவன் அதை எடுத்துப் பார்க்க, அவன் கரத்தில் ஜொலித்தது கருநிறக் கல்.
தொடரும்…

