
மெல்லினம் 18:
திருமணம் முடிந்து, முருகப் பெருமானை தம்பதிகளாக தரிசித்த கதிர் முல்லையின் மனதில் நின்றது எல்லாம் நிம்மதியும் அமைதியும் மட்டுமே.
“முருகா இவரோட என் வாழ்க்கை, எந்த வித துன்பமும் இல்லாமல் நல்லபடியா போகணும். மொதல்ல அப்புடி ஒரு பொறுக்கியா கண்ணுல காட்டுனதும், நீதான்! இப்போ இப்புடி ஒருத்தர என் கண்ணுல காட்டுனதும், நீ தான். அப்பவும் உன்னை நம்புனேன்,
ஆனா கைவிட்டுட்ட!!
இப்பவும் உன்னை நம்புறேன். இந்த வாழ்க்கையாச்சும், எனக்கு ஏமாற்றங்கள கொடுக்காமா, கை விடாமா இருக்கணும்” என முல்லை மனதில் வேண்டுதல் வைக்க,
“அப்பனே முருகா, உன்கிட்ட இனி நான் வேற எதுவும் கேட்க மாட்டேன். நான் இழந்த பொக்கிஷத்தை எனக்கே எனக்குன்னு கொடுத்துட்ட. அது போதும் இனி முல்லையோட நம்பிக்கைய காப்பாத்தி, நிச்சயம் ஒரு காதலான வாழ்க்கைய, நான் வாழுவேன். அதுக்கு உன்னோட ஆசிர்வாதம் எப்பவும் தேவை” என்பது யாருடைய வேண்டுதல் என்று சொல்ல தேவையில்லை.
பின் இருவரும் பிரகாரத்தை சுற்ற கதிரின் கையில் அத்விதன். அழகான குடும்பமாய் குழந்தையோடு, சுற்றியவர்களை கண்டு அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி விட்டன.ஸ்ருதியை தவிர ஏனெனில் அவள் தான் அங்கு இல்லையே!!
திருமணம் முடிந்த சில மணி நேரங்களில், அவளை சீதாவுடன் வீட்டிற்கு பற்றி விட்டிருந்தான் பிரகாஷ்.
சீதா மணமக்களை வரவேற்பதற்கும் சில வேலைகளை செய்வதற்கும் முன்னரே சென்றிருந்தாள்.
பிரகாரத்தை சுற்றி விட்டு அமர்ந்தவர்களுக்கு பிரசாதம் தர பட, வாங்கிய கதிர் முதலில் அத்விதனுக்கு ஊட்டியவன் பின் தான் உண்டான்.
சிறிது நேரம் அமர்ந்து இருவரும் அந்த அமைதி சூழ்நிலையை ரசிக்க “கதிர் கிளம்பலாம், மதிய சாப்பாட்டுக்கு ஆளுங்க வந்துட்டாங்க மண்டபத்துல ” என ராகேஷ் வந்து அழைக்க,
அனைவரும் கோயிலின் அருகே இருந்த மண்டபத்திற்கு பயணமானார்கள். திருமணத்திற்கு வந்த உறவுகளுக்கு கோயிலின் அருகே இருந்த மண்டபத்தில் தான் மதிய உணவினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்கள் அங்கே சென்ற போது பந்தி நடந்து கொண்டிருக்க, நேராக உணவுண்ணும் இடத்திற்கு சென்று விட்டனர்.
பலரின் பார்வை மகிழ்ச்சியாகவும் சிலரின் பார்வை இகழ்ச்சியாகவும் அவர்கள் மீது படிய, அதை எல்லாம் தூசியென தட்டி விட்டு சென்றனர்.
குழந்தைகளுக்கு பசிக்கும் என்பதால் அத்வதினையும், ரேஷ்மிகாவையும், ஞானம்மாள் மற்றும் மங்கை இருவரும் அழைத்து கொள்ள,
கதிர் முல்லைக்கு இலை போடப்பட்டது. வழக்கமாக நடக்கும் திருமணங்களில் செய்யும் மணமக்களுக்கு, உணவினை ஊட்டி விடும் சம்பிரதாயம் எல்லாம் எதுவும் இல்லாமல், அமைதியாக கழிந்தது இருவரின் மதிய உணவும்.
முல்லை அவள் இலையில் வைத்த மசாலா உருளைக்கிழங்கை அதிகம் விரும்பி உண்பதை கண்ட கதிர், அவள் இலையில் தீர்ந்ததும் இயல்பாக தன் இலையில் இருந்ததை அவளிற்கு வைத்து விட்டு, பரிமாறுபவனையும் அழைத்து மேலும் அவளிற்கு வைக்க சொல்ல,
முல்லை பதறி தடுக்கும் முன், முழு கரண்டியை வைத்து விட்டு சென்றிருந்தான்.
சாதத்தை விட பொறியல் அதிகம் இருந்ததை கண்டு முல்லை, கதிரை லேசாக முறைத்தவள், முக்கால்வாசியை எடுத்து கதிரின் இலையில் வைத்து விட்டிருந்தாள்.
தன் இலையில் அவள் வைத்ததை கண்ட கதிர்,
“என்ன முல்லை வேண்டாமா??உனக்கு பிடிச்சிருக்கு தான??”
“பிடிச்சிருக்கு தான், அதுக்குன்னு இவ்வளவா? நீங்க வச்சதே அதிகம். இதுல அந்த பையன வேற வைக்க சொல்றீங்க, ஒழுங்கா நீங்களே சாப்பிடுங்க எல்லாத்தையும்” என அடிக்குரலில் அவள் மிரட்டிட,
“வேணாட்டி போ” என தோள்களை குலுக்கி அவள் வைத்ததை உண்ண ஆரம்பித்தவனின் இதழ்கள் சிரிப்பில் நெளிந்தன.
ஆக, இருவரும் எந்த வித சங்கடமும் இன்றி இயல்பாகவே உணவினை பாரிமாற்றி கொண்டிருந்தனர்.
இவர்கள் எப்போதடா முடிப்பார்கள் என காத்திருந்ததை போல், அடுத்த நொடி அத்வி கதிரிடம் தாவ புன்சிரிப்புடன் அவனை கைகளில் ஏந்தி கொண்டான்.
நல்ல நேரம் முடிவதற்குள் மணமக்களை கதிரின் வீட்டிற்கு கிளப்பி விட, ராகேஷ் வண்டி ஓட்ட முன்பக்கம் பிரகாஷ் இருக்க, பின் இருக்கையில் கதிர் ,முல்லை, அத்வி, ரேஷ்மி அமர கார் கதிரின் வீட்டை நோக்கி சென்றது.
ரேஷ்மி ஜன்னல் இருக்கை வேண்டுமென கூறி, கதவினை ஓட்டி அமர, அதனை பார்த்த அத்வியும் கதிரின் மடியில் அமர்ந்திருந்தவன் “கதிர் அங்கி….நானு” என அவனும் கதிரின் பக்கம் இருந்த கதவினை காட்ட,
“நீயுமாடா குட்டி” என கூறியவாரே அத்விதனை கதவின் பக்கம் அமர வைத்து, அவனின் கைகளையும் அத்விதனை சுற்றி அரணாக்கி கொண்டான்.
அத்விதனுக்கு மற்ற உறவுகளை எல்லாம் சொல்லி கொடுத்த கதிர், அவனை அப்பா என்று மட்டும் சொல்லி கொடுக்கவில்லை.
ஏன் என்று கேட்டவர்களிடம் “அத்வி அவன் என்னை உணர்ந்து அவனா, அப்பான்னு கூப்புடனும், கண்டிப்பா கூப்பிடுவான். அதுவரைக்கும் யாரும் சொல்ல கூடாது” என கட்டளையிட்டிருந்தான்.
இருபுறமும் குழந்தைகள் இருந்ததால் கதிர் மற்றும் முல்லை சற்றே நெருங்கி அமரும் சுழல்.
முல்லை கூட சற்று சங்கடமாக உணர, கதிரோ அதற்கெல்லாம் அலட்டி கொள்ளாது “நல்லா உட்காரு அத்வி குட்டி” என்றவாறு நன்றாகவே முல்லையை உரசி கொண்டு தான் அமர்ந்தான்.
நேரம் ஆக ஆக, எதிர்ப்பட்ட காற்றில் காலை சீக்கிரம் எழுந்ததன் விளைவாக, குழந்தைகள் இருவருக்கும் தூக்கம் சொக்க அமர்ந்த வாக்கிலேயே உறங்க ஆரம்பிக்க, முல்லை ரேஷ்மியை மடியில் படுக்க வைத்து கொண்டாள்.
கதிர் தூக்கமாலே இயல்பாகவே அத்வி கதிரின் மடியில் ஏறி அவனின் நெஞ்சில் முகத்தை புதைக்க, கதிரின் ரோமங்கள் எல்லாம் கூசி சிலிர்த்தன.
அத்வியின் உச்சியில் முத்தமிட்டு, இருகரம் கொண்டு அவனை கதிர் வளைத்து கொள்ள, பதிலுக்கு தன் பிஞ்சு கரங்களை கொண்டு தானும் கதிரை வளைத்து கொண்ட அத்வி, அடுத்த நொடி சுகமான நித்திரையில் ஆழ்ந்தான்.
அத்விதனை கொண்டு கதிரின் செயல்கள் எல்லாம் ஆத்மார்த்தமாக மாற, பார்த்திருந்த முல்லைக்கு கதிர் தான் பெற்றெடுத்தானோ என்ற சந்தேகமே வந்து விட்டது.
சின்ன சிரிப்புடன் எதிர்ப் பட்ட காற்று அவளையும் மீறி உறக்கத்திற்கு அழைக்க, மடியில் இருக்கும் ரேஷ்மியை கருத்தில் கொண்டு மூடும் இமைகளை கஷ்டப்பட்டு பிரித்து அவள் அமர,
அதனை உணர்ந்து கொண்ட கதிர்,
“பையன் அப்பாவோட நெஞ்சுல தூக்குறதுனால இடமில்லை. ஆனா பையனோட அம்மாக்கு அவன் அப்பாவோட தோள்ல தாரளமா இடமிருக்கு” என கூறியவன் முல்லை சாய்வதற்கு ஏதுவாக சற்று சரிந்து அமர்ந்து அவன் தோள்களை அவள் புறம் வளைக்க,
சில நொடி அவனின் பேச்சில் திகைத்தவள், தன் உணர்வினை பார்க்காது உணர்ந்து கொண்டவனை கண்டு, சிறு புன்னகையுடன் அவன் தோள்களில் தன் முகத்தினை நன்றாகவே அழுத்தி சாய்ந்தவளிற்கு, மனதில் நிம்மதியும் பாதுகாப்பும் ஒருங்கே எழ கண்மூடினாள் முல்லை.
தோள்களில் தாரத்தினையும் நெஞ்சினில் புதல்வனையும் சுமந்தவனிற்கு உள்ளம் உவகையில் பொங்கியது.
முகத்தில் உறைந்த புன்னகையுடன் கதிரை குடும்ப அமைப்பாக பார்த்த அண்ணன்கள் இருவருக்கும் உலகை வென்ற உணர்வு. பின் அவன் தவம் இருந்து பெற்ற உறவல்லவா?
ஒன்றை மணி நேர பயணத்தில் கதிரின் வீட்டை அடைந்து விட,
கதிருக்கு சகோதரிகள் இல்லாததால், அவனின் உறவினர் முறை அக்கா ஒருவர் ஆர்த்தி எடுக்க உடன் சீதா.
முல்லைக்கு அவள் முதன் முதலில் இந்த வீட்டிற்கு வந்தது ஞாபகம் வர ‘அப்போதும் ஆர்த்தி எடுத்தார்களே’ என யோசித்தவள் இன்னும் கொஞ்சம் அலசியிருந்தால் திருட்டு பூனை பிடிப்பட்டு இருக்கும்!!
முறையாக ஆர்த்தி எடுத்து முடிக்க கதிரின் மனைவி மற்றும் அவ்வீட்டின் கடைசி மருமகள் என்ற உரிமையுள்ள உறவாக மாறி கதிரின் கைப்பிடித்து அவ்வீட்டினுள் அடி எடுத்து வைத்திருந்தாள் முல்லை கதிரின் முல்லை.
இருவரின் வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு ஆனந்தமாக அடி எடுத்து வைத்திருக்க,
இங்கே ஹரிஷ் மற்றும் சுரபியின் வாழ்க்கை இழிவை நோக்கி மெல்ல திரும்பியிருந்தது.
மற்றவர் தொட்டாலோ பேசினாலோ எந்நேரமும் வெடித்து விடுவேன் என்று நிலையில் தான் இருந்தனர் ஹரிஷ் மற்றும் சுரபி.
உள்ளே கோபம் அலைகடலாய் பொங்க, அதனை சிறிதும் மறைக்காது தங்களின் முகத்தினில் காட்டிய வண்ணம் இருந்தனர்.
ஹரிஷ் சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.என்ன தான், தான் முல்லையை ஏமாற்றி விட்டு வந்திருந்தாலும் அவள் இன்னொரு திருமணம் எல்லாம் நினைத்து கூட பார்க்க மாட்டாள் என நினைத்திருந்தவனின் எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டிருந்தாள்.
அதுவும் கடைசியாக கதிர் பார்த்த பார்வை!!
இனி ஜென்மத்திற்கும் அத்வியின் உறவு அவனிற்கு இல்லை, என்பது போல் ஹரிஷிற்கு உணர்த்துவதை போல் இருக்க அவனால் தாங்கவே முடியவில்லை.
‘நோ, நோ, அத்வி என் பையன் என்னோட ரத்தம். எனக்கு முழு உரிமை இருக்கு. அத்வி மேல மட்டும் இல்லை முல்லை மேலயும்…’ என மனதோடு பேசி கொண்டு வந்தவனிற்கு சட்டென கதிரின் பார்வையும் முன்பு அவனிடம் வாங்கியிருந்த அடியும் நினைவில் வந்து அடுத்த வார்த்தை பேச வாய் வராது தொண்டையில் சிக்கிற்று.
இவனின் நிலைமை இப்படி என்றால் சுரபியோ கிட்டதட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தாள்.
முல்லைக்கு தாலி கட்டும் போது கதிரின் முகத்தில் இருந்த அந்த சிரிப்பு!!ஆத்மார்த்தமான உள்ளாருந்த மகிழ்ச்சி எல்லாம் அவளின் நினைவில் எழுந்து அவளை கொன்றது.
இது எல்லாம் அவளை திருமணம் செய்யும் போது ஒன்று கூட இல்லையே கதிரின் முகத்தில். இத்தனைக்கும் அவர்களின் முதல் திருமணம் அத்தனை விமர்சையாக நடந்ததே.
உணர்வுகள் துடைத்த இறுகிய முகத்துடன் தானே இருந்தான்.
இப்போது மட்டும் எப்படி எப்படி அதுவும் குழந்தையுடன் இருப்பவளை திருமணம் செய்ததில் அவ்வளவு சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி அவனிடம்!!
என நினைத்தவளிற்கு பதில் கிடைக்காது போக மேலும் மேலும் அதை பற்றி சிந்தித்து மனதினை அழுத்தமாக்கி கொண்டாள்.
அவள் எதிர்பார்த்த கதிரின் காதல் மற்றும் மகிழ்ச்சியை இன்று கண்கூட கண்டாள் ஆனால் அது அவன் இன்னொருத்தியின் கணவனாக மாறிய பொழுது,
இதற்கா! இதற்காகவா அவள் போராடி அவனை மணந்தாள்.
முல்லையை விட எந்த விதத்தில் அவள் குறைந்து போய் விட்டாள்….அவன் தான் வேண்டும் என தற்கொலை வரை போய் அவனை வம்படியாய் மணந்து கொண்டவளை விட முல்லை எந்த விதத்தில் உசத்தி, என அவளிற்கு புரியவில்லை.
அவள் எதிர்பார்த்து அவளிடம் காட்டாத காதலை அன்பை இன்று ஒன்றை பார்வையில் மொத்தமாக முல்லையிடம் காட்டி விட்டானே!!!
என யோசித்து யோசித்து அவளிற்கு ஆத்திரமாக வர!!!
அத்வியின் உறவு இனி தனக்கு இல்லையோ என நினைத்த ஹரிஷிற்கும் கோபம் பொங்க இருவருக்கும் அதனை வெளிப்படுத்தும் வகை தெரியாது மேலும் மேலும் மனதினை அழுத்தமாக்கி கொண்டனர் இருவரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எனக்கும் அது தான் சந்தேகம் முல்லை.. கதிர் அத்வி அவனோட சொந்த பிள்ளை மாதிரி நடந்துக்கிறான்.. கதிர் எப்பவுமே சூப்பர் தான்.. இவங்க பழைய காதல் கதை எப்படி இருக்கும்னு தான் யோசனை.. அவன் மட்டும் பார்த்து லவ் பண்ணியிருப்பான் போல..