
காவிரி மணலில்
நடந்ததுமில்லை…
கடற்கரை அலையில்
கால் வைத்ததில்லை…
சுதந்திர வானில் பறந்ததுமில்லை…
சுடச் சுட மழையில்
நனைந்ததும் இல்லை….
சாலையில் நானாகப் போனதுமில்லை…
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை…
ஏழை மனம் காணும்
இன்பம் நான்
காணவில்லை…
மார்கழி பூவே…
மார்கழி பூவே…
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்…
மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை…
உன்மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை…
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். அலைபுறும் அவளின் மனம் இளைப்பாறும் இடம் இந்தப் பாடல். அதுவும் குறிப்பாக அந்தக் குயில் கூவும் இசையுடன், ‘ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை…’ என ஒலிக்கும் வரிகளில் சிறு போதையே உண்டு அவளுக்கு. ஏகாந்தத்தை அள்ளி தெளிக்கும் முழு நிலவை சுமந்த இரவு, மனதை உருக்கும் தனிமை, அதனோடு இப்பாடலும் சேர்ந்தால் அந்த நொடி அவளின் உலகம் புதிதானதொரு பரிமாணம் எடுக்கும்.
குழைந்து வழியும் குரலில் இழையும் மென் சோகம் அவளை என்னவோ செய்யும். அதற்கு இசை இன்னும் உயிர் கொடுத்து இவளை உருக்கும். கண்களை மூடி அந்த இசைக்குள் கரைந்து போனால் அடர் பனியின் குளுமையையும் இளஞ்சூரியனின் சூட்டையும் ஒருங்கே உணர முடியும். உடலின் மயிர்கால்களெல்லாம் சிலிர்த்து அடங்கும். இதழ்களின் ஓரம் தானாய் ஒரு முறுவல் தவழும். மன கண்ணில் இயற்கை பாய் விரித்து வானவேடிக்கை காட்டும். அவசரமாய் ‘என்ன இருந்தாலும் ரகுமான்… ரகுமான் தான்யா…’ என மனதிற்குள்ளேயே அவருக்கு ஒரு சலாமும் போட வைக்கும்.
அப்படியே வானை வெறித்தப்படி, வெற்றுத் தரையில் சரிந்துப் படுத்துக் கொண்டாள் அவள். தரை ஓடுகளின் ஊடே முதுகை துளைக்கும் குளிரும் கூட மனதிற்கு இதமளிக்கிறது. மார்கழி மாதத்து மெல்லிய பனி படர்ந்த தரை எவ்விதத்திலும் அவளைப் பாதித்ததைப் போன்று தெரியவில்லை. மென்மையாய் படந்திருந்த சிறு பனித்துகள்கள் அவளின் பருத்தி ஆடையின் ஊடே புகுந்து முதுகைத் தொட்டு, கொஞ்சமாய் அவள் உள்ளத்தையும் தொட்டுப் போனது.
இந்த நொடி அவளின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கருத்த வானும் மினுக்கும் நட்சத்திரமும் ஜொலிக்கும் நிலவும் மட்டும் தான். இப்படியே பார்த்துக் கொண்டே ஆண்டாண்டு காலங்களைக் கழித்து விட்டாலும் தான் என்னவென்று தோன்றுகிறது. பசி, தூக்கம், துக்கம், பந்தம், பாசம் அத்தனை தளைகளிலிருந்தும் கட்டறுந்தவளாக மாறி காற்றோடு கலந்துவிட்டால் போதும் என்று கூடப் பெரும் ஏக்கமொன்று எழுகிறது. அடுத்த நொடியே அது சாத்தியமில்லை எனப் புத்திக்கு உரைக்கவும் தான் செய்கிறது.
அவள் இந்த உயிரை கட்டிக் காத்துப் போற்றி வைத்திருப்பதெல்லாம் அவளின் அன்னைக்காகத் தான். அவள் இன்னும் புன்னகை மங்காது உயிர்ப்புடன் வலம் வந்து கொண்டிருப்பதும் அவருக்காக மட்டும் தான். இப்படி அவள் நினைப்பது தெரிந்தால் கூட அவ்வளவு தான். உண்டு இல்வையென்று அவளை ஒரு வழியாக்கி விடுவார் அந்த அன்பு தாய். அனிச்சைச் செயலாய் அவளின் வலக்கரம் நெற்றிப்பொட்டை நீவிவிட்டுக் கொள்கிறது. எண்ணத்தின் விளைவாய் அழகிய முறுவல் ஒன்று அவளின் இதழ் கடையோரம்.
தரையின் மெல்லிய அதிர்வே அவரின் வருகையை முரசறைகிறது அவளுக்கு. அவளின் தற்போதைய எண்ணங்களில் வியாபித்திருப்பவர். அவரை அன்றி வேறு யாரும் இந்த அர்த்த ராத்திரியில் அவளைத் தேடி இந்த இடத்திற்கு வந்திடவும் கூடும்?
“நினைச்சேன்… இன்னைக்கும் இப்படித் தான் இங்க வந்து படுத்து கிடப்பேனு… அப்படி இந்தக் கொட்டுற பனியில இங்க என்ன தான் இருக்கோ தெரியல போ… இப்படி நடுராத்திரி வரைக்கும் முழிச்சு கிடக்கணுமுனு வேண்டுதலா உனக்கு… போய்ப் படுக்கறது தான ஆரும்மா…” என்றபடியே அவளை முறைத்துக் கொண்டிருந்தார் அவளின் அன்னை பர்வதம்.
அவரின் கைப்பிடித்து இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டவள், வாகாய் அவரின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டு, “நினைச்சேன்… இன்னைக்கும் இதே கேள்விய இதே ஸ்ரூதியோட புள்ளி கமா மாறாம கேட்பீங்கனு… ஒரு நாளாவது இந்தக் கேள்வியை மாத்தேன்ம்மா…” என்றாள் சின்னவளும் அவரைப் போலவே ஏற்ற இறக்கத்துடன் கேலிக் குரலில்.
அன்னையின் இடையை வசதியாய் கட்டிக் கொண்டு இன்னும் வாகாய் அவரின் மடிக்குள் சுருண்டுக் கொண்டாள். அவள் ஆரல்மொழி. அவளின் ஒட்டுமொத்த உலகத்தை ஒற்றைப் பெயரில் சுருக்கி விடலாம் என்றால், அது பர்வதம் தான். அவரைச் சுற்றி தான் அவளின் இயக்கம். அவருக்காக மட்டும் தான் அவளின் இயக்கம்.
ஒரு கரத்தால் மகளின் தலையை மெல்ல வருடியவர், மற்றொரு கரத்தால் குளிர்ந்துக் கிடந்த தரையைத் தொட்டுப் பார்த்தார்.
“என்னடி தரை இத்தனை ஜில்லுனு இருக்கு… உனக்கு சொரனை எதுவும் இருக்கா இல்லையா..? எரும மாட்டு மேல மழ பேஞ்ச மாதிரி தேமேனு படுத்து கிடக்கற… வரவர நீ மனுஷ பிறவி தானானு எனக்கே கூட சந்தேகமா இருக்குடி ஆரு..?” என்று சலித்துக் கொண்டவர், “சளி புடிக்கட்டும், அப்பறம் இருக்கு உனக்கு…” என்று மிரட்டலாய் முடித்து வைத்தார்.
மகளிடம் எந்த மறுமொழியும் இல்லை. இளம் முறுவல் மட்டும் தான்.
“பச்… எதுக்கும் வாயத் திறந்திடாதா… முத்து உதிர்ந்திட போகுது…” நொடித்துக் கொண்டார் அவர்.
அவளோ அவர் பேசிய எதையும் காதில் வாங்கியது போலத் தெரியவில்லை. விரிந்து கிடந்த வானில் தான் பதிந்து கிடந்தது அவளின் பார்வை. எப்போதும் அவள் இப்படித் தான். மழை நாட்களைத் தவிர்த்து ஏனைய நாள்களின் இரவெல்லாம் அவளுக்கு இப்படித் தான் கழியும். ஏன் எதற்கு என்றெல்லாம் இதுவரை பர்வதம் கேட்டதே இல்லை. அவளுக்குப் பிடித்திருக்கிறதா, செய்யட்டும். அதுதான் அவரின் எண்ணம்.
“ஆரும்மா…” என்றவரிடம் சின்னத் தயக்கம்.
“ம்ம்ம்… சொல்லுங்க ம்மா…” வானிலிருந்த பார்வையை மாற்றித் தாயின் முகத்தில் நிலைக்க விட்டிருந்தாள்.
“அது வந்து ஆரும்மா… ஒரு சம்பந்தம் வந்திருக்கு… நாளைக்குப் பொண்ணு பாக்க வரேனு சொல்லி இருக்காங்க…” இன்னும் முழுதாய் தயக்கம் விடவில்லை அவரை. அப்படி ஒன்றும் மகள் தாயை எடுத்தெறிந்துப் பேசிவிடும் ரகமில்லை தான். ஆனாலும் தயக்கம் அவரை விடவில்லை. இந்த முறையாவது அத்தனையும் கைகூடி வர வேண்டுமே என்ற வேண்டுதல் அதிகமாகி இருந்தது.
“வேண்டாமேம்மா… எதுக்கு நீங்களே உங்கள கஷ்டபடுத்திக்கறீங்க… விட்டுடுங்கனு சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கறீங்க…” என்றாள் ஆரா மனம் கேளாதவளாய்.
“அவங்களா தான் ஆரூம்மா கேட்டு வந்திருக்காங்க… தேடி வரத ஏன் வேண்டானு சொல்லணும்…” மெல்ல தலை வருடியபடியே மகளுக்குப் புரிய வைத்துவிடும் முனைப்பில் இருந்தார் பர்வதம்.
“வேண்டாம்மா… சொன்னா புரிஞ்சுக்கோங்க… இது எத்தனையாவது ஆள்… இன்னும் நாலு இடம் வந்தா வெள்ளிவிழா கொண்டிடலாம்… ஆனா கல்யாணம் மட்டும் என்னைக்கும் நடக்கப் போறதில்ல… அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது…” என்ற மகளின் உணர்வு துடைத்த குரலில் தாயாய் அவரின் உள்ளம் கலங்கி துடித்தது.
“அப்படி இல்லம்மா… அந்தப் பையனுக்கு உன்ன ரொம்பப் புடிச்சு இருக்காம்… அவரே நேர்ல வந்து பேசுனாரு… ரொம்ப நல்ல பையனா தெரியறாரு ஆருமா… நிச்சயம் நாம சொன்னா புரிஞ்சுக்கற டைப் மாதிரி தான் தெரியுது… கண்டிப்பா இந்தத் தடவ எதுவும் தப்பா போகுது…” மெல்லிய குரலில் சொன்னவரிடம் மன்றாடும் பாவமும் இருந்தது.
தாய் இப்படிச் சொன்னதுமே, ‘என்னா ஆனாலும் என் முடிவு மாறாதுங்க… நீங்க தான் என் பொண்டாட்டி… வெயிட் பண்ணுங்க… கூடிய சீக்கரமே உங்கள பொண்ணு கேட்டு குடும்பத்தோட உங்க வீட்டுக்கு வரேன்… அப்பறமும் எப்படி வேண்டானு சொல்லறீங்க பாக்கறேன்…’ குரலோடு சேர்த்து மின்னலாய் வந்து போனது அவன் முகம். அதில் அனிச்சையாய் அவள் முகத்தில் ஒரு ஒவ்வாமை உணர்வு வந்து ஒட்டிக் கொண்டது.
“கல்யாணம் தான் வாழ்க்கையாம்மா… அதத் தாண்டி பொண்ணுங்களுக்கு எதுவுமே இல்லையா… எனக்கு இதெல்லாம் வெறுத்துப் போய் ரொம்ப நாள் ஆகுதும்மா… என்ன ஏன் போக்குல அப்படியே விட்டுடேன் ப்ளீஸ்…”
ஒவ்வொரு முறை மாப்பிள்ளை வீட்டார் இந்தச் சம்பந்தம் வேண்டாம் எனத் தட்டிக் கழிக்கும் போதும் மகளின் மனம் கொள்ளும் துயரம் அறியாதவரா அவர். ஆனாலும் இந்த ஒரு விசயத்தில் மட்டும் ‘எப்படியோ உன் விருப்பப்படி இருந்து கொள்…’ என விட்டுவிட முடியவில்லையே அவரால்.
“எனக்கும் வயசாகிட்டே போகுதேடா கண்ணா… இன்னும் எத்தனை நாளைக்கு நா உனக்குத் துணையா இருக்க முடியும்… உனக்கும் அடுத்த மாசத்தோட இருபத்தெட்டு முடிய போகுது… எனக்கான கடமைய நானும் செய்ய வேண்டாமா… கடமைங்கறத விட நீ ஒரு நல்ல இடத்துல வாழறனு தெரிஞ்சா தானே என்னால நிம்மதியா சாகக் கூட முடியும்…” உருண்டு திரண்ட ஒரு துளி கண்ணீர் அவளின் கன்னத்தில் விழுந்து தெரித்தது.
“ப்ளீஸ்ம்மா… உங்களுக்கென்ன அவங்க என்ன பாக்க வராங்க… அவ்வளவு தானே… வரட்டும்… பாக்கட்டும்… ஆனா பின்னாடி வேண்டானு சொல்லிட்டாங்கனு நீங்க வருத்தப்படக் கூடாது…” என மகள் கண்டிப்புடன் சொல்லவும் வேகவேகமாய்த் தலையாட்டி ஒப்புக் கொண்டார் அவர். அதன்பிறகு அமைதியாகவே இருவரும் உறங்கச் சென்றிருந்தனர்.
அவசர அவசரமாகத் தலைக்கு ஊற்றிக் கொண்டு வந்திருந்தாள் ஆரல்மொழி. நீலநிற கார்டன் சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டவள், பூஜையறைக்குச் சென்று கடவுளை வணங்கி நெற்றியில் திருநீரை இட்டுக் கொண்டாள்.
எப்போதும் அவளுக்கு எழுந்தவுடன் குளிந்துவிட வேண்டும். பள்ளிக்காலம் தொட்டே இது தான் பழக்கம் என்பதால், அதை இன்றுவரை மாற்றிக் கொள்ள அவள் முயலவில்லை.
“மணி தான் ஆகலையேம்மா… நா வந்து செய்ய மாட்டேனா… நீங்க ஏன் தனியா கிடந்து அல்லாடுறீங்க…” தாயை அதட்டியபடியே சமையல் கட்டிற்குள் நுழைந்தாள் அவள்.
“ஆமான்… ஒரு ஈடு இட்லி ஊத்தி.. தேங்கா சட்னி வைக்க இந்தப் பாடா… பேசாம போடி அங்க… சமையல் மேட ஓரமா காபி வச்சுருக்கேன் பாரு… எடுத்துக்கோ…” என்றவரின் முழுக் கவனமும் சமையலில் மட்டும் தான்.
“மதியத்துக்கு நா வந்து செஞ்சுக்கறேன்… நீங்க எதுவும் செய்ய வேண்டாம்…” என்றபடியே சமையல் மேடையில் ஒரு ஓரத்தில் இருந்த குளம்பியை எடுத்துக் கொண்டு கூடத்தின் தரையில் அமர்ந்துக் கொண்டாள் அவள்.
இட்லியை ஹாட்பாக்ஸிற்கு மாற்றிவிட்டு, தானும் குளம்பியுடன் மகளுக்கு எதிரில் சென்று தரையில் அமர்ந்து கொண்டார் பர்வதம். இது தாயுக்கும் மகளுக்குமேயான பிரத்தியேக நேரம். குறைந்தது அரைமணி நேரம், சந்தித்த மனிதர்கள் அனுபவங்கள் எனப் பொதுவாய் பேசிக் கொள்வார்கள்.
பர்வதம் நறுக்கி வைத்திருந்த காய்களைக் கொண்டு அடுத்த நாற்பது நிமிடங்களில் சமையலை முடித்திருந்தாள் ஆரா. தனக்குக் கட்டிக் கொண்டு, அன்னைக்கான உணவையும் ஹாட்பாக்ஸில் இட்டு வைத்தாள்.
“சாம்பார மட்டும் கொஞ்சம் சாப்பிடும் போது சூடு பண்ணிக்கோம்மா… தயிர் போட்டுக்காத… ரசம் வச்சுருக்கேன்… அதப் போட்டுக்க… பனி காலத்துல ஒத்துக்காம போய்ட போகுது…” பாத்திரங்களை ஓர வைத்தபடியே பர்வதத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆரா.
“நா பாத்துக்கறேன் ஆரும்மா…” என்றார் அவர் சின்னப் புன்னகையும் தலையசைப்புமாய்.
“நல்லா பாத்தீங்க போங்க…” என்றபடியே அறைக்குள் நுழைந்தவள் மீண்டும் முகங்கழுவி தன்னைத் திருத்திக் கொண்டாள்.
தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்ப எத்தனிக்கும் போதே வெளியில், “பாத்தி…” என்ற மழலை மொழிக் கேட்கிறது. அந்தக் குரலே இவளுள் ஒர் இளக்கத்தைக் கொண்டு வரத் தான் செய்கிறது. இளகும் மனதிற்குக் கடிவாளமிட்டு நிறுத்தி வைத்திருந்தாள் அவள்.
“நா வரேம்மா…” நிமிர்ந்து கூட அன்னையைப் பார்க்கவில்லை. அன்னையைப் பார்த்தால் அவரின் இடுப்பில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் மூன்று வயது பாலகனையும் பார்க்க வேண்டுமே. அவனைப் பார்த்தால் அள்ளித் தூக்கி கன்னம் கிள்ளிக் கொஞ்சத் தோன்றும். குண்டு கன்னங்களில் அழுந்த முத்தமிட தோன்றும்.
“பெரிம்மா…” இவள் தலையைக் கண்டதும் துள்ளல் மொழி அந்தப் பிள்ளையிடம். தூக்க சொல்லி கைகள் இரண்டையும் நீட்டியபடியே இவளிடம் தாவுகிறான் அவன். இன்னும் சில நொடிகள் இங்கிருந்தாலும் அவள் உடைந்து நொறுங்கிப் போகும் வாய்ப்புகள் ஏராளம்.
அவசரமாய் உணவுப் பையை எடுத்துக் கொண்டு ஒட்டமும் நடையுமாய் வாசலுக்கு விரைந்தாள் அவள். எதற்கோ யாருக்கோ பயந்தவள் போல் எல்லாவற்றில் இருந்தும் தப்பித்து ஓடும் மகளைக் கண்டு தவித்துப் போய் நின்றிருந்தவரை “அம்மா…” என்ற இளைய மகளின் குரல் களைத்தது.
“வாம்மா கனி…” வார்த்தை சின்ன மகளுக்கானதாய் இருந்தாலும் பார்வை மட்டும் ஆர்வமாய் மூத்தவளின் மேல் படிகிறது.
இப்படி ஒருத்தி வரவேயில்லை, தான் அதைப் பார்க்கவும் இல்லை என்பதைப் போல அவளைக் கடந்து சென்றிருந்தாள் ஆரா. அவளின் பேச்சு வார்த்தை எப்போதுமே அன்னையிடம் மட்டும் தான். செல்லும் தமைக்கையைத் தான் விழியகற்றாது பார்த்து நின்றாள் இளையவள்.
கேட்டை திறந்து ஸ்கூட்டீயை எடுத்துக் கொண்டு வருவதற்குள் ஒரு சிறு பிரளையமே மூண்டிருந்தது அவளுக்குள். எப்போதும் அவர்கள் இருவரும் வருவதற்குள்ளாகவே கிளம்பிவிடுவாள். இன்றும் சீக்கிரம் தான் கிளம்பினாள். அவர்கள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்டார்கள். தவிர்க்க முடியாத சந்திப்பாகிப் போனது இது. சந்திப்பா? அவள் தான் அவர்களைப் பார்க்காதது போலவே பாவனைப் பண்ணிக் கொண்டாளே!
அவளின் மன வேகத்திற்கு ஈடு கொடுப்பது போல அவளின் கரங்களில் வண்டியும் பறந்தது. தெரு முனையைத் தாண்டிய பின்பு தான் கொஞ்சமாய் அவளின் சுவாசம் கூடச் சீராகிறது. அவர்களின் எண்ணம் பின்னுக்குச் சென்றவுடனேயே தன்னால் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டான் அவன். இனி இதை வளர விடுவதில் அவளுக்கு விருப்பமில்லை. இன்றே இதுப்பற்றி அவனுடன் பேசிவிட வேண்டும் என்ற முனைப்புடன் அவன் இருக்கும் திசையில் ஊவண்டியை திருப்பி இருந்தாள்.
– பற்றி எரியும்…

