
அன்று
கல்லூரி காலமும் முடிந்து டிகிரியும் பெற்றாகியது, நண்பர்கள் அவரவர் திசையில் பயணிக்கத் துவங்கியிருந்தனர், நிஹா வானொலி நிலையத்தில் ஆர்ஜேவாகச் சேர்ந்திருந்தாள், மலர் பட்டம் பெறும் முன்னவே இந்தியாவை விட்டு வெளியே வேலைக்குச் சென்றிருந்தாள்.ஆனால் அதியும் கார்த்தியும் அப்படியே இருந்தார்கள், கல்லூரி முடிந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது, பட்டம் வாங்கிய பின்னும் இருவருக்குமே அவர்களுக்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தனர்.
வெய்யில் சுட்டெரிக்கும் மதிய வேளையில் கிண்டி சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்த படி, வெப்பத்தைக் குறைப்பதற்கு ஏற்றாற் போல் தர்பூசணி பழத்தை கையில் வைத்து சுவைத்துக்கொண்டிருந்தாள் அதி, அவளெதிரே அமர்ந்திருந்த கார்த்தியோ பொறுமை தாங்காமல் கேட்டிருந்தான்.
“இதோட ஒரு தர்பூசணி மூணு ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருக்க, ஜாப் கிடைச்சா நான் வொர்க் பண்ணுற சேனல்ல தான் வொர்க் பண்ணுவேன்னு, வர ஆப்பர்ச்சுனிட்டியும் ரிஜெக்ட் பண்ணிட்டு வந்துடுற, என்ன தான்டி அதி நினைச்சிட்டு இருக்க.? நீ கல்யானம் பண்ணிட்டு போற வீட்டுக்கும் என்னையும் கூட்டிட்டு போயிருவியா என்ன.?”
“நீ என்னடா சொன்ன, என் கூடவே இருப்பேன்னு தானே சொன்ன, எங்க போனாலும் எனக்காக நிப்பேன்னு தானே சொன்ன.? நான் வேலைக்குப் போறேனோ, கல்யாணம் பண்ணிட்டு புருசன் வீட்டுக்கு போறேனோ, அதெல்லாம் எனக்கு தெரியாது, ஃப்ரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு” தர்பூசணியை அவரசமாய் விழுங்கிய படி சொன்னாள் அதி.
“அடியே லூசு, எவனாவது ஃப்ரெண்டுன்றதுக்காக வேலை போட்டு தருவானாடி.? வேலை கூடக் கிடைச்சிரும்னு வையேன், கல்யாணம் பண்ணிட்டா நம்ம ப்ரெண்ட்ஷிப் கண்டினியூ பண்ணுறதெல்லாம் ரொம்பக் கடினம் அதி, உனக்குன்னு வர போறவருக்கு இதெல்லாம் பிடிக்காமல் இருக்கலாம், சோ இந்த மாதிரி எக்ஸ்பெக்டேஷன் வச்சிகாதே அதி, திருமணம்ன்ற ஒரு பந்தம் பெண்களுக்கு இருக்க அத்தனை உறவுகளையும் தூக்கி எறிஞ்சிரும்” எதார்த்தை எடுத்துச் சொன்னான் கார்த்திக்.
“என்னோட தீரா அப்படிலாம் இருக்கமாட்டான், உன்னையும் நான் அவருக்கு ப்ரெண்டாக்கி விட்டுருவேனே” என அவளின் தெத்துபல் தெரிய சிரித்தாள் அதி.
“எப்போவாவது பாக்குற உன் தீராவ தான் கட்டிக்கப் போறியா அதி.? உனக்குத் தான் அவர் கண்ணைப் பார்த்து காதல் சொல்லவே தைரியம் இல்லையே” நக்கலாய்ப் பேசினான் கார்த்திக்.
“காத்திருக்கும் காதல் அப்படித் தான்டா இருக்கும்” என நாணப் புன்னகை சிந்தினாள் அதி.
“இப்படியே சொல்லிட்டு இரு எவளாவது உன் ஆளை கொத்திட்டுப் போகப் போறா பாரு” புன்னகை முகமாய்க் கார்த்திச் சொல்ல,
“ஏய் வாயக் கழுவுடா வாஷ்பேசன் வாயா, அதெல்லாம் சரி உன்னோட இன்டர்வீயூ என்னாச்சு.?” கேள்வியாய் தன் நண்பனின் விழி பார்த்தாள் அதி.
“வழக்கம் போலத் தான் அங்கே ரிப்போர்டர்க்கு வேக்கன்ஸி இல்லைன்னு சொல்லீட்டாங்க”
“ஏய் நீ போனது க்ராபிக் டிசைனிங் வேக்கன்ஸி தானேடா.?”
“மேடம்க்கு தான் ரிப்போர்டர் வேக்கன்ஸி கேட்டேன், நான் செலக்ட் ஆகிட்டேன் உனக்காகத் தான் விட்டுட்டு வந்துட்டேன்” சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் கார்த்தி.
“நண்பேன்டா” என மார்தட்டி சொல்லிக்கொள்ள முடியவில்லை தான், தனக்காக அவனுக்குக் கிடைத்த வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறான் என மகிழ்ந்தாலும், அவளின் அகம் மகிழவில்லை, தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை விட நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவனை வருத்தபடச் செய்யக் கூடாது என நினைத்தவள்.
“டேய் கார்த்தி நீ அந்த ஜாப் போடா, நான் ஒரு சேனல்ல ரிப்போர்டர் ஜாப் கிடைச்சிருக்கு திங்கள் கிழமை வரைக்கும் டைம் கொடுத்திருங்காங்க, அதுல நான் ஜாயின் பண்ணிக்கிறேன்.படிக்கும் போது மூவி எடுப்போம், ஷார்ட் ஃபிலிம் எடுப்போம்னு கனவெல்லாம் கண்டோம், எல்லாரும் ஒன்னா சேர்ந்தே இருப்போம்னு நினைச்சோம், இப்போ எல்லாமே மாறி போயிருச்சு பார்றேன்” அவள் பேசும் பொழுதே நட்பை எவ்வளவு தூரம் பிரிந்து வாடுகிறாள் எனப் புரிந்துக்கொண்டான் கார்த்திக்.
“ஆமா உன்னோட ஆஃபிஸ் எங்கேடி..?”
“கிண்டி தான்”
“உன்னோட ஆபிஸ் எங்கேடா.?”
“எனக்கும் அதே தான்டி அதி, ரெயில்வே ஸ்டேசன் பக்கத்துல”
“உன்னோட சேனல் பேர் சொல்லு” கேள்வி தாங்கிய விழியுடன் பார்த்தாள் அதி, கிண்டில இருக்குறது ரெண்டு மூணு சேனலில் எதுவாக இருக்கும் என யோசனையைத் தத்தெடுத்தது அகரநதியின் முகம்.
“வீயூகம் நீயூஸ் சேனல்டி”
“ஓ வீயூகமா..? எனக்குக் கிடைச்சிருக்கச் சேனல் விழித்தெழு, அங்கே வேற எதாவது வேக்கன்ஸி இருக்கான்னு கேட்டேன், கேமரா மேன் தான் தேவைப்படுது சொன்னாங்க, க்ராஃபிக் டிஸைனர் ஆல்ரெடி இருக்குறதா சொன்னாங்க” என அவள் வருத்தமாய்ச் சொல்ல.
“அப்பறம் என்ன கார்த்திக் கேமரா மேனுடன் அகரநதி சேர்ந்திடலாமா.?” வாயெல்லாம் பல்லாகக் கேட்டான் கார்த்தி.
“ஏய் என்னடா சொல்லுற நிஜமா தான் சொல்லுறியா..?”
“எனிதிங் ஃபார் யூ அதி” என நட்பாய் புன்னகைத்தான் கார்த்திக்.
அதன் பின் வந்த நாட்கள் கார்த்திக்கும் அகரநதிக்கும் சந்தோசமாய்க் கழிந்தது, சில மாதங்கள் பயற்சியில் சென்றது, பயற்சி முடிந்து அவரவர் வேலையில் பணியமர்த்தபட, விழித்தெழு சேனலில் ஜூனியர் ரீப்போர்ட்டராக அகரநதியும், சம்பவ இடத்திற்கே சென்று வீடியோ எடுத்து வரும் பணியில் கார்த்திக்கும் ஒரே சேனலில் பணி செய்து கொண்டிருந்தனர்.
அவர்களின் சந்தோசம் ஒட்டுமொத்தமாய்ப் பறிபோகும் நாள் அருகில் இருப்பதை அறியாமால் இருவரும் சந்தோசமாய் அவர்களுக்குக் கொடுத்த பணியைச் செவ்வண்ணே செய்து வந்துக் கொண்டிருந்தனர்.
அதியோ தகவலை திரட்டிக் கொண்டு வரும் வேலையைப் பார்த்து வந்தாள், கார்த்திக்கோ சேனலில் எங்குச் சென்று வீடியோ எடுத்து வர சொல்கிறார்களோ அங்குச் செல்வான். இதுவரை அவள் முகம் கேமரா முன் பதியபடவில்லை.
“ஏம்மா அகரநதி, இப்படிக் குழந்தை பாலியல் சம்பவம் பத்தி மட்டும் ரிப்போர்ட் எடுத்திட்டு வர்றீயே, இப்படி இருந்தா எப்படிமா முன்னேற போற” சலித்தபடி சொன்னார் மூத்த பத்திரிக்கை நிருபர் சிவராமன்.
“சார் இப்போ இது தானே அதிகமா நடக்குது,அதுவும் பதினொரு மாச குழந்தைய உங்க வயசுல உள்ள ஒரு ஆள் தான் ரேப் பண்ணிருக்காரு” என அவள் முகத்தில் அறைந்தாற் போல் சொன்னவுடன் முகம் சுணங்கியது சிவராமனுக்கு.
“நீ சரிபட்டு வரமாட்ட போலையே, இந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் தொடர்பு, இந்த மாதிரி கிசுகிசு செய்திகளால் தான் நான் உனக்குச் சீனியரா இருக்கேன்” எனத் தன் மீசையில் மண் ஓட்டாதது போல் பேசியவரை எதோ போல் பார்த்து வைத்தாள் அகரநதி.
“என்னமா பொண்ணு இப்படிப் பார்க்கிற, நிதர்சனத்தைச் சொன்னேன், நீ பொம்பளை பிள்ளைன்னு நினைவுல வச்சிக்கிட்டு வேலைய பாருமா” என அவர் பல் இளிக்க,
“சார் எத்தனையோ தப்புத் தவறுகள் நடக்குது, அதெல்லாம் விட்டுட்டுச் சீனிமாகாரங்களைப் பத்தி எழுதி தான் என் பேரை நிறுத்திக்கணும்னு இல்லை, மக்களைப் போய்ச் சேர வேண்டியது சமூக அவலங்கள் பத்தின தகவல்கள் தான், சினிமா நீயுஸை பத்தி சொல்றதுக்கு நிறையச் சேனல் இருக்கு சார். உங்களுக்குத் தெரிஞ்ச கிசுகிசெல்லாம் இப்போ மீம் க்ரீயேட்டர்ஸ்கே தெரியுது, வலைதளத்துல உட்கார்ந்த ஆயிரம் கிசுகிசு வர போகுது, பேசாம உங்களை மாத்திட்டு மீம் க்ரீயேட்டர்ஸேயே போட்டுலாம் போலச் சார், உங்களை விட அவங்க துரிதமா செயல்படுறதா கேள்விபட்டேன், நான் சொல்லலை” என அவள் சிவராமினின் காலை வாரிவிட, அவளிடம் பேசி ஜெயிக்க முடியாதென வாயை மூடிக்கொண்டார் சிவராமன்.
“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை அகரநதி சேனல் ஹெட் உன்னைக் கூப்பிட்டாரு போ போ” என விசமமாய்ச் சிரித்தார் சிவராமன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியும் சார், மூன்றெழுத்து நடிகை வழுக்கி விழுந்துட்டாங்களாம் அது என்னன்னு பாருங்க ” என அவரை முறைத்து சென்றாள் அகரநதி. அவர் சொன்ன கருத்தில் அவளுக்கு உடன்பாடில்லை அதனால் தான் அவள் இப்படி நடந்துக்கொண்டாள். அவள் களத்திற்குச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகிறாள். ஏசி ரூமில் அமர்ந்துக்கொண்டு அவர் பேசும் பேச்சுகள் அவளுக்குள் கோபத்தைக் கிளப்பியது. பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா.? ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு வேலைக்கு வருவதே சாதனை என்ற நிலை இருக்கையில், அவளின் தந்தை கோபாலனே இந்தத் துறைக்குத் துணிந்து அனுப்பியிருக்கும் போது, இவருக்கு என்ன என் மேல் அக்கறை எனக் காய்ந்தாள் அகரநதி.
தன்னுடைய கனவு நோக்கிய பயணமிது, திரைப்படம் எடுத்திருந்தாள் கூட அவள் இவ்வளவு திருப்த்தி அடைந்திருப்பாளோ என்னவோ, அன்றாடம் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தனக்கும் சிறிதளவு பங்கு இருப்பதை நினைத்து பெருமைக்கொண்டாள் அதி. சமூக அவலங்களையும், சீர்கேடுகளையும் திரை போட்டுக் காட்டுவதில் அவளுக்குப் பெரும் ஈடுபாடு. ஆனால் இப்போது சேனல் ஹெட் எதற்குத் தன்னை அழைத்தார்.? இந்தச் சிவராமன் வேறு கோணலாய் சிரித்தாறே, என்னவாக இருக்கும் என்ற யோசனை தாங்கிய முகத்துடன், மின்தூக்கிகாகக் காத்திருந்தாள் அகரநதி. அவளின் எண்ணம் போல் மின் தூக்கி வந்து நிற்க மின் தூக்கியின் கதவு மெல்ல திறந்த போது, கேமராவும் கையுமாக நின்றிருந்த தன் தோழன் கார்த்திக்கை பார்த்த நொடி துள்ளி குதித்தது அதியின் மனம்.
“டேய் கார்த்தி, என்ன இந்தப் பக்கம்”
“சேனல் ஹெட் வர சொன்னாராம்டி, நீ எங்கே போற.?”
“நானும் அங்கே தான்டா, என்னையும் சேனல் ஹெட் வர சொன்னதா சிவராமன் சார் சொன்னாரு”
“என்ன அதி சொல்ற ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல வரச் சொல்லியிருக்காங்க வேலைய விட்டு தூக்கிருவாங்களோ.?”
“ஏன் நெக்ட்டிவா திங்க் பண்ணுற கார்த்தி, பாஸிட்டிவான விசயமா கூட இருக்கலாம்ல” என அதி சொன்னதும் கார்த்திக்கும் சரியெனத் தான் தோன்றியது. அவர்கள் வந்து சேர வேண்டிய ஐந்தாவது தளம் வந்துவிட, சேனல் ஹெட்டின் அறைக்குள் அனுமதி கேட்டு இருவரும் நுழைந்தனர்.
“யா கம்மின்” என்ற கணீர் குரல் அறையை நிரப்பியது.
“சார் ஐ யெம் அகரநதி ஜூனியர் ரிப்போர்டர்”
“ஐ யெம் கார்த்திக் கேமரா மேன் சார்” என இருவரும் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர்.
“யா குட்,ஐ யெம் யுவர் சேனல் ஹெட் கௌதம், ப்ளீஸ் பீ சீட்டட்” இருவரையும் அமரும்படி சுழல் நாற்காலியை காட்டினார் கௌதம். அவர் அணிந்திருந்த கண்ணாடியும், அவரின் முன் வழுக்கையும் அவருக்கு நாற்பது வயதை காட்டியது. அமர்ந்தபடி இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டிருக்க,இருவரையும் பார்த்து நேராய் விசயத்தைச் சொன்னார் கௌதம்.
“உங்க ரெண்டு பேரையும் வர சொன்னதுக்குக் காரணம், ஈசிஆர்ல சுகாதார துறை அமைச்சரோட பங்களா இருக்கு,அங்க சட்டத்துக்குப் புறம்பான சில விசயங்கள் நடக்குறதா தகவல் வந்திருக்கு, இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மைன்னு நீங்க பார்த்திட்டு வரணும்” கௌதம் சொல்லி முடித்து மேஜை மீது வைத்திருந்த நீரை பருகினார்.
“ஓகே சார்” என வேகமாய்த் தலையசைத்தவளுக்குத் தெரியும் அது அமைச்சர் செந்தமிழனின் பங்களா என்று. அகிலன் மீது கோபமாய் இருந்தவளுக்கு, இந்த வாய்ப்பை பயன்படுத்தியே ஆக வேண்டுமென்று தோன்றியது.
“சார் வேண்டாம் வேற யாரையவது அனுப்புங்க “ என உறுதியாய் கார்த்திக் சொன்னான், அகிலனின் நிழல் கூட நதியின் மீது பட்டு விடக்கூடாது என்ற உறுதியாகயிருந்தான், ஆனால் காலமோ வேறு நினைத்திருந்தது என்பதை அறியாதிருந்தான்.
“நாங்க சொல்லுற வேலையைச் செய்யுறதுக்குத் தான் நீங்க இங்கே இருக்கீங்க” எனக் கண்டிப்பான குரல் கௌதமிடமிருந்து வர, கார்த்திக்கின் கைப்பற்றிக் கண் அசைவில் அவனை அமைதியாய் இருக்கும் படி சொன்னாள் அதி.
“சார் இதை நாங்க சிறப்பா செஞ்சு தர்றோம், வீடியோ ஆதாரம் போட்டோஸ் எல்லாமே க்ளாரிட்டியா எடுத்திட்டு வர்றோம்” எனச் சொல்லி எழ,
“ஒன் செக், அங்கே போலீஸ் பாதுகாப்பு இருக்கும் அதை மீறி தான் நீங்க தகவலை சேகரிக்கணும், அதுமட்டுமில்லாமல் வீடியோ ஆதாரமா இருந்தால் ரொம்ப நல்லது, நம்ம சேனல் டிஆர்பி ஏறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கு, ப்ரஸ் பிப்பிள்ன்னு நீங்க உங்களை அடையாளம் காட்டிக்கக் கூடாது, அதுல ரொம்பவே கவனமா இருங்க” எனக் கௌதம் சொல்லி அனுப்ப, அறையிலிருந்து வாடிய முகத்துடன் வெளியேறி இருந்தான் கார்த்திக் அவனைத் தொடர்ந்து வந்தாள் அகரநதி.

