
அத்தியாயம் -30
பார்த்தி சொன்ன யோசனை நிரஞ்சனுக்கு சரியென்று பட்டது.அதனால் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போய் இருந்தான்.அப்போது உள்ளே வந்த சஹா “எ…என்ன பேசிட்டு இருக்கீங்க?ஏதோ பலத்த யோசனை போகுது போல” என்று கேட்டான். பார்த்தி அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயத்தைப் பற்றி சொன்னான்.
சஹா நிரஞ்சனிடம் அந்த பாடலை திரும்பவும் கேட்க வேண்டும் என்று சொல்லவும் அவனும் போட்டு விட்டான்.சஹாவும் கேட்டு “ம்ம்… ந…நல்லா இருக்கு ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்கள் பக்காவா இருக்கு கண்டிப்பா இவங்க முறையான பயிற்சி செய்தவங்களாகத் தான் இருக்கும்” என்று தன் எண்ணத்தைப் பற்றி சொன்னான்.
நிரஞ்சனுக்கு தன் நண்பர்கள் மேல் இன்னும் நம்பிக்கை அதிகமானது.அவர்களுக்குள் இருக்கும் திறமை கண்டு வியந்து தான் போனான்.
சஹா யோசனையோடு “இ…இந்தக் குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கேன். ஆனால் எந்த இடம்னு சரியா நினைவு இல்லை. ஏ..ஏன்னா அந்த குரல் திடீர்னு நின்னுடுச்சு” என்றான்.
நிரஞ்சன் மனதினுள் ‘சிற்பி நீ சஹாகிட்டே பாடிக் காட்டி இருக்கியா? என்கிட்ட என்னன்னா யாருக்கும் தெரியாதுன்னு சொன்னே நேர்ல பார்த்தேன் இருக்கு கச்சேரி’என்று நினைத்தான்.
நான்காவது நாள் காலையில் இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சிற்பியின் எண்ணிலிருந்து நிரஞ்சனுக்கு ஒரு அழைப்பு வந்தது.தன் கண்களால் நம்ப முடியாமல் ஒருமுறை தன் கைப்பேசியில் தெரிந்த எண்ணை உற்றுப் பார்த்தவன் ‘என்ன சிற்பி போன் போடுகிறாள் நம்ப முடியலையே’ என்று அவன் யோசனையோடு பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட காந்தன் “முதல்ல போனை எடுத்து பேசு அப்புறமா யோசி” என்று சொல்லவும் இவனோ தயக்கத்தோடு “ஹலோ” என்றான்.
மறுமுனையில் “ஹலோ நான் சிற்பி பேசுறேன்”
“தெரியுது சொல்லுங்க என்ன விஷயம்?” என்று மரியாதையாக சொல்லவும் மூன்று பேரும் இவனை பார்த்தார்கள்.அவனோ தனது பார்வையை வேறு பக்கமாக மாற்றிக் கொண்டபடி “இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு நீங்க ஆபிஸ்க்கு வந்துடுங்க” என்று நேராகச் சொன்னாள்.
நிரஞ்சன் “நீங்க சொன்னால் நான் உடனே கேட்கணுமா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
அவளோ அசராமல் “ஆமாம் நான் சொன்னால் நீங்க கேட்டுத் தான் ஆகனும். ஏன்னா சாம்பவி மேம் என்கிட்ட முக்கியமான பொறுப்புக்களை கொடுத்திட்டு போய் இருக்காங்க.அதனால சொன்ன மாதிரி ஒழுங்கா வர்ற வழியைப் பாருங்க மக்கா…மீட்டிங் சரியா பன்னிரெண்டு மணிக்கு வந்துடுங்க” என்று அவனை மிரட்டுவது போல் பேசி விட்டு கைப்பேசியை வைத்து விட்டாள்.
நிரஞ்சனோ “ஹலோ ஹலோ” என்று சொல்லி கைப்பேசியை பார்க்க அவளோ அழைப்பினை துண்டித்து இருந்தாள்.மூவரும் அவனைப் பார்த்து சிரித்தார்கள்.
நிரஞ்சன் “ஏன்டா சிரிக்கிறீங்க?”
பார்த்திபன் “எப்பவும் எங்க எல்லோரையும் நீ கலாய்த்து மிரட்டவும் செய்வே. இப்போ உன்னையும் மிரட்ட ஒரு ஆளு சரி பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதுன்னு” என்று அவன் சொல்லி சிரிக்க மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.
நிரஞ்சனோ “அவ சொன்னா நான் உடனே போகனுமா? நான் போக மாட்டேன்” என்று கொஞ்சம் பிடிவாதமாகச் சொன்னான்.
சஹா “இ…இந்த பிடிவாதம் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்குதுன்னு பார்க்கலாம்” என்று சொன்னான்.நிரஞ்சன் “அதெல்லாம் ஒன்னும் நான் மாற மாட்டேன்,சொன்னா சொன்னது தான்” என்று சொல்லி விட்டு பயிற்சி ஆரம்பிக்க சொல்லவும் அதில் கவனம் சென்றது.
நேரம் பதினொன்று நெருங்கிக் கொண்டிருந்தது.எழுந்து தண்ணீர் குடிக்கச் சென்றவன் தன் கைப்பேசியில் நேரத்தை பார்த்து விட்டு அமைதியாக உட்கார்ந்தான்.
இன்னும் கொஞ்ச நேரம் சென்று இருந்தது.நிரஞ்சனின் கைப்பேசி திரும்பவும் அழைத்தது.
“ஹலோ யாரு?”என்று சொல்லவும் அது புது எண்ணாக இருந்தது.
மறுமுனையில் “நான் சிற்பி பேசுறேன் என் போன்ல சார்ஜ் இல்லை. அதான் இங்கே உள்ள ஒருத்தர்கிட்டே இருந்து போன் வாங்கி பேசுறேன்.கிளம்பிட்டீங்கல்ல சொன்ன நேரத்திற்கு வந்துடுங்க”என்றாள்.
நிரஞ்சன் “ம்ம்… கிளம்பி வந்துட்டு இருக்கேன்” என்று பொய் சொன்னான்.அவளோ “சீக்கிரம் வாங்க” என்று கைப்பேசியை வைத்து விட்டாள்.மூவரும் அதிர்ச்சியாக அவனையே பார்த்தனர்.
நிரஞ்சனோ முகத்தை கொஞ்சம் சிரீயஸாக வைத்துக் கொண்டு “அது முக்கியமான விஷயமாம். நான் வந்தே ஆகனும்னு” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “அப்படின்னு சி…சிப்பி சொன்னாள்னு நாங்க நம்பனும் அதானே” என்று சஹா கேட்கவும் நிரஞ்சனோ “டேய் பார்த்தி இவன் வாயை மூட சொல்லுடா எப்போ பார்த்தாலும் எதாவது சொல்லிட்டே இருக்கான். நீங்க ப்ராக்டீஸ் பண்ணுங்க நான் மீட்டிங் போய்ட்டு வந்து ஜாயிண் பண்ணிக்கிறேன்” என்று பேசிக் கொண்டே அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டான்.
நிரஞ்சன் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்த சஹா “கா…காந்தா இந்த நிரஞ்சன் இருக்கிறதைப் பார்த்தால் ஏதோ ஒன்னு சரி…யியில்லைன்னு படுது பார்க்கலாம்” என்றான்.
காந்தனோ “ம்ம்… விடு பார்த்துக்கலாம்” என்றான்.
நிரஞ்சனுக்கு சிற்பியை சந்திப்பதால் மனம் முழுவதும் ஒரு ஆவல் நிறைந்து இருந்தது.அவள் சொன்னது போலவே நேரத்திற்கு சரியான வந்து இருந்தான்.
சங்கீத மேளாவுடைய நிறுவனத்தின் வாயிலில் வந்து தனது வாகனத்தை நிறுத்தவும் அங்கே சிற்பியும் நின்றுக் கொண்டிருந்தாள்.
இவன் வண்டியிலிருந்து கீழே இறங்கவும் “வாங்க நிரஞ்சன் நேரமாகுது” என்று அவனை அவசரமாக அழைத்தவள் “இந்த அரையிறுதிப் போட்டியில் கலந்துக்கிற எல்லா போட்டியாளர்களும் சேர்ந்து தான் கோவாவில் நடக்கப் போற நிகழ்ச்சியை நடத்தப் போறீங்க. அதனால அன்னைக்கு நாம சந்திச்ச போட்டியாளர்களோடு சேர்ந்து உங்க பெர்பாமன்ஸ் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க அப்போத் தான் அவங்ளோட ப்ளஸ் மைனஸ் பத்தி தெரிந்துக் கொள்ள முடியும்னு சாம்பவி மேம் சொன்னாங்க” என்று அவள் பேசிக் கொண்டே வந்தாள்.
அவனோ அவளையேப் பார்த்துக் கொண்டு வந்திருந்தான்.அவனிடம் இருந்து பதில் வராததால் திரும்பி நிரஞ்சனைப் பார்த்தாள்.அவனோ அவளின் மீதான பார்வையை விலக்காமல் இருந்தான்.
அவனின் பார்வையில் ஒருநொடி அப்படியே நின்றவளுக்கு ஏனோ ஒருவிதமான கூச்சம் வந்தது.அவளைப் பார்த்து “சரி நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாதே சிற்பி” என்றான்.
அவனின் பதிலைக் கேட்டவள் எதுவும் சொல்லாமல் நேராக நடக்க ஆரம்பித்தாள்.அவளின் பின்னாலேயே இவனும் சென்றான்.எல்லோரும் அப்பொழுது தான் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் அறையை நோக்கி வந்துக் கொண்டிருக்க ஒவ்வொருவரிடமும் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியவாறு உள்ளே நுழைந்தான்.
அவனுக்கு அருகினில் சிற்பி நின்றுக் கொண்டிருந்தாள்.
முதலில் ஒவ்வொருவராக தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
எல்லா போட்டியின் இசைக்குழுவின் மேலாளர்கள் வந்து இருந்தார்கள்.ஆனால் சங்கீத மேளாவின் மேலாளராக நிரஞ்சன் தான் தற்போது பேச வேண்டியிருந்தது.
அதனால் எல்லோரும் ஒருவிதமான மெத்தனத்தில் இருந்துக் கொண்டனர்.
நிரஞ்சன் அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் தெளிவான பதிலைச் சொன்னா.அதே போல் தனது குழுவினைப் பற்றிய விளக்கங்களையும் சொன்னான்.ஒவ்வொரு குழுவின் இசை நிகழ்ச்சி விவரங்கள் வரவும் சிற்பி சொன்னது போல நிரஞ்சன் பேசி முடித்தான்.
எல்லோருக்கும் மிகுந்த திருப்தியாக இருக்க சந்திப்பு நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து இருந்தது.சிற்பி மற்றவர்களிடம் நின்று மேலும் சில விவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சன் பார்த்து விட்டு அங்கிருந்து நேராக ஒரு ஓரமாக நின்றுக் கொண்டிருந்தான்.எல்லோரும்சென்ற பின் நேராக. சந்திப்பு நடந்த அறையில் தேவையான கோப்புகளை எல்லாம் சரியாக எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தாள்.
நிறுவனத்தின் வாசலுக்கு வரவும் அங்கே நிரஞ்சன் தன்னுடைய இருசக்கர வண்டியில் நின்றுக் கொண்டிருந்தான்.சிற்பிக்கு ஒருவிதமான பதற்றமாக இருந்தது.
நிரஞ்சன் “சிற்பி நான் வேணும்னா உன்னை வீட்டுல டிராப் பண்ணவா?”
அவளோ “வேண்டாம் நானே போய்கிறேன்” என்றாள்.
நிரஞ்சன் “சரி” என்று தன் வாகனத்தை கிளம்பும் பொழுது சிற்பி “நீங்க எதுக்காக இவ்வளவு நேரமா வெயிட் பண்ணுறீங்க?”
அவனோ சிரித்துக் கொண்டே “உனக்காகத் தான் வெயிட் பண்னேன்” என்றான்.அவளுக்கோ சிரிப்பு வந்தது.அதை வெளியே காட்டிக் கொள்ளாதவளைப் போல “இதெல்லாம் எதுக்கு?தேவையில்லாதது தானே?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
நீண்ட பெருமூச்சு விட்டவன் “காரணம் என்னன்னு சத்தமா சொல்லனுமா?” என்று முகத்தை மென்மையாக வைத்துக் கொண்டு கேட்டான்.
சிற்பி கொஞ்சம் பதறியவாறு “இதெல்லாம் சரியில்லை” என்றாள்.
அவனோ “சரியில்லை தான் நீ தான் புரிஞ்சுக்கனும் இல்லைன்னா” என்று சாதாரணமாகச் சொன்னான்.
அவளோ “இப்போ நீங்க கிளம்புறீங்களா?”
“நீ போற வரைக்கும் வெயிட் பண்ணுவேன் அப்புறம் வீடு வரைக்கும் பாலோ பண்ணுவேன்”என்று குறும்பாகச் சொன்னான்.
சிற்பி “என்ன மிரட்டுறீங்களா?”
நிரஞ்சன் “ப்ச்… நான் செய்றதை தான் சொனனேன்.உனக்கு மிரட்டலாகத் தான் தெரிஞ்சால் என்னால ஒன்னும் செய்ய முடியாது” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
அவளோ பதில் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள்.தன் வண்டியை ஓட்டாமல் தள்ளிக் கொண்டு வந்தான்.தலையில் தலைக்கவசத்தை அணிந்துக் கொண்டான்.
அவளுக்கோ என்னசெய்வதென்றே தெரியவில்லை.கொஞ்சம் விரைவாக நடக்க ஆரம்பித்தாள். அவனும் வேகமாக வந்தான்.
சிற்பி நேராக பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.சுற்றும் முற்றும் பார்த்தவன் “என்ன உன் அத்தான் வரலையா?”
அவளோ அவனைப் பார்த்து முறைத்தாள்.அவனோ “வரலையா?” திரும்பவும் கேட்டான். பேருந்து இன்னும் வேறு வராமல் இருந்தது.பேருந்துக்காக நிற்பவர்கள் சிற்பியையும் அங்கே ஓரமாக வண்டியை வைத்து நிற்கும் நிரஞ்சனையும் மாறி மாறி பார்த்தனர்.
இதற்கு மேல் பொறுக்க முடியாமல் சிற்பி அவனின் கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“கொஞ்சம் தொலைவில் உள்ள காப்பி ஷாப்பிற்கு அருகில் வாங்க” என்று அனுப்பியதும் அதைப் பார்த்தவன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று இருந்தான்.
அவன் சென்று ஐந்து நிமிடம் கழித்து சிற்பியும் அவள் சொன்ன காபி கடைக்குச் சென்றாள்.அங்கே அவன் நின்றுக் கொண்டிருக்க சிற்பி “ஏன் இப்படி பண்ணுறீங்க நிரஞ்சன்?”என்று . கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.
அவனோ “நீ தான் என்னை இப்படி நடந்துக்க வைக்கிறே நீ வண்டியில் வந்து இருந்தால் இது நடந்தே இருக்காது” என்றான்.
அவளோ “அது எப்படி நான் உங்களோடு வர முடியும்?”
“ஏன் இதுக்கு முன்னாடி வந்தது இல்லையா?”
“வந்து இருக்கேன் அதுவும் கார்ல எல்லோரும் இருக்கும் போது பரவாயில்லை இப்போத் தனியாக உங்களோடு நான் எப்படி வர முடியும்?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “இப்போ நான் வித்தியாசமாக நினைக்கலை நீ தான் நினைக்கிறே” என்றான்.
இதற்கு மேல் அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று நினைத்தவள் “வாங்க போகலாம்” என்று சொல்லவும் ‘ஹய்யோ ஜாலி’ என்று மனதில் நினைத்தவன் தன் வண்டியை கிளப்புவதற்காக ஆரம்பிக்கவும் பின்னால் வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
இரு சக்கர வாகனம் செல்ல ஆரம்பிக்கவும் நிரஞ்சன் “இன்னைக்கு மீட்டிங் நல்ல படியா முடிஞ்சுதா?”
“ம்ம்… ரொம்ப தாங்ஸ்.நீங்களும் இதுக்காக எனக்கு உதவி செய்து இருக்கீங்க”
“பரவாயில்லை அதுக்கு எதுக்கு தாங்ஸ் நமக்குள்ளே அதெல்லாம் தேவையில்லாதது” என்று சொன்னான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -29
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -31
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு 👏