
திருவிழா ஒரு வழியாக முடிந்து அனைவரும் செந்தாளம்பட்டி விட்டு மறுநாள் கிளம்புவதாக சொல்லிக் கொண்டிருக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் கிளம்புகிறேன் என்று கூறியிருந்தனர். அதற்கு ஏற்றார் போல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்குள் பத்மநாபன் தன் மகளின் திருமணம் பற்றி பேச விழைய கெஜலட்சுமியே பேச்சைத் துவங்கினார்.
“ஏன் பத்து, நம்ம தேஜுக்கு வரன் பாத்து இருக்கீங்களா?”என்று துவங்க
“அதைப் பத்தி தான் பேசலாம்னு இருந்தேம்மா”என்று அவர் உற்சாகமாக சொல்ல
“நல்லதா போச்சு. நம்ம சாரதா கூட உங்க கிட்ட பேசணும் னு இருந்தா இரு அவளை கூப்பிடுதேன்”என்றவர் சடுதியில் சாரதாவை அழைக்கப் போக “அம்மா இருங்க இருங்க” என்று பதறிய பத்மநாபன் கந்தசாமி தேஜாவை அருணுக்கு மணம் முடிக்க கேட்டதை கூறினார்.
“என்னய்யா இப்புடி செஞ்சுபுட்ட?, உன் தங்கச்சி வேற யுகாவுக்கு பேசலாம் னு ஆசையா கேட்டா. நீ என்னடான்னா வாக்கு தந்துட்டேன்ங்கிற”என்று சங்கடமாய் கேட்க
“இல்லை மா சாரதா முன்னவே வேண்டாம்னு சொல்லவும் அந்த எண்ணம் எங்களுக்கு இல்லாம போச்சு. இப்ப கந்தசாமி மச்சானே கேட்கவும் சரினு சம்மதம் சொல்லிட்டேன். ரெண்டு ஆம்பளைங்களா இருந்து கஷ்டப்படுறாங்க நம்ம தேஜ் பொறுமையா பக்குவமா அவங்களை பார்த்துப்பா அதான் மா சம்மதம் சொல்லிட்டேன்”என்றார் விளக்கமாக.
கெஜலட்சுமி யோசித்தார். பத்மநாபன் சொல்வதும் சரியெனப்பட, ‘பிரதன்யாவை யுகாவிற்கு பேசுவோமா?’ என்று கேட்க பத்மநாபனுக்கு அப்போதும் தயக்கம் தான் கூடியது.
“என்ன யோசிக்கிற பத்து. சாரதா மனசுல இப்போதைக்கு உன் மகளுக தான் இருக்குறாளுக. நீ ஒத்துக்கிட்டா அவ ரொம்ப சந்தோஷம் படுவா யோசிச்சு முடிவு பண்ணு, என்ன சுந்தரி எதுவும் பேசாம நிக்குற”என்று பத்மநாபனிடம் துவங்கி சுந்தரியிடம் பேச்சை நிறுத்தினார்.
“எனக்கு ஒண்ணுமில்லிங்கத்த, உங்க மவனை கேளுங்க அதோட எம்மவளுகளை சொந்தத்துக்குள்ள தர தான் நானும் நினைக்கிறேன்”என்றார் சுந்தரி.
“பெறவு என்ன யோசனைடா பத்து, சாரதா கிட்டயும் மருமவன் கிட்டயும் நான் பேசுறேன்”என்று வெங்கடாசலம் கூற “சரிதானுங்க ஐயா”என்றார் பத்மநாபன்.
*******
“யாரைக் கேட்டு பொண்ணு கேட்க நினைச்சீங்க,ஏன் ம்மா இப்படி பண்றீங்க?”என்று தாம் தூம் என்று குதித்தான் யுகாதித்தன்.
“யுகி”என்று அதட்டிய அவனின் தந்தை கிருஷ்ணன் ,”காலம் முழுக்க இப்படியே நீ இருக்க நினைக்கலாம் ஆனா எங்க மகன் இப்படி ஒத்தையில நிக்கறது மனசு வலிக்குது. எங்களுக்கு அந்த வேதனையை காலம் முழுசும் தர நினைக்குறியா?. எங்களுக்காக உன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரமாட்டியா யுகி?”என்று தவிப்புடன் கேட்க
“ப்பா என்னப்பா?!”என்றவனுக்கு குரலே கம்மி விட்டிருந்தது. தாயிடம் அத்தனை சண்டை போடுபவனுக்கு தந்தை முன்னால் பேச்சே வரவில்லை.
“எங்களுக்கும் முடியலைப்பா. நைட்ல கண்ணை மூடினா தூக்கம் வர மாட்டேங்குது. என் பையனுக்கு ஒரு நல்லது செய்யாம போயிடுவேனோன்னு இருக்கு. உன்னை மதிச்சு, உன் உணர்வுகளை மதிச்சு தானே நாங்க இத்தனை வருஷமும் அமைதியா இருந்தோம்.”என்று கேட்க
“ப்பா, ப்ளீஸ்!”என்று தவிப்புடன் சொல்லியவனுக்கு இந்த சூழலை எப்படி சமாளிக்கவென்று தெரியவில்லை.
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ப்பா நான் சொல்றேன்.”
“கொஞ்ச நாள்னா எத்தனை நாள் இல்லை எத்தனை மாசம் நீயே சொல்லு யுகி?”என்று அழுத்தமாக சாரதா கேட்கவும் “அட்லீஸ்ட் ரெண்டு வருஷமாவது குடுங்கம்மா எனக்காக ப்ளீஸ்”என்று இறைஞ்சிய மகனை வெறுமையாகப் பார்த்தனர் பெற்றவர்கள்.
அவர்களுக்குத் தெரியும் இந்த வருஷ கணக்கு எல்லாம் தங்களை சமாதானம் செய்ய கூறும் வார்த்தைகள் என்று. அவனின் தவிப்பும் இழப்பும் அவர்களுக்கு புரிய தான் செய்தது. ஆனால் இழந்ததையே நினைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன். எதுவும் இல்லையே ஏன் இதுவெல்லாம் மகனுக்குப் புரியவில்லை என்ற ஆதங்கம்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கெஜலட்சுமி அழைப்பதாக சுதாகரனின் அம்மா வந்து சொல்லவும் “வரேன் மயினி”என்று அறையை விட்டு வெளியேறினார். பின்னாலேயே கிருஷ்ணனும் சென்று விட தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் யுகாதித்தன்.
‘என்னை விட்டு ஏன்டி போன’என்று தன் தலைமுடியை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
‘ச்சில் மேன் இப்ப என்ன ஆகிடுச்சு யுகா. நான் இருக்கேன் யுகா எப்போதும் உன் கூடவே இருப்பேன். உன்னை ஹைட் பண்ண நான் இருக்கேன் டா. எழுந்துக்கோ உன்னால் முடியும்’எதற்கோ எப்போதோ கவிலயா கூறிய வார்த்தைகள் அவன் உள்ளம் எங்கும் நிரம்பி நின்றது.
“ஹ்ம்ம் எஸ் என் கூட லயா இருக்கா இருப்பா எப்பவும் இருப்பா நான் ஏன் ஃபீல் செய்யணும்”தனக்குத் தானே வாய் விட்டு சொல்லியவன் என்னென்னவோ யோசித்தான். இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்பதே அவன் முடிவாக இருந்தது.
**********
“டாடி எனுக்கு எனுக்கு”என்று மகிழன் இழுக்க மகனைத் தூக்கிக் கொண்டவன் “ஹ்ம்ம் என்ன வேணுமாம் மகிக்குட்டிக்கு இங்கிருந்து வர மனசில்லையா ஸ்கூல் போகணும்டா”என்றிட
“எனுக்கு. ஊஞ்சல் வேணும் ப்பா”என்று அருணின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சலாய் கேட்க அருணுக்கு உருகிப் போனது மகனின் செயலில்.
“ஊஞ்சல் வேணுமா ஆனா நம்ம வீட்டுல இடம் இல்லையேடா”என்று வருத்தமாய் சொன்னவனுக்கு சங்கடமாய் இருந்தது.
“ஹாய் மகி”என்றபடி உள்ளே வந்தாள் பிரதன்யா.
“ஹாய் பெதர்”என்று அவனும் கைக்காட்ட
“உதைப்பேன்டா ராஸ்கல்”என்று மிரட்டியவள்,” என்ன சீரியஸா டிஸ்கஷன் போகுது போல” என்று கேட்க
“நான் டாடி கிட்ட ஊஞ்சல் கேட்டேன்”என்றான்.
“ஆஹான் என்ன சொன்னார் உங்க டாடி”என்று அருணை அவள் பார்க்க
“எதுவும் இல்லை”என்று உதட்டை பிதுக்கினான் சிறுவன்.
“நீ என்ன தனு இந்த நேரம்”என்று மகனை இறக்கி விட்டபடி அருண் கேட்க
“ஊருக்கு கிளம்பிட்டோம் அதான் பாய் சொல்ல வந்தேன்”என்றாள்.
“ஓஓஓ ஓகே ஓகே”என்றவன் “இது என்னோட ஆபிஸ் கார்ட் தனு. அகி கிட்ட தந்திடு. ஏதாவது இன்டர்வியூ வந்தா சொல்றேன்”என்றான்.
“ஏன் எங்களுக்கு எல்லாம் வேலை தர மாட்டீங்களா”என்று கிண்டலாக பிரதன்யா கேட்க
“ஸ்யூரா நீ வர்றதுனா சொல்லு நானே ரெஃபர் பண்றேன்”என்றிட “ஹ்ம்ம் பார்க்கலாம்”என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினாள்.
அதன் பிறகு தான் இந்த திருமண பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
கூடத்தில் அனைவரும் நின்றிருக்க சுதாகரன் திருமணம் பற்றி கூறிய வெங்கடாசலம் “எல்லாரும் இந்த மாதிரியே ஒரு வாரம் முன்னுக்க வந்துடணும். எப்பா கந்தசாமி நீயும் தான் பெரியவன் பத்திரிக்கை தர வருவான் எல்லாரும் வரணும் என்ன அப்பவே பேசி முடிக்கலாம் கந்தா “என்று சூசகமாக சொல்லி முடித்தார் வெங்கடாசலம்.
“நீங்க சொன்னா சரிங்க மாமா”என்ற கந்தசாமி மகனின் கண்டன பார்வையை தவிர்த்தார்.
யுகாவும் தன் பெற்றோரை எதையும் பேசக் கூடாது என்று பார்வையில் மிரட்டிக் கொண்டிருந்தான்.
“எல்லாரும் சாப்டு தான் கெளம்பணும்”என்று சுதாகரன் அம்மா கூறவும் அடுத்தடுத்து பரபரப்பாகினர்.
“நீங்க எல்லாம் உட்காருங்க நாங்க பரிமாறுறோம்”என்று பெரியவர்களை அமர்த்தி விட்டு இளைய பட்டாளங்கள் தான் பரிமாறியது.
“சாயங்காலம் எல்லாம் வீடே வெறிச்சிரும்.”என்று கெஜலட்சுமி கண்கலங்க
“அப்பத்தா அதெல்லாம் லீவ்னா எல்லா பேரையும் இழுத்து புடிச்சு கொண்டாந்துபுட மாட்டேன்”என்று சுதாகரன் சொல்ல அனைவர் முகத்திலும் புன்னகை.
அனைவரும் தங்கள் தொலைபேசி எண்ணை பரிமாற்றம் செய்து கொள்ள வாட்சப்பில் குழு ஒன்றை உருவாக்கினான் சுதாகரன்.
“வெறும் குட் மார்னிங் குட் நைட் போட்டீங்க பிச்சுப்புடுவேன். ஏதாவது விசேஷம்னாலோ இல்ல என்னமும் சேதினாலோ அதுல சொல்லுங்க”என்று கூற அனைவரும் சரியென தலையாட்டினர்.
“அஸ்வினி இது உனக்கு”என்று ஒரு புத்தகத்தை தேஜாவிடம் நீட்டினான் யுகா.
“இது எப்போ வாங்கினீங்க… நான் படிக்கணும் னு நினைசுட்டே இருந்தேன்”என்றவள் மறுக்காமல் பெற்றுக் கொண்டாள்.
“டேம் போன அன்னைக்கு தான். படிச்சுட்டு சொல்லு”என்றவன் விடை பெற்றான் தன் பெற்றோருடன்.
அருணும் அதன் பிறகு தன் குடும்பத்துடன் பயணிக்க தேஜஸ்வினி மீண்டும் ரயில் பயணத்தில் இணைந்தாள்.
“ஹாய் பிரசாத் திஸ் இஸ் ப்ரதன்யா ஷேவ் மை நம்பர் இஃப் யூ வான்ட்”என்று தன் எண்ணில் இருந்து அருணுக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு உறங்கிப் போனாள் ப்ரதன்யா.
அருண் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனும் பதிலுக்கு ஒரு ஹாய் போட்டு விட்டு பயணிக்க கந்தசாமியும் மகிழனும் உறக்கத்தில் இருந்தனர்.
நாட்கள் கடந்திட இளசுகளின் அரட்டை புலனத்தில் தொடர்ந்து கொண்டு தானிருந்தது.
“டேய் பசங்க எல்லாம் உங்க சட்டை சைஸ் அனுப்பி வைங்கடா சேந்தாப்டி தான் போடுறோம் என்ன கலர்னு பொறவு அனுப்பி வைக்கிறேன். பொம்பளைப்புள்ளைங்களு க்கு சேலை அப்பத்தா தான் எடுக்குமாம் சொல்லிருச்சு. “என்று ஒரு செய்தியை சுதாகரன் போட அனைவரும் சட்டை வண்ணம் அதற்கான செலவு எல்லாம் பற்றி பேசத் துவங்கிவிட்டனர்.
“டேய் ஆளாளுக்கு ஒரு கலர் சொன்னா எப்படிடா பேசாம மாப்ளை கணக்கா எல்லாரும் பட்டு சட்டை எடுத்துடலாம்”என்று அருண் யோசனை கூற
“அதுசரி மாப்பிள்ளை யார் னு தெரியாம போறதுக்கா சுதா எதுக்கும் உஷாரா இருந்துக்கோடா”என்று கேலி வேறு செய்ய, அங்கே கலகலப்பிற்கு பஞ்சமில்லை.
சுதாகரன் திருமண நாள் நெருங்கி வந்திருக்க மீண்டும் செந்தாளம்பட்டிக்கு பயணம் செய்தனர் அனைவரும்.
இடைப்பட்ட நாட்களில் அனைவரும் உறவைத் தாண்டி நட்பு ரீதியான பேச்சு வார்த்தைகளில் நன்றாகவே நெருங்கி இருக்க அனைவரும் சொல்லி வைத்துக் கொண்டு தான் கிளம்பி இருந்தனர். இம்முறை அருண்பிரசாத் பத்மநாபன் குடும்பத்துடன் ரயில் பயணத்தில் இணைந்து கொண்டான்.
“ஹாய் பெதர்”என்று மகிழன் சிரிக்க “வந்ததும் வம்பு பண்ணாதடா”என்று மகியை கண்டித்தவள் “நீங்க தானே சொல்லித் தர்றீங்க அவனுக்கு”என்று அருணிடம் பாய்ந்தாள்.
“சத்தியமா இல்லை. நீ வேணும்னா கேளேன்”என்றவன் புன்னகைக்க பிரதன்யா மனம் அவன்பால் சாய்ந்தது. ஏனோ அருணின் மீது அவளுக்கு ஈர்ப்பு தோன்றுவதை அவளால் தவிர்க்க இயலவில்லை. இந்த பயணத்தில் அவனிடம் தன் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என்று எண்ணி தான் தங்களோடு சேர்ந்து பயணிக்க அழைத்தாள். பத்மநாபனுக்கும் கந்தசாமியிடம் பேச வேண்டியதிருக்க அவரும் வரும்படி அழைத்தார்.
இன்னும் அருணுக்கு தேஜாவை பேசி முடிக்கப் போகும் விஷயம் பிரதன்யாவிற்கு தெரிந்திருக்கவில்லை. பிள்ளைகளிடத்தில் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர் பத்மநாபன் திரிபுரசுந்தரி இருவரும்.
யாருக்கு யாரோ இணைவது யாரோ???
….. தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1

