
அத்தியாயம்-13
அனைவரும் மீண்டும் அவரவர் வீடு திரும்ப, அகர்ணனுடன் வீடு செல்லவிருந்த ப்ரியாவின் கரம் பற்றிய விஷ்வேஷ் நிறுத்தினான்.
தன்னவனைத் திரும்பிப் பார்த்து புன்னகையுடன் அவள் புருவம் ஏற்றி இறக்க, அகர்ணனைப் பார்த்தவன், “நானே ட்ராப் பண்றேன்பா” என்றான். அதில் சிரித்துக் கொண்ட அகர்ணன் தோழியைப் பார்க்க, நாணத்தோடு தலையசைத்தாள்.
ஜான்வி மீண்டும் “அஹம்..அஹம்” என்று இரும,
தன் முன்னே பாதையை பார்த்த விஷ் “எதுமே இல்லையே ஜான்” என்கவும் பக்கென சிரித்துவிட்டனர் அனைவரும்.
அவள் தன்னை கேலி செய்துள்ளாள் என்று புரிந்துக் கொண்டவன், “அடியே உன்னை..” என்று அவளைத் துரத்த,
“போடா மாங்கா” என்று ஓடியவள் துருவன் பின்னே நின்று அவனை இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி சுற்றிக் கொண்டிருந்தாள்.
“அடியே.. தலை சுத்துது விட்டுத்தொலை” என்று துருவன் கதறியப் பின்பே அவனை விட்டவள் விஷ்வேஷிடம் வசமாக சிக்கி இரண்டு கொட்டுகளை வாங்கிக் கொண்டு ‘டாம் அன்ட் ஜெரியில்’ வருவது போல இடிந்து விழுந்த கண்களை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
சிரிப்போடு ஒவ்வொருவராக விடைபெற, ராஜ் சிறு புன்னகையுடன் விடைபெற்றான். அடுத்த இருந்த துருவன் அகநகை அகர்ணன் மற்றும் ஜேன்ஸியில் நால்வரும் நடக்க, அகாவின் முகத்திலிருக்கும் சோகம் துருவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
நாளை இதுகுறித்து பேசியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவன், “ஓகே அகர்ணன்.. நாளைக்கு பார்க்கலாம். பாய் அகா..” என்று அகர்ணனிடம் கைக்குலுக்கி விட்டு தோழியை தோளோடு அணைத்து விடுவித்துச் சென்றான்.
தன் வீடு வரவும் அகாவைப் பார்த்த அகர்ணன், சட்டென அவளை அணைத்துக் கொள்ள, பாவை விழிகள் விரிய திடுக்கிட்டுப் போனாள்.
சில நிமிடங்கள் எந்த பேச்சும் இல்லை.. அப்படியே இருவரும் நின்றது நின்றபடி இருக்க, அங்கு ப்ரியா தங்கி இருக்கும் வீட்டை அடைந்த இருவரும் உள்ளே நுழைந்தனர்.
தன்னவனுக்காக குளம்பி போட்டுக் கொண்டு வந்து தந்தவள் அவன் புஜத்தினை கட்டிக் கொண்டு அருகே அமர்ந்து தலைசாய்க்க, தானும் அவள் தலைமேல் தன் தலையை சாய்த்துக் கொண்டான்.
“அத்தை மாமா எங்க?” என்று வழமைப்போல் அவன் கேட்டுவிட்டு பின்பே தற்போது அவள் தனக்கு அத்தை மகள் இல்லை என்று உரைக்கப் பெற்றவனாக நாக்கை கடித்துக் கொள்ள,
“அதுக்குள்ள உறவு முறைலாம் வச்சுட்டீங்களே” என்றவள், “அவங்க ஊர்ல இல்ல இருக்காங்க. நான் இங்க தனியா தானே தங்கி இருக்கேன்” என்றாள்.
“அ.. ஆமாடா.. மறந்துட்டேன்” என்று அவன் சமாளிக்க, அதில் சிரித்துக் கொண்டவள் மீண்டும் அவன் தோள் சாய்ந்தாள்.
இருவரிடையேயும் மௌனம் மட்டுமே இசைபாட, அதை கலைத்த பெண், “போன ஜென்மத்துல நான் உங்களை ரொம்ப அலைய விட்டிருப்பேன்னு நினைக்குறேன் லவ்வுக்காக. அதான் இந்த ஜென்மத்துல நீங்க என்னை பயங்கரமா அலையவிட்டுட்டீங்க” என்க, அவள் கூற்றில் சிரித்துக் கொண்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நிஜமாவே தான் சொல்றேன்.. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு கிடைப்பது அவ்வளவு சீக்கிரம் நம்மள விட்டுப் போகாதுல?” என்று உணர்வு பூர்வமாகக் கூற,
கோப்பையை வைத்துவிட்டு மாது அவள் கன்னம் பற்றினான்.
“எப்பவுமே உன்னை விட்டுப் போகனும்னு யோசிக்கவே மாட்டேன்டா” என்று கூறியவன், ‘அப்படி யோசித்ததும் இல்லை’ என்று மனதோடு கூறிக் கொள்ள, அவனையே புன்னகையோடு பார்த்தாள்.
அவள் பார்வையில் ஈர்க்கப்பட்ட காதலனவன், காதல் பித்தனாக அவதாரம் எடுத்திட, மெல்ல கண்கள் மூடி அவள் இதழ் நோக்கி குனிந்தான்.
பாவையின் இமையும் படபடப்போடு மூடிக் கொள்ள, கரங்கள் அவன் கரத்தோடு அழுந்த கோர்த்துக் கொண்டன.
அவள் இதழ் வரை தடையின்றி நெருங்கியவனுக்கு ஏனோ அதற்குமேல் நெருங்க இயலவில்லை!
இத்தனை நாள் அத்தை மகள் என்ற உரிமையோடு நெருங்கிப் பழகி காதலை வளர்த்துக் கொண்டவன், அவளை நெருங்க அந்த அத்தை மகள் என்ற உறவு தேவையாகப்பட்டது போலும்!
‘நீ தான் எனக்கு என்பது இறைவன் விதி! அப்போ நீ யாரா இருந்தா என்ன? அத்தை மகளா இருந்தா என்ன என்னை காதலித்த காதலியா இருந்தா என்ன?’ என்று தான் இத்தனை நேரம் அவன் எண்ணம்!
ஆனால் அவனது ‘அத்தை மகள்- மாமன் மகன்’ என்ற பந்தம் ஏனோ அவ்விடத்தில் காணாமல் போன உணர்வு எழுந்தது அவனுக்கு. அந்த அழகிய பந்தத்தை ரசித்து ரசித்து மேலும் அதில் மெருகூட்டியக் காதல், அவளது ‘மாமா’ என்று நாணத்தில் காற்றோடு லயித்து வரும் அழைப்பு என்று யாவும் தற்போது இல்லை என்ற உண்மை அவனுக்கு அப்போதே உறைத்தது.
அவளோடு உரிமையாக வம்பு வளர்த்தவைக் கண்முன் வந்துபோக, படீரென்று கண் திறந்தவன் அவள் கன்னத்திலிருந்து கரமெடுக்க, சட்டென பாவையும் விழி திறந்தாள்.
அவனைப் புரியாமல் பார்த்தவளுக்கு ‘என்ன?’ என்று கேட்குமளவு நாணம் இடம் கொடுக்கவில்லை. சற்றே ஏமாற்றத்தின் சாயல் அவள் முகத்தில் கண்டவன், சிறு புன்னகையுடன் அவள் நெற்றி முட்டி, “கல்யாணத்துக்கு அப்பறம்” என்று கூற,
கிளுக்கி சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டாள்.
அங்கு அகர்ணன் வீட்டுக் கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்த அகநகையிடம், “சொல்லு அகா.. நீ ராஜ் சார்கிட்ட சொன்ன அந்த லவ்வர்.. நா..ன் தானே?” என்று அவன் வினவ,
தலையை தாழ்த்தியபடியே ஒரு பெருமூச்சு விட்டவள், ‘ஆம்’ என்பதுபோல் தலையசைத்தாள்.
உள்ளமெல்லாம் இனித்தது அவனுக்கு.. அவனுடைய எத்தனை வருடக்காதல்.. அவளாகவே நேசிப்பதை அறிந்தால் மகிழாமல் இருப்பானா?
“என்கிட்டயே சொல்ல என்ன உனக்கு? இதை நி..நினைச்சா இத்தனை நாள் சோகமா இருந்த?” என்று அவன் வினவ,
மெல்ல நிமிர்ந்தவள் விழிகளில் நீருடன், “என் சோகத்தின் காரணம் இந்த காதல் தான்.. ஆனா நீங்க ஒத்துக்கமாட்டீங்கனுலாம் எனக்கு பயமில்லை. இன்னும் சொல்லப்போனா எனக்கு முன்னவே நீங்க என்னை விரும்புறதா தான் உணர்ந்தேன்..” என்றாள்.
“அப்றம் என்னடா?” என்று அவன் வினவ,
கண்ணீரோடு மீண்டும் தலை குனிந்தாள்.
அவள் அருகே அமர்ந்தவன், அவள் முகம் பற்றி நிமிர்த்த, அவனை தாவி அணைத்துக் கொண்டவள், “நீங்க.. நான்.. சேரமுடியாது” என்று விக்கி விக்கி அழுதாள்.
அவள் பேச்சேதும் புரியாமல் அவள் முதுகை வருடிக் கொடுத்தவன், “ஏன்டா? என்னாச்சு? ஏன் இப்படி சொல்ற?” என்று வினவ,
“இ..இது கைசேராத காதல் கதை அகர்.. உங்க கிட்ட சொல்லவே கூடாதுனு தான் இருந்தேன்.. ஆனா நீங்களே கண்டுபிடிச்சு கேட்ட பிறகு சொல்லாம இருக்க முடியலை” என்று அழுதாள்.
“எனக்கு ஒன்னுமே புரியலை அவி.. என்னதான் பிரச்சினை? சொல்லுமா.. என்னால முடிஞ்சளவு அதை மாத்த நான் முயற்சி பண்றேன்” என்று அவன் கூற,
மறுப்பாக தலையசைத்தவள், “அ..அது உங்களால முடியாது அகர்..” என்றாள்.
அவனுக்கு சற்றே சினம் துளிர்க்கவும் “ஏம்மா அப்டி சொல்ற?” என்று ஆற்றாமையாக வினவியபோது அவள் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்தாள்..
அழைத்தது விஷ்வேஷ் எனக் கண்டவுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றவள் ‘ஹலோ’ என்பதற்குக் கூட இடமளிக்காமல் “அகா சீக்கிரம் வா” என்றான்.
“எ..எங்கடா?” என்று கேட்டபடி அவள் எழ, “நீ அகர் வீட்டுல தானே இருக்க? ஜேன்ஸி அப்படிதான் சொல்லிச்சு. கீழ வா. நான் கீழ தான் இருக்கேன்” என்று அவன் கூற,
“இ..இரு வரேன்” என்றாள்.
“சீக்கிரம் வா.. என்கிட்ட ஒரு சர்பிரைஸ் இருக்கு” என்று அவன் கூற,
“வரேன்டா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள் பெருமூச்சு ஒன்றை விட்டாள்.
அவளையே பரிதவிப்போடு அகர்ணன் நோக்க, “நான் போகணும்” என்றாள்.
அவள் கரம் பற்றியவன், “எதுவும் யோசிக்காதடா. என்ன ஆனாலும் உன்னை நான் விட்டுட மாட்டேன்” என்று கூற,
“நீங்க விடமாட்டீங்கனு தெரியும்” என்றவள் ஒரு கோணல் புன்னகையுடன் சென்றுவிட, தன் பால்கனி வழியே அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
விஷ்வேஷுடன் புறப்பட்டவள் பார்வையும் கண்ணாடி வழியே அவனையே வட்டமிட, கண்களை இறுக மூடி வண்டியில் தலைசாய்த்துக் கொண்டாள்.
“என்னாச்சு அகா?” என்று விஷ் வினவ,
“ப்ளீஸ் எதும் கேக்காத விஷ்.. நானே பிறகு சொல்றேன்” என்றாள்.
அவளிடம் ஏதோ சரியில்லை என்று புரிந்துகொண்டவன், அவள் தலையைப் பரிவோடு கோதிவிட்டு அவள் வீட்டை அடைந்தான்.
துருவன் மற்றும் ஜான்விகாவும் அங்கு இருக்கவே ஏதோ முக்கியமான விடயத்திற்காகத்தான் விஷ் தன்னை அழைத்திருக்கின்றான் என்று புரிந்துகொண்டவள் சென்று புத்துணர்ச்சி பெற்று வந்தாள்.
நால்வரும் சேர்ந்து அங்கேயே உணவு உட்கொள்ள, “என்ன அகா.. உன் வானரப்படை கூடிடுச்சா? இன்னிக்கு நைட்டு ஆர்ப்பாட்டம் தாங்காதே” என்று இளா கேலி செய்தாள்.
“ஏ போலி டாக்டர்.. ஊசி போட்டுவிட்ருவேன்” என்று விஷ் அவளை வம்பிழுக்க,
மூக்கு விடைக்க அவனை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டவள் கண்டு யாவரும் சிரித்தனர்.
உணவு வேளை முடிந்ததும் அகாவை இழுத்துக் கொண்டு ஜானும் துருவனும் மேலே சென்றனர்.
விஷ்வேஷ் அன்புக்கரசியிடமிருந்து எதையோ கேட்டு வாங்கிக் கொண்டு மேலே வர, “என்னடா?” என்று புரியாத பாணியில் வினவினாள்.
“ஆர் யூ ரெடி கைஸ்” என்று விஷ் வினவவும் மூவருமே ஒன்றும் புரியாது விழித்தனர்.
“என்னடா உன் ஆளு முத்தம் கித்தம் எதும் கொடுத்து சித்தம் கலங்கிப் போச்சா?” என்று ஜான் வினவ,
“ஏ லூசு.. நம்ம திரும்ப நம்ம உலகத்துக்கு போறதுக்கான வழிய நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்றான்.
மூவரும் ஒன்றுபோல “என்னடா சொல்ற?” என்று அதிர,
“இன்னிக்கு என்ன தேதி?” என்றான்.
மூவரும் சற்றே யோசிக்கவும் பொறுமை இல்லாதவன், “டிசெம்பர் 31. இன்னும் கொஞ்ச நேரத்துல நியூ இயர்” என்றான்.
“அதுக்கும் நாம தப்பிக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று துருவன் வினவ,
“ப்ரியா கூட போயிருந்தப்போ அவ கிளம்பும்போது நியூ இயர் வழக்கம் போலயானு கேட்டா. அப்போ தான் நாளைக்கு ஜனவரி ஒன்னுனு எனக்கு புரிஞ்சுது. அப்ப அவளே ஜனவரி பத்து உங்க இருபத்தி ஆறாவது பிறந்தாள் தானேனு கேட்கவும் என் மைண்டுக்குள்ள ஏதோ மணியடிச்ச ஃபீல். எனக்கு வரப்போற பிறந்தநாளில் என் வயசு இருபத்தி ஆறுனு அவ சொல்றா.. அப்போ என் வயது அம்மா அப்பா உடன் பிறந்த அக்கானு எதுவும் மாறாதபோது நான் பிறந்த வருஷமும் மாறாம இருக்குமோனு ஒரு சந்தேகம் வந்தது. வீட்டுக்கு வந்து என் பர்த் சர்டிபிகேட் கேட்டு வாங்கினேன். நான் உண்மையில் பிறந்த வருடமான 1998 தான் இருந்தது. உங்க வீட்டுலயும் கேட்டு வாங்கிப் பார்த்தேன்.. உங்களோட உண்மையான பிறந்த வருடம் தான் இருந்தது. அப்போ நம்ம இங்கே வந்த அதே நியூஇயர் இரவு தான் நம்ம திரும்பிப் போறதுக்கான வழியும்னு புரிஞ்சது” என்று உற்சாகத்தோடு பேசினான்.
துருவனும் ஜான்விகாவும் துள்ளி குதித்து அவனை அணைத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அகாவுக்கு மகிழ்வதா வருந்துவதா என்றே குழப்பமாக இருந்தது.
தோழர்கள் மூவரும் அவளைப் புரியாத பார்வை பார்க்க,
“ஏ அகா.. நீ ஏன் கொஞ்ச நாளாவே சோகமாவே இருக்க?” என்று துருவன் கேட்டான்.
“நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. எப்பபாரு வெங்கலகுண்டால போட்ட கூலாங்கல் போல லொட லொடனுட்டே இருப்பா. இப்ப கொஞ்ச நாளா பேச்சையே காணும்” என்று ஜான் வினவ,
“அகர்ணன் வீட்டிலிருந்து கூட்டிட்டு வரும்போதும் கூட சோகமா தான் இருந்தாடா” என்று விஷ் கூறினான்.
பாவை ஏதும் பேசாது கல் விழுங்கியாக நிற்க, “நான் சொல்லட்டுமா?” என்றபடி அகர்ணன் வந்தான்.
அவன் குரல் கேட்டு சட்டென திரும்பியப் பாவை அவனை அங்கு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கதறலுடன் அவனிடம் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டவள், “நான் உங்கள விட்டுப் போகப்போறேன்.. நிரந்தரமா” என்றாள்.
“ஏம்மா இப்படி சொல்ற?” என்று அவன் வினவ,
அவனைப் பார்த்து, “நான் சொல்றேன்.. நீங்க நம்புவீங்களானு தெரியாது.. ஆனா உண்மை அதுதான்.. நான் இந்த வருடத்தை சேர்ந்தவளே இல்லை. நாங்க எல்லாருமே 2024ல இருக்க வேண்டியவங்க. எப்படினே தெரியலை இந்த வருடத்துக்கு டைம் டிராவல் பண்ணி வந்திருக்கோம். இ..இப்போ..கொஞ்ச நேரத்துல திரும்ப எங்க உலகத்துக்குப் போ..போகப்போறோம்” என்று கூறி அவனை மீண்டும் இறுக அணைத்துக் கொண்டாள்.
நண்பர்கள் மூவருமே அவர்களைக் குழப்பமாகப் பார்க்க, “இதுபோல நான் கேள்விபட்டதே இல்லை” என்று அகர் கூறினான்.
‘நீயும் என்னை நம்பவில்லையா?’ என்பதைப் போல் கண்ணீர் ததும்ப பாவை அவனைப் பார்க்க,
அவள் முகம் தாங்கியவன், “அ..ஆனா உன்னை நம்பாம இருக்க முடியலை” என்றான்.
அந்த வார்த்தையில் மொத்தமாக உருகியவள் மற்றது மறந்து வெடித்து அழ, அனைவரும் அவள் அழுகையை வேதனையோடு பார்த்தனர்.
“நான் ஏன் இங்க வரணும்? ஏன் உங்கள பார்க்கணும்? உங்க மேல எதுக்கு எனக்கு காதல் வரணும்? இப்ப எதுக்கு உங்கள விட்டு திரும்ப போகணும்? இதெல்லாம் எதுக்கு நடந்தது?” என்று அவள் கண்ணீர் வடிக்க,
“நம்ம புரிஞ்சுக்க” என்று துருவன் கூறினான்.
யாவரும் அவனை நிமிர்ந்து பார்க்க, “நம்ம அன்னிக்கு ராத்திரி பேசினோமே.. ஐம்பது வருஷம் ஆனாலும் ரேப், ராபரி, கரெப்ஷன், கேஸ்டிஸம் எதுவும் மாறவே இல்லைனு.. அதனால எதெதெல்லாம் மாறும் எதெல்லாம் மாறாதுனு நமக்கு உணர்த்த தான் இந்த நாடகம். நான் சொன்னது போல திருட்டு மாறல.. ஆனா திருடும் முறை மாறிருக்கு. அப்றம் மதம் மற்றும் இனவெறி, வன்புணர்வு, கலவரம் இதெல்லாம் இன்னும் மாறாத இதே காலத்தில் ஆன்மீகம், தாய்ப்பாசம், அப்றம் நம்ம கண்ணால பார்த்த விவசாயிக்கும் நிலத்துக்குமான அந்த பந்தமும் மாறாம இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா காலத்துக்கு ஏற்ற விஞ்ஞான வளர்ச்சி தான் மாறி புது பரிணாமத்தை அடைஞ்சிருக்கே தவிர, உணர்வுகளோடு தொடர்புடைய எதுவும் மாறவும் இல்லை மாறாவும் மாறாது. ஏன்னா இது மனிதன் ரத்தத்தோட இல்லை.. மனித மனதோடு ஊறிப்போன விஷயம்” என்று கூறினான்.
அவன் பேசிமுடித்த நொடி விஷ்வேஷ் கையிலிருந்த நால்வரின் பிறப்புச் சான்றிதழும் அவன் கைவிட்டு பறந்து அவர்கள் முன் வந்த காற்றில் மிதந்து நிற்க, யாவரும் அதை ஆச்சரியமாக பார்த்தனர்.
அதிலிருந்து அனைவரது கண்களையும் கூசுமளவு பெரும் வெளிச்சம் ஒன்று ஏற்பட, அந்த காகிதம் அவர்கள் நால்வரையும் தன்னுள் இழுத்துக் கொண்டு மீண்டும் காலம் கடந்து பயணித்தது!

