
விழி -1
“ஏய்! ஒரு டைம் சொன்னா உனக்குப் புரியாதா? திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருப்பாங்களா? என்னடி நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், உன் இஷ்டத்துக்குப் பேசிகிட்டே இருக்க? தினமும் இதே ஒரு வேலையா வச்சிட்டு இருக்க?
நானும் பார்க்குறேன், இந்தக் கல்யாணப் பேச்சு எடுத்ததுல இருந்து ஓவரா ஆடிட்டு நிக்கிற… நீ என்கிட்ட வந்து உன்னோட விருப்பத்தைச் சொல்லும்போதே எனக்கு விருப்பம் இல்ல. நான் வேற ஒருத்திய விரும்புறேன்னு தெளிவா சொல்லிட்டேன்.
திரும்பவும் வீட்டுல உனக்கும், எனக்கும் கல்யாணம் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க மாமா அப்படின்னு வந்து பேசிட்டு இருக்க. சரி இதோட நிறுத்துவேன்னு பார்த்தா அவ சரியில்ல. அவ அப்படி, இப்படி. பணத்துக்காக உங்க கூட சுத்துறான்னு சொல்லிட்டு இருக்க… கேவலமா இல்ல, உனக்கு இப்படிப் பேசுறதுக்கு…
விரும்புறனு வந்து சொன்ன, அது உன்னோட தனிப்பட்ட விஷயம். அதுல நான் தலையிடல. எனக்கு விருப்பமில்ல, அப்படின்றதையும் நான் சொல்லிட்டேன்… என் மனசுல வேற ஒருத்தி இருக்கான்னு தெரிஞ்சும் வீட்ல பேசிட்டாங்கன்னு சொல்ற…”
“வீட்ல இருக்கவங்க கிட்டச் சொல்ல வேண்டியது தானே, நான் வேற ஒருத்திய விரும்பறேன்னு…”
“என்கிட்ட வந்து பேசும்போது நான் சொல்லிடுவேன் சரியா? என்கிட்ட வந்து கல்யாணத்தப் பத்திக் கேட்டாங்கன்னா, நான் என் மனசுல என்ன இருக்கோ அதைச் சொல்லிடுவேன். இந்த செகண்ட் வரைக்கும் யாரும் என்கிட்ட வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லல. அதனாலதான், நான் அமைதியா போயிட்டு இருக்கேன்… உனக்கும், தமிழுக்கும் கல்யாணம் பேசலாம்னு இருக்கோம்னு அவங்க சொல்லும்போது என் மனசுல இருக்கறத நான் சொல்லிடுவேன்.
இப்ப அதைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆனா எனக்குக் கல்யாணம்னு வரும்போது எனக்கு அவசியம் இருக்கு, நான் சொல்லுவேன். அதை விட்டுட்டு என் மனசுல ஒருத்தி இருக்கான்னு சொன்னதுக்கு அப்புறமும் அமைதியாகப் போகாம திரும்பத் திரும்பப் பின்னாடி வராத… ஏதாவது கேட்டுடப் போறேன்…
ஃபர்ஸ்ட் விரும்புறன்னு சொன்ன. சரி சொன்னா புரிஞ்சிப்பனு சொல்லி அமைதியா விட்டா, இப்ப நீ லவ் பண்ற பொண்ணு சரி இல்ல மாமா… அந்தப் பொண்ணு அப்படி மாமா, இப்படி மாமா பணத்துக்காக தான் உன் பின்னாடி வருதுன்னு சொல்லிட்டு இருக்க… என்னதான் நெனச்சிட்டு இருக்க?”
“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் மாமா உண்மை…”
“ஒரு அடி அடிச்சேன்னு வையேன்” என்று சொல்லிக் கொண்டே அவளது தாடையில் கன்னம் பழுக்க ஒரு அறை விட்டிருந்தான் ஆருத்ரன்.
“மாமா…” என்று தாடையில் கை வைத்துக் கொண்டே அதிர்ச்சியாக, ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருக்கும் ருத்ரனைப் பார்த்தாள்.
அவன் நாக்கை மடக்கி விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, “இதுக்கு மேல இதப் பத்திப் பேசினா என்ன செய்வேன்னே தெரியாது” என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பி ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.
அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றாள். நம் கதையின் நாயகி தமிழ்விழி.
‘நான் சொன்னா புரிஞ்சுக்கவே மாட்ற மாமா. நீ சொன்ன மாதிரி தான்… என் மனசுல இருக்க விருப்பத்தை உன்கிட்டச் சொன்னேன். என்னைப் புடிக்கலைன்னு சொன்ன, நான் ஒதுங்கிட்டேன். ஆனா நீ விரும்புற பொண்ணு நல்ல பொண்ணு இல்ல மாமா… அந்தப் பொண்ணு உன்னை விரும்பவும் இல்ல. அவ உன்னோட சொத்துபத்துக்காகத் தான் உன்ன விரும்புறா. இத சொன்னா உனக்குப் புடிக்கல. நான் என்னதான் பண்றது?
வீட்ல உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறாங்க. இதைத் தடுக்குறதுக்கு எனக்கு ஒரு செகண்ட் ஆகாது. தடுத்துட்டு நான் போயிட்டே இருப்பேன். ஆனா நீ விரும்புற பொண்ணு உன்னோட வாழ்க்கையில வந்தா உன்னோட வாழ்க்கை? அந்தப் பொண்ணு உன்னை உண்மையா விரும்புனா கூடச் சரி…
உனக்காக நான் விட்டுக் கொடுத்துட்டு அமைதியா விலகிடுவேன். சொத்து பத்து எனக்கு முக்கியம் இல்ல மாமா. அந்தப் பொண்ணு உன்னை உண்மையா விரும்பி இருந்தா அத்தையையும், தனாவையும் கூட நான் கையோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவேன்.
ஆனா உன்னோட நிலைமை? கல்யாணத்துக்கு அப்புறம் அந்தப் பொண்ணு பணத்துக்காக உன்னை விரும்புதுனு தெரிஞ்சா… யோசிச்சாலே எனக்கு நெஞ்செல்லாம் பதறுது மாமா…’ என்று தனது மனதிற்குள் புழுங்கிக் கொண்டு, அவன் அடித்த அடியில் ஏற்பட்ட எரிச்சலில் தனது தாடையை ஒரு தரம் தடவி விட்டுக் கொண்டே வீட்டிற்கு நடந்தாள்.
அவள் கண்கள் கலங்கி வீட்டிற்கு வருவதைப் பார்த்த அவளுடைய அம்மா, “தமிழ் என்னடி ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,
எங்கு தன் அம்மா தன்னுடைய கன்னத்தைப் பார்த்தால் தெரிந்து விடுமோ? என்ற பதட்டத்தில், “ஒன்னும் இல்லம்மா… வெளியில போயிட்டு வந்தது ஒரு மாதிரி இருக்கு” என்று தனது சேலைத் தலைப்பால் வியர்வையைத் துடைப்பது போல் தாடையை மறைத்துக் கொண்டே வீட்டிற்குள் புகுந்தாள்.
அவரும், ‘சரி, புள்ள வெளியில போயிட்டு வந்ததால ஒரு மாதிரி இருக்கு போல’ என்று எண்ணி விட்டுத் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினார்.
உள்ளே அவளுடைய அறைக்குச் சென்ற தமிழ், கண்ணாடி முன் வந்து நின்று தனது தாடையைப் பார்த்துவிட்டு, ‘ஓரளவுக்குப் பார்த்தால் தெரிவது போல் தான் இருக்கிறது’ என்று எண்ணினாள்.
அவளது அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள். யாரும் இல்லை என்றவுடன் கிச்சன் சென்று ஐஸ்க்யூப் எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் வேகமாக நுழைந்தாள்.
தாடையில் ஐஸ்க்யூப் ஒத்தடம் வைத்து எடுத்தாள். எரிச்சலில் ஐஸ்கட்டியை வைத்த உடன் சிறிது முனகச் செய்தாள்.
பிறகு, தன் மனதைத் தேற்றிக்கொண்டு, ‘இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி ஆக வேண்டும். என்னுடைய மாமாவின் வாழ்க்கையைச் சரி செய்தாக வேண்டும். அவர் எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், என் மாமாவை உண்மையாக விரும்பாத ஒருத்திக்கு, அவர் கிடைக்கக் கூடாது’ என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டாள்.
இவள் எடுத்த சபதம் இன்னும் ஐந்து நாள்களில் தவிடுபொடி ஆகப்போகிறது என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
சிறிது நேரத்தில் அவளது அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டவுடன் வேகமாக வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள்.
தன்னுடைய தங்கை நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன காயு…” என்றாள்.
“கதவு திற” என்றாள். “சரி…” என்று கதவைத் திறந்தவுடன் அவளுடைய தங்கை, காயு என்னும் காயத்ரி உள்ளே வந்து தன் அக்காவைக் குறுகுறுவெனப் பார்த்துவிட்டு, “இதே பொழப்பா வச்சுட்டு இருக்க. அவ்வளவுதான் நானும் சொல்லுவேன். அவர் வேணாம்னு சொல்லிட்டாரு. வேற ஒரு பொண்ண விரும்புறேன்னு சொல்லிட்டாரு. எதுக்குத் தேடித் தேடிப் போய் அந்த மனுஷன்கிட்ட திட்டு வாங்கிட்டு வர…
உன் கன்னம் நல்லா சிவந்து போய் இருக்கு. “நீ என்னதான் ஒத்தடம் கொடுத்தாலும், அப்படியே சரி ஆயிடும்னு நெனச்சிட்டு இருக்காத. அம்மா அப்பா பாத்தா எவ்ளோ பெரிய பிரச்சனை ஆகும்னு யோசிக்கவே மாட்ட இல்ல. அவரு என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
எனக்கும் மாமா தான் அவரு. நானும் மரியாதை கொடுத்து தான் பேசுறேன். அவரை நான் இங்க தரக்கொறவா பேசல. அதுக்காக என் அக்காவை விட்டுக் கொடுத்துட்டு இருக்க முடியாது, புரியுதா? எந்தெந்த இடத்தில் தன்னோட தன்மானத்தை விட்டுக் கொடுக்கணும்னு இல்ல… இவர்கிட்ட எல்லாம் உன்னோட தன்மானத்தை இழந்து நிக்கணுமா நீ?”
“ஏய் லூசு மாதிரிப் பேசாத…”
“அக்கா…”
“அமைதியாப் போ, நான் என் தன்மானத்தையும் இழக்கல, எதையும் இழக்கல சரியா? அந்தப் பொண்ணு மாமாவ உண்மையாகவே விரும்பி இருந்தா, அவர் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சி விலகி இருந்திருப்பேன். ஆனா, அந்தப் பொண்ணு சரி இல்லன்னு உன்கிட்டயும் சொல்லிட்டேன். இன்னும் என்ன தாண்டி உனக்குப் பிரச்சனை?”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. உனக்கு என்ன பிரச்சனைனு தான் எனக்குத் தெரியல, அவ்ளோதான் என்னால சொல்ல முடியும்… இதுக்கு மேல நான் இதப் பத்திப் பேச விரும்பல… அதுக்கப்புறம் நீயாச்சு… உன் வாழ்க்கை ஆச்சு… தெரியாம தான் கேட்கிறேன். அந்தப் பொண்ணு சரி இல்லனு கூட வச்சுப்போம். ஆனா உன்ன மாமா கல்யாணம் பண்ணிப்பாருனு நினைக்கறியா?”
“காயு…” என்று தன் தங்கையைத் திரும்பிப் பார்த்த தமிழ், “அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கல… மாமா அந்தப் பொண்ணு கிட்ட இருந்து விலகினாலே எனக்குப் போதும். அந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டா அவரு நிம்மதியா இருந்துருவாரா? கல்யாணத்துக்கு அப்புறம் அந்தப் பொண்ணுக்குப் பணம், காசு தான் முக்கியம்னு தெரியும் போது அவரோட நிலைமை?”
“அவரோட பிரச்சனை அது… அதை அவர் பார்த்துப்பாரு… அதுல நீ ஏன் மூக்கை நுழைக்கிற”
“எப்படிடி? “என்னால அவர் எப்படி வேணும்னாலும் போகட்டும்னு வேடிக்கை பார்த்துட்டு அமைதியா இருக்க முடியாது”
“இனி அவர் லைஃப்ல தலையிடாத”
“நான் இத்தனை முறை சொன்னதுக்கு அப்புறமும் எதுக்காக இப்படிப் பேசுறடி…”
“அக்கா அதான் நானும் சொல்றேன், நீ முன்னாடியே உன்னோட விருப்பத்தைச் சொல்லாம, அந்தப் பொண்ணு சரியில்லனு சொல்லி இருந்தேனா, அவரு கொஞ்சமாச்சும் நீ சொல்ல வர்றதுக்குக் காது கொடுத்துக் கேட்டு இருப்பாரோ என்னவோ? ஆனா கொஞ்சம் யோசிக்கவாச்சும் செஞ்சு இருப்பாரு… ஆனா இப்போ நீ அதுக்கான இடத்தைக் கூட அங்க தரல… முன்கூட்டியே நீ உன்னோட விருப்பத்தை அவர்கிட்டச் சொல்லி இருக்க… அப்போ தெரியாதா, உனக்கு அந்தப் பொண்ணப் பத்தி…”
“லூசு மாதிரிப் பேசாதே…”
“என்னோட விருப்பத்தை வேணாம்னு…” என்று விட்டு நிறுத்தினாள்.
“அக்கா போதும்… நீ எத்தனை வருஷமா மாமாவை விரும்புறேன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இத்தனை வருஷமா உன்னோட விருப்பத்தைச் சொல்லாதவ… இப்பதான் போய் சொன்னியா?”
“காயு உண்மையாவே என்னை நம்பு. அப்பாவும், அம்மாவும் மாமாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கிறதப் பத்தி அத்தைகிட்ட பேசிட்டு இருந்தாங்க… அதைக் கேட்டதால தான், நான் மாமா கிட்டப் போய் என்னுடைய விருப்பத்தைச் சொன்னேன். அதுக்கப்புறம் தான் அவரு இந்த மாதிரி அந்தப் பொண்ண விரும்புறேன்னு சொன்னாரு…
சரின்னு சொல்லிட்டு அந்தப் பொண்ணப் பத்தித் தெரிஞ்சுக்கப் போகும் போதுதான் எனக்கு இந்த மாதிரித் தெரிஞ்சுச்சு…”
“யார் சொன்னாங்க உனக்கு அந்தப் பொண்ணப் பத்தி”
“உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்? எதுக்கு இப்படிக் கல்லுளிமங்கி மாறி அப்படியே நின்னுட்டு இருக்க… உனக்கு எப்படி அந்தப் பொண்ணப் பத்தித் தெரிஞ்சுச்சு, நீ போய் விசாரிச்சியா?” என்றவுடன் ஒரு சில நிமிடம் திருதிருவென முழித்துவிட்டு,
“சரோ அண்ணா சொன்னாரு…”
“அப்போ சாருக்குத் தெரியும். அவர் நம்மகிட்டச் சொல்லல… அப்ப சரவணனுக்கு நம்ம யாரோ, அவருக்கு அவரோட ஃப்ரெண்ட் தான் முக்கியம்…
நம்ப எப்படி எக்கேடு கெட்டாலும் பரவால்ல அப்படித்தானே…” என்று கேட்டுவிட்டுத் தன் அக்காவின் கண்ணை உற்று நோக்கினாள்.

