
சபதம் – 12
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை
வேந்தன் உயிர்த்துணை.
பொருள்:
அனைத்து உறுப்புகளும் (யானை, குதிரை, தேர்கள், வீரர்கள்) ஒற்றுமையுடன், அஞ்சாத வீரத்துடன் இருந்த படை அரசனின் உயிர்க்காப்பு ஆகும்.
விமான நிலையத்தின் ஒலிபெருக்கிகள் அடுத்த விமானத்தின் வருகையைத் தெரிவித்தபடி இருக்க, அந்த அதிகாலை வேளையிலும் பயணம் மேற்கொள்ளும் மக்களின் நடமாற்றம் உள்ளும் புறமும் இருந்து கொண்டே இருந்தது.
அலங்கார விளக்குகளில் ஜொலித்துக் கொண்டிருந்த விமான நிலையத்திலும், சில இருட்டுப் பக்கம் இருக்கும். அதற்கு உதவுவது போல் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வண்டி நிறுத்தும் இடம் இருளுக்குள் மூழ்கியிருக்க, அங்கே மூன்று உருவங்களுக்கு நடுவே தலையைப் பிடித்தபடி மண்டியிட்டிருந்தாள் அதிரா.
அதிராவை தொட முயன்ற மூவரின் காதுகளில் கார் நிறுத்துமிடத்தின் வெறுமையில்,
ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் அமைதியுடன், ஆளைக் கொல்லும் துல்லியத்துடன்,”அடுத்து ஒரு அடி எடுத்து வைப்பவன் உயிர் உடம்பில் இருக்காது” என்றதும் அதிரா தலை உயர்த்தினாள்.
இருளைக் கிழித்து கரண் பிரதாப் சிங் வெளியில் வந்தான். அவன் கண்கள் தீபிழம்பாய் எரிய, இறுகிய தாடையுடன் ஒவ்வொரு அடியும் நிதானத்துடன் எடுத்து வைத்தபடி சௌகானின் ஆட்களை நெருங்கினான்.
கரணை அங்கு எதிர்பாராத,ஆட்கள் தடுமாறினர்.
மூவரில் தலைவனாகப்பட்டவன் “இளவரசே… இதில் தலையிடுவது தங்களுக்கு நல்லதல்ல” என்றவனின் வார்த்தைகளை கேட்ட கரணின் முகத்தில் மாற்றமே இல்லை.
கரண் அவர்களை நோக்கி நடந்தபடி,“அவளைச் சார்ந்த எல்லாமே… எனக்கான விஷயம்” என்றவனின் உடல்மொழி வேட்டையாடும் மிருகத்தைப் போல் கூர்மையாக இருந்தது.
சௌகானின் ஆட்கள் அவன் நெருங்கும் ஒவ்வொரு அடிக்கும் பின் நோக்கி நகர்ந்தனர்.
கரண் நூறு போர்களை கடந்த மனிதனைப் போல அனாயசமாக போரிட்டான். தன் மேல் விழ வந்த அடிகளை தடுத்தவன், அடுத்தவனின் கையைப் பிடித்து காரின் ஹூடில் மோதவிட்டான்.
மற்றொருவன் இரும்புக் கம்பியை சுழற்றிக் கொண்டு வர,கரண் சற்று குனிந்து, கம்பியைப் பிடித்து, அவனின் விலா எலும்பில் மோதவிட்டான்.
கரணின் அசுர வேட்டையை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் அதிரா.
அவள் அவனில் பழக்கப்பட்ட ஒன்றைக் கண்டாள். ஒரு தீ… ஒரு நினைவு.
கவசம் அணிந்த ஒரு மனிதன். கையில் வாள். மரணத்துக்கும் அவளுக்கும் நடுவே நின்ற இளவரசன்.
வீர்.
அவள் மூச்சு நின்றது.
அதிராவின் உதடுகள் மெல்ல “வீர்…?” என்று உச்சரித்ததும் கரண் ஒரு கணம் உறைந்து நின்றான். அவன் கண்கள் மென்மையடைந்தன. அந்த நொடி சௌகானின் ஆள் தாக்க முனைய, கரண் திரும்பி, ஒரே குத்தில் அவனை தரையில் சாய்த்தான்.
அந்த இடமே அமைதியில் நிறைந்திருக்க, விழுந்து கிடந்த ஆட்களின் நடுவில் கரண் நின்றான்.
மார்பு உயர்ந்து இறங்க, கண்கள், அதிராவை மட்டுமே நோக்கியபடி மெதுவாக அதிராவை நோக்கி நடந்தான். அவன் கண்களில் மறைந்திருந்த எதுவோ அதிராவை தாக்கியது.
அதிரா எழ முயன்றவள் சற்று தடுமாறினாள். அவள் விழுவதற்கு முன் அவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான் கரண்.
இருவரின் முகங்கள் அருகருகே இருக்க, ஒருவரின் மூச்சுக்காற்றை மற்றவர் சுவாசிக்கும் அளவு நெருங்கியிருந்தனர்.
அதிரா,”ஏன்… ஏன் உன்னைப் பார்க்கும் போது ஏதேதோ நினைவுகள் எழுகின்றன?” என்றதும் கரண் கண்களை மூடிக்கொண்டான்.
அவளை இறுகத் தழுவிக்கொண்டு எல்லாவற்றையும் சொல்ல விரும்பினான். ஒரு காலத்தில் அவனின் உயிர் தொடும் அந்த பெயரைச் சொல்லி அழைக்க விரும்பினான்.
ஆனால் முடியாது.
இன்னும் நேரம் வரவில்லை.
கலிலின் உயிர் ரகசியத்தை தாங்கியிருக்கிறான். நேரம் வரும் வரை பொறுமை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இருந்தும் மெதுவாகச் சொன்னான்,”உன் மனம் மறந்திருந்தாலும்…..உன் ஆன்மா நினைவில் வைத்திருக்கிறது.” என்றதைக் கேட்ட அதிராவின் மூச்சு நடுங்கியது.
அதிரா,“நான்… நான் யார்…?”என்றதும் கரண் அவள் முகத்தை மெதுவாகத் தழுவினான். அவன் குரல் உடைந்து,”எந்த வாழ்க்கையிலும்…நான் அறிந்த மிக வலிமையான பெண் நீதான்” என்றதும் அதிராவின் கண்கள் நீரால் நிரம்பின. பலவீனத்தால் அல்ல. அறிதலால். அவள் விதியை உணர்ந்ததால்.
அனைத்தையும் நினைத்து குழம்பித் தவித்தவளின் மூளை இதற்கு மேல் தாளாது என்பது போல் கரணின் கைகளில் தோய்ந்து விழுந்தாள்.
இரவுக் குளிர்ந்த காற்று வீச, அதிரா கரணின் காரின் பின்சீட்டில் சாய்ந்து இருந்தாள்.
சோர்வும், வலியும், நினைவுகளின் தாக்கமும் அவளைச் சூழ்ந்திருந்தது.
கரண் அவள் மீது பார்வை பதித்தபடியே வண்டியை ஓட்டினான். அவள் மூச்சு சீராக இருக்கிறதா, காயம் மோசமா என்று ஒவ்வொரு நொடியும் அவன் கண்கள் அவளை முன் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்தன.
அரண்மனை வாயில் திறந்தது. பெரிய விளக்குகள் ஒளிர்ந்தன. கரண் வண்டி உள்ளே நுழைந்தவுடன் சுக்விந்தர் விரைந்து வந்தவன், கதவைத் திறந்து விட்டபடி,”இளவரசே… ஆசாத் சாஹிப் வந்திருக்கிறார்” என்றதும் கரணின் முகம் இறுகியது. அதிராவின் இதயம் தாளம் தப்பித் துடிப்பது போல் உணர்ந்தாள்.
மண்டபத்திற்குள் நுழைந்த கரண் மற்றும் அதிராவை பார்த்தபடி நின்றிருந்தார் ஆசாத் கான். அவர் உடல் விறைத்து கண்களில் கவலையுடன், கைகளில் கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடனும் மகளுக்காக காத்திருந்தார்.
அதிராவின் கைகளில் இருந்த கட்டைப் பார்த்த அந்த நொடியில் அவரின் கண்களில் நீர் நிரம்ப,”அதிரா…” என்றபடி மெதுவாக மகளை நோக்கி நடந்தார். தந்தையின் கண்களில் நீரைக் கண்டதும் அதுவரை இருந்த தயக்கம் மீறி தந்தையை ஆரத் தழுவிக் கொண்டாள்.
தந்தை, என்றுமே அவளின் பலம், அவளின் பாதுகாப்பு, அவள் கடந்த காலத்தின் ஒரே சாட்சி.
அதிரா, ஆசாத் கானின் மார்பில் முகம் புதைத்தவளின் குரல் உடைந்து,”“வாப்பா…” என்றவளை குழந்தையாய் கைகளில் தாங்கி கொண்டவர் அவள் தலைமுடியைத் தடவிக் கொடுத்தார்.
அவள் காயத்தைக் கைகளால் தடவியவரின் குரல் நடுங்க,”யார் இதைச் செய்தார்கள் மகளே…?நான் உயிரோடு இருக்கும் போது உன்னை ஒருவன் நெருங்கத் துணிந்தான் என்றால்,அது உன் வாப்பாவின் இறப்பு..”என்றவரின் வாக்கியத்தை முடிக்க விடாமல் கைகளால் தடுத்தாள் ஆசாத் கானின் மகள்.
தந்தை மகள் பாசத்தை பார்த்தபடி அமைதியாக நின்றான் கரண். அவர்களின் பந்தத்தைப் பார்த்தவன் உயிர் துடித்தது. ஆனால் இந்தமுறை அதிராவாக தன்னிடம் வர வேண்டும் என்று உறுதி கொண்டான்.
மகளை தேற்றி, ஆசுவாசப்படுத்திய ஆசாத் கானின் பார்வை கரணில் நிலைத்தது. மகளை மெதுவாகச் சுக்விந்தருடன் அனுப்பி,”அவளை கூட்டிச் சென்று ஓய்வெடுக்கச் செய்யுங்கள்”என்றதும் அதிரா கரணை நோக்கி ஒரு கணம் பார்த்தாள். அவள் கண்களில் பல கேள்விகள் இருந்தன, அதற்கான பதில்கள் அவனிடம் மறைந்திருந்தன.அந்த பார்வை பரிமாற்றம் ஆசாத்தின் விழிகளில் தப்பாமல் சிக்கியது.
அதிரா உள்ளே சென்றதும், ஆசாத் கான் கரணை நோக்கி,”என்ன நடந்தது, இளவரசே?” என்றதும் கரணின் தாடை இறுகியது.
தன்னை கட்டுப்படுத்தி கொண்டு, நடந்த அனைத்தையும் விளக்கியவனின் கோபம் ஆசாத் கானுக்கு புதிராக இருந்தது.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆசாத் கான்,”அரசர் உங்களிடம் விஷயத்தைச் சொன்னவுடன், நொடியும் தாமதிக்காமல் என் மகளை பாதுகாத்ததற்கு மிக்க நன்றி இளவரசே. இந்த ஆசாத் கான் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்றவரை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்த கரண், “அதிரா என்னவள், எனக்காக ஜென்மம் கடந்து உதித்தவள் ஆசாத். கடன்பட்டது நாங்கள் தான். இந்த ராஜபுத்திர சாம்ராஜ்யம் மீண்டும் உயிர்த்தெழ இத்தனை வருடம் காத்திருந்த ஹூன் வம்ச வாரிசுக்கு கடன்பட்டது அதிவர் வம்ச வாரிசும் ராணா வம்ச வாரிசுகளும் தான்” என்றதும் சுளீர் என்று கொதிநீர் பட்டது போல் அதிர்ந்து எழுந்தார் ஆசாத் கான்.
“எ…என்ன சொல்கிறீர்கள் அரசே?” என்ற ஆசாத்தை கூர்மையுடன் பார்த்த கரண்,”நான் உதய்ப்பூர் இளவரசன் தான் ஆசாத். ஆனால் என் வம்சம் மஹாரான வம்சம் அல்லவே!! நான் அதிவர் வம்சத்தின் கடைசி வித்து. நான் பிறந்ததில் இருந்து உணர்ந்த ஒன்று, நான் தனிப்பட்டவன். ஆரவல்லி அன்னை நான் ஆடியோடி வளர்ந்த தாய் மடி. அதை காக்க பிறந்தவன் நான் ஆசாத். இந்த போர் தங்களுடையது இல்லை” என்றவன் கண்களில் எறிந்த தீப்பொறி ஆசாத் கானை சிலிர்க்க வைத்தது.
வேகத்துடன் பேசிக் கொண்டிருந்த கரண் சற்று நிறுத்தி, ஆசாத் கானின் அடி மனதை அலசுவது போல் பார்வை பார்த்தவன்,”அதிவர் வம்ச வித்து நாளடைவில் மஹாரான வம்சத்தில் உதித்தது உங்கள் அறிவுக் கூர்மை ஆசாத். அதே போல் ராணா வம்ச வாரிசை எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்?” என்றதும் திடுக்கிட்டு போனார் ஆசாத்.
“அரசே!!” என்றவரை கண்களின் மென்மையும் உதட்டோரப் புன்னகையுடன் பார்த்த கரண்,”உண்மை என்றாவது வெளிப்படும் ஆசாத். அது வெளிவரும் நேரம் நெருங்கிவிட்டது. கவலைப்படாதீர்கள் கர்னி மாதா துணை இருக்கிறாள். இந்த முறை போர் நமக்கு சாதகமாகவே முடியும்” என்றவனின் வார்த்தைகள் புரியாமல் தடுமாறினார் ஆசாத் கான்.
கரண் சொன்ன அனைத்தையும் மனதில் ஓட்டிய ஆசாத் தனக்கு தெரியாத ஏதோ ஒன்று கரண் அறிந்திருப்பதை உணர்ந்து நிமிர்வுடன் ஆரம்பித்தார்,”இளவரசே, மஹாரான வம்சத்துடன் அதிவர் வம்சம் இணைந்தது என் செயல் அல்ல, அது அல்லாஹ்வின் சித்தம். ஆனால்…”என்றவரின் உடல் இறுகி, குரல் உடைந்து,”ராணா வம்சத்தை கை தவற விட்டுவிட்டேன். அதோடு என் வம்ச வாரிசையும்” என்றவர் எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்களை விட்டு நீர் வெளியேறி அவர் கன்னங்களை நனைத்திருந்தது.
ஆசாத் கானின் வேதனையை உணர்ந்த கரண்,”ராணா வம்சத்தை காக்க தங்கள் மகனை பகடையாகப் பயன்படுத்தியதற்கு வேதனைப்படுகிறீர்களா ஆசாத்?” என்றது தான் தாமதம், 25 வருடங்களாக மனதில் பூட்டிய உண்மையை உதயப்பூரின் வருங்கால அரசன் புட்டு புட்டு வைக்க தன்னை மீறி கதறிவிட்டார்.
“குல முன்னோரின் வாக்கை காக்க துடித்த இந்த பாவி, பெற்ற பிள்ளையை பலியாக்கிவிட்டேனே. பாவப்பட்ட இந்த உயிர் இருந்து என்ன செய்யப் போகிறது அரசே” என்றவரின் தோளை அழுத்தி ஆறுதல் வழங்கினான் கரண்.
எத்தனை மணி நேரம் கழிவிரக்கத்தில் துடித்தாரோ, மீண்டு வந்தவரிடம்,”அதிராவிற்கு உண்மை தெரியுமா?” என்று வினவினான் கரண்.
அதில் முழு உணர்வுக்கு வந்தவர், கரணை எரித்துவிடுவது போல் பார்த்தபடி,” அதிரா என் மகள்” என்றவரின் குரலில் இருந்த அழுத்தம் அதற்கு மேல் கரணை கேள்வி கேட்க விடவில்லை.
தலையசைத்து ஏற்று கொண்டவனின் கவனம் கதவு திறக்கும் சத்தத்தில் திசை மாற, அதிரா அங்கு நின்றிருந்தாள்.
அரண்மனை அமைதியாக இருந்தது. ஆனால் காற்றில் ஒருவித பதட்டம் இருப்பது போல் உணர்ந்தாள் அதிரா.
கரண் ஒரு பக்கமும்,ஆசாத் கான் மறுபக்கமும் நின்றிருந்தனர். இருவருக்கும் இடையே ஒருவித பதற்றம் இருப்பதை உணர்ந்த அதிரா மெதுவாக முன்னேறி, அவர்கள் அருகில் வந்தவள்,”வாப்பா… “என்றவள் பார்வை கரணை தொட்டு மீள,”எப்படி இவ்வளவு வேகமாக இங்கு வந்தீர்கள்?”.
அதை கேட்டு மெலிதாக சிரித்த ஆசாத்,” உன் கடிதம் என்னை வந்து சேர்ந்த நொடியே புறப்பட்டேன் மகளே. காற்றுக்கு சக்தி இல்லை, இருந்திருந்தால் உன்னை உடனே வந்து சேர்ந்திருப்பேன்” என்றவர் கரணை பார்த்து,”உதய்ப்பூர் அரசருக்கும் , இளவரசருக்கு நாம் மிக கடமைப்பட்டுள்ளோம் மகளே” என்று நிறுத்தியவரை புரியாமல் பார்த்தாள் அதிரா.
“உன் கடிதத்தை அம்ஜத் என்கையில் சேர்த்த நேரம் நான் உதய்ப்பூரில் இருந்தேன். நான் உன்னிடம் வரவேண்டிய அவசியத்தை உணர்ந்த அரசர், இங்கு நான் வந்து சேர அனைத்து உதவிகளையும் புரிந்தார். அதுமட்டும் இல்லாமல் நான் உன்னை சரியான நேரத்தில் பாதுகாக்க முடியாத நிலையில், எனது இடத்தில் உன்னை காக்கும் பொறுப்பை உதயப்பூர் இளவரசருக்கு அளித்திருந்தார்” என்றதும் தான் கரண் சரியான நேரத்தில் தன்னை காத்தது எப்படி என்பது அதிராவிற்கு புரிந்தது.
தன்னை மீறி கரணிடம் சென்ற கண்ணை கட்டுப்படுத்த போராடியவள், தன் தந்தையிடம்,”வாப்பா… நான் தங்களிடம் தனியாக பேச வேண்டும்” என்றவளை கைவளைவுக்குள் கொண்டு வந்த ஆசாத் கான்,”நீ உன் அறைக்கு சென்று காத்திரு மகளே, இளவரசரிடம் ஒன்று பேச வேண்டியுள்ளது” என்றவர் அதிரா செல்லும் வரை அமைதியாக இருந்தார்.
“இளவரசே! நான் தங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்….ராணா வம்ச வாரிசின் நலம்?” என்றதும் இப்போது அதிர்வது கரணின் முறையானது.
“தங்களுக்கு எப்படி..?”என்றவனை இடைமறித்த ஆசாத் “பெற்ற பிள்ளையை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளேன் அரசே. அவரை சுற்றி கண்கள் இல்லாமல் விட்டுவிடுவேனா?” என்றதும் கரண், “உண்மை தான்… அவன் மாவீரன், நிச்சயம் மீண்டு விடுவான்” என்ற வார்த்தையோடு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல் உறைந்து நின்ற கரணின் வார்த்தையில் கவலை கொண்டார் ஆசாத் கான்.
ரணசூரன் வருவான்…….

