
விஷ்வா தனது அன்னையின் அறையைக்கு சென்ற பார்த்த போது, சிவகாமி கை கால்களை உதறித் கொண்டு மூச்சை கஷ்டப்பட்டு இழுத்து விட்டுக் கொண்டிருந்தார்.
செவிலியர் அவருக்கு முதலுதவி செய்து கொண்டிருக்க, சிவா பதட்டமாக தனது அன்னையின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அம்மா அம்மா என்று கதறியபடியே,
“மேடம் என்ன ஆச்சு? ஏன் அவங்க மூச்சு விட ரொம்ப கஷ்டப் படறாங்க? என்ன பிரச்சனை?”
“சரியா தெரியல சார், நேத்து நைட் நான் செக் பண்ணும் போது கூட, அவங்களோட பாடி கண்டிஷன் நல்லா தான் இருந்துச்சு. அந்த தைரியத்துல தான் நைட் செல்லம்மா மேடம் கிட்ட சொல்லிட்டு, நான் அவுட்ஹவுஸ்க்கு தங்க போயிருந்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க எமர்ஜென்சி பெல் கொடுக்கவும் தான், பின்னாடி இருக்க படிக்கட்டு வழியா அவசரமா இங்க ஓடி வந்தேன்.
வந்து பார்த்தா அவங்களோட பிபி ரைஸாகி இருக்கு. அதோட கொஞ்ச நேரத்திலேயே அவங்க பாடி டெம்பரேச்சர் ரொம்பவே லோ ஆகிடுச்சு. இப்போதைக்கு என்கிட்ட இருக்க இன்ஜெக்ஷனை அவங்களுக்கு போட்டு விட்டிருக்கேன். முடிஞ்ச அளவு சீக்கிரமா இவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ஆகணும் சார்.”
விஷ்வா உடனடியாக தனது அன்னையை கைகளில் தூக்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியேற முனைய, அதே நேரம் அந்த அறைக்குள் வேகமாக வந்த நிலா,
“ஈஸ்வர் கீழ ஆம்புலன்ஸ் வந்திருச்சு, சீக்கிரம் வாங்க.”
என்றபடி செல்லம்மாவை நோக்கி திரும்பியவள்,
“ம்மா மறக்காம அத்தையோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கங்க.”
என்றபடி விஷ்வாவிற்கு பின்னால் ஓடத் தொடங்கினாள்.
விஷ்வா சிவகாமியின் அறைக்கு சென்ற சற்று நேரத்திலேயே, பக்கத்து அறையில் இருந்து வந்த சத்தங்களை கேட்டு, நிலா உறக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள்.
அங்கு சென்றவள் சிவகாமியின் நிலையைக் கண்டு, உடனே தனது மொபைல் மூலமாக ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்திருந்தாள். அதனால் பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே, சிவகாமி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
அவர்கள் சென்ற பிறகே சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்ப உறுப்பினர்கள், யாருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பி நின்றனர்.
பிறகு வீட்டு காவலாளியின் மூலமாக விஷயம் கேள்விப்பட்டு, விஷ்வாவுக்கு அலைபேசியில் அழைத்தனர். அவன் அவர்களது அழைப்பை ஏற்காததால் சூர்யாவிற்கு அழைத்து விஷயத்தை கூறினர்.
எப்படியும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தான், சிவகாமியை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்று உணர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவசரமாக காரில் கிளம்பினர்.
மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான், செல்லம்மாவிடம் நடந்தவைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள் நிலா.
மருத்துவர்கள் உள்ளே சிவகாமி அம்மாவுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க, வெளியே பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தான் விஷ்வா. அவனது அலைபாயும் கண்களும், பதட்டத்தோடு கூடிய நடையும், பதின்ம வயது குழந்தை போலவும், தனது தாயை தேடும் சிறுவனாகவும் தான் நிலாவிற்கு தோன்ற வைத்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் இவனது சந்தோஷத்தை எப்படியாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
சிவகாமி அம்மாவை கவனித்துக் கொள்வதற்காக வந்திருந்த செவிலியர் கீதாவும், சிவகாமியுடன் தான் உள்ளே இருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த மருத்துவர்,
“ஷீ இஸ் நார்மல் நௌ, திடீரென அவங்க பாடி டெம்பரேச்சர் கம்மி ஆனதால தான் மூச்சு திணறல் ஏற்பட்டு, கைகாலை உதற ஆரம்பிச்சிருக்காங்க. நல்லவேளையா சரியான நேரத்துல அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்துட்டீங்க. அதனால தான் எங்களால உங்க அம்மாவை காப்பாத்த முடிஞ்சுது.”
“ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர், பட் திடீரென எப்படி? ஏன் அம்மாவுக்கு இப்படி ஆச்சு?”
“சரியா தெரியல மிஸ்டர் ஈஸ்வர், சில டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்கோம், கொஞ்ச நேரத்துல அதுக்கான ரிசல்ட் கைக்கு வந்திடும், அது வந்தா தான் எதனால இப்படி ஆச்சுன்னு தெளிவா தெரிய வரும்.
அவங்க உடம்புக்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்ல, கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது அவ்வளவு தான், முடிஞ்சா ஒரு இரண்டு நாட்கள், அவங்க இங்க அப்ஷர்வேஷன்ல இருக்கிறது அவங்க உடம்புக்கு நல்லது, சரி நீங்க போய் இப்ப அவங்களை பார்க்கலாம்.”
என்ற கூறியவரிடம் மனதார நன்றி கூறி விட்டு உள்ளே ஓடினான் விஷ்வா. அவனின் பின்னே செல்லம்மாவும் நிலாவும் கூட உள்ளே சென்றனர்.
மருத்துவ உபகரணங்களின் பிடியில் தளர்ந்து போய் படுத்திருந்த தனது தாயை கண்டவன், விழிகளில் நீரோடு அவரது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவன் மனதிலோ சொல்ல முடியாது ஒரு வலி, சிறிது நேரத்தில் அவனது மனம் நிதானமாக, சலனமற்று தன் அன்னையை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் வந்த சிவகாமிக்காக அவன் ஏற்பாடு செய்திருந்த செவிலியர் கீதா,
“சார் மேடமோட பாடி டெம்பரேச்சர் தானா இப்படி லோ ஆகல.”
தனது தாயையே வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனோ, சட்டென்று அவரை நோக்கி திரும்பி கேள்வியாக புருவத்தை உயர்த்த, செல்லம்மாவும் நிலாவும் கூட அதிர்ச்சியோடு அதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
“அவங்களுக்கு யாரோ பாடி டெம்பரேச்சரை குறைக்கற மருந்தை, கொடுத்திருக்காங்க. ஒருவேளை புட் மூலமாக கூட இதை கொடுத்து இருக்கலாம்? ஏன்னா இன்ஜெக்ஷன் போட்ட தடயம் எதுவும் அவங்க உடம்புல இல்ல. அதோட நான் கிளம்பும் வரை அவங்க நல்லா தான் இருந்தாங்க, அதனால தான் எனக்கு இந்த சந்தேகம்?”
செல்லம்மா சிந்தனையோடு,
“அப்படி ஒருவேளை மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து இருந்தா, அந்த மருந்து நிச்சயமா என்னையும் பாதிச்சிருக்கனுமே? ஏன்னா அம்மாக்கு கொடுக்கற சாப்பாடு கஞ்சியை தானே நானும் சாப்பிடறேன்.”
பெண்கள் மூவரும் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்க, கனல் கக்கும் விழிகளால் நிலாவை திரும்பி பார்த்தவனோ, எழுந்து அவளை நோக்கி வர, நிலா அவன் பார்வை குற்றச்சாட்டை தாளாது பின்னால் நகரத் தொடங்கினாள்.
“இ… இல்ல… இல்ல… சத்தியமா அத்தையோட இந்த நிலைமைக்கு நான் காரணம் இல்ல ஈஸ்வர், ப்ளீஸ் என்னை நம்புங்க.”
“நேத்து நைட் நீ தானே என் அம்மா ரூமுக்கு கடைசியா போன, அதோட நீ திரும்பி வர ஏன் அவ்வளவு தாமதம் ஆச்சு?”
அவன் கேள்வியில் பதறிய செல்லம்மா,
“ஐயோ தம்பி அது…”
கைநீட்டி அவரை பேச விடாது தடுத்தவன், மறுகையால் நிலாவின் கழுத்தை பிடித்திருந்தான். ரௌத்திரத்தில் அவன் பிடி நிலாவின் குரல்வளையத்தை உடைத்து போடும் அளவுக்கு இறுகியது.
வலியால் துடித்தவள் கண்ணீரோடு அவனை பார்த்து நிற்க, செல்லம்மா தான் அவளுக்காக விஷ்வாவிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.
“தம்பி என்ன பண்ணறீங்க? முதல்ல கையை எடுங்க, அந்த பொண்ணு ரூம்குள்ள வந்து என்கிட்ட தான் பேசிகிட்டு இருந்தாங்க. அதோட அம்மா இருக்க கட்டிலுக்கு கிட்டக்க கூட அவங்க போகல. என்னை நீங்க நம்பறீங்களா இல்லையா?”
விழிகளில் வழியும் கண்ணீரோடு அடிபட்ட பார்வை வீசிய நிலாவின், முகத்தின் அருகே நெருங்கியவன்,
“நீ செஞ்ச அத்தனை விஷயமும் தெரிஞ்ச பிறகும் கூட, என் அம்மாவுக்காக மட்டும் தான் டி உன்னை விட்டு வைச்சேன். அவங்களோட இந்த நிலைக்கு மட்டும் நீ தான் காரணமுன்னு தெரிஞ்சுது, உன்னை கொலை எல்லாம் பண்ண மாட்டேன், இந்த உலகத்தில் நீ உயிரோட இருக்கும் போதே, உனக்கு தினம் தினம் நகரத்துல வாழும் அனுபவத்தை கொடுப்பேன் டி.”
எனக் கூறி சட்டென்று அவளை விட்டு விட்டான். தடுமாறி விழுகப் போனவளை செல்லம்மா தான், தன் இரு கைகளிலும் தாங்கிப் பிடித்து கொண்டார்.
அதேநேரம் கதவை தட்டி விட்டு உள்ளே வந்த அந்த மருத்துவமனையின் செவிலியர்,
“சார் டாக்டர் உங்களை கூப்பிடறார்.”
என்று கூறிவிட்டுச் செல்ல, விஷ்வா அவசரமாக மருத்துவரின் அறை நோக்கி நடந்தான். தண்ணீர் பாட்டிலோடு நிலாவை நோக்கி வந்த கீதா அதை அவளுக்கு புகட்டினாள்.
“சாரி மேடம், நான் உண்மையை சொன்னதும் சார் இப்படி உங்ககிட்ட நடந்துப்பார்னு நிஜமா நான் எதிர்பார்க்கல. உங்களுக்கு திட்டு வாங்கி கொடுக்கனும்னு எல்லாம் நான் இப்படி செய்யல என்னை மன்னிச்சிடுங்க.”
சற்று இருமிய படியே நீரை குடித்தவள், தொண்டையை நீவிய படியே,
“எனக்கு தெரியும், இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல எல்லாம் என் நேரம், எப்பவுமே அவர் கண்ணுக்கு நான் குற்றவாளியா நிக்கிற மாதிரியே சூழ்நிலை அமைஞ்சு போகுது.
அப்பறம் ரொம்ப நன்றி சிஸ்டர், நல்ல வேலையா சரியான நேரத்தில வந்து அத்தையை காப்பாத்துனீங்க. எனக்கு ஒரு ஒரே டௌட் அதை கொஞ்சம் கிளியர் பண்ணறீங்களா? அத்தைக்கு புட் வழியாகத் தான், அந்த மருந்தை கொடுத்திருக்காங்களா?”
“எனக்கு தெரிஞ்சவரை அப்படி தான் நினைக்கிறேன் மேடம், அதை கன்பாம் பண்ண தான் இங்க அம்மாக்கு நிறைய டெஸ்ட் எடுத்திருக்காங்க.”
அதற்குள் கீதாவின் அலைபேசி இசைக்க, அவள் அதை எடுத்து பேசியபடியே வெளியே சென்றார். நிலா தீவிரமாக எதையோ யோசித்து கொண்டிருக்க, செல்லம்மாவின் குரல் அவளை கலைத்தது.
“நிலாம்மா ஒருவேளை இது அந்த நித்திலா குடும்பத்தோடு வேலையா இருக்குமோ? தம்பி கிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்லிடலாமே ம்மா.
அவரும் இதை கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவார் இல்லையா, ஏன்னா இதுவரைக்கும் நீங்க தான் இந்த தப்பெல்லாம் பண்ணுணீங்கன்னு நினைச்சுட்டு இருக்காரு, ஆனா இதுல இன்னொருத்தரோட சதி இருக்குன்னு தெரிஞ்சா, அவரும் வேற வழியில கண்டுபிடிக்க முயற்சி செய்வார் இல்லையா?”
“இல்லம்மா இதுவரைக்கும் உங்க தம்பிக்கு நடந்த அத்தனைக்கும், நானும் ஒரு விதத்தில் காரணம். அது தெரியாமல் நடந்திருந்தாலும் அதுக்கான பிராயச்சித்தத்தை நான் தேடி தானே ஆகணும்.
அதோட பிரச்சனைக்கு முக்கிய காரணம் வெளியாளுங்க கிடையாது, அவர் வீட்டுக்குள்ளேயே இருக்க சொந்தம் தான்னு அவருக்கு தெரிய வந்தா, ரொம்ப மனசொடைஞ்சு போயிடுவாரு. அதோட நித்திலாவுக்கு எதிரான எந்த ஆதாரமும் நம்ம கிட்ட இல்லையே? “
“இல்ல பாப்பா தம்பிகிட்ட ஒரு வார்த்தை சொன்னா அவரே இதை புரிஞ்சுகிட்டு, என்ன ஏதுன்னு பார்ப்பார் இல்லையா?”
“வேண்டாம் ம்மா இதுனால உங்க தம்பியோட மொத்த கோபமும், நித்திலா குடும்பத்து மேல திரும்பவும் வாய்ப்பு இருக்கு. ஏற்கனவே ரொம்ப நாளுக்கு முன்ன என்னால உடைஞ்சு போன இந்த குடும்பம், இப்ப தான் ஒன்னா சேர்ந்து இருக்கு, இந்த சூழ்நிலை மறுபடியும் மோசமாகக் கூடாது.
இப்ப உங்க தம்பியோட கோபம் பூராவும் என் மேல மட்டும் தான் இருக்கு, அது அப்படியே இருக்கட்டும். ஆதாரத்தோட அவங்களைப் பிடிச்சு அதுக்கு அப்புறமா உங்க தம்பி கிட்ட சொல்லிக்கலாம். அதுவரைக்கும் அவர் கோபம் என் மேலயே இருந்துட்டு போகுது. மிஞ்சிப் போனா உங்க தம்பி என்ன பண்ணிடுவாரு, வார்த்தையால காயப்படுத்தற மாதிரி பேசுவாரு, அவ்வளவு தானே. வேற என்ன செஞ்சிடப் போறார்? அவர் சிவகாமி அம்மாவோட புள்ளையாச்சே, ஒரு பொண்ணை கொடுமைப்படுத்தனும்னு நினைக்கவா போறாரு?”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வீட்டுக்குள்ள இருக்க வேற யாரு வில்லனா இருப்பாங்க🤔🤔
விரைவில் கண்டுபிடிச்சிடுவாங்க சிஸ். நன்றி 🙂