Loading

சில வருடங்களுக்கு முன்பு..

வார இறுதி நாளான அன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது கோவையில் இருந்த புரூக் ஃபீல்ட் மால்.

குடும்பங்களும், நண்பர் கூட்டமும், 

காதலர்களின் அணிவகுப்புமாகப் பார்க்கும் இடமெல்லாம் இருந்த ஜனத்திரளை சலிப்போடு பார்த்தபடி நின்றிருந்தாள், ஷக்தி.

ராஜஸ்தானில் இருந்து கல்லூரி விடுமுறைக்காக வந்தவளைத் தான் அந்த மாலில் காக்க வைத்திருந்தான் சிவனேஷ்!

அது ஆராவமுதனின் காதல் பயிரை முடிந்தவரை வளர்க்க அவனாலான ஒரு உதவி. ஷக்தி ஊரில் இருந்து வந்தாளானால் வீட்டில் தான் ஆராவமுதன் இருக்க வேண்டும். அதன் பொருட்டு நண்பனுக்கு உதவும் விதமாக ஷக்தியுடன் அன்று சிவா ஊர் சுற்றுவதாக எண்ணம்.

“என்ன அய்யனாருக்காக நீ இன்னுமா வையிட் பண்ணுற” என்றபடி வந்த மேக வர்ஷினியை முடிந்தமட்டும் முறைத்தாள் பெண்ணவள். 

அவளைவிட மேகா இரண்டு வருடம் மூத்தவளாக இருந்தாலும், சிறு வயது தொட்டு வளர்ந்த பிணைப்பு அவர்களை எளிதாகப் பழக வைத்தது.

“உங்களுக்கெல்லாம் இந்த மனசாட்சியே இல்லையா? நேத்து தான ஊர்ல இருந்து வந்தேன், நிம்மதியா தூங்கக் கூட விடாம இப்படி நீங்க கடல வறுக்க என்னையும் எலி மாதிரி காய வெக்கறீங்க” என்று படபடத்தவளின் கையில் ஐஸ்கிரீமை திணித்தான்‌ ஆராவமுதன்.

“என்ன லஞ்சமா?”

“இல்ல மேகாவுக்கு வாங்கினேன் அதான் நெல்லுக்கு போறது புல்லுக்கும் போகட்டும்னு” என்றவன் சிரித்தபடி சொல்லவும்,

“நான் புல்லு..” என்று ஐஸ்க்ரீமை மேகாவிடம் கொடுத்து பல்லைக் கடித்தபடி விறுவிறுவென்று மாலை விட்டு வெளியேறினால்.

“ஏய் ஆரா, நில்லுடீ” என்று இருவரும் அவள் பின்னால் ஓடிவர, திரும்பினால் இல்லை.

ஆத்திரம். அத்தனை கோபம். தேவையற்ற காத்திருப்பு தந்த கடுப்பு என்று எல்லாம் சேர வேக நடையோடு வெளியேறியவள் சாலையைக் கடக்கும் முன்பு பக்கவாட்டாக வந்த ஆட்டோவைக் கவனியாது விட்டதன் விளைவால் விபத்தில் சிக்கினாள், ஷக்தி.

“சோலி முடிஞ்ச்” என்று கத்தினாள் மேகா.

அப்போது சிவாவும் வந்துவிட அவனின் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் ஷக்தி.

காலில் பிரக்சர் மற்றும் கையில் சிராய்ப்புகளுடன் ஒரு வார மருத்துவமனையில் இருந்தவள் அன்று வீடு திரும்பினாள்.

கோவை கணபதில் இருந்தது அவர்களின் வீடு. ஷக்தியின் வீட்டினர் நல்ல வசதியானவர்கள் என்று பார்த்தவுடன் சொல்லும்படியாக இருந்தது வீட்டின் அமைப்பும் செழுமையும்.

ஷக்தியின் தந்தை, ‘லாவண்யம் பட்டு செண்டர்’ இமயவரம்பன், என்றால் ஜவுளி தொழில் முகவர்களிடையே நல்ல பிரசித்தம்.

பட்டுப்புடவைகளுக்கு என்றே தனித்து நகரில் இரண்டு ஜவுளிக்கடைகள் நடத்தி வந்தார். கூட, மற்றைய ஜவுளி வகைகளுடன் சேர்த்து தேயிலை தொழிலும் அவரின் பிரதானம்.

ஆராவமுதன், “நான் சொல்லச் சொல்ல கேட்காம இவளா போய் அன்பளிப்ப வாங்கினதுக்கு நா என்ன செய்ய முடியும் ப்பா?” என்று வந்தது முதல் தந்தையிடம் சண்டை தான்.

“மேகா கூட இருந்தா என் மகள பார்க்க மாட்டியா நீ?” என்றவர் சட்டென்று கேட்டுவிட, அதிர்ந்து கோபமுற்றான் அவன்.

“ப்பா” என்றவன் முகமே அவரின் பேச்சிற்கு ஆட்சேபனை தெரிவிக்க,

“என்ன பேசுறீங்க ப்பா? நா கோபப்பட்டு போய் ஆட்டோவுல விழுந்தா ஈசா என்ன பண்ணுவான்? தப்புப்பா உங்க பேச்சு” என்றாள் ஷக்தி முகத்தில் தெறித்தக் கடுமையுடன்.

“உங்க மனசுல நா ஷக்திய பார்க்க மாட்டேன்னு இருக்கு இல்லயா?”

பதிலில்லை இமயவரம்பனிடம்.

அதுவே அவர் மனதைக் கண்ணாடியாய் காட்டியது ஆராவமுதனிடம்.

இமயவரம்பன், உலகம் மொத்தமும் மகளே. மகனை பாசத்தால் அன்பால் தன்னின் தொழில் வாரிசாக பிடித்ததைவிட மகள் அவரின் மொத்த உந்துசக்தி.

அவரின் மொத்தமும் அவளே என்ற போது உடன் பிறந்தவன் கூட இருந்தும் மகளை பார்க்காதுவிட்ட ஆற்றாமையில் கேட்டுவிட்டார்.

ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவருக்கு இயற்கையாய் மனதில் தனக்குப் பின் மகளையும் மனைவியையும் மகன் பார்ப்பானா என்ற ஐயத்தின் வினா தான் இது.

லாவண்யா, “ஈசா அப்பா ஏதோ ஆதங்கத்துல கேட்டுட்டார்டா” 

“அதுக்கு இப்படியா கேட்பாங்க? நான் பார்க்காம யார் உங்கள பார்க்கப்பா? நான் ஒன்னும் கடமையா சொல்லலம்மா, உன்னையும் அவளையும் இதோ அப்பாவையும் இன்னிக்கு நேத்தா நான் பார்க்கறேன். ஏதோ பார்க்கல பார்க்கலன்னு சொல்லுறார்? காசு பணத்தவிட எனக்கு நீங்க தான முக்கியம். இப்போ மொத்தமா பிஸ்னஸ்ஸ நான் எடுத்தனால தான் அப்பாவுக்கு இந்த பயம்?” என்று நிறுத்தியவன்,

“மேகா வந்தனால நா ஒன்னும் மாறல ப்பா” என்று அழுத்தமாய் சொல்லிச் சென்றான் ஆராவமுதன்.

முதல் விரிசல் தந்தைக்கும் மகனுக்கும் அங்கு.

அதன் பின்பான நாட்கள் அவ்விருவரிடையே மௌனம் தான்.

“நீ மட்டும் நேரத்துக்கு வந்திருந்தா இப்படி ஆகியிருக்குமாடா பன்னி” என்று அவளைப் பார்க்க வந்த சிவாவை வைத்து செய்தால் ஷக்தி.

“ஒரு சப் இன்ஸ்பெக்டர்’னு பயமில்லாம என் முடிய பிடிச்சு ஆட்டுற எரும” என்று அவனும் எகிறினான்.

பத்து வருடங்களுக்கு மேலாக ஆராவமுதனின் தோஸ்தாய், ஷக்திக்கு வழிகாட்டும் நண்பனாய், இமயவரம்பன் பார்வையில் ஆராவமுதனுக்கு அடுத்து அவரின் மகனாக இருந்தவன் சிவனேஷ்.

அவர்கள் வீட்டில் அப்படி ஒரு பிணைப்பும் பந்தமும் இருந்தது அவன் மீது. 

பள்ளி இறுதியில் ஆராவமுதனோடு சேர்ந்து படித்து, கல்லூரியிலும் ஒன்றாக சுற்றி, ஒரு பொறுப்பான பதவியில் இப்போது வரை குணத்திலும் நடத்தையிலும் பண்பிலும் மாறாது இருப்பவனை யாருக்கு பிடிக்காது போகும்?

“மொத நீங்க ரெண்டு பேரும் பிற்ளைங்களானேத் தெரியலை.. பன்னி எருமன்னுட்டு, என்ன பேச்சு இது? நல்ல ஸ்கூல் காலேஜ்’ல படிச்சாலும் பேச்ச பாரு” என்று வந்தார் லாவண்யா.

“சிவா, பருத்திப்பால் செஞ்சேன் உனக்கு. குடிச்சிட்டு அப்புறம் பேசுங்க. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? ஐயா இந்த பக்கமெல்லாம் வரது கொறஞ்சிடுச்சே” என்றபடி அவனின்‌ அருகே அமர்ந்தார் லாவண்யா.

“நல்லா இருக்காங்க ம்மா.. இப்போதான இங்க டிரான்ஸ்பர் ஆகியிருக்கேன். கொஞ்சம் வாங்கற சம்பளத்துக்கு வேல செய்யலாமேன்னு ஒரு எண்ணம் தான்” என்றவன் சிரிக்க,

“சரிதான். அப்படியே இந்த ஈசன் பையனையும் என்னனுட்டு கேளு. அப்பாவும் புள்ளையும் பேசியே நாலு நாள் ஆகுது” என்றவர் நடந்ததைக் கூறினார்.

“ரைட், நான் பார்த்துக்கறேன். அப்பாவும் நேத்து எனக்கு கால் பண்ணி சொன்னார், இவன் ரொம்ப முறுக்கறான் போலையே” என்றபடி அவன் ஷக்தியைப் பார்க்க, அவளோ, “முறுக்கல அவனுக்கு அப்பா அப்படி சொன்னது ஹர்ட் ஆகிடுச்சு. மேகா கூட இருந்தனால என்னைய அவன் பார்க்கலையோன்னு நினச்சுட்டார்”

“ம்ம்ப்ச், அப்படி இல்ல ஆரா. அவருக்கு ஏதோ உள்ள ஒரு தவிப்பு. உன்ன‌ அப்படி பார்க்கவும், மனசு கஷ்டமாகி ஈசன பேசிட்டார். மேகா கூட இருந்தாலும் என் பொண்ண பார்க்கனும்னு அவர் நினைக்காரு”

“இதுல மேகா என்னமா பண்ணா? நேத்து அவர் பேசும்போதே அத கவனிச்சேன் நான். அமுதாவுக்கு கல்யாணம் ஆகிட்டா எங்க அவன் உங்கள பார்க்காம போயிடுவானோன்னு அப்பா கவலைப்படுறார் போல” என்கவும்,

“ம்ம்.. கவனிச்சேன் தம்பி. அவர் பயம் அவருக்கு, அது அர்த்தமில்லாததுன்னு ஈசன் தானே புரிய வைக்கனும்? அவனும் புரிஞ்சுக்காம நடந்தா அவர் பயம் இன்னும் வழுவாகாதா? சொல்லு”

“சரி தாங்க’ம்மா. நான் பேசுறேன் அவன்கிட்ட. ஆனா அப்பாவோட எண்ணமும் தப்பு தானே. அத அவர் வேற யார வேணா நினச்சு பேசியிருக்கலாம். ஆனா அமுதா அப்படி இல்லையே. அவனுக்கு நீங்களும் (அவன் குடும்பம்) மேகாவும் தான் எல்லாம். அப்படி இருக்க, அப்பாவோட பேச்சு அவனையும் குத்தியிருக்குமே” என்றான் சிவா நிதானமாக.

“என்னமோ, இவங்க சரியானா போதும்” என்றவர் எழுந்து சென்றிருந்தார்.

அதுவரை ஷக்தியின் எதிரே இருந்த திவானில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவனை, “ஷிவ் இங்க வாயேன்” என்று தன் பக்கத்தில் உட்கார சொல்லி அவள் அழைக்க, விரும்பியே சென்றமர்ந்தான், அவள் தோழன் சிவனேஷ்.

“ஏன்டி வலிக்குதா என்ன” என்றான் அவள் கட்டுப் போடப்பட்டிருந்த காலை அவன் தடவிவிட்டபடி.

“அதில்லடா. எனக்கு நெக்ஸ்ட் மன்த் ஃபைனல் எக்ஸாம்ஸ் இருக்கு. கண்டிப்பா இந்த கால வெச்சுட்டு போக முடியாது. வீட்டுல இருந்து தான் எழுதப் போறேன்.” என்றாள்.

“சரிதான். உன் டிப்பார்ட்மெண்ட்’ல பேசிட்டியா? இங்க இருந்தே எழுத என்னாவது ஏற்பாடு பண்ணுறாங்களா?” என்க,

“அதெல்லாம் பார்த்துக்கலாம். எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கனும். அது சரி இல்லனா ஐடியா கொடு” என்க அவனுக்கு ஆச்சர்யமாய் போய்விட்டது.

“கேஸ்ல டவுட்னா நானே உங்கிட்ட தான் வருவேன். நீ எனக்கிட்ட ஐடியா கேட்கறையா.. சிவா உனக்கு இன்னிக்கு வாழ்வுதான்டா” என்றவன் சிரிக்க, அவனை புஜத்தில் அடித்தாள் ஷக்தி.

“மொத கேளுடா”

“ரைட், சொல்லு”

“அதாவது.. நான் இந்த competitive exams (போட்டித் தேர்வுகள்) படிக்கலாம்னு இருக்கேன்” என்றாள்.

புருவம் சுருக்கியவன், “நல்ல விஷயம் தான் பட் கடைய யார் பார்ப்பாங்க? அப்பாகிட்ட உன் எம்பிஏ முடிச்சோன வந்து ஜாயின் பண்ணுறேன்னு தான சொல்லியிருக்க” என்றவன் வினவ,

”ஆமா. ஆனா இப்போ ஈசா அதையும் பார்க்கறானே” என்றாள்.

யோசனைக்கோடுகள் அவன் முகத்தில். “அமுதா நீ வரத விரும்ப மாட்டான்னு நினைக்கறையா ஷக்தி?” என்று சற்று கோபம் மீதுற கேட்டான் சிவா.

காரணம், ஆராவமுதனுக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்துவதில் தான் அதீத நாட்டம். அவன் பள்ளி இறுதியில் இருந்த போதே ஜவுளி கடையை பார்க்க ஆரம்பித்திருக்க, அப்போதே அவனின் எதிர்காலத்தை தீர்மானம் செய்துவிட்டான் அவன்.

“டேய் பட்டர்! அது என் கடை. அந்த டோமேடோ என்ன எதுக்கு வராதன்னு சொல்லப்போகுது”

“அப்புறம் ஏன்?”

“இமயவரம்பன் பொண்ணா இல்லாம, ஆரவமுதன் தங்கச்சியா இல்லாம, ஐ நீட் எ ஐடெண்டி! ஷக்தி ஆராதனா தனித்துவமா இருக்கனும், இன்டிபெண்டன்ட்டா இருக்கனும்”

“இது திடீர் முடிவா இல்ல..” என்றவன் இழுக்க,

“ம்ஹூம்.. ப்ரமோத் அண்ணா பார்த்து வந்த ஆசை” என்றாள் கண்கள் மின்ன.

சிவாவிற்கு அவளின் எண்ணத்தின் தெளிவு தேவைப்பட்டது. அதனாலே இக்கேள்வி.‌ 

இமயவரம்பன் – ஆராவமுதன் இடையே இருந்த அந்த சரிவர இல்லாத நூலிழை புரிதல் எங்கு ஷக்தியையும் தாக்கியதோ என்ற எண்ணம் மீதுற இருந்தது அவனுக்கு. இப்போது அது தெளிவுற, தெம்பாக அவளின் ஆசைக்கு வழிகாட்டினான் ஆணவன்.

“ஓகே தென், ப்ரமோத் அண்ணாகிட்டவே நீ கைடன்ஸ் கேளு.‌ எனக்கே அவர் தான கைட் பண்ணார். அவர் ஃபீல்ட் தான நீயும் போற, சந்தோஷமாவே சொல்லித் தருவார்” என்றான் சிவனேஷ்.

“ஓய் அவர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் மேன். நான் எங்க யுபிஎஸ்சி (UPSC) அவர் மாதிரி எழுதப் போறேன்னு சொன்னேன்” என்றாள் பட்டென்று.

“என்ன எரும குழப்புற? SSC, Bank அந்த மாதிரி எக்ஸாம்ஸ் சொல்லுறியா நீ?” என்றான்.

“ச்சூ, நான் குரூப் எக்ஸாம்ஸ் எழுத போறேன். TNPSC தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” என்று பல்லை காட்டினாள்.

அதில் மிளிர்ந்தது அவன் முகம். “பரவாயில்ல, தமிழ்நாட்டுக்குள்ளயே இருக்க மாதிரி தான் ப்ளான் பண்ணியிருக்க” என்றான் மெச்சுதலாக.

“யா.. யா.. குரூப் 1 எழுதலாம்னு டிசைட் பண்ணியிருக்கேன் ஷிவ். ஆனா என் முடிவு சரியா இல்லையான்னு தெரியலை. அதான் உன்ன கேட்டேன். நான் எங்கையாவது மிஸ் பண்ணா நீ தான சொல்லுவ, அதான்”

“ரைட், படி ஷக்தி. மொதல் முயற்சியிலே வின் பண்ணிடனும்னு நினைக்காத, விடாம உன் கோல் ரீச் ஆகும் வரை படி. அதுதான் இந்தமாதிரி எக்ஸாம்ஸோட தாரக மந்திரம். ஒருமுறை முடியலேனா அடுத்து..‌ அத மைண்ட்ல வெச்சுக்கோ. நான் ஃபஸ்ட் அட்டெம்ட்’ல க்ளியர் பண்ணேனா அது என்னோட இரண்டு வருஷ உழைப்பு. கஷ்டப்பட்டா, வெற்றி நிச்சயம் ” என்று அவள் தலையில் கை வைத்து அழுத்தினான்.

“இதுக்குத் தான் நீ வேணுங்கறது. உன் அமுதாகிட்ட கேட்டா ஏழூருக்கு பரப்புவான், தர்மாகோல் மண்டையன்.” என்றாள் சிரித்தபடி.

அதன் பின், கல்லூரி தேர்வை முடித்தவள் ப்ரமோத்தின் வழிகாட்டுதலின் படி படித்தால். இமயவரம்பனிடம் எதிர்ப்பு வரும் என்று அவள் நினைத்திருக்க, அவர் தான் முதலில் அவளின் முயற்சிக்கு ஊக்குவித்து முன்னேற்றினார் அவளை.

முதல்முறை தேர்வு எழுதி தேர்ச்சி கூடப் பெற முடியவில்லை அவளால்.

இரண்டு வருட படிப்போடு சேர்ந்து சில நுணுக்கங்களை கற்றவள்

வாய்ப்பு கிடைத்த தேர்வுகளை எல்லாம் எழுதி தன்னை மெருகேற்றவும் செய்தாள் ஷக்தி. 

காத்திருந்து இரையைக் கண்டுப் பாய்ந்த புலியாய் மூன்றாம் முறை தேர்வெழுதி மூன்று கட்டமாய் நடக்கும் தேர்வை வென்று மாநில அளவில் நான்காம் இடத்தை எடுத்து துணை ஆட்சியர் ஆனாள், ஷக்தி ஆராதனா இமயவரம்பன்!

 

 

பிழைத்திருத்தம் விரைவில் செய்யப்படும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்