
யான் நீயே 30
நள்ளிரவு இரண்டு மணி போல் ஊர் வந்து சேர்ந்தனர்.
லிங்கத்திற்கு அழைத்த வீரன்,
“எங்கடே இருக்க?” எனக் கேட்டான்.
“வீட்டுலதாண்ணே… சாயங்காலமா இங்கன வேலை முடிஞ்சதும் ஹோட்டலுக்கு போனேன். அதேன் முத்தையா பெரிப்பாவை மாடுகளுக்கு காவலுக்கு அனுப்பிட்டேன்” என்றான்.
“சரிடே… கதவை திற. யாரையும் எழுப்ப வேணாமாட்டிக்கு. காலையில பேசிக்கலாம்” என்று வீரன் சொல்ல லிங்கம் பேசிக்கொண்டே கீழே வந்து கதவினை திறந்திருந்தான்.
“சரி பாண்டியா நான் அப்படியே கெளம்புறேன்” என மருதன் சொல்ல…
“மூணேறும் இங்கனத்தேன் உறங்குறாய்ங்க மாமா” என்றான் லிங்கம்.
வரும் வழியிலே உணவினை முடித்துக்கொண்டு வந்ததால் அவரவர் தத்தம் இடத்தில் தஞ்சம் அடைய,
உள்ளே வந்த பின்பு தான் சுபாவை பார்த்தான் லிங்கம்.
“நீயும் வந்திருக்கியா? கவனிக்கல சுபாம்மா” என்றவன், “அந்த ரூமுல சின்னக்குட்டி மட்டும் உறங்குது நெனக்கேன். நீயி போ… படுத்துக்க” என்று கை காட்டினான்.
“சரி லிங்கு” என்றவள் நகர, கையில் கட்டினை கண்டவன் என்னவென்று வினவிட…
“உசுரைவிட காதல் முக்கியமா போயிடுச்சு” என்றார் பாண்டியன். ஆதங்கமாக.
“ஐயா விடுங்க” என்ற வீரன், “போடே காலையில பேசிக்கிடலாம்” என்று லிங்கத்தை இழுத்துக்கொண்டு மாடியேறினான்.
“குரு மூர்த்தி நம்ம ஆலைக்கு ஆள் அனுப்பியிருக்கான் போல… என்னன்னு சூதானமா இருக்கணும் லிங்கு” என்றான்.
“எப்படிண்ணே?”
“அவனை கண்காணிக்க அவென் இடத்திலே ஒரு ஆளை வச்சிருக்கேன்” என்ற வீரன், “ஹோட்டலுல அதீத கவனமா இருக்கணும்டே” எனக் கூறினான்.
லிங்கம் தலையசைத்திட…
“சரிடே… காலையில கொஞ்சம் வெள்ளென எழுந்து எல்லாம் பார்த்துக்க. ரொம்ப அலுப்பா இருக்கு. நல்லா உறங்குனாத்தேன் போவும் நெனக்கேன்” என்ற வீரன், லிங்கம் அவனது அறைக்குள் சென்றதும் தன்னுடைய அறையில் நுழைந்தான்.
மீனாள் எழுந்துவிடக் கூடாதென விளக்கினை போடாது, கண்களை இருட்டிற்கு பழக்கி சத்தமிடாது தன் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து தன்னவளின் அருகில் படுக்கையில் விழுந்தான்.
வீரனின் இருப்பை உறக்கத்தில் உணர்ந்தவள் தன்னைப்போல் அவனை நெருங்கி படுத்தாள்.
“மூச்சு முட்ட வைக்கிறா!” என்று இன்பமாய் திட்டியவன், அவள் மீது கையிட்டு திரும்பி படுக்க வித்தியாசத்தை உணர்ந்தான். அவனது சட்டையை அணிந்திருந்தாள்.
“தங்கப்பொண்ணு” என்று அவளின் மூக்கினை பிடித்து ஆட்டிட விழித்துக்கொண்டாள்.
“வந்துட்டியா மாமா” என்றவள் எட்டி அவன் பக்கமிருந்த இரவு விளக்கின் பொத்தானை அழுத்திட…
“ஹேய் பார்த்து” என்றிருந்தான்.
“பாக்குறதுக்குதேன்” என்றவள், அவனின் கன்னத்தில் அழுத்தமாக கடித்து வைத்தாள்.
“அடியேய்…” என்றவன் கன்னத்தை தேய்த்தவனாக எழுந்து அமர, அவன் மடிமீது துள்ளி அமர்ந்தாள்.
“நெறைய தேட வைக்கிற மாமா” என்றவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“ஒரு நாளுக்கேவா?” வேண்டுமென்றே சீண்டினான்.
“ஒரு நாளோ… ஒரு மணி நேரமோ… என் கூடவே இரு மாமா. நீயில்லைன்னா இந்த ரூமுக்குள்ள இருக்கவே முடியல” என்றாள்.
அவளது சிறு வார்த்தைகளாக இருந்தாலும், அவை யாவும் அவனுக்கான அவளது உள்ளத்து உணர்வுகளாயிற்றே! கரை முட்டும் காதல் அலையில் இதமாக தத்தளித்தான்.
“சாப்பிட்டியா?”
“ம்ம்ம்… நீயி திட்டுவியே. அதேன் சாப்பிட்டுட்டேன்” என்றவள் லிங்கம் செய்த டெஸர்ட் பற்றி சொல்லியவாறு ஏதேதோ பேசிட… வீரனுக்கு உறக்கம் கண்களை சுழற்றியது.
கொட்டாய் எரிந்ததலிருந்து இரண்டு, மூன்று நாட்களாக சரியான உறக்கமின்றி… இன்று நீண்ட பயணத்தின் அலைச்சல் வேறு அவனுக்கு உடலெல்லாம் அத்தனை வலியாகவும் சோர்வாகவும் இருந்தது.
“உறக்கம் வருதா மாமா?”
“ஆமா தங்கம்” என்றவன் கண்களை மூடி அவளின் தோளில் முகம் புதைக்க…
“நேரா படு மாமா” என்று அவன் மடி விட்டு இறங்கிட முயல… அவளை விடாது தன் கை வளைவில் வைத்தவனாக அப்படியே சரிந்து படுத்தான்.
“நீயி இம்புட்டு அலுப்புக்கொள்ள மாட்டியே மாமா. என்ன பண்ணுது?” வீரனின் மூச்சுக்காற்று அனலாக அவளின் முகம் மோத பதற்றத்துடன் கேட்டாள்.
“தலை வலிக்குது தங்கம். உடம்பு கணங்கணன்னு இருக்குது. தூங்கி எழுந்தா சரியாப்போவும். தூங்குடி” என்று தனக்குள் அழுத்திக்கொண்டான்.
“தைலம் பூசி விடுறேன். வுடு மாமா” என்று மீனாள் சொல்லிட அவனிடம் பதிலில்லை. உறங்கியிருந்தான்.
மெல்ல விலகி எழுந்தவள் அவனது நெற்றியில் தைலம் தேய்த்து, காலினை பிடித்துவிட…
“தங்கப்பொண்ணு” என்று விழித்துவிட்டான்.
அவனால் உறங்கவும் முடியவில்லை. காய்ச்சல் வருவதைப்போல் அசதியாக இருந்தது.
“நீயி படு மாமா.”
“காலை விடு மொத” என்றவன் கால்களை குறுக்க…
“ம்ப்ச்… இப்போ புடிச்சா என்னவாம்” என்றவள் வேகமாக இழுத்து தன் மடி வைத்து பிடித்துவிட அவளை தடுக்கும் தெம்புகூட அவனிடத்தில் இல்லை. கண்களை மூடுவதுமாக, தலை வலியில் ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடியாது விழிப்பதுமாக அணத்திக் கொண்டே இருந்தான்.
சிறிது நேரத்தில் வீரனின் உடல் மொத்தமும் காய்ச்சலால் அதீத சூடு கண்டது.
மீனாள் பயந்துவிட்டாள். வெயில், மழை, பனியென அனைத்து பருவ மாற்றத்திலும் கொஞ்சம் கூட முகம் வாடிடாது ஓடி ஓடி வேலை செய்பவன். ஒரு நாளும் காய்ச்சலென்று படுத்தது இல்லை. அவனை இப்படி காணவும் பதறிப்போனாள்.
வேகமாக அறை கதவை திறந்து வெளியேற முயன்றவள், தன் நெற்றியில் தட்டியவளாக அணிந்திருந்த வீரனின் சட்டையை கழட்டி வைத்துவிட்டு லிங்கத்தின் அறைக்கதவை தட்டினாள்.
அரை உறக்கத்தில் கொட்டாவி விட்டவனாக எழுந்து வந்தவன்,
“என்ன மீனாக்குட்டி?” என்றான் கண்களை முழுதாக திறக்காது.
” மாமாக்கு காய்ச்சலடிக்குது. அணத்திக்கிட்டே இருக்கு” என்றவளின் கண்ணீர் கன்னம் இறங்கியது.
“கண்ணை தொட” என்றவன், மீனாளுடன் வீரனை காண செல்ல, உள்ளே நுழைந்ததும் மீனாள் மின் விளக்கினை போட்டாள்.
வீரனை தொட்டு பார்த்தவன்,
“என்ன மீனு இம்புட்டு கொதிக்குது” என்றவன் வேகமாக எழுந்து சென்று காய்ச்சல் மாத்திரையோடு வந்தான்.
மெல்ல எழுப்பி வீரனை மாத்திரை விழுங்கச் செய்ய… அதைக்கூட அவன் உணரும் நிலையில் இல்லை.
“ஹாஸ்பிடல் போவோமா மாமா?”
“இந்நேரம்… ” என்று யோசித்தவன் கீழே சென்று சமையலறையில் கசாயம் வைக்க பொருட்களை எடுத்துக் கொண்டிருக்க… அவன் அரவத்தில் அபி எழுந்து வந்துவிட்டார்.
“என்னடே இந்நேரம் இங்கன உருட்டிட்டு நிக்க?”
“அண்ணேக்கு உடம்பு சூடா இருக்கும்மா. அதேன் கசாயம் காச்சலான்னு” என்றவன் மடமடவென பொருட்களை நீரில் போட்டு கொதிக்க வைத்தான்.
லிங்கம் சொல்லியதும் அபி மாடிக்கு வந்திருந்தார்.
“ஆத்தா மீனாள்…” என்று அவர் அறைக்குள் நுழைய, மீனாள் வீரனின் நெற்றியில் ஈரத்துணியை ஒற்றி எடுத்தபடி இருந்தாள்.
“புள்ளை முனங்கிறானே. அம்புட்டுக்கு காய்ச்சல் அடிக்குதா” என்று தொட்டு பார்த்த அபி, “எப்போல இருந்துத்தா?” எனக் கேட்டார்.
“வரும்போதே தலை வலிக்குன்னு சொன்னாங்க அத்தை. கொஞ்ச நேரத்துல உடம்பு சுட ஆரம்பிச்சிடுச்சு” என்றாள் மீனாள்.
“வெளியில சாப்பிட்டது ஏதும் சேரலையோ?” என்றவர் லிங்கம் கொண்டு வந்த கசாயத்தினை நன்கு ஆற்றி வீரனை பருக வைத்தார்.
“சரியாப்போவுமா அத்தை?” கண்ணீரோடு வினவினாள்.
“ச்சூ… உடம்புன்னு இருந்தாக்கா இப்படி எதாவது வரத்தேன் செய்யும். அதுக்குன்னு உட்கார்ந்து அழுதா ஆச்சா… செத்த நேரத்துல சடசடன்னு வேர்த்து, காய்ச்சல் வுட்டுப்போவும் பாரு. தேம்பிக்கிட்டு இருக்காம படு” என்று அதட்டிய அபி, மருந்தின் தாக்கத்தால் அணத்தலை நிறுத்தி நல்ல உறக்கத்திற்கு வீரன் சென்றதும், லிங்கத்தினை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
“உடம்பு அனலா இருக்கே லிங்கு. அப்புக்கு இப்புடி ஆனதே இல்லையே. மீனாள் முன்னுக்க வெசனப்பட்டாக்கா, அவள் இன்னும் மருகுவாளேன்னு தெம்பா பேசினேன். ஆனால் பயந்து வருதே! காலையில சூடு குறையலன்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போயிட்டு வந்திடு” என்று பனித்த கண்ணீரை துடைத்துக் கொண்டே கீழே சென்றார்.
“இப்போ யாருக்கும் சொல்லாத எம்மோவ்” என்றவன், மீனாளிடம் சென்று, “ஓய்வில்லாத அலைச்சலால வந்திருக்கும். வருந்தாம தூங்குத்தா. இங்கன வராண்டாவில் தான் படுத்திருக்கேன். எதாவதுன்னாக்கா கூப்புடு” என்று கதவை சாற்றிவிட்டு சென்றான்.
உடலின் சூடு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க… மீனாள் உறக்கம் கொள்ளாது, ஈரத்துணியை வீரனின் நெற்றியில் ஒற்றியபடியே அமர்ந்திருந்தாள். அதிகாலை நான்கரை மணியளவில் வீரனை எழுப்பி மீதமிருந்த கசாயத்தை மீண்டும் ஒருமுறை பருக வைத்தவள் தன்னை மீறி உட்கார்ந்த நிலையிலே அவனின் காலில் தலை கவிழ்த்து தூங்கியிருந்தாள்.
நன்கு விடிந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் இருவரும்.
லிங்கம் மெல்ல கதவினை தட்டிவிட்டு திறக்க, மீனாள் உறங்கும் நிலை கண்டு கீழே சென்றான். செல்வதற்கு முன்பு வாசலில் நின்றே வீரனை உற்று நோக்க… உடல் நன்கு வியர்த்திருந்ததை கண்டு ஆசுவாசம் கொண்டான்.
“எம் மவராசனுக்கு உடம்பு சரியில்லையாமேய்யா. உம்ம ஆத்தா இப்போதேன் சொன்னாள். ராத்திரி ரொம்ப நேரஞ்செண்டுதேன் உறங்கினான். செத்த நேரம் கழியட்டும் போயி பாக்கலாமின்னா…” என்று மீனாட்சி சொல்ல…
“முழிச்சிட்டானா?” எனக் கேட்டார் பாண்டியன்.
“பாக்கலாமாடே?” மருதனிடம் வீரனை பார்த்தால் தான் ஆச்சு என்கிற நிலை.
“என்னடே ஆளாளுக்கு கேட்டுகிட்டு இருக்காய்ங்க. நீயி ஒன்னும் சொல்லமாட்டேங்கிற?” மகா.
“அச்சோ அத்தை… இப்போ பரவால. பார்த்துபோட்டுதேன் வாரேன். எந்திரிக்கட்டுமே!” என்றவன், “மீனாக்குட்டி ராவுலாம் தூங்கலையாட்டிக்கும்மா. உட்கார்ந்தவாக்குலே தலை தொங்கி உறங்கிட்டிருக்காள்” என்றான்.
“நான் போயி பார்த்துப்போட்டு வாரேன்” என்று அங்கை வேகமாக செல்ல, அவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தான்.
“ம்ப்ச்… அவிங்களே வரட்டும். நீ போவத்தேவல” என்றான்.
“ஏன்?” சண்டைக்கோழியாக சிலிர்த்தாள்.
லிங்கம் சொல்வதற்கான அர்த்தம் மற்றவர்களுக்கு விளங்கிட… மீனாள் வந்த பின்னர் வீரனை சென்று பார்க்கலாமென்று தத்தம் வேலையை பார்க்க நகர்ந்தனர்.
“அடியேய் சின்னது… அவந்தேன் ரெண்டேறும் உறங்குறாய்ங்கங்கிறானே… அங்கன என்னத்துக்கு தொல்லை பண்ணப்போற?” என்று மீனாட்சி கேட்க,
“நான் போவேன்” என்று கையை உருவ முயன்றவளின் தலையிலே வலிக்க கொட்டியிருந்தான்.
“இதுக்குத்தேன் சின்னப்புள்ளைன்னு சொல்லுறத ஒத்துக்கணுமாட்டி” என்றான்.
“இதுல லவ்சுக்கு குறைச்சல் இல்லை” என்றவன், அவளின் கையை விட்டுவிட்டு முன் சென்றவனாக, “சுபா வந்துச்சே ஆள காண்கில?” என்றான்.
“அட ஆமாம்… அமிழ்தனுக்கு உடம்பு சரியில்லன்னதும் சுபா விசயத்தை மறந்தாச்சே! எங்க இவீங்க ரெண்டேறும்?” என்று மகா, பாண்டியன் மற்றும் மருதனை தேட இருவரும் கண்ணில் அகப்படவில்லை.
“தோப்புக்கு கெளம்பியாச்சு” என்று அபி சொல்ல…
“அமிழ்தன் வந்து சொல்லுவானாக்கும்” என்று வெளியிலிருந்து குரல் கொடுத்தார் மருதன்.
பாண்டியன் உள்ளே வந்து, “சுபாகிட்ட எதுவும் கேட்டுக்கிட்டு இருக்காதீங்க. புள்ளை இப்போதேன் கொஞ்சம் தெளிஞ்சிருக்கு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
“அப்படி என்ன ஆட்டம் ஆடுனா(ள்) அந்த வசந்தி?” என்று தாடையில் கை வைத்தார் மீனாட்சி.
************
எட்டு மணியளவில் வீரன் மெதுவாக கண்களை சுருக்கி இமை திறந்தான். காலினை அசைக்க முடியாத பாரம் உணர்ந்து என்னவென்று பார்த்தவன், மீனாள் உறங்கும் நிலை கண்டு,
‘ராத்திரிலாம் உறங்கவே இல்லையாட்டுக்கு’ என்று நினைத்தவனாக அவளை மெல்ல தூக்கி சரியாக படுக்க வைக்க முயல அவனது தொடுகையிலே நன்கு விழித்துவிட்டாள்.
“காய்ச்சல் போயிடுச்சா மாமா?
“இப்போ எப்படி இருக்கு?
“தலை வலிக்குதா மாமா?
“இங்குட்டு…” என்று அவனின் நெற்றி, கழுத்து, கன்னமென கை வைத்து தொட்டு பார்த்தவள் உடம்பு சில்லென்று இருக்கவும் ஆசுவாசமாக, இதழ் குவித்து காற்றினை ஊதியவளாக நிலைகொண்டு அமர்ந்தாள்.
வீரன் அவனுக்கான அவளின் துடிப்பையே கருமணி அசையாது பார்த்தான்.
“பாதி ராவுல பயம் காட்டிட்டியே மாமா. இப்போ பரவால்லையா?” எனக் கேட்டாள்.
வீரன் அவளுக்கு பதில் சொல்லாது இருக்க…
என்னவென்று புருவம் உயர்த்தினாள்.
வீரன் தன்னிரு கைகளை சிறகாய் விரித்திட, மின்னலென அவனுள் புகுந்திருந்தாள்.
மீனாளின் உச்சியில் நாடி பதித்தவன், அவளை கையால் அணையிட்டு இறுக்கிக்கொண்டான்.
“இப்போ பரவால தங்கம். சோர்வா இருக்கு. அம்புட்டுதேன்” என்றவன், “ராவுலாம் தூங்கலையா?” எனக் கேட்டான்.
“எப்படி தூங்க மாமா?” என்றவள், “இனி இப்படி அலைஞ்சி ஓஞ்சிப்போவ வேணாமாட்டிக்கு. ஐயா, மாமா, லிங்குன்னு இருக்கோமில்ல… நீயி மட்டுந்தேன் எல்லாம் பார்க்கணுமில்லை” என்றாள். தழுதழுப்பாக.
அவன் அணிந்திருந்த பனியன் மீது மார்பு பகுதியில் இதழ் ஒற்றியிருந்தாள்.
“சாதாரண காய்ச்சல் தான். இப்ப வுட்டும் போச்சுதேன். ஆனால் மனசு படபடத்துப்போச்சு மாமா. உனக்கு ஒன்னுன்னாக்கா வூட்டுல யாருக்கும் கலையிருக்காது மாமா. உன்னை எப்பவும் ஓட்டமா பார்த்து, இப்படி படுத்து கிடந்ததை… சத்தியமா முடியல மாமா” என்று விசும்பினாள்.
மீனாளின் தன்மீதான பாசம் அறிந்தவன்… என்ன சொன்னாலும் அவளை ஆறுதல் படுத்த முடியாதென, பேச்சினை மாற்றினான்.
“ராத்திரி வேற ட்ரெஸ் போட்டுருந்தியாட்டுக்கு?” என்றான். இதழில் நெலிந்த குறும்பு சிரிப்போடு.
“இல்லையே மாமா. இதுதேன் உடுத்தியிருந்தேன்” என்றவள், “அப்படியா?” என்ற அவனின் கள்ளப்பார்வையில் நினைவு வந்தவளாக,
“உன் வாசம் இல்லாம தூக்கமே வரல மாமா. அதேன் உன் சட்டையை எடுத்து போட்டுக்கிட்டு படுத்தேன். நீயே கூட இருக்காமாறி இருந்துச்சு மாமா. ஃசேப் பீல். தனியா இருந்த மாதிரியே தெரியல” என்றவள் அவனின் அணைப்பு இறுகவும்… “ஷ்ஷ்” என்றாள் வலியில்.
“வலிக்குதாக்கும்?” அவளின் நெற்றி முட்டினான்.
“ஆனால் நல்லாயிருக்கு மாமா” என்றவள், “கீழ போவோம் மாமா. உனக்கு என்னவோன்னு மாடியையே பார்த்துகிட்டு கிடப்பாய்ங்க” என்றாள்.
“ரொம்ப அசதியா இருக்கு தங்கம். நீ போ. அவிங்களே மேல வருவாய்ங்க” என்றவன், மீனாள் எழுந்ததும் தலையணையை முதுகுக்கு சாய்த்து வைத்து கால் நீட்டி அமர்ந்து, அலைப்பேசியை கையில் எடுக்க, வெடுக்கென பறித்திருந்தாள். அதனை அணைத்தும் வைத்தாள்.
“ஆஃப் பண்ணாதத்தா!”
“இன்னைக்கு ஒரு நாளாவது எந்த சோலியும் வச்சிக்காம ஓய்வெடு மாமா. விட்ட காய்ச்சல் திரும்ப வரப்போவுது” என்றவள், குளியலறைக்குள் புகுந்து வெளி வந்த நேரம்…
“ஹீட்டர் ஆன் பண்ணியிருக்கேன். உடம்பை கழுவிக்கோ மாமா. சாப்பிட கொண்டாறேன்” என்று கீழே சென்றாள்.
“சாமி எழுந்தாச்சா ஆத்தா?”
மீனாள் கீழே வரவும் அவளின் வருகைக்காகவே காத்திருந்த மீனாட்சி கேட்டார்.
“இப்போதேன் எழுந்தாங்க அம்மத்தா. குளிக்க போயிருக்காக. பத்து நிமிசம் செண்டு போங்க” என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“கஞ்சி வைக்கலையா அத்தை?”
“சோறு வடிச்சிட்டேன் மீனாள். காச்சி வச்சாக்கா சூடு ஆறிப்போவுமே அப்பு எழுந்ததும் கஞ்சி வச்சிக்கலான்னு இருந்தேன்” என்று அபி சொல்ல, சிறு பாத்திரத்தை எடுத்தவள் வடிந்த கஞ்சியில் வெந்த சாதம் கொஞ்சம், சீரகம், ஐந்தாறு பல்லு பூண்டு, உப்பு போட்டு கொதிக்க வைத்தாள்.
அடுத்து அவள் துவையல் அரைக்க தேவையானவற்றை எடுக்கவுமே மாகவும், அபியும் வெளிவந்து மீனாட்சியின் அருகில் அமர்ந்தனர்.
“எனக்கு மனசே நெறைஞ்சுபோவுது மதினி” என்றார் அபி. மகாவிடம்.
“எனக்குந்தேன் மகா. என்னதேன் அன்னைக்கு அமிழ்தனைத்தேன் கட்டிக்குவேன்னு மீனாள் சொன்னாலும், எங்களுக்குள்ள மனஸ்தாபம் சேர்த்து சொன்னது உள்ள துரும்பா உறுத்திக்கிட்டே இருந்துச்சு. நாலு நாளிலே ரெண்டேறும் கண்ணை நெறக்க வச்சிட்டாய்ங்க. காலத்துக்கும் இப்படியே சந்தோஷமா வாழ்ந்துட்டா போதும்த்தா” என்று கூறினார் மகா.
“நீங்களுவளே கண்ணு வைக்காதீங்கட்டி. அதேன் புள்ளைக்கு காய்ச்சல் வச்சிட்டு” என்று அதட்டிய மீனாட்சி, “சாயங்காலம் மாடு கண்ணு வர நேரம், ரெண்டேரையும் ஒட்டுக்கா உட்காத்தி வச்சு சுத்திப்போடனுமாட்டிக்கு” என்றார்.
“என்ன மாநாடு போட்டுட்டீங்க. மாமா எந்திருச்சாச்சா?” என்று நாச்சியுடன் அங்கை கேட்டபடி வர, உடன் சுபா. சுபாவின் கையில் கட்டினை பார்த்தபோதும், பாண்டியன் சொல்லிச் சென்றதால் யாரும் அதைப்பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
“போயி பார்த்துப்போட்டு வருவோம்” என்று மீனாட்சி தரையில் கை ஊன்றி எழ, வீரனே படியிறங்கிக் கொண்டிருந்தான்.
“என்னய்யா நாங்களே மேல வந்திருப்போமே!” என்ற மீனாட்சி பேரனின் முகம் தொட்டு காய்ச்சலை பார்க்க…
“சரியாப்போச்சு அப்பத்தா. நான் வரலன்னாக்கா நீயி படியேறி வந்துடுவியே. பொறவு மூட்டு நோவுதுன்னு சுணங்குவ. வெந்நீரில் குளிச்சதும் நல்லாயிருந்துச்சு. அதேன் நானே வந்துட்டேன்” என்றவன், “ஆளாளுக்கு எப்படி இருக்குன்னு கேட்காதீங்க… தங்கமே ஆயிரம் வாட்டி கேட்டு படுத்திட்டாள்” என்று மெல்லியதாக சிரிக்க… மற்றவர்களுக்கு அவனின் தெளிந்த முகம் கவலையை போக்கியது.
இருக்கையில் அமர்ந்த, வீரனின் விழிகள் மீனாளை தேடியது.
“அக்காவை தேடுறியா மாமா?” அங்கை அவன் காதில் கேட்டிட…
“தெரியுதுல… போ கூட்டியா!” என்றான் வீரன்.
அங்கை அவனை அசடு வழிய வைக்க நினைத்து கேட்க, வீரன் அவளை தோற்க வைத்திருந்தான்.
“ரொம்ப வெவரந்தேன் மாமா நீயி” என்றவள் அவனுடன் அமர்ந்து கதை பேசத்துவங்க, நாச்சி, சுபாவும் இணைந்து கொண்டனர்.
“இந்த காய்ச்சல் வந்து அமிழ்தனை இப்படி ஓடாம உட்கார வச்சிருக்கு” என்று அபி சொல்ல மகா ஆமாமென்றார்.
இல்லையென்றால் இந்நேரத்திற்கு, வயல், ஆலை, தோப்பென பம்பரமாக சுழன்று ஓடியிருப்பானே!
“கதை பேசினது போதும். நகருங்க” என்று வந்த மீனாள், வீரன் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னிருந்த டீபாயில் அவனை பார்த்தவாறு அமர்ந்திட…
“விட்டா மாமா மடி மேல உட்காருவ போலிருக்கே” என்று கேலி செய்தாள் அங்கை.
“மடியில இல்லை… தோளு மேல கூட உட்காருவேன் உனக்கு என்னட்டி” என்ற மீனாள், “எந்திருச்சு போடி” என்றிருந்தாள். கொண்டு வந்திருந்த கஞ்சியினை ஆற்றிக்கொண்டே.
“உரிமை இருக்குது சின்னக்குட்டி” என்ற நாச்சி, “இப்போ இங்கன நாம அதிகப்படி. வா அப்படிக்கா போவோம்” என்று மீனாளை பார்த்து சிரிக்க…
“மதினி நீங்களுமா?” என்று சிணுங்கினாள் மீனாள்.
“கட்டுத்தரிக்கு ஆளு வந்து சோலி பார்த்துகிட்டு இருக்கு. நேரமாச்சே! அங்கன வாவடிக்காம சாப்பாடு கொண்டு போங்கட்டி” என்று மூவரையும் மீனாட்சி விரட்டியவாறு, அபி, மகாவை ஏறிட…
“நாங்க ரெண்டேறும் மாடுவகிட்ட போறோம் ஆத்தா” என்று சொல்லிய மகா கையோடு அபியையும் இழுத்துச் சென்றார்.
“நான் செத்த திண்ணையில் காத்தாட உட்காருறேன்” என்று மீனாட்சியும் வெளியேற,
“எல்லாரையும் வெளிய துரத்திட்ட நீயி” என்று சிரித்தான் வீரன்.
“உன்னைய யாரு கீழே வர சொன்னது மாமா. மேலவே படுத்திருக்க வேண்டியதுதானே?” என்றவள், “கஞ்சியை நல்லா கடைஞ்சிட்டேன்” என்றவாறு குவளையில் ஊற்றி அவனின் கையில் திணித்தவள், “எள்ளு துவையல் மாமா. நல்லா காரமா இருக்கு. காய்ச்சலுக்கு நாக்குல சுள்ளுன்னு இருக்கும். தொட்டுகிட்டு நாலு கிளாஸ் குடிச்சிப்போடு” என்றாள்.
“நீயி சாப்பிட்டியா?”
“நீயி குடி மாமா. நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றவள் தன் விரலால் துவையலை எடுத்து அவனின் நாவில் தடவ, அவன் கஞ்சியினை பருகினான்.
“போதும்த்தா… இதுக்கு மேல முடியாது” என்றவனிடம் சோர்வு இருக்கத்தான் செய்தது. தெம்பாகக் காட்டிட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
மாத்திரை கொடுத்து விழுங்க வைத்தவள், “ஹாஸ்பிடல் வேணுமின்னா போவோமா மாமா?” எனக் கேட்டாள்.
“ம்ப்ச்…” என்று இமை மூடி பின் சாய்ந்தவன், “இன்னொருக்கா மாத்திரை போட்டிருக்கே சரியாப்போவும் தங்கம்” என்றான்.
“பொய் சொல்லாத மாமா. எந்திரிக்கும்போது நல்லாயிருந்த. இப்போ மறுக்கா சோந்துப்போற” என்றாள். வீரன் சுணங்கி போக அவளின் மனம் சுருண்டு போனது.
“ஒன்னுமில்லத்தா. அசதிதேன்” என்றவன், “உட்கார்ந்தே கிடந்தா இப்படித்தேன் இருக்கும். நான் போயி சோலியை பாக்குறேன்” என்று எழுந்தவனை இழுத்து அமர வைத்தவள், தன்னிரு பக்கமும் இடையில் கையை குற்றி புசுபுசுவென மூச்சினை வெளியேற்றியவளாக முறைத்தாள்.
சமையலறையில் இருந்ததால், சேலை தலைப்பை இழுத்து இடை சொருகியிருந்தாள். அவளின் பளிங்கு இடை அவள் கை குற்றியதில் அங்கு கவனித்து பார்க்க வைத்தது.
‘ஷ்ஷ்ஷ்…’ என்று பெருமூச்சு விட்டவன், “உசுரை சுருட்டி இழுக்கிற தங்கம். நல்லவனா இருக்க விடமாட்டியே” என்று அவளின் கை பதிந்த இடத்தில் தன்னுடைய உள்ளங்கையை அழுத்தமாக வைத்து தனக்கு அருகில் இழுத்தான்.
நூலிழை இடைவெளி.
வீரன் சட்டென்று இப்படி கை வைத்து பக்கம் இழுப்பானென்று எதிர்பாராதவளிடம், அவனின் வெம்மை இதயத்தை சிலிர்ப்படைய வைத்தது.
“மாமா!” கற்றாகிப்போன குரலில் முனங்கினாள். அவனின் கூர் விழிகள் அவளின் மான் விழிகளை பார்வையால் கவ்விக்கொள்ள… இருக்குமிடம் உணர்ந்து பதறி நின்றவளுக்கு, அவனை விட்டு விலக மட்டும் மனமில்லை.
வீரனின் முகம் மீனாளின் முகம் நோக்கி குனிய தன்னைப்போல் அவளின் அதரங்கள் திறந்து இமை குடை மூடியது.
செங்கொழுந்தாய் சிவந்து நின்றவளின் நெற்றி முட்டியவன்,
“நடு கூடத்துல நிக்கிதோம். நெனப்பை பாரு” என்று கன்னம் அதக்கிய புன்னகையோடுக் கூற,
“நான் கேட்டேனா?!” என்று சிலிர்த்தவள், அவனின் மீசை நுனியை வலிக்க இழுத்தவளாக, “சேட்டை கூடிப்போச்சு மாமா உனக்கு” என்று ஓடிவிட்டாள்.
“என் பொண்டாட்டி செய்யுற சேட்டையை விட கம்மித்தேன்” என்று அவளின் முதுகை தீண்டிய வீரனின் சிரிப்பு நிறைந்த வார்த்தைகள், அப்போது வீடு நுழைந்த மருதன், பாண்டியனின் செவிகளையும் அடைய, அவர்களுக்கு பின்னால் வந்த லிங்கமும் கேட்டு, சட்டென்று நின்றுவிட்ட அவர்களின் முதுகில் முட்டி நின்றான்.
“ம்க்கும்… அவுங்க ரெண்டேறு சேட்டையும் இதைவிட அதிகமாட்டி இருக்குது. செவுளுல கேட்காதமாட்டிக்கு உள்ள போவோம் வாங்க” என்ற லிங்கத்திடம்,
“அதுல உனக்கு வெசனமாட்டிக்கு?” என்று பாண்டியன் கேட்க,
“உனக்கும் பொண்ணை பார்த்து முடிச்சிப்புடுவோமா?” எனக் கேட்டார் மருதன்.
“பெரிய கும்புடு” என்று இருவரையும் உள்ளே தள்ளிச்சென்றான் லிங்கம்.
வீரன் டீபாயின் மீது கால் நீட்டியவாறு இருக்கையில் சாய்ந்து கண் மூடியிருந்தான். உண்மைக்கும் அவனால் முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் வருந்தக்கூடாதென முயன்று அமர்ந்திருக்கிறான்.
“அப்பு அமிழ்தா!”
“ஐயா!” கண்களை திறந்தவன், தந்தையின் வாஞ்சையான பார்வையில், “நல்லாயிருக்கேங்க” என்றான்.
“நெசம் தானா?” மருதன் கேட்டிட,
“ஆமா மாமா” என்க, லிங்கம் நம்பாது பார்த்தான்.
“என்னடே அப்புடி பாக்குற?”
“சும்மா” என்றவன் வீரனின் அருகில் ஒட்டி அமர்ந்து, “செமயா லவ் பண்ணுறண்ணே” என்று கிசுகிசுக்க… வீரன் திருதிருத்தான்.
லிங்கத்தின் வார்த்தையிலும் வீரனின் அசட்டு பார்வையிலும் பெரியவர்கள் இருவரும் சத்தமாக சிரித்துவிட…
‘எல்லாம் இந்த தங்கப்பொண்ணுவால’ என்று உள்ளுக்குள் தன்னுடைய தங்கத்தை செல்லமாக சீராட்டினான் வீரன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
35
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super
Veeran semaya love panuraru
Thank You ❤️❤️
கூட்டுக்குடும்பம் இந்த மாதிரி அழகா இருக்கணும்