
இன்று
காற்றிலும் காதல் நிரம்பியிருந்த அந்த அறையில் இருந்த நதிப் பெண் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு நீரில் நீந்துவது மிகவும் பிடிக்கும். ஆனால் மற்றவரின் முன்னிலையில் நீந்துவதைத் தவிர்ப்பாள். இதை அவளின் டைரியில், யாருமில்லா நீச்சல் தடாகத்தில் நீயும் நானும் காதலெனும் மழையில் முழுவதுமாய் நனைய ஆசை, உன் சுட்டு விரலின் தீண்டலில் கரைய ஆசை கொண்டேன் என் தீரா. என எழுதியிருக்க அதைப் படித்த தீரா, அவளுடைய பிறந்த நாளன்று இதை ஏற்பாடு செய்திருந்தான்.
நீச்சலடித்து முடித்துவிட்டு, அவளுக்காக அவன் வாங்கிக் கொடுத்த மஞ்சள் நிற புடவையில் பிங்க நிற பூக்கள் பூத்திருக்க, அதை உடுத்தியிருந்த நதியோ, தீராவை குறுகுறுவெனப் பார்த்தாள்.
“நதி.! இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம், மறுபடியும் நீச்சலடிக்கணுமா என்ன.?” உதட்டுக்குள் புன்னகையைப் புதைத்து கேட்டான் தீரேந்திரன்.
“தீரா என்னோட ஆசைக்காக ப்ரைவேட்டா ஸ்விம் பண்ணுறதுக்கு ஏற்பாடு செஞ்சீங்க ஓகே, பட் இந்த ஃபளவர் டெக்கரேஷன்லாம் எதுக்கு.? இதைப் பார்த்து எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா” அவளின் நீல நயணங்கள் அழகாய் விரித்துப் பேச,
“ஓ அதுவா..?” எனச் சிரித்தவனின் கன்னக்குழியழகை ரசித்தாள் நதி பெண்.
“அப்போ என்ன பயமுறுத்தி அதைப் பார்த்து சந்தோச படுறதுக்குத் தான் இந்த ஏற்பாடு அப்படித் தானே” போலியாய் கோபம் கொண்டாள்.
“ஏய் நதிமா உனக்குக் கோப்படக் கூடத் தெரியலை பார்றேன், உன்ன கஸ்டபடுத்தணும்னு பண்ணலைமா” அவன் உரிமையாய் பேசுவதில் உருகி நின்றாள் கோதையவள்.
“அப்போ எதுக்கு இப்படிப் பண்ணீங்க.?”
“ப்ரைவெட் நீச்சல் குளம் எல்லா இடத்துலையும் புக் ஆகிருச்சு, இங்கே மட்டும் தான் இருந்திச்சு, பட் இந்த ப்ரைவேட் ரூம் ஹனிமூன் கப்பிள்ஸ்க்கு மட்டும் தான் ஸ்பெசல் டெக்கரேசனோட தருவாங்களாம், அதான் புக் பண்ணிணேன். எனக்கு உன்னோட ஆசையை நிறைவேத்தனும், அவ்வளவு தான் தோணிச்சு நதி. நான் உன் வாழ்க்கையில வந்ததுக்கு அப்பறம், எதுக்கும் ஏங்கிடக் கூடாதுன்னு நினைக்குறேன், உன்னோட சிரிச்ச முகத்தை மட்டுமே பார்க்கணும்னு நினைக்குறேன் அது தப்பா.? இதெல்லாம் உன்ன இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காக நான் செய்யலை நதி” கோர்வையாய் பேச,
“அப்பறம் எதுக்குச் செஞ்சீங்க.?”
“நீ கடந்து வந்த சில கசப்பான பாதைகளை மறக்கணும், அதனால் உன் வாழ்க்கையின் சந்தோச தருணங்களை, என்னால எவ்வளவு நிரப்ப முடியுமோ அதைத் தொடர்ந்து செய்வேன் நதி, ஒரு தலைக் காதாலாக இருந்தாலும் அதிலிருந்த உண்மையை என்னால உணர முடியுது நதி” என அவன் நீளமாய்ப் பேசி முடிக்க,
“இதுக்கு முன்னாடி அம்மா அப்பாக்கு அப்பறம், என் மேல இவ்வளவு பாசமா இருந்தது கார்த்தி மட்டும் தான், இப்போ நீங்க இருக்கீங்க கார்த்தி என் கூட இல்லை, என்னோட உண்மையான நண்பனும் , என்னோட காதலனும் நட்பாய் இருக்கணும்னு ஆசை பட்டேன் தீரா, இது கனவாவே போயிரும்ன்னு பயமா இருக்கு, எதுக்குப் பொய் சொல்லிகிட்டு உள்ள இருக்கான்னே தெரியலையே தீரா” அவள் மீண்டும் வருத்தமாக,
“ஏய் நதி பார்த்தியா.? எவ்ளோ எமோஷ்னல் ஆகுற, உனக்கு இன்னைக்கி பிறந்த நாள் அதுக்காக க்ரை பேபி ஆகிறாதே நதி” அவளைத் தேற்ற முயற்சித்தான்.
“ஒவ்வொரு பர்த்டேக்கு அவனோட விஷ்தான் ஃபர்ஸ்ட்டா இருக்கும் தீரா, நானே மறந்து போயிருந்தாலும், என்னோட பிறந்த நாளையே அவன் தான் எனக்கு நினைவு படுத்துவான் தீரா” என அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே அவள் கைகளில் ரகசியமாய் ஒரு பொருளை திணித்தான் தீரேந்திரன்.
“தீரா இது உங்களுக்கு யாரு கொடுத்தது.?” எனப் பேசியவளின் விழிகள் தானாய் நீர் சுரந்தது.
“அது உனக்கே புரிஞ்சிருக்கும் நதி, நீயே கெஸ் பண்ணு”
“கார்த்தியா கொடுத்தான்.? நிஜமா கார்த்தியா கொடுத்தான்.?”
“நீ என்ன நினைக்கிற.?”
“இந்தப் பொருளை கார்த்தியால மட்டும் தான் கொடுக்க முடியும், இது நான் அவனுக்குப் பிரசன்ட் பண்ணினது” எனச் சொன்னவளின் விழிகளில் தாரை தாரையாய் வழிய, தன் விரல் கொண்டு அதைத் துடைத்துவிட்டவன்.
“என்ன ஏதுன்னு என்கிட்ட கேட்காத நதி. நம்மளோட கல்யாணத்துக்கு உன் ஃப்ரெண்டு கார்த்தி இருப்பான், இது தான் நான் உனக்குச் செஞ்சு கொடுக்கிற பர்த்டே ப்ராமிஸ்” என அவள் கைபற்றி உறுதியளித்தான்.
“கார்த்திகிட்ட பேசுனிங்களா தீரா.? அவன் ஏன் என்கிட்ட பேச மாட்டேன்றான், உங்க கிட்ட எதாவது சொன்னானா.?” அவள் மனம் அவனைப் பார்க்க ஏங்கியது.
“இந்த ப்ரேஸ்லெட்டை அவன் தான் கொடுத்தான், நீ அவனுக்கு ஃப்ரெண்ட்ஷிப் டேக்கு ப்ரெசண்ட் பண்ணினதா சொன்னான், உனக்குப் பர்த்டே விஷஸஸ் சொல்ல சொன்னான், தீரா என்ன சொன்னாலும் கேட்க சொன்னான்” என அவன் சொல்லி புன்னகைக்க,
“அந்தக் கடைசியா சொன்னீங்களே அதைக் கார்த்திச் சொன்னானா.?” சந்தேகத்துடன் அவனை ஏறிட்டாள் அவனின் காதல் நதி.
“ஆமா சொன்னான், தீரா சொல்றதை நீ கேட்டு நடந்துக்கோன்னு”
“உங்க கிட்ட பேசினவன் எதுக்காக என்கிட்ட பேச மாட்டேன்றான் தீரா.?”
“அதுக்கு ஒரு காரணம் இருக்கு நதி, அதனால அதைபத்தி பேச வேண்டாம்”
“என்ன தான் சீக்ரெட் ஆப்ரேசனோ, கட்டிக்க போற பொண்ணுகிட்ட சொல்லக் கூடாத சீக்ரெட்” எனச் சலித்துக்கொண்டாள் நதி.
நதியை வீட்டில் விட்டு விட்டு செந்தமிழனை சந்திக்கச் சென்றான்.
*********
நாட்கள் மெல்ல கரைந்தோட அன்றைய நாள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் தீரேந்திரன். அவனின் வாக்கி டாக்கி கரகரத்துக்கொண்டே இருக்க, ஈசிஆர் பகுதியில் தன் ஜீப்பை இயக்கிக் கொண்டிருந்தான் தீரேந்திரன்.
இருள் சூழ்ந்த சென்னை மாநகரின் கிழக்குக் கடற்கரைசாலையில் அமைந்திருந்தது அந்தப் பங்களா, நிலவோ கொஞ்சம் கொஞ்சமாய் இரவை விழுங்கிக்கொண்டிருந்தது. ஆகாய நட்சத்திரமோ நீச்சல் குளத்தின் பிரதிபலிப்பில் தன் அழகை ரசித்துகொண்டிருக்க, நிலவும் அவர்களோடு சேர்ந்துக்கொண்டு குதுகலித்தது.
இந்த இரவுக்குத் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லாதவன் போல், நீச்சல் குளத்தின் அருகில் நெகிழி நாற்காலிக்கு தன் உடலை கொடுத்திருந்தான் அந்தக் கடைநிலைக் காவலன். சீருடையுடன் அவனுக்குக் கொடுத்திருந்த வேலையைப் பாராது.வேறு வேலையில் படு பிசியாக இருந்தான்.
அதற்கு உதாரணமாய் அவன் செவிகளைக் கைப்பேசிக்குக் கொடுத்திருந்தான். அவன் இதழ்கள் முணுமுணுப்பாய் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது.
“நீ சாப்பிட்டியா வித்யா..?” அவன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவளிடம் கேட்டான்.
“சாப்பிட்டேன்டா சமர், சப்பாத்தியும் குருமாவும்” இவனுக்குப் பதில்கொடுத்தாள் வித்யா.
“நீ சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை கேக்குறியாடி., அவன் அவன் டியூட்டில வெந்து செத்துகிட்டு இருக்கான் ஆசையா நாலு வார்த்தை பேசுறியா.?” பொய்யாய் கோபம் கொண்டான் சமர்
“ஆமா நீ என்ன பதில் சொல்லுவன்னு எனக்குத் தெரியாது பாரு, எதாவது காட்டு பங்களால போய் உட்கார்ந்துகிட்டு,கோட்டான் மாதிரி முழிச்சிட்டு இருப்ப, பேருக்கு தான் கவுர்மெண்ட்டு உத்யோகம், உனக்கு டைம் பாஸ்க்கு எனக்குப் போன் பண்ணியிருக்க, இதுல இந்த உத்தமரு சாப்பிட்டார்ன்னு நாங்க விசாரிக்கணும்., ஹம்ம்” என உதட்டை சுழித்தாள் வித்யா.
“எங்க ஊருல வந்து கேட்டுபாரு, இந்தப் போலீஸ்காரன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துதுன்னு, இப்ப கூட இத பங்களால மோகினி என்கிட்ட பேச ஆசையா காத்திகிட்டு இருக்கா., நான் தான் என் வித்யா தான் எனக்கானவன்னு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.” அவன் நக்கலாய் பேச.
“போடா போ., அந்த மோகினி கூடவே குடும்பம் நடத்து, நான் போனை வைக்குறேன்”
“ஏய் இந்தாடி வித்யா , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்”என அவளைச் சமாதானம் செய்ய முயன்றபடி, அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
“என்னடா அது சத்தம்.?”
“வந்த வேலையைப் பார்க்க வேண்டாமா..? மினிஸ்டர் சீன்ன வீட்டோட பங்களாக்குப் பாதுகாப்பு வந்திருக்கேன், பங்களாவை சுத்தி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வர்றேன் அப்படியே பேச்சு கொடுடி தங்கம்” அவன் துாபம் போட அவளும் காதலனுக்குத் துணையாய் பேசிக்கொண்டிருந்தாள் வித்யா.
நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது, அவனும் டார்ச்சின் துணையோடு காதலியுடன் பேசியபடி பங்களாவை சுற்றி பார்த்து விட்டு யாரும் இல்லையென மீண்டும் நீச்சல் குளத்தின் அருகே இருந்த நாற்காலிக்கு வந்து தன் உடலைக் கொடுத்தவனின் கண்களுக்குக் கிடைத்தது அந்தக் காட்சி.
பங்களா திடீரென இருள் நீங்கி ஒளி பெற ஆரம்பித்தது. ஆளில்லா வீட்டில் மின்விளக்குகள் ஒளிர்வதைப் பார்த்து சமருக்குள் பயம் தொற்றிக்கொண்டது. துரிதமாய்ச் செயல்பட்ட சமர்.
“வித்யா அப்பறம் போன் பண்ணுறேன்டி முக்கியமான வேலை” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அவன் இதயம் படபடக்கத் துவங்கியது, காக்கிச் சட்டை போட்ட காவலனாய் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, பங்களாவின் தலைவாசலில் நின்றவன் ஓங்கி கதவை தட்டினான்.
“யாரவது இருக்கீங்களா..?” என அவன் கேட்டவுடன் வீட்டின் மின் விளக்குகள் மின்னி மின்னி எரிந்தது.
அருகே இருந்த கண்ணாடி ஜன்னலை நெருங்கிய சமர், அவசரமாய்க் கண்ணாடியை துடைத்து விட்டு வீட்டினுள் யாரவது இருக்கிறார்களா என்று பார்த்தான்.
சிவந்த விழிகளும், தலைவிரிக்கோலாமாய் இருந்த அந்த அமானுஷ்ய உருவம் கண்ணாடி ஜன்னல் வழியே, குருதி வழிந்த வாயுடன் பற்களை ஈயெனக் காட்ட, பார்த்த நொடியில் அலறியபடி பங்களா கேட்டை நோக்கி தலைத்தெறிக்க ஓடியவனைப் பார்த்து அந்தப் பெண் உருவம் மர்மாய்ச் சிரித்தது.
கேட்டின் வெளியே வந்தவன், எதிரே இருந்த கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சமர். அவனின் கரங்கள் பயத்தில் பிசுபிசுத்தது உச்சி முதல் பாதம் வரை உடல் சிலிர்த்துப் போனது. உடனே தன் நண்பன் சேகருக்கு செல்பேசி மூலம் அழைப்பு விடுத்தான்.
“டேய் ****** மச்சான்” கோபத்துடன் சேர்ந்த பயத்தில் திட்டினான் சமர்
“அடேய் சமர் அர்த்த ராத்திரில போன் பண்ணி கெட்ட வார்த்தையில திட்டுறியே ஏன்டா..?” தூக்கம் களைந்து விழிகளைக் கசக்கியபடி கேட்டான் சேகர்.
“மச்சான் சேகரு இந்தப் பங்களாக்கு வந்தா, கெட்ட வார்தை என்ன.? எல்லாமே வெளிய வந்திரும்டா. உன்னால இந்தப் பேய் பங்களாவுக்கு வந்து பேய்கிட்ட மாட்டிகிட்டேன்டா” திக்கி திணறி சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தான்.
“அதுக்கு நான் என்னடா பண்ணுவேன் நீ தான் பீச் பங்களாக்கு போகணும் காவல் காக்கணும்னு ஆசைப்பட்ட, அதுவும் மினிஸ்டர் பங்களா என்ஜாய் பண்ணுடா மச்சான், நான் துாங்க போறேன்” எனச் சேகர் சொல்ல,
“அடேய் ஒரு வழியைச் சொல்லுடா, விடியுற வரைக்கும் உயிரை பிடிச்சிட்டா இருக்கணும்,லைட்டு வேற அணைஞ்சு அணைஞ்சு எரியுதுடா பாவி பயலே” அடி வயிறு கலங்க பேசினான்.
“டேய் சமர் கவலைபடாதடா, தீரா சார் அந்த ஏரியால தான் ரவுண்ட்ஸ்ல இருப்பாரு ஹெல்ப் கேளுடா, எதாவது பண்ணுவாரு” என அறிவுறுத்தினான் சேகர்.
“டேய் நாய் சேகரு முதல் முறையா ஒரு நல்லா காரியம் பண்ணிருக்கடா, அவர்கிட்ட பேசுறேன்டா நாயி., உயிரோட இருந்தா நாளைக்குப் பார்ப்போம்டா மச்சான்.”
“குட் நைட்டு மோகினி ட்ரீம்ஸ்டா சமரு” என நக்கலாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் சேகர்.
நடுநிசி இரவு அன்று ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்., போலீஸ் ஜீப்பை மெதுவாய் ஓட்டியபடி ஒவ்வொரு தெருவாய் அலசி ஆராய்ந்துக்கொண்டிருந்தான்.
மக்கள் உறங்கும் சமயம், சமூக விரோதமான செயல்கள் நடந்து விடக் கூடாது என்று எப்போதாவது ரோந்து பணிக்கு வருவது தீரேந்திரனின் வழக்கம்.
தன் வேலையைச் செவ்வண்ணே செய்து கொண்டிருந்த சமயம்
தீரேந்திரனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது, டீ கடை நோக்கி செல்ல ஜீப்பை திருப்பிய கணத்தில் வாக்கி டாக்கி அலறியது.,
“தீரா சார், தீரா சார்.! ஓவர் ஓவர்” பதற்றத்தில் ஒலித்தது சமரின் குரல்.
“யோவ் சமர், என்னயா நேரங்கெட்ட நேரத்துல என் பேரை ஏலம் விட்டுட்டு இருக்க” என உயர்நிலைக் காவலனாய்ப் பேசினான் தீரேந்திரன்.
“சார் மோகினி சார், பயமா இருக்கு சார் ப்ளீஸ் சார் வாங்க”
“யோவ் எந்தக் காலத்துலயா இருக்கீங்க, பேய் பிசாசுனுட்டு, மினிஸ்டர் பங்களா தான பதறாம இரு வர்றேன் ஓவர்” எனச் சொல்லி வாக்கி டாக்கியை கட் செய்தவன் அமைச்சரின் பங்களா நோக்கி பயணமானன் தீரேந்திரன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ பேய் மோகினி வேற கதைல இருக்கா😳 இல்ல ஏதாவது பொண்ணை அடைச்சு வச்சிருக்காங்களா