Loading

காலை கனவு 48

வானம் இன்னும் முழுதாக வெளிச்சமடையாத அதிகாலை.

வெள்ளி அலைகள் சலசலக்க ஃப்ரெண்ட்ஸ் இவன்ட் மேனேஜ்மென்ட் பின்புறம் விரிந்திருந்த இயற்கையின் பெரும் சாட்சியான கடல் அன்னையின் முன்னிலையில் ஆர்விக் அன்விதாவின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.

இளஞ்சிவப்பு மற்றும் வெண்மை நிறத்தின் ஆதிக்கம்… கடலின் நீல வண்ணத்துக்கு அத்தனை பொருத்தமாக அவ்விடத்தை அழகாய் மாற்றியிருந்தது.

மணல் மீது அமைக்கப்பட்ட மேடையில் வெள்ளை நிற துணிகள் விரிக்கப்பட்டு, நான்கு மூளையிலும் அமைக்கப்பட தூண்களில் முழுக்க இளஞ்சிவப்பு, மற்றும் வெண்மை நிற இயற்கை மலர்கொடிகள் சுற்றப்பட்டு ரதம் போல் காட்சியளித்தது.

உறவினர்கள் அனைவரும் மேடைக்கு முன்பான இருக்கைகளில் மணமக்களை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, அலுவலகக் கட்டிடத்தினுள் தனித்தனி அறையில் மணமக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்காக தயாராவதற்கென்றே தங்களின் அலுவலகத்திலே தனி பகுதி வைத்திருந்தனர்.

கண்ணாடி முன் நின்றிருந்த ஆர்விக் தலைக்கு ஜெல் தடவிக் கொண்டிருக்க…

“என்னடா ரிங் புதுசா?” என ஆர்விக்கின் விரலை கவனித்தவனாக வினவிய யாஷ் அவனின் கரத்தைப்பற்றி விரலில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்தான்.

“என்னடா மல்லிகைப்பூ இது?” என்று யாஷ் ஆர்விக்கின் மோதிரத்தை ஆச்சரியமாகப் பார்த்திட…

“குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்!” என நீள்விருக்கையில் அமர்ந்து அலைபேசியை பார்வையிட்டுக்கொண்டிருந்த பூபேஷ் பாடினான்.

ஆர்விக் கழுத்தில் கிடந்த துண்டினை எடுத்து பூபேஷ் மீது விசிறி அடித்திட, அவனோ லாவகமாக நகர்ந்து கொண்டான்.

“என்னை ஏன்டா அடிக்கிற?”

“தேவையில்லாததை எல்லாம் நோட் பண்ணா அடிக்கத்தான் செய்வேன்.”

“அப்போ நீ வெளிப்படையா போடாம இருக்கணும்.”

“டேய் நிறுத்துங்கடா” என்ற யாஷ் மோதிரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தவனாக, “ஆமா, குண்டு மல்லி” என்றான்.

ஆர்விக் சிரித்தபடி தனது விரலை யாஷின் பிடியிலிருந்து உருவிக்கொண்டான்.

“இதென்ன புது ட்ரெண்டா?” யாஷ் கேட்க,

“ஆமா ஆர்வி டிரெண்ட்… லவ் ஆஃப் ஆர்விதா” என்றான் பூபேஷ்.

“ஆர்… விதா” என கேள்வியாக புருவம் சுருக்கி, பிரித்து உச்சரித்து பொருள் உணர்ந்து,

“டேய் மச்சான்” என்ற யாஷ், “பயங்கரமா லவ் பண்றியேடா! இம்புட்டு வருஷமா இந்த ஆர்வியை எங்கடா ஒளிச்சு வைச்சிருந்த?” என்றான்.

“போங்கடா” என்று சிவந்த முகத்தை புன்னகையில் மறைத்தான் ஆர்விக்.

“டேய் கிளம்பிட்டியா?” என்று நிதாஞ்சனி பரபரப்பாக உள்ளே வந்து, “மாலை இங்க வைக்கிறேன். சக்தி வருவாங்க உன்னைக் கூட்டிட்டுபோக” என்று வெளிநோக்கி அடி வைத்தவள்,

“உனக்கு எதுவும் குடிக்க வேணுமாடா?” என்று திரும்பி வினவினாள்.

“இப்போ தான் அம்மா கொடுத்தாங்கன்னு காஃபி கொண்டு வந்தேன்” என்று அங்கு மேசை மீது வைத்திருந்த கோப்பையைக் காண்பித்தான் யாஷ்.

“அப்போ ஓகே!” என்றவள், “இன்னும் என்னடா வெட்டிங் ட்ரஸ் போடாம இருக்க. அன்வியே ரெடியாகிட்டா! நீதான் முதல்ல மேடைக்குப் போகணும்” என்றவளின் அருகில் வந்த ஆர்விக்,

“தள்ளி உட்காருடா” என பூபேஷிடம் கூறியதோடு, நிதாஞ்சனியை இருக்கையில் அமர்த்தி…

“நீயென்ன இதுக்கும் அதுக்கும் ஓடிட்டு இருக்க. லாங் டிராவல் வேற. கவனமா இருக்க வேணாமா” என அவளின் முன் தரையில் குத்திட்டு அமர்ந்தவனாகக் கூறினான்.

“உன் மாம்ஸ் இப்போதான் மூச்சுப்பிடிக்க டயலாக் பேசினாங்க. அடுத்து நீயா?” என்று நெற்றியில் கை வைத்தவள், “இன்னைக்கு ஒருநாள் டா. உன்னோட வெட்டிங். நான் எப்படி கெஸ்ட் மாதிரி உட்கார்ந்திருக்க” என்றாள்.

ஆர்விக் பதில் பேசாது அவளையே பார்த்திருக்க…

“நேத்து வீட்ல செக் பண்ணதுமே ஹாஸ்பிடல் போய் டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டுதான் இங்கவர கிளம்பினோம். எல்லாம் ஓகே தான்டா” என்றாள்.

அப்போதும் ஆர்விக் அவளையே பார்த்திருந்தானே தவிர வாய் திறக்கவில்லை.

“இப்போ என்னடா? நான் ஒரே இடத்தில் அமைதியா உட்கார்ந்திருக்கணும்… அவ்வளவுதான? டன்” என இரு பெருவிரலையும் உயர்த்திக் காண்பித்து, “ஆர் யூ ஹேப்பி?” என்றாள். உதட்டினை இழுத்து வைத்து.

“குட் கேர்ள்” என்று அவளின் கன்னம் தட்டியவன், “இங்கவே இருக்கணும். அசையக்கூடாது” என்று அறையின் உட்பகுதிக்குள் நுழைந்து ஆடைமாற்றி வந்தான்.

“என்னடா ரெடியா?” என்று வந்த சக்தி, “தான்யா வீடியோ ஷூட் பண்ண உன்னை கூப்பிட்டாங்க யாஷ்” என்று அனுப்பி வைத்தான்.

நிதாஞ்சனி உம்மென்று அமர்ந்திருக்க, “உட்கார வச்சிட்டானா?” என்று சிரித்தான் சக்தி.

“போங்க… அவனை பாருங்க. இன்னும் கிளம்பவே இல்லை” என்று கணவனின் கவனத்தை தன் பக்கமிருந்து திருப்பினாள்.

“என்னடா இன்னும் கோம்ப் பண்ணாமக்கூட இருக்க” என்ற சக்தி, “வெட்டிங் டிரெஸ் உனக்கு செமயா இருக்குடா” என்றான்.

முழு வெண்மையில் தெரிந்தும் தெரியாது கலந்திருக்கும் கடல் நீல் வண்ண பட்டு வேஷ்டி சட்டையில் ஆர்விக்கின் தோற்றம் அத்தனை வசீகரமாக இருந்தது.

“ஃபேஸ் மேக்கப் எதுவும் போடுறியா?” சீப்பினை கையில் எடுத்தவனாக சக்தி வினவ,

“அதெல்லாம் போடாமலே என் தம்பி அழகுதான். நீங்க தள்ளுங்க” என்று எழுந்த நிதாஞ்சனி,

“சன் லைட் வந்திடும். பீச் காற்று வேற… சோ, மாய்ஸ்சுரைஸர் அண்ட் சன் ஸ்கிரீன் போட்டுக்கோ” என்று தானே போட்டுவிட்டும் நகர்ந்தாள்.

சக்தி சீப்பினை எடுத்து ஆர்விக்கின் முடியை சரி செய்தான்.

“அக்காவும், மாமனும் ரொம்பத்தான் பாசத்தைக் காட்டுறீங்க” என்ற பூபேஷ், “மாலையை போடுங்க. இங்க கேண்டிடா ஒரு ஷாட் எடுப்போம்” என்றான்.

அந்நேரம் வந்த அனிதா பார்த்தது, சக்தி ஆர்விக்கின் கழுத்தில் மாலையை அணிவிக்கும் காட்சி.

இந்தக் கோலத்தில் மகனைப் பார்த்திட அவர் கொண்டிருந்த ஏக்கம் அதீதம். பனித்த கண்களின் நீரை உள்ளிழுத்துக் கொண்டார்.

“ஆர்வி” என்று பக்கம் வந்தவர், மகனின் முகத்தை இரு கைகளாலும் அழுந்தப்பற்றி கன்னத்தில் அடர்த்தியாய் முத்தம் வைத்தார்.

அன்னையின் உணர்வுகள் அவனுக்குள் கடத்தப்பட்டிருக்க, உணர்வின் மிகுதியாய்,

“அனி” என்றவன் அணைத்து, மௌனத்தில் சில நொடிகள் கடத்தி விலகினான்.

“கூட்டிட்டு வா சக்தி” என்ற அனிதா, “ஆர்வி மேடைக்குப் போனதும் அன்வியை கூட்டிட்டு வந்திடு நிதா. மதி மட்டும் தான் கூட இருக்காள். தான்யா தினேஷை தேடிட்டு போனாள். ஆளை காணோம்” என்று சென்றார்.

நிதாஞ்சனி அன்வியின் அறைக்குச் செல்ல, பூபேஷ், யாஷுக்கு அழைத்து வரக்கூறினான்.

யாஷ் வந்ததும், பூபேஷ் புகைப்படம் எடுக்க, யாஷ் காணொளி பதிவு செய்யத் துவங்கினான். சக்தி ஆர்விக்கை மேடைக்கு அழைத்துச் சென்றான்.

“ஆர்வி போயாச்சா அண்ணி?” நிதாஞ்சனி வரவும் அன்விதா கேட்டாள்.

“ஹ்ம்ம் இப்போ தான்” என்ற நிதாஞ்சனி, “சன்னல் வழியா தெரியுமே” என்று திரை விலக்கினாள்.

அன்விதாவை ஆர்விக் அசரடித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்விக்குக்கு எப்போதுமே புன்னகை அழகுதான். அவன் வலியோடு திரிந்த நாட்களிலும் கூட அவனை அழகாய் காட்டியது அப்புன்னகை தான். இன்று அவனது முகத்தில் நிறைந்திருக்கும் முறுவலின் நீளம் அதிகம். அதற்கு பின்னான உணர்வின் பொருள் அதிகம். அவனது அகம் நிறைந்த காதல் கொடுக்கும் மகிழ்வு அதிகம்.

இமை சிமிட்டாது ஆர்விக்கை ரசனையாய் விழுங்கிய அன்விதா,

“சந்தனம் இல்லைன்னா மஞ்சள் வச்சுவிட்டிருக்கலாமே அண்ணி” என்றாள்.

“ஆமா… அண்ணாக்கு நல்லாயிருக்குமே” என்றாள் வெண்மதி.

“எனக்குத் தோணவே இல்லையே” என்ற நிதாஞ்சனி, “நீயே வைச்சுவிட்டுடு” என்று கண்ணடித்தாள்.

“அண்ணி…” என்று அன்விதா வெட்கம்கொள்ள, கதவினை தட்டிவிட்டு தினேஷ் வந்தான்.

“ரெடி மேம்… தான்யா மேம் நீங்க ஸ்டேஜ் ஏறினதும் கொடுப்பாங்க” என்றான்.

“தேங்க்ஸ் தினேஷ்…”

“மை ஹார்டி விஷ்ஷஸ் மேம்” என்று சென்றிருந்தான்.

“என்ன பிளான் அன்வி?” நிதாஞ்சனி கேட்க, புன்னகைத்தாளே தவிர அன்விதா எதுவும் சொல்லவில்லை.

அப்போதுதான் கவனித்தவளாக, “பின்னலுக்கு பூ வைக்கலையா?” என அன்வியைத் திருப்பிப் பார்த்தாள் நிதாஞ்சனி.

“ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்கு. பட் ஏன் பூவே வைக்கல” என்று அதிர்வை வெளிப்படுத்தினாள்.

“வைச்சிக்கலாம் அண்ணி” என்ற அன்விதா, அங்கிருந்து யாஷ் சன்னல் வழி கை அசைத்திட, “போலாமா?” எனக் கேட்டாள்.

அதற்குள் தான்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. நிதாஞ்சனி மற்றும் வெண்மதி அன்விதாவை மணமேடை நோக்கி அழைத்துச்சென்றனர்.

அதிகாலை நிசப்தத்தை மெதுவாகக் கிழித்துக்கொண்டு கடல் அன்னையின் அலையோசை உயர்ந்தது.

அந்தச் சத்தமே மங்கள வாத்தியமாய் மாற, மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த உறவினர்களின் முகம் அன்விதாவின் வருகை அறிந்து பின்னால் திரும்பியது.

குளிர் காலம் என்பதால் இன்னமும் இருளின் மிச்சம் எஞ்சியிருந்தது.

அலுவலகக் கட்டிடப் பகுதி முடிய, மணமக்களின் வருகைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள வளைவு பாதையின் துவக்கத்தில் அன்விதா அடி வைத்திட, குட்டி குட்டி வண்ண மின்விளக்குகள் வளைவு பாதை முழுக்க ஒளிர்ந்தது.

பூபேஷ் தினேஷின் கரத்தில் காமிராவை கொடுத்துவிட்டு அன்விதாவுக்கு பின்னால் சென்று வான வெடி ஒன்றை வெடித்திட, அவ்விடத்தை முழுதாய் நனைக்கும் அளவிற்கு விண்ணில் வெடித்து பூமழையாய் சிதறியது.

ஐயர் சொல்வதையெல்லாம் செய்துகொண்டிருந்த ஆர்விக், வெடித்த பட்டாசு சத்தத்தில் தான் நிமிர்ந்துப் பார்த்தான்.

சில அடிகள் தொலைவில் நின்றிருந்தாலும், அவனின் கண்களுக்குள் பளிச்சென விழுந்தாள் அன்விதா.

முழுக்க தங்க இழைகள் படர்ந்த வான் நீல பட்டுப்புடவையில் தேவதையென நின்றிருந்தாள்.

ஆர்விக்குக்கு அவனது கனவு நிஜம் கொள்ளும் மாயம்.

ஆர்விக்கின் கனவில் இத்தருணத்தில் பாட்டாசு வெடிப்பது யாஷாக இருக்கும். மெலிதாக சிரித்துக்கொண்டான்.

அன்விதா இந்தமுறை திருமணத்தை ஏன் விரும்பினால் என்பது ஆர்விக்குக்கு அக்கணம் புரிந்தது.

அவனது கனவின் நுண் உணர்வுகளையும் அவள் அறிந்திருந்தாளே!

வளைவின் துவக்கத்தில் மணமக்களின் பெயர்ப்பலகை இருந்திட அதனருகே சென்ற அன்விதா,

“ஆர்விக் வெட்ஸ் அன்விதா” என்றிருந்த பெயர்களை வருடி… அவனது பெயரின் இறுதி இரண்டு எழுத்தையும் எடுத்துவிட்டு, அவளது பெயரின் இறுதி எழுத்து இரண்டையும் அவனின் பெயர் முதல் இரு எழுத்துக்களுடன் பொருத்தி மாற்றி வைத்தாள்.

“ஆர்விதா.” நிதாஞ்சனி உச்சரித்திட…

“காதலுடன்…” என்று புன்னகைத்தாள் அன்விதா.

அவளின் புன்னகை அவனது இதழில் தப்பாமல் பிரதிபலித்தது.

“காதல் பண்ணியே கொல்றீங்க” என்ற யாஷ், “கிங் வெயிட்டிங்… குயின் வந்தா வெட்டிங் முடியும்” என்றான்.

பலகையை கடந்து வளைவு அமைப்பில் நீண்ட பாதை. கடற்கரையில் அலை தொடும் இடம் வரை அமைக்கப்பட்டிருந்தது. அதில் குட்டி குட்டி வண்ண மின் விளக்குகள் ஒளிர ஆங்காங்கே ஊதா நிற டாலியா பூங்கொத்துகள், மற்றும் அவ்விடம் முழுக்க இளஞ்சிவப்பு, வெள்ளை நிற ஆர்க்கிட் மலர்கள் நிறைந்திருந்தன.

அவள் நடந்துவரும் ஒவ்வொரு அடியும் அழுத்தமாக மணலில் பதிய, கடல்காற்று அவளின் புடவையோடு விளையாடியது. அவளின் கருவிழிகள் மட்டும் நீண்ட பாதையை கடந்து கடலின் பின்னணியில், தனது வரவை எதிர்நோக்கி மேடையில் காத்திருக்கும் தன்னவனின் மீது நேர்கொண்டு நிலைத்தது.

கிட்டாது எனத் தெரிந்தும் வானின் நீளம் கடந்து உயிர்கொண்ட நேசம் ஆர்விக்கின் காதல்.

இன்று தன்னகம் சேர தன்னை நோக்கி வருபவளை காதலையும் தாண்டி தனது வாழ்வாகப் பார்த்திட்டான். கண்கள் அவளுக்கான அனைத்து உணர்வுகளையும் கடலுக்கு இணையாக அலையென பொங்கவிட்டது.

குடும்பத்தினர் அனைவரும் மேடைக்கு கீழே நின்றிருக்க, அன்விதாவை மேடையில் ஆர்விக்கின் அருகில் அமர்த்திய நிதாஞ்சனி கீழே சக்தியின் அருகில் வந்து நின்றுகொண்டாள்.

தோள்கள் உரசிட, பாத விரல்கள் தழுவ அத்தனை நெருக்கமாக தனதருகில் அமர்ந்தவளை சுற்றத்தாரை மறந்து விழிகளால் கொள்ளையிட்டான்.

“பூ வைக்கலையா அன்வி?” உதடுகள் அசைந்ததுவோ எனும் விதமாகக் கேட்டிருந்தான்.

“பூ வைக்காம அழகா இல்லையா?”

“அப்படிலாம் இல்லை. வைச்சிருக்கலாம்” என்று ஆர்விக் சொல்ல…

“அப்போ வைச்சுவிடு” என்று பக்கவாட்டில் மதியிடமிருந்த குண்டு மல்லியை வாங்கி ஆர்விக்கின் கையில் கொடுத்தாள்.

“அன்வி…”

“உனக்கு பிடிக்கும்ல?”

“ஹான்…” ஆர்விக் தனது சொந்தங்களை கண்டு அசடு வழிந்தான்.

“நான் குண்டுமல்லி வைச்சா உனக்கு பிடிக்கும் தான?”

“ஆமா…”

“அப்போ வைச்சுவிடு” என அவனுக்கு தோதாக தலையை திருப்பிக் காண்பித்தாள்.

“அன்வி நீ கலக்கு” என்று பூபேஷ் கத்திட,

“நீ கத்தாம… மொமெண்ட் எதையும் மிஸ் பண்ணாம ஷூட் பண்ணுடா” என்று அவனின் முதுகில் தட்டியிருந்தான் சக்தி.

ஆர்விக் அனிதாவை ஏறிட, அவரின் முகத்தில் பரவிய மகிழ்வோடு, கண்கள் மூடி திறந்தார்.

ஆர்விக் அனிதாவிடம் சம்மதம் கேட்கவில்லை. அன்னையின் பூரிப்பில் தனது தயக்கம் துறந்தான்.

“பொண்ணே கேட்கும்போது நமக்கென்ன தயக்கம் தம்பி. வைச்சுவிடு” என்று கார்த்திகா சொல்ல…

“அதானே” என பல குரல்கள் ஒருங்கே ஒலித்தது.

“என் பேத்தி தைரியம் பேரனுக்கு இல்லையே” என்று லட்சுமணன் தனது மிலிட்டரி மீசையை முறுக்கிக்கவிட…

“நீ வைடா மச்சான்” என்றான் யாஷ்.

மெதுவாக மிக மெதுவாக பூவினை அவளின் பின்னலில் வைத்த ஆர்வி, பூவை இரு கைகளாலும் மேலிருந்து வருடியவனாக கையை நகர்த்திட, அவன் வைத்துவிட்ட பூவை முன்பக்கம் தோளில் எடுத்துவிட்டவளாக, ஆர்விக்கின் விழிகளை சந்தித்து எப்படியிருக்கிறதென பார்வையால் வினவினாள்.

“என் ஹார்ட்பீட் கேட்குதா அன்வி” என அவளின் கையை எடுத்து தனது இதயப்பகுதியில் வைத்தான்.

அவன் முகத்தில் தணிந்த அமைதியும் துடிக்கும் இதயமும் ஒன்றாய் கலந்து இருந்தது.

“கியூட்…” என்று சக்தி சத்தமின்றி சொல்லிட, “உங்களுக்கு இப்படிலாம் லவ் பண்ண வராதா?” என்று அவனின் தோளில் இடித்து கேட்டாள் நிதாஞ்சனி.

“அதான் எனக்கும் சேர்த்து என் பொண்டாட்டி லவ் பண்றாளே” என்ற சக்தி, “இனி நம்ம பேபிக்கும் சேர்த்து லவ் பண்ணுவாள்” என்றவனிடத்தில் மனைவிக்கான கொள்ளைக்காதல் கொட்டிக் கிடந்தது.

அருகில் நின்றிருந்த பூபேஷ்… சக்தி, நிதாஞ்சனியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, யாஷ் எங்கென்று பார்க்க, அவனோ வீடியோ கவரேஜ் என்கிற பெயரில் காமிரா வழி தன்னவளை விழுங்கிக்கொண்டிருந்தான்.

“ஆளாளுக்கு லவ் பண்றாங்கப்பா… கல்யாணம் முடிஞ்சும் எனக்கு ஒரு லவ் சீன் இல்லை… இந்த கதையில்” என்று வாய்விட்டே புலம்பியபடி தன்னுடைய மனைவியைத் தேடினான். மேடைக்கு இடதுபக்கமாக கீழே நின்றிருந்தாள்.

“இவளை வைச்சிக்கிட்டு நான் எங்க லவ் பண்ண?” என்றவன், “டேய் தினேஷ் புடிடா… என்கிட்ட கொடுத்துட்டு நீ எஸ் ஆகிடுற. ஒழுங்கா எல்லாம் எடு” என்று அவனின் கையில் காமிராவை திணித்துவிட்டு, வேகமாக தான்யாவின் அருகில் சென்று அவளின் தோளை தன் தோள் கொண்டு இடித்தான்.

“என்னடா வந்துட்ட… போட்டோ எடுக்கல?” பார்வையை அவன் பக்கம் திருப்பாது கேட்டிருந்தாள்.

“நான் என் பொண்டாட்டியை லவ் பண்ணலாம் வந்தேன்.”

பக்கவாட்டில் விழிகளை உயர்த்தி கணவனை ஏறிட்ட தான்யா…

“என்ன திடீர்னு?” என்றாள்.

“ஏதே திடீர்னா?” என்றவன், “என்னவோ லவ்வை காமிச்சதே இல்லைங்கிற மாதிரி லுக்விடுற” என்றான்.

“இப்போ என்னடா?”

“லவ் யூ டி!”

“ஓகே… ஓகே…”

“அவ்ளோதானா உன் ரியாக்ஷன்.”

“வேறென்னடா” என்றவள், பூபேஷின் சுருங்கிய முகம் கண்டு புன்னகைத்தவளாக, யாரின் கவனமும் தங்கள் மீதில்லையென சடுதியில் அவனின் கன்னம் தீண்டியிருந்தாள்.

“தானு…”

“உனக்கு லவ் பண்ண வேற நேரமே இல்லையாடா…” என்று வெட்க முகத்தை அவனது முதுகில் ஒளித்தாள்.

“லவ் பண்ணி முடிச்சிட்டேல் அப்படின்னா… மாலையை மாத்திக்கோங்க” என்ற ஐயரின் குரல் அனைத்து காதல் ஜோடிகளையும் நிகழ் மீட்டிருந்தது.

“டூ மினிட்ஸ்” என்ற அன்விதா, தான்யாவை பார்த்தாள்.

“எதுவாயிருந்தாலும் தாலிக்கட்டி முடிச்சபிறகு கொடுத்துக்கோ அன்வி” என்று தெய்வானை அதட்ட…

“இதை தாலிக்கட்டுறதுக்கு முன்ன செய்யணும்மா” என்றாள்.

“அன்வி…” தெய்வானை முறைத்திட…

“அவங்களுக்கான மொமெண்ட் இது… விடுங்க சம்மந்தி” என்றார் அனிதா.

“நீ அந்தப்பக்கம் திரும்பு” என்று ஆர்விக்குக்கு கட்டளையிட்ட அன்விதா, அவன் பக்கவாட்டில் திரும்பிட… தான்யாவிடமிருந்து மலர்க்கொத்தை வாங்கியிருந்தாள்.

“ஆர்வி…” என்றழைத்த அன்விதா, அவன் திரும்பியதும், ஊதா வர்ண டாலியா பூக்களுக்கு நடுவில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வர்ண ட்யூலிப் மலர்கள் அடங்கிய பூங்கொத்தை ஒரு கையால் நீட்டி, மற்றொரு கை விரலை இதயம் போல் காண்பித்தாள்.

அன்விதா அவளின் காதலை சொல்லும் ஆர்விக்கின் கனவு தருணம்.

கண்ட கனவு நிகழ் சேர்ந்திருக்க… நெஞ்சம் முட்டும் ஆர்ப்பரிப்பில் ஆர்விக்கின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

“லவ் யூ ஆர்வி…”

“அன்வி…!” உணர்வுக்குவியலாய் ஆர்விக்.

அவள் அவனை காதலிக்கிறாள். இந்த மேடை ஏறிய நொடி வரையிலும் அதீதமாக வெளிப்படுத்தியிருக்கிறாள். இருப்பினும், அவனது காதலுக்கு ஆரம்பமாக அமைந்த அவனது கனவு… அக்கனவு நிஜம் கொள்வதில் தான் அவனின் நெஞ்சம் நிறைவுகொள்ளும் என்பதற்காக, நிழலை நிகழ்கொள்ள வைத்திட்டாள்.

“இந்த வாழ்க்கை பிடிச்சிருந்துச்சா… இதுக்கு முன்ன வாழ பிடிச்சுதான்னுலாம் தெரியல. ஆனால் உன் வாழ்க்கை நான்தான்னு என் வாழ்க்கையில நீ வந்தப்புறம் நம்ம வாழ்க்கையை வாழ்ந்துப் பார்க்க ரொம்ப ரொம்ப பிடிக்குது.

ஆர்வி, அன்விதா… ஆர்விதா ஆகலாமா?” என வார்த்தைகளாளே, அவனை நெகிழ வைத்தாள்.

முகம் முழுக்க சிவந்து விழிகள் வழி அவனுள் காதலை மின்னலாய் செலுத்திக்கொண்டிருந்தாள்.

ஆர்விக்கின் மனம் முழுக்க அன்விதா மீது சொல்ல முடியா காதல் ஆழம் கொண்டிருக்க, அவளே இக்கணம் காதலைக் கேட்டு நிற்க, பதிலை சொல்ல முயன்ற நொடி…

ஒருபக்கம் தீ மூட்டிய லேண்டன் விளக்குகள் வானில் பறந்திட, மற்றொரு பக்கம் படபடவென வான வெடிகள் விண்ணில் வெடித்தது.

அன்விதா நீட்டிய பூங்கொத்தை வாங்கிய ஆர்விக், மற்றொரு கை விரலை அவளது விரலோடு காண்பித்து இதய வடிவத்தை முழுமைப்பெறச் செய்தான்.

“மொத்தமும் நீதான்டி” என்று அவளின் நெற்றி முட்டியவன் புருவ மத்தியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

“நீ என்னோட கனவுடி!” என்ற ஆர்விக்கின் இமை தொட்ட நீர் அவளின் இமை சேர்ந்தது.

சொந்தங்களின் மகிழ்வு அவர்களின் வதனத்தில் தேங்கி நின்றது.

இருவரையும், இயற்கை கடல் அன்னையின் மூலமாக ஆசீர்வதிப்பதுபோல், அலைகள் சற்று வலிமையாகக் கரையைத் தொட்டன.

அனைவரின் பார்வையும் நெஞ்சம் நனைய இருவரின் மீதே நிலைத்திருக்க…

“தாலியை கட்டுங்கோ” என சொந்தங்களின் ஆசி நிறைந்த மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட பொன் தாலியை ஆர்விக்கிடம் ஐயர் நீட்டினார்.

தாலியை வாங்கிய ஆர்விக், ஒரு கணம் அன்விதாவை பார்த்தான்.
அந்த பார்வையில் ஓர் உறுதி…

‘எந்நாளும் உன்னோடு…’

அன்விதாவின் கண்கள் பனியாய் நனைந்தன.

ஐயரின் மந்திரம் உச்சத்தை அடைந்தது.

தன்னுடைய மகிழ்வில் இன்பம் கொள்ளும் ஒவ்வொரு உறவுகளையும் விழிகளால் தொட்டு வந்து தாலியை அவளின் கழுத்தைச் சுற்றி கொண்டுச்சென்றான். அவன் புறம் அவள் சாய்ந்திட,

“என்னோட லவ்வுக்கு மூணு முடிச்செல்லாம் போதாதுடி” என்று மெல்ல கிசுகிசுத்தவனாக, அவளின் பின்னங்கழுத்தில் தனது விரல் ஸ்பரிசிக்க, அவளின் கருவிழிகளோடு தனது கூர்விழிகளை பொருத்தி மிக மிக நிதானமாக ஒவ்வொரு முடிச்சினையும் முடிச்சிட்டிருந்தான்.

முதல் முடிச்சு விழுந்த நொடியில்…

மஞ்சள் அரிசி கலந்த மலர்கள் வானில் பறந்தன.

கடல் அலைகள் கூட ஒரு கணம் அதிகமாக ஒலித்தது போல இருந்தது.

“குங்குமத்தை எடுத்து வைச்சுவிடுங்கோ” என்று ஐயர் சொல்ல…

ஆர்விக் மூன்று விரல்கள் குவித்து குங்குமத்தை எடுத்த கணம், அவனின் மோதிரத்தில் படிந்த அன்விதாவின் விழிகள் விரிந்தன. அப்பட்டமான ஆச்சர்யத்தை பிரதிபலித்தன.

அவனின் காதல் ஒவ்வொரு நொடியும் அவளை திணற வைத்தது.

“ஆர்வி…” என அவள் காற்றாய் உச்சரிக்க…

“அன்வியோட ஆர்வி” என்று நீண்ட முறுவல் கொண்டவன், தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக குங்குமம் வைத்திட, அவனின் அவளாக மாறிய கனத்தை விழிகள் மூடி உள்வாங்கினாள் அன்விதா.

‘கரை தீண்டும் கணக்கற்ற அலையாய்…
எண்ணிலடங்கா நாட்கள் காத்திருந்த காதல்…

ஆத்மார்த்தமாய் ஆத்ம பந்தத்தில்.’

***************************

இரவு ஒன்பது மணியளவில்…

மாலை துவங்கிய வரவேற்பு முடியவே, குடும்பத்தார் மட்டும் ஆர்விக்கின் இல்லம் வந்திருந்தனர்.

அன்விதாவை அனிதாவின் அறைக்கு அனுப்பிய கார்த்திகா,

“நீ உன் ரூமுக்கு போ தம்பி” என்றார். ஆர்விக்கிடம்.

ஆர்விக் அறைக்குள் நுழைந்த அடுத்த கணம் சக்தி, பூபேஷ் இருவரும் உள் நுழைந்திருந்தனர்.

அவர்களின் பின்னே நிதாஞ்சனியும் செல்ல முற்பட, அவளை தடுத்து நிறுத்திய அனிதா, பெரிய குவளை நிறைய பாலினை கொடுத்து,

“இதை குடிச்சிட்டு ஒழுங்கா போய் படு. காலையிலிருந்து உன் தம்பி பின்னாலே சுத்தினது போதும்” என்று அதட்டினார்.

“அம்மா…”

“சொன்னா கேட்கணும் நிதா… இந்த மாதிரி நேரத்தில் ரொம்ப கவனமா இருக்கணும்” என்றார்.

“சரிம்மா” என்றவள் பாலினை குடித்து முடிக்க, “நீ அந்த ரூம்க்கு போ” என்று ஒரு அறையை கை காண்பித்தார்.

வரவேற்பு முடிய எல்லோரும் அங்கவே உணவு உண்டிருக்க, கார்த்திகா, அனிதா தவிர்த்து மற்றவர்கள் உறங்கச் சென்றிருந்தனர்.

உறங்குவதற்காக மேலுள்ள அறைக்கு வந்த தென்னரசி, மொட்டை மாடியில் பேச்சுக்குரல் கேட்கவே யாரென எட்டிப்பார்க்க, இருளில் உருவம் தெரியவில்லை.

“யாரு?” என்றவர், எவ்வித சத்தமுமின்றி இருக்க நகர்ந்திருந்தார்.

“இதுக்கு தான் சொன்னேன். யாரும் வருவாங்கன்னு” என்று பூச்செடி மறைவுக்குள் யாஷோடு ஒட்டிக்கொண்டு மறைந்து நின்ற வெண்மதி, “இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தா, என் அம்மா எப்போ என்ன முடிவு எடுப்பாங்கன்னே சொல்ல முடியாது. இந்த கதையில நம்ம லவ்வர்ஸ் மட்டும் தான். சோ, கீப் டிஸ்டன்ஸ்” என சொல்லியபடி அவனிடமிருந்து விலகி மறைவிலிருந்து வெளியில் வந்தாள்.

“அதுக்கு பேசவேக்கூடாது சொல்றதெல்லாம் அநியாயம் மதி” என்றவனை முறைத்தவள்,

“நீங்க பேசறது மட்டும்தான் இல்லை” என்று கன்னத்தை அழுந்த துடைத்தாள்.

“நீதான் கொடுக்கிறது இல்லை. நானாவது கொடுக்கிறனே… இதுக்குதான் படிக்கிற பிள்ளையை லவ் பண்ணியிருக்கக்கூடாது… ஹார்ட் விட்டே உன் பின்னாடி சுத்த வச்சிட்ட” என்று யாஷ் முனகினான்.

“இன்னும் நிறையவே சுத்துங்க… பிடிச்சிருக்கு” என சிரித்தவள், யாஷ் பார்வையை குவித்திட, அவன் உணரும் முன்பு, அவனது அதரத்தில் உரசியும் உரசாது இதழ் பதித்து விலகி ஓட நினைக்க… அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது.

அவளின் இதழ் தன்னிதழோடு ஒட்டியதுமே அவளின் பின்னந்தலையில் கை வைத்து அழுத்தியிருந்தான். அவனாக விடுவிக்கும் வரை அவளின் இதழ்கள் அவனிடத்தில் சிறை கொண்டன.

பூபேஷிடமிருந்து வந்த அழைப்பால் அலைபேசி ஒலிக்கவே, அவளை விடுத்தான்.

அவனின் முகம் காண நாணம் கொண்டவளாக, வேகமா அங்கிருந்து ஓடிட, யாஷின் காதல் மனம் அவனுக்காக கிடைத்த உறவில் இதமாய் நிறைந்தது.

வெட்கச்சிரிப்போடு அறைக்குள் வந்த யாஷை மூவரும் உற்று நோக்க…

“ஒரே வெட்கமா வருது மச்சான்” என பூபேஷின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் வைத்து, அவனின் இடையில் கைகொடுத்து சுற்றி சுழன்றான்.

“டேய்… டேய்…” என அலறிய பூபேஷ், “ஆர்வி என்னை காப்பாத்துடா” என்று அலறிட, ஆர்விக் மற்றும் சக்தியிடம் அப்படியொரு சிரிப்பு.

“அவன் லவ் மூட்ல இருக்கான்டா! நாளைக்கு மதி ஊருக்கு போயிட்டால் நார்மல் ஆகிடுவான். அதுவரை அட்ஜஸ்ட் கரோ” என்று ஆர்விக் குளியலறைக்குள் புகுந்திட்டான்.

சக்தி சிரித்துக்கொண்டே எழுந்து வந்து யாஷை பிடித்து நிறுத்தி, பூபேஷை விடுவித்தான்.

யாஷ் சக்தியின் முகம் பார்க்க தடுமாற,

“இன்னைக்கு ஆர்விக்குதான்… உனக்கில்லை” என்று அவனின் தலையிலே கொட்டி நிலைபெற வைத்தான் சக்தி.

“இன்னும் ரெண்டு சேர்த்து கொட்டுங்க… கொஞ்ச நேரத்தில் பதற வைச்சிட்டான். என் பொண்டாட்டி மட்டும் பார்த்திருந்தா என்னாவுறது” என்ற பூபேஷ், பெரிய பெரிய மூச்சுக்களை வெளியேற்றியவனாக இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

“சாரிடா மச்சான்” என்று யாஷ் பூபேஷின் அருகில் செல்ல…

“ஒழுங்கா ஓடிடு” என்று அவனை மெத்தையிலே தள்ளியிருந்தான்.

படுக்கையில் விழுந்த யாஷ்,

“அய்யய்யோ” என்று பதறி எழுந்தான்.

“என்னடா?” சக்தி கேட்க,

“எதுவுமே பண்ணல” என்றான். அலங்காரம் ஏதுமின்றிய கட்டிலைச் சுட்டி.

“ஆர்வி வேண்டாம் சொல்லிட்டான்” என்ற சக்தி, ஆர்விக் குளித்து வரவே,

“நான் இருக்கணுமா மச்சான்” என ஒற்றைக் கண்ணடித்தான்.

தலைக்கு மேல் கரம் குவித்த ஆர்விக்…

“இப்போ உங்ககிட்ட சிக்க நான் ஆளில்லை” என்றான்.

“அப்போ மாமன் ஹெல்ப் தேவையில்லை சொல்ற…” என்று சக்தி இழுக்க…

“அச்சோவ் மாம்ஸ்” என ஒரு கையால் முகம் முடி நின்றவனை,

“உன்னோட சிரிப்பு எப்பவும் குறையக்கூடாதுடா” என அணைத்து விடுத்த சக்தி…

“ஏங்க?” என்று கேட்ட நிதாஞ்சனியின் குரலில், “உன் அக்காவுக்கு நானில்லாம தூக்கம் வராது” என்று புன்னகைத்தவனாக வெளியேறினான்.

“அங்க என்ன என் தம்பியை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க” என்று அறைக்குள் வந்த சக்தியிடம் வினவிய நிதாஞ்சனி, “கால் வலிக்குது” என்றாள்.

“அடங்கி ஒரு இடத்தில் உட்கார்ந்தாதான” என்று அவளின் அருகில் அமர்ந்தவன், அவளின் பாதத்தை மடியில் தூக்கி வைத்து அழுத்திக் கொடுத்தான்.

கையில் கன்னத்தை தாங்கியவளாக நிதாஞ்சனி கணவனையே பார்த்திருக்க…

“என்னடி?” என்று கேட்டவனை நோக்கி, இரு கைகளையும் விரித்திருந்தாள்.

எப்போதுமே அவளின் காதலுக்குள் அடங்கி நிற்பவன், அக்கணமும் அவளுள் விரும்பியே அடங்கிப்போனான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
46
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்