
காதலொன்று கண்டேன்!
தேடல் 26
(I)
ஓரிரு விடயங்களை தவிர மற்றையதை கையாள்கையில் பையனிடம் இயல்பான நிதானம் இருக்கும்.
அவன் நிதானம் பிழைத்திடும் விடயங்களை அவள் வெகுவாய் மாற்றி இருந்தாலும்,இந்த ஒன்றை நினைக்கையில் மட்டும் அவனின் பொறுமையும் நிதானமும் எங்கோ பறந்து போய் விடும்.
பெற்றவரின் மீது அவனுக்கு கோபம் தான்,இல்லாமல் இல்லை.ஆனால்,அதை விட தாயின் மீது அளவு கடந்த கோபம்.
தான் ஒருத்தன் இருப்பதை கண்டு கொள்ளாத அவரின் மீது அவனுக்கு அளவு கடந்த கோபம்.தந்தை இல்லாததால்,அவர் எப்படி இருந்திருப்பார் என்று தெரியாதே.அதுவோ தெரியவில்லை,அவர் மீது தாயில் இருக்கும் அளவு கோபத்தை வளர்த்திடவில்லை.
“சரி சரி மச்சான்..நீ கூல் ஆகு..நானும் அப்பா கிட்ட சொல்றேன்..” அவன் இறங்கி வரவுமே,பையனின் கோபம் மட்டுப்பட்டது.
“சத்யா என் லவ் மேல எனக்கு நம்பிக்க இருக்கு..யாழ என் கண்ணுல காட்டுன கடவுள் மேலயும் நம்பிக்க இருக்கு..வீணாப் பயப்டாதீங்க ரெண்டு பேரும்..யாழ என் கிட்ட கொண்டு வந்து சேக்கறது என்னோட லவ்வும் அந்த லவ்வ தந்த கடவுளும் பாத்துப்பாரு..” அவனின் குரலில்,மலையளவு உறுதி.
அன்றிரவு முழுவதும் உறக்கம் இல்லை,இமைகளில்.இதயத்தில் உயிர்த்த, அந்த இம்சையை எத்தனை கவி கொண்டும் புனைந்திட முடியாது.
விட்டத்தை வெறித்தவாறு வெகு நேரம் விழித்தே கிடந்தான்.மனதெங்குய் கனம் பரவியிருக்க,காதலிலும் இத்தனை உண்டு என உணர்ந்தவனில் இருந்து தன்னாலே பெருமூச்சொன்று.
விடியல் எட்டிப் பார்த்திடும் தருணத்தில் விழி மூடியவனோ,சற்று முன்பாகவே எழுந்திருக்க,விழிகள் சிவந்து கிடந்தன.
“அப்பு என்ன தூங்கலயா நைட் எல்லாம்..?” நெற்றியை தொட்டுப் காய்ச்சலா என ஆராய்ந்தவாறு தாயுமானவர் வினவிட,மறுப்பாய் தலையைசைத்து அவரை அமைதிப்படுத்தியிருந்தான்,பையன்.
“தூக்கம் வர்லப்பா..”
“நா சொன்னத யோசிச்சு முழிச்சு கெடந்தியா..?”
“லூசாப்பா நீ..” என்று அவரைக் கட்டிக் கொள்ளவுமே,அவரின் தவிப்பு அடங்கியது.
“சரி இரு சாப்பாடு எடுத்துட்டு வர்ரேன்..” என்றவர் ஊட்டி விட்ட பின்பே,கல்லூரிக்கு கிளம்பினர்,இருவரும்.
கல்லூரியின் இறுதி நாள் என்பதால்,அனைவரின் முகத்திலும் அப்பட்டமான கவலை.மனம் முழுவதும் சோர்ந்து கிடந்தாலும்,அதை பையன் வெளிப்படுத்தவில்லை,அவ்வளவே.
பிரியாவிடை நிகழ்வு முடிவடைய மதியே நேரத்தைக் கடந்திருக்க,எல்லா இடத்திலும் பையன் அவளைத் தேடியதாயிற்று.
எங்கும் சிக்கவில்லை,யாழவள்.”இன்னிக்கின்னு பாத்து லீவ் போட்டுட்டாளா..?” யோசிக்கையிலேயே,இருக்கக் கூடாது என மனம் அடித்துக் கொண்டது.
இரு கைகளாலும் தலையை தாங்கியவாறு,அவன் மரத்தடியில் அமர்ந்து இருக்க,வந்து அவனின் தோளைத் தொட்டான்,தோழன்.
“என்னடா..? தங்கச்சிய காணலன்னு தேடி டயர்ட் ஆயிட்ட போல..?”
“கடுப்ப கெளப்பாதடா..”
“அவங்களுக்கு இன்னிக்கி ப்ராக்டிகல் போல..இப்போ தான் கேன்டீன்கு போனாங்க அவங்க பேட்ச்..” என்கவுமே,உயிர் திரும்பி வந்த உணர்வு,பையனில்.
தேடிக் கொண்டு சென்றவன்,நினைத்தது போலவே,அவள் சிற்றுண்டிச்சாலையில் இருக்க,அவனுக்கு அவளை எப்படி அழைப்பதென்கின்ற யோசனை.
அத்தனை பேர் முன்னிலையிலும்,அவளை தனியே அழைத்துச் செல்லவும் தயக்கமாய் இருந்தது.அவளைப் பற்றி அதிகமாகவே யோசிப்பவன் ஆயிற்றே.
அவளிடம் பேச மனம் முழுக்க ஏக்கம் மண்டிக் கிடந்தாலும்,அதை புதைத்தவாறு அவன் வெளியேற,அவனின் பார்வையை புரிந்த மித்ராவுக்கு இன்னுமே அவன் காதலின் மீது பிரமிப்பு.
அவளுக்குத் தெரியும்,அவனின் மௌனமான காதல்.அன்று அவளுக்கு புரிந்த விடயத்தை,இன்னும் அழகாகிக் மெருகூட்டித் தான் காட்டின,அவனின் நடத்தைகள்.
அவளறியாமல்,அவளை கண்காணித்து பாதுகாப்பு வலயம் அமைத்து இருப்பவனின் செயலில்,அவளுமே வியந்து போன சந்தர்ப்பங்கள் அதிகம்.
ஆழமாய்,அடி நெஞ்சத்தின் நேசத்தை சிந்தாமல் சிதறாமல்,உரித்தானவருக்கே புலப்படாமல்,இத்தனை அழகாய் வெளிப்படுத்தி,அழகியலுடன் கையாள முடியுமா என பலமுறை அவளை யோசிக்கவும் வைத்திருக்கிறான்,பையன்.
“எங்கடி கூட்டிட்டு போற..?” தோழியின் இழுப்புக்கு உடன்பட்டு வந்தவாறு கேட்டாள்,பாவையவள்.
“இன்னிக்கி சீனியர்ஸோட ஃபைனல் டே இல்ல..வா ஆரி அண்ணன் கூட பேசிட்டு போலாம்..” என்கவும்,சம்மதமாய் தலையசைத்திருந்தாள்,அவள்.
அங்குமிங்கும் நில்லாமல் பாதங்கள் திரிய,மரக்கிளைகையை ஆட்டுவித்து தன்னை இயல்பாக்க முயன்றவனுக்கோ,யாழவளைக் அவ்விடத்தில் கண்டதும் இதயம் எம்பிக் குதித்தது.
அவளோ மாற்றமில்லாமல்,புன்னகையை வீசிட,அது அவன் இதயத்தில் மோதிய மாயம் இதுவரை அவன் அறிந்ததில்லை.
“என்ன இந்த பக்கம்..?” குரலைச் செருமியவாறு வினவிட,சட்டென திரும்பி தோழியைத் தான் பார்த்திருந்தாள்,பதில் சொல் எனும் பாவனையுடன்.
“அது ஒன்னுல்ல ஆரி அண்ணா..இன்னிக்கி காலேஜ் ஃபைனல் டே ல உங்களுக்கு..அதான் உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தோம்..” நமுட்டுச் சிரிப்புடன் அவள் சொல்ல,சங்கடத்துடன் தலை சரித்து கழுத்தை வருடிக் கொள்ள,அவனின் அந்த மேனரிசத்தை இரசிக்கும் பாவம்,அவள் விழிகளில் தெரிந்தது.
அதைக் கண்டு கொண்டவனின் மீசைக்கடியில் புன்னகை நின்று கொள்ள,மீசை நுனியை கடித்து அதை கட்டுக்குள் வைத்தான்,கள்வன்.
“இசை!”,ஆழமாய் ஆத்மார்த்தமாய் உயிரின் அடியில் இருந்து ஒரு அழைப்பு.மென்மையும் தன்மையும் ஒன்றுக்கொன்று கலந்து தோய்ந்திருந்தது,அவ்வழைப்பில்.
விழுக்கென நிமிர்ந்தவளின் விழிகளில் அதிர்வு தெரிய,அவனுக்கோ புன்னகை.
“யாழிசை தான பேர்..” விழிகளை நிறைத்த புன்னகையுடன் அவன் வினாவெய்திட,விரிந்த விழிகளுடன் ஆமோதிப்பாய் தலையசைத்திட,அவள் விம்பத்தை அள்ளிக் கொண்டான்,இரசனை மிகு விழிகளால்.
“உன் கிட்ட கொஞ்ச விஷயம் சொல்லனும் கேட்டுப்ப தான..?” அவனில் கொஞ்சம் பரிதவிப்பு.
“சொல்லுங்க சீனியர்..” பொம்மை போல் அவள் தலையாட்டி கேட்க,அவளிடம் இருந்து விழிகளை பிரித்தெடுப்பது பெரும் பாடாய் போயிற்று,பையனுக்கு.
தழுவியிருந்த விழிகளை விலக்கி,இமை தாழ்த்தி தரை பார்த்து,தொண்டையைச் செருமிக் கொண்டு நிமிர்ந்தவனின் மனமோ,”ஈஸி ஈஸி ஆர்யா..” என தனக்குத் தானே,கூறிக் கொண்டது.
“எப்பவும் வெளில போகும் போது எங்க போறதுன்னாலும் தனிய போக கூடாது..தொணக்கி யார சரி கூட்டிட்டு போகனும்..”
“சரி சீனியர்..”
“எல்லாத்துக்கு பயந்துட்டு இருக்கக் கூடாது இசை..புரியுதா..?”
“சரி சீனியர்..”
“அசைமன்ட் செய்றேன் அது செய்றேன் இது செய்றேன்னு கூட வர யாரும் இல்லாதப்போ தனியா காலேஜ்ல நிக்க கூடாது..”
“ம்ம்…”
“நீ சின்னப்புள்ள இல்ல..உன் மேல யாருக்காச்சும் இன்ட்ரஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சுதுன்னா தைரியமா அத ஃபேஸ் பண்ணனும்..உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லங்குறது காட்டனும்..”
“அப்போ இன்ட்ரஸ்ட் இருந்தா என்ன பண்ணனும் மச்சான்..?” தோழன் இதழடக்கிய சிரிப்புடன் வினவிட,பையனின் பார்வை அவனை தீயுடன் தீண்டியது.
அதற்குள் முந்திக் கொண்டு பதில் சொன்னாள்,அவள்.
“ஐயோ அப்டிலாம் இல்ல..நா வீட்ல பாக்கற பையன தான் கட்டிப்பேன்..” அவள் பதறிக் கொண்டு உரைத்திட,”அப்டி சொல்லுடி என் செல்லக் குட்டி..” மனதுக்குள் மெச்சியவனின் விழிகள் தோழனை,அமர்த்தலாய் உரசியது.
“சரி நல்லா படிக்கனும்..எப்பவும் மாதிரி லைப்ரரிக்கு வந்து தூங்கு விழுற வேல வச்சிக்காத..”
“ம்ம்ம்ம்ம்ம்…”
“நல்லா படிச்சு நல்ல வேலக்கி போ..அப்போ தான் உனக்குன்னு ஒரு தன்னம்பிக்க வரும்..அப்போ தான் நம்ம பொண்ணும்..” என்றவனுக்கோ,விழிகள் பிதுங்கியது,அவன் உரைக்க இருந்த வார்த்தைகளை நினைக்கையில்.
அவன் வார்த்தைகள் கணித்த சத்யாவுக்கு தன்னை மீறிய சிரிப்பு.அடக்கமாட்டாமல் சிரித்தே விட்டான்,அவன்.
“என்ன சீனியர் ஏதோ சொல்ல வந்து நிறுத்திட்டீங்க..?” அப்பாவியாய் கேட்டு வைத்தாள்,பாவி மகள்.மித்ராவுக்கு தோழியின் கேள்வியில் இன்னும் சிரிப்பு வலுத்தது.
“நீ ஒரு எடத்துக்கு வந்தா நம்ம நம்ம சொஸைட்டில இருக்குற பொண்ணுங்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடலா இருப்பன்னு சொல்ல வந்தேன்..” அடித்துக் கூறியவனின் பேச்சில் துளியும் சந்தேகம் கொள்ளவில்லை,அவள்.
“உனக்கு வேலக்கி போறதுல இஷ்டம் தான..?”
“ம்ம்ம்ம்ம்ம்..”
“நீ வேலக்கி போறதுல எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்ல..” உளற வந்தவன் நல்லவேளை பாதியில் நிறுத்திக் கொண்டது.இல்லையென்றால்,தோழன் கலாய்த்தே ஒரு வழி செய்து இருப்பான்.
“நீ வேலக்கி போறதுல உனக்கு சந்தோஷம்னா அத நீ கண்டிப்பா பண்ணனும்..அதுக்கு நல்லா படிக்கனும் புரியுதா..?”
“சரி சீனியர்..”
“எப்பவும் தைரியமா இருக்கனும்..அதுல்லாம எல்லா எடத்துலயும் தைரியமா முன்னாடி வரனும்..நம்ம மேல இருக்குற தாழ்வு மனப்பான்ம நம்மள பின்ன இழுக்க கூடாது..” அவள் விழி பார்த்து பேச,இவனுக்கு எப்படித் தெரியும் என்கின்ற பாவமே,அவள் விழிகளில்.
“எனக்கு எப்டி தெரியும்னு யோசிக்காத..நா சொல்றது சரி தான..?”
“ஆமா சீனியர்..”
“தயா சார சைட் அடிக்கிறது கொஞ்சம் கொறச்சிக்கோ மா..” இறைஞ்சலாய் கேட்டிட,அவளோ இமைக்க மறந்து அவனை விழிகளால் ஸ்பரிசித்தாள்.
“எப்டியோ சொல்லிட்டான் பா மனக்குமுறல..” அங்கலாய்த்துக் கொண்டான்,சத்யா.
“உங்களுக்கு எப்டி இதெல்லாம் தெர்யும்..”அவள் கேள்விக்கு,”உன் டிக்ஷனரியே அவனுக்கு அத்துப்படி..” தனக்குள் பதில் சொன்னான்,தோழன்.
“அதுவா இப்ப முக்கியம்..சைட்டடிச்ச தான நீ..?” சிறிது பொறாமை ஊறியிருந்தது,அவன் குரலில்.
“விநாயகா..அது சைட் எல்லாம் இல்ல..அப்டி சொல்லாதீங்க..அவரு மேல எனக்கு மரியாத தான் இருக்கு..அந்த தாட்ல தான் பாத்துருப்பேன்..” படபடக்க,இவனுக்கோ மீசை நுனி நெளிந்தது.
“என்னமோ ஒன்னு நீ அவர பாத்த தான..? பாத்து பிரமிச்ச தான..?”
“அது..”
“அது இதுன்னு இழுத்தாலும்..அது உண்ம தான..”
“ம்ம்ம்ம்ம்ம்..”
“அத கம்மி பண்ணிக்கோ..”
“ம்ம்..”என்றாள்,வாடிய முகத்துடன்.
“சரி சரி ஃபீல் பண்ணாத..அவ்ளோ தான் சொல்லனும்..பத்ரமா இரு..எல்லாத்துலயும் கவனமா இரு புரிஞ்சுதா..?”
“ம்ம்ம்ம்ம்..”
“சஞ்சய் உன் கிட்ட வாலாட்டுனா உன் க்ரூப்ல இருக்கானே ரகு அவன் கிட்ட சொல்லு..அவன் கிட்ட கவனமா நடந்துக்க..”
“பத்ரமா இருந்துப்ப தான..?” அழுத்தமான தொனியில் அவன் வினவினாலும்,அது அவளை ஏதோ செய்தது.
தொனியில் இருந்த அழுத்தம் சத்தியமாய் அவன் விழிகளில் இல்லை.அதில் வேறேதோ ஒன்று,அவளுக்கு புரிந்து கொள்ள முடியாததாய்;அந்த அழுத்தத்துக்கு மாறாய்.
சலனமென்ற வார்த்தைக்கு அது பொருத்தமில்லாதது எனினும்,சத்தியமாய் ஏதோ ஒன்று ஆனது,அவனின் விழிகளில் தெரிந்த தவிப்பில்.ஒரு நொடியென்றாலும்,அவன் தவிப்பில் உறைந்து மீண்டிருந்தாள்,அவள்.
“இருந்துப்பேன் சீனியர்..”
“ம்ம் சரி கவனம் அப்போ..எனக்காகவும் வேண்டிக்க சாமி கிட்ட..நா வேண்டிக்கிறது நடக்கனும்னு வேண்டிக்க சரியா..?”
“கண்டிப்பா சீனியர்..மொத வேண்டுதலே உங்களுக்காக வக்கிறேன்..”
“ம்ம் கவனமா பத்ரமா இரு..”அத்துடன் இருவருக்கும் பொதுவா தலையசைப்புடன் அவன் நகர்ந்து விட்டிருந்தான்,தலை தாழ்த்தியவாறு.
வரையறை தாண்டிய உணர்வுகள்,அவனை சிதறச் செய்தது.
சற்றுத் தூரம் நடந்து சென்றவனோ தரித்து,ஆழ மூச்சிழுத்து விட்டு திரும்பி அவளைப் பார்த்து,இலேசாக தலை சரித்து கழுத்தை வருடியவாறு புன்னகைத்திட,பதிலுக்கு புன்னகைத்தவளின் விம்பத்தை களவாடி தீர்த்தன,அவன் விழிகள்.
அதன் பின்னர்,பரீட்சைகள் தொடங்கிற்று,பையனுக்கு.அவ்வப்போது கல்லூரி வந்து செல்கையில் அவளைக் காணக் கிடைத்திடும்.இருப்பினும்,அதுவும் எப்போதாவது தான்.
அன்று அவர்களின் இறுதிப் பரீட்சை.பரீட்சை முடிவடைய தோழர்களிடம் பிரியாவிடை பெற்று நகர்ந்து வந்தவனுக்கு,அவளை சந்திக்க வேண்டும் போல் தோன்றினாலும்,அதை செய்யவில்லை.
அவன் மனம் அடங்காது என்று நினைத்திருந்தான்,அவளைப் பார்த்த பின்.
முகத்தை அழுந்தத் தேய்த்தவாறு எழுந்து நின்றவனோ,தோழர்களின் இருப்பிடம் செல்ல முனைந்த சமயம்,மெல்லிய மழை தூறத் துவங்கிற்று.
மழையின் தூறலுடன்,அவள் நினைவுகள் நெஞ்சத்தில் அடை மழையாய் கொட்டிட,அதில் பூத்த புன்முறுவலுடன் முன்னறேப் பார்த்தவனை தடுத்து நிறுத்தியது,மூச்சிறைத்திடும் அவளின் குரல்.
“சீனியர்..!” அவள் அழைக்க,அது அவன் அகம் நிறைக்க,”இசை” என சன்னமாய் முணுமுணுத்த இதழ்களுடன் திரும்பினாலும்,உணர்வலைகளுக்கு உறை போட்டிருந்தான்.
“என்ன இசை..?” கேட்டவனுக்கு அவள் தன்னைப் பார்க்க வந்திருப்பாள் என்கின்ற எண்ணமே இல்லை.அவளைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியுமே.
“அன்னிக்கி உங்க புக்க இங்க வச்சிட்டு போயிருந்தீங்க..இந்தாங்க..” என்று நீட்டிட,அவன் இமைகள் நிமிர்ந்தது.
“எக்ஸாமே முடிஞ்சிருச்சு அப்றம் எதுக்கு புக்..நீயே வச்சிக்கோ..” என்க,மறுத்தாள்,அவள்.
“உனக்கு தேவப்படும் இசை..அப்றம் தேடுவ இந்த புக்க..ஸோ நீயே வச்சிக்கோ..”அவன் பிடிவாதமாய் உரைத்திட,அவளும் அதற்கு மேல் மறுக்கவில்லை.
“ம்ம் சரி..” என்றவளோ,மழையைப் பார்த்து விட்டு அவள் பையில் இருந்த குடையை நீட்ட,மறுக்காமல் வாங்கிக் கொண்டான்,இதழோரம் புன்னகை தவழ.
“அப்பா கிட்ட கொடுத்து விட்றேன்..உன் வீட்ல யாராயாச்சும் அனுப்பி வாங்கிக் கோ..” அவன் மொழிந்திட,ஆமோதிப்பான தலையசைப்பே,அவள் பதிலாய்.
எதிர்பாராமல் அவன் தரிசனம்,அவளில் பிறழ்ந்த நொடியை அவனுக்கு நினைவூட்டி விட்டு.
அவள் திரும்பி நடந்திட,ஒரு கணம் நின்று அவளைப் புன்னகையுடன் பார்த்து விட்டே,பயணத்தை நீளமாக்கினான்,ஆர்யா.
“எப்டிடா மூனு வருஷம்..?” வியந்து போய் கேட்டான்,தோழன்.
“மூனு வருஷத்துக்கு இது போதும்..” கவர்ந்து இருந்த அவளின் நகலை பார்த்தவாறு உரைத்திருந்தான்,அத்தனை நெகிழ்வாய்.
அதன் பின்னர்,அவர்களும் ஊரை விட்டுக் கிளம்பி இருந்தனர்.சத்யாவுக்கு வருத்தம் தான்.ஆயினும்,சில பாதைகளை மாற்ற முடியாதே.
பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்றி அனுப்பியதாயிற்று.அவர்களுக்காக கார் வந்திருந்தது.
கட்டியணைத்து தோழனிடம் இருந்து விடை பெற்றவனின் மனமோ,யாழவளைத் தேடிட,மெதுவாய் தாயுமானவரின் தோளில் தலை சாய்த்து இருந்தான்.
அன்று கல்லூரியில் சந்தித்த பிறகு,அவளைக் காணவேயில்லை.அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கே எனத் தோன்றிற்று.
வண்டியோ பிரதான பாதைக்கு வந்த திரும்ப முயன்ற கணம்,இடை மறித்தாள்,அவள்.
“பாப்பா..” தாயுமானவர் கூறிட,பட்டென நிமிர்ந்தவனுக்கு,தான் நினைக்கும் சமயங்களில் எப்படி கண் முன்னே வருகிறாள் என்று மட்டும் பிடிபடவேயில்லை.
வண்டியை நிறுத்திட,அவர்களுடன் பேசியவளின் பின்னே நின்றிருந்தார்,அவளின் தந்தை.
இருவரிடமும் பேசி முடித்த பின் வண்டி கிளம்ப,தலையை எட்டி வெளியே போட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தவனின் விம்பம் அவள் விழிகளுக்குள் நிறைந்து போனது.
புதிய இடம்,புதிய சூழல் என மாற்றங்கள் துளிர்த்திருக்க,அவன் நினைவுகளால் கொன்று தின்று மறக்கவில்லை,அவள்.
நல்ல வேலை தேடிக் கொண்டு,தாயுமானவருக்கான நல்ல சிகிச்சையையும் வழங்கி அவன் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்க,வீடு கட்டும் வேலையையும் துவங்கி இருந்தான்.
காணும் யாரிலும்,அவள் சாயல்.அதுவே,அவள் இதழ் விரிவுக்கு போதும்.
அவ்வப்போது தளர்ந்து மனம் ஆசுவாசம் கேட்கும் போதெல்லாம்,அவளின் புகைப்படத்தை ஸ்பரிசித்துக் கொள்வான்.
முதல் மாத சம்பளம் கிடைத்ததும்,தாயுமாவனருக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தவனோ,அவளுக்காவும் ஒன்றை வாங்கியிருந்தான்.நெடுநாள் அவன் நினைத்து வைத்திருந்தது.
வருடங்கள் ஓடி முடிய,அவனும் இப்பொழுது வாழ்வில் ஒரு நிலைக்கு வந்திருந்தான்.அவனின் அபார உழைப்பும் குணமும் அதை இலகுவாக்கி வைத்திருந்தது.
இனி அவளை சரிபாதியாய், கைப்பிடிப்பது மட்டுமே மீதியாய்.
●●●●●●●
(II)
டாக்டரின் பேச்சை ஏற்றுக் கொண்டு,அகல்யா வண்டியில் ஏறி அமர்ந்திட,பயணம் தொடர்ந்தது.
பெண்கள் மூவரும் உறங்கி இருக்க,அவர்களின் உறக்கத்தை உறுதி செய்து விட்டு வண்டியோட்டிக் கொண்டிருந்த டாக்டரைப் பார்த்தான்,வாசு.
“சித்தார்த்..”
“நா ஒன்னு கேக்கனும்..கேக்கட்டா..?”
“என்ன வாசு..?”
“அஞ்சலி யாரு..? துருவ் யாரு..? எதுக்காக நீங்க இப்டி பண்றீங்க..?என்ன தான் யோசிச்சு இருக்கீங்க..?” கடுப்பை அடக்கிய குரலில் வினவ,சடாரென வண்டியை நிறுத்தி இருந்தான்,டாக்டர்.
காதல் தேடும்.
2025.04.26
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Semma interesting eagerly waiting for next episode 😊