

kken-11
இதோ வழக்கம்போலவே சுடிதார் அணிந்து வித்யா என்னும் சொர்க்கம் அவன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தது.
“போலாமா வெற்றி?” கண் விரித்து கேட்டாள் .
திரையரங்கம் என்றதும்,
“என்ன படம் மேடம்?” அவனும் வண்டியை யூ டர்ன் போட்டபடியே கேட்டான்.
“இங்கிலீஷ் படம் வெற்றி”
“ஓ!”
“டாம் க்ரூஸ் படம்” சொல்லிக் கொண்டே கைப் பேசியை காதில் வைத்து கொண்டாள் .
“ஆன் தி வே டீ !”யாரோ தோழியிடம் சொன்னாள்.
பதிலுக்கு அவள் ஏதோ சொல்லுகிறாள்.
“எருமை! இப்டி லாஸ்ட் மினிட்ல வந்து சொன்னா என்னடி பண்ணறது?”
மீண்டும் அவள் ஏதோ சாக்கு சொல்கிறாள்.
“பேசாத! வாய மூடு! கொல வெறில இருக்கேன்.”
செம்ம கோபத்தில் இருந்தாள் .
“என்னாச்சு மேடம்?”
“கூட வரேன்னு சொன்னவ திடீர்னு இப்ப வரலன்னு சொல்லிட்டா.”
“ஏன் அப்டி சொன்னாங்க. என்னாச்சு?”
“அவ பாய் பிரண்டு கூட போறாளாம். எருமை”
அவளே தொடர்ந்தாள் .
“முன்னாடியே சொல்லி இருந்த நான் அம்மாவோட போய் இருப்பேன்.”
“இப்ப என்ன? அம்மாவை கூப்பிடுங்க, வண்டிய திருப்பவா?”
“அம்மா இன்னிக்கு மௌன விரதம். எங்கையும் வெளிலயும் வர மாட்டாங்க.”
“வேற யாரையாவது கூப்பிடுங்க”
“நீங்க வரீங்களா?”
“இங்கிலீசு படமா? ஸ்கூல்லயே எனக்கு இங்கிலீசு புடிக்காது. எப்டியோ கஷ்டப்பட்டு ஜஸ்ட் பாஸ் ஆகிட்டேன். இதுல படமா ?” தன்னைத்தானே கிண்டலடித்துக் கொண்டான்.
“இல்ல இது தமிழ் டப்பிங் தான். ப்ளீஸ் வாங்களேன்.” கண் சுருக்கி கெஞ்சினாள். அவளுக்கு இன்று படம் பார்த்தே ஆக வேண்டும். இரண்டு வருட தவம். அதனால் தான் ஆங்கிலத்தில் டிக்கட் கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் புக் செய்திருந்தாள் .
“இல்ல மேடம்! அது சரி வராது. தப்பா எடுத்துக்காதீங்க.”
“ஓ ! அன்னிக்கு உங்க பிரண்டு கூட போனீங்க. இப்ப நான் கூப்டா மட்டும் வர மாட்டேங்கறீங்க?”
“இவள் தெரிந்துதான் பேசுகிறாளா?” அவனுக்கு புரியவில்லை.
“ஆமாம் மேடம். நீங்க கூப்பிட்றதுனாலதான் சரியா வராதுன்னு சொல்லிட்டேன்.
அவனின் சுளீரென்ற பதிலில் அவள் கண்கள் கலங்கி விட்டன.
“நான் உங்கள தியேட்டர்ல விடவா?”
“சரி! நான் தனியாவே போய்கறேன் “
இறங்கியவள் முகமே சரி இல்லை.
உள்ளே சென்று விட்டாள் . அவன் அடுத்த சவாரிக்காக காத்து கொண்டிருந்தான் . அவளிடம் இருந்து அழைப்பு வந்தது.
“வெற்றி எங்க இருக்க?”
‘இங்கதான் வாசல்ல இருக்கேன் மேடம்.”
“சரி இரு. நான் வீட்டுக்கு போறேன்.”
“ஏன் மேடம் என்னாச்சு?”
“இல்ல ஒன்னும் இல்ல. எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு.”
“மேடம் ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
“இல்ல! அதெல்லாம் ஒன்னும் இல்ல”
பேசிக் கொண்டே வெளியில் வந்து விட்டாள் . வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
இவளுக்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது. இதுவே ஒரு சினிமாவுக்காக இப்படி அழுவதை பார்த்தால் வெற்றி கிண்டலடித்திருப்பான். ஆனால் வித்யா என்றதும் மனம் கேட்கவில்லை.
சிறிது தூரம் சென்றதும் வண்டியை திருப்பினான். அவர்கள் மீண்டும் திரையரங்கை அடைந்தது கூட தெரியாத அளவுக்கு துக்கத்தில் இருந்தாள். வித்யா. எத்தனை ஆசையாக கிளம்பினாள். இரண்டு வருடங்களாக இந்த படம் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகை அல்லவா ?
வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி டிக்கட் வாங்கி கொண்டான்.
“என்ன வெற்றி?”
“வாங்க மேடம் போலாம். படம் போட்டுருவாங்க”
வேகமாக சென்றார்கள். இன்னும் படம் ஆரம்பிக்கவில்லை.
“இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவாதீங்க மேடம். ரொம்ப கஷ்டமா இருக்கு.”
“இல்ல டா ! இதுக்காக ரெண்டு வருசமா காத்திருக்கேன்”
“இது என்ன டா?”
அவன் யோசிப்பதற்குள் ,
“தாங்ஸ்” சொல்லி கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள்.
இவனுக்கு அதிர்ச்சி. டைட்டில் போட்டார்கள். ஹீரோவின் பெயர் போட்டதும் பெரிய சத்தம். இவளும்தான். படத்தை ரசித்தாள். ஹீரோவை ரசித்தாள். டாம் குருஸ் வந்ததும் பிளையிங் கிஸ் கொடுத்தாள் . விதவிதமாக சத்தம் போட்டாள். பிறகு வந்த சீன்களில் அரங்கமே அமைதியாக இருந்தது.
இவனும் ஆழ்ந்துதான் பார்த்தான்.
இடைவெளியின் போது அவள் கை பையை வைத்து கொண்டு ரெஸ்ட் ரூம் வாயிலில் நின்று கொண்டிருந்தான். மனம் முழுவதும் அவள் தந்த முத்தமே இருந்தது. தெரிந்துதான் கொடுத்தாளா ? மனம் துள்ளியது. இது தவறு. மூளை சொன்னது. அவளிடம் எப்படி கேட்பது?
இருவருக்கும் சேர்த்து அவளே சின்ன பாப் கார்ன் மட்டும் வாங்கி கொண்டாள். ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் வேறு வேறு மாதிரி காட்சி அளித்தார்கள். காதலர்களாம் . ஆடவன் பெண் கேட்ட பனிக்கூழை வாங்கி கொடுத்ததற்காக பரிசாய் அவனுக்கு ஒரு சிறு இதழ் ஒற்றல் கிடைத்தது. அவர்களை பார்த்த வெற்றிக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
“என்ன வெற்றி பேஜாராய்ட்டியா?” நமுட்டு சிரிப்புடன் கேட்டாள் வித்யா.
“நாமளும் இப்டி இருந்தா எப்படி இருக்கும் வெற்றி?” அவள் கண்களில் காதல் . உண்மையான காதல்.
“எஸ் வெற்றி! என்னால் இனிமே மறைக்க முடியாது. ஐ லவ் யூ” பூவின் வாசத்தை அடக்க முடியாததை போல அவளின் பூ மனமும் வெளிப்பட்டு விட்டது.
அதற்கு பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை.
முதலில் அவன் மறுப்பான் . பிறகு ஒத்து கொள்வான். அவள் நினைத்தது சரியே. முதலில் எல்லாம் அவனால் அவளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவள் யோசிக்காதது பலதையும் அவன் யோசிக்க வேண்டி இருந்தது. அக்கா, தங்கை, தந்தை எல்லாம் யோசிக்க வேண்டும். தான், தன்னுடைய நிலை படிப்பு, அழகு, சம்பளம் இதை எல்லாம் வைத்து கொண்டு எப்படி? மலைப்பாக இருந்தது . எடுக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் அவன்தான் தவித்தான். அவள் எதை பற்றியும் கவலை அடையவில்லை. அவளிடம் பேசிய போது தெளிவாகவே பேசினாள் .
“நாம இன்னும் கொஞ்சம் பெரிய வீட்டுக்கு போய்டலாம். நான் அப்பாவோட பிசினஸ் .எனக்கும் சம்பளம் வரும். நீ ஆட்டோ ஓட்ட வேணாம். வேற ஏதாவது டிராவல்ஸ் மாதிரி ஆரம்பிக்கலாம். இல்ல ஏதாவது ஆட்டோ மொபைல்ஸ் வைக்கலாம். அதுவும் இல்லன்னா கார் ஸ்பா ஆரம்பிக்கலாம். பேங்க் லோன் போடலாம். நீயும் கஷ்டப்பட்டு வேலை பாரு. நானும் வேல பாக்கறேன். ரெண்டு குழந்தைங்க பெத்துக்கலாம்.நம்ம பேரன்ட்ஸ் நம்ம குழந்தைங்களை பார்த்துக்கட்டும். நீ தமிழ், மேத்ஸ் சொல்லி கொடு. மத்தது நான் பார்த்துக்கறேன்.”
அவள் பேச்சில் மலைத்து தான் போனான். “வாழ்க்கை இத்தனை எளிமையானதா?” அவள் என்ன சொன்னாலும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
“நான் சொன்னது எல்லாம் யோசி. ஒன் வீக் நானு ஊருக்கு போறேன். நான் போயிட்டு வந்ததுக்கு அப்புறமா பதில் சொல்லு” சொல்லி விட்டு சென்று விட்டாள் . அவள் எதை பற்றியும் கவலை பட வில்லை அவள் மகிழ்ச்சியுடனே இருந்தாள் . போனில் வீடியோ கால் அழைத்துப் பேசினாள் .
“உன்ன ரொம்ப மிஸ் பன்னறேண்டா” காதலை சொல்லும் வரை அவளுக்கு இருந்த வெட்கமும் தயக்கமும் இப்போது இல்லை. வெளிப்படையாகவே பேசினாள். இவன் தான் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தான் அவனுக்கு அவளைப் பிடிக்கிறது. யாருக்குத்தான் பிடிக்காது? அவள் அழகி அல்ல. பேரழகி. முகத்தாலும் சரி, உள்ளத்திலும் சரி. பார்க்கும் ஆண்கள் அவளை நின்று திரும்பி நின்று பார்க்காமல் போக மாட்டார்கள். சொல்லவே வேண்டாம் பெண்களும் தான். பெண்களில் சற்றே உயரம். எந்த நிறம் அணிந்தாலும் அட்டகாசமாய் இருப்பாள். அளவான உதடு, பற்பசை விளம்பரங்களுக்கு ஏற்ற பல் வரிசை. ஊர் கண் படட்டும் படட்டும் ..என்று பாடும் கூந்தல். முகம் வரைப் போதும். அவன் அவளை முகம் வரைதான் பார்ப்பான். அவள் நடந்து வருமோதும் போகும்போதும் தான் மற்றவை கண்ணில் படும். அப்போதும் அவளை உற்றுப் பார்ப்பதை தவிர்த்து விடுவான். வித்யாவுக்கு மட்டும் அல்ல எல்லா பெண்களுக்குமே இது பொது தான். கண்ணாலேயே மேலே கீழே என்று அளவெடுக்கும் ஆள் இவனல்ல.
இப்படி இருக்கும் ஒரு பேரழகி தன்னிடம் வந்து காதல் என்று சொன்னால் எந்த ஆண்தான் நிராகரிப்பான்? அவளின் உடல் அழகையும் தாண்டி அவளின் அன்பு வெற்றிக்கு தனித்துவமானது. நிச்சயம் அவள் மலரின் இடத்தை நிரப்புவாள். அவனுக்குத் தெரியும் ஆனால் எது எப்படி இருந்தாலும் தனக்கென்று ஒரு தகுதியும் இல்லாத போது அவளை நெருங்குவதும் தவறு, நெருங்க விடுவதும் தவறு. ஒரு முறை சென்று மலரிடம் பேசி விட்டு வருவோமா? மனதில் உள்ளதை எல்லாம் அக்காவிடம் கொட்ட வேண்டும்.
“வாடா வெற்றி? என்னடா சொல்லாம கொள்ளாம வந்துருக்க? உடம்புக்கு சொகமில்லையா ?”
துணி உலர்த்திக் கொண்டிருந்தவள் கையை துடைத்துக் கொண்டு தம்பியின் நெற்றியை தொட்டு பார்த்தாள் .
தம்பியின் முக வாட்டத்தை வைத்து கண்டு பிடித்து விடும் அக்காவுக்கு இந்த முறை தோல்விதான்.
“என்னடா வெற்றி?”
“ஒன்னும் இல்லக்கா சும்மாதான் அப்டியே உன்ன பார்த்துட்டு ,,,,”இழுத்தான்.
“வீட்டுல ஏதும் பிரச்சனையா? அப்பா ஏதும் சொன்னாங்களா? புவிகிட்ட ஏதும் சண்டையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. இது வேற”
“என்னடா! ஏதும் பச்சைக்கிளி மாட்டுச்சா?”
அவள் விளையாட்டாகத் தான் கேட்டாள் .
“ஆமாக்கா !”
“பாரேன். என்னோட தம்பிக்கு ஆளு சிக்கிடுச்சா?”
கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யப்பட்டாள் . அதில் சின்ன சந்தோஷமும் இருந்தது.
“யாரு டா அந்த மகராசி”
“வித்யா மேடம்!”
முகத்தில் இருந்த சந்தோஷம் மாறி பயம் வந்திருந்தது.
“என்னடா சொல்லற?”
“ஆமாக்கா ! என்னைய லவ் பண்ணறேன்னு சொல்லி சுத்தி சுத்தி வராங்க. என்னால அவங்கள தள்ளி வைக்க முடியலக்கா”
“நீ அவங்கள?”
தலை குனிந்திருந்தவனின் மௌனமே அவன் விருப்பத்தை சொன்னது.
“அடப்படுபாவி! என்ன காரியம் பண்ணி வச்சுருக்க? எதுக்குடா அந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து வச்சுருக்க?”
“அக்கா நான் ஒன்னும் பண்ணல. அவங்க தான்..
“என்னடா அவங்கதான்? ஒரு பொண்ணுகிட்ட பேசும்போது என்ன பேசறேன்னு யோசிச்சு பேச மாட்ட ? நீ வளைச்சு போடாம எப்பிடிடா அந்த பொண்ணு சிக்கும்? “
“இல்லக்கா! நான் ஒன்னுமே பண்ணல. என்ன நம்ப மாட்டியா?”
“ஏண்டா அந்த பொண்ணு வீட்டுல உன்ன நம்பித்தானே ஆட்டோல அனுப்பினாங்க. இப்டி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு வந்து நிக்கறே. இதுதான் நான் வளர்த்த வளர்ப்பா? அக்கா தங்கச்சியோட பொறந்தவன்தானே டா நீயி?”
அன்னையின் நிலையில் இருந்து உடன் பிறந்தவனை அடி வெளுத்து வாங்கினாள்.
அக்காவின் சொல்படி வித்யாவை விட்டு விடுவானா வெற்றி …
காதல் வரும்…

