Loading

அத்தியாயம் – 29

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தாலும், அந்த வீட்டின் இறுக்கம் மட்டும் குறையவே இல்லை. விக்ராந்தை ஒரு அந்நியனைப் போல அனைவரும் நடத்தினர். அவ்வப்போது அன்னம் தன் மகனை பார்க்க வருவார், ஆனால் விக்ராந்தோ தன் பார்வையாலேயே அவரை விலகி நிற்க சொல்லி விடுவான்,…  லட்சுமணனும் தன் மனைவியின் பக்கம் மறந்தும் செல்லாமல் இருந்து கொண்டார்,…

தன் கணவர் மற்றும் மகனின் இந்த பாரா முகம் அன்னலட்சுமிக்கு அதிக வேதனையை தந்தது, தான் தவறு செய்துவிட்டேனா? என்று தாமதமாக வருந்த தொடங்கினார்….

நித்திலா அந்த வீட்டில் இருக்கும் காலம் இன்னும் இரண்டு மாதங்களே இருந்த அந்த நிலையில், அன்று குடும்பத்தினர் அனைவரும் முற்றத்தில் கூடினர். மரகதப் பாட்டி நித்திலாவையும், பல நாட்களுக்குப் பிறகு விக்ராந்தையும் அங்கே அழைத்தார். பாட்டி அழைத்ததில் ஒரு சிறு மகிழ்ச்சியுடன் அவர் முன்னே வந்து நின்றான் விக்ராந்த்,
லாவண்யாவும் ஓரமாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்,….

​”நித்திலா… இன்னைக்கு நான் உனக்கு ஒரு பரிசு தரப் போறேன்,” எனப் பாட்டி ஆரம்பிக்க, நித்திலா புரியாமல் பார்த்தாள்.

“பரிசா,…? என்ன பரிசு பாட்டி?” அவள் யோசனையுடன் கேட்க,….”சொல்றேன்டா” என்றவர், இருக்கையை விட்டு எழுந்து நித்திலாவை நோக்கி நின்றபடி,..
​”கல்யாணம் முடிஞ்சு நீ வந்த புதுசுல ஒரு செயின் கொடுத்தேன் இல்லையா?” எனக் கேட்டார் பாட்டி.

நித்திலா தன் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காட்டி, “ஆமா பாட்டி, இதுதானே?” என்றாள்.

“ஆமா மா,… நான் உன்கிட்ட இதை கொடுக்கும் போதே, இதை நீ எப்போதும் கழட்டவே கூடாதுனு சொல்லி தான் கொடுத்தேன்” மரகதம் சொல்ல,… “நியாபகம் இருக்கு பாட்டி” என்றாள் இப்போது இதையெல்லாம் எதற்காக சொல்கிறார் என்பது புரியாமல்….

“இப்போ நான் தான் சொல்றேன், உன் கழுத்துல இருக்க செயினை கழட்டி கொடு” அவர் கரம் நீட்டி கேட்க, அவள் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தாள்…

“பா.. பாட்டி நீங்க என்ன சொல்றீங்க” அவள் ஒருவித நடுக்கத்துடன் வினவ,.. “அந்த செயினை கழட்டி கொடுமா, நான் அதை உனக்கு கொடுத்ததுக்கு காரணம், என்னன்னைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சந்தோஷமா வாழனும்னு தான், அவன் பெயரோட எழுத்து உன் இதயத்தை தொட்டுகிட்டு இருக்கணும்னு நினைச்சு கொடுத்தேன், ஆனா அவன் இதுக்கு தகுதியானவனும் இல்ல, உன்னோட அன்புக்கு தகுதியானவனும் இல்ல, அவன் கட்டுன தாலியை நீ ரெண்டு மாசத்துல கழட்டி கொடுத்துடுவ, ஆனா நான் கொடுத்த பரிசை இப்போவே கழட்டிடு” அவர் சொல்ல, அவளால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்கள் சட்டென்று கலங்கி போனது,…

​பாட்டியின் வார்த்தைகள் விக்ராந்தைச் சுட்டெரிக்க..
“பாட்டி, என்ன பேசுறீங்க நீங்க?” என்றான் கலகத்துடன்

“நீ பேசாத,… பேச வேண்டிய தகுதியையெல்லாம் நீ இழந்துட்ட” பாட்டி கர்ஜிக்க,… “நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க, ஆனா நிலா அந்தச் செயினை கழட்டக் கூடாது, கழட்டவும் விடமாட்டேன்!” என அவன் உறுதியாக முன்வந்து நின்றான்.

​”இதைச் சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு?” எனப் பாட்டி ஆவேசமாகக் கேட்க, “உரிமை இருக்கிறதால தான் சொல்றேன்!” என்றான் விக்ராந்த்.

​பாட்டி ஒரு ஏளனச் சிரிப்புடன், “எந்த உரிமை? இன்னும் ரெண்டு மாசம் உன் பொண்டாட்டியா இருக்க போறாளே, அந்த உரிமையைச் சொல்றியா?” எனக் கேட்க, விக்ராந்த் அப்படியே நிலைகுலைந்து போனான்.

நித்திலாவை அவன் எத்தனை முறை அந்த ஆறு மாத கால அவகாசத்தைச் சொல்லி காயப்படுத்தினான், அதே வார்த்தையை இன்று பாட்டி அவனுக்கேத் திருப்பித் தந்தார்.

​தன் தவற்றை உணர்ந்து, விக்ராந்த் நித்திலாவை மன்னிப்பு வேண்டிப் பார்த்தான். ஆனால், நித்திலாவோ சலனமின்றித் தலைகுனிந்து நின்றாள். அவளது மௌனம் விக்ராந்தின் இதயத்தை ஆயிரம் ஊசிகளால் குத்துவது போலிருந்தது.

​”நித்திலா… செயினைக் கழட்டு!” பாட்டியின் குரல் மீண்டும் ஒருமுறை உத்தரவிட, நித்திலாவின் கைகள் நடுங்கின. லட்சுமணனும் தன் பங்கிற்கு “அம்மா சொல்றதைக் கேளுமா,” எனச் சொல்ல, அவள் சிலையென நின்றாள்.

நித்திலா தன் நினைவாக அணிந்திருக்கும் அந்தச் சங்கிலியை ஒருபோதும் கழட்ட மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் விக்ராந்த் நின்றிருந்தான்.

​ஆனால், அடுத்த நொடி அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது. சிலையென நின்றிருந்த நித்திலா என்ன நினைத்தாளோ தெரியவில்லை அந்தச் சங்கிலியைத் தன் மென்மையான கழுத்திலிருந்து கழட்டி, நேராக விக்ராந்திடமே நீட்டினாள்.

அவன் கண்களில் கசிந்த அந்த அளவிட முடியாத வலியைக் கூட அவள் சட்டை செய்யாமல், அவனது அருகில் வந்து வழுக்கட்டாயமாக அவன் உள்ளங்கையில் அதைத் திணித்துவிட்டு விலகினாள்.

பாட்டியின் பார்வை இப்போது விக்ராந்த் பக்கம் திரும்பியது. “உன் கையில இருக்கிற மோதிரத்தைக் கழட்டு!” என்றார். ஆனால் விக்ராந்த் எதையும் கேட்கும் நிலையில் இல்லை, நித்திலா கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.

“வித்தார்த்,.. அவன் கையில இருக்க மோதிரத்தை கழட்டு” மரகதம் வித்தாரத்திற்கு ஆணையிட, முதலில் முடியாது என்று மறுத்தவன், தன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, தன் தம்பியின் கரத்தை பற்றி மோதிரத்தை உருவ முயன்றான்,
ஆனால், அந்த மோதிரம் அவன் சதையோடு ஒட்டிக் கொண்டது போல அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

“முடியல பாட்டி!” என வித்தார்த் கையை விரிக்க,… “சரி விடு, நாளைக்கு ஆளை வரவச்சு மோதிரத்தைக் கட் பண்ணி எடுத்துடலாம்,” என மரகதம் தீர்க்கமாகச் சொன்னார்.

​”அப்புறம் நித்திலா… உனக்கு பரிசு தரேன்னு சொன்னேன் இல்லையா?” பாட்டி கேட்க, உள்ளுக்குள் ரணமாய் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, “என்ன பரிசு பாட்டி?” என வினவினாள் நித்திலா.

​”அர்ஜுன்!” பாட்டி குரல் கொடுக்க, வாசலில் இருந்து நிமிர்வான தோற்றத்துடன் ஒரு இளம் யுவன் நடந்து வந்தான்.

நித்திலா வந்தவனை யார் என்பது புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாள்,… பாட்டியின் அருகில் வந்த அர்ஜுன் அவரது காலை தொட்டு வணங்கி மென் புன்னகை சிந்தினான்,..

“நல்லா இருப்பா,” என ஆசீர்வதித்த மரகதம், நித்திலாவைப் பார்த்து,
“அர்ஜுன்,… இவ தான் என் பேத்தி நித்திலா” என நித்திலாவை அறிமுகம் செய்து வைத்தார்..

“ஹாய்” என அவன் நித்திலாவை பார்த்து இதமாகப் புன்னகைக்க, அவள் ஒருவிதக் குழப்பத்துடன் ஒரு மெல்லிய சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தாள்.

“நித்திலா இவன் அர்ஜுன், சொந்தமா பிஸ்னஸ் பண்ணுறான், நம்ம ஊர்மிளாவோட ஒன்னு விட்ட அண்ணன் பையன், நான் உனக்காக தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை” பாட்டியின் அந்த வார்த்தையால் அரங்கமே அதிர்ந்தது. நித்திலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, விக்ராந்தோ தன் உலகமே தன் கண்முன்னே சரிவதைக் கண்டு செயலிழந்து நின்றான்.

ஊர்மிளா, லட்சுமணன், சந்தானம் ஆகியோரைத் தவிர, லாவண்யா உட்பட மற்ற அனைவருக்குமே பாட்டியின் இந்தத் துணிச்சலான முடிவு பேரதிர்ச்சியாக இருந்தது.

பாட்டியின் வார்த்தைகள் நித்திலாவை நிலைகுலையச் செய்திருக்க,.. “பாட்டி…” என அவள் அழைக்க முயன்றும், அதற்கு மேல் பேச்சு வராமல் கண்ணீர் தான் ஆறாய்ப் பெருகியது.

“எனக்கு தெரியும்மா உனக்கு இது அதிர்ச்சியான விஷயம் தான், ஆனா இது தான் உன் வாழ்க்கைக்கு நல்லதுனு நான் நினைக்கிறேன், நான் மட்டும் இல்ல உன் லட்சு அப்பாவும் இதை தான் நினைக்கிறான், அர்ஜூன்க்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும், உன்னை போட்டோல பார்த்ததுமே அவனுக்கு பிடிச்சு போச்சு, ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல பாட்டி, உங்க பேத்தி பட்ட கஷ்டத்துக்கு என்னை கட்டிக்கிட்ட பிறகு, கஷ்டம் என்ற ஒன்னு இல்லாம நான் பார்த்துப்பேன்’னு சொன்னான், எனக்கு மனசு நிறைஞ்சு போச்சு, இவன் தான் உனக்கு ஏத்த சரியான ஜோடின்னு நான் முடிவு பண்ணிட்டேன்” என்றார் மரகதம்….

நித்திலா ஏதோ பேச வர, அவளை முழுதாக பேச விடாமல்.. “அன்னைக்கு எனக்கு சத்தியம் செஞ்சி கொடுத்த நியாபகம் இருக்கா நித்திமா, நான் ஒன்னு கேட்பேன் அதுக்கு நீ ஒத்துக்கனும்னு சொன்னேன், நீயும் சரின்னு சத்தியம் பண்ண, அது இதுக்காக தான்மா, நீ எதுவும் பேச கூடாது, உன் பாட்டி உனக்கு நல்லது மட்டும் தான் பண்ணுவேன், இப்போ சொல்லு உனக்கு இதுல சம்மதம் தானே” அவர் ஆவலாக கேட்க, தலைகுனிந்து மௌனமாக நின்றவள்,… அனைவரின் முன்னிலையிலும் பாட்டியின் வார்த்தையை மறுக்க மனம் இல்லாமல், அவரிடம் தனியாக பேசி புரிய வைத்துக் கொள்ளலாம் என நினைத்து, சத்தியத்துக்கு மட்டுமே கட்டுபட்டு,..”சம்மதம்” என்றாள்,…

அந்த ஒரு வார்த்தை, விக்ராந்தின் உலகத்தையே இருளாக்கியது, அவன் கண்கள் கலங்கியது அதை யார் கவனித்தார்களோ இல்லையோ நித்திலா கவனித்தாள், அவனால் அங்கே அதற்கு மேலும் ஒரு நிமிடம் கூட நிற்க முடியவில்லை. இதயத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் தன் அறைக்கு விரைந்து சென்றான்,..

​அன்னலட்சுமி பதறியபடி, “அத்தை, நீங்க பண்ணுறதெல்லாம் நல்லா இருக்கா? அவ புருஷன் இருக்கும்போதே இன்னொரு மாப்பிள்ளையை கொண்டு வந்திருக்கீங்க” எனக் கேட்க, “உன் பையன் பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொருத்தியை வீட்டுல வச்சிருக்கானே, அது உனக்குத் தப்பா தெரியலையா?” என அவர் சீற, அன்னலட்சுமிக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை, வாயைமூடிவிட்டார்,…

வித்தார்த் மற்றும் சுமித்ராவிற்கும் கூட இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை, விக்ராந்த் லாவண்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று இது வரை யாரிடமும் சொல்ல வில்லை, அப்படி இருக்கும் போது நித்திலாவிற்கு மாப்பிளை பார்த்தது அவர்களுக்கு சரியாக படவில்லை, பெரிவர்களிடம் இதை பற்றி பேசவும் தயக்கமாக இருந்தது, என்ன செய்வது என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்,…

இனியாவை அவள் பாட்டி (ஊர்மிளாவின் தாய்) வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர், அவள் சிறிய பெண், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் வயது அவளுக்கு இல்லை, வீணாக மனது  சங்கடப்படும் என்பதால் அவளை சில நாட்கள் முன்பே அனுப்பி வைத்து விட்டனர்,….

நித்திலா எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தாள், அவளது மனம் முழுக்க விக்ராந்தை சுற்றிதான் இருந்தது, அவனது கலங்கிய முகம் அவள் மனதை தவிப்புற செய்தது, அவனை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் மேலோங்கியது,…

ஒவ்வொருதரின் நிலை இப்படி இருக்க, எந்த வித கவலையுமின்றி விக்ராந்த் இனி தனக்கு தான் என்ற சந்தோஷத்தில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தாள் லாவண்யா….

“நித்திலா ஆர் யூ ஓகே” நித்திலாவின் முகம் வாடி இருப்பதை கண்டு, அவளுக்கு எதிரில் நின்ற அர்ஜுன் அக்கறையாக வினவினான்,….

அவனிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என தெரியாமல் நித்திலா தவிப்புடன் நின்றிருக்க, அவள் அருகில் வந்தாள் சுமித்ரா,…

“நித்தி கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கா, பாட்டி இப்படி ஒன்னு சொல்லுவாங்கன்னு அவ எதிர்பார்க்கலைல அதான்” சுமித்ரா ஏதோ சொல்லி சமாளிக்க,….”உங்க மைண்ட்செட் புரியுது நித்திலா, ஒன்னும் அவசரம் இல்ல, நாம முதல்ல ஃபிரண்ட்ஸா பழகலாம், உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா? என்னை பிடிச்சிருந்தா மட்டும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” அர்ஜுன் மிக அருகில் நின்று ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தான். அவனது வார்த்தைகள் கனிவாகவும், நாகரிகமாகவும் தான் இருந்தன.

ஆனால், நித்திலாவின் காதுகளுக்கு அவை வெறும் இரைச்சலாக மட்டுமே கேட்டன. அவளது மூளை எதையும் கிரகிக்க மறுத்துவிட்டது. அந்த நிமிடம், அவளது உலகம் விக்ராந்த் என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே நிலைத்திருந்தது.

​மனம் முழுக்க ‘அத்து… அத்து…’ என்ற நாமம் மட்டும் ஒரு மந்திரத்தைப் போல ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘ஏன் அவனுக்காக என் இதயம் இப்படித் துடிக்கிறது? அவன் என்னைக் காயப்படுத்தியவன் அல்லவா? இன்னொரு பெண்ணை நேசிப்பதாகச் சொல்லி என் நம்பிக்கையை உடைத்தவன் ஆயிற்றே! அப்படியிருக்க, அவன் கலங்கிய முகத்தை கண்டதும் ஏன் என் உயிர் இத்தனை தூரம் வலிக்கிறது?’ இத்தகைய தர்க்கரீதியான கேள்விகள் எதற்கும் அவளிடம் பதில் இல்லை.

​அவளது அறிவு ‘அவன் உனக்குத் துரோகம் செய்தவன்’ என்று எச்சரித்தாலும், அவளது ஆழ்மனமோ ‘அவன் வலியில் இருக்கிறான், போய் பார்!’ என்று அவளை உந்தியது. அதற்கு மேல் அங்கிருக்க அவளால் முடியவில்லை.. “நான்… நான் இப்போ வந்துடுறேன்” என்று தடுமாற்றத்துடன் கூறிவிட்டு வேகமாய் அறை நோக்கி நடந்தாள்.

பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததால் அவளது பதற்றத்தைக் கவனிக்கவில்லை. ஆனால், அர்ஜுன், வித்தார்த், சுமித்ரா மற்றும் அன்னலட்சுமி ஆகிய நான்கு ஜோடி கண்கள் மட்டும், கலவரத்துடன் ஓடும் அவளது முதுகையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

அறைக்குள் நுழைந்த நித்திலா, அங்கிருந்த கோலத்தைக் கண்டு ஒரு கணம் உறைந்து போனாள். அலங்காரமாக இருந்த அந்த அறை, இன்று போர்க்களம் போலக் காட்சி அளித்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் சிதறிக் கிடந்தன. விக்ராந்தின் ஆத்திரம் அந்தப் பொருட்களின் மீது தீர்க்கப்பட்டிருப்பது அவளுக்குப் புரிந்தது.

தரையில் சொட்டு சொட்டாகச் சிதறிக் கிடந்த அந்தச் சிவந்த ரத்தத் துளிகளைக் கண்டவள் இதயம் அதிவேகமாக துடித்தது,
​பதற்றத்துடன் அறை முழுக்க அவனைத் தேடினாள். அவன் அங்கே இல்லை. பால்கனி கதவு காற்றில் ஆடிக்கொண்டிருக்க, அவன் அங்கிருப்பான் என்று யூகித்து ஓடினாள்.

​அவள் எதிர்பார்த்தபடியே விக்ராந்த் அங்கேதான் இருந்தான். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தவன், தன் கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிவதைக் கூடப் பொருட்படுத்தாமல், அந்தச் சுவரைத் தன் கால்களால் ஓங்கி மிதித்துக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒருவிதமான மரண வலி தெரிந்தது.

​”அத்து!”  அவனது பெயர் அவளது அடிவயிற்றிலிருந்து அலறலாக வெளிப்பட்டது. ஓடிச் சென்று அவனது ரத்தம் வழிந்த கரத்தைப் பற்றியவள் “அத்து… ஐயோ எவ்வளவு ரத்தம்!” என அவள் துடித்தபோது, அவளது கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பு விக்ராந்தின் இதயம் வரை ஊடுருவியது. அவனது கண்கள் கலங்கின.

​நித்திலா அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஒருவேளைப் பார்த்திருந்தால், அந்தத் தவிப்பைத் தாங்க முடியாமல் அங்கேயே அவனைக் கட்டி அணைத்துத் தன் காதலைச் சொல்லியிருப்பாளோ என்னவோ! ஆனால், அவளது கவனம் முழுவதும் அந்தக் காயத்தின் மீதுதான் இருந்தது. அவனை அறைக்குள் அழைத்து வந்து, முதலுதவிப் பெட்டியைத் திறந்து, ரத்தத்தைத் துடைத்து மருந்திட்டுக் கட்டுப் போட்டாள். அவள் செய்யும் ஒவ்வொன்றையும் இமைக்காமல், பெரும் தாக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

மருந்திட்டு முடித்ததும் அவள் விலக பார்க்க, விக்ராந்த் தழுதழுத்த குரலில்.. “பேபி… என்னை விட்டுப் போகப் போறியா?” என்று கேட்டான்..

​அந்த ஒற்றைக் கேள்வி நித்திலாவைச் சுக்குநூறாக உடைத்தது. அப்போதும் அவள் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ‘பார்க்கப் பிடிக்கவில்லை’ என்பதை விட, ‘பார்க்கத் துணிவில்லை’ என்பதே உண்மை. குற்றவுணர்வால் அவள் கூனிப்போனாள். அவனது கண்களைச் சந்தித்தால், தன் கட்டுப்பாட்டை இழந்து அவனுள் மீண்டும் புதைந்து விடுவோமோ என்ற பயம் அவளுக்கு!

​’அவன் என்னை நேசிக்கவில்லை… வேறொருத்தியைத்தான் காதலிக்கிறான்… என் மீது இருந்தது வெறும் ஆசை மட்டும்தான்’ இந்த எண்ணங்கள் அவளை இரும்புத் திரையாகத் தடுத்து நிறுத்தின. பதில் ஏதும் சொல்லாமல் கற்சிலையாய் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

நித்திலா வெளியேறியதும் விக்ராந்த் அந்த அறையிலேயே நிலைகுலைந்து அமர்ந்தான். அவளுக்குத் தன் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பம் இல்லையா? அவளது அந்தப் பாராமுகம், அவனது கை காயத்தை விட ஆயிரம் மடங்கு அதிக வலியை அவனது ஆன்மாவிற்குக் கொடுத்தது.

‘நான் செய்த பாவங்களுக்குக் கிடைத்த தண்டனைதான் இது’ என்று அவன் மனம் சொன்னாலும், அந்தத் தண்டனையின் வீரியத்தைத் தாங்கும் வலிமை அவனிடம் இல்லை, ​அந்த வலி அவன் உயிர் வரை சென்று கத்தியால் அறுப்பது போல இருந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. காலம் கடந்து வருத்தப்பட்டு என்ன ஆக போகுது விக்ராந்த் ..

  2. அன்னலட்சுமிக்கு இப்பொழுது தான் மகன் மற்றும் கணவனது உணர்வுகள் கண்களுக்கு தெரிகின்றது.

    பாட்டி இதுபோன்ற ஏதாவது ஒன்றுதான் செய்வார் என்று எதிர்பார்த்தேன்.

    ஊர்மிளாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் என்றால் நித்திலாவிற்கு அண்ணன் முறை ஆகாதா? 🤔

    சத்தியத்திற்கு கட்டுப்பட்டு சம்மதம் கூறி விக்ராந்தை வதைத்தாயிற்று.

    அவனது வெளிக்காயங்களும் புரிகின்றது, மனக்காயங்களும் புரிகின்றது ஆனால் ஒத்துக்கொண்டு இளகி செல்ல தான் இயலவில்லை.

    மறுபடி மறுபடி காயப்பட மனம் இல்லாமல் பாதுகாப்பாய் தானாய் விலகி நின்றுகொண்டு அவனை தெரிந்தே காயப்படுத்துகிறாள்.

    1. Author

      எஸ் மா,.. உறவு முறை பற்றி தெரியாம தப்பா போட்டுட்டேன், நான் சேஞ்ச் பண்ணிடறேன், thanks for you valuable support ma, 🥰🥰🥰