
அழகியே என் மழலை நீ 29
அனைவருமே அங்கு நடந்ததை அத்தனை நெகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர். இதுவரை ஒருமுறை கூட அவர்களை ஆசீர்வாதம் செய்யவேண்டும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லையே.
செழியன் அவர்களிடம் திரும்பியவன், “சாரி மாமா. அவங்க வந்ததுல மறந்துட்டேன் என்ன விஷயமா எல்லாரும் வந்துருக்கீங்க” என்று கேட்க, தாமரைதான், “அது ஒன்னும் இல்லை செழியா. உங்க கல்யாணம் எல்லாரும் பார்த்து வச்சு நடந்துருந்தா நாங்க எல்லா செய்முறையும் செஞ்சு வேதாவை வழியனுப்பிருப்போம். இப்போ நீங்ககூட வந்தா என்ன வேணுமோ அதெல்லாம்” அவர் முடிப்பதற்கு முன்பே கைநீட்டி தடுத்தவன் முகம் கோபத்தில் சிவக்க நின்றிருந்தான்.
“செய்முறை செய்யணும்னு இப்போ யார் உங்ககிட்ட கேட்டாங்க. நான் கேட்டனா. இல்லை உங்க பொண்ணு வந்து உங்ககிட்ட கேட்டாளா?” என்றவன் திரும்பி வேதாவை பார்க்க, அவளும் ஒன்றும் புரியாமல் அவர்களைதான் பார்த்து கொண்டிருந்தாள்.
செழியனோ, “இத இதோட விட்ருங்க அத்தை. இந்த பேச்சே வேணாம் வேற ஏதாச்சும் பேசுங்க” என்றவன் அதை பற்றி முழுவதுமாக தவிர்த்துவிட்டான். அறிவழகன்தான் பேச்சை மற்றும் விதமாக, “செழியா நாளைக்கு நம்ம பௌண்டேஷன் சார்பாக ஒரு பங்சன் இருக்கு. ரெண்டு பேரும் அதுல கண்டிப்பா கலந்துக்கணும்” என்று மேலும் மகன் ஏதாவது பேசி விடுவானோ என்று பேச்சை மாற்றினார்.
அவனோ, “நாளைக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு. கண்டிப்பா வர முடியாது அகரா, தப்பா எடுத்துக்காதீங்க” என்று தமயனிடம் கூறுவது போல் தந்தையிடம் கூறினான்.
அதற்குள் வேதா உறக்கம் வருவது போல் முகத்தை வைத்து கொண்டிருக்க செழியன், “எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கவா.. சாப்பிடுறிங்களா” என்று கேட்க, அவர்களோ வரும்போது சாப்பிட்டோம் என்று கூறினர்.
செழியன் வேகமாக எழுந்தவன் ஒருதட்டில் இரண்டு தோசையை எடுத்து வைத்து கிண்ணத்தில் பால் கொஞ்சம் எடுத்து வந்தவன், வேதாவின் அருகில் அமர, அப்போதுதான் அனைவரும் அவளை பார்க்க, அவளோ அரை உறக்கத்தில் இருக்க செழியன் கொஞ்சம் கொஞ்சமாக தோசையை எடுத்து பாலில் தோய்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட, அவளோ உறக்கத்திலே உண்டு முடிக்க, அவன் பிலேட் கழுவி வைத்து வருவதற்குள் உறங்கியிருந்தாள் டைனிங் டேபிளில் தலை வைத்து.
செழியன் அவளை தூக்கி கொண்டு சென்று அறையில் படுக்க வைத்து வர, அனைவர்க்கும் அவன் சேய்க்கு சேவை செய்யும் தாய் போலதான் தெரிந்தான். பிள்ளைகள் கண் முன்பு மகிழ்ச்சியாய் இருந்தால் பெற்றோர்களுக்கு அதைவிட பெரிதேது.
மீனாட்சிதான் தாமரையை பார்த்து, “ரொம்ப லட்சணமா வளர்த்து வச்சிருக்க பிள்ளையை” என்றவர் முகத்தை திருப்பி கொள்ள, தாமரை முதன் முறையாய் இது ரசிக்கதக்க விஷயம் இல்லையோ என்று யோசிக்க தொடங்கினார்.
அவளை படுக்க வைத்துவிட்டு வெளியே வந்த செழியன் அவர்களிடம், “அது லேட் நைட் வரைக்கும் தேவ் ட்ரெஸ் ரெடி பண்ணிட்டு இருந்தா. அதான் தூங்கிட்டா” என்று கூறிக்கொண்டே டம்ளர்களை எடுத்து கழுவ கொண்டு போக, அவனின் மற்றொரு பரிமாணம் குடும்பத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.
அவர்களுக்கு புரியவில்லை அது வியப்பை எல்லாம் தாண்டி, அவளுக்கான அவனின் நேசம் என்று…
அனைவரும் செழியனிடம் கூறிக்கொண்டு வீட்டுக்கு வர, மீனாட்சியோ எல்லாருமே இங்க இருக்கீங்க. இப்போவே பேசிரலாம் என்றவர், “நான் அகரனுக்கும் சவிதாவுக்கும் கல்யாணம் பண்ணிரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். நாளைக்கு அவங்க அப்பா அம்மாவ வர சொல்லி பேசி முடிச்சிரலாமாங்க” என்று அறிவழகனிடம் கேட்க,
அவரோ, “இப்போ நீ சம்மதம் கேக்குறியா? இல்லை முடிவு பண்ணிட்டு எங்க கிட்ட சொல்றியா? என்று கேட்டார்.
“இதுல முடிவு பண்ண இனி என்னங்க இருக்குது. நம்ம செழியனுக்கும் அவளுக்கும் பண்ணிரலாம்னு நெனச்சோம். ஆனா அவன்தான் வேற ஒண்ண தேடிகிட்டானே. இனி அகரனுக்காச்சும் முடிச்சிரலாம்” என்று கூற,
அகரனோ, “என்கிட்ட இதபத்தி பேசாம நீங்களா எப்படிமா முடிவு பண்ணுவீங்க? எனக்கு சவிதாவ கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை. சாரி அண்ணி.. தப்பா நெனச்சுக்காதீங்க” என்று லாவண்யாவிடம் கூறியவன், நான் என் பிரண்ட் ஹரிஷ் தங்கச்சி தன்விகாவை லவ் பண்றேன். அவ செழியனுக்கும் பிரண்ட்தான்” என்று கூற, அதுவே அறிவழகனுக்கு போதுமானதாக இருந்தது.
தாமரையிடம் திரும்பிய அறிவழகனோ, “என்னமா சொல்ற நாளைக்கு போய் அந்த பொண்ண அகரனுக்கு பேசி முடிச்சிரலாமா? என்று கேட்க, “என்னனா இதபோய் என்கிட்ட கேக்குறீங்க. அகரனுக்கு என்ன விருப்பமோ அதை செய்ங்க. வாழ போறது அவன்தான்” என்று கூற, அகரனோ, “தேங்க்ஸ் அத்தை” என்று கூறினான்.
வேதநாயகி, “ஏன் தாமரை அதிரன்தான் இவனுங்களை எல்லாம்விட பெரியவன். அவனுக்கு எப்ப பண்றதா உத்தேசம். நான் ஒரு கணக்கு போட்டேன். இங்க வேற ஒண்ணு நடக்குது. அதுக்கு ஆகாதுன்னு தெரிஞ்சிருச்சு என்றவர் ஆதியையும் அர்ச்சனைவையும் பார்த்துவிட்டு, காலகாலத்துல அவனுக்கு ஒரு பொண்ண பார்த்து முடிச்சு வைக்கணும்” என்று கூற, அதிரனின் முகம் நொடியில் மாறிப்போனது.
“வேணாம் பாட்டி. எனக்கு கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்லை. தேவ் கல்யாணம் முடிஞ்சதும் அகரனுக்கு முடிக்கலாம் அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறி அதற்கு முற்று புள்ளி வைத்தான். அவனின் மனமோ தவித்து கொண்டிருந்தது. கடந்த காலம் அவனை துடிக்க வைத்தது.
மீனாட்சியோ, “நீ மட்டும்.தான் என் பேச்சை கேப்பன்னு நெனச்சேன். அது நடக்காதுன்னு தெரிஞ்சுகிட்டேன். சரி அந்த பொண்ண நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லு பாக்கலாம். எனக்கு பிடிச்சா மட்டும்தான் நான் சம்மதிப்பேன். அப்புறம் நாங்க உன்னோட வரோம்னு நீ அந்த பொண்ணுகிட்ட சொல்ல கூடாது. அவளோட நடவடிக்கைகள் பார்த்துட்டுதான் நான் முடிவு பண்ணுவேன். நாளான்னிக்கு தேவ் கல்யாணம். நாளைக்கு காலைல கோவிலுக்கு வர சொல்லு” என்று கூற
அறிவழகனோ, “இதெல்லாம் தேவையா மீனாட்சி” என்று கேட்க அவரோ, “ஆமாங்க கண்டிப்பா வேணும்” என்றவர் தாமரையிடமும் அன்பரசனிடமும், ”நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும். எல்லாருமே போகலாம்” என்று கூற, அனைவரும் அகரனுக்காக சரி என்று கூறினர்.
மறுநாள் காலை அனைவருமே கோவிலுக்கு வந்திருந்தனர். கோவிலுக்குள் செல்லாமல் வெளியே இருந்த மரத்தடியில் நின்று கொண்டு இருந்தனர் அனைவரும்.
அப்போது சரியாய் செழியன், வேதா இருவரும் வண்டியில் வந்து இறங்க, அகரனோ, “ஹேய் செழியன் இவனுக்கு சொல்லவே இல்லை. நினைச்சேன் வந்துட்டான் என் தம்பிடா” என்று அரவிந்தனிடம் கூற அவனோ தம்பியை பார்த்து கொண்டு இருந்தான்.
செழியன் இளஞ்சிவப்பு வண்ண சட்டையும், நீலவண்ண பேண்டும், வேதா அதே வண்ண புடவையில் அம்சமாய் இருந்தனர். வண்டியில் இறங்கியதும் வேதா அரச்சனை பொருட்கள் வாங்க வந்து நிற்க, செழியன் அதே கடையில், “பாட்டி அந்த பூ ஒரு நாலு முழம் தாங்க” என்றவன் அனைத்திற்கும் சேர்த்து பணத்தை கொடுக்க, அதை வாங்கிய அந்த மூதாட்டியோ, “ரெண்டு பேரு ஜோடி பொருத்தமும் அம்சமா இருக்குயா. பூவ பொஞ்சாதிக்கு வச்சுவிடு” என்று கூற, அவரின் கூற்றில் இருவரின் இதழ்களும் அழகாய் விரிய, செழியன் அவளின் கூந்தலில் பூவை சூட்ட, காவியமாய் இருந்தது அந்த காட்சி. ஆதி அதை அவனின் மொபைலில் அழகாய் பதிவும் செய்து கொண்டான்.
அதை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் இதழ்களும் விரிந்து கொள்ள மனம் நிறைந்து போனது அவர்களுக்கு. மீனாட்சிக்கும் கூட இருவரின் ஜோடிபொருத்தமும் ஏதோ கொஞ்சம் நிறைவாக இருந்தது.
அவர்கள் ஓரமாய் நின்றிருக்க, “ஹேய் என்ன கோவில்ல ரொமான்ஸா.. நான் பாத்துட்டேன்” என்றவாறே ஆரவாரத்துடன் “ஐ மிஸ் யூ சோ மச் அழகி” என்றவாறே வந்து அணைத்துக்கொண்டாள் தன்விகா.
செழியன், “ஏண்டி இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல. நேத்துதான வீட்டுக்கு வந்து பார்த்த. அதுக்குள்ள என்ன கதை விடுற நீ” என்று கூறியவன் அவளின் காதை பிடித்து திருக அவளோ, “போடா நாலுவருசமா கூடவே இருந்துட்டு இந்த இரண்டு மாசம் பாட்டியை பார்க்கணும்னு ஊருக்கு வேற போய்ட்டேன். எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா என் அழகிய. தூங்கும் போது இவகூட இருக்க நியாபகத்துல அம்மாவ வேற ரெண்டு நாளா தூக்கத்துல தட்டி கொடுத்துட்டேன். அவங்க வேற என்ன கிண்டல் பண்றாங்க சாப்பிடும் போதுகூட முதல்ல இவளுக்கு ஊட்டி விட்டுதான் சாப்பிடுவேனா, கண் தானா இவளைதான் தேடுது. அழகி பேசாம நீ என்னோடவே வந்துரு” என்று கூறி அவளை மீண்டும் அணைத்துக்கொண்டாள். வேதாவுமே அவளின் அன்பில் நெகிழ்ந்துதான் போனாள்.
திடீரென அவளில் இருந்து பிரிந்தவள் அந்த எருமமாடு முந்திக்க முன்னாடி சொல்லிருறேன் என்றவள், “விஷ் யூ ஹாப்பி ஹாப்பி வெட்டிங் டே. ஹாப்பி அன்னிவெர்சரி” என்றவள் இருவரையும் அணைத்துக்கொள்ள, இருவரும் ஒரு சேர தேங்க் யூ என்று கூறினர்.
அனைவருக்குமே அதிர்ச்சிதான். இன்று அவர்களின் திருமண நாளா, அதற்குகாகத்தான் கோவிலுக்கு வந்துள்ளார்களா என்று நினைத்துக்கொண்டனர்.
அரவிந்தனோ, “ச்ச.. லாவி நாளைக்கு நம்ம மேரேஜ் அன்னிவெர்சரி. அப்போ இன்னைக்கு அவங்களுக்கு அன்னிவெர்சரில நியாபகமே இல்லை” என்று கூறினான்.
“உன் விஸ்ஷஸ் முடிச்சுருச்சுன்னா விடுடி. அவங்க போய் சாமி கும்பிட்டு வரட்டும். பிசாசே” என்ற குரல் கேட்டு திரும்பியவள் இடுப்பில் கைவைத்து அங்கு நின்றிருந்த தேவ்வை முறைத்தவாறே, “எரும நீதான்டா பிசாசு. குட்டி சாத்தான். பார்த்தியா இந்த வருஷம் நான்தான் முதல்ல விஷ் பண்ணிருக்கேன்” என்று கெத்தாக கூறினாள்.
தேவ்வோ, “வாய்ப்பில்லை.. ராஜா வாய்ப்பில்லை.. எப்போவும் நான்தான் என் நண்பனுக்கு எல்லாருக்கும் முன்னால. ஏண்டி அவங்களுக்கு தாலி எடுத்து குடுத்து கல்யாணம் பண்ணி வச்சதே நான்தான். மறப்பேனா யாருகிட்ட” என்று சட்டை காலரை தூக்கி விட, செழியன்தான், “ஹேய் இது கோவில்டா அமைதியா இருங்க” என்று சமாதானப்படுத்தினான்.
தேவ், “பைத்தியமே எதுக்குடி என்கிட்ட வம்பிழுக்குற, உன்னாலதான் இவன் என்ன திட்டுறான்” என்று கூற, அவளோ, “பிசாசே நாளைக்கு உனக்கு கல்யாணம். இங்க என்ன பண்ற நீ. இரு நான் அனு அக்காக்கு கால் பண்ணி சொல்றேன் என்று கூற, அவனோ, “உன்னோட அனு அக்காதான் இவங்களோட அனுப்பி வச்சா.. போவியா” என்று கூறினான்.
வேதாவோ, “உங்க ரெண்டு பேரையும் வச்சு எப்படிதான் அனு அக்காவும் அகரன் மாமாவும் சமாளிக்க போறாங்களோ தெரில” என்று சலித்துக்கொள்ள, மொத்த குடும்பமும் திரும்பி அகரனைத்தான் பார்த்து கொண்டிருந்தது.
தேவோ தன்வியின் தோளில் கைப்போட்டவனோ, “பார்த்தியாடி இவளை நம்மள சமாளிக்க முடியாதாம். யார் யார் என்னென்ன பேசறதுனு ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு” என்று கூற, வேதா உதடு பிதுக்கி செழியனை பார்க்க அவனோ, “இம்சைங்களா எதுக்குடா இப்படி உண்மைய பேசி என் தங்கத்தை பீல் பண்ண வைக்கிறிங்க அறிவில்ல” என்று சீரியசாய் திட்ட, வேதாவோ புருவமுயர்த்தி செழியனை முறைக்க முயன்று தோற்றவள் சிரித்துவிட, அவர்கள் மூவரும் சிரித்துவிட்டனர்.
விளையாண்டு கொண்டே நால்வரும் உள்ளே சென்று விட, அவர்கள் சாமி கும்பிட்டு பிரகாரத்தை சுற்ற சென்றுவிட, அப்போதுதான் அனைவரும் உள்ளே நுழைந்தனர். அகரன் தாயின் முகத்தை பார்க்கவே இல்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹோ அகரனுக்கு இந்த பொண்ணா .. அதிரனுக்கு என்ன பாஸ்ட் இருக்கும் ..