
அத்தியாயம் 8
“ஹாய் மச்சான்ஸ்” என்று வாசலில் கேட்ட விஜயின் குரல் ஹரிக்கும் கார்த்திக்கும் காதில் தேனருவி போல் வந்து பாய்ந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியோடு கண்ணடித்துக் கொண்டு விஜயை நோக்கி வாயெல்லாம் பல்லாக வரவேற்க சென்றனர்.(பின்ன தானா ஒரு ஆடு வந்து என்ன வெட்டுங்கோ வெட்டுங்கோன்னு கழுத்தை காட்டுனா இவங்களுக்கு சந்தோஷமா தான இருக்கும்).
இருவரும் சென்று விஜயின் இருபக்கமும் கட்டிப்பிடித்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்து ” வாடா மாப்பிள்ளை ” என்று மிகவும் சந்தோஷமான குரலில் கூவினர்.
‘இந்த நாய்ங்க இப்படிலாம் பண்ணாதே வரவேற்பெல்லாம் பலமா இருக்கு ..எப்பயும் நம்மல ஒரு மனுஷனாவே மதிக்க மாட்டானுங்க ரெண்டு பேரும் இன்னைக்கு பாச மழையோட சேர்ந்து அவங்களோட ஆளுக்கு கொடுக்க சேர்த்து வச்சுருந்த முத்த மழை எல்லாம் பொழியுறானுங்க விஜய் பெருசா ஏதோ ப்ளான் பண்ணிருக்கானுங்க உஷாரா இருடா’ என அவன் மனம் அவனுக்கு எச்சரிக்கை மணி அடிக்க இருவரையும் தன்னிடம் இருந்து பிரித்து விட்டு
“டேய் கருமம் பிடிச்சவங்களா ஏன் டா என் கன்னத்தை எச்சில் பண்ணுறீங்க ஒரு மச்சான்காரன் பண்ணுற வேலையா இது. இப்போ எதுக்கு இந்த ரெண்டு கரடிகளும் அடிபோடுது??” என அவர்களை நோக்கி வினவினான்.
அதற்குள் இவர்களின் சப்தத்தை கேட்டு வெளியே வந்த ஆதிரா தன் கணவனை பார்த்து அகமும் புறமும் மலர வேகமாக ,” விஜி எப்போ வந்தீங்க என் கிட்ட நேத்து நைட் பேசுறப்போ கூட சொல்லவே இல்லை?? எதுல வந்தீங்க அத்தம்மா மாமாலாம் வந்துருக்காங்களா?” என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
“அட போதும்மா நிப்பாட்டு லிஸ்ட் பெருசா போய்க்கிட்டு இருக்கு. உனக்காக இரா பகலா தூங்காம வேலையெல்லாம் முடிச்சுட்டு சர்ப்ரைஸா வந்தா நீ என்னடானா ஏதோ போலிஸ் மாதிரி கேள்வியா கேட்டுட்டு இருக்க.நியாயப்படி நீ ஸ்லோ மோஷன்ல ஓடி வந்து என்னை கட்டி பிடிச்சு ‘அத்தான் வந்துட்டீங்களா’ன்னு கேட்டு முத்தமழையை பொழிஞ்சிருக்கணும் ஆனா என் கிரகம் அதெல்லாம் உன் அண்ணன்காரனுங்க பண்ணுறானுங்க .இவனுங்க முத்தம் கொடுக்குறதுக்கா நான் நைட் எல்லாம் தூங்காம டிரைவ் பண்ணிட்டு வந்தேன். உங்க வீட்டுல உன்னை சரியாவே வளர்க்கலை ஆரா” என குறை பட்டுக் கொண்டான்.
“சீ அண்ணங்களை வச்சுட்டு பேசுற பேச்சா இது” என அவன் கைகளை கிள்ளினாள்.
“ஹேய் வலிக்குதுடி ..அடியே உன் அண்ணனுங்களுக்கு தான் டி விவஸ்தையே இல்லை புருஷன் பொண்டாட்டி பேசுறாங்களே அங்குட்டு போவோம்னு தோணூதா ஏதோ நம்ம கூத்து கட்டுற மாதிரி ‘ஆஆ’ன்னு பார்த்துட்டு இருக்காங்க இதுக்கு நீ அவங்களை தான் கிள்ளனும் என்ன இல்லை” என கைகளை தேய்த்து விட்டுக் கொண்டே கூறினான் விஜய்.
அவன் கூறியதைக் கேட்டு வெக்கமே இல்லாமல் ஹிஹி என பல்லைக் காட்டிக் கொண்டிருந்தனர் ஹரியும் கார்த்திக்கும் (பின்னே மானமா முக்கியம் காரியம் தான் முக்கியம் இவங்க கிளம்பி போய்ட்டா விஜய் ஆதியை ஏமாத்தி இந்த கண்டத்துல இருந்து தப்பிச்சுற கூடாதுனு நல்ல எண்ணத்துல எருமைமாட்டு மேல எண்ணெயை ஊத்துன மாதிரி சொரணையே இல்லாம நின்னுட்டு இருக்காங்க).
அப்போது மொத்த குடும்பமும் வெளியே செல்ல கிளம்பி வந்தவர்கள் விஜயின் வரவை பார்த்து ஆனந்த அதிர்ச்சியாகி அவனை நோக்கி புன்னையோடு வந்தனர்.
மதிவாணன் தன் மருமகனை பார்த்து,” வாங்க வாங்க மாப்பிள்ளை என்ன இப்படி சொல்லாம கொல்லாம திடுதிடுப்புனு வந்து நிக்குறீங்க வரேன்னு சொல்லிருந்தா வண்டி அனுப்பிருப்போமே மாப்பிள்ளை” என்று அவனை அழைத்து வர முடியாமல் போனதே என்று சிறு வ்ருத்தத்தோடு கூறினார்.
“அய்யோ மாமா நீங்க எதும் ஃபீல் பண்ணாதீங்க நான் உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான் ஆதி கிட்ட கூட சொல்லாம கிளம்பி வந்தேன்” என்று பதிலுரைத்தவன் பின் அங்கிருந்த அனைவரிடமும் நலம் விசாரித்தான்.
ஒரு வழியாக வரவேற்பு படலம் முடிந்ததும் தான் கவனித்தான் அனைவரும் வெளியே செல்ல கிளம்பி நிற்பதை , பாட்டியிடம் திரும்பி ,” என்ன பாட்டி எல்லாரும் வெளிய எங்கேயோ கிளம்பிட்டீங்க போல என்னை விட்டுட்டு ” என அவர் கன்னத்தை பிடித்து கொஞ்சினான்.
அவனின் வார்த்தையை கேட்டு கார்த்திக்கும் ஹரிக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை “வாண்டடா வந்து வலைல சிக்குறானே யார் பெத்த புள்ளையோ” என்று நினைத்தவர்களுக்கு சிட்டுவேஷன் சாங்க் அவர்கள் மைண்ட்டில் ஓடியது.
“யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்
ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன் ஆதி சிவன்”
அதை நினைத்தவர்கள் முயன்று தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றனர்.
பாட்டி அவனை நோக்கி ஒரு பரிதாபப் பார்வை வீசி ,” கண்டிப்பா நீ வந்தே ஆகணுமா ராசா??பிரயாணம் பண்ணது சோர்வா இருக்கும்ல கண்ணு நீ வீட்ல ஓய்வு எடு” என அவனைக் காப்பாற்ற பார்த்தார்.
கார்த்திக்,ஹரி அதை தடுக்கும் முன்னே விஜயே ,”இல்லை பாட்டி நான் நல்லா தெம்பா இருக்கேன் வாங்க போலாம் என்னை விட்டுட்டு நீங்க மட்டும் என்ஜாய் பண்ணலாம்னு பார்க்குறீங்களா..இந்த ஓரவஞ்சனை கூடாது பாட்டி நானும் வந்தே தீருவேன்” என்று தன் மனைவியோடு சுத்தலாம் என்று நினைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டான்.
அப்போது தான் ஹரிக்கும் ஹார்த்திக்கும் போன மூச்சே வந்தது.அவனின் பதிலை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
புரியாமல் அனைவரையும் பார்த்த விஜய் பாட்டியிடம் என்ன ஆயிற்று என்று அடுகினான்.
அவன் தலையில் நங்கென்று கொட்டிய பாட்டி,” போனா போகுதே வீட்டு மாப்பிள்ளை ஆச்சே பாவம்னு நினைச்சு காப்பாத்துனா எனக்கு ஓரவஞ்சனைனா சொல்ற.எல்லாரும் கல்யாணத்துக்கு துணி எடுக்க போறோம் நீ வந்து உன்ற பொண்டாட்டிக்கு கூஜா தூக்கிட்டு வா அதான் இன்னைக்கு உன் தலைல எழுதிருக்கு. தவளை தன் வாயால் கெடும்னு சொன்னது உனக்கு தாண்டா பேராண்டி பக்காவா பொருந்தும்” என்று கூறினார்.
“ஷாப்பிங்கா!!!!!” என்று ஷாக் ஆகியவன் ,’என் பொண்டாட்டி தனியா போனாலே ரெண்டு நாள் ஆகும் திரும்பி வர இதுல இத்தனை பொண்ணுங்க போனா அய்யோ நினைச்சு பார்க்கவே தலை சுத்துதே இதுக்குத்தான் இந்த ரெண்டு நாதாரிகளும் அப்படி வரவேற்பு குடுத்துச்சா அய்யோ இது தெரியாமா மாட்டிக்கிட்டோமே’ என மனதிற்குள் புலம்பியவன் வெளியே ,” பாட்டி நீங்க சொன்ன மாதிரி எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு நீங்க போய்ட்டு வாங்களேன் ஈவினிங்க் நான் தூங்கி எழுந்து ப்ரெஷ் ஆனதும் நாளைக்கு நம்ம வெளிய போலாம்” என தப்பிக்க ஏதோ உளறிக் கொண்டு இருந்தான்.
“என்னங்க சாக்கு போக்குலாம் சொல்லாம ஒழுங்கா போய் கிளம்பி வாங்க சீக்கிரம் ” என அவனை விரட்டினாள் அவனின் மனையாள் ஆதிரா.
மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்த பின் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த விஜய் தன் அறையை நோக்கி சென்றான். போகும் வழியில் ஸ்ரீயிடம் கண்களாலே மேலே வருமாரு ஜாடை காட்டி விட்டு சென்றான்.
அதை புரிந்து கொண்ட ஸ்ரீயும் யாருக்கும் சந்தேகம் வராமல் நைசாக நழுவி விஜயின் அறைக்கு சென்றாள்.
அவள் வந்ததும் அவளை பார்த்து புன்னகைத்த விஜய் ,” வாங்க கல்யாணப் பொண்ணு என்ன முகமெல்லாம் தங்கம் மாதிரி ஜொலி ஜொலிக்குது என்ன என் மச்சான் கூட ஒரே ரொமான்ஸ்சா ??” என கிண்டல் பண்ணினான்.
“அய்யோ அண்ணா கிண்டல் பண்ணாதீங்க எங்க அந்த சாமியார் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிசு இதுல ரொமான்ஸ் ஒன்னு தான் கொரச்சல் போங்க அண்ணா” என சலித்துக் கொண்டவள்,
“அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க அண்ணா இப்போ எல்லாம் ஓகே தான எதும் பிரச்சனை இல்லையே” என்று வினவினாள்.
” அதெல்லாம் நீ இருக்கப்போ என்ன பிரச்னை வரப்போகுது. நல்லா தான் இருக்காங்க .நீ ஏன் உண்மையை ஆதி கிட்ட கூட சொல்ல விட மாட்ற ஸ்ரீ ??அவ எவ்ளோ ஃபீல் பண்றா தெரியுமா உண்மைலாம் தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப் படுவா ஹரிக்கும் உன்மேல இருக்க கோவம் குறையும். உண்மையை சொல்ல கூடாதுனு எங்க கிட்டயும் சத்தியம் வாங்கிட்ட நீயும் சொல்ல மாட்ற ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற” என கேட்டான்.
அப்போது விஜயை பார்க்க அங்கே வந்த ஹரி ஸ்ரீ உள்ளே இருப்பதைப் பார்த்து குழப்பத்தோடு ,”நீ இங்க என்ன பண்ற ?? “என்று வினவினான்.
அவனை அந்த நேரத்தில் அங்கு சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரீக்கு பயத்தில் நாக்கு டைப் அடித்தது,” அது வந்து …வந்து.. ஹான் !! நான் என் ரூமுன்னு நினைச்சு ஆதி ரூமுக்கு வந்துட்டேன் இங்க அண்ணாவ பார்த்ததும் சும்மா பேசிட்டு இருந்தேன் வேற ஒண்ணும் இல்லை” என்று விட்டால் போதும் என தப்பித்து ஓடி விட்டாள்.
எதையும் கேட்டிருப்பானோ என்று விஜய் சந்தேகத்தில் இருக்க ஹரியோ ,’இவ இவங்க கல்யாணத்துக்கே வரல இப்போ இவன் கிட்ட என்ன பேசிட்டு இருந்தா என்ன பார்த்து ஏன் அப்படி பயந்து ஓடுறா என்னவா இருக்கும்?’ என தன் சிந்தனையில் உழன்று கொண்டே விஜய்யிடம் பேச வந்ததை கூட மறந்து விட்டு கீழே சென்றான்.
ஒரு வழியாக 9 மணி போல் வீட்டில் இருந்து இரண்டு கார்களில் இருந்து கிளம்பினர்.
ஒரு காரில் பாட்டி, கலைவாணி,சாருமதி,பத்மினி,மற்றும் டிரைவரும் மற்றொன்றில் விஜய்,ஹரி,கார்த்திக்,அஷ்வின்,ஆதிரா மற்றும் பலர்( பஞ்ச பாண்டவிகள் தாங்க)..(என்னது பத்து பேரா அப்படின்னு ஷாக் ஆக கூடாது பாட்டி தான் இப்படி ப்ளான் பண்ணி அனுப்பி விட்ருக்காங்க தன்னோட மூனு பேரன்களும் அவங்க ஆளுங்க கூட ஜாலியா இருக்கட்டும்னு தாராள மனசு பாட்டிக்கு).
டிரைவர் சீட்டில் ஹரியும் அதற்கு பக்கத்தில் விஜய்யும் அஷ்வினும் பின்னால் ஜன்னல் ஓரத்தில் ஸ்ரீயும் ஸ்ரீயின் மடியில் வர்ஷூவும், பக்கத்தில் மதுவும் மதுவின் மடியில் நிஷாவும் அதற்கு பக்கத்தில் கார்த்திக்கும் கார்த்திக்கின் அருகில் ஆதிராவும் ஆதியின் மடியில் நந்து என ஒரே கோலாகலமாக அவர்களின் பயணம் துவங்கியது.
ஸ்ரீய்யோ மனதிற்குள்,”டேய் கூறு கெட்ட குப்பை உனக்கு இன்னும் 1 வாரத்துல கல்யாணம்னா எவனாச்சும் நம்புவானா இங்க இந்த கார்த்திக்கை பாரு ஏதோ மல்லுவேட்டி மைனர் மாதிரி என்னமா குஜால் பண்ணிட்டு வரான் அவன் திறமைல ஒரு பெர்சன்ட்டாச்சும் உனக்கு இருக்கா கட்டிக்க போறவ குத்துக்கல்லு மாதிரி உக்காந்துருக்கேன் நீ என்னடான்னா கடமை கண்ணாயிரம் மாதிரி கார் ஓட்ட போய்ட்ட உன்னை கட்டிக்கிட்டு!!!! ஸ்ரீ உன் பாடு திண்டாட்டம் தான்” என அவளின் மைன்ட் வாய்ஸ் எப்போதும் போல் ஆஜர் ஆகியது.
ஹரியும் அதே நிலமையில் தான் இருந்தான்.’இந்த கார்த்திக்கை கார் ஓட்ட சொன்னால் கையில் எலும்பிச்சம்பழத்தை குத்திக் கொண்டு வந்து நகசுத்தின்னு ரீல் விட்டுட்டு இப்போ ஜாலியா ஜல்சா பண்ணிட்டு வரான்..சரி கண்ணாடி வழியாச்சும் அவள பார்த்துட்டு வரலாம்னா மடில ஒரு வானரத்தை உட்கார வச்சுகிட்டா அவ மூஞ்சிய நான் தொல்லியல் நிபுணர்கிட்ட சொல்லி தோண்டி தான் பார்க்க முடியும் போல எல்லாம் விதி’ என நொந்து போனான்.
விஜயின் நிலமையோ மிகவும் கவலைக்கிடமாக இருந்தது ,’ அடப்பாவிகளா குடும்பமா இது தெரியாதனமா பொண்ணு எடுத்துட்டோம் போல அவ்ளோ கார் வச்சுருக்காங்களே இருந்தும் கஞ்சப் பிசுநாரித்தனமா இப்படி மடியில குரங்கு மாதிரி தொத்திட்டு போக விட்டுட்டானுங்களே சரி விட்டதும் தான் விட்டானுங்க என் பொண்டாட்டிய என் மடில உட்கார வைக்காம இந்த அஷ்வினை கோர்த்து விட்டுடானுங்க ..என்னாத்தை சாப்பிடுவானோ இந்த கனம் கனக்குறான் பார்க்க மட்டும் தனுஷோட தோஸ்த் மாதிரி இருக்கான். இவனை சுமக்கவாடா அங்க இருந்து கிளம்பி வந்த விஜய் எல்லாம் நேரம்’ என புலம்பிக் கொண்டு வந்தான்.
கார்த்திக்கின் ஆளோ உச்சக்கட்ட கோபத்தில் இருந்தாள், ‘ப்ராடு நாய் எல்லாரு கூடவும் ஜாலியா ஜொல்லு விட்டுட்டு வர்றத பாரு மவனே நீ என்கிட்ட சிக்குனா கைமா தான்டா” என அவனை எண்ணெய் வாணலி இல்லாமலே நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்தாள்.
தன்மேல் இத்தனை பேர் கொலைவெறியில் இருப்பதை கண்டு கொள்ளாமல் அந்த நிமிடம் கோகுலத்தில் இருக்கும் கண்ணனைப்போல் கோபியரின் அருகாமையில் குஷியாக இருந்தான் கார்த்திக்.
அப்போது நிஷா, “ஹேய் எல்லாரும் வாங்க நம்ம டோராவின் பயணங்கள் டயலாக் வச்சு வீடியோ எடுத்து அப்லோட் பண்ணலாம் லைக்ஸ் பிச்சுக்கும்” என நேரம் காலம் தெரியாமல் உளறினாள்.
அவள் மண்டையில் கொட்டிய மது,”ஹேய் சோத்து மூட்டை இங்க மூச்சு விட கூட முடியாம உட்கார்ந்துட்டு வரோம் உனக்கு டோரா கேக்குதா ஒழுங்கா ஓடிரு” என திட்டினாள்.
அஷ்வின் மட்டும் நிஷாவிற்கு சப்போர்ட் செய்து அனைவரையும் ஒரு வழியாக கெஞ்சி கூத்தாடி ஓத்துக்க வைத்தான். பின்பு மொபைலை செல்ஃபி ஸ்டிக்கில் பொருத்தி தூக்கி பிடித்தவன் “இப்போ நாம எங்க போக போறோம் ??? “என கூறினான்
பதிலுக்கு அனைவரும் “ஷாப்பிங்க் போக போறோம் ” என்று கோரசாக கூறினர்..
அஷ்வின் மறுபடியும் ,”அதற்கு நமக்கு தேவை படுறது ??? “
இதற்கு ஆண்கள் மட்டும் கோரசாக ,”ஆண்களுக்கு தேவை பொறுமையோ பொறுமை ,மனோதிடம், அப்பறம் பை தூக்க உடல்வலிமை எல்லாம் வேணும் பொண்ணுங்களுக்கு பசங்களோட பர்ஸ்,பர்ஸ்க்குள்ள இருக்க கார்ட், கார்ட்ல காசு மட்டும் இருந்தா போதும்” என்று கூறி பெண்களின் முறைப்பை தாரளமாக பெற்றனர்.
அஷ்வின்,” எந்த வழியா போனா நம்ம கடையை சென்று சேரலாம்???”
“மேம்பாலம் !!! குறுக்கு சந்து !!! துணிக்கடை!!!” என்று கோரசாக கூறினர்.
அப்போது கார்த்திக் என்னடா மேப்(map) அஹ் விட்டுடீங்க
” நான் தான் மேப்
நான் தான் மேப்
நான் தான் மேப் “
என பாட ஆரம்பித்தான். உடனே அங்கிருந்த அனைவரும் மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தனர். அந்த அழகான தருணத்தை அஷ்வின் மொபைலில் படம் பிடித்துக் கொண்டான்.
அப்போது வெளியே சென்ற காரில் இருந்தவர்கள் காரை நிப்பாட்டி,’ என்ன லூசுங்க மாதிரி நடு ரோட்டுல காரை நிறுத்தி வச்சுட்டு இப்படி சிரிச்சுட்டு இருக்குங்க மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பிச்சு வந்த கும்பலோ’ என சந்தேகப்பட்டு எட்டிப்பார்த்து விட்டு உள்ளே எல்லோரும் நவநாகரிகமாக உடுத்தியிருப்பதைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டு கிளம்பினார்.
ஒரு வழியாக கூத்தும் கேலியுடன் ஒரு மணி நேரத்தில் கடையை வந்து அடைந்தனர்.
உள்ளே வந்ததும் முதலில் முகூர்த்த புடவை எடுக்க வேண்டும் என்று பாட்டி கூறி விட்டதால் அனைவரும் அந்த செக்ஷனுக்கு சென்றனர்.
பெண்கள் அனைவரும் ஒவ்வொரு புடவையாக எடுத்து ஸ்ரீ மேல் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்போதைக்கு ஒரு புடவை கூட எடுக்க மாட்டாங்க என புரிந்து கொண்ட ஆண்கள் தங்களுக்கு எடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு மென்ஸ் செக்ஷனுக்கு சென்றனர்.
அவர்கள் வீட்டிலுள்ள ஆண்கள் அனைவருக்கும் நிச்சயம், கல்யாணம், ரிசப்ஷன், சங்கீத் என அனைத்திற்கும் எடுத்து முடித்து திரும்பும் போது கூட முகூர்த்த புடவையை எடுத்த பாடில்லை.
” என்ன மா இது ஒரு புடவை எடுக்கவே அரை நாள் போய்ருச்சு எப்போ எடுத்து முடிப்பீங்க” என தன் அன்னையை பார்த்து சலிப்பாக கேட்டான் ஹரி.
“ஓவரா சலிச்சுக்காத கண்ணா உன் பொண்டாட்டிக்கு தான் எதுவுமே பிடிக்கலையாம் மத்த எல்லாரும் ஓரளவுக்கு எடுத்துட்டோம் . இன்னும் பிள்ளைங்களுக்கு சுடிதார் லெஹெங்கா அந்த மாதிரி தான் எடுக்கணும் இந்த ஸ்ரீக்கு தான் ஒன்னுமே பிடிக்கலையாம் நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு எங்களை ஆளை விடு டேய் கார்த்திக் போய் ஜூஸ் வாங்கிட்டு வா டா கண்ணா கண்ணைக் கட்டுது” என ஹரியை கோர்த்து விட்டுவிட்டு போய் ஒரு ஓரமாக அமர்ந்து விட்டார். அவரைத் தொடர்ந்து பெரியவர்கள் அனைவரும் இவர்களுக்கு தனிமையை கொடுக்க எண்ணி கலைவாணியுடன் போய் அமர்ந்து கொண்டனர்.
இதுதான் சாக்கென விஜய் தன் மனைவியை தனியாக தள்ளிக்கொண்டு டிசைனர் சாரிஸ் செக்ஷனுக்கு ஓடி விட்டான்.
ஸ்ரீயின் தோழிகளும் அஷ்வின்னை அழைத்துக் கொண்டு சல்வார் ஜீன்ஸ் டாப் செக்ஷனுக்கு எஸ்கேப் ஆகினர்.
தன்னுடைய ஆள் போன பின்னாடி கார்த்திக்கு அங்கு என்ன வேலை அவனும் ஓடி விட்டான்.
‘சிகப்பு காய் போகுது கருப்பு காயும் பின்னாடியே போகுதே சரி இல்லையே’ என பாட்டி மனதிற்குள் கார்த்திக்கின் களவாணிதனத்தை எண்ணி சிரித்துக் கொண்டார்.
இப்போது அங்கே தனித்து விடப்பட்ட ஹரியும் ஸ்ரீயும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றனர்.
பின் ஹரி என்ன நினைத்தானோ வேகமாக சென்று புடவைகளை பார்க்க ஆரம்பித்தான்.
ஸ்ரீயோ மனதிற்குள் ,’இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பால குமாரி ‘ என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டு அவன் முன்னால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.
அவனுக்கா அவளின் திட்டம் தெரியாது, ஸ்ரீக்கு சின்ன வயதில் இருந்தே ஹரி தான் உடையை தேர்ந்தேடுத்துக் கொடுப்பான் இந்த நான்கு வருடங்களைத் தவிர அதை மனதில் வைத்துக் கொண்டே கேடி இப்படி ப்ளான் பண்ணிருக்கு என மனதில் அவளை செல்லமாய் கொஞ்சிக் கொண்டே புடவையை தேர்வு செய்தான்.
சரியாக முப்பது நிமிடத்தில் அரக்கு நிறத்தில் முகூர்த்த புடவையும் மயில் கழுத்து நிறத்தில் நிச்சயதார்த்த புடவையும் சங்கீத் மற்றும் ரிசப்ஷனுக்கு இரண்டு லெகங்காவும் இன்னும் சில பட்டுப் புடவைகள் , வீட்டிற்கு அணியும் புடவைகள், டிசைனர் சாரிஸ், சல்வார் ,குர்த்தி என அவளுக்கு தேவையான அனைத்தையும் தேர்ந்தெடுத்து விட்டு ‘எல்லாம் ஓகேவா??’ என கண்களாலையே வினவினான்.
அவளும் சந்தோஷ மிகுதியில் மண்டையை மிகவும் வேகமாக ஆமாம் என்பது போல் ஆட்டினாள்.
அவள் செய்கையில் முத்துப்பற்கள் தெரிய சிரித்த ஹரி , “லட்டுக் குட்டி” என அவள் கன்னத்தை தட்டி விட்டு பில் போட சென்றான்.
ஆனால் அவன் செய்கையில் இவள் தான் சிலையென நின்றாள். அங்கே நிற்க வைத்திருக்கும் பொம்மை போல நின்றிருந்த ஸ்ரீயை உலுக்கிய சாருமதி ,” என்ன டி காத்து கருப்பு எதும் அடிச்சுருச்சா பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இங்கேயே நிக்குற இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னுட்டு இருந்தனா கடைக்காரங்க பொம்மையை வெளிய தான் வைக்கனும்னு உன்ன தூக்கிட்டு போய் ஷோகேஸ்ல நிக்க வச்சிருப்பாங்க” என கலாய்த்தார்.
“அம்மாஆஆஆ” என பல்லைக் கடித்தவள் அங்கிருந்து அகன்றாள்.
ஒரு வழியாக அனைத்தையும் வாங்கிக் கொண்டு தைக்க வேண்டியதை கொடுத்து விட்டு அவர்கள் வீட்டிற்கு வர இரவு 10.30 மணி ஆகிற்று.(விஜய் தன் மனைவிக்கும் கார்த்திக் தன் காதலிக்கும் தனியாக புடவை எடுத்துக் கொடுத்தது ஒர் தனி கதை).
பின் உண்டு முடித்து அலுப்பில் அனைவரும் எந்த கலாட்டாவும் இல்லாமல் தங்களின் அறைக்குள் சென்று மறைந்தனர்.
தன் அறைக்குள் செல்லப்போன ‘அவளை’ தடுத்து நிறுத்தி அவள் கைகளை பிடித்து இழுத்தது ஒரு வலிய கரம்.
பயத்தில் அவள் “ஆஆஆ” என்று அலற அந்த சப்தம் அந்த வீட்டின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு சென்றது!!!!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1
1

