
விடியும் முன்..!
அத்தியாயம் 23
அழைப்பை துண்டித்த படி நகர்ந்த வினோத்தின் நினைவவைகள் பின்னோக்கி கிளம்பின.
ஆருத்ரா வாசுவை காதலித்து இறுதியில் அவனின் சுயரூபம் தெரிந்து பித்துப் பிடித்து இறந்து போன ஒருத்தி.
தற்கொலை தான்.வாசு அவளைக் கொலை செய்யாவிடினும் அவளின் தற்கொலைக்கான முழுத் தூண்டுதலும் அவனால் ஏற்படுத்தப்பட்டது தான்.
வாசுதேவன் ஆருத்ராவை தன் பொய்யான காதல் வலையில் விழ வைத்திருந்த சமயம் அது.அவனின் சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் தகவல்களை யாரோ கண்டுபிடித்திருப்பது தெரிய பெருமளவு பீதியில் உறைந்து போயிருந்தான்,வாசு.
ஒருவழியாக யார் அதைச் செய்திருப்பார்கள் எனத் தேடும் சமயம் அர்ஜுன் தான் மாறுவேடத்தில் அலுவலகத்தினுள் நுழைந்து ஒட்டு மொத்தமாய் தகவல் திரட்டிச் சென்றது எனத் தெரிய வர வாசு அடைந்த கோபம் அளவில்லாதது தான்.
ஏன் செய்தான் என்ற காரணம் அவனுக்கும் இன்னொருவனுக்கும் மட்டும வெளிச்சம்.
வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தாலும் அதே வேறு திசையில் திருப்பி விட்டு சிக்காது வாசுதேவன் தப்பித்துக் கொண்டாலும் நிரபராதியாக வெளியேறி வந்தவனுக்கு அர்ஜுனின் மீதிருந்த ஆத்திரம் மட்டும் அடங்கியிருக்கவில்லை.
பாதி உண்மைகள் வெளியே வந்திருக்க மீதி உண்மைகள் அகப்படாமல் பாதுகாத்தவனுக்கு கனன்று பழிவெறியை தீர்க்க கிடைத்த துருப்பு தான் ஆருத்ரா.
ஆருத்ராவின் காதல் பித்தில் அவளை பயன்படுத்தி அர்ஜுனின் பொய்ப்பழி போட்டு சிறையில் அடைத்தது எல்லாம் வேறு கதை.
அதன் பின் மித்ரஸ்ரீயை சந்திக்கும் வரை அர்ஜுனின் புறம் அவனின் கவனம் திரும்பியிராதிருக்க மித்ரஸ்ரீயின் அத்தை மகன் என்று தெரிந்தும் பெரிதாய் அலட்டல் எதுவும் இல்லை,அவனிடம்.
அர்ஜுனை சிறையில் தள்ளியது எல்லாம் வினோத் வெளிநாட்டில் இருக்கும் போது நடந்தவை என்பதால் அவனுக்கு அந்தளவு விடயம் தெரியாது.பெண்ணவளின் அத்தை மகன் தான் அர்ஜுன் என்றும் அவனை சிறைக்குத் தள்ளியது பற்றி கொஞ்சமும் மட்டுமே வினோத் அறிந்தது.
கார்த்திக்கும் ராமும் தெரிந்து கொள்ளக் கூடிய வட்டத்தில் இல்லாமையினால் அவர்களுக்கும் விடயம் தெரிவிக்கப்படாமலே போயிற்று.
வினோத்துக்கு அந்த அர்ஜுனே இவனென்று தெரியாமல் போனது தான் இத்தனை சிக்கலுக்கும் அடித்தளம்.
அர்ஜுனை தப்பிக்க விட்டால் மீண்டும் ரிஷியிடம் சொல்லி விடுவானோ என்கின்ற பயம் மனதைக் கவ்வ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்,அதீதமாய்.
ரிஷியைப் பற்றி நினைக்கையிலேயே சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி ஒளிந்து கொள்வது போன்ற உணர்வு.
முற்றிலும் நிதானமானவன் தான்.ஆனால்,அந்த நிதானம் உடைகையில் உருவெடுக்கும் அசுரத்தனமான கோபம்.நினைக்கும் போதே இதயம் பயத்தில் குதிக்க தலையை உலுக்கிக் கொண்டு மீண்டான்,அவன்.
விடுவிடுவென நடந்து கூடத்துக்கு வர அங்கு அடிவாங்கி ஓரமாய் குருதி வழிய அமர்ந்து இருந்தனர்,ராமும் கார்த்திக்கும்.
●●●●●●●●
மதிய நேரம் கடந்ததாயிற்று.இன்னுமே உணவு உண்ண வேண்டிக் கூட வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை,அவன்.
அவனுக்கு அந்த உணர்வே இல்லை போலும்.தோழன் தான் பசியில் வெந்து தோழனுடன் வந்ததற்கு தன்னையே நொந்து கொண்டிருந்தான்,உள்ளுக்குள்.
“என்ன மச்சீ..என் கூட வந்ததுக்கு பீல் பண்ற போல இருக்கு..”
“பாத்தா அப்டி தெரிலியா..தெரிஞ்சு தான கேக்கற..சாப்ட கூட விடாம இந்த எடத்துல கூப்டுகிட்டு வந்து ஒக்கார வச்சிருக்க”
“இருடா இரு..அவள பாத்து ஒரு வார்த்த பேசிட்டு போயிர்லாம்..”
“உன் லவ்வுக்கு நா எதுக்குடா அலயனும்..”
“ப்ரித்வி..நாம ப்ரென்ற்டா..என் லவ்வுக்கு நீயும் உன் லவ்வுக்கு நானும் ஹெல்பா இருக்கனுங்குறது எழுதப்படாத விதி..இது கூட தெரியாம சின்ன புள்ளயா இருக்க..”
“சரி சரி..ஓவரா பண்ணாத..அங்க வர்ரா பாரு உன் ஆளு.” அவன் கை காட்டி விட்டு ஒதுங்கிச் செல்ல சுற்றும் முற்றும் பார்த்த படி பயந்த பாவத்துடன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்,
மாளவிகா.
அவன் நேசிக்கும் பெண்.இருவரிக்குமிடையே பார்வைகளால் காதல் பரிமாற்றம் இருந்திருக்க ஓரிரு முறை பேசியதும் உண்டு.அவனோ இன்னும் அவளை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறான்.ஆனால்,அவள் நிலைப்பாடு என்னவென்று அவள் தான் உரைக்க வேண்டும்.
“மாளவி..”
“ப்ச்ச்..முத்து எதுக்காக இங்க வர சொன்னீங்க..? வீட்ல யாராச்சும் பாத்தா ப்ரச்சன பண்ணிருவாங்க..”
“என்ன நீ வந்ததும் வராததுமா எரிஞ்சு விழற..என்ன கோபமா இருக்கியா..? எப்பவும் கோபமா இருந்தாலும் பாக்க வர்ரப்போ சிரிப்பல..இன்னிக்கு என்னாச்சு..? எதுக்கு இப்டி உம்முன்னு இருக்க..”
“இங்க பாருங்க முத்து..நா ஏற்கனவே உங்க கிட்ட சொல்லனும்னு தான் நெனச்சிட்டு இருந்தேன்..முன்ன எப்டி வேணா இருக்கலாம்..ஆனா இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு தோணுது..”
“ஏய் என்ன சொல்ற நீ..?”
“மனசுல தோனுறத தான் சொல்றேன் முத்து.. அப்போ உங்கள புடிச்சிருந்துச்சு..ஏன் லவ் கூட பண்ணுனேன் தான்..ஆனா இப்போ என்னன்னு சொல்லத் தெரில..உங்கள லவ் பண்ணவே பயமா இருக்கு..எப்டி உங்கள கல்யாணம் பண்ணிகிட்டு வாழப்போறோம்னு யோசிக்கிறப்போவே எனக்கு தல வலிக்கிது..”
“அப்போ நம்பிக்க இல்லன்னு சொல்ற..? கரெக்டா..?”
“ஆமா முத்து..அதான் உண்ம..நீங்க சாதாரண க்ளார்க் வேல பாக்கறீங்க..அதுல எப்டி நம்ம வாழ்க்க ஓடும்..? நானும் வேலக்கி போறேன்..உங்கள கட்டிகிட்டா ரெண்டு பேரும் மெஷின் மாதிரி ஒழச்சா தான் நம்மலாள நிம்மதியா வாழ முடியும்..கடனுன்னு எதுவும் இல்லாம..”
“அப்போ நா உன்ன சந்தோஷமா பாத்துக்க மாட்டேன்னு யோசிக்கற.?”
“முத்து நா பொய் சொல்லல…என்னால உங்க கூட சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தோணுது..எங்க வீட்டாளுங்களுக்கு கூட உங்க மேல நல்ல அபிப்ராயம் இல்ல..அப்பா கூட உங்கள பத்தி பேசுனாலே எறிஞ்சு விழறாரு..”
“உன் அப்பா என்ன சொல்லுவாருன்னு நா உன் பின்னாடி சுத்துறப்போ யோசிச்சு இருக்கனும்..இல்ல நீ லவ் பண்ண முன்னாடி யோசிச்சு இருக்கனும்..இது கழட்டி விடனுங்குறதுக்காக யோசிக்கற போல தான இருக்கு..”
“ஆமா அப்டியே வச்சிக்கோங்க..அப்போலாம் காதல் மயக்கத்துல அது தோணல..ஆனா இப்போ தான் எல்லாத்தயும் யோசிக்கும் போது தப்பா படுது..நீங்க என் அளவு படிக்கலனாலும் பரவாலனு இருந்தேன்..வேல கூட கம்மி சம்பளம் தர்ரதா இருந்தாலும் பரவாலனு யோசிச்சேன்..ஆனா இப்போ சரின்னு தோணல..”
“அப்போ நா உன்னோட எக்ஸ்பெக்டேஷன் அளவு உன்ன பாத்துக்க மாட்டேன்னு தான் இந்த முடிவு..ஒருவேள நா உன்னோப எடத்துலயும் நீ என்னோட எடத்துலயும் இருந்தா நா கண்டிப்பா உன்ன விட்டுட்டு போயிருக்க மாட்டேன் மாளவிகா..”
“ஆமா அது உண்ம தான்..நீங்க என்ன மாதிரி நடந்துகிட்டு இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெர்யும்..ஆனா உங்க அளவு பரந்த மனசு என்கிட்ட இல்ல கல்யாணம் பண்ணி வாழ்க்க முழுக்க வர்ர அளவு..அதுவும் உங்கண்ணன் பத்தி தெரிஞ்சும்..”
“வாய மூடு..எங்கண்ணன பத்தி பேசுனா பல்ல ஒடச்சிருவேன்..”
“என்ன நா பொய்யா சொன்னேன்..உங்கண்ணன் கேடு கெட்ட பொறுக்கின்னு எல்லாருக்கும் தெர்யும்..அவன் கூட பொறந்த நீ மட்டும் எப்டி இருப்ப..?”
“ஏய் உனக்கென்ன இப்போ ப்ரேக்கப் தான பண்ணனும்..பண்ணித் தொல..இனிமே நீயே வந்து கேட்டாலும் என்னோட லைப்ல உனக்கு எடம் கெடயாது..”உடன் பிறந்தவனை பற்றி பேசியதும் எக்கச்சக்கமாய் கோபம் வந்துவிட்டது,அவனுக்கும்.
“ஹப்பாடா..நிம்மதி..அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் இருக்கு..தயவு செஞ்சு வந்து ஏதும் ப்ரச்சன பண்ணாதீங்க..” கையெடுத்து கும்பிட்டு விட்டு அவனுக்கு குறையாத கோபத்துடன் கூறியவளாய் அவள் நகர்ந்து விட இவனுக்குத் தான் எல்லை கடந்த ஆத்திரம்.
தூரத்தே நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரித்விக்கு காரசாரமாயி ஏதோ விவாதம் நடப்பது புரிந்தாலும் நாகரீகம் கருதி இருவரிடையே மூக்கை நுழைக்கவில்லை,அவன்.
மாளவிகா நகர்ந்து சென்றதும் முத்துவின் அருகே வந்து அவனின் தோளைத் தொட அவனின் முகம் சோர்ந்து போயிருந்தது.
“பாரு மச்சான்..அவ கூட என்ன புரிஞ்சிக்கல..இந்த லவ்வு தண்டம் எல்லாம் எதுக்கு பண்ணித் தொலச்சேன்னு தெரியல..அவ மேல கோபமா வருது..”
“சரி டா..இன்னொரு தடவ தங்கச்சி கூட பேசி பாரேன்..”
“விட்டுட்டு போகனுங்குற முடிவோட இருக்கா..என் பக்கம் சரியா இருந்தாலும் ஏத்துக்கற மைன்ட் செட்ல அவ இல்ல..ப்ரேக்கப் ப்ரேக்கப்பாவே இருக்கட்டும்..”
“என்னடா இவ்ளோ சிம்பிளா சொல்ற..?”
“பின்ன விட்டுட்டு பொய்ட்டான்னு தாடி வளத்து சரக்கடிச்சிட்டு சுத்தவா சொல்ற..அவ தான விட்டுட்டு போனா..தப்பு அவ மேல இருக்கு..அவளே பீல் பண்ணாதப்போ நா எதுக்கு பீல் பண்ணனும்..அவளுக்குப் புரியும்..அப்போ பீல் பண்ணுவா..கேரக்டர தப்பா பேசிட்டா..கண்டிப்பா என் மனசுல அவளுக்கு எடம் இருக்காது..” வலி நிறைந்த குரலில் கூறியவனின் விரல்கள் ஏதோ ஒரு எண்ணை அழுத்தி அழைப்பெடுத்தன.
●●●●●●●●●
ஆழமாய் இதழ்பிளந்து சுவாசித்தவளின் கரங்கள் கொடுத்த அழுத்தமும் அதனால் கடத்தப்பட்ட நடுக்கமும் பையனுக்கு இளமுறுவலைத் தோற்றுவிக்க விழிகளோ இரசனையில் மின்னின.
ஓயாது கதையளப்பவனின் வாய்த்துடுக்கு அவனின் பார்வையிலும் அருகாமையிலும் மறைந்து போக தன் அருகே குரல் கேட்டே நடுக்கம் கொள்பவளை அவன் மனம் இரசிக்காது இருக்குமா என்ன..?
ஏதோ ஒரு கர்வம் மனதில் உதிக்க அப்படியே அவளின் கரம் பற்றி இழுத்து நேராய் அமர வைத்திட அவனின் இழுப்புக்கேற்ப அசைந்தவளோ மறந்தும் விழி திறக்கவில்லை.
அப்படியே மண்டியிட்டு அவளின் முன்னே அமர்ந்து கொண்டிருந்தவனுக்கு அவளைக் காண காண ஏதேதோ ஆகிற்று.
தலை தாழ்ந்து அமர்ந்திருந்தவளுக்கு சற்றுத்தள்ளி பையன் .தேகத்தை முன்னோக்கி கொஞ்சம் சரித்துத் தான் அமர்ந்து இருந்தான்,அவனும்.
“மித்ரா..கண்ணத் தெற..?” இருக்கையில் வைத்திருந்த அவளின் கரத்தை பற்றி அழுத்தம் கொடுத்தவனாய் சொல்ல அவள் கேட்டிடுவாளா..?
மறுப்பாய் தலையசைத்திட சிரிப்பு வந்தது.அடுத்த கரத்தை அவள் காதோடு கொடுத்து தன்னோ நோக்கி முகம் நிமிர்த்தியவனின் பெருவிரல் அவளின் கன்னத்தில் ஆழப் பதிந்திருந்தது.
இன்னுமே விழிகளை இறுகப் பொத்திய படி இருந்தவளுக்கு தன் உணர்வுகளை அடக்கவே தெரியவில்லை.இன்னும் நேரம் தாழ்த்தினால் அவனை கட்டிக் கொண்டு அழுதுவிடுவோம் என்பதையும் உணர்ந்தே இருந்தாள்,அவள்.
“மித்ரா கண்ண தெறந்து என்னப் பாரு..” கட்டளையாய் வந்த குரலை அவளின் ஆழ்மனதை துளைத்துச் செல்ல பீறிட்டுக் கிளம்பிய காதல் அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க வைக்குமா..?
அழுத்தமாய் இமை பொத்தி விழி திறந்தவளின் பார்வை பையனின் விழிகளை ஊடுருவ கலங்கியிருந்த விழிகளின் ஈரம் புரிந்திட வேகவேகமாய் துடைத்து விட்டிருந்தன,மறு கரத்தின் விரல்கள்.
அது நடிப்பல்ல என்று அவனுக்குத் தெரியும்.அவளின் நடிப்புக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவன் அல்லவே பையன்.
“இப்போ எதுக்கு அழுற..?” கேட்க வந்ததை மறந்து அவளை தேற்றும் வழியில் இறங்கியவனின் மனதில் காதல் இல்லை என்றால் யார் தான் நம்பிடுவார்கள்..?
அவனின் கேள்வியில் கண்ணீர் வழிய மறுப்பாய் தலையசைத்தவளுக்கு கட்டவிழும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தத் தெரியா தன் மீது அத்தனை ஆத்திரம்.
“என்னாச்சு..? நா அறஞ்சதுக்கா அழற..?” விரல் கொண்டு கண்ணீரை ஒற்றி எடுத்தவனோ அவளின் மனநிலையை மாற்ற எண்ணி சிறு சிரிப்புடன் கேட்க மூக்கு விடைக்க முறைத்து தள்ளினாள்,அவள்.
அவன் அறைகளுக்கெல்லாம் அழுதால் இந்நேரம் மொத்த கண்ணீரும் வற்றியே போயிருக்கும் அல்லவா..?
“இட்ஸ் ஃபைன்ன்ன்..அழாத..” எழுந்து அவளருகில் அமர்ந்து அவனின் தோள் சாய்த்துக் கொண்ட படியே சொல்ல அவளின் கரங்கள் பையனின் முழங்கையின் மேற்பகுதியை இறுக்கமாய் பிடித்துக் கொண்டன.
“நா அழுதா உங்களுக்கென்ன..?” தொலைந்திருந்த தைரியம் எட்டிப் பார்க்க அவனைப் பார்த்துக் கொண்டே கேட்டவளின் இதயம் இன்னும் இயல்பாய் துடிக்கவில்லை.எக்குத்தப்பாய் எகிறிக் கொண்டு தான் இருந்தது.
“அழக்கூடாதுன்னுனா அழக் கூடாது தான்..ரீசன் கேக்காத..” என்றுமே இல்லாத மென்மையுடன் சொல்ல அவளுக்கு எகிறி விட்டது.
“விடுய்யா..”திமிறிக் கொண்டு எழுந்து நின்றவளோ மறுபுற இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள விரட்டியடித்த கோபம் மீண்டும் அவன் வசமானது.
“இப்போ எதுக்கு அங்க போன..?”கடுகடு குரலில் கேட்டான்.அவளின் விலகல் அவனுக்குள் கோபத்தை துளிர்க்கச் செய்திருந்தது.
“நா எங்க வேணா உக்காருவேன்..உங்களுக்கு என்ன..? நீங்களும் எங்க வேணா உக்காருங்க..நா ஒன்னும் சொல்ல மாட்டேன்..” உதட்டை சுளித்த படி அவள் சொல்ல அவனில் சட்டென ஒரு நிதானம்.
“இட்ஸ் ஃபைன்ன்ன்ன்..எங்க வேணா உக்காரலாம்ல..” அவள் முகம் பார்த்து கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்தவளுக்கு ஏதோ வில்லங்கமாய் தோன்ற சுதாரிக்கும் முன்பே அவளின் மடியில் வந்தமர வலியில் கத்தியே விட்டாள்,அவள்.
“ஆஆஆஆஆ அம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ..” அடித் தொண்டையில் இருந்து கத்தியவளின் கரங்களோ அவனின் முதுகில் தாராளமாய் குத்திக் கொண்டிருந்ததன.
“ஆஆ…அம்மா..வலிக்கிது..எந்திரிங்க..ஐயோ அம்மா..” அவன் வேண்டுமென்று அசைந்து அசைந்து அமர அவளுக்கு சத்தியமாய் கால்களில் எல்லாம் வலியெடுத்தது.
பையனோ அசரவில்லை.ஏனோ அவளை வம்பிழுப்பதில் அவனுக்கு அலாதி ப்ரியம்.
“கிறுக்கு ப்ளீஸ்..எந்திரியா..வலிக்கிது..”வரவழைத்த அழுகுரலில் சொல்ல அதை கண்டுபிடிக்காது இருப்பானா அவன்..?
“இன்னும் நல்லா நடிக்க ட்ரை பண்ணுடி பைத்தியம்..” சொன்னவனோ சில நிமிடங்கள் கடந்தே எழுந்து கொள்ள மொத்த பலத்தையும் திரட்டி ஓங்கி ஒன்று வைத்தாள்,அவனின் முதுகில்.
●●●●●●●
காவேரயின் வீட்டுக்குள் வந்தவளுக்கு வண்டியில் சென்றவனைக் கண்டு சிறிது யோசனை தான்.
இருந்தாலும் தற்காலிகமாய் ஒதுக்கி வைத்து விட்டு காவேரியுடன் பேசத் தொடங்கியவளுக்கு உடனே அந்த கோயிலை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல்.
காவேரி உணவுண்ண அழைக்க அதை மறுத்து விட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தவளுக்கு சற்றுத் தள்ளி இருந்த கோயில் கோபுரம் தெளிவாய்த் தெரிந்தது.
“என்ன தர்ஷினி பாக்குறீங்க..?” பின்னூடு வந்த காவேரியின் குரல் அவள் செவி சேர்ந்தது.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.17

