Loading

காலை கனவு 47

‘புரிதல் தான் தேவையே!
புரிய வைக்கத் தேவையே இல்லை.

அன்பின் அதீதத்தில்…’

“நீ ஏன்டா இப்படியிருக்க?”

தீக்ஷிதா சென்றதும், பிடித்திருந்த ஆர்விக்கின் கரத்தை விடுத்தவளாக மேகமாக அவனுக்கு முன்னால் நடந்தாள்.

அவளின் கோபம் புரிந்தபோதும், அவனை கட்டியிழுத்தது என்னவோ அவளின் பின்னலில் அவனுக்காக அவள் சூடியிருந்த குண்டுமல்லி.

“டேய் அன்வி” என்று இரண்டே அடி ஓட்டத்தில் அவளை நெருங்கி, அவளின் பின்னலை பிடித்து, வலி கொடுக்காது இழுத்தவனாக நிறுத்தியிருந்தான்.

ஆர்விக் செயலுக்கு அவனது உடல் மோதி நின்றாள்.

அன்விதாவின் பின்னால் முழுதாய் தன்னை தீண்டிலில் ஒப்புவித்தவனின் கரம் அவளின் வயிற்றோடு சுற்றி அணைத்துக்கொடுக்க, அவனின் முகம் அவள் சூடியிருந்த குண்டு மல்லியில் புதைந்தது.

“ம்ப்ச் விடுடா” என்றவள் அவனின் செய்கையில் தன்னுணர்வுகளை அடக்கும் வழியாக இரு கைகளாலும் உடுத்தியிருந்த ஆடையை இறுகப் பற்றினாள்.

“அன்வி…” என பூவின் வாசத்தோடு தன்னவளின் வாசத்தையும் நாசி நுகர்ந்தவன், “லவ் இட்” என்றான்.

“எது? பூவா?” என்றவள், அவனின் “நீ… உன்னோட வாசம்” எனும் பதிலில் செங்கொழுந்தாகியிருந்தாள்.

“வெட்டிங் வரை நேரில் பார்க்க முடியாதா அன்வி” என்றவனின் மற்றொரு கரமும் அவளைச் சுற்றிட அணைப்பு இறுகியது.

“ஆர்வி…” என தடுமாறியவள், அவனின் தோள் பக்கம் தலையை சரித்து, அவனது கன்னத்தில் அழுத்தமாகக் கடித்திருந்தாள்.

“அடியேய்…” என்று கன்னத்தை தேய்த்தபடி பிடியை விட்டவனிடமிருந்து லாவகமாக விலகி தள்ளி நின்றாள்.

“வலிக்குதுடி!”

“அச்சோ” என்று அருகில் சென்று கடித்த இடத்தில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுக்க, அவள் கை வழி பரவிய சில்லிப்பு அவனுள் தீ மூட்டியது. தாமாக அவனது கண்கள் மூடிக்கொண்டன.

“இதுக்கேவா?”

ஆர்விக்கின் முகம் காட்டும் வண்ணத்தில், அவனது காதல், அவளின் அண்மையில் அவன் கரைந்து உருகுவதெல்லாம் மகிழ்வு தாண்டி அவன் தன்மீது வைத்திருந்த காதலினால் உண்டான அவனது ஏக்கத்தையே அவளுக்கு உணர்த்திடும்.

இப்போதும் தனது சிறு தொடுகைக்கே உறைந்து நிற்பவனின் மீது பெருங்காதல் ஊற்றெடுத்தது.

“இதுக்கே உள்ளுக்குள்ள எல்லாம் இடம் மாறுது அன்வி” என்ற ஆர்விக் பட்டென்று கண்கள் திறந்தவனாக, தன்னுடைய கன்னம் படிந்திருந்த அவளின் கை மீது தனது கை வைத்து அழுத்தம் கொடுத்து கீழிறக்கினான்.

“நீ போயிடு அன்வி” என்றான். கண்களில் அவள்மீதான காதல் கிறக்கம். மனமேயின்றி வார்த்தைகளை உதிர்த்திருந்தான்.

“போகணுமா?” என்ற அன்விதா அவனை நெருங்கி ஒரு அடி முன் வைக்க ஆர்விக் இரண்டு அடிகள் பின் வைத்தான்.

“சொன்னா கேளு அன்வி…” என்றவன், இரு கைகளையும் ஒன்றாக பின்னந்தலையில் வைத்து முகம் உயர்த்தி காற்றை குவித்து ஊதியவனாக, அவளின் முகம் பார்த்து…

“சத்தியமா முடியலடி! ரொம்பவே சோதிக்கிற” என அவள் உணரும் முன்பு இழுத்து இறுக்கி அணைத்தான். அணைப்பின் இறுகல் கூடிக்கொண்டேபோனது.

அவனது திண்டாடல் அவளில் முடிவுபெற, அவளின் திண்டாட்டம் துவங்கியிருந்தது.

“என்னோட காதலுக்கு அழுத்தம், ஏக்கம், வலி எல்லாமே அதிகம் அன்வி. அதனால இப்படித்தான் வன்மையா இருக்கும்” என்றவனின் பிடியில் அவளுக்கு தென்பட்டதெல்லாம் அவனின் மென்மையே!

“பரவாயில்ல… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.”

“எதை? என்னோட அழுத்தத்தையா?”

“ம்ஹூம்…” என்று அவனின் மார்பு உரசவே தலையை இல்லையென ஆட்டியவள், “மொத்தமாவே உன்னை” என தன்னுடைய இதழ் படிந்திருக்கும் அவனில் முத்தம் வைத்தாள்.

“காலி பண்றடி” என்றவன், “இதுக்குமேல இருந்தா என்பாடு திண்டாட்டம் தான்” என அவளை விலக்கி நிறுத்தினான்.

“கல்யாணம் வரை தாங்கும்” என்று கண்கள் சிமிட்டியவளின் கன்னத்தை மெல்ல நிமிண்டினான்.

“போ…” என்றவன், அவளுடன் இணைந்து நடக்கத் துவங்க,  “தனியா போயிடுவியா?” எனக் கேட்டான்.

“கூட வர்றியா?”

“காலம் முழுக்க.”

“ஹான்… ஓவர் ஃப்ளோ ஆகுது ஆர்வி. கண்ட்ரோல் பண்ணு. நான் தாங்குவேனா?” என்றவளிடம் குறும்புப் புன்னகை.

“அன்வியை அவளுக்கும் சேர்த்து ஆர்வி தாங்குவான்.”

“காதலை வார்த்தையாலே காட்டி கட்டிவைக்கிறடா…” என்றவள், அவனின் புஜத்தை கோர்த்துப் பிடித்து உடன் நடந்தாள்.

இருவரிடமும் அமைதி…

“ரெண்டு பேருமே லவ்வுக்கு அர்த்தம் தெரியாம லைஃப் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்காங்க.”

அன்விதா யாரை சொல்கிறாள் என்பது புரிய,

“இதுல நாம ஒன்னும் பண்ண முடியாதுடா” என்றான் ஆர்விக்.

“ஹ்ம்ம்… புரியுது” என்ற அன்விதா, “அவன் மேல உனக்கெப்படிடா இரக்கம் வருது?” என்றாள்.

“அவனை நான் அடிச்சதைப் பார்த்துமா எனக்கு அவன் மேல சாஃப்ட் கார்னர் இருக்குன்னு தோணுது உனக்கு?”

“தீக்ஷாகிட்ட பேசினதுதான் ரியல் ஆர்வி” என்றவள், “அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறன்னு போய் அவளுக்கும் உண்மையா இல்லை அவன். எப்படிபோனா உனக்கென்னடா? அவங்களுக்குள்ள எப்படியோ போறாங்க. நீ ஏன் கன்சர்ன் பண்ற?” என்றாள். சிறிது நேரத்திற்கு அவனது காதலில் மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் எழுந்திருந்தது.

“அதான் சொன்னியேடா… அதுதான் ரியல் ஆர்வின்னு” என்றான் ஆர்விக்.

“ஹ்ம்ம்… அவங்கப்பேச்சு நமக்கெதுக்கு. இனி கூடவே கூடாது” என்று விரல் நீட்டி கட்டளையாகக் கூறினாள்.

கௌதம் பற்றி அன்விதா இத்தனை இயல்பாக தன்னிடம் பேசுவதே அவனுக்கு மகிழ்ச்சி தான். அது அவனது காதலால் சாத்தியமானதல்லவா! இன்னும் இன்னும் அவளிடம் காதலை கொட்டிக்கொடுத்து பல மடங்காய் அவளிடமிருந்து பெறுவதற்கு பேராவல் கொண்டான்.

கிடைக்கப்பெறும் காதலின் ஆனந்தத்தை அதீதமாக அறிய விழைந்தான்.

“இனி கௌதமை தீக்ஷாவே பார்த்துப்பாள். அவனோட பார்ட் அவ்ளோதான்” என்ற ஆர்விக், அவள் வீட்டிற்கு செல்லும் பாதை பிரியுமிடம் வரவே, “நிஜமா வெட்டிங் வரை நேரில் பார்க்க முடியாதா?” என்றான்.

“அம்மா அப்படித்தான் சொன்னாங்க” என்று அன்வி சொல்லிட, ஆர்விக்கு நிதாஞ்சனியிடமிருந்து அழைப்பு வந்தது.

“நிதா தான்.”

“லேட்டாகிருச்சுன்னு கூப்பிடுறாங்க போல” என்றவள், “நீ பேசு. நான் போறேன்” என சென்றாள்.

ஆர்விக் அழைப்பை ஏற்று, “கிளம்பிட்டாள். வந்திடுவாள் நிதா” என்றான். அவள் பேசும் முன்னர்.

“அதில்லைடா” என்ற நிதாஞ்சனி, “இங்க பெரிய பஞ்சாயத்தாகிப் போச்சு. நீ சீக்கிரம் வீட்டுக்கு வா! மதி அம்மா சண்டையை கூட்டுறாங்க” என்றாள். படபடப்போடு.

“அன்வி” என உரக்க அழைத்து சென்று கொண்டிருப்பவளை நிறுத்திய ஆர்விக், “என்ன பிரச்சினை?” என நிதாஞ்சனியிடம் வினவியவனாக அன்விதாவை நெருங்கினான்.

“நீ வாடா! போனில் சொல்ல முடியாது” என அவள் துண்டிக்க, அன்விதாவுடன் விரைந்து வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டை நெருங்கியதும்,

“உன்னோட இப்போ ஒண்ணா வரதை அம்மா பார்த்தா அவ்ளோதான். நான் இப்படியே பின்னால போய் உள்ள வந்துடுறேன்” என்றவள் வீட்டிற்குள் கேட்ட பேச்சு சத்தத்தில் வேகமாக ஓடினாள்.

ஆர்விக் வீட்டின் முன்வாசல் வழி உள்ளே நுழைய அன்விதா பின்வாசல் வழி உள்ளே வந்து பிறர் அறியாது, அங்கு என்ன நடக்கிறது? ஏன் அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டிருக்கின்றனர் என புரியாது அங்கு ஓரத்தில் நின்றிருந்த தான்யாவின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

ஆர்விக் வந்ததும் யாஷ் அவனருகில் வேகமாகச் சென்று…

“ஆர்வி… என்னாலதான். இப்படியாகும் எதிர்ப்பார்க்கலடா” என்றான்.

“என்னடா…” என்ற ஆர்விக், அங்கு கோபமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்த தென்னரசியின் அருகில் நின்று அழுது கொண்டிருந்த வெண்மதியை பார்த்ததும் சூழலை விளங்கிக்கொண்டான்.

வெண்மதியை பார்க்க யாஷ் அவளின் வீட்டிற்கு அருகிலிருக்கும் தோட்டத்திற்கு சென்றிருக்க… இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கண்டுவிட்ட தென்னரசி என்ன ஏதென எதையும் கேட்காது மதியின் கையை பிடித்து இழுத்தவராக ஆவேசமாக சக்தியின் வீட்டிற்குள் வந்து கத்தியிருந்தார்.

அவரை சமாளிக்க முடியாது, யாஷும் பின்னாலே ஓடி வந்திருக்க தென்னரசியின் ஆவேசம் இதற்கென்று புரிந்து, அவர் பேசி முடிக்கட்டுமென சக்தி அமைதியாக நின்றான்.

அத்தோடு இதில் சக்தி பேச ஒன்றுமில்லையே!

யாஷ் பேசிட வேண்டும். மதி அதனை ஆமோதிக்க வேண்டும். அவனுக்கு துணை நிற்க வேண்டும். அதற்கு பின்னரே சக்தி வெண்மதிக்கு ஆதரவாக பேசிட முடியும்.

தென்னரசியின் வேகப் பேச்சில் யாஷுக்கு என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை. அதிலும் வெண்மதி அழுதபடி அமைதியாக இருக்க யாஷுக்கு எதுவும் புரியாத நிலை.

விஷயமறிந்து சுகவனம் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்திருக்க…

“இப்படித்தான் ஒரு வீட்டுக்கு வந்தா அங்கிருக்க பெண் பிள்ளை மனச கெடுக்கிறதா?” என்றவர், மேற்கொண்டு மற்றவரை பேசவே விடாது தன்போக்கில் பேசிக்கொண்டே இருக்க, ரகுபதியும் தன் பங்குகிற்கு குதிகுதியென குதித்தார்.

யார் பேசுவதையும் இருவரும் கேட்கும் நிலையில் இல்லை. வெண்மதியை யாஷ் காதலென்று ஏமாத்தி சென்றுவிடுவான் என்று தரம் தாழ்ந்து பேசிட… ஒருகட்டத்தில் அவர்களுக்கு விளக்கம் கொடுப்பதும் வீணென மற்றவர்கள் வேடிக்கையாளர்கள் ஆகினர்.

அவர்கள் பேசி முடிக்கட்டுமென்ற நிலை.

யாஷின் தோளில் தட்டிய ஆர்விக், யாஷின் கையை பிடித்தபடி வர,

“வாப்பா… வா!” என்று ஆர்விக்கின் முன் சென்ற தென்னரசி, “இது நல்லாயிருக்கா! நீயே சொல்லு” என்றார்.

ஆர்விக் சக்தியை ஏறிட்டான். அவனோ கண்களை மூடி திறக்க…

“எதுவா இருந்தாலும் பொறுமையா உட்கார்ந்து பேசுவோம். நீங்க கோபப்படுற அளவுக்கு எதுவுமில்லை” என்றான் ஆர்விக்.

“என்னது கோபப்படுற அளவுக்கு ஒண்ணுமிலையா?” என்ற தென்னரசி… “உன் ஃப்ரெண்ட்டு இங்க ரெண்டு மூணு தரம் வந்திருப்பானா? அதுக்குள்ள என் பொண்ணு மனசை கெடுத்து… தொட்டு பேசுறதெல்லாம் நல்லாவா இருக்கு?” என்று இருவரும் கை பிடித்து நின்றிருந்தை குறித்து தவறான சித்தரிப்பில் உருவகப்படுத்திக் கூற…

“இன்னொருத்தரை குறை சொல்ல உனக்கு தகுதியே இல்லை தென்னரசி” என்றிருந்தார் தெய்வானை.

“அம்மா” என்ற சக்தியின் குரலுக்கு தெய்வானை அடுத்து எதுவும் பேசிடாது உள்ளே சென்றுவிட,

“லவ் பண்றது அவ்வளவு பெரிய குற்றமா ஆண்டி?” என்ற ஆர்விக், “உங்க பொண்ணை உங்களைவிட நல்லா பார்த்துப்பான்” என்றதோடு, மதியின் பக்கம் திரும்பி…

“நீ அமைதியா இருக்கிறது அவனை தப்பா காட்டும் மதி” என்றான் ஆர்விக்.

அழுது கொண்டிருந்த வெண்மதி முகத்தைத் துடைத்துக்கொண்டு,

“அவர் என்னை லவ் பண்றன்னு என் பின்னால வரல… நான் தான் அவரை முதல்ல லவ் பண்ணேன்” என்ற வெண்மதி, “சாரி யாஷ். அவங்களை நான் இவ்வளவுக்கு பேச விட்டிருக்காக்கூடாது. அவங்க கத்தவும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பிட்டேன். சாரி” என்றாள்.

வெண்மதி தான் தான் அவனை காதலித்தது என்றதும், தென்னரசிக்கு மொத்த கோபமும் மகள் மீது திரும்பியது.

“யாரு என்னன்னு தெரியாம எப்படிடி?” என்று தென்னரசி மதியை அடிக்க முயல, சக்தி தடுத்திருந்தான்.

“அவள் பண்ணது பெத்தவங்களா உங்களுக்கு தப்பு தான். பொறுமையா பேசுங்க” என்ற சக்தி, “எனக்கு முன்னவே தெரியும். மதிக்கு இன்னும் படிப்பிருக்கே! முடிஞ்சதும் உங்ககிட்ட பேசலாம் இருந்தேன்” என்றான்.

சக்தி விஷயம் தெரிந்தும் அமைதியாக இருந்திருக்கிறான், அத்தோடு அவனுக்காக மதியை கேட்டு தங்களிடம் பேசுவதாக இருந்திருக்கிறான் என்று அவனே சொல்லவும் தான் தென்னரசி கோபத்தை மட்டுப்படுத்தி அமைதியாகினார்.

“அவங்க தான் யாஷுக்கு கார்டியன். என்ன பேசணுமோ பேசுங்க” என்று அனிதாவை கைகாட்டிய சக்தி, “மதிக்கு யாஷ் தான் பொருத்தம். உங்க வரட்டு கோபத்துக்கு பொண்ணு வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க” என்றான்.

“யாஷ் ரொம்ப நல்ல பையன். கோபத்தை ஒதுக்கி வைச்சிட்டு உங்க பொண்ணோட வாழ்க்கைன்னு நிதானமா யோசிங்க. பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்” என்று அனிதா தென்னரசியின் கையை பிடித்துக்கொண்டு பேச, தென்னரசி மகளைப் பார்த்தார்.

“பிளீஸ்ம்மா” என்றவள், “அவங்க நல்லவங்கம்மா! நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லைம்மா” என்றாள்.

மகன் விஷயத்தில் நேர்ந்த தவறு தென்னரசியின் கோபத்திற்கு முக்கிய காரணம். தற்போது அனைவரும் மதிக்காக பேச, அமைதியாக யோசித்துப் பார்த்தார்.

யாஷ் பற்றி அனிதா அனைத்தும் கூறினார்.

யாஷுக்கு யாருமில்லை என்ற ஒன்றைத் தவிர தென்னரசிக்கும், ரகுபதிக்கும் வேறொன்றும் குறையாகத் தெரியவில்லை. இருப்பினும் அது அவருக்கு சிறு நெருடலை அளித்தது.

ஆர்விக் யாஷை பேசு எனும் விதமாகப் பார்த்திட…

“யாஷ்” என்று தங்களின் அருகில் அவனை அழைத்த அனிதா,

“ஆர்விக் எப்படியோ அப்படித்தான் யாஷும் எனக்கு” என்றார்.

“ஆமா… நீங்க அவனுக்குன்னு யாருமில்லைன்னு நினைக்க வேண்டாம். அவனுக்காக நாங்க இருக்கோம். ஆர்விக்கு செய்யுற அத்தனையும் அவனுக்கும் செய்வோம். அவன் எங்க பிள்ளை” என்றார் லட்சுமணன்.

அவரைத் தொடர்ந்து,

“நீங்க யாஷுக்கு சொத்துன்னு எதுவுமில்லைன்னு நினைக்க வேண்டாம். இந்த நொடியும் நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து செய்துகிட்டு இருக்க பிஸ்னெஸ் மொத்தமா யாஷுக்குன்னு எழுதிக்கொடுக்க நாங்க ரெடி” என்றான் பூபேஷ்.

“ஆமா ஆண்டி… அவனுக்காக என்னலாம் செய்யணுமோ அத்தனையும் சின்ன குறையும் வைக்காம நாங்க செய்றோம்” என்றாள் தான்யா.

“எல்லாரும் இவ்வளவு தூரம் சொல்றாங்க… இன்னமும் யோசிச்சிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்று கதிர்வேலன் இருவருக்கும் பொதுவாகக் கேட்டிட, ரகுபதியும் தென்னரசியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“நீங்க இவ்வளவு யோசிக்கவே வேண்டாம்” என்ற நிதாஞ்சனி, “நீங்களே பார்த்தாலும் யாஷ் மாதிரி ஒருத்தன் நம்ம மதிக்கு கிடைக்கமாட்டான்” என்றாள்.

அப்போதும் இருவரும் அமைதியாகவே இருக்க… தென்னரசியின் பேச்சினால் உண்டான வருத்தத்தை ஒதுக்கி வைத்து,

“ரொம்ப யோசிக்கிறீங்க” என்ற அன்விதா, “சக்தி அண்ணாவுக்கும் எனக்கும் இன்னொரு அண்ணனோ தம்பியோ இருந்து கேட்டிருந்தால் அப்பவும் இப்படித்தான் பதில் சொல்லாம இருப்பீங்களா?” எனக் கேட்டாள்.

யாஷ் அன்விதாவை பார்க்க,

“என்னடா பாக்குற? அவங்க உனக்கு அத்தை. சோ, உரிமையாவே மதியை கட்டிக்கொடுங்கன்னு கேளு” என்று அதட்டலாகக் கூறினாள்.

சக்தி கதிர்வேலனை ஏறிட,

“நானே கேட்கிறேன். என் பையனுக்கு உன் பொண்ணை கொடுக்க சம்மதமா மச்சான்” என ரகுபதியின் கையை பிடித்தார் கதிர்வேலன்.

“நீங்க இவ்வளவு தூரம் சொல்லும்போது மறுக்க எங்களுக்கும் எதுவுமில்லை” என்ற ரகுபதி, “நீ என்ன சொல்ற அரசி?” என்றார். மனைவியிடம்.

“அவனுக்குன்னு வர முதல் சொந்தம் உங்க பொண்ணுதான். அவனோட உலகமா பார்த்துக்குவான்” என்ற ஆர்விக், “அவனுக்கான மொத்த சொந்தமா உங்க பொண்ணை கேட்கிறோம்” என்றான்.

“எனக்கும் சம்மதம். என் பொண்ணாவது என் கண்ணு பார்க்க பிடிச்சவனோட சந்தோஷமா வாழட்டும்” என்றார் தென்னரசி.

“தேங்க்ஸ்ம்மா” என்று வெண்மதி அவரை கட்டிக்கொள்ள, யாஷ் ஆர்விக்கின் அருகில் சென்று இறுக அணைத்திருந்தான்.

“அப்புறம் என்ன அடுத்த கல்யாணத்துக்கு ரெடி பண்ண வேண்டியதுதான்” என்று பூபேஷ் சொல்ல…

“இப்போவே அவசரமில்லை. மதி படிப்பை முடிக்கட்டும்” என்றான் யாஷ்.

அடுத்து அனைவரும் கலந்து பேசி யாஷ், வெண்மதி திருமணம் மதியின் படிப்பு முடிந்ததும் நடத்தலாமென்று அவர்களின் காதலை மகிழ்வாய் ஏற்றிருந்தனர்.

***************************

சற்று முன்னர் தான் பெண்ணழைப்பு முடிந்தது.

சென்னையிலிருந்து தான்யா மற்றும் பூபேஷ் வந்திருக்க, சுகவனம் கார்த்திகா தம்பதியர் தான் முன்னின்று அனைத்து சடங்குகளும் முடித்து அன்விதாவை சென்னைக்கு அழைத்துக்கொண்டு சற்று முன்னர் புறப்பட்டிருந்தனர்.

திருமணம் சென்னையில்.

அன்விதாவின் விருப்பம் டெஸ்டினேஷன் திருமணமாக இருக்க… அதையே ஏற்பாடு செய்திருந்தான் ஆர்விக்.

அன்விதாவுடனே சக்தி, நிதாஞ்சனி தவிர்த்து அனைவரும் சென்றிருக்க… இங்கு அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு மதியத்திற்கு மேல் சக்தியும், நிதாஞ்சனியும் செல்வதாக இருந்தனர்.

“ரெடியா இரு நிதா… நான் ஃபேக்டரி வரை போயிட்டு ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துடுறேன்” என்று நகர்ந்த சக்தி, திரும்பி வந்து… “டைம் ஆகிட்டா கால் பண்ணு” என்றான்.

“முடியாது… பண்ணமாட்டேன்” என்றவள், “அத்தை ஃபோன் இல்லை… சோ நான் என் ஃபோனிலிருந்து கால் பண்ணுவேன்னு நினைச்சு வேணும்னே அங்க நேரத்தை ஓட்ட வேண்டாம். நான் கால் பண்ணவேமாட்டேன்” என்றவளை, இடையை சுற்றி முதுகில் கை கொடுத்தவன் தன்னிடம் இழுத்திருந்தான்.

“ரொம்ப பண்றடி!” என அவளின் மூக்கு நுனியை கடித்தவன், “அன்பிளாக் பண்ணுடி” என்று தனது மூக்கு வைத்து அவளின் கன்னத்தில் இடித்தான்.

“முடியாது!”

“நிதா பிளீஸ்டி… என்னவோ மாதிரி இருக்கு.”

“என்னை பிளாக் பண்ணப்போ… அது வேற மாதிரி ஃபீல் சொன்னீங்க. அந்த ஃபீலை நானும் அனுபவிச்சிக்கிறேன்.”

“இதெல்லாம் அநியாயம்” என்ற சக்தி, “பார்த்துக்கிறேன்” என்று மீண்டும் அவளின் மூக்கை கடித்து விலகினான்.

“சீக்கிரம் வாங்க” என்ற நிதாஞ்சனி, “எவ்ளோ நேரமானாலும் கால் பண்ணமாட்டேன்” என்றிருந்தாள்.

“வர்றேன் டி… தேயிலை லோடு ஏறிட்டு இருக்கு. நேத்தே முடிஞ்சிடும் பார்த்தேன். மேனேஜர்கிட்ட சொல்லிட்டு வந்துடுவேன்… படுத்தி வைக்கிற” என்று சென்றிருந்த சக்தி, ஆலைக்கு சென்று சேர நிதாஞ்சனியிடமிருந்து அழைப்பு வந்தது.

திரை ஒளிர்ந்த பெயரை நம்பாதுதான் பார்த்து நின்றான்.

திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில் எத்தனையோ முறை எப்படியெப்படியோ எல்லாமும் கேட்டுப் பார்த்தும் அவள் அவனின் என்னை அன்பிளாக் செய்யாது அலையவிட்டுக் கொண்டிருக்க… இன்று தான் கேட்டதற்காக எல்லாம் அவள் அன்பிளாக் செய்து அழைப்புவிடுத்திருக்க மாட்டாளென்று சரியாக கணித்து யோசனையாக அழைப்பை ஏற்றான்.

“மனசு வந்துச்சுப்போல…” அவள் பேசும் முன் சொல்லிய சக்தி, “என்னவாம்?” என்றான். அவனின் குரலில் அத்தனை குதுகளிப்பு.

அவள் அன்பிளாக் செய்திட்ட மகிழ்வு.

அவளிடம் பதிலின்றியிருக்க…

“நிதா…” என்றவன், அதன் பின்னர் தான் இதுநாள் வரை பிளாக்கிலே வைத்திருந்தவள் தற்போது அன்பிளாக் செய்திருக்க, தான் இங்கு வந்த இடைப்பட்ட நிமிடங்களில் அவளுக்கு எதுவுமோ என நொடியில் பயந்திருந்தான்.

“நிதா… இருக்கியாடி!” பெரும் தவிப்பு அவனிடத்தில். அவளுக்கான தவிப்பு. அவளிடம் இதுவரை அவன் காதலை மட்டுமே காட்டியிருக்க,  ஏற்கனவே நெகிழ்வின் உச்சத்தில் இருந்தவள், இன்று தனக்காக அவன் கொள்ளும் தவிப்பில், மெல்ல விசும்பியிருந்தாள்.

“ஹேய்… என்னடி?” என்றவன் அதற்குமேல அங்கு வந்த விஷயத்தையே மறந்தவனாக வண்டியை உயிர்ப்பித்து வீடு நோக்கி செலுத்தியிருந்தான்.

“சக்தி…”

“சொல்லுடி… என்னாச்சு?” என்றவன், அவளின் தழுதழுப்பான குரலில் பதற்றம் கொண்டவனாக, “வீட்டுக்கு வந்துட்டே இருக்கேன்… இதோ வந்துட்டேன்” என அழைப்பைத் துண்டித்து சட்டைப்பையில் போட்டவனாக வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

சக்தியின் வண்டி சத்தம் கேட்கவே அறைக்குள்ளிருந்தவள் கூடத்திற்கு வருவதற்குள் சக்தி வந்திருந்தான்.

தன் முன் கண்ணீரோடு நிற்பவளை முழுதாக பார்வையில் ஆராய்ந்துவிட்டே…

“என்னடி?” என்று அவளின் பக்கம் வந்தான்.

அடுத்தநொடி கணவனை ஆரத் தழுவி, இடைவெளியை முற்றும் முழுதாய் குறைத்திருந்தாள்.

“நிதா” என்றவன், “பதற வச்சிட்டடி!” என்று தானும் அணைத்துக் கொண்டான்.

“அப்பாவாகப்போறீங்க சக்தி!” அவனது மார்பில் இதழ்கள் தீண்ட சொல்லியிருந்தாள்.

இரு கைகளாலும் அவளின் முகம் பற்றி தன்னைப் பார்க்கச் செய்தவன், நிஜமா எனும் விதமாக தலையசைத்து வினவ, ஆமென மீண்டும் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

“ஆல்ரெடி டவுட் இருந்துச்சு. கல்யாண வேலையில் செக் பண்ணவே மறந்துட்டேன். நீங்க போனதும், தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. அப்புறம் தான் நினைவு வந்து செக் பண்ணேன்” என்றவள்,

“தேங்க்ஸ்… வீ ஆர் கோயிங் டூ பீ பேரண்ட்ஸ்” என அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

“லவ் யூ டி… லவ் யூ” என வார்த்தைக்கு அத்தனை அழுத்தம் கொடுத்து சொல்லியவன், அவளை அணைப்பில் வைத்தவாறே அவளின் உச்சியில் ஆழமாக தனது இதழ் பதித்தான்.

சக்தி திருக்குமரன், நிதாஞ்சனியின் காதல் அடுத்த அத்தியாயத்தில் இனிதாக ஆரம்பமாகியது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 64

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
64
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்