
மித்ரன் சம்பூர்ணாவுடன் வெளியே நடக்க அவனை திரும்பி பார்த்தவள், “என்ன?” என்று கேட்டாள்.
“என்னை பிடிக்கும்னு ஏன் சொன்ன?”
“உன் வீட்டுல உட்கார்ந்துட்டு உன் பாட்டி, அம்மா, அண்ணன் முன்னாடி உன்னை பிடிக்கலனு சொன்னா அவங்க மனசு கஷ்டப்படாதா? அதான் அப்படி சொன்னேன்”
அவளை ஆச்சரியமாக பார்த்தவன், “இது புதுசா இருக்கே” என்றான்.
“இருக்கட்டும். என்ன இப்போ?” என்று கேட்டு வைத்தாள்.
“உன் பாட்டி கிட்ட விசயத்தத சொல்லி இத இதோட முடிச்சுடு”
“தெரியும்.” என்று அழுத்தமாக பேசியவள் சட்டென நின்றாள்.
“அதென்ன? என் ஹேர் ஸ்டைல் பிடிக்கலயா? என்ன உளறிட்டு இருக்க நீ?”
“அது எதோ வாய்ல வந்துச்சுனு…” என்று ஆரம்பித்தவன் சட்டென நிறுத்தி, “உன்னை எனக்கு பிடிக்கலனு சொல்ல வேற ரீசன் எதுவும் அப்போ சொல்ல முடியல. அதான் இப்படி சொன்னேன்” என்றான்.
“அப்ப உண்மையா ஒரு ரீசன் வச்சுருப்பல? அத சொல்லேன். கேட்போம்” என்று விளையாட்டாய் ஆரம்பித்தாள்.
அந்த விளையாட்டு விபரீதத்தில் கொண்டு போய் முடியும் என்று தெரியவில்லை.
“ஏன் உனக்கு தெரியாதா? உன்னை எனக்கு எப்ப இருந்து பிடிக்கலனு?”
“பரவாயில்ல சொல்லு.”
“என்ன சொல்லனும்? உன்னோட ஆட்டிட்டியூட் எனக்கு பிடிக்காது.”
“ஆமா. உன்னோடதும் எனக்கு சுத்தமா பிடிக்காது”
“உன் பேச்சே எனக்கு பிடிக்காது”
“சேம் பின்ச்”
“முக்கியமா உன்னை விஷால் விசயத்துல பிடிக்காது”
சட்டென சம்பூர்ணாவின் முகம் மாறி விட, அவளது பார்வை அவனிடம் அழுத்தமாக படிந்தது.
“விஷால் விசயத்துலயே உன் மேல கொலை வெறி தான். அதே வேலைய செந்திலுக்கும் பார்த்த பாரு. மன்னிக்கவே மாட்டேன்”
“நீ மன்னிக்கவும் தேவை இல்ல. அந்த மன்னிப்ப பத்தி நான் அக்கறை படுவேன்னா நினைக்கிற?” என்று நக்கலாக கேட்டாள்.
“தெரியுமே.. உன் கேரக்டர் இதான்னு. ஆனா வாழ்க்கையில நான் வெறுக்குற முதல் கடைசி பொண்ணு நீ தான். எப்படி எல்லாம் மத்தவங்க வாழ்க்கையில விளையாடுற? அசிங்கமா இல்ல?”
“இல்ல. நான் ஏன் மேன் அசிங்க படனும்?”
“உன் கிட்ட போய் அசிங்கத்த பத்தி பேசுனது தப்பு தான். ஆனா ஒன்னு உன்னை போய் கல்யாணம்.. வாட் அ ஜோக்.. ஊரு உலகத்துல பொண்ணே இல்லாத மாதிரி உன்னை போய் மேரேஜ் பண்ணிக்க..”
“ஸ்டாப் இட் மேன்” என்று சம்பூர்ணா பல்லைக்கடித்து கூற, “எதுக்கு ஸ்டாப்? உன்னை போய் மேரேஜ் பண்ணி வாழ சொன்னா என் வாழ்க்கை என்னாகுறது? நோ சான்ஸ். அதுக்கெல்லாம் குடும்ப பொண்ணுங்க தான் வேணும். நீ அதுக்கு செட்டே ஆக மாட்ட” என்று பேசிக் கொண்டே போனான்.
“உன்னை லவ் பண்ணுறது கல்யாணம் பண்ணுறதுக்குனு நினைச்சியா? இதுக்கு தான். நீயெல்வாம் குடும்பத்துக்கு தகுதி இல்லாதவ. பணமும் அழகும் இருந்தா, உன் பேக்ரவுண்ட்ட மறந்து உன்னை கல்யாணம் பண்ணிக்குவாங்கனு நினைப்பா? உன் அப்பா விசயம் தெரிஞ்சப்புறம், உன் பணத்துக்காக வேணா எவனாச்சும் வருவான். லவ் ? அதெல்லாம்…” என்று பேசிக் கொண்டே போனவனின் வாயை உடைத்த தருணம் நினைவு வர, முன்னால் பேசிக் கொண்டிருந்தவனை பார்த்து, “ஸ்டாப் இட் மித்ரன்” என்று கத்தி விட்டாள்.
அவன் அவளது கோபத்தில் பேச்சை நிறுத்தி முறைக்க, “என்னை.. என்னை பார்த்து கல்யாணத்துக்கு தகுதி இல்லனா பேசுற? அப்ப என்னை தான் நீ கட்டிக்கனும். இந்த கல்யாணத்த முடிச்சு காட்டுறேன்.” என்று சவால் விட்டவள் விறுவிறுவென உள்ளே சென்று முத்தரசியிடம் சம்மதம் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
மித்ரனுக்கு இதயம் வெடித்தே விட்டது. இப்படி ஒரு முடிவை எடுப்பாளா? இருவருக்கும் இடையே இருக்கும் பகை அவளுக்கு தெரிந்தும் சம்மதித்து விட்டுச் செல்கிறாளே?
அவள் இடித்து விட்டுச் சென்ற தோள் வலித்தது. அதை பிடித்துக் கொண்டவன் அதிர்ச்சியோடு அவள் கேட்டை விட்டு வேகமாக வெளியேறுவதை பார்த்தான்.
“என்னடா நடக்குது இங்க?” என்று நர்மதா கேட்க, புவனனுக்கு தம்பியை பார்க்க பாவமாக இருந்தது.
“மித்ரா.. உள்ள வா” என்றதும் மித்ரன் திரும்பி உள்ளே வந்தான்.
“என்ன இது?” என்று முத்தரசி கேட்க, மித்ரன் பெருமூச்சு விட்டான்.
“கோபத்துல பேசிட்டு போறா பாட்டி. நான் பிடிக்கலனு சொன்னதுல கோபம்.. கல்யாண வேலைய எல்லாம் ஆரம்பிக்காதீங்க”
“கல்யாணம் சின்ன பிள்ளை விளையாட்டு இல்ல மித்ரா.. நீங்க வேணும்னு சொன்னதும் மண் வீடு கட்டுறதும்.. வேணாம்னு சொன்னதும் உடைச்சு விடுறதுக்கும்.. நீங்க ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு சம்மதிக்கல. அவ்வளவு தான். ஆனா இப்ப அந்த பொண்ணு கோபமா பேசிட்டு போறா. நல்லா யோசிச்சு தெளிவான ஒரு முடிவுக்கு வாங்க. நாங்க வெயிட் பண்ணுறோம்” என்று விட்டு முத்தரசி நர்மதாவை பார்க்க, அவரும் தலையாட்டி விட்டு மருமகளோடு சமையலறைக்குள் சென்றார்.
முத்தரசி கலைத்துப்போன உடலோடு அறைக்குள் செல்ல, புவனன் மித்ரனின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு மாடிப்படியை தேடிச் சென்றான்.
“என்னடா?”
“பேசாம வா” என்று புவனன் அதட்டி மேலே அழைத்துச் சென்றான்.
ஆடி மாதம் முடியும் நேரம். காற்று மிகவும் பலமாக வீசிக் கொண்டிருந்தது. அது இருவரின் முடியையும் கலைத்து விளையாடியது.
“என்னடா இது? சம்பூர்ணா மேடம் கூட நீ படிச்சியா? எப்போ?”
“காலேஜ்ல..”
“காலேஜ்லயா?”
“ஆமா.. யூ.ஜிலடா.. அப்ப நீ வேலை கிடைச்சுருச்சுனு இங்க வந்துட்ட. அம்மா அப்பாவும் உன் கூட வந்துட்டாங்க. நானும் ஹாஸ்டல்ல இருந்தேனே.. அப்போ..”
“உன் க்ளாஸ்மெட்டா?”
தலையாட்டி வைத்தான்.
“அவங்க கூட உனக்கு என்ன பிரச்சனை?”
“நீ ஏன்டா அவள அவங்க இவங்கனு பேசுற?”
“என் கம்பெனி முதலாளி அவங்க. எனக்கு மரியாதையா தான் பேச வரும். நீ விசயத்த சொல்லு.. என்ன பிரச்சனை?”
“அத சொல்ல முடியாதுடா”
மித்ரன் பெருமூச்சு விட்டு விட்டு வெயிலை விட்டு நிழல் பக்கமாக சென்று நின்று கொண்டான்.
“சொல்ல முடியாதுனா? அப்படி ஒரு பிரச்சனையா? காலேஜ் டேய்ஸ்ல க்ளாஸ்மெட் கூட சண்டை போடுறது எல்லாம் சகஜம்டா”
“இங்க பாரு.. உனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாது. நான் சொல்லவும் மாட்டேன். ஆனா எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர ஒருத்தர் பிடிக்காது. அதுவும் எனக்கு அவள பார்த்தாலே கோபம் தான் வரும். நான் ஒரு பொண்ண திட்டி பார்த்துருக்கியா? இவள திட்டிருக்கேன். நான் அவள பார்க்கும் போதெல்லாம் திட்டுவேன். அவ்வளவு தூரம் அவள கண்டாலே ஆகாது. அப்படி இருக்கப்ப கல்யாண பேச்சு.. ப்ச்ச்”
“முதல்ல ரெண்டு பேரும் வேணாம்னு சொல்லிட்டு திடீர்னு ஏன் மாத்தி பேசிட்டு போனாங்க?”
“தெரியல.. எதோ ஒரு கோபத்துல மாத்தி பேசிட்டா. கோபம் போனதும் அவளே வேணாம்னு சொல்லிடுவா”
“அப்படியா?”
“ஆமா”
“அவ்வளவு நல்லா தெரியுமா உனக்கு அவங்கள?”
“ம்ம்”
“என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசுறியா?”
“என்ன சொல்ல வர்ர?”
“அவங்கள அவ்வளவு புரிஞ்சு வச்சுருக்க.. ஆனா பிடிக்காதுங்குற.. உனக்கே வித்தியாசமா தெரியல?”
மித்ரன் பெருமூச்சு விட்டு கலைந்து போன முடியை சரி செய்து கொண்டான்.
“அவள புரிஞ்சுக்கிட்டதால புடிச்சுரும்னு சொல்ல முடியாது. அவள நான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன்னு கூட சொல்ல முடியாது. அவளுக்கு என் மேல இருக்க கோபத்தோட அளவு எனக்கு தெரியும். எனக்கு அவ மேல இருக்க வெறுப்பு அவளுக்கும் தெரியும். நாங்க எதையும் மறைச்செல்லாம் வைக்கல. அதுனால தான் சொல்லுறேன். தினம் தினம் அவ முகத்த பார்த்தா என் ஆயுசு பாதியா குறைஞ்சுடும். எனக்கு வேணாம்”
புவனனுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் எதுவோ இருவருக்கும் நடுவே நிற்கிறது என்று மட்டும் புரிந்தது.
“சரி.. உங்க விருப்பம். இப்ப அவங்க சொன்னது…”
“அத சொல்லி அவங்க பாட்டிய அவ வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டா போதும். அப்புறம் அவ பாடு.. நமக்கு என்ன?”
புவனன் தலையாட்டி வைக்க, கீழே சாதனா அழைத்தாள்.
“வா.. போவோம்” என்று விட்டு புவனன் முதலில் இறங்கினான்.
மித்ரன் கடைசியாக சம்பூர்ணா பார்த்த பார்வையை நினைத்து கண்ணை மூடினான். அவள் முகத்தில் அவன் இவ்வளவு கோபத்தை பார்த்ததே இல்லை. அவன் அவ்வளவு சண்டை போட்டாலும் நக்கலாக பேசி விட்டு செல்வாள்.
பதிலுக்கு கோபம் கொண்டு கத்தியதை இன்று தான் பார்க்கிறான். எதனால் இப்படி செய்தால் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்தான். முடியவில்லை.
“ப்ச்ச்.. இப்ப இந்த பிரச்சனை தேவை தானா?” என்று சலித்துக் கொண்டான்.
கீழே வந்தால் யாரும் அவனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. புவனன் எதையும் கேட்க வேண்டாம் என்று விட அமைதியாகி விட்டனர்.
மித்ரன் யோசனையுடனே சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்று அடைந்து விட்டான்.
மனம் முழுக்க முழுக்க சம்பூர்ணாவிடம் தான் இருந்தது. அவளது கைபேசி எண் இருக்கிறது. அழிக்காமல் வைத்திருந்தான். அழைத்து எதற்கு இப்படிச் செய்தாள் என்று கேட்போமா? இல்லை கேட்டால் பதில் வருமா?
கைபேசியை எடுத்து சில நிமிடங்கள் அவளது பெயரை தேடினான்.
“சம்பூர்ணா” என்ற பெயரை தேடி எடுத்தான்.
இதே எண் தான் இன்னமும் இருக்கிறதா? இல்லை மாற்றி விட்டாளா? என்று தெரியாது.
அந்த எண்ணை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
ஒரு நொடி பதறி விட்டான். அவன் தான் அழைத்து விட்டானோ? என்று பதறியவன் பிறகு பாடல் ஒலி கேட்டு நிதானித்தான்.
‘இவ தான் கூப்பிடுறாளா? இன்னும் அதே நம்பர் வச்சுருக்காளா?’ என்று யோசித்தவன், பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்.
உடனே பேசவில்லை. அந்த பக்கம் சம்பூர்ணாவும் பேசவில்லை. பல நொடிகள் ஓடியது. இருவரும் ஒரு நிலைக்கு வந்தனர்.
“எதுக்கு அப்படி சொன்ன?” என்று அமைதியாக கேட்டான்.
கடைசியாக அவளிடம் எப்போது அமைதியாக பேசினான் என்பதே அவனுக்கு நினைவில்லை.
“கோபத்துல சொல்லிட்டேன். எனக்கு கல்யாணம் வேணாம்”
“தெரியும்..”
“அப்ப நீயே உன் வீட்டுல பேசிடு”
“உன் பாட்டி?”
“அவங்களுக்கு பிடிக்கலனு இன்ஃபார்ம் பண்ணிட்டா போதும். வந்துடுவாங்க”
“ஓகே”
மீண்டும் சில நொடிகள் அமைதிக்குப்பிறகு, “வைக்கிறேன்” என்றாள்.
“ம்ம்” என்று அவன் பதில் கொடுத்ததும் அழைப்பை துண்டித்து விட்டாள்.
கடந்தகால சுவடுகள் பாடங்களாகவும் அமையும் பாதைகளாகவும் அமையும். கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி நகர்வதே முன்னேற்றம்.
வாசம் வீசும்.

