Loading

பத்மநாபன் அருணிற்கு தேஜாவை திருமணம் செய்து கொடுத்தால் என்ன என்று யோசித்தார்.

    ‘தேஜாவைப் பற்றி ஓரளவு தெரிந்தவன் அருண். குழந்தையை வைத்துக் கொண்டு அவனும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான். தேஜா பொறுமையானவள் நிச்சயம் குழந்தையை ஏற்றுக் கொள்வாள் கந்தனிடம் நாமே பேசிப் பார்க்கலாமா?’ என்றெல்லாம் யோசித்தார் அவர்.

‘வலிய சென்று பெண் கொடுக்கிறேன் என்றால் தவறாக நினைப்பார்களோ… தன் தங்கை வீட்டினர் பேசியது போல பெண்ணை தவறாக பேசுவார்களோ?!’ என்று வேறு ஒரு பக்கம் சிந்தித்தார். பலவாறு யோசித்து அவருக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

பெண்ணைப் பெற்று அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்து தருவதற்குள் பெற்றோர் படும் பாடு. வெளியே சென்றால் கண்ட பொறுக்கிகள் கண்ணில் இருந்து காக்க வேண்டும் அவளின் பாதுகாப்பு அடிப்படை தேவைகள் அத்தியாவசிய கடமைகள் என்று எத்தனை இருக்கிறது. இதில் படிக்கும் வயதில் பதின்ம வயதில் தோன்றும் காதல் ஊதல் என்று ஒரு பக்கம் கெட்டழிந்து போவதைத் தடுக்க வேண்டும். பதின் பருவத்தில் எதிர்பாலினம் மீது தோன்றும் ஈர்ப்பை காதல் என்று நினைத்து அவ்வயதிலேயே தன்னிச்சையாக முடிவெடுக்கும் அவசரக்குடுக்கைகளை என்னவென்று சொல்வது. சமூக முதிர்ச்சியுடன் இருந்து காதலில் விழுபவர்களையே இந்த சமூகமும் பலதரப்பட்ட எதிர்ப்புகளும் வைத்து செய்துவிடுகிறது. இதில் தனக்கு இன்னது வேண்டும் என்றே சரியாக புரியாத பருவத்தில் வரும் ஈர்ப்பை காதல் என்று எண்ணி அதற்காக வீட்டை விட்டு ஓடும் தன் காதல் உயர்ந்தது என்பதைக் காட்டத் தன்னையே கொடுத்து சீரழியும் பிள்ளைகளை என்ன செய்வது. எதையும் முன் யோசனை செய்யாமல் முடிவெடுக்கும் வளரிளம் பருவம் வாழ்க்கையையும் அப்படியே முடிவெடுத்து விடுகிறது.

    பத்மநாபனிற்கு ஏகத்திற்கும் குழப்பங்கள் சூழ்ந்து கொண்டது.

‘கந்தனிடம் பேசலாமா வேண்டாமா ?’என்ற போராட்டத்தில் இருக்க, முதலில் அருணிடம் கேட்போமா என்று கூட யோசித்தார் பத்மநாபன்.

அதற்குள் கந்தசாமியே அங்கு வந்து விட்டார்.

“என்ன மச்சான் ஒரே ரோசனையாவே இருக்கீரு? என்ன சேதியாம்?”என்று வந்தமர,” என்னத்த யோசனை, எல்லாம் என் மகளை நினைத்து தான்” என்றார் பெருமூச்சுடன்.

“மகளுக்கு என்னய்யா அது அருமையான புள்ளை.”என்று கந்தசாமி பாராட்டி பேசவும், பத்மநாபனுக்கு உள்ளூர நம்பிக்கை குமிழ்விட்டது.

‘நிச்சயம் தேஜாவை அருணுக்குப் பேசலாம்’ என்று முடிவெடுத்து பேசும் முன்பே கந்தசாமி பேச்சைத் துவங்கினார்.

“என்னடா இப்படி கேட்கிறேன் னு தப்பா நினைக்க வேண்டாம் மச்சான்” எனும் போதே அருண் அங்கே வந்து விட்டான்.

“மாமா கிட்ட அப்படி என்ன கேட்க போறீங்க ப்பா ?”என்று முகத்தில் புன்னகை இருந்தாலும், பத்மநாபன் அறியாமல் தந்தையை முறைத்தான் அருண்.

“சும்மா பேசிட்டு இருந்தோம் ப்பா” என்று சமாளித்த கந்தசாமி, அப்போதைக்கு பேச்சை ஒத்திப் போட்டார்.

“மாமா உங்களை அத்தை தேடிட்டு இருந்தாங்க” என்று பத்மநாபனை அனுப்பியவன்,” அவர் கிட்ட என்ன கேட்க போனீங்க?” என்று அழுத்தமாய் வினவ

“எதுவும் இல்லைடா” என்று கந்தன் சமாளிக்க

“யார் கிட்டயாவது பொண்ணு அது இதுன்னு பேசினீங்க அப்புறம் நான் ஊர் பக்கமே வர மாட்டேன்” என்றான் மிரட்டலாய்

தலையை தொங்க போட்டார் கந்தசாமி. அருணிற்கு வருத்தமாகத் தான் இருந்தது. ஆனாலும் தான் இலகுவாக நின்றால் மீண்டும் திருமணப் பேச்சைத் துவங்குவார் என்று அமைதி காத்தான்.

“ஏன் ப்பா நாம இருக்கிற நிலையில் இந்த கல்யாணம், காதுகுத்து எல்லாம் தேவை தானா?” என்றவன்,” ப்ளீஸ் ப்பா கொஞ்சம் நிம்மதியாக இங்கே இருக்கேன். அதையும் கெடுத்து விட்டுடாதீங்க” என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து அகல, திரிபுரசுந்தரி அவனின் மிரட்டலைக் கேட்டிருந்தார்.

அவன் அங்கிருந்து சென்றதும், கந்தசாமி எவரும் அறியாமல் தன் விழி நீரைத் துடைக்க,” அண்ணா!” என்று சுந்தரி அழைத்ததுமே முக பாவனைகளை மாற்றினார் அவர்.

“சொல்லுமா டீ குடிச்சியா?” என்று புன்னகைக்க,”அருண் பேசினதை நானும் கேட்டேன் ண்ணா” என்றவர்,”ஏன் கல்யாணம் வேண்டாம் னு சொல்றான் அருண்” என்று வினவ

“என்னன்னு சொல்வேன் போ” என்றவர்,” எல்லாம் என் பேரன் மகிக்காக தான் மா. அவங்க அண்ணன் மகனை பார்த்துட்டே காலத்தை ஓட்டிடலாம்னு நினைக்கிறான். அப்படியே நானும் நினைக்க முடியுமா ம்மா.? ஏற்கனவே கடன் முழுசும் அவன் தலையில் தான். இப்படி கையாலாகாத அப்பனா இருக்கேனேன்னு மனசு தவிக்குது. நானும் விட்டுப் போயிட்டா என்ன செய்வானோன்னு இருக்கும்மா” என்றார் கவலையாக

“அண்ணா எல்லாம் சரியாக நடக்கும் கவலைப்படாதீங்க. இப்போ என்ன உங்களுக்கு அருண் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அவ்வளவு தானே?, அதெல்லாம் கண்டிப்பா சம்மதிப்பான்.” என்று சமாதானம் செய்து விட்டுப் போக, கந்தசாமி அமைதியாக அமர்ந்திருந்தார்.

*********

சுதாகரன் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு, ஏதோ யோசனை செய்வது போல நின்றிருந்தான்.

அவனைச் சுற்றி இளைய பட்டாளங்கள் அவன் முகத்தைப் பார்த்தபடி இருக்க அங்கே அப்பத்தா வந்து விட்டார்.

“எள்ளுதேன் எண்ணைக்கு காயுதுன்னா இந்த எலிப்புழுக்கை எல்லாம் என்னத்துக்கு காயுதாம்” என்று நக்கலாய் கேட்க

    “அப்பத்தா!” என்று அனைவரும் அவர் பக்கம் முறைப்பாக திரும்பினர்.

“செரித்தேன் எதுக்கு எம்மூட்டு பேரன் மூஞ்சியவே பாத்து நிக்குறீக?” என்று கேட்க

“அது ஒண்ணும் இல்லை பாட்டி அண்ணா கம்மாய்க்கு போகலாமா னு கேட்டார். இந்த ராஜு மதுரைக்கு போகலாம்னு சொல்றான். தேஜாக்கா நான் எங்கேயும் வரலைனு சொல்லிட்டாங்க. யுகா மச்சான் லைப்ரரி போறாராம், அருண் மச்சானும் மகி கூட பார்க் போறாராம். சுதா அண்ணாக்கு எல்லாரும் ஒண்ணா போகணும்னு ஆசை. இவங்க யாரும் ஒத்து வர மாட்டேங்கிறாங்க “என்று விளக்கினான் அகிலன்.

“ஃப்பூபூ இம்புட்டு தானா ?!”என்று சிரித்தவர்,”நம்ம டேமுக்கு போங்க, பயலுக வெளையாட ஊஞ்ச இருக்கும். இந்தா யுகா நீயி நாலு படிக்கற பொஸ்தகத்த எடுத்துட்டு போ. அங்கன நெழலு பாத்து உக்காந்து படி. பயலுக குளிக்கறவன் குளிக்கட்டும், வெளையாடுறவன் வெளையாடட்டும்.” என்றார் முடிவாக

“அப்போ தேஜாக்கா.?”என்று அகிலன் நிற்க

“அவ வரலைனா விடுங்க, நீங்க போங்க “என்று சொல்லி விட்டுச் செல்ல தேஜா எதையும் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

ப்ரதன்யாவோ,” அக்கா நீங்க மட்டும் தனியா இருப்பீங்க. வாங்கக்கா போயிட்டு வரலாம் இன்னும் ரெண்டு மூணு நாள்ல எல்லாரும் கிளம்பி போயிடுவோம். ப்ளீஸ்க்கா” என்று அவளிடம் மன்றாடினாள்

“ப்ரதர் அவளுக்கு வரப் பிடிக்கலைனா விடேன்” என்று வழக்கம் போல கிண்டலாக அருண் கூறவும் இன்னும் கடுப்பாகிப் போனாள் ப்ரதன்யா.

“நான் என் அக்கா கிட்ட பேசறேன் நீங்க ஏன் இடையில் வர்றீங்க? டோன்ட் இன்டர்ஃபியர் ஓகே” என்று முகத்தில் அடித்தாற் போல சொல்ல, அருணுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சட்டென அங்கிருந்து அகன்று விட்டான். மற்றவர்கள் சட்டென அமைதியாகிவிட்டனர். அனைவர் முகத்திலும் பிரதன்யாவின் முகத்தில் அடித்தாற் போலவான பேச்சில் அதிருப்தி தெரிந்தது.

“என்ன தனு ஏன் இப்படி சட்டுனு பேசற?” என்று கடிந்து கொண்ட சுதாகரன்,” அவங்க அவங்க இஷ்டம் போல எங்கே போகணுமோ போங்க” என்றபடி அவனும் போய்விட, அனைவருக்கும் சப்பென்று ஆகவே, அங்கிருந்து போய் விட்டனர்.

பிரதன்யாவோ கோபத்துடன்,” இதுக்கு எதுக்கு ப்ளான் போடணும்?” என சலிப்பாக சொல்லி விட்டு நகர்ந்தாள்.

இங்கே சுதாகரன் சங்கடமாக அருணிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“சாரி மச்சான் அது சின்ன புள்ளை. மனசுல வச்சுக்காத” என்று சொல்லவும் ,”இல்லை அதெல்லாம் இல்லை” என்று சமாளித்தான் அருண்.

“என்னடா இதுக்கு போய் மூஞ்சியை தொங்க போடுற அவளைப் பத்தி தெரியாதா விடு” என்று யுகா கூறவும் ,”இல்லை யுகா எப்போதும் சொல்ற மாதிரி தான் சொன்னேன்.அது தப்பாகிடுச்சு. ப்ப்ச் விடு நான் எதுவும் நினைக்கலை” என்றான். ஆனாலும் முகத்தில் ஒளிர்வு இல்லை.

“சரி ஓகே கிளம்பு டேம் போவோம் மகி அங்கே வந்து விளையாடட்டும் வா வா கிளம்பு” என்று அவனை இழுக்க,” இல்லைடா வரலை நான்” என்றான் சலிப்பாக.

“சும்மா இதுக்கெல்லாம் அமைதியா இருக்காத அருண் கிளம்பு” என்று வற்புறுத்தி தான் அவனை மகனோடு அழைத்துச் சென்றான் யுகாதித்தன்.

    அருணை கிளப்பவும் ஒவ்வொருவராய் கிளம்பத் தயார் ஆகினர்.

*******

தேஜா ப்ரதன்யாவை திட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏன் உனக்கு அவ்வளவு கோபம் வருது?. ஜஸ்ட் பேசத் தானே செஞ்சார். இது அவருக்கு இன்சல்ட் இல்லையா தனு.?” என்று கேட்க

“அக்கா நான் நீங்க வரலைன்ற ஆதங்கத்தில் பேசிட்டு இருந்தேன். சட்டுனு அவர் இடையில் வரவும் கோபம் வந்திடுச்சு” என்று விளக்கம் கொடுக்க

“தப்பு தனு. வந்ததும் சாரி கேட்கிற நீ” என்று கண்டிப்புடன் பேச

“நான் சாரி சொல்றேன் பட் நீங்க எங்க கூட வெளியே வரணும் அப்படின்னா சாரி சொல்றேன்” என்று மடக்கினாள் அவளை.

“நீ சொல்லவே வேண்டாம் “என்று தேஜா போய்விட ப்ரதன்யாவிற்கு அருணை பேசியது இப்போது தான் வருத்தமாக இருந்தது.

‘கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ ?’என்று யோசித்தவள்,’ அவன் எப்போ பார்த்தாலும் என்னை சீண்டிட்டே இருக்கான் இப்படி பேசினா தான் அடுத்த தடவை எதுவும் சொல்ல மாட்டான்’ என்று எண்ணிக் கொண்டாள்.

    வெளியே கிளம்பும் குதூகலத்தில் நடுக்கூடமே இளைய பட்டாளத்தால் சிரிப்பில் அதிர்ந்து கொண்டிருந்தது. அகிலன் ஒரு வழியாக பேசி பேசி பிரதன்யாவை கிளம்பி வைத்து விட்டான். தேஜா இன்னும் வர மறுக்கவே திரிபுரசுந்தரி தான் நிலைமையைக் கையில் எடுத்தார்.

    “பெரியத்தை மாவெளக்கு சாயந்தரம் தானே போடணும் அதுக்குள்ள நாங்களும் இவங்களோட போயிட்டு வந்துடுறோம். போயிட்டு வரவா”என்று கேட்க

    “மவராசியா போயிட்டு வாங்க. பலவாரம் பட்சணம் எல்லாம் எடுத்துக்கிடுங்க இங்கன நான் பாத்துக்கிடுதேன் யத்தா தேஜூ நீயும் கெளம்பு ஒத்தையா நிக்க வேணாம் இங்க. நானும் தாத்தனும் தோப்புக்கு போயிட்டு வாரோம்”என்று அவள் மறுக்க முடியாதபடி கூற அவளும் வேறு வழியின்றி கிளம்பி விட்டாள்.

    அனைவரும் கிளம்பியதும் வீடே வெறிச்சோடி இருந்தது.

    பெரிய ட்ராவலர் வண்டியை தான் சுதாகரன் வரவழைத்திருந்தான்.

    .

    “இம்புட்டு சீக்கிரம் வண்டியை எப்புட்றா புடிச்ச”என்று யுகா ஆச்சரியமாக கேட்க

    “நம்ம கேட்டு இல்லைனு சொல்லிடுவியானா… அதெல்லாம் புடிச்சுருவேன் ஏறு மச்சான்”என்ற சுதாகரன் ட்ரைவர் அருகில் அமர்ந்து விட்டான்.

    ஆட்டம் பாட்டம் என்று வண்டி குலுங்கியது.

     அருணுமே சகஜ நிலைக்கு வந்து விட்டான் அவர்கள் போட்ட ஆட்டத்தில். மகிழனுக்கு அத்தனை குதூகலம். இப்படி எல்லாம் இலகுவாய் விளையாடியது இல்லை அவன். அதுவும் தந்தையோடு பயணிக்கும் இந்த நேரம் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொரு சீட்டாய் தாவி தாவி விளையாடினான் மகிழன்.

    அங்குமிங்கும் தாவி வந்தவன் பிரதன்யா இருக்கும் இடத்திற்கு வரவே “பெதர் தூக்கு”என்று சொல்லி கையை நீட்ட அருகில் அமர்ந்து இருந்த அகிலன் ‘போச்சுடா’என்று தலையில் கைவைத்து விட்டான்.

…. தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்