
“ஏய் அம்மாச்சி, எதுக்கு இப்ப என்ன வாய பொத்தி கடத்திட்டு வர்றே?”
“ம்ம்ம் எல்லாம் என் நேரம் தான், என்னைய கட்டின மனுஷன் ஒழுங்கா இருந்திருந்தா, அவர் மூலமா இந்த விஷயத்தை விஸ்வாகிட்ட சொல்லி இருப்பேன். அது தான் இப்ப முடியாதே, அதனால தான் உன் மூலமா அவனுக்கு ஒரு தகவலை சொல்லலாமுன்னு நினைச்சேன்.”
“அடேயப்பா உனக்கு அவனைப் பார்த்து பயமாக்கும்? என்னமோ இவ்வளவு நேரம் நாங்க எல்லாம் இருக்கிறதையே கண்டுக்காம, செஞ்சுவச்ச அத்தனை பதார்த்தத்தையும் அவன் தட்டுலயே கொண்டு போய் கொட்டுனீங்க? இப்ப மட்டும் அவங்கிட்ட நேரடியா பேச முடியாதோ?
அதுக்கு மட்டும் உங்களுக்கு ப்ரோக்கர் தேவைப்படறாங்களா? சரி சரி பேசனும்னு சொல்லிட்டு இப்படி தயங்கி நின்னா என்ன அர்த்தம்? சீக்கிரம் சொல்லுங்க நா என் பொண்டாட்டிய கூட்டிட்டு வீடு போய் சேரனும்.”
“அது… அது…”
“ அட என்ன இப்பத் தான் பேசிப் பழகுற மாதிரி இம்புட்டு தயக்கம். ”
“இல்லடா தம்பி அது… விஷ்வாக்கு இப்ப தான் கல்யாணம் நடந்திருக்கு…”
“அது தான் தெரியுமே, அப்பறம் மேல சொல்லுங்க.”
“ இல்ல…இப்போ நம்ம ஊர்ல திருவிழா வேற நடந்திட்டு இருக்கு.”
இடுப்பில் கை வைத்து முறைத்தவனோ,
“ அட இது எனக்கு தெரியாதே , ஏன்னா நானும் உன் பேரன் விஷ்வா கூட இப்பத் தான் ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கேன் பாரு.”
“ அட என்னை பேச விடேன் டா.”
“ஆமா வந்ததுல இருந்து பேசணும் பேசணும்னு சொல்றயே ஒழிய, அதுங்கற வார்த்தையை தவிர வேற ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்களே. இதோ இப்ப சொன்ன ரெண்டு வாக்கியம் கூட, ஆல்ரெடி எனக்கு தெரிஞ்ச விஷயம் தான், என்ன விஷயமுன்னு மென்னு முழுங்காம ஒழுங்கா சொல்லு அம்மாச்சி.”
“இல்லடா சூர்யா, அவங்க ரெண்டு பேத்துக்கும் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, சின்னஞ்சிறுசுங்க வேற… நம்ம ஊருக்குள்ள திருவிழாவுக்காக கம்பம் நட்டி இருக்காங்க இல்லையா, இந்த வீட்டோட மூத்த மருமகளா நிலா தான், அம்மனோட சீர்வரிசை பொருளை திருவிழா அன்னைக்கு கோவிலுக்கு எடுத்துட்டு வரணும். அப்போ…”
ஏதோ பெரியதாக வரப் போகிறது என்று நினைத்தவன், அதே ராகத்தோடு அப்போ என்று அவரைப் போலவே ராகமாக இழுக்க,
“அப்போ அவங்க கொஞ்ச நாளைக்கு தள்ளி இருக்க வேண்டியதும் அவசியம் தானே? விஷ்வா ஏற்கனவே நம்ம மேல கோவத்துல இருக்கான், இப்படி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த முதல் நாளே, அந்த புள்ளைய பிரிச்சு வச்சா, ஏதாவது தப்பா நினைச்சுப்பானோன்னு பயமா இருக்குடா. அது தான் உன் மூலமா அவன்கிட்ட இந்த செய்தியை சொல்லலாம்னு…”
சூர்யாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது, அவனைப் பத்தி தெரியாம பேசிட்டு இருக்கயே அம்மாச்சி, என்று மனதில் நினைத்துக் கொண்டவன், தனது முன்பு பாவமாக நின்றிருந்த பெரியவரை பார்த்து,
“புரியுது உன் பேரன்கிட்ட இதை பத்தி பேசறது கஷ்டம் தான், ஏன்னா ஆசைப்பட்டு இல்ல கட்டிகிட்டு வந்திருக்கான். ஆனா உனக்காக நானே அவன்கிட்ட எடுத்து சொல்லறேன் போதுமா.”
அதே நேரம் மேனகாவின் மூலம் இதே செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த நிலாவோ, சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
“நிலா, என்னடா இந்த வீட்டுக்கு வந்த மொத நாளே புருஷன்கிட்ட இருந்து பிரிச்சு வைக்கறாங்களேன்னு, எங்களை தப்பா நினைச்சுக்காத ம்மா. இந்த வருஷம் உன் கையால அம்மனுக்கு சீர்வரிசை கொடுக்கனும்னு, நாங்க எல்லோரும் ஆசைப்படறோம். அதனால திருவிழா முடியிறவரைக்கும் கொஞ்சம்…”
அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் தலை குனிந்தபடி இருந்தவள், தேவகியும் சூர்யாவும் உள்ளே வர,
“ம்ம்ம் புரியுது அண்ணி, நான்… பார்த்துக்கறேன்.”
என்றபடி வேகமாக மாடியை நோக்கி சென்றாள். தலை குனிந்தபடியே அவசரமாக மாடி நோக்கிச் செல்லும் நிலாவை கண்ட விஷ்வா, நெற்றியை சுருக்கியபடி தன்னோடு நின்று பேசிக் கொண்டிருப்பவர்களை கண்டு கொள்ளாமல், அவள் பின்னே செல்ல படி ஏறிக் கொண்டிருந்த நிலாவோ, எதிரே வந்த நித்திலாவை தெரியாமல் இடித்து விட்டாள். அதில் அவள் கைகளில் இருந்த கவர் தவறி, கீழே வந்து கொண்டிருந்த விஷ்வாவின் மீது விழுந்தது.
சாரி என்ற வார்த்தையை கூறி விட்டு நிலா சென்று விட, தனது கைகளில் இருந்த கவரை நித்திலாவிடம் கொடுத்து விட்டு, நிலாவின் பின்னே விரைந்தான் விஷ்வா. மனைவியின் பின்னே ஓடும் அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது நித்திலாவின் விழிகள்.
விஷ்வா தன் அறைக் கதவை திறந்த போது, நிலா பெட்டில் குப்பற விழுந்தபடி படுத்திருக்க, அவள் உடலோ குலுங்கிக் கொண்டிருந்தது தான், அவன் கண்களுக்கு முதலில் விழுந்தது.
“ நி… நிலா ஆர் யூ ஆல்ரைட்.”
என்று அவன் கூறியது தான் தாமதம் சட்டென்று திரும்பியவள், கண்களில் நீர் வரும் அளவிற்கு அவனை பார்த்துப் பார்த்து சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டாள்.
தங்களது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது நித்திலாவின் குடும்பம். வேகமாக தனது அறைக்குள் சென்ற நித்திலாவின் மனதில், விஷ்வா நிலாவின் பின்னே அவசரமாக சென்ற காட்சி தான், மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
தனது கையில் இருந்த கவரை தூர வீசி எறிந்த நித்திலா, வெறிபிடித்தவள் போல அறையில் இருந்த பொருட்களை எல்லாம், தனது ஆத்திரம் தீரும் வரை அடித்து நொறுக்கினாள்.
சத்தம் கேட்டு மேல வந்த அவளது பெற்றோர்கள், அறை இருக்கும் நிலையை கண்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நித்திலாவின் கோபத்தை பற்றி நன்கு அறிந்தபடியால், பத்மா அறையை இழுத்து சாத்திவிட்டு உள்ளே வந்து, அவளது தோளை தொட்டவர்,
“என்ன பாப்பா பண்ணிட்டு இருக்க? வெளி ஆளுங்க யாராவது பார்த்தா என்ன ஆகறது?”
அவரது கையை தட்டி விட்டவளோ எழுந்து நடந்த படியே,
“பார்த்தா பார்க்கட்டும் ம்மா… என்னால முடியல… நீங்க பார்த்தீங்கல்ல அவ பின்னாடி இவர் எப்படி ஓடுனாருன்னு, இதுல அவ தான் பாண்டியன் குடும்பம் சார்பா, அம்மன் சீரை எடுத்துட்டு போக போறாளாம்.
இதுக்கா நான் அத்தனை ப்ளான் பண்ணினேன்? இதுக்காகவா இவ்வளவு நாள் நான் காத்திருந்தேன்? என்னால தாங்கிக்கவே முடியல.”
“ ஷ்ஷ் பாப்பா, அமைதியா இரு மொத, கவலைப்படாத அதை நடக்க விடாம பண்ணிடலாம்.”
“நீங்க யாரும் என்கிட்ட பேசாதீங்க, நான் தான் அந்த வீட்டோட மருமக, நான் தான் அந்த சீரை எல்லாம் வருஷா வருஷம் செய்யப் போறேன்னு, எனக்கு சொல்லி சொல்லியே என் மனசுல ஆசையை வளர்த்தின அந்த ஆள், இப்போ என் முன்னாடி வரணும்.
அவங்க தானே இந்த ஆட்டத்தை ஆரம்பிச்சு வைச்சது, அவங்களுக்காக தானே இத்தனை திட்டம் போட்டேன். போங்க அவங்களை இங்க வரச் சொல்லுங்க, என்னோட இந்த நிலைமைக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்.”
“பாப்பா அவசரப்படாத கோபத்துல உன் நிதானத்தை இழந்துட்டயா என்ன?”
“என்னால முடியல ப்பா… என்ன தான் இந்த பாண்டியன் குடும்பத்தோட மருமகளா இருக்கணுங்கறதுக்காக , உங்க தங்கச்சி பையனை கட்டிக்க நான் ஒத்துக்கிட்டாலும், ஏனோ எனக்கு விஷ்வா மாமாவை தான் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
அவர் அவ பின்னாடி போறதை பார்த்தா, என் நெஞ்செல்லாம்…என் நெஞ்செல்லாம் அப்படி எரியுதும்மா,
அவளை ஏதாவது பண்ணனும், இல்ல நானே என் கையால அவளை கொல்லனும். இப்பவே போய் கொல்லனும்.”
என்று ஆத்திரத்தோட எழுந்தவளை, இழுத்து கட்டிலில் அமர வைத்தார் அவளது தந்தை வீரா.
“நீ கவலைப்படாத பாப்பா, அவ இந்த வருஷம் அந்த சீரை கோயிலுக்கு எடுத்துட்டு போக மாட்டா, ஒன்னு அவ கை,கால்களை உடைக்கறேன். இல்ல ஆளையே முடிக்கிறேன். அப்பாவை நம்புடா எனக்கு என் பொண்ணோட சந்தோஷம் தான் ரொம்ப முக்கியம், அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவேன்.”
சோபாவில் அமர்ந்தபடி லேப்டாப்பில் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, அடிக்கடி தனது அறை வாசலை நோக்கியபடியே வேலை செய்து கொண்டிருந்தான்.
வெகு நேரமாக சிரித்தபடியே இருந்த நிலா, சற்று நேரத்திற்கு முன்பு தான் இவனது முறைப்பில், ஜெர்க்காகி பக்கத்து அறையில் இருந்த சிவகாமியை காண சென்றிருந்தாள்.
அப்போது உள்ளே வந்த சூர்யா விஷயத்தை சொல்லி விட்டு, அவனிடம் முறைப்போடு பல மண்டகப்படியையும் வாங்கி விட்டுச் செல்ல, உச்சபட்ச கோவத்தில் அவளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறான் விஷ்வா.
விஷ்வாவிடம் இருந்து தப்பிக்க சிவகாமியின் அறைக்குள், துள்ளிக் கொண்டு நுழைந்த நிலாவின் கைகளை பிடித்து, அவசரமாக உள்ளே தள்ளிய செல்லம்மா அறையை தாழிட்டார்.
அவரது செய்கை புரியாது விழித்தாள் நிலா.
“என்ன ம்மா உங்க தும்பி… என்னை இந்த ரூம்குள்ள அடைச்சு வைக்க சொன்னாரா என்ன? வாய்ப்பில்லையே, எனக்கு பயந்து அவர் வேணுமுன்னா வந்து ஒழிஞ்சுப்பாரு.”
“சின்னம்மா அது…”
“ம்மா நான் உங்க கிட்ட ஆல்ரெடி சொல்லி இருக்கேன்ல என் பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு, இனியும் நீங்க இப்படியே செஞ்சா, இனி நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் போங்க.”
நிலாவின் கைகளில் அகல்யா மற்றும் சரவணனின் போட்டோவை கொடுத்தவர், அவளிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறத் தொடங்கினார்.
“தம்பியோட துணியை அயர்ன் பண்ணறதுக்காக இங்க எடுத்துட்டு வந்தேன் நிலாம்மா, அப்ப தான் இந்த கவர் கீழே விழுந்தது. எடுத்து பார்த்தா இந்த போட்டோஸ்.
அப்பறம் திடீர்னு வெளியே ஏதோ சத்தம் கேட்டுது, போய் பார்த்த பத்மாவும் அவங்க பொண்ணும் உங்க ரூம்க்குள்ள போனாங்க. கொஞ்ச நேரத்துல பத்மா வெளியே நின்னு சுத்தி முத்தி பார்க்க தொடங்கினாங்க, அவங்க பொண்ணு நித்திலா உள்ள எதையோ தேடி உருட்டிக்கிட்டு இருந்தா.
எனக்கு இந்த கவரைத் தான் தேடறாங்களோன்னு சந்தேகம், ஒரு போட்டோ தவிர மத்ததை அதுக்குள்ள வச்சு, சில துணிகளுக்கு இடையில இந்த கவர் வெளியே தெரியிறது போல, உங்க ரூம்க்கு எடுத்துட்டு போனேன். ஏதோ புலம்பிட்டு இருந்த பத்மா, என்னை பார்த்ததும் அமைதி ஆகிட்டாங்க.
நான் அவங்ககிட்ட இங்க நின்னு என்ன பண்ணுறீங்கன்னு விசாரிக்கவும், சிவகாமி அம்மாவை பார்க்க வந்ததா சொன்னாங்க. ஆனா அந்த பொண்ணு நித்திலா கவரை பார்த்ததையும் அவங்க அம்மாகிட்ட ஜாடை காட்டினதையும், அவங்களுக்கு தெரியாம நான் கவனிச்சுகிட்டு தான் இருந்தேன்.
நினைச்சது போலவே ஒரு மயக்க டிராமா போட்டு, அந்த கவரை எனக்கு தெரிய கூடாதுன்னு மறைச்சு எடுத்துட்டுப் போயிட்டாங்க. எனக்கு ஏனோ அவங்க மேல சந்தேகமாக இருக்கு நிலாம்மா.”
அவர் கூறியதை கேட்டு அப்படியே சோபாவில் அமர்ந்த நிலா, கண்கள் முடியபடியே யோசனைக்குள் மூழ்கினாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ பல்ப் வாங்கிட்டேனா🤣🤣🤣 காமெடி சீன் தான் .. ஆனா சூழ்நிலை வேற .. திருவிழா விஷயத்தை நான் யோசிக்கல .. நிலா விஷ்வாவை வச்சு காமெடி பண்றியா .. உனக்கு இருக்கு ..
🤣🤣🤣🤣