Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 24

 

(I)

 

அவ்வளவு நிதானம் அவனில்.அத்தனை மென்மை அவனின் வார்த்தைகளில்.ஒரு காதலால் அவனில் தான் எத்தனை மாற்றங்கள்..?

 

மாறிடும் காலத்துடன்,மாறாத இயல்புகளும்,ஊறிடும் காதல் ஊற்றின் முன் திரிபடைந்து போவது அழகல்லவா..?

அந்த அழகை அழகியலுடன் கோர்த்து,அழகாய் பிரதி பலித்துக் கொண்டிருந்தான்,பையன்.

 

பேசி விட்ட,பையன் எழுந்து சென்று விட,அவனின் முதுகை வெறித்த அதிதியின் விரல்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டன.

 

“மொத்தமா மாறிட்டான்ல..” சத்யா புன்னகையுடன் வினவிட,கண்ணீருடன் தலையாட்டினாள்,அவள்.

 

“இதுக்கு முன்னாடி எல்லாம் அவன் கூட பேசுனா அமைதியா இருப்பான்..திட்டவெல்லாம் மாட்டான்..நா கூட கோவத்துல தான் அப்டி அமைதியா இருக்கான்னு நெனச்சிகிட்டு இருந்தா இவன் இப்டி மாறி போய் நிக்கறான்..” உடைந்த குரலில் தான் சொன்னாள்,அவள்.அவனின் மறுப்பை இன்னும் மனம் முழுதாய் ஏற்கவில்லை.

 

“என்னாலயும் நம்ப முடில..அவன் அந்த பொண்ண லவ் பண்றது தெர்யும்..பட் இவ்ளோ டீப்பா இவ்ளோ தூரம் அவன் விழுந்து இருக்கான்னு இப்போ தான் புரியுது..”

 

“திடீர்னு இப்டி எவ்ளோ லவ் ஆச்சு..?” கேட்டவளின் வார்த்தைகளில் கொஞ்சம் ஆற்றாமை.அது தோழனுக்கும் புரிந்தது.

 

“தெரில..ஆனா அவன் கேரக்டரே அது தான்..யார் மேலவும் பட்டுன்னு பாசம் வக்க மாட்டான்..அவ்ளோ சீக்ரம் அவனுக்கு யாரயும் புடிச்சு போகாது..ஆனா புடிச்சு போய் பாசம் வச்சா அவ்ளோ தான்..அப்டி இருக்கும்..”

 

“…………………”

 

“நா ஒன்னு சொல்லட்டா அதிதி..?”

 

“…………………”

 

“உனக்கு அவன் தான்னா இந்நேரம் கண்டிப்பா அவனுக்கு உன் மேல லவ் வந்து இருக்கும்..ஆனா இப்போ அது நடக்கல..முக்கியமா அவன் உன்ன கண்டுக்குறதே இல்ல..இப்டி உன்ன கண்டுக்காத ஒருத்தனுக்காக உன் லைஃப வேஸ்ட் பண்ணாத..உனக்குன்னு ஒருத்தர் கண்டிப்பா வருவாரு..அப்போ இந்த கண்ணீர் வலி எல்லாம் காணாம போய்டும்..”

 

“ம்ம்ம்ம்ம்..” என்றவளின் வார்த்தைகளில் வலியிருக்க,அதற்கு மேல் பேசி அவளை சங்கடப்படுத்தாமல்,சத்யாவும் எழுந்து சென்று விட்டிருந்தான்.

 

கண்ணீர் விழிகளை நிரப்பிட,அப்படியே தலை வைத்து படுத்தவளுக்கு மனதில் வலி தான்.ஆனால்,இதுவும் கடந்து போகும் என்று நம்பினாள்.காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும் என்கின்ற நம்பிக்கை,மனதில்.

 

உரைக்கப்படா நேசங்கள் எல்லாம் உயிர்ப்பெறுவதில்லை.

உரைக்கப்பட்டாலும்,சில நேசங்களுக்கு காலம் உயிர்த் தருவதுமில்லை.

 

கசப்பாயினும்,அது தான் நிஜமும்.ஏன் நிதர்சனமும் கூட!

 

அப்படியே நாட்கள் நகர்ந்தன.

 

கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்து கொண்டிருந்தாள்,அதிதி.அவனுக்கு தன் மீது விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை தொந்தரவு செய்தாலும்,அவனுக்கு இன்னொருத்தி மீது விருப்பம் இருக்கையில் அவன் மேல் தன் விருப்பத்தை திணித்திடும் ரகமில்லை,அவள்.

 

“கண்டிப்பா நா இனி உன் பின்னாடி சுத்த மாட்டேன் ஆர்யா..ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமே..” அவளே அவனிடம் பேச,மறுப்பாய் தலையசைத்து சிறு புன்னகை உதிர்த்து இருந்தான்,பையன்.

 

“எனக்கு உங்க மேல எந்த ஃபீலும் இல்ல..ஆனா உங்களுக்கு என் மேல ஏற்கனவே ஃபீல் இருந்து இருக்குல..நா உங்க கூட பழகி காணாம போயிருக்குறத திரும்பவும் கொண்டு வர விரும்பல..எப்பவும் போலவே இருப்போம்..கண்டிப்பா உங்களுக்குன்னு ஒருத்தர் வந்தப்றம் நாம நார்மலா பேசலாம்..” தெளிவாய் யோசித்து பதில் சொன்னவனை வியந்து பார்த்தாள்,அவள்.

 

அவன் இத்தனை தூரம் யோசித்திடக் கூடும் என்று அவள் நினைத்திடவேயில்லை.யாழவள் கொடுத்து வைத்தவள்,என்றே தோன்றிற்று.

 

சில நாட்கள் நகர்ந்து இருந்தன.

 

அன்று கல்லூரியின் ஆண்டு விழா.வெகு விமரிசையாக கொண்டாடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க கல்லூரி வளாகமே களை கட்டியிருந்தது.

 

இங்கோ,விழா மண்டபத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு இருந்தவனோ,அவளைத் தான் தேடிக் கொண்டிருந்தான்.

 

என்று தன் காதல் அவனுக்கு புரிந்ததோ,அன்றில் இருந்து அவளுக்கு தெரியாமல் இரு தடவையேனும் அவள் விம்பத்தை விழிகள் உரசுவது வாடிக்கையாய் இருந்தது.

 

ஆம்,

அதுவும் அவளுக்குத் தெரியாமல் தான்.அவளைப் பற்றி முற்று முழுதாய் புரிந்து வைத்திருப்பவனோ,அவளிடம் தன் காதலைச் சொல்லி அவள் மனதை கலைத்திட விரும்பவில்லை.

 

சொல்லாத மௌனமான காதல் அவனது.அவனை ஆட்படுத்தி ஆழத்தை அழகாய் கொன்று கொண்டிருந்தது.

 

வேல்முருகனிடமும் மறைக்காமல் அவன் ஒப்புக் கொண்டிருக்க,அவருக்கு பெருத்த நிம்மதியே.

 

அதுவும்,பிறரின் பார்வையில் சந்தேகம் நுழைந்திடக் கூடாது என்பதில் வெகு கவனமாய் இருந்தான்,பையன்.அவள் யாரினது வாய்க்கும் மெல்லும் பொருளாவதில் சுத்தமாய் விருப்பமில்லை,பையனுக்கு.

 

அது தான்,இந்த மௌனமான நேச அலையும்.

 

இன்று அவளை இன்னும் காணாதிருக்க,அது தான் இந்த தவிப்பு.”எங்க போனா இவ..?” அவளின் தோழியர் உட்பட அனைவரும் சேலை கட்டி வந்திருக்க,அவனுக்கு அவளைக் காண வேண்டும் என மனம் குறுகுறுத்தது.இதுவரை சுடிதாரில் அல்லவா அவளைக் கண்டிருப்பது.

 

வாயிலுக்கு அவனின் பார்வை அடிக்கடி ஓடுவது கண்டு,தோழனுக்கு நமுட்டுச் சிரிப்பு.

 

“லவ் பண்ண மாறுவாங்கன்னு தெர்யும்..ஆனா இப்டி அந்தர் பல்டி அடிப்பாங்கன்னு எனக்கு தெரியாதே..” தோழன் கலாய்த்திட,உறுத்து விழித்தாலும்,மீளவும் விழிகள் வாசலில் தஞ்சமடைந்தன.

 

அதற்குள் ஒருவன் வந்து,பையனை அழைத்திட,திரும்பி அவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவனின் காதில் இரகசியமாக சொன்னான்,சத்யா.

 

“டேய் தங்கச்சிடா..” அவன் மெதுவாய் கூறிட,இவன் இதயம் எம்பிக் குதித்து,பையனை ஒரு வழி செய்து விட்டது.

 

ஆழ மூச்சிழுத்து அவள் புறம் திரும்பிட,அவளோ அவனை ஏமாற்றி,வழமை போல் சுடிதாரில் வந்திருக்க,பையனின் மனதுக்குள் சிறு ஏமாற்றம்.

 

அதை விழுங்கிக் கொண்டு,அவன் இருக்க,தோழனின் நக்கல் பார்வை பையனைத் தொட்டுத் தொடர்ந்தது.

 

பையனுக்கோ,அவளை அழைத்து,”ஏன் சாரி கட்டல..?” என்று கேட்டு விட வேண்டும் போல இருந்தது.தன் மனம் போகும் போக்கில் அதிர்ந்து முயன்று தன்னை ஈடு கட்டிக் கொண்டிருந்தான்,பையன்.

 

இங்கோ,

 

“நாம மட்டும் சுடிதார்ல வந்திருக்கோம்னு மத்தவங்க திட்டப் போறாங்களோ தெரியல மித்ரா..”

 

“சொல்லு அப்போ..சேல கட்டி விழுந்து பெரண்டு போய் மறுபடி சுடிதாருக்கு மாறி வந்தோம்னு..” சிரிப்பை அடக்கியவாறு மித்ரா உரைத்திட,அவளின் கையில் நறுக்கென கிள்ளி விட்டாள்.

 

“வலிக்குதுடி..” அவள் கையை தடவிக் கொண்டே சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட,அங்கு அலைபேசியை காதில் பொருத்தி பேசிக் கொண்டிருந்த பையனைக் கண்டதும் இதழ்களில் புன்னகை.

 

யாழவளுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை என்றாலும்,தோழியவளுக்கு பையனின் மீதிருந்த சந்தேகம் வலுப்பெற்றிருந்தது.ஓரிரு முறை உண்மையாய் இருந்திடக் கூடும் என்று உறுதியாய் எண்ணியும் இருக்கிறாள்.

 

இப்போதும்,மின்னலென அவன் பார்வை அவளைத் தழுவி இயல்பாக,தோழியவளுக்கு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற உந்துதல் எழுந்தது ஏனென்று தெரியவில்லை.அதற்கு சந்தர்ப்பம் பார்த்திருந்தாள்,அவள்.

 

விழா ஒழுங்குகளை மேற் கொள்ள அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பையனின் மீது மற்றையவர்களின் பார்வை என்றால்,நிச்சயம் பாவையவளின் பார்வை அவனின் மீது இருக்காதே.

 

விழாவும் இனிதே துவங்கிட,மனைவி குழந்தையுடன் உள் நுழைந்த தயாளனின் மீது தான் பாவையவளின் பார்வை.

 

தயாளன்,அந்த கல்லூரியின் பேராசிரியர்.குறிப்பாய் சொன்னால்,மாணாக்கர் அனைவராலும் விரும்பி கொண்டாடப்படும் பேராசிரியர் அவர்.பையனுக்குமே,அவர் மீது அளவு கடந்த மரியாதை உண்டு.

 

பின்னிருக்கையில் அவள் அமர்ந்திருக்க,அவளின் பின்னே வந்து மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு நின்றவனின் செவிகளை கூர்மையுடன் தோழயரின் உரையாலைத் தான் ஆராய்ந்தது.

 

“என்னன்னாலும் தயா சார அடிச்சிக்க ஆள் இல்ல டி..பாரேன் எவ்ளோ பெரிய ஆளு..ஃப்ரொஃப் வேற..ஆனா கொழந்தயோட வாட்டர் பாட்டில ஷோல்டர்ல போட்டுட்டு வர்ராரு..அங்கயே நா கவுந்துட்டேன்..” சிலாகித்து அவள் கூறிட,பையனுக்கு புரையேறிற்று.

 

“கவுந்துட்டேன்னு சொல்றாடா..சாரி சாரி சொல்றாங்கடா..” பையனின் முறைப்பில் மரியாதை வந்தாலும்,அந்த முறைப்பை பொருட்படுத்தாமல் வைத்து செய்தான்,அவனை.

 

“பக்கா ஹஸ்பண்ட் மெட்டீரியல்னா இவர் தான..என்ன மனுஷன் டி..நமக்கு இருக்குற ஈகோ கூட இவருக்கு இல்ல போல..சும்மா ஒவ்வொன்னா பண்ணி நம்ம மனசுல இருக்குற ஆசய எகிற விட்றாரு டி..” அவள் கூற,பையனின் மனமோ அவளை அர்ச்சித்தது.

 

“பசங்கள சைட் அடிக்காம அங்கிள் மார சைட் அடிக்கிறா..” என்றவனின் மீசைக்கடியில் ஒளிந்து திரிந்தது,அழகான புன்னகை.

 

அதுவும் அவளின் பார்வை,தயாளனையும் அவரின் குடும்பத்தையுமே சுற்றி வர,” கண்ணு வக்காம விட மாட்டா போல..”மனம் குமுறவும் செய்தது.

 

இதில்,”என்ன மச்சி பொறாமயா இருக்கா..?” அடிக்கடி சீண்டி அவனின் முறைப்பை பரிசாக வேறு பெற்றுக் கொண்டிருந்தான்,பையன்.

 

அவள் தன்னைப் பார்ப்பதில்லை என்கின்ற ஆதங்கம் அவனுக்குள் இருந்தாலும்,அது வெளிப்படும் சந்தர்ப்பங்கள் அரிது.இன்று,அவளின் பார்வை வெறோருத்தரின் மீது படிவதில்,பையனின் வயிறு கருகியது.

 

தவறேதும் இல்லை,அந்தப் பார்வையில்.இரசனையைத் தாண்டிய பிரமிப்பும் மரியாதையும் மட்டுமே கலந்து இருந்தாலும்,அவனால் சட்டென ஏற்க இயலவில்லை.

 

அவளுக்கு எங்கே தெரியப் போகிறது,பையனின் மனநிலை.பேசிப் பேசி,இன்னும் ஏற்றிக் கொண்டிருந்தாள்,அவனின் சினத்தை.

 

“கமன்ட்ரி கொடுத்து கடுப்பேத்தி நம்ம கிட்ட இருந்து வாங்கி கட்டாம இருக்க மாட்டா போல..” கடுப்பூற அவன் நினைத்திருக்க,அதுமெலலாம் அவன் அகராதியில் அவளுக்கென உண்டான புது அழகியல்கள்.

 

விழா முடிந்து வெளியே வருகையில்,சற்றே உயரமான படிக்கட்டில் ஏற முடியாமல் திணறிய மனைவிக்கு தயாளன் கையை நீட்ட,அதைக் கண்ட பையனின் பார்வையோ,தனக்கு முன்னே நின்று அவர்களையே பார்த்திருந்த யாழவளைத் தான் தழுவிற்று.

 

“ஃபைனல் டச்..பின்னிட்டாரு மனுஷன்..இவர மாதிரி புருஷன எங்க வீட்ல எப்டி தேடி தரப் போறாங்களோ..இப்டி பையன் எல்லாம் இருக்காங்களா இப்போ..?அப்டின்னாலுப் நமக்கு புருஷனா கெடப்பாங்களான்னு பயமா இருக்கே..”அவன் முணகிட,இங்கு பையனை தனை மீறி உரைத்திருந்தான்,நா துருதுருத்திட.

 

“அதான் நா இருக்கேன்ல..எதுக்கு வீணான பயம்..” செவி மோதிய வார்த்தைகளில் பாவையவளின் விழிகள் அதிர்ந்து விரிந்திட,இதழ்கள் பிளந்து சுவாசக் குழலை நிரப்பின.

 

இதயமோ படபடத்து போக,பின்னே திரும்பியவளுக்கு பையனைக் கண்டதும் இன்னும் அதிர்வெழ,பேயறைந்தது போல் பார்த்து வைத்தாள்,அவனை.

 

பேராழி விழிகள் விரிந்து,அவனை மிச்சம் மீதியின்றி கரைத்திடுவது போல் இருக்க,அவள் விழிகளில் அழுத்தமாக அவன் பார்வை மோதி வந்தாலும்,உள்ளுக்குள் இடறி விழுந்து சிதறி நின்றிருந்தான்;விழுந்து கரைந்து தொலைந்து போயிருந்தான்,அவள் விழிகளுக்குள்.

 

“சீனியர்..” மீளா அதிர்வுடன் முணுமுணுத்திட,சீண்டும் எண்ணத்தை கை விட்டிருந்தவனின் அடுத்த செயல்,அவளின் பயத்தை சற்றே தணித்தது.

 

மீசைக்கடியில் தேங்கி நின்றி புன்னகையை ஒளித்து,அலைபேசியில் பேசுவது போல் பாவனை காட்டியவனைக் கண்டிருந்தால்,யாருக்குமே சந்தேகம் வந்து இருக்காது.

 

அது போதாதென்று,எதையும் வெளிப்படுத்தாமல்,அவர்கள் பார்வை தன் மீது படிவதன் அர்த்தம் விளங்காதது போல்,நடித்தான்.

 

“நா இருக்கேன்ல எதுக்கு பயப்பட்ற..?” இல்லாத இணைப்பில் இருப்பது போல் பேசிக் கொண்டு,புருவங்களுடன் இமையுயர்த்தி என்னவென்று அவளிடம் வினவிட,பதட்டத்துடன் மறுப்பாய் தலையசைத்து விட்டு,வேறு புறம் திரும்பி நின்றவளின் படபடப்பு அடங்க சில நிமிடங்கள் பிடித்தது.

 

“ஒரு நிமிஷம் எனக்கு ஜெர்க் ஆயிடுச்சு டி..ஃபோன்ல பேசுறதுன்னாலும் இந்த டைமிங் ஆகாது டா சாமி..”தலையில் அடித்துக் கொண்டவளுக்கு,அந்த நொடியில் உண்டாகிய தடுமாற்றம் அகத்தில் மீதமிருக்கத் தான் செய்தது.

 

மித்ராவுக்கு தான்,அவன் பொய் சொல்லியது போல தோன்றவில்லை.இன்னுமே சந்தேகம் வலுக்க,அதை தீர்த்திடும் மார்க்கம் தேடினாள்,அவள்.

 

இன்னும் படபடப்பு முழுதாய் அடங்காமல் தன் வார்த்தைகளால் தடுமாறி நிற்பவளை,தலை சரித்து கழுத்தை வருடி,சிகை கோதியவாறு பார்த்திருந்த பையனின் விழிகளில் அத்தனை இரசனை.

 

அந்தி சாயும் பொழுது அது.

 

விழா நிறைவுற்ற பின் வளாகத்தை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தி விட்டு,அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

மரத்தடியின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தன் வண்டியில் அமர்ந்து இருந்த பையனோ,அவளின் பாவனை அசை போட்டவாறு இருக்க,இதழோரம் மென் புன்னகை.

 

ஒரு வேகத்தில் உரைத்து அவன் சமாளித்து இருந்தாலும்,அவள் வெகுவாய் திணறிப் போய் இருப்பாள் என்று நினைக்கையில் பாவமாகவும் இருந்தது,ஒரு புறம்.

 

அவனின் நேரம் போலும்.தூரத்தே அவள் செல்வது தெரிந்திட,அவன் விழிகள் மினுமினுத்தாலும்,அடுத்த நொடி ரௌத்திரம் அவன் விழிகளில்.

 

அவள் பின்னூடு சஞ்சய் நடந்து செல்ல,உச்சிக்கு ஏறிய கோபத்துடன் அவர்களை நோக்கி விரைந்தான்,பையன்.

 

மித்ராவோ திரும்பிப் பார்த்தவாறே நடந்து செல்ல,அதற்குள் சஞ்சயை இடை மறித்து,மறைவாய் அழைத்து வந்தவன் விட்ட அறையில்,அவன் விழிகளில் பூச்சி பறந்தது.

 

அவனை மீற விழிகள் அன்று போல் கலங்கிப் போக,கன்னத்தை பொத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு,பையனின் தோரணையைக் கண்டதும் அவனை மீறி பயத்தின் பிரவேசம்,உள்ளத்தில்.

 

விழிகள் சிவந்திட,அத்தனை ஆக்ரோஷம் அவன் வதனத்தில்.

 

“அன்னிக்கி வாங்கனது பத்தாதா..? திரும்ப எதுக்கு அவங்க பின்னாடி போற..? திரும்ப ஹாஸ்பிடல் போகனுமா நீ..?” சட்டைக் காலரை எட்டிப் பிடித்து பையன் வினவிட,அவன் விழிகள் பிதுங்கிற்று.

 

“சத்தியமா இல்லை அண்ணா..அவ கிட்ட மன்னிப்பு கேக்க போனேன்..”

 

“யாரு அவ..? கொன்னுருவேன்..” மிரட்டியவனின் விழிகளில் தீ ஜுவாலை.

 

“சாரி சாரிண்ணா..அவங்க கிட்ட மன்னிப்பு கேக்க போனேன்…” பயத்துடன் மொழிய,அவன் விழிகளில் தெரிந்த அச்சத்தில் கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்தினான்,பையன்.

 

“இங்க பாரு..மன்னிப்பும் தேவல..ஒரு மண்ணும் தேவல..அவங்க உன்ன பாத்தா பயப்பட்றாங்கன்னு தெரியுதில்ல..அப்றம் எதுக்கு மன்னிப்பு கேட்டேன்..மண்ணாங்கட்டின்னு அவங்க பின்னாடி போறேன்..இனிமே அப்டி ஏதாச்சும் நடந்துச்சு தொலச்சி கட்டிருவேன்..” விரல் நீட்டி எச்சரித்தவனோ,பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான்,அவனை.

 

“சரிண்ணா..இனிமே அவ..சாரி சாரிண்ணா திரும்ப அடிக்காதீங்க.

அவங்க அண்ணி இருக்குற பக்கமே போக மாட்டேன்..”அவன் கெஞ்சாத குறையாய் மன்னிப்பு வேண்ட,அவனை மிரட்டியே அனுப்பி வைத்தான்,பையன்.

 

யாருமில்லாததால் இருவரின் உரையாடலும் யாருக்கும் தெரிந்து இருக்காது என்று எண்ணியிருக்க,இத்தனை நேரம் இருவரையும் மறைந்திருந்து பார்த்திருந்த,மித்ராவின் கரமோ நெஞ்சில் பதிந்திருந்தது.

 

“அப்போ கன்ஃபார்மா லவ்வா..?” அப்படி ஒரு அதிர்வு அவளுக்கு.அதுவும் பையனிடம் இருந்து இதை எதிர்ப்பார்த்தே இருக்கவில்லை,அவள்.

 

சஞ்சய் அடிவாங்கியது தெரிந்தாலும்,அதை யாழவளின் குடும்பத்தில் யாரேனும் செய்திருக்க கூடும் என எண்ணியிருந்தவளுக்கு,பிண்ணனியில் இருப்பது பையன் என்பது புரிய மயக்கம் வராத குறை தான்.

 

இதை தோழியிடம் சொன்னாள் அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள் நினைக்கவே முடியவில்லை.நிச்சயம் அழுது தீர்ப்பாள் என்று உணர்ந்தவளுக்கு,இந்த விடயத்தை யாழவளிடம் உரைத்திட என்கின்ற கேள்வியே தலையை பிய்க்க வைத்தது.

 

எப்படியேனும் தோழியிடம் உரைத்திட வேண்டும் என திண்ணமாய் நினைத்துக் கொண்டாள்,தோழியவள்.

 

●●●●●●●●

 

(II)

 

ஆர்னவ்வின் விழிகள் அசையவில்லை,கொத்தாய் குவிந்து கிடந்த ஜிமிக்கிகளில் இருந்து.

 

எத்தனை வாங்கியிருப்பானோ என கணக்கிட மனம் உந்தினாலும்,அவன் காதலை நினைத்து சிறு பிரமிப்பும்.

 

“அவ வாழ்க்கைல இனி அவன் இல்லன்னு அவன் முடிவெடுத்துட்டான்..ஆனாலும் அவள லவ் பண்றான் இன்னுமும்..” வலியுடன் உதிர்த்த வார்த்தைகள் எத்தனை சத்தியமான உண்மை என்று அப்பொழுது தான் புரிந்தது,அவனுக்கு.

 

யோசனையுடன் அவற்றை பார்த்திருக்கையிலே,அலைபேசி ஒலித்திட,திரையில் மிளிர்ந்த அவனின் எண்ணைக் கண்டதும்,பரபரவென கோப்பைத் தேடி எடுத்துக் கொண்டு ஓடியிருந்தான்,வெளியே.

 

இருள் சூழத் துவங்கி இருந்த நேரம் அது.இன்னும் நான்கு மணி நேரங்களில் அவனின் ஊரின் அடைந்து விடலாம் என்கின்ற எண்ணமே,அவளுக்குள் அத்தனை மகிழ்வை தந்திருக்க,விழிகள் மின்ன அமர்ந்து இருந்தவளின் செயலில் மனம் அடித்துக் கொண்டது,அகல்யாவுக்கு.

 

யாரிடம் கேட்டிட என புரியாமல் தவித்தவளுக்கு,யோசித்து யோசித்து தலை வராத குறை தான்.

 

வாசுவோ,சிறிது நேரம் ஓய்வெடுப்பதாய் கூற,டாக்டருக்கும் உடனே வண்டியோட்டை களைப்பாய் இருக்கவே,ஓரம் கட்டியிருந்தனர்,வண்டியை.

 

டாக்டர் இறங்கிக் கொள்ள,அவனின் பின்னூடு இறங்கி வந்திருந்தாள்,தமக்கையும்.

 

“என்னக்கா..?”

 

“உங்க ரெண்டு பேருக்கும் நெஜமாலுமே இந்த கல்யாணத்துல இஷ்டம் தானா..?” அனல் பறக்க அவள் கேட்க,பதில் சொல்லத் தவறி தடுமாறி நின்றான்,டாக்டர்.

 

காதல் தேடும்.

 

2025.04.25

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஒரே சஸ்பென்ஸா தான் கதை போகுது ..