
வானவில்-07
“என்ன மேடம் யோசனை எந்த கோட்டையைப் பிடிக்க போறீங்க?” என்றபடி யுகாதித்தன் அங்கே வரவும் திரும்பிப் பார்த்தாள் தேஜஸ்வினி.
” ப்ப்ச் எதுவும் இல்லை” என்று எழுந்து செல்லப் போனவளை தடுத்தவன்,” நீ ஏன் கண்டதையும் யோசிக்கிற தேஜா. ரிலாக்ஸ்டா இரு திருவிழா பார்க்க தானே வந்த, அதை என்ஜாய் பண்ணு பழசை எல்லாம் நினைக்காதே” என்றான் ஆறுதலாக
அதற்குள் அங்கே வந்த அருண்,” அவ எப்படி நினைக்காமல் இருப்பா யுகா…?” என்று கேட்க யுகாதித்தன் புருவத்தை சுருக்கியபடி,”ஏன் என்ன ஆச்சு?” என்று கேட்க
“அந்த பிரகாஷ பாத்துட்டு வந்தா, அதான் இப்படி இருக்கா” என்றான் தேஜஸ்வினியை பார்த்தபடி
யுகாதித்தனுக்கு கோபம் வந்தது,” என்ன பழைய நினைப்பா?” என்று கேட்கவும்
ஆத்திரமாய் அவனைப் பார்த்த தேஜா,” உன்கிட்ட நான் சொன்னேனா நான் பழசை நினைக்கிறேன் னு” என்று கத்தினாள் .
“இப்ப ஏன் கத்துற? கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்ல தெரியாதா?” என்று அவனும் கோபப்பட
“ரெண்டு பேரும் எதுக்குடா இப்படி கத்துறீங்க? டேய் நீ என்னடா, அவளேப் பாவம், அந்த பிரகாஷுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு, அதை பார்த்து தான் அப்செட்டா நிக்கிறா” என்று அருண் விளக்கம் கொடுக்கவும் அமைதியானான் யுகாதித்தன்.
” எப்போடா பார்த்தீங்க ?”என்று கேட்கவும் தேஜா அங்கிருந்து சென்று விட்டாள்.
‘பாரு திமிர் பிடிச்சது, எப்படி போகுதுனு…’ என்று முனகியவன் அருணைப் பார்க்க
” இன்னைக்குத் தான் அவனும் ஊருக்குள்ள வந்திருப்பான் போல” என்ற அருண் ,”அவன் திருப்பூருக்கு போய் ஒரு வருஷத்திலேயே கல்யாணம் பண்ணிட்டாண்டா, ரெண்டு குழந்தைகளும் இருக்கு. அவனை எல்லாம் எதுவும் சொல்லாமல் ஊருக்குள்ள விட்டு இருக்கானுக. தூது போனது குத்தம் னு என்னை குத்தறதுக்கு வர்றானுக” என்று அவனிடம் புலம்பி விட்டு,” இவ அவனை நினைச்சுட்டு இருந்திருப்பா போல, அழுதுட்டே அவன் போற பாதையை பார்த்துட்டு இருந்தா, நான் தான் மிரட்டி கூட்டிட்டு வந்தேன்” என்றான்.
“ஓஓஓ” என்றவன், வேறு எதுவும் பேசாமல் நின்றிட,
தேஜா அங்கிருந்து சென்று பம்பு செட்டு அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள்.
யுகாவோ அவள் நின்ற திசையைப் பார்த்தபடி,”ஏழு வருஷம் கழிச்சு இப்ப ஏண்டா மாஞ்சு மாஞ்சு அழறா இவ?” என்று கடுப்பாய் கேட்டவன் அவளருகில் சென்றான்.
“ஏ பைத்தியம் ! எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க? இன்னுமா அவன நினைச்சுட்டு இருக்க ?”என்று கிண்டலாய் கேட்கவும்
அவனை உறுத்து விழித்தவள்,” நான் சொன்னேனா அவனை நினைச்சுட்டு இருக்கேன்னு “என்று எரிந்து விழுந்தாள்.
“அப்புறம் எதுக்கு இந்த அழுகை?” என்று இன்னுமே அவன் கிண்டலை விடவில்லை.
“இல்ல நான் தான் கிறுக்குத்தனமா அவன் எனக்காக காத்திருப்பானோனு ஓவர் இமேஜினேஷன் பண்ணிட்டேன்.அவனை அப்படி ஃபேமிலியா பார்க்கவும் அழுகை வந்திடுச்சு வேற எதுவும் இல்லை நவ் ஐம் ஓகே” என்று விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.
“லீவ் இட் கேர்ள். இதுக்கெல்லாம் ஃபீல் ஆகக் கூடாது” என்று கூறவும்,” அதெல்லாம் இல்லை” என்று சமாளித்தாள்.
“அப்புறம் எதுக்கு அழுதியாம்?” என்று கிண்டலடிக்க
“அருண் இவரை பேசாம இருக்க சொல்லுங்க. இல்லை கடுப்பாகிடுவேன்” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.
“பேசாமல் தான் இரேன்டா “என்று அருண் சொல்லியபடி நிற்க
அதற்குள் இளவட்டங்கள் எல்லாம் அங்கே வந்து விட தேஜா தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இயல்பானாள்.
“அக்கா ஏன் இங்கே நிற்கிற?” என்று ப்ரதன்யா வரவும்,” உங்கக்காவுக்கு வேண்டுதலாம் ப்ரதர்” என்றான் அருண் கிண்டலாக.
“என் பேரு ப்ரதன்யா.. வாயில் வந்ததை சொன்னீங்க அவ்வளவு தான்” என்று எச்சரிக்க அருணுக்கு அத்தனை சிரிப்பு.
“பரவாயில்லையே ப்ரதர் இன்னும் அதை ஞாபகம் வச்சிருக்கியா?” என்றதும் மூக்கைச் சுரித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ப்ரதன்யா சிறுமியாக இருக்கும் போது அருண் அவளின் பெயரைக் கேட்க, அவளும் நல்ல பிள்ளையாக பெயரைக் கூறினாள்.
“ஆமா இதென்ன பேர் ப்ரதர் சிஸ்டர் னு. ஒரு பேரு ஒழுங்கா வைக்க மாட்டாங்க.ராக்காயி காத்தாயி சோலையம்மா முனியம்மா இந்த மாதிரி” அவன் அப்போதே கிண்டல் செய்திருக்க சிறுமியாக இருந்தாலும் அவன் கிண்டலில் அவனை எதிர்த்து நின்றாள்.
“இங்கே பாருங்க அண்ணா…!”
“அண்ணாவா அடிங்…” என்று கையை ஓங்கியவன்,”நான் உனக்கு மாமா முறை ஆகுது ஒழுங்கா மாமா சொல்லு இல்லை மச்சான், ஐய்த்தான் அது மாதிரி கூப்பிடு “என்று மிரட்டினான்.
“அய்யே பெரிய மாமா மச்சான் ஆளைப் பாரு கரும்பு தட்டைக்கு சட்டை போட்ட மாதிரி” என்றவள்,” என்னை அப்படி எல்லாம் கிண்டல் பண்ணீங்க எங்கப்பா கிட்ட சொல்லி வச்சிருவேன்.என் பேர் ப்ரதன்யா எங்க வீட்டுல என்னை பிரதி தன்யா தனு தான் சொல்வாங்க ஒழுங்கா அது போல கூப்பிடுறதுனா கூப்பிடுங்க. இல்லை நீங்க எதுவும் பேச வேண்டாம். ஆமா இவ்வளவு பேசுறீங்க தானே உங்க பேரு என்ன?” என்றாள் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை அண்ணார்ந்து பார்த்தபடி.
அவள் அண்ணார்ந்து பார்த்ததில் இரட்டை குதிரைவாலும் ஆட, அருணுக்கு சிரிப்பு பொங்கியது அவளைப் பார்க்கப் பார்க்க
சிரிப்பை அடக்கிக் கொண்டவன்,” அருண்.அருண் பிரசாத் ஆனா நீ என்ன மாமா தான் சொல்ற “என்றான் வம்பாக.
“அருண் பிரசாத்தா..?” என்று உதடை பிதுக்கி குவித்தவள்,” அறுவை பிரசாத்னு வச்சிருக்கலாம் அட்டு பிரசாத்னு வச்சிருக்கலாம்” என்று கிண்டலடித்து விட்டு ஓடியேப் போனாள்.
“ஓய் வாண்டு வந்தேன்னு வையி” என்று அவன் சத்தமிட தூரத்தில் நின்று ஒழுங்கு காட்டி விட்டுச் சென்றாள் ப்ரதன்யா.
‘சரியான அராத்து’ என்று சிரித்துக் கொண்டவன், அதிலிருந்து ப்ரதன்யா ஊருக்கு வரும் போதெல்லாம் அவளை வம்பிழுக்காமல் செல்வதில்லை. அவன் வம்பு செய்வதாலேயே அவனை முறைத்துக் கொண்டு அலைகிறாள் ப்ரதன்யா.
“ஹோய்! என்ன முகத்தை திருப்பற… இங்கே இங்கே பாரு” என்று சொடக்கிடவும்
“சொல்லுங்க அங்கிள்…”என்று ராகம் பாடிட மற்றவர்கள் சிரித்து விட்டனர்.
“என்னைப் பார்த்தா அங்கிள் மாதிரி தெரியுதா உனக்கு?” என்று எகிறவும்
“கல்யாணம் ஆகி பிள்ளையே இருக்கு அங்கிள்னு கூப்பிடாம உங்களை என்ன தாத்தா சொல்லணுமா?” என்று நக்கலடித்தாள் ப்ரதன்யாவும் விடாமல்.
“சரி பரவாயில்லை கூப்பிடு அப்பத்தா “என்று அவனும் பதிலுக்கு வார தேஜா மெலிதாய் சிரித்தாள்.
பேச்சும் கிண்டலும் கேலியுமாக பொழுது சிறப்பாக போனது அனைவருக்கும்.
“எம்புட்டு நேரம் கூத்தடிப்பீய கஞ்சி குடிக்கிற எண்ணமிருக்கா இல்லையா?” என்று தேஜாவின் பெரியம்மா வந்து அதட்டவும்,” வர்றோம் வர்றோம் !!”என்று கலைந்தனர்.
“ஹேய்…இங்கன எல்லாம் கொண்டு வந்து சாப்டுட்டு பேசலாம்டா… மாமா என்ன சொல்றீங்க சுதாண்ணே நீங்க சொல்லுங்க” என்று அகில் ஆலோசனை கூறி,ஆதரவு திரட்டினான்.
“டன் டா தம்பி,இந்தா பட்டறைய போடுவோம்” என்று பேசியபடி உணவு பாத்திரங்களை எல்லாம் ஒரு பெரிய படுதா விரித்து அதில் அடுக்கினர்.
வெள்ளாட்டங்கறியும், வெடைக்கோழி குழம்புமாய் இரவு உணவு மசாலா வாசனையுடன் அரங்கேறியது.
“என்னத்த சொல்லு யுகா…பிச்சிப் போட்டு வைக்கிற நாட்டுக்கோழி வறுவலை அடிச்சுக்க இன்னும் எந்த பார்பெக்கியுவும் பொறப்பெடுக்கலடா. கேஎப்சியாவது ஒன்னாவது” என்று சிலாகித்தபடி அருண் கோழிக்கறியை ருசி பார்த்தான்.
“அதுசரி. அப்புறம் என்னத்துக்கு அங்கேயே தவமா கெடக்கீய…வந்து இங்க வாழ வேண்டியது தானே??” சுதாகரன் வம்பிழுக்க
“இந்தா இப்ப திங்கிறோமே சொகுசா சோறு. அதை மறந்துட வேண்டியது தான்.” என்றபடி உணவை உண்டான் அருண்.
கந்தன் மகனை ஆதூரமாக பார்த்தார்.
“என்ன மாமோய் மவனை அப்புடி பாக்குறீங்க?”என்று பத்மநாபன் அவர் பார்வையைக் கண்டு கேட்க
“எம்புள்ள சிரிச்சு பேசி, கஞ்சி குடிச்சு வருஷக் கணக்கு ஆகுது மச்சான். விடிய விடிய வேலை பார்ப்பான். வாங்கற சம்பளத்தை முழுசா தந்துடுவான். தண்ணி தவிலுனு எதுக்கும் போ மாட்டான். இவன் இல்லன்னா எங்குடும்பமே இல்ல மச்சான்.” என்றார் மனதார.
“என்னாச்சு மாமா கடன் எதுவும் அதிகமா?” என்று கேட்கவும்
“ஒங்களுக்கு தெரியாதுல்ல…” என்றவர் நடந்ததை எடுத்து உரைக்க, பத்மநாபன் பரிதாபமாக அவரைப் பார்த்தார்.
“எம்புள்ளைய இதுக்காவாவது வருஷம் ஒரு தடவை இங்கே அனுப்பி வைக்கணும் மச்சான். மனசு விட்டு சிரிக்கறதைப் பார்க்கவே நிம்மதியா இருக்கு” என்றவர்,” ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா நிம்மதியா போயிடுவேன்” என்றார் பெருமூச்செறிந்து.
“எல்லாம் நல்லதே நடக்கும் மாமா இப்படி அச்சாணியமா பேசாதீக” என்றார் பத்மநாபன்.
************
அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு படம் பார்க்கிறேன் பேர்வழியாக வாசலில் மினி சினிமா தியேட்டரை உருவாக்கி இருந்தனர் பழைய நினைவுகளை விவாதித்து மகிழ்ந்தபடி.
“ம்மா நான் உள்ள போறேன்” என்று எழுந்து கொண்டாள் தேஜஸ்வினி.
“ஏன்டா தூக்கம் வருதா?” என திரிபுரசுந்தரி கேட்கவும்
“இல்லம்மா, மதியம் ஒரு புக் படிச்சேன் அதை பாதியில் விட்டு வந்தேன் போய் கன்டினியூ பண்றேன் “என்றபடி நூலக அறைக்கு போய் விட்டாள்.
ஏற்கனவே அங்கு தான் யுகாதித்தன் அமர்ந்திருந்தான். அதை கவனிக்காமல் அவள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வர முகத்தை புத்தகத்தால் மூடி தலையை மேற்பக்கமாக சாய்த்திருந்தான்.
‘இப்படி தூங்கினா கழுத்தை வலிக்காது’ என்றெண்ணியவள் புத்தகத்தை எடுக்க அவனோ,” லயா, ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ” என்று முனகினான்.
‘லயாவா யார் அது?!’ என்று யோசித்தபடி அவனை உலுக்கி,” ரூமில் போய் தூங்குங்க” என்று எழுப்பி விட்டாள்.
தலையை உலுக்கியவன்,” அப்படியே தூங்கிட்டேனா?” என்று சொல்லியபடி ,”யப்பா கழுத்து வலிக்குது” என்று கழுத்தை நொடித்து முகத்தை சுருக்கினான் வலியில்.
“தைலம் தரவா?” என்று அவள் கேட்டதும்,” எஸ் ப்ளீஸ்” என்றான்.
தைலத்தை கொடுத்தவள்,” தூக்கம் வர தான் படிக்கிறிங்கன்னா பெட்ல உட்கார்ந்து படிக்கலாம்ல்ல?!” என்று யோசனை கூற
“இல்ல தேஜா படம் பார்க்க தான் வந்தேன். அதில் கல்யாண சீன் வரவும் அம்மா உடனே என்னைப் பார்த்து மூக்கை உறிஞ்சாங்க, நான் எஸ்கேப் ஆகி இங்கே வந்துட்டேன். மதியம் சாப்டது வேற ஒரு மாதிரி டம்ப்பா இருந்ததா அதான்”
“ஹ்ம்ம் சரி இதைத் தடவுங்க நான் போறேன்” என்றவள் சில நிமிடங்களில் புதினா கலந்த தேநீருடன் வந்தாள்.
“இது குடிங்க. கொஞ்சம் செரிமானம் ஆகும் பானகம் மாதிரி ஃபீல் ஆகும் பட் நல்லா இருக்கும்” என்றபடி கொடுக்க நன்றி கூறி வாங்கிக் கொண்டான்.
“இப்போ நீ ஓகேவா?” என்று கேட்க
“ஹ்ம்ம் ஓகே தான்” என்றவள் ,”குட் நைட் ஸ்லீப் டைட் “என்று விஷ் செய்தபடி போய்விட்டாள்.
இங்கே பத்மநாபன் அருண் பற்றியும் கந்தன் கூறியதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்.
…. தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
+1

