

KKEN-9
“இன்னொரு நாள், மேடம் இந்தாங்க”
“இது என்ன?”
“திருநெல்வேலி அல்வா மேடம்” என்னோட பிரண்டு திருநெல்வேலி போய் இருந்தான். அவன் கொண்டு வந்ததுல என்னோட ஷேர் உங்களுக்கு.
வாயில் சுவைக்கும் முன்பு தன்னவளின் முகம் கண் முன் வந்து நிற்பது அவனுக்கே புரியாத புதிர்தான்.
“அப்ப நீங்க?”
“நான் நிறைய தடவ சாப்பிட்டுருக்கேன் மேடம். நீங்க சாப்பிடுங்க.”
அல்வாவை சுவைத்தவளுக்கு அல்வாவும் பிடித்திருந்தது. அதை கொடுத்தவனையும் பிடித்திருந்தது.
“அது சரி! அல்வா எதுக்கு குடுப்பாங்கத் தெரியுமா?” நமுட்டு சிரிப்புடன் கேட்க வந்து வார்த்தைகளை இனிப்புடன் சேர்த்து முழுங்கி கொண்டாள். மனம் மட்டும் ஏதேதோ கற்பனைனை செய்ய ஆரம்பித்து விட்டது.
“தேங்க்ஸ் வெற்றி.”
“இதுக்கெல்லாம் எதுக்கு மேடம் ?’
எல்லா விஷயங்களையுமே மிகவும் எளிதாக எடுத்துக் கொண்டான். ஒரு வேளை அவன் பார்த்த விஷயங்கள் மிகப் பெரியதாக இருந்ததினால் கூட அந்த மனப்பக்குவம் வந்திருக்கலாம்.
வழக்கம் போலவே வித்யாவின் கல்லூரி பயணம் வெற்றியுடன் வெற்றிகரமாகவே நடந்து கொண்டிருந்தது. இப்போதெல்லாம் வெற்றியுடன் அவள் ரொம்பவே பேச ஆரம்பித்திருந்தாள். அவனும். மலரிடம் அவன் அப்படித்தான் இருப்பான். காலை எழுந்தது முதல் இரவு வரை அத்தனையும் ஒப்பித்து விடுவான். இடையில் அவள் இல்லாத இடத்தை இவள் போக்கி இருந்தாள் . அவள் கல்லூரி முடிந்தால்? இருவருக்கும் திண்டாட்டம்தான். முன்பெல்லாம் வளவளக்கும் மகள் இப்போதெல்லாம் அத்தனை பேசுவதில்லையே? காயத்ரி கவனிக்க ஆரம்பித்தார். அவரும் இதை எல்லாம் கடந்து வந்தவர்தான்.
முகத்தில் தாடி மழிக்க படாமல் இருக்கும் அண்ணன் இப்போதெல்லாம் துளி கூட தாடி வளரவிடுவதில்லையே? அவன் தங்கைக்கும் ஆச்சர்யம்தான். அது என்ன தினமும் இஸ்திரி போட்ட டிரஸ்? யோசிக்க ஆரம்பித்தாள்.
“என்ன வெற்றி இது? ட்ரெஸ் கசங்கி இருக்கு?”
“துவைச்சதுதான் மேடம்”
“அது சரி இப்டி கசங்கி போன சட்டையை போட்டா யாரு உன்ன மதிப்பா? சவாரிக்கு போகற இடத்துல உன்ன எப்படி பார்ப்பாங்க? அதுதான் ஆரம்பம். அப்போதில் இருந்துதான் அவளை புரிந்து கொண்டான். அவளுக்கு எது புடிக்கும் புடிக்காது தெரிந்து கொண்டான். செர்ரி கேக் புடிக்கும். அடர் நீலம் புடிக்கும். கசங்கிய துணி புடிக்காது. கிழிந்த பர்ஸ் புடிக்காது. இன்னும் நிறைய விஷயங்களை அவன் தெரிந்து கொண்டான். வெற்றிக்கு எது புடிக்கும்? அவனுக்கு இந்த உலகத்தில் பிடித்தது ஒன்றே ஒன்று மட்டும்தான். அது மலர். அவளைத் தவிர அவனுக்கு இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அதை தெரிந்து கொண்டவளுக்கு அந்த லிஸ்டில் அவளும் உண்டு என்பதை அவன் எப்படி வெளிப்படுத்துவான்?
அவளுக்கு பிடித்த அடர் நீலத்தில் புடவை கட்டி வந்திருந்தாள் . நிச்சயம் தேவதைதான்.
“எப்படி இருக்கேன் வெற்றி? நல்லா இருக்கேனா?”
“ட்ரெஸ் சூப்பர் மேடம்”
இவள் முகம் சுருங்கியது. அப்பபோது முதல் வாயே திறக்கவில்லை. அவள் கோபம் அவனுக்கு புரிந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டு வந்தான்.
சிக்கனலில் பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். இரண்டு முழம் வாங்கினான்.
“எனக்கு ஒன்னும் பூ வேணாம்” மூஞ்சியை திருப்பிக் கொண்டாள் .
“நான் வண்டிக்குத்தானே வாங்கினேன்” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
மிளகாவை முழுங்கியது போல இருந்தாள் .
சில நிமிடம் கழித்து வண்டியை ஓரம் கட்டியவன் அவளிடம் பூவை நீட்டினான்.
“உங்களுக்காகத்தான் வாங்கினேன்”
நான்காக மடித்து வைத்துக் கொண்டாள்.
“இப்ப தான் என் ராசாத்தி” முகம் வழித்து திருஷ்டி எடுத்தான்.
“ஏ! என்ன? பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?”
“அசோ! சாரி மேடம் . பாப்பாவை இப்படித்தான் கொஞ்சுவேன். அதே பழக்கத்துல சரி மேடம்”அவன் உலகமே மலரும் பாப்பாவும்தான் அவளுக்கு தெரியும். அதனால் அவன் சொன்னதை அவளால் தவறாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏன் அது அவளுக்கும் பிடித்திருந்தது. இப்போதும் அவள் முகம் சிவந்துதான் இருந்தது. ஆனால் கோபத்தினால் அல்ல.
இன்று கல்லூரி ஆண்டு விழா . சிறப்பு விருந்தினர்? நீங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் நம் ஆணழகன் அதிபன் தான் .
அங்காங்கு இருந்த ஒரு சில நரைத்த முடி கூட அவன் அழகை பேச அங்கே இருந்த பெண்கள் பேசாமலா இருப்பார்கள். ரசித்தான். அத்தனையும் ரசித்தான். அத்தனை பெண்களையும் ரசித்தான். சிலர் சுமாராக இருந்தார்கள். பலர் அழகிகளாகவே இருந்தார்கள். வயதா? இளமையா , மேக்கப்பா ? எதுவாக இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை.
இரு பெண்கள் வந்து தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். வித்யாதான் ஹோஸ்டிங் செய்து கொண்டு இருந்தாள் . ஒவ்வொரு முறையும் அவள் பேசும் போதும் இவன் மனம் காற்றில் மிதந்தது. மற்ற பெண்களை பார்க்கும்போது அவனுக்கு ஆண்மைதான் வெளிப்படும். ஆனால்
இவளை பார்த்த பிறகுதான் அவனுக்கு காதல் வெளிப்பட்டது.
“அம்மா! சும்மா நொய் நொய்னு உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பப்பாரு கல்யாணம் கல்யாணன்னு”
“ஏன்டா! இப்டி சொல்லி சொல்லியே ஒனக்கு இந்த ஜூலை வந்தா முப்பது ஒன்னுடா. என்ன அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கியா?” இயல்பாக அன்னைக்கு வரும் கவலை.
“ஒருத்திய பார்த்தா இவதான் எனக்குன்னு தோணனும்” (அவள் இவளா?)
“ஏன்டா! முதல்ல ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கோ. அப்டி யாரையாச்சும் பார்த்த வச்சுக்கோ. இதெல்லாம் ஒரு விஷயமா?”
சொன்ன தந்தையை முறைத்து விட்டுச் சென்றான்.
“அது நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா?” அந்த பார்வையின் அர்த்தம் அதுதான்.
முதலில் எல்லாம் வித்யா மீது பெரியதாக எண்ணம் இல்லாதவன் பிறகு வந்த நாட்களில் மனதை தொலைக்க ஆரம்பித்தான். நான் சொல்லுவது தி கிரேட் அதிபனை பற்றித்தான். சிலரை பார்க்க பார்க்கத்தான் புடிக்கும் என்பார்களே அது போலத்தான். அதையே தான் இங்கு வித்யாவும் செய்து கொண்டிருக்கிறாள். சிலரை பார்க்க பார்க்கத் தான் புடிக்குமாம். வெற்றியை இவளுக்கு பிடிக்க அதுவா காரணம்?
ஒரு நாள் இவள் வண்டியில் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும்போது ரோடு மிக மோசமாக இருந்தது. நிறைய பள்ளம் மேட்டில் ஏறி இறங்கியதும் இவளுக்கு பீரியட்ஸ் வந்து விட்டது. பர்ஸை துழாவினாள். அது இல்லை. நாட்கள் வந்திருப்பதை மிஸ் செய்து விட்டாள் . அன்னையும் நினைவு படுத்தவில்லை. இப்போது எப்படி? இவள் முகம் வெளிறி இருப்பதை கண்டு கொண்டான்.
“மேடம் ஏதாவது சொல்லனுமா?”
“ம்ம் ” தலையை மட்டுமே ஆட்டினாள்.
இவள் சரியாக உட்கார முடியாமல் தவிப்பதை பார்த்து புரிந்து கொண்டான்.
மருந்தகம் வாயிலில் நிறுத்தியவன் அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து அடுத்து வந்த பெட்ரோல் பங்கில் நிறுத்தினான்.
வெளியில் வந்தவளுக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.
“அவனுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும். எப்படி?” கூச்சமாக இருந்தது.
அவளுக்கு தேவையானதையும் செய்து கல்லூரிக்கும் தாமதமாகாமல் அழைத்து வந்து விட்டானே? பாராட்டாமல் இருக்க முடியவில்லை.பாராட்டினாள் . மனதிற்குள்.
“தேங்க்ஸ்” இறங்கும்போது சொன்னாள் .
“மேடம்! இந்த மாதிரி நாள்ல நல்ல அடர்ந்த நிறமா உடுப்பு போடுங்க”
அவளிடம் இது என்ன உரிமை? அவன் அதை எல்லாம் யோசிக்கவில்லை. அவனுக்கு தன் உடன் பிறந்தவர்களிடம் பேசுவது போலவே உரிமையுடன் பேசினான். அந்த உரிமையின் பெயர் என்ன?
மாலையில் அவளிடம் , அதற்கு மன்னிப்பு கேட்டான்.
“சாரி மேடம், உங்க கிட்ட காலைல கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டேன்”
“இட்ஸ் ஓகே”
அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. அவளுக்கு தன்னிடம் பேசுவது இன்று இயல்பாக இருக்காது என்பதை புரிந்து கொண்டான். இன்று மட்டுமல்ல. இன்னும் சில நாட்கள் அப்படித்தானே இருக்கும்.
அன்று இரவு முழுவதும் வெற்றி தான் அவள் நினைவில் நின்றான். எத்தனையோ ஆண்கள் செய்ய முடியாத சாதனை வித்யாவின் நெஞ்சில் நுழைவது. அதில் வெற்றி, வெற்றி கண்டுவிட்டான். இந்த சம்பவம் ஒரு சிறு காரணம் மட்டுமே. வெற்றி எப்போதுமே தன்னுடைய வீட்டு பெண்களின் நினைவாகவே இருப்பது தான் முக்கிய காரணம்.
“ஏன் வெற்றி! உங்க அக்காவ இப்டியே வச்சுருக்க போறீங்களா? அவங்களுக்கு வேறு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாமில்ல?”
“என்ன மேடம் இப்டி சொல்லிடீங்க? நீங்களே யோசிக்கும்போது நான் யோசிக்க மாட்டேனா?”
“சாரி! நான் எதுவும் தப்பா சொலிட்டேனா ?”
“இல்ல மேடம்! நீங்க எதுவும் தப்பா சொல்லல. ஆனா இந்த ஆம்பிளைங்க தான் ரொம்ப தப்பானவங்க. முதல்ல நல்லவங்க மாதிரி நடந்துகிட்டு அப்புறம் வேற மாதிரி பேசுவாங்க இன்னொருத்தன கல்யாணம் கட்டினதுக்கு அப்புறம் உன்னோட மொத புருஷன் அங்க தொட்டனா இல்ல இங்க தொட்டானான்னு கேட்டா எங்கக்காவால தாங்க முடியாது மேடம். செத்துரும்” அவனையும் அறியாமல் கண்கள் குளம் கட்டியது.
“சாரி!சாரி! வெற்றி. நான் இதை பத்தி எல்லாம் யோசிக்கல.” அவன் கைகளை பிடித்துச் சொன்னாள்.
“பரவால்ல மேடம். ஏதோ அக்கறையினாலதான் சொன்னீங்க”
சட்டை காலரால் கண்களை துடைத்துக் கொண்டான். அவன் கண்களை துடைத்து, தோளில் சாய்த்து கவலை படாதே என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.
“இது என்ன எண்ணம்?” இவளுக்கே தூக்கி வாரி போட்டது.
இது நல்லதா? கெட்டதா ? அவள் மூளையால் யோசிக்க முடியவில்லை. மனம் யோசிக்க வேண்டாம் என்றது. மனம் அவனையே நினைத்திருக்க சொன்னது. அவனை பற்றியே யோசிக்க சொன்னது. அவனுடன் பயணிக்கும்போது,
“அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தாய் அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது”
“சட்டென்று சலனம் வரும்” என்று நிச்சயம் வித்யா நினைக்கவில்லை. “நெஞ்சொடு காதல் வரும்” என்றும் வித்யா நம்பவில்லை. ஆனால் நெஞ்சொடு காதல் வந்தது.
ஞாயிறுகளில் சொல்லவே வேண்டாம். அவனைக் காணாமல் தவித்து போனாள் .
“என் காதலா நீ வா நீ வா” மனம் கூவியது.
“நினைத்தாலே சுகம் தானடா ! நெஞ்சில் உன் முகம் தானடா!”
அவனை ரசித்தாள். மிகவும் ரசித்தாள். அது என்னவோ இப்போதெல்லாம் அவன் அருகாமை வேண்டும் என்பதையும் தாண்டி அவனை தீண்டும் ஆசை வந்திருப்பது? அவளுக்கே ஆச்சர்யம்தான்.
அவனுக்கு என்ன நிறம் பிடிக்கும்? தெரியலையே? மூளையை கசக்கினாள். அநேகமாக அவன் எல்லா நிறத்தையுமே விரும்புவான் தான். இவள் எந்த நிறத்தில் உடுத்திக் கொண்டு வந்தாலும் பாராட்டுவான்.
“அவனுக்கு எப்போது பிறந்தநாள்?” அதுவும் தெரியாது. மக்கு மக்கு மனதில் திட்டிக் கொண்டாள் .
நாளை ஞாயிறு. அவனை எப்படி பார்ப்பது? சனிக்கிழமை அன்று ஷாப்பிங் போனாள் . வேண்டுமென்றே அவன் ஆட்டோவில் ஒரு ஆடைப் பையை விட்டு விட்டு வந்தாள் .
“இந்தாங்க மேடம்” கொண்டு வந்து கொடுத்தவன் காலரை சரி செய்து தலை கலைக்க தோன்றியது. பட்டும் படாமலும் அவன் கை தொட்டு வாங்கினாள் . அடுத்த வாரம் ஞாயிறு? என்ன செய்வது? நகத்தை கடித்து யோசித்தாள் .
“வெற்றி நான் உன்ன காதலிக்கறேண்டா” சொல்லிடலாமா ?
சொல்லி விடுவாளா ? பார்க்கலாம் ..
காதல் வரும்.

