
அத்தியாயம்-10
மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத அந்த மாலை வேளையில் காற்று முகத்தில் சில்லென்று வந்து மோத கடற்கரையை பார்த்தபடி நின்றிருந்தாள் அகநகை.
நீலநிறக் கடலை கண்களை சுழற்றிப் பார்த்தவளுக்கு சில இயந்திரங்களுக்கு நடுவே கடலானது மாலை வெய்யில் பட்டு அழகாய் மின்னியது தெரிந்தது.
சுற்றி ஒரு கடைகள் கூட அங்கில்லாததைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்டவளை இளா இழுத்துக் கொண்டு அலைகளில் கால் நனைக்கச் சென்றாள்.
அன்புக்கரசி மற்றும் வேலன் பெயருக்கு ஒரு முறை தங்கள் கால்களை நனைத்துக் கொண்டு மணல் பரப்பில் அமர்ந்துவிட, “ஏ அகா செம்மயா இருக்குல?” என்றாள் இளா.
தங்கையிடம் இருக்குமளவு உற்சாகம் தன்னிடம் இல்லாதபோதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவள், “இளா.. பெரிய அலையா வருதுடி” என்று அவள் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள்.
“அடப்போ அகா.. அப்பவும் இப்பவும் எப்பவும் உனக்கு அலைனா பயம் தான்” என்று சிரித்த இளநகை செல்வியை முறைத்த அகா,
“என்னடி கொழுப்பா?” என்றாள். இடுப்பில் கை வைத்து வண்ணம் தன்னை முறைக்கும் அகாவைப் பார்த்து இளா சிரித்த நேரம் பெரிய அலை ஒன்று வந்து அவர்களைத் தள்ள,
“ஆத்தாடி..” என்றபடி இருவரும் கீழே விழுந்தனர்.
“ஏ பாத்து” என்று அன்புக்கரசி கத்த, அவர்களிடம் வந்த ஜேன்ஸி இருவரையும் தூக்கிவிட்டது.
“ஏ ஜே நீ வராத. தண்ணி பட்டு எதும் ஆகிடப்போகுது” என்ற அகாவை இளா விசித்திரமாக பார்க்க,
“நான் வாட்டர் ப்ரூஃப் மேம்” என்று கூறி அவளை அதிரவைத்தது.
‘அடேய்.. ஏன்டா சோதிக்குறீங்க’ என்ற நிலையில் தங்கையைப் பார்த்தவள், “ஆமால.. மறந்துட்டேன்” என்று பல்லிளிக்க,
“தண்ணில விழுந்ததுல மூளை கலங்கிருக்கும்டி” என்று கூறி சிரித்தாள்.
‘அடிங்கு..” என்று எழுந்த அகா இளாவைத் துரத்த, அவள் ஓட என நேரம் கலகலப்பாகச் சென்றது.
பின் ஓடியோடி மூச்சு வாங்கிய நிலையில் இருவரும் மணல் பரப்பில் அமர ஜேன்ஸியும் வந்து நின்றது. அதிர்வுகள் பல கொடுத்தாலும் அந்த கடலைச் சுற்றி இருக்கும் சூழலின் விளக்கத்தைக் கேட்க அகாவுக்கு ஆர்வமாகக்தான் இருந்தது.
‘இவள வச்சுட்டு எப்படி கேட்க?’ என்று யோசித்தவள், “ஏ ஜே.. கொஞ்சம் இந்த சுத்தியிருக்குற மிஷின்ஸ் பத்திலாம் டீடெய்ல்ஸ் அன்ட் இப்போதைய நிலவரத்தை சொல்லு கேட்போம். டைம் பாஸ் ஆகும்” என்று சாமர்த்தியமாகப் பேச,
“ஆமா ஜேன்ஸி.. சொல்லு” என்று இளாவும் ஆர்வமானாள்.
அங்கு தூரத்தில் மிதக்கும் இயந்திரம் ஒன்றின் படத்தினை தன் முன் திரைப்படமாக்கிக் காட்டிய ஜே, “இது டைடல் கன்வோர்டார் (tidal convertor) மேம். அதாவது டைடல் எனர்ஜினு சொல்லக்கூடிய அசைவுகள் அல்லது நகர்வுகளால் உருவாகும் ஆற்றலை மின்சாரமா மாற்றும் கருவி இது. இதை கடல் பரப்பில் வைப்பது மூலமா கடல் அலைகளின் அசைவுகளிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும். நீங்க கைனெடிக் எனர்ஜி (kinetic energy) பற்றி படிச்சிருப்பீங்க மேம். ஒரு பொருளோட இயக்கத்திலிருந்து மின்சாரத்தை எடுக்குறது” என்று விளக்கம் கொடுத்தது.
மற்றொரு இயந்திரத்தினைக் காட்டி “இது OTEC (ocean thermal energy convertor). கடலுக்கு மேற்பரப்பிலிருந்து உள்ளே செல்ல செல்ல வெப்பநிலை மாறுபடும். இந்த வெப்பநிலை மாறுபாட்டை வைத்து மின்சாரத்தை உருவாக்குவது தான் இந்த இயந்திரத்தோட வேலை மேம். மேலும் கடலுக்கு அடியில போய் ‘ocean ecosystem’ (கடல் சுற்றுச்சூழல்) சரியா இருக்கான்னு கண்காணிக்க பல மெரைன் ரோபோக்கள் இருக்கு. அதுமட்டுமில்லாம கடலோட ஆழத்தில் வளரக்கூடிய அறியவகை செடிகளைக் கொண்டு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மற்றும் கடல் நுண்ணுயிரிகள் சம்மந்தமான ஆராய்ச்சின்னு நிறைய கருவிகள் இருக்கு” என்று ஜேன்ஸி கூற அதை வியப்போடு கேட்டுக் கொண்டாள்.
“இதனால நிறைய நன்மைகள் இருப்பது போல சில தீமைகளும் உண்டு. இந்த கருவிகளின் இயக்கம் பழுதடையும் நேரம் மின்சாரக் கசிவு ஏற்படும் அபாயம் அதிகம். நம்ம அரசாங்க கணக்குகளில் இந்த கடல் சார்ந்த கருவிகளுக்கான செலவு பட்டியல் தான் எப்போதுமே அதிகமா இருக்கும். இதிலிருந்து வெளியேறும் ஆற்றல் அதை சுற்றி இருக்கும் உயிரினங்களை பாதிக்கவும் செய்யுது. ஆனா The maritime zone of Indian act படி இங்குள்ள உயிரினங்களை பாதுகாக்கவும் ஒரு தனிப் பிரிவு இருக்கு மேம்” என்று ஜேன்ஸி கூற,
‘இது நான் எதிர்ப்பார்த்தது தான்’ என்ற ரீதியில் தலையசைத்தபடி ஒரு பெருமூச்சு விட்டாள்.
“ஏ அகா.. அடுத்த நம்மல்ல யாருக்கும் பேர்த்டே வந்தா நம்ம பீச்ல வச்சே செலிப்ரேட் பண்ணலாம்.. இந்த ஈவினிங் நேரம், அலை சத்தம்னு எல்லாமே நல்லா இருக்குல்ல?” என்று இளா கூற,
கடலை வெறித்தபடி “ம்ம்டி” என்றாள்.
சில நிமிடங்கள் தாய் தந்தையுடனும் அரட்டை அடித்துவிட்டு நால்வரும் வீடு புறப்பட, கண்களை சுருட்டிக் கொண்டு தூக்கம் வந்ததில் பால் மட்டும் குடித்துக் கொண்டு படுத்துவிட்டாள்.
மறுநாள் காலை நேரம் அந்த ‘கேஃபிடேரியா’ என்ற குளம்பிக் கடையில் விஷ்வேஷ்வரனும் அகர்ணனும் அமர்ந்திருந்தனர்.
“சொல்லுங்க மிஸ்டர் அகர்ணன்” என்று விஷ் பேச்சைத் துவங்க,
“நான் எதுக்கு வந்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும் சார்” என்றான்.
“ம்ம்.. புரியுது. அதுக்காகத்தான் உண்மையில் வந்திருக்கீங்கன்னா ப்ளீஸ் ஒரு காஃபியோடு ரெண்டு பேரும் எழுந்து போயிடலாம்” என்று விஷ் கூற,
ஒரு பெருமூச்சு விட்டவன், “சார்.. உங்களுக்கு ப்ரியாவை பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று கூறினான்.
‘தோ பாருடா.. எனக்கும்தான் தெரியும்’ என்று எண்ணிக் கொண்ட விஷ் ஏதும் பேசாது அமைதி காக்க,
“எப்பவோ வந்த ஒரு புரளியை மனசுல வச்சுகிட்டு எதுக்கு சார் இன்னும் உங்க மனசையும் வருத்திக்கிட்டு அவ மனசையும் வருத்தணும்?” என்று அகர் வினவினான்.
அவன் கூறிய காரணம் உண்மையற்றது என்றபோதும் அவனது கேள்வி விஷ்வேஷை சுட்டது.
‘எதுக்கு இந்த நாடகம்?’ என்று அவன் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட நொடி,
“ஒருவேளை நானும் அவளும் கல்யாணம் பண்ணிக்கப்போறதா வந்த செய்திய மனசுல வச்சுகிட்டு இப்படி விலகி இருக்கீங்களா?” என்று அகர் வினவ, அந்த கேள்வியே சகிக்காது அவன் முகம் அஷ்டகோணத்தில் மாறியது.
“இந்த முகமே சொல்லுது சார் நான் கேட்ட கேள்விக் கூட உங்களுக்கு சகிக்கல்லைனு. அப்றம் எதுக்கு இந்த நாடகம்?” என்று அகர் வினவ,
“யாரு சொன்னா நாடகம்னு? எ..எனக்கு நிஜமாவே உன் ஃப்ரண்டு எண்ணத்துல இ..இஷ்டம் இல்லை” என்று தவிப்போடு கூறினான்.
“பொய் சார். அவ பாவம் சார். உங்களை உண்மையா காதலிக்குறா. இந்த காலத்திலும் இப்படியான காதல் கிடைக்க நீங்க கொடுத்து வைக்கணும் சார். ஆனா கை தேடி வருவதை வேண்டாம்னு சொல்றீங்க” என்று அகர் கூற,
“மிஸ்டர் அகர்ணன். என் கோபத்தை ஏத்தாதீங்க. நான் நிஜத்தைதான் சொல்றேன்” என்று கட்டுப்படுத்த முடியாது தன் நெஞ்சை நீவியபடி கூறினான்.
“ப்ச்.. அவளோட உண்மையான காதல் உங்களுக்கு கிடைக்க அவ்வளவு கொடுத்து வைக்கணும். வேணாம்னு சொல்றீங்க. நீங்க அந்த காதலுக்கு சூட் (தகுதி) இல்லை சார். அவ இவ்வளவு துணிந்தும் நீங்க அவ்வளவு புறக்கணிச்சும் உங்களை சுற்றி சுற்றி வரா. அவ்வளவு மென்மையான குணமுடையவ உங்க கடுமைகளை அவ காதலுக்காக தாங்கிக்குறா. ஆனா நீங்க சின்ன விஷயத்துக்காக உங்க காதலை ஒதுக்கி வைக்குறீங்க. இதுவே சொல்லுது உங்க காதலின் அளவையும் அவ காதலோட அளவையும். நிஜமாவே நீங்க இதுக்கு.. இந்த காதலுக்குத் தகுதியில்லை சார்..” என்று அவன் முடிக்கும் முன் அவன் கன்னத்தில் சுளீரென்ற அறை விழுந்தது.
அதில் ஆடவர்கள் இருவர் விழிகளும் அதிர்வில் விரிந்துக் கொள்ள, கண்கள் நாசியெல்லாம் சிவந்து, விழி கலங்கி நின்றிருந்தாள் அமிர்தப்ரியா.
“ப்..ப்ரீ” என்றபடி அவன் எழ,
விரல் நீட்டி பத்திரம் காட்டியவள், “என் ஃப்ரண்டா எனக்கான காதலை அவருக்கு நீ சொல்ல வந்ததை தடுக்கலை.. ஆனா அவரோட காதலை தாழ்மைப்படுத்திப்பேச உனக்கென்னடா ரைட்ஸ் இருக்கு?” என்று கண்ணீர் வடிய கர்ஜித்தாள்.
இப்படி பேசியாவது அவன் வாய் மூலமாக அவனது காதலை கொண்டுவர வேண்டி தான் அகர்ணன் அப்படிப் பேசினானே தவிர, அவ்வாறு விஷ்வேஷை சாடவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கில்லை.
ஆனால் தோழி இவ்விடம் இருப்பாள் என்று எதிர்பாராதவன் தற்போது அவள் முன் ஒரு குற்றவாளியைப் போல் ஆகிப்போனான்.
கண்களில் கண்ணீர் தழும்பியபடி விடைத்து சிவந்திருந்த தன்னவள் முகம் கண்ட விஷ்வேஷுக்கு பேச நா எழவில்லை.
“என்னோட காதலுக்கு அவர் தகுதியில்லைனு நீ எப்படி சொல்லலாம்?” என்று கத்தியவள் சத்தத்தில் சுயம் பெற்ற அகர்ணன்,
“இ..இல்ல ப்ரியா நா..நான்..” என்று தடுமாறினான்.
கண்ணீர் கன்னம் தாண்டி ஓடுவதைக் கூட உணராத விஷ், சட்டென அமிர்தப்ரியாவை இழுத்து அணைத்திட, தற்போது அதிர்வது அவள் முறையானது.
கூடியிருந்த மக்கள், பொது இடம் என்பதெல்லாம் கருத்தில் கொள்ளாது உற்ற தோழனோடு சண்டை பிடித்து நின்றவளுக்கு அவன் அணைத்த நொடி தான் அவையாவும் உரைக்க, என்ன செய்வது என்றே புரியாது போனாள்.
“எ.. எல்லாரும்..” என்று அதற்குமேல பேசமுடியாமல் தவித்தப் பெண்ணைக் கண்டவன்,
“பரவாயில்லை.. இந்த முறையாவது சரியான செய்தி பரவட்டும்” என்று கூறினான்.
தன்னவளின் நேசம் அவன் அறிந்தது தான். ஆனால் உற்ற தோழனை தனக்காக ஒரு பொதுவிடத்தில் கைநீட்டி அடித்து சண்டையிடுமளவு போவாள் என்பதை அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் பேசிது மனதை குளிர்வித்த அதே நேரம் ஒரு தோழனாய் அகர்ணன் வருந்துவானோ என்ற வருத்தமும் எழுந்தது.
இருவரையும் புன்னகையுடன் பார்த்து நின்ற அகர்ணன் குரலை செருமி தன் இறுப்பைக் காட்ட, தன்னவனிடமிருந்து பிரிந்த ப்ரியா, அகர்ணனை வருத்தத்தோடு பார்த்தாள்.
லேசாக சிவந்திருந்த அவன் கன்னம் பார்த்து கலங்கியவள், “சாரி அகர்.. நி..நீ அப்படி பேசவும் ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன்” என்று வருந்த,
“பரவாயில்லை ப்ரீ.. நீ அடிச்சதால தானே சார் மனமிறங்கி வந்திருக்கார்” என்று கூறி சிரித்தவன்,
“சார்.. பார்த்து இருந்துக்கோங்க அடி ஒன்னொன்னும் இடி மாதிரி விழும்” என்று சிரித்தான்.
“சாரி அகர்ணன்.. நீ பேசினப்போ எனக்கு இருந்த கோபத்துக்கு நானே அடிச்சாலும் அடிச்சிருப்பேன். ஆனா அமி உன்னை அடிச்சது கொஞ்சம் வருத்தமா இருக்கு” என்று விஷ் கூற,
“இவ்வளவு காதலிருந்தும் ஏன் சார் அந்த நாடகம்?” என்றான்.
ஒரு பெருமூச்சு விட்ட விஷ், “நாடகம் தான்.. ஆனா நீ சொன்ன காரணங்களுக்காக நடத்திய நாடகமில்லை இது” என்றான்.
“அப்றம்?” என்று தோழர்கள் இருவரும் வினவ, இவர்களிடம் கூறலாமா வேண்டாமா என்று விஷ் மனதோடு பெரும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தான்.
“அது..” என்று ஆடவன் கூற வரும் நேரம் அவன் அலைபேசி ஒலிக்க அழைப்பது ஜான் என்பது தெரிந்ததும் உடனே ஏற்றான்.
பரபரப்புடன் ஜான் பேசியதைக் கேட்டவன், “எங்க இருக்கீங்க?” என்று வினவி சிறு இடைவேளைக்குப் பின், “நான் உடனே வரேன்” என்றுவிட்டு, விடயத்தைக் கூறி விரைந்து புறப்பட்டான்.

