
மெல்லினம் 14:
முயன்ற அளவு நேரத்தை தாமதமாக்கி கிளம்புவதற்கு இல்லாத அட்டூழியங்களை எல்லாம் செய்து கொண்டிருந்தாள் தேன்முல்லை.
காலையில் மிகவும் தாமதமாக எழுந்ததிலிருந்து இதோ இப்போது அத்வியை கிளப்புகிறேன் என்ற பேர் வழியில், அவனிற்கு ஒவ்வொரு ஆடையாக போட்டு கழட்டி என அவனை படுத்தி கொண்டிருக்கிறாள்.
இத்தனைக்கும் அவனை விட்டு தான் செல்ல போகிறாள். வீட்டில் இருப்பவனுக்கு தான் அத்தனை மெனக்கெட்டு.அவளை பொறுத்த வரைக்கும் எதையாவது செய்து நேரத்தை கடத்தி தாமதமாக கிளம்ப வேண்டும் அவ்வளவே.
அவளின் செய்கைகளை, காலையில் இருந்து பார்த்தவாறு தான் இருந்தனர் அவளை பெற்றோர். எதுவரைக்கும் தான் அவளும் செல்கிறாள், என பாப்போம் என்று நினைத்து அவர்களும் அமைதியாயிருக்க, இப்போது அவள் அத்வினை போட்டு படுத்தியதில் சற்றே கடுப்பில் தான் இருந்தனர்.
அப்போது சத்யமூர்த்தியின் மொபைல் அழைக்க, எடுத்து சில நொடிகள் பேசியவர் அடுத்த நிமிடம் முல்லையிடம் கத்தியிருந்தார்.
“தேனு, இன்னும் எவ்வளவு நேரம் தான் லேட் பண்ணுவ, அந்த மனுஷன் அங்க வந்து ஒரு மணி நேரமா காத்திருக்குறாரு. கொஞ்சம் கூட அறிவு இல்லையா உனக்கு, இப்புடி தான் பண்ணுவியா? இன்னும் அஞ்சு நிமிசத்துல கிளம்பியிருக்கணும் நீ, அத்விய விடு அவன உங்கம்மா பாத்துக்குவா” என்க,
முல்லையின் முகம் சுருங்கி விட “அப்புடி எதுக்கு வெயிட் பண்ணனும் கிளம்பி போக வேண்டியது தான” என அவள் முணுமுணுக்க..
அதனை கேட்ட அவளின் தந்தை,
“ம்ஹீம் இது வேலைக்காகது, நீ போய் பேஃக் எடுத்துட்டு, வண்டி சாவி கொண்டு வா, நானே உன்னை கூட்டிட்டு போறேன். அங்க இருந்து திரும்பவும் நானே கூட்டிட்டு வர்றேன்” என்றிட,
‘இவர் வந்தா காரியத்தையே கெடுத்துடுவாறே’ என பதறியவள்
“இல்லை, வேண்டாம் ப்பா! நானே கிளம்பிக்கிறேன்” என அவசரமாக பேக்கை எடுத்து கொண்டு வெளியேறினாள்.
வண்டியினை எடுத்தவளிற்கு, அந்த மாப்பிள்ளை கிளம்பி சென்று விட மாட்டானா! என்ற நற்பாசை எழ, முயன்று அளவு வண்டியினை மெதுவாகவே இயக்கினாள்.
வண்டியினை செலுத்தியவளின் எண்ணம் முழுவதும், அங்கே அமர்ந்திருக்கும் அழகனை பற்றியே.
நேற்று இரவு தான், அவளின் தாத்தா அழைத்து விபரத்தினை சொன்னார். இன்று கட்டாயம் அவன் இவளை சந்திக்க நினைப்பதை.
கதிரிடம் இவள் பேசியதில் இருந்து, முயன்று அளவு அந்த மாப்பிள்ளையோடான சந்திப்பை அவள் ஒத்திப்போட, பொறுத்து பார்த்தவன் இன்று கட்டாயம் சந்திக்க வேண்டும் என்னும் தகவலை அனுப்பி விட்டிருந்தான்.
முதலில் முரண்டு பிடித்தவளிற்கு, இவர்களுடன் பேசுவதை விட, நேரடியாக அவனிடமே தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டால் என்ன? என்ற யோசனை எழ முரண்டு பிடிப்பதை விட்டு ஒத்து கொண்டாள்.
இதோ போகும் வழியில் கூட அதே எண்ணமே. அவளால் இந்த சந்திப்பை ஏற்க முடியவில்லை. ஏற்கனவே, ஒருவனை காதலித்து, திருமணம் முடித்து ஒரு குழந்தையையும் பெற்று விட்டு, இப்போது இன்னொருவனை திருமண விஷயமாக சந்திக்க செல்லும் அவளை நினைத்து அவளிற்கே அசிங்கமாக இருந்தது.
‘அப்படியா நான் திருமணத்திற்கு அலைகிறேன்’ என்ற எண்ணம் அவளை இம்சிக்க அவனை பார்க்காமல் இருந்து விட மாட்டோமா என்ற தவிப்பே கூடியது.
இதையும் விட அதிமுக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது, அவள் திருமணத்தை தவிர்ப்பதற்கு, அது அவள் மனதோடு மட்டுமே புதைந்த ரகசியம்.
அந்த காரணத்தை பெற்றவளான மங்கையிடம் கூட அவளால் கூறிட இயலாது. கூறினாலும் நிச்சயம் கேவலமாக தான் நினைப்பார்.
சிந்தனைகளின் இடையே அவள் சேர வேண்டிய இடம் வந்திட பார்க்கிங்ல் வண்டியை நிறுத்தியவளிற்கு இப்போது கூட ஏதாவது நடந்து இந்த சந்திப்பு நடக்காமல் இருந்து விடாதா? என்ற எண்ணம் தோன்ற கலங்கிய மனதையும் கண்களையும் கட்டுப்படுத்தி கொண்டவள் அவளின் மனதிற்கு ஒப்பாது உள்ளே சென்றாள்.
ஏற்கனவே,அவன் சத்யமூர்த்தியிடம் ரிசர்வ் செய்த டேபிள் நம்பரையும் கூறியிருக்க நேரே அங்கே சென்றாள்.
இவள் செல்லும் போது அந்த டேபிளில் இவளிற்கு முதுகு காட்டி அமர்ந்து மெனு கார்ட்டை புரட்டி கொண்டு ஒருவன் அமர்ந்திருக்க அவனின் பின்புற தோற்றம் அவளிற்கு சற்று பரிச்சயமானதாகவே இருந்தது.
கால்கள் பின்னி கொள்ள, முயன்று அவனின் அருகே சென்றவள் தொண்டையை செருமி கொண்டு “ஹாய்” என்றவாறு முன்னே செல்ல,
இவளின் பேச்சிற்கு செவிமடுத்து, மெனு கார்ட்டை விட்டு, ஆராய்ந்த கண்களை மெல்ல நகர்த்தி, அவளின் முகத்தில் நிலைக்க விட்டவனை கண்டு அவள் அதிரவெல்லாம் இல்லை மாறாக ஆச்சரியமே அடைந்தாள்.
நொடியில் அவள் முகம் புன்னைகையை பூசி கொள்ள “சார், நீங்க எப்புடி இங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என படபடவென பேசியவளை கண்டு சிரிப்பு வர , இதழ்கடித்து அதனை அடக்கி அவளை சைகையால் எதிர் டேபிளில் அமர சொன்னான் கதிர்.
அவளும் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை மறந்தவளாக, அவன் காட்டிய இடத்தில் மறுக்காது அமர்ந்து கொண்டவள்,
“என்ன சார் இங்க ஏதும் அஃபிசியல் மீட்டிங்கா?
“ம்ஹீம், மீட்டிங் தான் பட் அஃபிசியல் இல்லை பர்சனல்” என்க,
“ஓ,..ஓஹோ” என்றவள் அமைதியாகி விட,
“அப்பறம் முல்லை என்ன இந்த பக்கம்?” என அவன் கொக்கி போட,
அவன் கேட்டதும் தான் அவளிற்கு தான் வந்த காரணம் புரிய, நொடியில் முகம் வாடிட ,அவனிடம் தயக்கமின்றி,
“அன்னைக்கு சொன்னாங்கல்ல அம்மா, அவரு இன்னைக்கு மீட் பண்ணனும்னு சொன்னாராம் அதான்!” என அவள் இழுக்க,
“ஓ எங்க வந்துட்டாரா பாத்துட்டியா?”
“இல்லை இந்த டேபிள் தான் புக் பண்ணிருப்பாரு போல, அப்பாகிட்ட சொல்லிருந்தாரு”
“ஓஹோ, ஆனா இந்த டேபிள் நான் புக் பண்ணிருக்கேன்” என அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற,
“ம்ம்ம் தெரியலையே இந்த நம்பர் தான் சொன்னாங்க அப்பா”
“சரி உங்கப்பாக்கு போன் பண்ணி கேளு”
“இல்லை இல்லை வேண்டாம், அவரு ஏற்கனவே ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்குறாராம். இன்னும் கொஞ்ச நேரம் போனா, அவரே டென்ஷன் ஆகி போய்டுவாரு, அதுவரைக்கும் நான் போன் போட மாட்டேன்”
“வ்வாட்ட கோ இன்சிடன்ட் நானும் ஒரு மணி நேரமா இங்க வெயிட் பண்ணிட்டு தான் இருக்கேன். பட் நான் பாக்க வேண்டிய ஆள் பார்த்தாச்சு” என்க,
அப்போதும் அந்த மடச்சிக்கு எதுவும் புரியவில்லை போலும்.
‘அவர் சந்திக்க வேண்டியவங்க வந்துட்டாங்க போல’ என நினைத்தவள்,
“ஓ..வந்துட்டாங்களா சார், இன்னும் கொஞ்ச நேரம் லேட் ஆனா, அவரே போய்டுவாருன்னு நெனைச்சேன். முடிச்ச அளவுக்கு இது நடக்காம இருந்தா நல்லது” என
“ஏன்?” என கூர்மையாக வந்தது அவன் கேள்வி.
“ஏன்னா எனக்கு பிடிக்கல பாக்க வேண்டாம்”
“ஓ, யாரா இருந்தாலுமா? ஒருவேளை உன்னை நல்லா தெரிஞ்சவங்கள இருந்தா?”
“என்னை பத்தி தெரிஞ்சவங்க எல்லாம், அப்புடி ஈஸியா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க” என,
“ஊஃப் இவளோட” என மூச்சு காற்றை உள்ளிழுத்து விட்டவன்,
“உன்ன பார்க்கணும்னு சொன்னவரோட பேர் என்னன்னு சொன்னாங்க?”
“அது, அது, ஆஹ் அழகு அதான் சொன்னாங்க”
“என்னோட முழுப்பேர் என்னன்னு தெரியுமா மிஸ்.முல்லை” என அழுத்தமாக அவன் உரைக்க,
“ம்ம்ம் கதிர்” என்றவளை இடைமறித்தவன்,
“நான் கேட்டது முழுப்பேரு முல்லை, தெரியுமா??”
“இல்லை தெரியாது” என்றவளிற்கு எதற்கு இந்த கேள்வி என்று புரியவில்லை.
“என்னோட பேரு கதிரழகன். நல்லா கேளு முல்லை க.தி.ர.ழ.க.ன்” என ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு அழுத்தமாக அவன் கூற,
“சரி அது எதுக்கு இப்போ…ஓஓஓஓ” என்றவளின் வாக்கியம் பாதியில் தடைப்பட்டு கண்கள் இரண்டும் அதிர்ந்து தெறித்து விடும் போல் முன் வந்து நின்றன.
அவன் சொன்ன செய்தியை இன்னும் நம்ப முடியாதவளாக உறைந்து நின்றவள்.
‘நான் புரிந்து கொண்டது உண்மையா’ என்பது போல் அவள் விழிகள் விரிய
“ஆம்!” எனும் விதமாக தன் விழிகளை அவன் திறந்து மூடி உறுதி செய்ய,
அவனின் வாய் மொழியாக அதனை கேட்க நினைத்தாளோ!!!
“என்ன? என்ன சொல்றீங்க” என்றவளின் குரல் நடுக்கத்துடன் வெளிவர,
” நீ பாக்க வந்த, இல்லையில்ல உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை, அழகு! கதிரழகன் நான் தான்” என அடுத்த நொடி பட்டென எழுந்தவள் வேகமாக வெளியேறிட,
அதனை எதிர்பாராதவன் திகைத்து சமாளித்து அவளை பிடித்து நிறுத்துவதற்குள் வாசலை தாண்டி விட்டிருந்தாள்.
“முல்லை நில்லு!! என்ன பழக்கம் இது பேசிட்டு இருக்கும் போதே இப்புடி வர்றது” என அதட்டல் போட்டவன் அவளின் கை பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தான்.
“என்ன? என்ன சார் பேசுறீங்க? எந்த நம்பிக்கையில நீங்க இதை பண்ணீங்க. நம்ம ரெண்டு பேத்துக்கும் எப்புடி ஒத்து போகும்னு நெனச்சு, இப்புடி பண்ணீங்க இதுக்கு நான் சம்மதிப்பேன்னு நெனைச்சீங்களா??” என்றதில்,
அவன் முகம் சிறுத்து விட,
“ஏன்? ஏன்… நான் டிவோர்ஸ்ட் ஆனவன்றனால, உன்னை கல்யாணம் பண்ற தகுதி இல்லையின்னு சொல்றியா முல்லை” என்றவனின் குரல் இரங்கிட,
“ச்சு, நீங்க டிவோர்ஸ்டடுன்னா அப்போ நான் யாரு கல்யாணமாகத குமரியா ஒரு புள்ளைய வேற பெத்து வச்சிருக்கேன். அப்போ எனக்கு தான தகுதி இல்லை” என அவன் தன்னையே தாழ்த்தி கொண்டதில் கோபப்பட்டு அவள் பேச வெளி வாசலில் நின்றதால் நிறைய பேரின் கண்கள் இவர்களை சுவாரஸ்யமாக கடக்க, அதனை தவிர்க்கும் பொருட்டு,
“இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம். உன் வண்டி இங்கேயே நிற்கட்டும் என் வண்டியில உட்காரலாம் வா” என அவன் அழைக்க,
“ம்ஹீம், இது வேண்டாம்” என ஆரம்பித்தவள்,
“தேன்முல்லை உன்னை வா ன்னு சொன்னேன்” என்றவனின் அழுத்தத்தில் அதற்கு மேல் பேச முடியாது அமைதியாக பின் தொடர்ந்தாள்.
காரில் ஏறியதும் அவள் பேச நினைக்க இவர்களை பார்த்து கொண்டிருந்தவர்கள் காரில் ஏறியதும் இன்னும் சுவாரஸ்யமாகி அவனின் காரினையே காண சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி கொண்டே நக்கலாக இவர்கள் காரினை நோக்க,
அவர்களின் நக்கலை புரிந்து கொண்டவன் ‘பாலே இங்க பொங்கலையாம் இதுல பாயசம் வேறயாம்’ என நொடித்து கொண்டவன் காரினை கிளம்பிட,
அதில் திகைத்தவள் பேச வர “ஷ்ஷ்ஷ்” என ஒற்றை விரலை அவளின் உதட்டில் வைத்து அவன் அடக்க கண்கள் இன்னமும் விரிந்து கொண்டது பெண்ணவளுக்கு.
அவளின் விரிந்த விழியில் கருவிழியின் நடுவே அவனின் உருவம் மங்கலாய் தோன்றிட செய்த கொணடிருக்கும் காரியமும் நினைவு வர அவளின் உதட்டில் இருந்து விரல்களை பிரிக்க மனமில்லாது நன்றாக விரலால் அவளின் உதட்டை நன்கு அழுத்தியவன் அவள் உணரும் எடுத்து விட்டிருந்தான்.
அவனின் செய்கையில் அவள் அமைதியாகிட,
விரல்களை எடுத்தவன் அவனின் டிரிம் செய்யப்பட்ட தாடியினை தடவ அவனின் விரலும் அவனின் உதடுகளை நன்றாகவே உரசி கொண்டன.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பாலே பொங்கலையாம் 😜😜😜கதிர் .. பாவம் பா நீ எத்தனை நாளைக்கு தான் உன் கையை விரலை கிஸ் பண்ணிட்டு இருப்ப .. இந்த முல்லை சட்டுன்னு ஒரு முடிவு சொல்லுதா பாரு .. ஆமா முல்லை வேற என்ன சீக்ரெட் வச்சிருக்க ..