
வானவில்-06
பிரகாஷ் உடனான சந்திப்புகள் எல்லாம் அவளுக்கு தேனாய் இனிக்க பரிசு பரிமாற்றமும் சில நேரங்களில் எதிர்பாராத அவனின் முத்தங்களும் அவளோடு பொக்கிஷமாக பயணித்தது.
சென்னையில் பிரபல கல்லூரியில் சேர்ந்து விட்டாள் இளங்கலை பயில.
அங்கே கேட்கவும் வேண்டுமா. இளந்தலைமுறையினரின் ஆவல்களையும், ஆசைகளையும் எனக்கு ஆள் இருக்கிறது உனக்கு இருக்கிறது என்று கெத்து காட்டினால் நான் மட்டும் இளப்பமா என்று இவளும் தன் காதல் பெருமை பேச விளைவு பிரகாஷ் உடனான காதலை தீவிரமாக எண்ணத் துவங்கி அவனோடு கைபேசியில் தொடர்பு கொண்டு பேசத் துவங்கி விட்டாள்.
காதலும் வளர, அடுத்த ஆறு மாதத்தில் விடுமுறையில் அவனைப் பார்க்கவென்றே செந்தாளம்பட்டி வந்து விட்டாள்.
அவன் பிறந்த நாளைக்கு நேரில் பார்க்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து, பரிசு கொடுக்க அவன் அம்மாவிடம் இருவரும் மாட்டிக் கொண்டனர்.
“ஏய் நீ அந்த சுந்தரி மவ தானே?” என்று முறைத்த முறைப்பில் ஆடிப் போனாள் தேஜா.
“பொம்பளைப்புள்ள மொகரைக்கட்டையப் பாரு போடி மொதோ” என்று அவர் கத்திய கத்தலில் அன்று மாலையே சென்னைக்குத் திரும்பி விட்டாள் தேஜஸ்வினி.
அதன் பிறகு ஒரு மாதம் பிரகாஷிடம் பேசவில்லை அவள். அவனும் அழைத்திடவில்லை. பிறகொருநாள் அவனே அழைத்துப் பேசிட,மீண்டும் துளிர்த்தது அவர் பழக்கம். தன் அம்மா திட்டியதற்கு மன்னிப்பு வேண்டியவன், அவள் இல்லாமல் வாழவே முடியாது என்று சோக கீதம் வாசித்தான். மனம் இளகிப் போன தேஜாவோ மீண்டும் அவனை ஏற்க மீண்டும் தொடர்ந்த காதலில் பழையபடியான பேச்சுக்கள் தான். ஏதோ கனவுலகில் மிதப்பது போல அவள் சுற்றினாலும் படிப்பில் கெட்டியாக இருந்தாள்.
“இந்த முறை திருவிழாவுக்கு போயிட்டு தேஜாவோட ஸ்டடி ஹாலிடேஸ் எல்லாம் அங்கே தான் இருப்போம்” என்று திரிபுரசுந்தரி கூறியதில் அகம் மகிழ்ந்தவள் ,அத்தனை ஆசையுடன் ஊருக்குக் கிளம்பியிருந்தாள்.
அந்த சமயத்தில் தான் யுகாதித்தனும், தன் காதலி கவிலயாவுடன் வருவதற்கு திட்டமிட்டு கிளம்பினான். ஆனால் கடைசி நேரத்தில் அவளது தந்தைக்கு உடல் நலமில்லாத காரணத்தால் அங்கே செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் மனதேயின்றி கிளம்பியிருந்தாள் கவிலயா. அப்பயணத்தோடு அவனது மகிழ்ச்சியையும் சேர்த்து கொண்டு போயிருந்தாள் அவள்.
இவன் ஊருக்கு வந்திட, எல்லோருடனும் இணைந்து கும்மாளமிட்ட தேஜஸ்வினியை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேச்சு எழ, திகைத்துப் போனாள் பெண்ணவள்.
‘என்ன நான் இவரையா கல்யாணம் பண்ணிக்கணும் முடியாது’ தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தி நேரடியாக யுகாவிடம் சென்று பேசி விட்டாள்.
அவனை விட சிறியவள் தைரியமாக தன்னிடம் திருமணத்திற்கு மறுத்துப் பேசுவதைக் கண்டு வியந்தவன்,” ஏன் என்னைப் பார்க்க பிடிக்கலையா அவ்வளவு மோசமாவா இருக்கேன்” என்றான் கிண்டலாக.
“இல்லை எனக்கு எனக்கு நான் நான்” என்று தயங்கியவள் தான் காதலிக்கும் விஷயத்தை ஒரு வழியாக சொல்லி விட்டாள்.
அவள் தைரியத்தை உள்ளுக்குள் மெச்சியவனாக உதடு பிதுக்கி,” இதை ஏன் என் கிட்ட சொல்ற?” என்றான் அவளைப் பேச வைக்கும் பொருட்டு.
“ப்ளீஸ் என்னைப் பிடிக்கலை இல்ல வேற ஏதாவது காரணம் சொல்லி இந்த பேச்சுவார்த்தை நிறுத்திடுங்க” என்று கெஞ்ச
“ஓகே நோ பிராப்ளம் நான் சொல்லிடுறேன்” என்று அவனும் ஒப்புக் கொள்ள, நிம்மதியானாள் பாவை.
ஆனால் அவள் நிம்மதியை குலைக்கும் விதமாக திரிபுரசுந்தரி இந்த சம்பந்தத்தில் உறுதியாக நிற்க, செய்வதறியாது திகைத்த தேஜா நடப்பதை பிரகாஷிற்கு ஒலிபரப்பினாள்.
சிறிது நேரம் யோசித்த பிரகாஷோ, “என் அம்மாவும் நம்ம விஷயம் தெரிஞ்சதிலிருந்து எனக்கு பொண்ணு தேடறாங்க தேஜ். நான் இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கேன். இவங்க நம்மளை சேர விட மாட்டாங்க” என்று அவன் முகத்தைச் சுருக்க
தேஜாவிற்கு அழுகை வந்தது.
“பேசாம நாம ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடலாமா?” என்று அவனே தான் கேட்டான்.
“அப்பா அம்மாவை மீறியா எனக்கு பயமா இருக்கு நான் வர மாட்டேன்” என்றாள் பட்டென்று.
“வேற வழி இல்லை தேஜ். அப்போ நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவோம் பரவாயில்லையா நீ இல்லாமல் நான் செத்திடுவேன்” என்று அவன் கண் கலங்க உருகிப் போனது பெண்ணவளுக்கு.
“இல்லை இல்லை நான் மட்டும் நீ இல்லாம எப்படி இருப்பேன்?” என்றவள் சற்று குழம்பி யோசித்து அவனோடு சென்று விட முடிவெடுத்து விட்டாள்.
விளைவு இருவரும் திருப்பூர் செல்வதாக முடிவெடுத்து தற்போதைக்கு யாராவது நம்பிக்கையான ஆள் உதவிக்கு வேண்டும் என்று தீர்மானித்து தான் அருணின் உதவியை நாடினான் பிரகாஷ்.
“பங்கு… நீ மட்டும் தான் எங்க லவ் தெரிஞ்ச ஆள். எப்படியாவது அவளை பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டி வந்திடுடா”
“டேய் நீ நேரா வந்து பொண்ணு கேளுடா” என்று அருண் கூற
“உங்க ஆளுங்க சம்மதிப்பாங்களா… நீயே யோசி பங்கு ப்ளீஸ்டா” என்று அருணின் மூளையை சலவை செய்து விட்டான்.
அருணை தேஜா பாவமாக பார்க்க, வேறு வழியின்றி அவனே அவளை பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏற்றி விட அதில் தன் ஊருக்கு கிளம்பிய உறவினர் ஒருவர் வீட்டிற்கு தகவல் தெரிவித்து விட்டார்.
அருணை அடித்து எச்சரித்த தேஜாவின் சொந்தங்கள் அடுத்த நிறுத்தத்திலேயே தேஜாவையும் பிரகாஷையும் பிடித்து விட்டனர். அவன் வீட்டிற்கும் தகவல் செல்ல விளைவு இருவருக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
“தேஜாவின் பக்கமே வரக்கூடாது” என்று எச்சரித்து பிரகாஷை அவன் உறவினர்களோடு அனுப்பி வைக்க அவர்கள் இரவோடு இரவாக அவனை திருப்பூருக்கு பேக் செய்து விட்டனர்.
‘அருண் இங்கேயே இருந்தால் மேலும் அடித்து விடுவர்’என்று அவனை அப்போதே உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டார் அவன் தந்தை கந்தன்.
இங்கே தேஜாவிற்கு தான் அத்தனை வசவுகள் விழுந்தது.
“உனக்கு என்னடி இந்த வயசுலேயே காதல் வேண்டி கெடக்கு. எவ்வளவு திமிர் இருந்தா இந்த காரியத்தை பண்ணி இருப்ப” என்று திரிபுரசுந்தரி அடித்து துவைக்க அவளோ தலைகுனிந்து கொண்டே தீனமாய் அழுதாள்.
“இது சரியே வராது. படிப்பாவது மண்ணாவது எப்ப ஆம்பளை தேடி போனாளோ அப்பவே இவ அடங்க மாட்டான்னு தெரிஞ்சு போச்சு. பேசாம ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிருங்க தூரத்து சொந்தத்தில் உள்ள ஒரு சித்தியோ அத்தையோ தெரியவில்லை” இப்படி கொளுத்திப் போட்டு விட்டார்.
“ஆமா இவளை யாரு கட்டிக்குவா…?சொந்த பந்தம்னு ஒன்னுக்குள்ள ஒன்னா நீங்களே யாருக்காவது பேசி முடிங்க” என்று ஆளாளுக்கு ஆலோசனை கூற பத்மநாபன் நேரடியாக தனது சித்தப்பா மகளிடம் தன் பெண்ணை மருமகளாக்கிக் கொள்ளும்படி இறைஞ்சினார். அவர் தான் யுகாதித்தனின் அம்மா.
நல்லா இருக்கேண்ணே நீங்க கேட்கிறது ஏதோ அண்ணன் பொண்ணு அது மகனுக்கு கட்டி வைக்கலாம்னு நினைச்சோம். இப்படி எவனையோ நினைச்சுட்டு ஓடினவளைக் கட்டி வச்சு எப்போ ஓடுவாளோனு பயந்து பயந்து அது மகன் வாழணுமா ?”என்று கேட்க பத்மநாபனுக்கு அத்தனை அவமானமாக இருந்தது.
“சித்தி ஏன் இப்படி பேசறீங்க?” என்று யுகா கடிந்து கொண்டதைக் கூட உணராமல் அத்தனை பேசி விட்டார் அவர்.
“எனக்கு கல்யாணம் வேண்டாம்” மூக்கை உறிந்தபடி அழுதாள் தேஜா.
“நீ வாயை மூடு ஒனக்கு என்ன வயசு? காதலிச்சு ஓடிப் போயிருக்க பிள்ளையா நீ?, எங்களை அவமானப்படுத்தி நிக்க வச்சுட்டு பேச்சா பேசற” என்று கத்தினார் திரிபுரசுந்தரி.
“காதலிக்க வயசு இல்லை ஆனா கல்யாணம் பண்ண மட்டும் வயசு வந்திடுச்சாம்மா?” அழுது கொண்டே அவள் கேட்டதில் பெரியம்மா அதாவது சுதாகரன் அம்மாவிடம் இருந்து அறை விழுந்தது தேஜாவிற்கு.
அப்போது தான் சுதாகரன் கத்தினான்.
“புள்ளையா வளத்துருக்கீக எங்க மானம் மருவாதிய வாங்கன்னே பொறப்பெடுத்துருக்குது. இருந்து இருந்து தேரு திருவுழா பாக்க வந்தது, இந்த சோலிக்கழுதைய பாக்கத்தானா… பேசாம கெளம்பிருங்க ஊரப் பாத்து” என்று அத்தனை குதி குதித்திருந்தான். இத்தனைக்கும் வயது அவ்வளவாக ஒன்றும் பெரிதில்லை அவனுக்கு.
‘இத்தனை வயது சிறியவன் எல்லாம் பேசும்படி வைத்து விட்டாளே?’ என்ற அவமானம் தாளாமல் பத்மநாபன் உடனடியாக சென்னைக்கு கிளம்பிவிட்டார்.
அதன் பின்னர் செந்தாளம்பட்டி வருவதையே நிறுத்தி விட்டனர்.
தேஜாவோ தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள். முதல் வருட செமஸ்டரில் யுனிவர்சிட்டி ரேங்க் எடுத்தவள் படிப்பிலும் கவனம் குறைய வகுப்பில் கூட முதன்மையாக வரவில்லை. அதனை கவனித்த அவளின் துறைத்தலைவர் பத்மநாபனை அழைத்து விசாரிக்க அவரோ தயங்கித் தயங்கி விஷயத்தை கூறிவிட்டார். துறைத்தலைவர் பத்மநாபனோடு கல்லூரியில் படித்தவர் அந்த நட்பு ரீதியான பழக்கத்தில் விசாரித்து விட்டார்..
“என்ன பத்மநாபன் நீங்க படிக்கிற பொண்ணு கிட்ட போய் கல்யாணப் பேச்சு பத்தி பேசியிருக்கீங்க அதனால் தான் அவ பயந்து இந்த முடிவு எடுத்து இருக்கா. காதல் வர்றதெல்லாம் அந்த அந்த பருவ மாற்றம் பத்மநாபன். படிச்ச நீங்களே இப்படி எல்லார் முன்னாடியும் அடிச்சு இருக்கீங்களே நல்ல வேளை அவ தப்பான முடிவு எதுவும் எடுக்கலை என்று திட்டியவர் இனி தேஜா என் பொறுப்பு. வீட்டில் எப்போதும் போல அவ கிட்ட பேசுங்க ஒடுக்கி வைக்காதீங்க” என்று பத்மநாபனுக்கு அறிவுரை கூறி அனுப்பியவர் தேஜாவையும் கவனிக்க அவளின் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார்.
வகுப்பு ஆசிரியர் தனிக் கவனம் செலுத்தியதில் தேஜாவின் கவனம் படிப்பில் திரும்ப மீண்டும் நல்ல மதிப்பெண்களை பெறலானாள். ஆனால் வீட்டில் தனது பெற்றோரிடம் ஒதுங்கிப் போனவள் அப்படியே ஒடுங்கிவிட்டாள்.
திரிபுரசுந்தரியும் பத்மநாபனும் இதை உணராமல் போனது தான் விதி. மெல்ல மெல்ல பேச்சுக்களை குறைத்தாலும் அவள் படிப்பில் எந்த குறையும் வைத்திடவில்லை அவர்கள்.
படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவளை அவளின் துறைத்தலைவரே பேசி கரைத்து பின்னர் பத்மநாபன் உறவினரின் திருமண மண்டபத்தில் மேனேஜர் பணியில் அமர வைத்தனர். மகள் வயதுக்கோளாறில் காதலித்து ஓடிப் போனதை எந்த சூழ்நிலையிலும் குத்திக்காட்டி பேசிடக் கூடாது என்பதில் அத்தனை கவனமாக இருந்தனர் அவர்கள். ஏனெனில் அவள் இன்னும் ஒடுங்கிப் போனால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது இருவருக்கும். மகளின் பழைய உற்சாகத்தை மீட்க முடியாவிட்டாலும் இன்னும் கழிவிரக்கத்தில் தள்ளாமல் நம்பிக்கை வைத்து அவளை வெளியே அனுப்பியதே பெரிய விஷயம்.
தேஜாவிற்கு பிரகாஷை மறக்க முடியாது என்றெல்லாம் இல்லை. அவளுக்கு காதல் இருந்ததே தவிர அதையேப் பிடித்து தொங்க வேண்டும் என்ற எண்ணமோ அதை வைத்து தன் எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொள்ளும் எண்ணமோ இல்லை. ஏனெனில் நண்பி ஒருத்தியின் காதல் அவர்கள் வீட்டில் தெரிந்து அவளுக்கு உடனேயே திருமணம் செய்து கொடுத்து படிப்பை நிறுத்தி விட்டனர். டிகிரி கூட முடிக்காத நிலையில் அவள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்ததும் இப்போதும் தன் பெற்றோர் அவள் ஒழுங்காக குடும்பம் நடத்துகிறாளா என்று கவனிப்பதும் அப்பெண்ணை மனதளவில் பாதித்திருந்தது.
“பரவாயில்லை தேஜு உன் வீட்டில் அதுக்கப்புறம் உன்னை எதுவுமே சொல்றது இல்லை. என்னை தெனமும் டார்ச்சர் பண்றாங்க. படிக்கிற காலத்தில் படிச்சுடணும்டி இல்லாட்டி என்னை மாதிரி தான் புலம்பணும் பதினெட்டு வயசுலயே பாரு எனக்கு இப்ப ஆறு மாசம் உங்களை எல்லாம் பார்க்கும் போது ஏன்டா லவ் பண்ணோம்னு தோணுது. படிக்க ஆசையா இருக்கு ஆனா இனிமே முடியாது. நீயாவது படி தேஜு காதல் எல்லாம் சும்மா” என்று ஆறுதல் கூறியிருக்க தேஜா தெளிந்த நீரோடையானாள்.
…… தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தேஜு பாவம் தான்.