Loading

மெல்லினம் 13:

 இரண்டு வாரங்கள் தேவைப்பட்டது கோவை மாநகரம் மழையின் பிடியில் இருந்து மீள்வதற்கு.

இரண்டு வாரங்கள் ஆயினும் இன்னும் முழுதாக மழையின் பிடியில் இருந்து மீளவில்லை. பின்னே வரலாறு காணாத பெரும் மழை ஆயிற்றே.

ஏதோ அன்றாட மனிதர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மழை தன் ஆட்டத்தினை நிறுத்தி இருந்தது. இந்த இரண்டு வாரங்களாக பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை.

ஆக வீடே கதி என்று இருந்தால் முல்லை. மழை சுத்தமாக இல்லாத நாட்களில் மட்டும் கதிரின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.

முதல் தடவை அவள் மட்டும் செல்ல அடுத்தடுத்து வந்த நாட்களில் கதிரின் பிடிவாதத்தால் அத்விதனையும் கூட்டி செல்லுமாறு நேர்ந்தது. இதில் கதிரின் பிடிவாதத்தின் முன் முல்லையின் வீம்பு எடுபடவில்லை.

இந்த மழையின் காரணமாக எது நன்றாக நடந்ததோ இல்லையோ கதிர் மற்றும் அத்வியின் இணக்க நிலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது.

இவனை அழைத்துக் கொண்டு சென்றாலே ஏதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு கதிர் வீடு வந்து சேர, அவனிடம் விளையாடுவதும் சீதாவிடம் செல்லம் கொஞ்சவதுமாக அத்வியின் நாட்கள் நாளுக்கு நாள் அந்த வீட்டில் ஒரு பினைப்பை ஏற்படுத்தி விட்டது.

ரேஷ்மியின் நடன வகுப்பு முடியும் வரையில் கதிருடன் அடித்து பிடித்து உருண்டு விளையாடுவதும் ரேஷ்மி வந்ததும் அவளுடன் சேர்ந்து கொட்டம் அடிப்பதுமாக அவனின் நாட்கள் நகர்ந்தன.

சரி நடன வகுப்பை முடித்துக் கொண்டு சீக்கிரமே கிளம்பி விடலாம் என முல்லை நினைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவளை இரவு வரை நிறுத்தி வைத்து விடுகின்றனர்.

அதிலும் குழந்தை கதிரிடம் சென்றால் அவ்வளவுதான் எவ்வளவு நேரமாக இருந்தாலும் திருப்பி அனுப்பவே மாட்டான்.

 சரி இவளாவது சென்று நேரமாகிறது குழந்தையை தாருங்கள் என கேட்டாலும் அதற்கும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு முணுமுணுத்தவாறே அப்போதும் குழந்தையை இவளிடம் தராது இவனே இருவரையும் வீட்டிற்கு சென்று கொண்டு விட்டு வருவான்.

கதிருடன் குழந்தை ஒட்டுதலை எவ்வளவு அதிகமாக அவள் தவிர்க்க நினைக்கிறாளோ அதனையும் விட அதிகமாக குழந்தை கதிருடன் ஒட்டிக் கொள்கிறது.

வலுகட்டாயமாக குழந்தையை கதிரிடமிருந்து பிரிக்கவும் அவளால் இயலவில்லை. சரி என எதோர்ச்சையாக ஏதாவது செய்து குழந்தையை தன் வசம் கொண்டு வரலாம் என நினைத்தாலும் எப்படித்தான் கண்டுபிடிப்பானோ,

 கதிர் ஒரே ஒரு பார்வையில் அவளின் எண்ணத்தை தவறி பொடி ஆக்கி விடுகின்றான்.

குழந்தைக்கு அங்கு சென்று வருவதும் விளையாட ரேஷ்மி அக்கா இருப்பது என குதூகலமாக நாட்கள் நிறைய முல்லையை விட அங்கு செல்வது அதிக ஆர்வம் காட்டினான் அத்விதன்.

இதோ இப்போது கூட அவளுக்கு முன்பு தயாராகிக் கொண்டு நின்று ‘ம்மா ரேஷ்மி அக்கா கதி அங்கி வீட்டுக்கு போலாம் போலாமா வா போலாம்”என கூறியவனை கண்டு சற்றே எரிச்சல் மேலிட்டது முல்லைக்கு.

ஏற்கனவே காலையில் இவளிற்கும் மங்கைக்கும் நடந்த வாக்குவாதத்தில் கோபத்திலும் எரிச்சலிலும் இருந்தவளிற்கு அத்வியின் அனத்தல் மேலும் மேலும் எரிச்சலை கொடுக்க தன்னை கட்டுப்படுத்தியவாறு 

“அத்வி இன்னைக்கு வேண்டாம் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல நம்ம இன்னொரு நாள் போலாம் போ போ ஏதாவது எடுத்து விளையாடு அம்மாவ டிஸ்டர்ப் பண்ணாத போடா கண்ணா” என தன்மையாக எடுத்துக் கூறியவளின் விழிகள் இரண்டும் அழுததற்கு சாட்சியாக சிவந்திருந்தன.

 மேலும் தலைவலியும் சேர்ந்து கொள்ள அவளுக்கு பெரும் வேதனையாக இருந்தது அந்த நேரத்தை கடப்பதற்கு.

தன் விருப்பமான ரேஷ்மி அக்கா மற்றும் கதிர் அங்கி வீட்டிற்கு செல்ல முடியாது என கூறிய முல்லையை கண்டு குழந்தையின் முகம் மிகவும் வாடி விட்டது.

 அவனால் இங்கு இருக்கவே முடியவில்லை காரணம் காலையில் பாட்டிற்கும் முல்லைக்கும் நடந்த வாக்குவாதம் தான்.

மேலும் காலையில் இருந்து மங்கையும் இவனிடம் முகம் கொடுக்காது பேச குழந்தை பரிதவித்து போய் தான் விட்டான்.

எனவே அவனின் எண்ணம் முழுவதும் ரேஷ்மி வீட்டுக்கு செல்வதிலேயே இருக்க மீண்டும் தாயை அனத்த ஆரம்பித்தான்.

“ம்மா ப்ளீஸ் போலாமா ரேஷ்மி அக்கா கூட விளையாட போலாமா இங்க வேண்டாம் பாட்டி பேசவே இல்ல வேணாம் நம்ம அங்க போலாம்மா ப்ளீஸ் ப்ளீஸ்….”

என அவன் மேலும் மேலும் கெஞ்ச ஏற்கனவே எரிச்சலையும் கோபத்திலும் இருந்தவளுக்கு மேலும் மேலும் கோபம் அதிகரித்தது.

” அத்வி ஒரு தடவ சொன்னா புரியாதா போடா முதல் இங்கிருந்து போ அம்மாவுக்கு முடியலன்னா சொல்ற பேச்சை கேட்டுக் கொள்ளனும் இது என்ன புதுசா பிடிவாதம் பிடிக்கிற போ முதல் இங்கிருந்து. இன்னொரு நாள் போகலாம் ஏதாவது எடுத்து விளையாடு இல்லை அமைதியா போய் ஒரு இடத்துல உட்காரு” என ஒரேடியாக அதட்டி குழந்தையின் உதடு அழுகையில் பிதுங்கியது.

அதே நேரம் சரியாக சீதாவும் அழைக்க மொபைலை எடுத்தவள் 

“ஹலோ மேம் சாரி இன்னைக்கு என்னால வர முடியாது. உடம்பு கொஞ்சம் சரியில்ல அதனால இன்னொரு நாள் நான் கிளாசுக்கு வரேன். நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன் அதுக்குள்ளாட்டியும் நீங்களே பண்ணிட்டீங்க”

 என அவன் விளக்கிக் கொண்டிருக்க சீதாவிடம் தான் பேசுகிறாள் என உணர்ந்த குழந்தை

 சட்டென அவள் மடிமீது தாவீ பட்டென அவனின் மொபைலை பறித்தவன்

” ஆன்ட்டி, ஆன்ட்டி, நான் அங்க வரேன். இங்க வேண்டாம், அம்மா, பாட்டி சண்டை வேண்டாம், என்ன! வாங்க வந்து கூட்டிட்டு போங்க ரேஷ்மி அக்கா கதி அங்கி நான் பாக்கணும்.!!”

 என அவன் படபடவென்று கூற,

 முதலில் திகைத்த முல்லை பின்

 “இது என்ன புது பழக்கம் அத்வி மொபைலை விடு அம்மா கிட்ட அடி வாங்காம போ?? மொபைலை குடுன்னு சொல்றேன்ல” என அவள் அதட்ட,

எங்கே தன்னை கதிரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் விட்டுவிடுவாளோ, என பயந்த குழந்தை மேலும் மேலும் மொபைலை இறுக பற்றிக்கொள்ள

காலையில் நடந்த சண்டையின் மிச்சமிருந்த எரிச்சல் இப்போது அத்வி சீதாவிடம் சண்டை அது இது என உளறியதை கேட்ட கோபத்திலும் அத்வியின் முதுகில் ஓங்கி “பளார்” என்று ஒரு அறை வைத்து,

“உன்னை அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனது தப்பா போச்சு, விடு மொபைல்ல??” என கூறிக்கொண்டு மேலும், மேலும், அவள் கோபத்தில் குழந்தையின் முதுகில், ஓங்கி! ஓங்கி! அறைய, வலியில் துடித்துப் போனது குழந்தை.

“ம்மா நே..ம்மா ப்ளீஸ்…வலிக்கி” என கண்களில் திரண்டு விட்ட நீருடன்‌ அத்வி வலியில் கதற,

அவனின் அழுகையும் முல்லையின் கோபமும் சீதாவிற்கு நன்கு கேட்க பதறி தான் போனாள்.

“முல்லை! முல்லை..! என்ன‌ பண்ற விடு குழந்தைய” என சீதா லைனில் இருந்தவாறே‌ கத்த எதுவுமே முல்லையின் காதினில் ஏறவில்லை.

இன்னேரம் முல்லையும் அத்விதனும் வந்திருப்பார்கள் என நினைத்து வீட்டிற்கு வந்த கதிர் கண்டது சீதா முல்லையிடம் போனில் கத்தி கொண்டிருந்ததை தான்.

“என்ன? என்னாச்சு அண்ணி?” என விரைந்து வந்து அவன் கேட்க,

“முல்லை அத்விய போட்டு அடிச்சிட்டு இருக்கா, பாவம் குழந்தை வலி தாங்க முடியாம துடிக்கிறான்.”

“ஏன்? ஏன் குழந்தைய அடிக்கிறா அண்ணி?”

“தெரியலை கதிர் இன்னும் வரலையேன்னு போன் பண்ணேன் முல்லைக்கு. போன எடுத்து இன்னைக்கு வர முடியாது உடம்பு முடியலன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, அத்வி போனை பிடிங்கிருப்பான் போல‌ ஏதோ அம்மாக்கு பாட்டிக்கு சண்டை ,ரேஷ்மிகா பாக்க இங்கே வரேன்னு, ஒரே பிடிவாதம். அதுக்கப்பறம் தான் முல்லை ஏதோ கோபப்பட்டு திட்டி அடிச்சிருப்பா போல” என இன்னமும் சீதா லைனை கட் செய்யாது கதிரிடம் நடந்தவற்றை முறையிட,

“எங்கயோ உள்ள கோபத்தை குழந்தை கிட்ட காட்டுவாளா? இங்கதான‌ வரேன்னு சொல்லிருக்கான். அதுக்கு அடிப்பாளா?” என கதிரும் கோபத்தில் இரைந்தவன் விரைந்து வெளியேறி விட்டான்.

அத்வியின் அழுகையை கேட்டு கொண்டு மங்கையும் சத்யமூர்த்தியும் வெளி வந்தவர்கள், முல்லை கண் முன் தெரியாமல் குழந்தையை அடித்து கொண்டிருக்க பார்த்து பதறியவர்கள்,

“தேனு என்ன பண்ற பிள்ளைய விடு அறிவு இருக்கா இப்புடியா அடிப்ப!!” என கூறியவரே சத்யமூர்த்தி அருகே வர பார்க்க,

“போதும் பா இவன் என் பிள்ளை நான் அடிப்பேன்‌ என்ன வேணுனாலும் செய்வேன்‌. உங்களுக்கு இதுல தலையிட உரிமை இல்லை என் குழந்தையை நான் பாத்துகிறேன் யாரும் இதனால கஷ்டபட வேண்டாம்” என்றவளின் கூற்றில் அவளது தந்தை திகைத்து நிற்க,

மங்கையோ ஆராய்ச்சியாக அவளை ஆராய்ந்தார். காலையில் தான் பேசியதற்கு மகள் பதிலடி கொடுக்கிறாள் என்பதை உணர்ந்தவர்,

“அதான் சொல்லிட்டாளே அவ பிள்ளையின்னு அப்பறம் என்ன விடுங்க அம்மாவாச்சு அவ பெத்த பிள்ளையாச்சு எத்தனை நாளைக்கு தான் நம்மையே எதிர்பார்த்துட்டு இருப்பா நீங்க வாங்க உள்ள” என்றவர் பேச வந்த சத்யமூர்த்தியையும் பேச விடாது உள்ளே இழுத்து சென்று விட்டார்.

“என்ன மங்கை இது புள்ளை அழுதுட்டு இருக்கான் நீ என்னை போக விடாம இழுத்துட்டு வர” என பேரனின் கண்ணீர் பாதித்ததில் அவர் கோபமாக,

“உங்க பொண்ணு நான் சொன்ன மாதிரியே குழந்தைய வச்சு தப்பிக்க பாக்குறா. எனக்கு மட்டும் பேரன் இல்லையா? காலையில நான் பேசுனதுக்கு பதிலடி கொடுக்கிறா, நீங்க அமைதியா இருங்க கொஞ்ச நேரம்” என அவரை அடக்கியவருக்கு அத்வியின் அழுகுரல் இதயத்தை பிழிந்தது.

“அய்யோ..! யாராச்சும் வந்து இவகிட்ட இருந்து குழந்தைய காப்பாத்துங்களேன். பாவி! புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறாளே” என மங்கை வாய் விட்டு புலம்ப,

எவ்வளவு சீக்கிரம் காரை ஓட்டி வந்தானோ, கதிர் சில மணி நேரங்களில் முல்லையின் வீட்டிற்கு வந்து விட்டிருந்தான்.

காரினை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தவனிற்கு அத்வியின் அழுகை குரலே வரவேற்க,

“அதி குட்டி..” என உரக்க அழைக்க

அந்த குரலுக்கு அத்வி மட்டும் இல்லை அனைவரும் வந்து விட்டிருந்தனர். தாத்தா பாட்டி தன்னை வந்து தூக்குவார்கள் என நினைத்து ஏமாந்த அத்வி கதிரின் குரலை கேட்ட மறுநிமிடம்,

“கதி அங்கி..!!” என் அழுதவாறு‌ ஓடி வந்து அவனின் காலை கட்டி கொள்ள,

குழந்தையை தூக்கியவன் அதிர்ந்து தான் போய் விட்டான். கன்னத்திலும் அடித்திருப்பாளும் போல இரண்டு பக்க கன்னமும் சிவந்து போய் கிடக்க இவனிற்கு கோபம் எல்லையை கடந்தது.

அத்வியின் பின்னே வந்த முல்லையை கண்டு இவன் பார்வையில் அனலை கக்க அடுத்த அடி எடுத்து வைக்காது தடுமாறி நின்று விட்டாள்.

“வாங்க, வாங்க தம்பி” என இவனின் குரல் கேட்டு சத்யமூர்த்தியும் மங்கையும் வரவேற்றனர்.

அன்று முல்லைக்கு உதவியதில் இருந்து அவனின் மேல் நல்லெண்ணம் இருவருக்கும்.

இதுவரை அநாவசியமாக கூட அவன் வீட்டிற்குள் நுழைந்தது இல்லை. இரவு கொண்டு வந்து விடுபவன் அப்படியே கிளம்பி சென்று விடுவான்.

இன்று அவன் வந்தது இருவருக்கும் ஆச்சர்யமே.

“அத்விய நான் கொஞ்ச நேரம் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என தகவலாக முல்லையை காணாது அவளின் பெற்றோரிடம்‌ உரைத்தவன் கிளம்ப எத்தனிக்க,

“இல்லை!” என‌ பேச வந்த முல்லையை

திரும்பி பார்த்து முறைத்தவன் “மூச்..! நீ வாயவே திறக்க கூடாது. உன்கிட்ட நான் பேசவே இல்லை. அதனால நீ கொஞ்சம் ” வாயை மூடுமாறு சைகையில் கூறி அவளை எச்சரிக்க,

‘இவர் என்ன பேசாதன்னு சொல்லுறது அத்வி என் பிள்ளை’ என அவனின் பேச்சில் கோபமடைந்தவள் அவனிடம் பேச வர,

அவளின்‌ எண்ணம் புரிந்தவன்,

“அங்கிள் உங்க பொண்ணு வாயை தெறந்தானா, அவ்வளவு தான்! கண்டிப்பா அடிச்சிடுவேன்” என அவன் காட்டமாக உரைக்க,

“என்ன? என்ன? அடிப்பீங்களா” என முல்லையும் மல்லுக்கு நிக்க,

“ஓ…சந்தேகம் வேறயா உனக்கு?? கிட்ட மட்டும் வந்து நின்னு பாரு இரண்டு இன்னமும் பழுக்க அடிப்பேன். செய்ய மாட்டேன்னு மட்டும் தப்பா எடை போட்டுறாத? பச்சை மண்ணை போட்டு இப்புடி அடிச்சிருக்க உன்னை அடிக்கிறதுல தப்பே இல்லை. நியாயமா பாத்தா உங்கம்மாவோ அப்பாவோ இதை இந்நேரம் பண்ணிருக்கணும்” என அவன் இறுகி போய் உரைக்க,

“அத்வி என் புள்ளை” இவனின் வார்த்தையில் எரிச்சல் மூள அவள் கூற,

“அதுக்கு, அதுக்கு, உன் இஷ்டம்போல் அடிப்பியா இவன் கன்னத்தை பாரு நீ!! எப்புடி இருக்குன்னு ” என கதிர் கூறும் போதே,

“அங்கி..! முதுகும் வலிக்கி” என அத்வி அழ, டீ-சர்ட்டை தூக்கி விட்டு பார்த்தவனுக்கு, முல்லையை அடிக்கும் வேகம் எழுந்தது.‌ அப்படி சிவந்து போய் கிடந்தது.

“நான் கிளம்புறேன் இனி ஒரு நிமிசம் இருந்தாலும் கண்டிப்பா உங்க பொண்ணு என்கிட்ட அடிவாங்கிடுவா” என,

அத்வியின் சிவந்த முதுகை கண்டு தன் தவறை உணர்ந்த முல்லைக்கு குற்றவுணர்வு தலை தூக்க 

“அது, ஏதோ கோபத்துல” என்றவளிற்கு அழுகை வரும் போல் இருந்தது.

“கோபம் வந்தா?? மனுஷி தான நீயி!! மிருகம் இல்லையே, அப்புடி என்ன குழந்தை மேல உன் வெறிய காட்டுற அளவுக்கு கோபம், பொல்லாத கோபம்” என அவன் பல்லை கடிக்க,

அவனின் கோபக்குரலில் பாதிக்கபட்ட முல்லை,

“கோபம் தான், என் மனசை யாருமே புரிஞ்சுக்க மாட்டுறாங்களேன்ற கோபம், என் பேச்சை கேட்க மாட்டுறாங்களேன்னு கோபம். என் அம்மா அப்பாவே என்னையும் என் பிள்ளையையும் சுமையே பாத்து தள்ளி வைக்குறாங்களேன்ற கோபம். என்ன பெத்தவங்களும் சரி நா பெத்த இவனும் சரி என்னையும் என் பேச்சையும் மதிக்கவே மாட்டுறாங்களேன்ற கோபம் அதான் இப்புடி!” என அழுகையில் வெடிக்க,

“என்ன உளருற நீ!!” என அவன் கேட்க,

“யாரு? யாரு? உளறுறாங்க, இதோ காலையில இருந்து, என்கிட்ட சண்டை போட்டு என்னை படுத்தி பயமுறுத்துறாங்களே, இவுங்க கிட்ட கேளுங்க நான் உளருறேனா இல்லையான்னு” என அவர்களை நோக்கி இவள் திரும்பி விட,

அவர்கள் இருவருக்கும் தர்மசங்கடமான நிலையே மகள் இப்படி செய்ததில்‌.

“சொல்லுங்க, ஏன்? அமைதியா இருக்கீங்க, சொல்லுங்க” என அவள் மேலும் கத்த,

“முல்லை!!” என‌ அவளை அதட்டியவன்,

“ஆண்ட்டி, அங்கிள், நான் எதுவுமே கேட்கல நீங்க சங்கடப்படாதீங்க, எதுனாலும் கோபப்படமா எடுத்து சொல்லுங்க முல்லை கேட்டுக்குவா” என்றவன்,

“உன் நல்லதுக்கு தான் அவுங்க சொல்லுவாங்க” என்றவனை இடைமறித்தவள்,

“எது? எது? நல்லது, என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாங்க, அது நல்லதா” என திரும்பவும் முல்லை எகிற,

“அப்படியா?” என அவர்களை பார்த்தவன்,

“என்கிட்ட சொல்லணும்னா சொல்லுங்க நீங்க மனசுல வச்சு அழுத்திகாதீங்க” என்றவனின் பேச்சு, இருவருக்கும் ஆறுதலாக இருந்ததோடு அவனிடம் விஷயத்தை சொல்லவும் தூண்ட,

“ஆமா தம்பி, ஊர் பக்கம் எங்க அப்பா ஒரு வரன் சொன்னாரு, முல்லைக்கு பாக்க, அதை தான் பேசி, காலையில சண்டை ஆகிடுச்சு இரண்டு பேருக்கும்” என சத்யமூர்த்தி உரைக்க,

“ஓ! போட்டோ ஏதும்..!” என அவன் இழுக்க,

“இல்லை தம்பி போட்டாலா எதுவும் கொடுக்கல, வரன் வந்த பையனும் இதே ஊரு தான் பேரு அழகுன்னு சொன்னாங்க, அந்த பையன சும்மா பாத்து பேச வர சொல்லிருக்கான். அவ்வளவு தான் மத்தத்தை அப்பறம் பாத்துக்கலாம்னு விட்டாச்சு. இவள போய் பாத்துட்டு பேசிட்டு தான் வர சொன்னோம் அதுக்கு தான் ஆட்டமா ஆடுறா” என மங்கையும் கூற,

“ம்மா, அம்மா வேணாம், என்னை பேச வைக்காதீங்க. நான் எவனையும் போய் பாக்க மாட்டேன்” என அவள் வீம்பு பிடிக்க,

“முல்லை கூல் டவுன் ஜஸ்ட் பாத்துட்டு தான வர சொல்லுறாங்க, இது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லையே” என கதிர் கேட்க,

“என்ன பேசுறீங்க நீங்க?”

“ப்ச் முல்லை மொத உன் நிலைமையில் இருந்து மட்டும் யோசிக்கிறது நிப்பாட்டு உன்னை பெத்தவங்களையும் கொஞ்சம் யோசி சும்மா போய் ப்ரண்ட்லியா பார்த்துட்டு வரதுக்கெல்லாம் உன்னை பிடிச்சி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க. சின்ன பிள்னை தனமாக பிகேவ் பண்ணாத, யோசி இப்ப அத்வியை நான் கூட்டிட்டு போறேன்.” என்க,

அத்வி முல்லையை திரும்பி கூட பாக்கததில், இவள் முகம் தொங்கி வருத்தத்தை காண்பிக்க,

“இப்ப தொங்கி என்ன பண்ண அடிக்கிறதுக்கு முன்ன யோசிச்சருக்கணும்..இப்ப கோபம் தான் உன் மேல நைட்டு வரும் போது சரியாகிடுவான்'” என கூறிவிட்டு கதிர் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப,

இவனின் பேச்சில் ‘வர வர அத்விக்கு நா அம்மாவா இல்லை இவரான்னு தெரியலை இவர் பண்ணுறத எல்லாம் பார்த்தா’ என புலம்பி கொள்ள மட்டும் தான் முடிந்தது முல்லையால்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. முல்லைக்கு பார்த்த அந்த பையன் கதிரா ?? கதிர் இதுவும் உன்னோட பிளானா .. இருந்தாலும் முல்லை பாவம் பா .. மங்கை இவ்ளோ கோபமா நடந்து கூடாது .. அவளும் எங்க போவா .. கொஞ்சம் டைம் தரலாம் ..