
காதல் -18
ஜன்னல்களில் வழியே பார்வையை பதித்து இருந்தாலும்.. சிந்தனை எல்லாம் வேறு எங்கோ லயித்து இருந்தது.. இன்னும் உடல் நடுக்கம் அவளை விட்டு போகவில்லை.. கன்னம் சிவந்து இதழ்களை கூட அசைக்க இயலாமல் அமர்ந்திருந்தாள்.. ‘ தமிழ் காதலன் மேல இவருக்கு எதுக்கு இவ்வளவு வெறுப்பு .. கடவுளே இந்த புத்தகத்துக்கு பின்னாடி அப்படி என்ன மர்மம் இருக்கு.. ‘ எவ்வளவு யோசித்தும் விடை பூஜ்ஜியத்தில் வந்து நிற்க.. கீழே இருந்து மூர்த்தியின் குரல் கேட்டது..
கண்களை துடைத்துக் கொண்டு நடுக் கூடத்திற்கு விரைந்தாள். ” சாயா என்ன ஆச்சு ஏன் டீவி உடைஞ்சு இருக்கு ” என கேட்டுக் கொண்டே அவள் முகத்தை பார்த்தவர் அதிர்ந்து… ” கன்னம் ஏன் மா இவ்வளவு வீக்கமா இருக்கு ” என பதறிய படி அவள் அருகே வர..
சற்று முன்பு நடந்ததை எல்லாம் தெளிவாக அவருக்கு விளக்கினாள் சாயாலி… அவள் அசைவை வைத்து அனைத்தையும் புரிந்து கொண்டவர் உடைந்து போய் ஓர் இடத்தில் அமர்ந்து விட்டார்.
நெஞ்சே அடைப்பது போல இருந்தது மூர்த்திக்கு… கைகூப்பி சாயா முன்பு நின்றவர்.. ” என் மகன் பண்ணது எல்லாம் தப்புதான் மா, அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்குறேன்.. தயவு செஞ்சு இதுக்காக அவன தண்டிச்சுடாத, அவன் வாழ்க்கையே வெறுத்து போய் வெறும் நடை பிணமா வாழ்ந்துட்டு இருந்தான், உன்ன பார்த்ததுக்கு அப்பறம் தான் கல்யாணம் பண்ண முடிவு பண்ணான்.. அதுவே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.. ஒன்னு மட்டும் புரிஞ்சுக்க சாயா அவன் வாழ்க்கையில நீ வந்ததுக்கு அப்பறம் தான் சந்தோஷம்.. இதுவரைக்கும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம வாழ்ந்துட்டான்.. கூடிய சீக்கிரம் அவனே உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லுவான்.. ” கண்கள் கலங்கி அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டார்.
சாயாலிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.. இருந்தும் மூர்த்திக்கு ஆறுதல் அளித்து விட்டு அவர்களது அறைக்கு வந்தவள் எண்ணம் முழுவதும் அவளது கணவனே வியாபித்து இருந்தான்..
அடித்ததோடு சரி ..அதன் பின் அவ்விடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காது காரை கிளப்பி கொண்டு ஜெட் வேகத்தில் பறந்து விட்டான் தமிழ் மறவன்.
அடித்த போது இருந்த கோபம் இப்போது அவன் மீது துளி அளவும் இல்லை.. காரணம் மூர்த்தி.. ஏதோ பெரிய ரகசியம் அவன் வாழ்க்கையை புரட்டி போட்டிருப்பது தெளிவாக தெரிந்தது.. அதை எப்படி அவரிடம் கேட்பது என்று தான் அவளுக்கு புரியவில்லை..
‘ ஒரு வேளை நம்ம அவனை பத்தி கேட்டு, அவர்கிட்ட உரிமை எடுத்துக்கிறதா நினைச்சிட்டா என்ன பண்ணுறது, அப்பறம் அவரும் நம்மகிட்ட பொண்டாட்டின்னு உரிமை எடுத்த்துகிட்டா.. ‘ என மனம் தறிகெட்டு திரிய.. அப்போதே நேரத்தை கவனித்தாள், மாறன் வீட்டை விட்டு சென்று வெகு நேரம் ஆகி விட்டது.. இரவு உணவிற்கு கூட அவன் வரவில்லை..
மூர்த்தியிடம் கேட்கலாமா என நினைத்தாலும்.. ” இல்ல வேணாம் அவரே வருவாரு ” என அந்த குளிரிலும் பால்கனியில் அமர்ந்து இருட்டில் மலைகளில் தெரியும் சின்ன சின்ன மின் விளக்குகளை எல்லாம் பார்த்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
மணி நள்ளிரவை நெருங்க.. சாயாலியின் கண்கள் தானாக நித்திரைக்கு அடைக்கலம் புக.. இரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்த்தான் மறவன்..
அவன் மனம் அமைதியானதும் வீட்டு நியாபகம் வர, அதன் பின்பே சாயாலியை அடித்து வந்தது நினைவிற்கு வந்தது. தலையில் அடித்து கொண்டவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி பிறந்து வந்துவிட்டான்.
அறை இருட்டில் மூழ்கி இருக்க … மெத்தையில் கண்களால் அலசியவன்.. பின் அவள் படுக்கும் சோபாவிலும் அலசிவிட்டு புருவத்தை சுருக்கி… குளியலறை சென்று பார்த்து வந்தவனுக்கு குப்பென்று வியர்த்தது.
‘ ஐயோ அடிச்ச கோபத்துல வீட்டுக்கு போயிட்டாளோ.. ” என நெற்றியை தேய்த்து கொண்டே நிமிர்ந்து பார்த்தவனது கண்களில் விழுந்தாள் சாயாலி..
அவள் அறையில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு சற்று நிம்மதியை தர.. மெது மெதுவாக அடி எடுத்து வைத்து பால்கனியை நெருங்கினான்.
குளிர் காற்று மேனியை தழுவ.. அந்த குளிரிலும் தனது சால்வையை உடல் முழுவதும் போர்த்தி கொண்டு நித்திரையில் இருந்தாள் சாயாலி..
” இவளுக்கு என்ன பைத்தியமா இப்படி குளிர்ல நடுங்கி போய் படுத்திருக்கா… ” என புலம்பியவன் தூங்கும் அவளை மெதுவாக எழுப்பினான்.. ” சாயா…. ” என அழைக்க.. நெற்றிகளில் மெல்லிய சுருக்கம் ..
அவளை எழுப்ப மனம் வராமல் அவளை கைகளைப் ஏந்தி கொண்டு மெல்ல படுக்கையறைக்கு அழைத்து சென்றான். அந்த விரிவான பஞ்சு மெத்தையில் ஒரு பக்கம் அவளை படுக்கவைத்து விட்டு ,உடை கூட மாற்ற தோன்றாமல் அவனும் அவளது அருகில் படுத்து கொண்டான்.
அந்த மெல்லிய இரவு விளக்கில் அவளது வீங்கிய கன்னம் தென்பட, காலையில் அவளிடம் அரக்கனாக நடந்து கொண்டதை நினைத்து வருந்தியவன் … எழுந்து கீழே சென்று மெல்லிய சூட்டில் சுடு தண்ணீரை கொண்டு வந்து , வெது வெதுப்பான அந்த நீரில் வெள்ளை துணியை நனைத்து அவளை தூக்கி அவன் மடியில் படுக்க வைத்தவன் அவளது வீங்கிய கன்னங்களில் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தான்.
அந்த வலிக்கு அவன் கொடுத்த ஒத்தடம் இதமாக இருக்க.. தூக்கம் கலைந்து மெதுவாக கண் விழித்தாள் சாயாலி.. தனக்கு இத்தனை அருகில் தன் கணவனை கண்டவள் திகைத்து விழித்தாள்.
” அப்படியே படு யாழி, கொஞ்ச நேரம் ” என அவள் கண் விழித்ததை பார்த்து அவள் கன்னங்களில் ஒற்றி எடுத்தான் ..
கண் இமைக்காமல் அவனையே பார்த்து வைத்தவள்.. அவனிடம் இருந்து எழ கூட தோன்றாது , அவன் கொடுத்த இதமான ஒத்தடத்தை அனுபவிக்க தொடங்கினாள்.
பதினைந்து நிமிடம் அவளுக்கு மருத்துவம் செய்தவன்… ” இப்ப உனக்கு வலி பரவாயில்லையா யாழி ” என கேட்ட பிறகே அவன் மடியில் சுகமாக படுத்திருப்பது அறிந்து வேகமாக எழுந்தாள்..
இத்தனை நேரம் அவன் மடியில் படுத்திருந்தை நினைத்து அவன் முகம் காண முடியாமல் தவிப்பாக அமர்ந்திருந்தாள் சாயா..
” சாரி யாழி… யார் மேலையோ இருக்குற கோவத்தை உன் மேல காட்டி இருக்க கூடாது .. உன்னைய என்னோட சுய நலத்துக்காக கல்யாணம் பண்ணி கொடுமை படுத்துறேன் ” என குரல் உடைந்து பேசும் கணவனை விசித்திரமாக பார்த்தாள் சாயா..
அவள் பார்த்த மறவன் இவன் இல்லையே.. இவன் தனக்காக இரக்கம் கொள்கிறான்.. எதற்காக… ??? மனதில் தோன்றியதை எல்லாம் அவனிடம் வாய் விட்டு கேட்க முடியாத நிலையில் இருந்தாள்..
“சீக்கிரம் உனக்கு இதுல இருந்து விடுதலை கொடுக்கிறேன் யாழி ” என மெத்தைக்கு மறு புறம் சென்று படுத்துக் கொண்டான்.. இத்தனை ஆண்டுகளும் உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் இருந்து வந்தவன் முதல் முறையாக இதோ அவன் மனைவியின் முன்பு பூட்டி வைத்திருந்த உணர்ச்சிகள் எல்லாம் வெளி வந்து விடுமோ என்ற பயத்தில் தான் அப்பக்கம் சென்று படுத்து விட்டான்.. சாயாலியும் மேற்கொண்டு அவனை சோதிக்க விரும்பாமல் வலி குறைந்ததில் நிம்மதியான உறக்கத்தை தழுவினாள்.
விடியும் வேளையில் அனைத்தும் வெட்ட வெளிச்சம் ஆகபோவதை அறியவில்லை இருவரும்..
புலர்ந்தும் புலராத காலை வேளையில் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் மறவன். சாயாலி அப்பொழுது தான் துயில் கலைந்து எழுந்தாள்.
” யாழி சீக்கிரம் ரெடி ஆகி வா.. நம்ம முக்கியமான ஒருத்தரை பார்க்க போகனும்” என அவன் அலுவலக வேலையில் மூழ்கி விட.. அவளும் வேகமாக எழுந்து தனக்கு தேவையான அடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் செல்ல போனவளை தடுத்தவன்.. ” வலி இப்போ பரவாயில்லையா ” என்றதும்.. ” இப்போ இல்ல ” என சைகையில் கூறினாள்.
” சுடிதார் வேணாம்.. புடவை கட்டிக்கோ” என்றதும் ஒரு நொடி யோசித்து விட்டு கையில் வைத்திருந்த சுடிதாரை பேக்கில் வைத்தவள்.. குங்கும நிறத்தில் பனாரஸ் புடவையை எடுத்துக் கொண்டாள்.
மறவன் அவனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து கொண்டு கீழே சென்று விட.. குளித்து முடித்து விட்டு வெளியே வந்தவள் மறவன் அறையில் இல்லாததை உணர்ந்து வேகமாக கிளம்ப ஆரம்பித்தாள்.
அவன் வாங்கி கொடுத்த புடவையும் புதுத்தாலியும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு வந்தவளை கண்களில் நிரப்பிக் கொண்டவன் அவளை அழைத்து கொண்டு குன்னூர் மலை பகுதிக்கு சென்றான்..
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த இடத்தை அடைந்தனர் இருவரும்.. இத்தனை நேரம் அவளும் எங்கே செல்கிறோம் என கேட்கவில்லை, அவனும் கூறவில்லை..
” இது என்னோட இடம் தான்.. இன்னொரு வீடுன்னு கூட சொல்லலாம், சின்ன வயசுல லீவ் அப்போ இங்க வந்து தான் நாங்க ஸ்டே பண்ணுவோம், அவ்வளவு பிடிக்கும் இந்த வீட்டை” என அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்.
” இங்க ஆள் இல்லையா ” என சாயாலி கை அசைக்க..
” நான் ஒரு முக்கியமான ஆளை காட்டுறேன்னு சொன்னேன்ல.. வா ” என அவளை அழைத்து கொண்டு மாடியில் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்து சென்றான்.
” யாராக இருக்கும் ” என யோசித்தும் கொண்டே அவன் பின்னே சென்றாள் சாயாலி
வெள்ளை திரைக்குள் மெத்தையில் மேல் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.. மெத்தையை சுற்றி வந்து திரையை விளக்கிய மறவன்.. மெத்தையில் படுத்திருக்கும் நபரை காட்டினான்.
அதுவரை அமைதியாக அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த அவளது கருவிழிகள் தெறித்து கொண்டு வெளியே வந்தது… கை கால்கள் நடுங்க… தரையில் நிற்க இயலாமல் அவள் தரையில் சரிய..
” இவங்க என் அம்மா சாயா.. கோமால இருக்காங்க ” என பின்னால் திரும்பி பார்த்தவன்.. சாயாலி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனான்.
சனா💖

