Loading

நட்பென்பது வெறும் நட்போடு மட்டும் நின்றுவிடாது. அதில் தாய்மை இருக்கும், அன்பு இருக்கும், பரிவு இருக்கும், எதுவந்தாலும் எதிர்த்து நிற்கும் துணிவு இருக்கும். 

இவற்றிற்கு மேல், உரிமையுணர்வு மிகுந்து இருக்கும். 

எந்த உறவானாலும் அதில் தோழமை உணர்வு இருந்தால் நிச்சயம் அந்த உறவு உறுதியோடு செழிப்பாக இருக்கும். 

தாய் – தந்தை, அண்ணன் – அக்கா – தம்பி – தங்கை என்று நம் உறவுகளிடையே நமக்கு பிறப்பால் இருக்கும் உணர்வோடு சேர்த்து நட்பிருப்பின் அதன் பிணைப்பும் உயிர்ப்பும் வானாழுக்கும் இனிக்கும். நிறைக்கும்!

இருபாலர் நட்புகள் இப்போது பெரியதாய் நாம் போற்றுகிறோம். வரவேற்க தக்கதும் கூட. ஆனாலும் இன்னும் தயக்கமும் மறுப்பும் இருக்கத் தான் செய்கிறது பெற்றோரின் பார்வையில். 

அவ்வாறான ஒரு பார்வையில் தான் இருந்தனர் சிவாவின் வீட்டாட்கள். 

கிராமத்தினரின் கண்ணோட்டம் அப்படி தான் இருக்கும் என்று நாம் கண்மூடித் தனமாக சொல்ல முடியாது. ஏன் இன்றளவும் கிராமங்களில் ஆண் – பெண் நட்புகள் சிலவை இருக்கத் தானே செய்கின்றது.

ஆனால் ஒவ்வொருவரின் மனநிலையும் முற்போக்கு தன்மையும் வேறுபடும் அல்லவா?!

பழமையில் ஊறி இருப்பவர்களுக்கு இன்றைய தலைமுறையினரின் பல விஷயங்கள் ஒத்து போகாது. 

இங்கும், சிவாவின் வீட்டினர் முக்கியமாக நம்மாழ்வாரின் எண்ணமும் அப்படியே. ஆராவமுதன் சிவாவின் நட்பை அவர் ஆதரித்ததைப் போல் அவரால் எளிதில் ஷக்தி சிவாவின் நட்பைப் பார்க்க முடியவில்லை.

நிச்சயம் இது தவறாக போக வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஒரு பெண் பிள்ளையைப் பெற்றப் பெற்றவராகத் தான் அவர் எண்ணம் இருந்ததே தவிர்த்து நிச்சயம் இருவரையும் அவர் சந்தேகிக்கவில்லை.

கால ஓட்டத்தில் சில பழக்கவழக்கங்களை ஏற்க பழகிக்கொள்ளும் நாம் இயல்பாய் இருக்கும் இருவரின் நட்பை ஏற்க எத்தனை தயங்குகிறோம். அதுவும் ஆண் பெண் நட்பென்றால் இன்றளவும் உள்ளூர ஒரு சந்தேகம் மூலாமல் அவர்களைக் கடக்க முடிவதில்லையே.

இருந்தும், எல்லாரும் அப்படி இல்லை. உண்ணதமான நட்புகளின் இலக்கணங்களும் எடுத்துக்காட்டுகளும் இன்றளவும் நட்பாகவே வாழ்ந்து வருகின்றதை சமூக வலைதளங்களின் மூலமும் நம் கடந்த வந்த சிலரின் பேச்சை கொண்டு தெரிந்திருப்போம். 

அதேபோல், எல்லாம் ஆண் – பெண் நட்பும் தெளிந்த நீராக இருக்க வாய்ப்பில்லை. பல திருப்பங்கள் ஏற்படலாம், சில உடைவுகளும் கீறல்களும் விழுந்து பழுதாகிவிடலாம். காலத்தின் கோலத்தில் எல்லாம் மாற்றம் பெற்று அதை மறந்தும் மறைத்தும் விடுவார்கள்.

அதேபோல், சிலருக்கு நட்பு நட்பாகவே எல்லா சமயமும் இருக்காதே. 

நண்பர்கள் காதல் திருமணம் செய்தார்கள் என்ற செய்திகள் படித்திருப்போம், கேட்டிருப்போம். 

நட்பு காதலாகி அது வாழ்க்கையாக்க இருவரும் இணைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் பயணம் அது. 

ஆனால் நட்பு என்பது என்றும் நட்பு மட்டும் தான் என்று இருந்தவர்கள் இருவரையும் அவர்களின் சம்மதம் இன்றி ஒரு அவசியத்திற்கும் அவசரத்திற்கும் இணைத்தால்?

நினைக்கவே பதறும் அல்லவா!

இங்கும் அப்படியான ஒரு நிலையில் உருவானது தான் சிவஷக்தியின் பந்தம்.

புகழேந்திரன், சிவனேஷின் அண்ணணைத் தான் காதல் கொண்டு கரம்பிடிக்க முன்னர் காத்திருந்தாள் அவன் மனைவி, ஷக்தி ஆராதனா!

ஆம், காதலுடனான ஆசைத் திருமணத்தைத் தான் அவர்கள் இருவரும் எதிர் நோக்கி இருந்தனர்.

ஆனால் நடந்த அனர்த்தங்கள் யாரும் எதிர்பாராத ஒன்று.

அதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஷக்தியை சிவா தன் மனைவியாக்கிக் கொண்டான்.

அண்ணியாய் வரவேண்டியவள் விதியின் மாற்றம் கொண்டு அதுவரை தோழியாய் இருந்து மனைவி ஆனாள், காதலின்றி!

நண்பனாய் பார்த்தவனை, கணவனாய் பார்ப்பது அதுவும் அப்படி ஒரு கண்ணோட்டமே இல்லாது இருந்து பார்ப்பது ஒரு பெண்ணிற்கு எத்தனை கொடுமையாக இருக்கும்?

‘நட்பெனும் தூய உணர்வு இன்றி காதல் இல்லையடி எங்களிடம்’  

இது அதீதமாய் ஷக்தியின் சமூக வலைதளங்களில் பகிரும் சிவாவுடன் அவளின் புகைப்படத்திற்கான கேப்ஷனாக இருக்கும். 

இஃதே சிவாவுடனான அவளின் உறவு சொல்லிவிடும்.

இருந்தும், ஷக்தியோ சிவவோ எதிர்பாராத திருப்பம் அவர்களின் திருமணம்! 

அதிலும் அவர்களை இணைத்த பெருமை நம்மாழ்வாரைத் தான் சேரும்.

அப்போது இருந்த சூழ்நிலை அப்படி, இப்போது எப்படி போகும் என்பது ஷக்தியின் கையில்.

🦋

நடந்ததை நினைத்தோ, புகழை நினைத்தோ, ஷக்தியின் மனநிலையை எண்ணியோ எப்படியோ நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. இன்னும் சிவா அவன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு துளி நகரவில்லை.

இரவு நேரத்து பூச்சிகளின் ரீங்கார சிணுங்கள் பேரொலியாக இரைந்து கேட்க, அவன் மனதும் இரைந்துக் கெண்டிருந்தது.

நிர்மலமாக இருக்க பார்க்கிறான் இருந்தும் முடியாதத் தவிப்போடும் காதலோடும் போராடுகிறான் மனதளவில் ஷக்திக்குத் தெரியாது. 

ஷக்திக்கு இருக்கும் அழுத்தம் காதலால் விளைந்த ஏமாற்றம் என்றால் இவனுக்கு அவன் காதலே ஏமாற்றம் தந்துவிட கூடாது என்ற அழுத்தம்.

அதைத் தொட்டு, மனதில் எண்ணற்ற கலவையான குழப்பங்கள். ஷக்தி, புகழ், அவன், அவனின் சுற்றம் என்று பலதும் அவனை போட்டு உலுக்கியது.

இவையனைத்தையும் விட, ஷக்தி என்பவளின் மனநலம் பற்றிய எண்ணங்கள் தான் அவனை பெரியதாய் போட்டு அமிழ்த்தியது!

காதல், அந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே.. சொல்லில் வடிக்கவியலாதது.

நன்மையானலும் சரி எதிர்மறையானாலும் சரி, அது கொடுக்கும் தாக்கம் அபரிவிதமானது!

இந்த இரண்டு நாட்களில் அவன் அறிந்த ஷக்தியின் நடவடிக்கைகள் எல்லாம் உணர்த்திய செய்தி, அவள் அவனுக்காக அவளுக்காக அவன் பக்கம் வர தயங்கி தயாராகிறாள் என்பதே!

இருந்தும், முன்னர் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் சுவடுகள் அவள் மனதை கீறிவிட வேண்டாம் என்று எண்ணியே அவன் அவளை ஆழ்வார்திருநகரி அழைத்துவர தயங்கினான். ஆனால், இப்போது புகழையும் அவள் எதிர்நோக்க வேண்டும் என்று நினைக்கும் போது, மனதிற்குள்ளாக பல போராட்டம்.

நிச்சயம் ஷக்தியை அவன் சந்தேகிக்கவில்லை, அது அவன் சிந்தையிலும் துளிக்கூட வராது. ஆனால், புகழேந்திரன்?

அண்ணனைப் பற்றி நன்கு தெரிந்த தம்பியவன் தானே இவன். 

“இன்னும் எத்தன நேரம் இங்கையே உட்காந்திருக்க போற ஷிவ் நீ?” 

கையைக் கட்டிக்கொண்டு நிலப்படியில் சாய்ந்து நின்றிருந்தாள் ஷக்தி.

மலர் முன்னரே சென்றிருக்க இவர்கள் இருவர் மட்டும் அந்த தோட்ட வீட்டில்.

“ம்ம்ப்ச், நீ போய் தூங்கு. நான் வர லேட் ஆகும்”

“நீ என்ன நினைக்கறேன்னு எனக்கு தெரியும் ஷிவ்”

அவனிடம் பதிலில்லை!

“நீ இவ்வளோ யோசிக்காத, என்ன நடக்குதே அது ஃபேஸ் பண்ண நான் ரெடி. என்கூடத் தான நீ இருக்க, அப்புறம் என்ன மேன்?” அவள் பேச்சை அவன் கேட்டாலும் ஒற்றை வார்த்தை வரவில்லை அவனிடம்.

சில நிமிட மௌனங்கள் அவர்களின் மனதை பேசியது.‌ 

“ரெண்டறை மாசத்துல எதுவும் மாறப்போறதில்லை ஷிவ்” திடீரென ஷக்தியின் குரல் அவன் காதோடு மனதையும் கிழித்தது.

கையொடு சேர்ந்து கண்களையும் இறுக மூடிக்கொண்டான். 

உணர்வுகளின் பிழம்பாக அவன் மாறி நிற்க, அவளோ உள்ளத்தில் இருந்தவற்றை அவனிடம் இறக்கும் நிமிடம் இது என்று நினைத்தாளோ என்னவோ கொட்டித் தீர்க்க முனைந்தாள்.

“அதுக்கு பேர் காதல்ன்னு நானா நினைச்சுட்டேன்னு தோனுது ஷிவ். எல்லாம் அந்த ஒரு பேப்பர்..” என்றவள் தொண்டைக் கமர ஆரம்பித்தது.

ஏதோ தோன்ற சட்டென்று அவன் பக்கத்தில் வந்தமர்ந்தவள், “ஏன்டா என்கிட்ட சொல்லல? உன் ஷக்தி மேல பாசமே இல்லையா உனக்கு” என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டாள்.

அப்போது இருந்த தளை இன்று களையப்பட்டது போல. அவனின் ஷக்தி பெண்ணை இறுக அணைத்துக்கொண்டான் சிவா.

“அழாத” என்றான் அழுத்தமாய்.

அவள் கேட்பது புரிந்தது; கணவனாய் இப்போது அதை நினைக்க, கோபம் கொழுந்துவிட்டது அவனுள்ளத்தில்.

அதை அடக்கியவனாக, “அழாத ஆரு, என் மொத்தமும் நீ தான?” என்றான். 

இதைவிட தெளிவு வேறு என்ன இருக்க முடியும்?

அவள் உச்சில் அவன் தலையழுத்தியபடி அவன் சொல்லச் சொல்ல, அவன் அணைத்த அணைப்பை இறுக்கினாள் பெண்ணவள்.

அதில் மிளிர்ந்தது அன்பும் காதலும்!

“ஏன்டா இப்படி பண்ணுற” என்று மேலும் அவன் சட்டையின் காலரை அவள் இறுக்க, “என் குலாப்காக” என்று சொன்னவன் கண்களும் நிலவொளியில் மின்னியது.

அது அவளை இன்னும் உசுப்பியிருக்க, நண்பன் கணவனானதைக் காதலுடன் ஏற்றுக்கொண்டாள் பெண்ணவள்.

இயற்கை மாற்றங்கள் எப்படி நம்மால் கணிக்க முடியாதோ அதேபோல் தான் நம் உள்ளத்து மாற்றமும். 

ஒரு விநாழிகை போதும் நம்மிடம் அது நிகழ்த்தும் வர்ணஜாலத்தைக் காணிட. 

ஆயின், அதை உணர்வாக பார்த்து உயிரால் நிரப்பி வாழ்நாளுக்கும் பொக்கிஷமாய் சேமித்து வைக்க பரஸ்பர அன்பும் அரவணைப்பும், விட்டுக்கொடுத்தும் தோளணைத்து போவதும், உடலோடு மனதாலும் சங்கமித்து இருந்தால் தான் அந்த பந்தம் வாழ்வாங்கு வாழும்.

அதை துணை உணர்த்தும் ஒரு செய்கையில் காணக்கிடைத்தால் போதும், நம் வாழ்வு சிறந்துவிடும் என்ற நம்பிக்கை தன்னைப் போல் வந்து ஒட்டிக்கொள்ளும் இறுதிவரை!

அதை உணர்ந்து கொண்டாள், ஷக்தி ஆராதனா.

இரண்டரை மாதங்களில் புதிய காதலா? என்ற கேள்விக்கு பதில் அவளிடம் இல்லை.

ஆனால் உண்மை காதலுக்கும், ஒரு பொய்யான பின்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொண்டவள் சிவாவையும் அவனின் அன்பையும் பரிபூரணமாய் ஏற்றுக்கொள்ள முனைந்த இடம் அவளுக்கு டாக்டர் ரமணி ராஜம் கொடுத்த சில அறிவுரைகளும் ஆலோசனைகளும்.

ஆம், அவரின் பேச்சின் வழி அவளின் வாழ்க்கை வழியை நல்ல முறையில் மாற்றி அமைக்க அவள் எண்ணி எடுத்து வைத்த சில அடிகளிலேயே சிவாவின் காதலை புரிந்திருந்தால் பேதை.

ஒரு மாற்றம் நிகழ நாள் கணக்கெல்லாம் தேவையில்லை. நிமிடங்கள் போதும். இவளுக்கு கடந்த சில நாட்களே பெரிது தான். அவனை பற்றி முற்றும் முழுதாகத் தெரிந்தவளுக்கு அவனின் காதலை சரியாய் புரிந்து கொள்ள எடுத்துக்கொண்ட நிமிடங்களின் எண்ணிக்கையில் தான் சற்று அதிகரித்திருந்ததே தவிர்த்து அவன் காதலின் ஆழத்தை பெண்ணவள் அறிய முற்படவில்லை.

அது அவளுக்கு தேவையும் இல்லை. காரணம், அவனை முழுமைக்கும் அறிந்தவளுக்கு அந்த ஒன்றை காணிட முடியாமலா போகும்?

தலைவனின் அரவணைப்பிலும் காதலின் திளைப்பிலும் ஆழ்ந்து நித்திரை கொண்டிருந்தாள் தலைவியவள்.

காதலென்று கண்ணுட்ட பின் அதை தலைவனிடத்து சொல்ல தயக்கம் வந்தது. அதைவிட அவளின் மனநிலையும் இன்னும் பிற நுண்ணுணர்வுகளையும் அவள் ஆராய வேண்டியிருந்தது.

அதுகொடுத்த அழுத்தமும் அழுகையோடு சேர்ந்து தலைவனிடமே தஞ்சம் கொண்டுவிட்டாள், கோமகள்.

அவனுக்கு நிச்சயம் புரிந்தது அவள் உணர்வுகளின் வெளிப்பாடு. அவள் இத்தனை எளிதில் அவனை ஏற்றதே அவனுக்கு வாரணம் ஆயிரத்தின் பலமாய் இருந்தது.

இனி, புகழோடு வீட்டாரும் இவ்விருவரும் பயணிக்கும் பயணத்தை நினைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடன் அவன் மொத்தமாய் இருக்கும் ஷக்தியைத் தூக்கியபடி வீட்டிற்குள் சென்றான் இனி வரும் விடியல் அவர்களுக்கானது என்ற எண்ணத்துடன்!

“லவ் யூடி குலாப்” என்று மென்மையை முணுமுணுத்தபடி அவளை பாயில் படுக்க வைத்தவன், அவள் நூதலில் அழுத்தமாய் முத்தமொன்றை பதித்து அவளுடனே சரிந்துவிட்டான், உள்ளத்தளவில்.

 

•••

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்