Loading

    தான் ஊருக்கு திரும்ப வருவது பற்றி  தெரிந்தால், ஊரின் முக்கியஸ்தர்கள் தன்னை தேடி வருவர், அதோடு கண்டிப்பாக தன்னை தொடர்ந்து அந்த ஊரிலேயே தங்குமாறு கூறி, தனக்கு வீண் சங்கடத்தை ஏற்படுத்துவர் என்று தெரிந்து தான் விஷ்வா, இரவு நேரத்தில் பாண்டியன் இல்லம் வந்து சேருமாறு, தன் இருப்பிடத்தில் இருந்து, நிலாவோடு தாமதமாக கிளம்பினான்.

    ஆனால் ஊருக்காக உழைத்தவனை அவ்வளவு சீக்கிரம், தாங்கள் மறக்க மாட்டோம் என்பதற்கு சான்றாக, இவ்வளவு வருடம் கழித்து தங்கள் ஊர் திரும்பும் அவனை, தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்துத் தான், ஊரார் அனைவரும் பாண்டியன் இல்லத்தின் முன்பு அந்த இரவு நேரத்திலும் குழுமி இருந்தனர்.

    ஊர் மக்களுக்கு திருமணத்தன்று, பாண்டியன் இல்லத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

   சிவகாமியின் உடல்நிலை காரணமாகத் தான், விஷ்வா இங்கிருந்து சென்று விட்டதாக ஊர் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். விஷ்வா எதிர்பார்த்ததற்க்கு மாறாக, ஊரே பாண்டியன் இல்லத்தின் முன்பு திரண்டிருக்க, அவனது வாகனம் உள்ளே நுழைவதற்க்கே சற்று சிரமப்பட்டது. நிலா கூட அந்த கூட்டத்தைக் கண்டு சற்று மிரண்டு தான் போனாள்.

    போர்ட்டிகோவில் காரை நிறுத்தியவன், அங்கு வாசலில் குழுமி இருந்த தன் குடும்பத்தாரைக் கண்டு, ஒரு பெருமூச்சோடு நிலாவிடம் திரும்பினான்.

    “பயப்படாத, நீ அமைதியா இரு, நான் பேசிக்கிறேன்.”

     “நான் தைரியமா தான் இருக்கேன், நீங்க எதுவும் பதட்டத்துல உளறி வைக்காம இருந்தா சரி, இப்போ இருந்து நான் மிஸ்ஸஸ்  விஷ்வேஸ்வர பாண்டியன், அதோட இந்த குடும்பத்தோடு மூத்த மருமக, அதை நீங்க நியாபகம் வச்சுக்கிட்டா சரி.”

    என்றவள் அவனுக்கு முன்பாக காரில் இருந்து கம்பீரமாக இறங்கி இருந்தாள். இந்த சிச்சுவேஷன்லையும் அடங்கறாளா  பாரேன் என்று நினைத்தபடி, அவசரமாக காரில் இருந்து இறங்கினான் விஷ்வா. அவனை நெருங்கி வந்த ஊர் பெரியவர்,

    “தம்பி நல்லா இருக்கீங்களா? உங்கள பார்த்து தான் எவ்வளவு வருஷம் ஆச்சு? அம்மாக்கு வைத்தியம் பார்க்க வெளியூர் போயிருக்கீங்கன்னு நினைச்சோம், நீங்க அங்கேயே தங்கிட்டீங்களே, இது நியாயமா? உங்க அப்பாவுக்கு அப்புறம் நீங்க தானே இந்த ஊரை வழி நடத்திப் போகணும்?”

   அவர் கேள்விகளுக்கு புன்னகை ஒன்றை மட்டுமே, பதிலாக அளித்தான் விஷ்வா. அவன் அருகில் நின்றிருந்த உதயநிலாவை கண்டவர்,

   “தம்பி இது…?”

   “என் மனைவி உதயநிலா, அம்மாவோட ஹெல்த் காரணமா, எங்க கல்யாணத்தை சிம்பிளா முடிக்க வேண்டியதா போயிருச்சு.”

    வீட்டு வாசலில் அவனுக்காக ஆசையோடு காத்திருந்த அத்தனை முகங்களும், தற்போது அவன் கூறிய பதிலில் ஒவ்வொரு விதமாக உறைந்து போய் நின்றது.

   அதுவும் நித்திலாவிற்கு கேட்கவே வேண்டாம், நிலாவைக் கண்டதும் தீயை மிதித்தது போல தகித்துக் கொண்டிருந்தாள்.

    “அடிசக்க அது தான் வீட்டு மருமகளை வரவேற்க, வீடு இப்படி திருவிழா கோலமா இருக்கா என்ன? ஈஸ்வரன் ஐயா நீங்க இதைப் பத்தி சொல்லவே இல்ல பாத்தீங்களா?”

    அவர் திரும்பி தேவகியை பார்த்தவர் பிறகு சூர்யாவை பார்த்து முறைக்க, உடனே அவன் தலைகுனிந்து கொண்டு  முணுமுணுத்தான்.

    “ஐயோ இன்னும் அவன் உள்ளயே வரல, அதுக்குள்ள இந்த பெருசு தாத்தாவுக்கும் பேரனுக்கும் சண்டையை ஆரம்பிச்சு விட்டிடும் போலயே.”

   “எங்களுக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லய்யா. அதுவும் திருவிழா சமயத்துல அம்மன் சீரை சுமந்து வர்றதுக்காகவே, உங்க மூத்த மருமகளை கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் ஐயா.”

   அவர் பேசிக் கொண்டே செல்ல, சூர்யா தான் அவர்களை காப்பாற்ற வெளியே ஓடி வந்தான்.

    “ஐயா அவங்க ரொம்ப தூரம் பயணம் பண்ணி வந்திருக்காங்க, இன்னைக்கு ஓய்வு எடுக்கட்டும் நாளைக்கு உட்கார்ந்து எல்லா கதையும் பேசுவோம் சரியா?”

   “ஆமாம்பா நான் பாரு ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சதால பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க, என்னம்மா தங்கச்சி தேவகி மொத மொத புள்ளைங்க வீட்டுக்குள்ள நுழையிறாங்க, அப்படியே நின்னா எப்படி? பிள்ளைகளுக்கு ஆரத்தி சுத்தச்  சொல்லுங்க, உங்க வீட்டு மகாலட்சுமி வலது கால் எடுத்து வைச்சு வீட்டுக்குள்ள  வர வேணாமா?”

  தேவகி பாட்டிக்கு ஒரு பக்கம் மனதில்  மகிழ்ச்சி தோன்றிய போதும், மறுபக்கம் தங்களிடம் கூறாமல் அவன் திருமணம் செய்து கொண்டதை நினைத்து, வருத்தமும் தோன்றியது.

    ஈஸ்வர பாண்டியன் தாத்தா கோபத்தோடு தனது அறை நோக்கிச் சென்று விட, மேனகாவும் அகல்யாவும் அவர்களுக்கு ஆலம் சுற்றி நெற்றியில் திலகம் இட்டனர். தனது குடும்பத்தாரின் முகபாவனைகளை கவனித்தபடியே, நிலாவின் கைகளை கோர்த்துக் கொண்டு, பாண்டியன் இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தான் விஷ்வா.

   ஊரார் அனைவரும் சிறிது நேர, நல விசாரிப்புக்களுக்குப் பிறகு களைந்து சென்று விட, தன்னை நோக்கி வரும் உறவுகளோடு, நின்று பேச மனமின்றி  விறுவிறுவென்று மேலே செல்லத் தொடங்கியவனை, நிறுத்தியது தேவகிப் பாட்டியின் குரல்.

   “ராசா, உன் கல்யாணத்தை பார்க்க கூட இந்த கிழவிக்கு அனுமதி இல்லையா?  அப்படி என்னப்பா நான் கொலை குத்தம் பண்ணிப் போட்டேன்…? அன்னைக்கு உன் கல்யாணத்தை நடத்தி காட்டனுமுன்னு நினைச்ச உன் தாத்தா, தெரியாம சொன்ன அந்த ஒத்த வார்த்தைக்கு, எங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திட்டப்பா. எங்க ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாங்குற முடிவுக்கே வந்திட்டயாப்பா?”

  “இது ஒன்னும் நானா எடுத்த முடிவில்லையே, என் மேல எந்த நம்பிக்கையும் இல்லாம நீங்களா எனக்கு கொடுத்த தண்டனை தானே இது.”

   “ஐயோ ராசா அது…”

    “வேண்டாம் என் அம்மாவுக்காக மட்டும் தான் நான் இங்க வந்திருக்கேன், அவங்களுக்கு பூரணமா குணமானதும் கண்டிப்பா இங்கிருந்து அவங்களை கூட்டிட்டு கிளம்பிடுவேன். கண்டிப்பா இங்கிருந்து உங்களுக்கு எந்த  சங்கடத்தையும் கஷ்டத்தையும் தர மாட்டேன்.”

     என்றபடி வேகமாக  தனது அன்னையின் அறையை நோக்கி நடந்தான் விஷ்வா. அறைக்குள் நுழைந்து தனது அன்னையின் கைகளை, பற்றிக் கொண்டவனுக்கு மனம் முழுவதும் வேதனை. அன்று தன்னை புரிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற்றியவர்களிடம், நின்று பேச ஏனோ அவனுக்கு மனம் வரவில்லை.
   
    என்ன தான் அப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருந்தாலும் கூட, தன்னை அவர்கள் சந்தேகித்ததை நினைத்தாலே, இன்னும் கூட அவன் மனது ரணமாக வலித்தது.

    சிறிது நேரத்தில் நிலாவின் நியாபகம் வர, ஐயோ தனது குடும்பத்தார் அவளை என்னென்ன கேள்விகளால் எப்படி  துளைத்துக் கொண்டிருக்கிறார்களோ? இப்படி அவளை அங்கேயே தனித்து விட்டுவிட்டு வந்து விட்டேனே, என்று தனது தலையை பிடித்துக் கொண்டவன், மீண்டும் வேகமாக ஹாலை நோக்கி விரைந்தான்.

   ஆனால் அங்கு அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தன் குடும்பத்தாரோடு, மகிழ்ச்சியாக உரையாடிக்  கொண்டிருந்தாள் அவனது மனையாள்.

     விஷ்வா கோபமாக மாடி ஏறிச் செல்ல, அவனைப் பார்த்தபடியே கண்ணீர் உதிர்த்துக் கொண்டிருந்த தேவகிப் பாட்டியின், கால்களில் வந்து விழுந்தாள் நிலா.

    “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி.”

    பதறிப் போனவர் பின்னால் நகர,

       “அவர் இப்படி கோபமா பேசிட்டு  போனாலுமே, உங்க எல்லாரோட ஆசியும் வேணுங்கறதுக்காக தான், காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட என்னை,  அடுத்த நாளே இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காரு.

   இதுல இருந்தே உங்களுக்கு அவரோட மனசு புரியலையா பாட்டி? அது மட்டும் இல்ல எங்க கல்யாணம் முடிஞ்சதும் முதல் வேலையா, அங்க வீட்ல இருந்த இந்த குடும்ப போட்டோகிட்ட தான், ஆசிர்வாதம் வாங்க என்னை கூட்டிட்டு போனார் தெரியுமா?”

    அங்கிருந்தவர்கள் அனைவரும் அவளது பேச்சை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க, சூர்யா மட்டும் வாயைப் பிளந்தபடி தன் மனதோடு பேசிக் கொண்டிருந்தான்.

   “இது என்ன பொண்ணா புளுகு மூட்டையா? இப்படி அடுக்கடுக்கா  அவுத்து விட்டுகிட்டே இருக்கா? இப்ப எதுக்காக இந்த லேடி புரூஸ்லி, திடீர்னு நடிகையர் திலகம் அவதாரத்தை எடுக்குதுன்னு தெரியலையே?”

     தனது கால்களில் விழுந்திருந்த நிலாவின், தோள்களை பிடித்து தூக்கிய தேவகிப் பாட்டி,

    “அம்மாடி நீ சொல்றது எல்லாம் நிஜம் தானா? ”

    “ போங்க பாட்டி எனக்கு இன்னும் நீங்க ஆசிர்வாதமே கொடுக்கல, அப்போ உங்களுக்கு என்னை பிடிக்கலையா?”
 
   என்று அவள் முகத்தை சுருக்க,

     “ராசாத்தியா இருப்ப தாயி, பூவும் பொட்டுமா குழந்தை குட்டிகளோட தீர்க்க சுமங்கலியா, நூறு வருஷம் நல்லா இருப்ப. என் பேரனோட முடிவு என்னைக்குமே தப்பா இருக்காது, அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

    அவன் உன்னை தன்னோட வாழ்க்கைத் துணையா தேர்ந்தெடுத்திருக்கான்னா, கண்டிப்பா நீ எப்படியும் இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா தான் இருப்ப, அதுல எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.”

   “ஏன் பாட்டி உங்க பேரனோட முடிவு  மேல, உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை கூட, எப்படி பாட்டி உங்க பேரன் மேல இல்லாம போச்சு?”

   அனைவருமே ஒரு நிமிடம் அவளது வார்த்தையில் அதிர்ந்து போய் நின்றனர்.

   “முகம் தெரியாத ஏதோ ஒரு பொண்ணு சொன்னாங்கற ஒரே காரணத்துக்காக, இவ்வளவு வருஷமா பாசத்தோட வளர்த்த உங்க பேரனை சந்தேகப்பட்டு, வெளிய அனுப்பினது மட்டும், எந்த வகையில நியாயம் பாட்டி? இதுல அவருக்கு கோபமும் வரக் கூடாதுன்னா எப்படி?”

   தனது அறையில் இருந்தபடியே, இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரபாண்டியின் மனதில், இவளது வார்த்தைகள் அனைத்தும் சாட்டை அடியாக விழுந்தன.

    கண்ணீரோடு நின்று கொண்டிருந்த தேவகி பாட்டியின் கண்ணீரைத் துடைத்த நிலா,

    “அழாதீங்க பாட்டி, உங்க பேரனுக்கு உங்க மேல கோபம் எல்லாம் எதுவும் கிடையாது, இவ்வளவு நாள் கூட இருந்த தன்னோட உறவுகளே, தன்னை புரிஞ்சுக்கலையே, அப்படிங்கிற வருத்தம் மட்டும் தான். அதுல… தப்பு எதுவும் இல்லையே பாட்டி? இந்த வருத்தத்தை கூட உங்க தூய்மையான அன்பால, சீக்கிரமாவே மாத்திட முடியும்.”

   “அம்மா எங்க அண்ணன் மருமக அப்படியே குணத்துல, உன் மருமக சிவகாமி மாதிரியே இருக்காம்மா. நீங்க ஆசைப்பட்டபடியே நம்ம விஷ்வாவுக்கு பொண்ணு அமைஞ்சிருக்கு, அதோட விஷ்வாவும் இப்போ நம்ம வீட்டுக்கு திரும்ப வந்தாச்சு, இதுக்கும் மேல எதுக்குமா வருத்தப்படுறீங்க. இனி இந்த குடும்பத்தோட நல்லது கெட்டது அத்தனையும், இந்த வீட்டோட மூத்த மருமகளா, இந்த பொண்ணு பார்த்துக்குவா, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”

    எப்போதும் குதர்க்கமாகவே பேசும் விஜயாவே, நிலாவின் பேச்சில் மயங்கி  அவளை ஏற்றுக் கொண்டு விட, மற்றவர்களை பற்றி கேட்கவா வேண்டும்? அடுத்த நிமிடமே அவளோடு இணக்கமாகி விட்டனர்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நிலா வந்ததும் இந்த போடு போடுற .. உண்மை தெரியணும் .. குடும்பமே சேர்த்து உன்னை வெளில துரத்திடுவாங்க .. சூர்யா நிலாவுக்கு லேடி புரூஸ்லீ.. நடிகையர் திலகம் .. நல்லா பேர் வைக்கிற .. விஷ்வா 😜😜😜😜😜சிரிக்காம காமெடி பண்ணுவ ..