
என்னுள் நீ காதலாய் 💞
அத்தியாயம் 26
இனியன் அவன் அறைக்கு சென்று அவன் துணிகளையும் , சர்ட்டிபிகேட்களையும் , அவன் அப்பா அம்மா போட்டோக்களையும் , அவர்கள் நினைவாக சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான் . இதை பார்த்த அண்ணன்காரன் அவனை “இந்த வீட்டிலேயே இரு” என்று சொல்லாமல் அவன் பெட்டியை சோதனை செய்தான் .
அவன் விலையுயர்ந்த எதையும் எடுத்து செல்லவில்லை என்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுடன் உள்ளே சென்று விட்டான் . அவன் அப்பா அம்மா வாழ்ந்த வீடு .. அவன் சிறு வயது நினைவுகள் எல்லாம் அங்கே இருக்க மொத்தமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினான் இனியன் .
அங்கு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இனியனின் 5 வயது அண்ணன் மகள் .. “சித்தப்பா வெளில போறியா .. எனக்கு சாக்லெட் , சிப்ஸ் எல்லாம் வாங்கிட்டு வா ” என்று சொல்ல .. கண்கள் கலங்க அவளை தூக்கி அவளுக்கு முத்தங்கள் வைத்தான் . அவளை இறக்கி விட்டவன் சிரித்துக் கொண்டே அவளிடம் “பாய்” சொல்லி கிளம்பி விட்டான் .
இனியன் அப்பா இறந்த போது பதட்டத்தில் இருந்தவனுக்கு ஆறுதல் சொல்லி .. பிரச்சனையில் அவனுக்கு தோளோடு தோள் தந்து .. அவன் அப்பா இறுதி காரியங்களுக்கு பணம் செலவு செய்து .. அவனுக்கு ஆதரவாக இருந்தான் இளமாறன் .
அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அவர்கள் கூடவே தங்க வைத்து .. அவனுக்கு எல்லாம் செய்து பார்த்துக் கொண்டார்கள் புனிதாவும் இளமாறனும் . இளமாறனுக்கு திருமணம் என்றதும் தான் வீடு பார்த்து தனியாக சென்றான் இனியன் . அப்போதும் இளமாறனும் புனிதாவும் அவனுக்கு வீடு பார்த்து .. வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி தந்தார்கள் .
இனியன் இளமாறனை பார்த்த பிறகு ரேவதியும் செந்தமிழும் அன்றிரவு .. “ச்சே .. பாவம்ல ரெண்டு பேரும்” என்று தங்கள் பாவ நிலையை மறந்து .. பேதை பெண்கள் தங்கள் மனம் விரும்பியவனுக்காக வருந்தினார்கள் .
“அவங்க அண்ணனையும் அந்த மாமனாரையும் அடி வெளுக்காம சும்மா அழுதுட்டு இருக்கான் இனி” என்று ரேவதி சொல்ல .. “அதான் அவர் ஃப்ரெண்ட் இருக்காருல .. அவர் தைரியமா இருக்காரு .. எப்படிலாம் சண்டை போடுறாரு .. ஃப்ரெண்ட்க்கு பிரச்சனைனு எப்டி சண்டைக்கு போறாரு .. இளா மட்டும் அழகில்ல அவர் மனசும் ரொம்ப அழகு” என்றாள் செந்தமிழ் .
பார்த்து விட்டு வந்த ஒரே நாளில் இருவருக்கும் செல்ல பெயர் வைக்கும் அளவு வந்து விட்டார்கள் பெண்கள் . எல்லாம் வயசுக் கோளாறு .. அதை தாண்டி சதா சர்வகாலமும் பிரச்சனைகளில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஆண்களின் நினைவுகள் மனதிற்கு இதமாக இருந்தன .
இருவரும் அப்போது தான் தங்கள் வாழ்வில் தாங்கவே முடியாத பெரும் பிரச்சினைகளை சந்தித்து .. மன அழுத்தத்தில் இருக்க .. அந்த காயங்களுக்கு அந்த ஆண்கள் தான் அவர்கள் அறியாமலே இருவருக்கும் மருந்தாகி போனார்கள் .
“ஏன் டி அவங்க எங்க இருப்பாங்க?? என்ன வேலை பார்ப்பாங்க?? என்ன படிச்சிருப்பாங்க?? இனியன் அவன் வீட்டுக்கு போயிருப்பானா?? அங்க என்ன பிரச்சனை நடந்திருக்கும்?? இளமாறனுக்கு குடும்பம் இருக்கும்ல?? அவங்க எப்படி இருப்பாங்க??” இப்படி இருவரும் மாறி மாறி கேள்விகள் கேட்டு பதில் தெரியாமல் சிரித்துக் கொண்டார்கள்.
என்னமோ அவங்க இனியும் இளாவும் சந்தோஷமா இருந்தா போதும் என்று இருவரும் மனதை தேற்றிக் கொண்டார்கள் . ஆனா இங்க தான் கடவுள் ட்விஸ்ட் வச்சாரு ….
செந்தமிழின் அப்பா வந்து “உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு .. என்னை நம்பி வா” என்று அவளை அழைக்க .. ஃப்ரெண்ட்க்கு பாரமா இருக்க விரும்பாதவள் அப்பாவுடன் ஊருக்கு சென்றாள் .
செந்தமிழுக்கு பார்த்த மாப்பிள்ளையாக வந்திறங்கினான் இளமாறன் . ஹாலில் அமர்ந்திருந்தவனை பார்த்தவள் சந்தோஷத்தில் பூரித்து போனாள் . “என் இளா வந்திருக்கான் .. அவன் எனக்கு தான்” என்று உரிமையோடு நினைத்து அவனை அறையில் இருந்த ஜன்னல் வழி பார்த்தாள் .
“அவளிடம் தனியாக பேச வேண்டும்” என்று அவன் சொல்ல .. மனதில் காதல் பொங்க .. அவள் பட்டுப் பாவடையை இரு கைகளின் விரல் நுனியில் தூக்கி பிடித்து துள்ளலாக நடந்து .. அவனுடன் துள்ளி குதித்து மேலே மொட்டை மாடிக்கு சென்றாள் பெண்ணவள் .
அங்கே வெட்கத்தோடு அவனை பார்த்து ரசித்து கொண்டே அவள் நின்றிருக்க .. இளமாறன் சேரில் அமர்ந்திருந்தான் . அவனும் அவள் காதல் பார்வையில் சொக்கித்தான் போனான் . அவள் வெட்கத்தில் தாவணியின் முனையை பிடித்து சுழற்றி கொண்டே நின்றிருக்க .. அவள் கண்களில் இருந்த காதலும் முகம் முழுக்க இருந்த மகிழ்ச்சியும் அவளை கூடுதல் அழகாக காட்டின.
தன் முகத்தை இமைக்காமல் பார்த்து ரசிப்பவளை .. தன்னை அறியாமல் எந்த கூச்சமுமின்றி அவள் மொத்த அழகையும் கண்டு ரசித்தான் இளமாறன் . அவன் ரசிப்பதை கண்டு அவள் முகம் செவ்வானமாய் சிவந்தது .
தன்னை மீறி அவள் மேல் செல்லும் இதயத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்றான் .. தாவணி மூடியிருக்கும் அவள் முன்னழகை .. தாவணியின் வெளியே தெரியும் இடையழகை ரசித்தவன் “என்ன நான் இவளை கண்ட இடத்துல பார்க்குறேன் .. ச்சீ இதல்லாம் தப்பு” என்று மனதிற்குள் தன்னைத் தானே நொந்து கொண்டான் . தன்னை மெல்ல கட்டுப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் .
அப்புறம் என்ன பேசி .. அவள் நெஞ்சில் இடியை இறக்கி .. இருந்த கொஞ்ச சந்தோஷத்தையும் மறக்க செய்து அவளை அழ வைத்தான் .
இளமாறன் திருமண கண்டிஷனை சொல்ல .. “இங்கிருந்து தப்பிக்க வேண்டும் .. பாதுகாப்பு வேண்டும் .. அதே சமயம் நேசித்தவன் அருகாமையில் கொஞ்ச நாட்கள் இருக்கலாம்” என்று நினைத்தவள் திருமணத்திற்கு சம்மதித்தாள் . அவன் வார்த்தைகளால் காயப்படுத்திய போதும் கூட அவளுடைய காதல் குறையவில்லை .
அவன் காதலுக்காக ஏங்கி இரவெல்லாம் அழுதாள் . “ஒருநாள் அவனுடன் வாழ்ந்தால் போதாதா” என்று நினைத்தவள் .. ரேவதி சொன்ன மாதிரி அவனுக்கு மருந்து கொடுத்து சந்தோஷமாக இருந்தாள்.
ஆனால் அன்று இளமாறன் பேசிய அனைத்தும் அவளுக்கு ஆச்சரியம். அவள் நேசிக்கும் காதலன் வாயில் இருந்து வந்த அந்த “ஐ லவ் யூ தமிழ்” என்ற வார்த்தைகளில் .. அவளுக்கு உலகின் மொத்த சந்தோஷமும் கிடைத்து விட்டது. அவன் “தமிழ் …” என்று அழைக்கிறான். “அவளை காதல் கண் கொண்டு பார்க்கிறான் . அவளை உரிமையோடு தழுவுகிறான். இதெல்லாம் கனவில் கூட அவள் நினைக்காதது.
ஆனால் நிரஞ்சனாவை நினைத்து கொண்டு தான் உன்னுடன் இருந்தேன் என்று சொல்லி .. இளமாறன் ஒரே நாளில் அந்த மொத்த சந்தோஷத்தையும் பறித்துக் கொண்டான் . அவன் மேல் காதல் பித்து கொண்டவள் அன்று மொத்தமாய் தெளிந்தாள் . அன்று தான் அவன் மனதில் அவளுக்கு கொஞ்சம் கூட இடமில்லை .. அவன் வாழ்க்கையிலும் அவளுக்கு இடமில்லை என்று தவறாக புரிந்து கொண்டாள் .
இளமாறனை முதன்முதலில் பார்த்த கதையை மட்டும் சொன்ன செந்தமிழ் .. “எனக்கு உங்களை அப்போவே பிடிச்சிருந்தது .. நான் உங்க நல்ல மனசை தான் விரும்பினேன்” என்று மட்டும் சொல்லி விட்டு மீண்டும் அமைதியாக படுத்துக் கொண்டாள். அவன் மேல் இருந்த முழுமையான காதலை அவள் சொல்லவில்லை .
இளமாறனுக்கு இருந்த கொஞ்ச போதை மட்டுமல்ல தூக்கமும் பறந்தே போனது . போர்வையை கழுத்து வரை போர்த்தி தூங்கும் அவள் முகத்தை பார்த்தான் . அவளிடம் அவனுக்கு மிகவும் பிடித்ததே அவள் கள்ளம் கபடமில்லாத குழந்தை முகம் தான் . பெண் பார்க்க சென்றிருந்த போது இந்த முகத்தில் இருந்த அந்த காதலை அவனும் தான் பார்த்தான் .
அந்த காதலும் அவள் சிரிப்பும் எனக்கானது என்று நினைத்து கர்வத்தில் அவன் மீசையை வருடிக் கொண்டான் . தன்னை நேசிக்க .. அளவில்லாமல் காதலிக்க ஒருத்தி இருக்கிறாள் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் . “அதனால் தான் என் மனதும் அவள் மேல் சாய்ந்தது போல” என்று நினைத்து சிரித்தான் .
இளமாறனுக்கு செந்தமிழை பார்த்ததும் பிடித்து போனது . அதை காதல் என்று அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை . அவளுக்கு தகுதியானவன் அவனில்லை என்பது தான் அவன் எண்ணம் . திருமணத்திற்கு பிறகு அவள் மேல் இருந்த காதல் அதிகமாகி போனது . அவள் அருகில் இருக்கும் போது அவள் வாசமும் .. அவளை அறியாமல் அவள் உடைகள் விலகும் போது தெரியும் அவள் மூடி வைத்திருக்கும் உடல் அங்கங்களும் அவனை இம்சித்தன .
“இது என் உடல் இச்சை போல .. புதிதாய் ஒரு பெண்ணை அதும் இவ்வளவு அருகில் நெருங்கி பார்க்க .. மனம் தடுமாறுகிறது” என்று நினைத்துக் கொண்டான் . ஆனால் அவனுக்கு தெரியவில்லை அவளிடம் அதிகமான காதலும் .. அதைத்தாண்டி அவளிடம் உரிமையும் .. காதலுக்கு அடுத்த காமமும் அவன் மனது அவளிடம் தேடுகிறது என்பதை .
காதல் என்ற வார்த்தையை வெறுப்பவனுக்கு அதை காதல் என்று ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை . ஒவ்வொரு நாளும் அவனுக்குள் இருக்கும் அவள் மீதான காதல் வளர்ந்து கொண்டே போனது . அவன் அம்மாவுடன் அவளுடைய நெருக்கம் .. அவள் அமைதி .. அவனுக்கு அவள் செய்யும் பணிவிடைகள் .. “இந்த அன்பு என் வாழ்க்கை முழுமைக்கும் வேண்டும்” என்று அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது .
இன்னொரு பக்கம் “அவள் சிறு வயது பெண் .. அவனுக்கு குறைகள் உண்டு .. அவள் வாழ்க்கை நிம்மதியாக மகிழ்ச்சியாக இன்னொருவருடன் அமைய வேண்டும்” என்றும் நினைத்துக் கொண்டான் . இப்படி அவனுக்குள்ளே அவன் போராட ஆரம்பிக்க .. ஆபீஸில் இருந்த நிரஞ்சனா பிரச்சனை வேறு அடிக்கடி வர .. அவன் மனஅழுத்தம் அதிகமாகி போனது .
அவளை நேசிக்கும் மனதை அடக்கி செந்தமிழிடம் கோபமாக நடந்து கொண்டான் இளமாறன் . அவன் அவளை நெருங்காமல் இருக்க நினைத்து அவள் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டான் . அவளுக்கும் வெறுப்பு வருமாறு பேசினான் .
ஆபீஸில் காட்ட முடியாத உச்சக்கட்ட கோபத்தை எல்லாம் அவள் மேல் காட்டினான் . மனிதர்கள் இரண்டு வகை .. பிரச்சனை என்று வரும்போது தான் நேசிப்பவர்களிடம் சொல்லி அழுது விடுவது .. இன்னொன்று தான் நேசிப்பவர்களிடம் அந்த கோபத்தை காட்டி விடுவது .. இரண்டும் சரணாகதி அடைதல் தான் .
ஆனால் செந்தமிழிடம் அன்பை காட்ட தயங்குபவன் கோபத்தை மட்டும் தயக்கம் இல்லாமல் காட்டினால் எப்படி ?? அதுவும் அவளை வார்த்தைகளால் வதைத்து .. முதல் முத்தத்தில் அவன் காட்டிய வன்மை எல்லாம் சைக்கோத்தனம் தான் . செய்த பிறகு மனம் வருந்தி என்ன பயன் . இளமாறன் அவளை கஷ்டப்படுத்துகிறேன் என்று நினைத்து இன்னும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானான் .
யாரிடமும் இதை எல்லாம் பகிர்ந்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தவித்தான் . செந்தமிழை விட்டு விலக நினைத்து அவளை பற்றியே நினைக்க ஆரம்பித்தான் . அவளை தேட ஆரம்பித்தான் . வெளியே செல்ல விடாமல் அவளை தனக்கு அருகிலேயே வைத்து கொள்ள நினைத்தான் .
அன்று குடித்து விட்டு வந்தவனின் உடலும் மனமும் அவளை தேடியது .
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நேசம் கொண்டவனது அருகாமை போதும் என்றெண்ணி அவனது திருமண திட்டத்திற்கு சம்மதித்து இருக்கின்றாள் தமிழ்.
கண்களில் வழியும் காதலுடன் கண்முன் இருப்பவளிடம் ஒருவித ஈர்ப்புடன் அவள் பாதுகாப்பிற்காக திருமணம் செய்துள்ளான் மாறன்.
அவள் மீது ஆசைக்கொண்டு மனம் சாய்ந்தாலும் தனது குறையையும் தான் அவளுக்கான வாழ்க்கை இல்லை என்பதனையும் நினைவில் நிறுத்தி அவளே அவனை வெறுப்பதைப்போல் நடந்துக்கொண்டுள்ளான்.
அவனாகவே தமிழுக்கும் சேர்த்து முடிவு எடுத்து செயல்படுத்தி தானும் வருந்தி அவளையும் வருத்தியுள்ளான்.
ஒருமுறையாவது அவள் எண்ணம் என்ன நிலை என்னவென்று கேட்டிருக்கலாம்.
அவன் கேட்கும் நிலையிலேயே இல்லை.. போராட்ட மன நிலையிலேயே புரிதல் இல்லாமலே எல்லாவற்றையும் செய்து விட்டான் ..
தங்கள் தொடர் கருத்துகளுக்கு பேரன்புகளும் நன்றிகளும் தோழி