
கர்ணன் நீல நிறச் சட்டையும், வெண்ணிற வேட்டியும் அணிந்து வெளியே செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனது அப்பா கோவர்தனன் அவன் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றார்.
அவனும் அதைப் புரிந்து கொண்டு, “நீங்க சொன்ன வேலையை நான் செய்து முடிச்சிட்டேன்! நாட்டுக்கு நல்லது செய்கிறோமோ இல்லயோ, பாவம் செய்யாம இருந்தா போதும். கூடிய சீக்கிரம் வரப்போகும் பஞ்சாயத்துத் தேர்தலிலும், ஊர்த் தலைவர் தேர்விலும் கவனமா இல்லன்னா, அவங்க இந்த ஊரையே அழிக்கவும் தயங்க மாட்டாங்க!” என்றான்.
மகன் கூறுவதில் உள்ள உண்மை புரிந்தாலும், தங்களை விடப் பல மடங்கு வசதியில் உள்ளவர்களை எதிர்த்து வழக்காடினால், அது கடைசிவரை எதிர்மறை விளைவுகளைத்தான் தோற்றுவிக்கும் என்று கோவர்தனன் அஞ்சினார். அதன் பிறகான நாட்கள் அவர்களின் பிடியில் மாட்டிக்கொண்டு அவமானப்படவும், கஷ்டப்படவும் வழிவகுக்கும் என்பதால் என்ன செய்வது என்று அவர் திணறினார்.
கர்ணன் தனது அப்பாவைப் பார்த்து, “தப்பு செய்தவர்களே சும்மா இருக்க, நீங்க ஏன்பா இத்தனை தூரம் அவர்களுக்காகப் பரிதாபப்படணும்? எத்தனை எத்தனை உயிர்களை அழித்துக் கொட்டம் அடிச்சிருக்காங்க! இப்பவும் பார்த்துட்டுச் சும்மா இருந்தா, அவர்களது தவறை நாமும் ஊக்குவிப்பது போல் ஆகாதா? நமக்குத் தெரியாம இதுபோல எத்தனை முறை நடந்ததுன்னு யாருக்குத் தெரியும்? அப்பாவையும் மகனையும் சும்மா விடக்கூடாது!” என்றான்.
“கர்ணா! அவசரப்படாம இருந்து இந்த விஷயத்துக்குத் தக்க தீர்வு காண்பது நல்லது. நாம் எடுக்கும் அதிரடியான முடிவுகள் நம்மையே துரத்தியடிக்கும் காலம் வந்துடக்கூடாது.”
அதற்கு மேலும் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அவர் அமைதியாக நின்றார். அவரது காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் கர்ணன். அவர் உள்ளம் நெகிழ்ந்தது. அதற்கு மேல் மறுத்துரைக்க முடியாமல் தலையை மட்டும் அசைத்தார். அவனுக்கும் அது மட்டுமே போதுமானதாக இருந்தது. விரிந்த புன்னகையுடன் தாய் அனுராதா மற்றும் தங்கை சிந்துவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.
சாந்தனு விரைந்து வந்து அவன் முன்பு நின்றான்.
“என்னடா தம்பி, உனக்கு வேறு வேலையே இல்லயா? ஏதோ பலராமர் தன் சகோதரன் கிருஷ்ணனைக் காத்தது போலவும், லட்சுமணன் தன் அண்ணன் ராமருக்குத் துணையா இருந்தது போலவும், எப்பவும் என் கூடவே இருக்கே!”
அண்ணனின் வார்த்தையில் தம்பியின் உதடுகள் மலர்ந்தன.
“அண்ணா! அவர்கள் அளவுக்கு வலிமையும் பராக்கிரமமும் இல்லாம இருந்தாலும், என்னால் முடிஞ்ச வரை உங்களுக்கு உதவியா இருப்பேன். இன்னைக்கு ஊர்க்கூட்டம் இருப்பதால் நீங்களும் அங்குப் போவீர்கள்னு தெரியும். நானும் கிளம்பி வந்தேன்!”
“எனக்குப் பாதுகாப்பாகவா?” கர்ணன் இடக்காகக் கேட்டதும், “அப்படியும் கூடச் சொல்லலாம்!” என்றான் அவன் தம்பி. இருவரும் இணைந்து சிரித்தார்கள்.
வீட்டிலிருந்து நேராக ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார்கள். அங்கு நின்று ஏக்கமாக அவனையே பார்த்த திகழினியின் பார்வையில் அவன் உள்ளம் தடுமாறியது.
‘என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?’ என்ற கேள்வியைத் தாங்கி நின்ற அவளது விழிகள், அவனை ஒரு கணம் அசைத்துப் பார்த்தன. இருப்பினும், தான் போக வேண்டிய காரியம் எத்தனை முக்கியமானது? அது மட்டும் நினைத்தது போல நடந்து விட்டால் திகழினி எதிரி வீட்டு வாரிசு ஆகவும் வாய்ப்புள்ளது என்பதால், பேசாமல் சென்றுவிட நினைத்தான். ஆனால் அவனது தம்பி சாந்தனு, திகழினியின் மனதைப் புரிந்து கொண்டு அண்ணனிடம் அவளுக்காகப் பேசிவிட ஆசைப்பட்டான்.
“அண்ணா, அந்தப் பெண்ணுக்கு உங்க மீது எத்தனைப் பாசம் இருந்திருந்தா, நேற்றிரவு கூட வீட்டையும், காட்டு விலங்குகளையும் ஊர் மக்களையும் நினைச்சுப் பார்க்காம அந்த நேரத்துல உங்களைப் பார்க்க வந்து இருப்பாங்க! அன்னைக்குக் கோவிலிலும் இப்பவும் அவங்க கண்ணுல தெரிகிற ஏக்கம், பார்க்குற எனக்கே கஷ்டமா இருக்கு. உங்களுக்கு எதுவுமே இல்லயா?” என்று கேட்டான்.
கர்ணன், “எனக்கு எதுக்குத் தோணணும்? நான் அந்த மாதிரி எண்ணத்துல யாரையும் நினைச்சதும் இல்ல, பழகியதும் இல்ல” என்று விட்டேத்தியாக பதிலளித்தான்.
“அண்ணா, பெரியவங்களா இருந்துட்டுப் பொய் சொல்றது தப்பு இல்லயா? அவங்க பாவம்! அப்பா செய்த தப்புக்கு மகள் என்ன செய்வார்?”
கர்ணன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பி நடந்தான்.
“என்ன அண்ணா, எதுவுமே சொல்லாம போறீங்க? உங்களுக்குப் பிடிக்கலைன்னா உங்க முகம் ஏன் வாடுது? நிஜமாவே உங்க மனசுல அவங்க இல்லயா?” என்று மீண்டும் வினவினான்.
கர்ணன் வாசலை நோக்கி வேக நடை போட்டான். பதில் கூறாமல் அவன் செல்வதிலேயே தெரிந்தது, அவன் இந்தப் பேச்சைத் தவிர்க்க முயல்கிறான் என்று.
“வா நேரமாகுது! நேத்து காவலில் வச்சிருந்த நாலு பேரும் இப்போ எப்படி இருக்காங்க? அவர்களை ஊர்க் கூட்டத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து இருக்காங்களா பார்க்கணும். திருமலை ஆட்களால் தவறா எதுவும் நடந்துடக் கூடாது” என்று புல்லட்டில் ஏறி விரைந்தான்.
இதற்கு மேல் திகழினி விஷயமாகப் பேச முடியாது என்று சாந்தனு அமைதியாகிவிட, கர்ணன் துரிதமாக அவ்விடத்தை வந்தடைந்தான். நாலு பேரும் தயாராக இருப்பதைக் கண்டதும் நிம்மதியாக மூச்சு விட்டான்.
“வேலவா, இவங்களுக்குத் தேவையானது எல்லாம் செய்தாயிற்றா?”
அவன் “ஆமாம்” என்று தலையாட்டியதும், “நல்லது! அப்ப உடனே அங்குப் போயிடலாம் இல்லயா?” என்றான் கர்ணன்.
“போகலாம். அதுக்கு முன்னே நேத்து நடந்தது பற்றி அவங்க கிட்டே தெளிவா கேட்டுட்டுப் போவது நல்லது. ஒருவேளை அங்கு வந்ததும் சம்பந்தப்பட்ட நபரைக் கண்டு மாத்திப் பேசிட்டா, பிறகு நம்மீது வழக்குத் திரும்பவும் வாய்ப்பு இருக்கு.”
“புரியுது வேலவா! நீ சொல்வது என் நன்மைக்குத்தான்னு நானும் நம்புறேன். இதோ, மறுபடியும் ஒருமுறை கேட்டுடலாம். வா!”
அவனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்றான். நால்வரும் நேற்று வாங்கிய அடியின் வீரியத்தில் முகம் கன்றிப் போய்க் காணப்பட்டனர். அவர்கள் முன்பு வந்து நேற்று நடந்தது குறித்துக் கேட்டு, அனைத்தையும் எழுத்து மூலமாகவும் கைப்பேசியிலும் பதிவு செய்து, அவர்களையும் கையோடு அழைத்து வெளியேறினான்.
பத்து மணி அளவில் ஆலமரத்தடியில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர். கர்ணன் இரு கைகளையும் பின்புறமாகக் கோர்த்துக் கொண்டு யாருக்கும் பயப்படாமல் தைரியமாக நின்றிருந்தான்.
திருக்குமரன் அப்பாவின் அருகில் நின்றான். அவனது பார்வை கர்ணன் மீது நிலைத்திருந்தது. இருவரின் பார்வையும் எதிரும் புதிருமாகக் காட்சியளிக்க, விட்டால் அந்த இடத்திலேயே அடிதடி நிகழ்த்தி விடுவார்கள் போலிருந்தது!
ஊர்த் தலைவராகக் குற்றம் சாட்டப்பட்டுத் திருமலை இருப்பதால், அன்று அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பங்காளி மாணிக்கம் தலைமை தாங்கினார்.
எதற்காக அன்றைய தினம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்ற கேள்விக்கு, கோவர்தனன் விவசாயிகள் புகாரைக் கூறி, மகன் அதன் பொருட்டுச் சென்றதையும் அதற்குப் பிறகு நடந்ததையும் தெளிவு படுத்தினார்.
திருக்குமரன், “ஊர்த் தலைவரான எங்க அப்பா இருக்க, எதுக்காக அடுத்தவரிடம் சொல்லணும்? அவர் கிட்டே சொல்லி இருந்தா இதுக்கு ஒரு நல்ல தீர்வை அவரே சொல்லி இருப்பாரே… இப்படித்தான் அவரைக் குற்றவாளியைப் போல நிற்க வைப்பதா?” என்று சீற்றத்தை அடக்கியபடி கேட்டான்.
“உங்க அப்பாவிடம் ஏற்கனவே பலமுறை சொல்லியும் எந்தத் தீர்வும் கிடைக்கல. அதனால்தான், கோவர்தனன் ஐயாவிடம் முறையிட்டு கர்ணன் ஐயாவிடம் பொறுப்பை ஒப்படைக்க நாங்க எல்லாரும் முடிவு செஞ்சோம்!” என்று ஒரு விவசாயி கூறினார்.
“ஐயாவா? யாருக்கு யார் ஐயா? பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இந்த ஊரைச் சார்ந்தவரா மாறிட முடியுமா? இல்ல, திடீர் வசதி கிடைச்சதும் குடியானவன் கோனா மாறிடுவானா? எங்க அப்பா கிட்டே சொல்லாம இருந்தாலும், என்கிட்டேயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே! இப்படியா எங்களை அவமதிப்பது?” என்று கொதித்தான் திருக்குமரன்.
கர்ணன் கைகள் இரண்டையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்ள, கோவர்தனன் மகனிடம் ‘அவசரப்பட்டு வாயை விட்டுடாதே’ என்று ஜாடை காட்டினார்.
“சரி, நடந்தது நடந்ததா இருக்கட்டும். இப்போ விஷயத்துக்கு வருவோம். யார்கிட்டே சொன்னா என்ன, பிரச்சினை சுமூகமா முடிவுக்கு வந்தா போதாதா?” என்று ஒருவர் கேட்டார்.
“அப்போ யார் வேணும்னாலும் வந்து எது வேணாலும் செய்யலாம். எதுவும் கேட்க கூடாதா? பிறகு, ஊர்க் கட்டுப்பாடு எதுக்கு? ஊர்த் தலைவர் எதுக்கு? உங்களுக்கு உதவி செய்யத் தேவைப்பட்டா நாங்க வேணும், மத்த நேரத்துல எங்களைத் தூக்கி எறிஞ்சிடுவீங்களா?” என்று திருக்குமரன் பேச்சை மடைமாற்றம் செய்ய முயன்றான்.
அதைப் புரிந்து கொண்டு கர்ணன், “தேவையற்ற பேச்சும் வீண் விவாதமும் தவறான வழிக்குத் தள்ளி விட்டுடும். இங்கு எல்லாரும் வந்திருப்பது ஊர் மக்களின் பிரச்சினை குறித்துப் பேசுவதுக்கு மட்டும்!” என்றான்.
திருக்குமரன் அவனை முறைத்துக்கொண்டு, “காட்டு விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தானியங்களையும் பயிர்களையும் நாசம் செய்வதால், அவைகள் வராத அளவுக்கு உயரமான மதில் சுவர்களைச் சுற்றி எழுப்பலாம். மலைப்பகுதியையும் அதை ஒட்டியுள்ள காடு மற்றும் விளைநிலங்களையும் பிரித்து மதில் அமைப்போம். அவ்வளவு தானே?” என்று இளக்காரமாகக் கேட்டான்.
கர்ணன் அவனைப் பார்த்த பார்வையில் வேறு யாராக இருந்தாலும் நடுங்கிப் போயிருப்பார்கள்.
“நீங்க சொல்ற மாதிரி மதில் சுவர் மட்டும் பயன்தராது. அது அங்கு நடக்கும் தவறுகளை நம் கண்களுக்குத் தெரியாம மறைக்கும். இங்கிருந்து யாரும் அங்குப் போக முடியாதபடியும், போகின்ற நபர் குறித்த தகவல்கள் நமக்குத் தெரியும்படியும் இருக்கணும். அடுத்து, மலையிலிருந்து பாயும் அருவி நீரைத் திருப்பி மதில் சுவருக்கு அப்பால் வருமாறு செஞ்சா விவசாயிகளுக்கும் பயனுள்ளதா அமையும்; காட்டு விலங்குகளையும் ஊருக்குள் வராம தடுத்து நிறுத்தலாம். இதைச் செய்தாலே பெரிய உதவியா இருக்கும். அதேநேரம், இதுக்கு முன்பு ஏற்பட்ட இழப்புகள், திருட்டுகளுக்கு என்ன சொல்லப் போறீங்க?”
“யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதோ, அவர்களுக்கு அவர்கள் கேட்கும் பணம் வழங்கப்படும். யாரையும் நாங்க கஷ்டப்பட விடமாட்டோம்” என்று திருக்குமரன் நல்லவனைப் போலக் கூறினான்.
“அடடா! புல்லரிக்குது! இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் மாதம் மும்மாரி மழை பொழியுது!” என்று கிண்டலடித்தான் கர்ணன்.
அவன் கடுமையாகப் பார்த்ததும் அதைத் தூசாகத் தட்டி விட்டு, “விளைநிலங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு தருவது உறுதி. ஆனால், கொல்லப்பட்ட காட்டு விலங்குகளுக்கு என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டான்.
அதில் திருக்குமரன் பதில் கூற முடியாமல் தடுமாறினான்.
கோவர்தனன் வரப் போகும் பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு, “அவங்க தான் எல்லாத்தையும் செய்து தருவதா சொல்லி இருக்காங்களே, அப்புறம் எதுக்குப்பா தேவையில்லாமப் பேசணும்?” என்று மகனை அடக்க முயன்றார்.
“ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேஷ நாட்களிலும் யாரோ வேட்டையாடினா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?” என்று திருக்குமரன் மீண்டும் மழுப்பினான்.
“வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்! நீங்க தப்பு செய்துட்டுப் பழியை அடுத்தவர் மீது சுமத்த வேணாம். நான் பிடிச்சு வச்சிருக்கிற நாலு பேரையும் இப்போ இங்க வரவழைக்கப் போறேன். அப்போதான் உண்மையான நிலவரம் அத்தனை பேருக்கும் தெரிய வரும்; இனி வரும் நாளில் இப்படி ஒரு தப்பை செய்யவும் துணிய மாட்டார்கள்!”
கர்ணன் அதிரடியாகக் கூறியது கேட்டு திருமலை ஆடிப்போனார். அவரது செல்வாக்கிற்கு உட்பட்ட இந்தப் பகுதியில் அதிகாரிகள் வருவதில்லை. இப்போது கர்ணன் உண்மையை உடைத்தால் ஊர் மக்கள் முன்னிலையில் தலைகுனிய வேண்டியிருக்குமே என்று அஞ்சினார். மார்பைப் பற்றிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தவர், கோவர்தனனைப் பார்த்துத் தலையாட்டினார். அவர் அவசரமாகக் கர்ணனைத் தனியே அழைத்துச் சென்றார்.
“நான் சொன்ன வேலையும் நீ செய்த வேலையும் முடிஞ்சிடுச்சு. வா வீட்டுக்குப் போகலாம்.”
அவன் அசையாமல் நிற்கவும், “அப்பா மேல உண்மையிலேயே உனக்குப் பாசம் இருந்தா வா, இல்லயா இங்கேயே நில்லு” என்றார்.
அதில் கர்ணன் அதிர்ந்து போனான். சாந்தனு அப்பாவிடம் பேச முயன்றும் அவர் கேட்கவில்லை. அப்பாவின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு இரு மகன்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர், பிடிபட்ட நான்கு நபர்களிடமும் விசாரணை நடந்தது. அவர்கள் வேட்டைக்கு வந்ததை ஒத்துக் கொண்டதால் அவர்களுக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு 👏
நன்றிகள் சகோதரி
அருமையான பதிவு