
வசீகரனுக்காக மெலிந்திருந்தவள், குழந்தையின் வரவில் இன்னுமே மெலிந்து காணப்பட, அதற்கு தனியாக மருந்துகளை வாங்கி குவித்திருந்தனர் திருவும் பசுபதியும்.
கர்ப்பம் உறுதியான நாளே, மருமகள் கீழ் அறையில்தான் தங்க வேண்டும் என்று திரு கட்டளையிட்டுவிட, அபிக்கும் நாயகிக்கும் இன்னும் வசதியாகி போனது.
வசீகரனுக்கு முன்பாகவே இழையின் செக் அப் தேதிகளை கவனித்து, திருவும் நாயகியும் அவளை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு போய்விடுவர். மொத்தத்தில், இவர்களைத் தாண்டி தான் வசீகரன் மனைவியைச் சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருந்தனர்.
இழை பிரசவத்திற்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில், மருமகளுக்கு அனாவசிய பயணம் கூடாது என்பதால், திருவேங்கடம் திருமணத்தை சென்னையிலேயே நடத்தி முடித்தார்.
வசீகரனும் குழந்தை பிறப்பிற்கு ஏற்ப தன் பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டான்.
இழைக்கு வளைகாப்பு செய்து அழைத்து வந்த பின்னர் இருவாரம் உடன் இருந்தவன், இப்போது திருமண வேலைகளை சாக்கிட்டு ஒரு மாதமாகவே மனைவியோடு வாசம் செய்கிறான்.
“என்னங்க, நான் சமாளிச்சுப்பேன். நீங்க வேலையை பாருங்க,” என்று இழை மறுத்த போதும்,
“இழை, எப்போ குழந்தைன்னு டிசைட் பண்ணினோமோ அப்பவே அதுக்கு ஏத்த மாதிரி ஸ்கெட்யூல் பண்ணிட்டேன். இப்போ நீயும் பாப்பாவும் தான் என்னோட ப்ரையாரிட்டி. அங்க தான் என்னை உங்கிட்டவே விட மாட்டேங்கிறாங்க என்றால், நீயும் ஏன்டி என்னையும் என் பிள்ளையையும் பிரிக்கிற?” என்றான்.
“ஒன்னு இரண்டு நாள்னா பரவால. ஆனா உங்களால மாசக்கணக்கா இங்க இருக்க முடியுமா?”
“ஏன் முடியாம. இதுவும் நம்ம வீடுதானே,” என்று கேட்டவன், பார்கவியின் எண்ணத்திற்கு வண்ணம் சேர்த்து அவரது மகனாகவே நடந்து கொள்ள, அவர்களின் மகிழ்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாக நின்றது.
ஒற்றை பெண் பிள்ளையை பெற்ற தாயின் தவிப்புகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும், வசீகரனின் பேரன்பில் கரைந்து காணாமல் போயிருந்தது.
கால் வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுப்பவனிடம், “விடுங்க, அம்மா பார்த்துப்பாங்க,” என்ற போதும், விடாமல் மகளுக்கு பணிவிடை செய்பவனை காணும் பார்கவிக்கு நெஞ்சம் நெகிழ்ந்து போகும்.
வசீ மட்டுமின்றி, குடும்பமே மகளை முன்னிறுத்தி அவள் நலனை பிரதானப்படுத்தி செயல்படுவதை கண்ட பார்கவிக்கு கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
“என்ன கவி, எல்லாத்துக்கும் அழற.”
“நிஜமாவே நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும் அம்மூ.”
“என்னடி பேசுற?”
“அத்தை மாத்தி சொல்றீங்க. அண்ணி எங்களுக்கு கிடைக்க நாங்க தான் புண்ணியம் செய்திருக்கணும்.”
“சரியா சொன்ன கண்ணா. தம்புக்கு நாங்க எவ்வளவோ பெண்கள் பார்த்தோம். அவங்க சொன்ன விஷயமெல்லாம் தெரிஞ்சா நீ மயக்கமே போட்டுடுவா. உனக்கு தெரியாது. அதெல்லாம் கேட்டு நம்ம வீட்டுக்கு வரப்போற பொண்ணு எப்படி இருக்குமோன்னு ரொம்பவே பயந்து போயிருந்தோம். பிள்ளை கூட வாழ்ந்தா போதும். அவங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும். எங்களை பார்க்கணும்னு அவசியமில்லன்னு நினைச்சு மனசை தயார் படுத்திக்கிட்டோம். ஆனா பிங்கி எங்களுக்கு வரம்டி…”
“சொந்த பெண் மாதிரி எங்களை பார்த்துக்குறா. என் பிள்ளையோட அனுசரணையா இருக்கா.
உங்கண்ணாக்கு பிங்கி காலையில் குட்மார்னிங் சொல்லலைன்னா விடியவே விடியாது தெரியுமா. மூணு ஆம்பளை பசங்க இருந்து என்னடி. பிங்கி வந்த பிறகு தான் வீட்டுக்கே களை வந்திருக்கு. எங்க வீட்டு மகாலக்ஷ்மியை நல்லபடியா வளர்த்து கொடுத்ததுக்கு நாங்க தான் நன்றி சொல்லணும்,” என்று பேசிக்கொண்டே செல்ல,
இழைக்கு லேசாக வலி எடுக்கவும், உடனே மருத்துவமனைக்கு கிளம்ப பரபரத்தார் திரு.
“என்னங்க, பொய் வலியாகூட இருக்கும். இருங்க, கஷாயம் கொடுத்து பார்க்கலாம்,” என்ற நாயகியின் பேச்சை சட்டையே செய்யாது போக, அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க, அங்கே வந்து சேர்ந்தனர் சர்வஜித்தும் ஜீவிகாவும்.
“ஹே, என்னடி இது. உங்களை யார் வரச் சொன்னா. கிளம்புங்க.”
“குழந்தையை நீங்க மட்டும் வெல்கம் பண்ணினா போதுமா. சித்தி சித்தப்பா வேண்டாமா?”
“ஜித்து, என்னடா இது. இன்னைக்கு தானே கல்யாணமாச்சு. எதுக்கு வந்தீங்க. இங்க இவ்வளோ பேர் இருக்காங்க. அவங்க பார்த்துக்கமாட்டாங்களா. முதல்ல நீங்க கிளம்புங்க.”
“முடியாது அண்ணி,” என்று திடமாக நின்ற ஜித்து, மனைவியை பார்க்க அவளும் புரிந்ததாக இழைக்கு விபூதி, குங்குமமிட்டு உடன் அமர்ந்துகொண்டாள்.
பார்வதியின் மருத்துவமனை:
“டேய் மாமா, இன்னும் கிளம்பலையா? ரேணு நீ எப்ப வருவன்னு கேட்டுட்டு இருக்காடா.”
“இப்பதான்டி சர்ச் முடிஞ்சது. ஃபோன் ஆன் பண்ணவும் உன் கால். சரி, ரேணு எப்படியிருக்கா? குழந்தை பிறந்துடுச்சா?”
“இல்லடா. அவளுக்கு இன்னும் டேட் இருக்கு. ஆனா அப்பா கேட்கல. அட்மிட் பண்ணிடலாம்னு கூட்டிட்டு வந்துட்டார்.”
“விடுடி, மாமா அப்படித்தான். நீ சாப்பிட்டியா?”
“முடிஞ்சதுடா. நீ?”
“இன்னுமில்ல. குளிச்சிட்டு சாப்பிடறேன்டி குள்ளச்சி.”
“இந்த கதையே வேணாம் மாமா. ஒழுங்கா சாப்பிட்டுட்டு எனக்கு மெசேஜ் பண்ணு. இல்ல…”
என்றவள் பக்கவாட்டில் நின்றிருந்த பார்கவியை கண்டு, எழிலுடன் பேச்சை முடித்து,
“ஹாய் ஆன்ட்டி,” என்று தோள்களை தொட, “அலர், நீயா?” என்றவர்களின் நலம் விசாரிப்புகள் முடிந்தபின், “பிங்கியை டெலிவரிக்கு சேர்த்திருக்கோம்டா…” என்றார்.
“பிங்கிக்கு கல்யாணமாகிடுச்சா? சொல்லவே இல்ல நீங்க.”
“ஆமாடா. உங்களை ரீச் பண்ண எவ்வளவோ ட்ரை பண்ணோம். முடியலை.
பிங்கிக்கு கொடுத்த டேட் முடிஞ்சும் இன்னும் வலியே வரல. தலைபிரசவம் வேற. அதான் சீஃப் டாக்டர் பார்க்கணும்னு சொன்னாங்க இவங்க…”
அவரின் பதட்டத்தை கண்டவள், “ஒன்னும் பிரச்சனை இல்ல ஆன்ட்டி. முதல்ல நீங்க உட்காருங்க,” என்றவள் உடனே ப்ரீத்திக்கு அழைத்தாள்.
ஆத்விக், அத்வைதுக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த ப்ரீத்தி, “செல்லம், அம்மா கால் பேசிட்டு வர வரைக்கும் எங்கேயும் போகக்கூடாது. அமைதியா விளையாடணும், சரியா?”
“ஓகே மா,” என்றவர்கள் ஒற்றுமையாக விளையாட,
“சொல்லு அலர், பெயின் ஸ்டார்ட் ஆகிடுச்சா?”
“இன்னுமில்ல ப்ரீத்தி. கீர்த்தி கால் பண்ணியிருந்தா நீ எடுக்கலையாமே. ஏன்?”
“ஒரு எமெர்ஜென்சி அலர். அதை முடிச்சுட்டு இப்போ தான் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கேன்.”
“சரி. மாமாவும் கீர்த்தியும் வர லேட் ஆகுமாம். உன்னால முடியுமான்னு கேட்டாங்க. இல்லனா என்னை கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க.”
“ப்ச்… கீர்த்தியோட முதல் ஷோ இது. அவ நல்லபடியா முடிச்சிட்டு வரட்டும். உன்னால இவங்கள சமாளிக்க முடியாது. நான் பார்த்துக்குறேன்.”
“ஓகே. ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?”
“முடியுமாவா? ப்ச்… என்ன பேசுற நீ. விஷயத்தை சொல்லு. செய்றேன்.”
நாதன் கேட்டுக்கொண்டதன் பேரில், வேலை பளுவிற்கு இடையில் ரேணுவிற்கு பிரசவம் பார்க்க ஒப்புக்கொண்டவள். இன்று கீர்த்தி வடிவமைத்த ஆடைகளை முதல் முறையாக காட்சிப்படுத்த சென்றிருப்பதால், பிள்ளைகளின் பொறுப்பையும் சேர்த்து ஏற்றிருந்தாள்.
“அது ஒன்னுமில்ல ப்ரீத்தி. எனக்கு தெரிஞ்சவங்களோட பொண்ணு. எனக்கு தங்கச்சி மாதிரி. அவளை டெலிவரிக்கு இங்கதான் சேர்த்திருக்காங்க. முதல் குழந்தை. ஆன்ட்டி கொஞ்சம் பயப்படறாங்க. அதான் உன்னால பார்க்க முடியுமா?”
“நீ சொல்லி செய்யாம இருப்பேனா. பேஷேன்ட் பேர், எந்த ரூம்னு சொல்லு. நான் முடிச்சுட்டு வந்து பார்க்கிறேன்.”
ப்ரீத்திக்கு தகவல் அனுப்பிவிட்டு, அறைக்குள் நுழைந்த அலரை கண்டதும் இழைக்கு அத்தனை மகிழ்ச்சி.
“பிங்கி ஆன்ட்டி, உனக்கு பெயின் வரலன்னு சொன்னாங்க. ஒன்னும் பயப்பட வேண்டாம். என்னோட சிஸ்டர் தான் உனக்கு பிரசவம் பார்க்க போறாங்க. தைரியமா இருக்கணும், சரியா?”
“எனக்கு பயமில்ல அக்கா. இதோ இவங்களுக்கு தான்,” என்றவள் கணவன் மற்றும் உறவுகளை அலருக்கு அறிமுகப்படுத்தியபின், வசீகரனிடம்,
“என்னங்க, இவங்க தான் அலர்விழி அக்கா. நான் முன்ன இருந்த வீட்டுக்கு எதிர்த்த வீடு அக்காவோடது தான். ரொம்ப போல்ட்டானவங்க. என்னோட ரோல் மாடல். தொட்டதுக்கு எல்லாம் பயப்படக்கூடாது, எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணணும் நமக்காக நாம தான் போராடணும் யாரையும் எதிர்பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க…”
“உங்களுக்கு தெரியுமா? அக்கா லாயரா இருக்காங்க. மாமா இன்கம் டேக்ஸ் ஆஃபிசர்..”
அங்கே வந்த நர்ஸ், “கொஞ்சம் எல்லாரும் வெளியே இருங்க. டாக்டர் வராங்க,” என்றதும் அனைவரும் வெளியேற,
“நான் பார்த்துக்குறேன் ஆன்ட்டி,” என்று இழையோடு அலர் இருந்து கொண்டாள்.
உள்ளே நுழைந்த ப்ரீத்தி, “ஸாரி அலர், கொஞ்சம் லேட்டாகிடுச்சு,” என்றவள் இழையை படுக்க சொல்லி சோதித்து, மருத்துவ குறிப்புகளை பார்வையிட்டாள்.
“வாட்டர் லெவல் கரெக்டா இருக்கு. குழந்தையும் பொசிஷன் வந்தாச்சு. இனியும் டிலே பண்ண வேண்டாம். இன்டியூஸ் பண்ணிடலாம்.”
“அவளுக்கு வலி இல்லையே. நார்மலா ஆகிடும் தானே?”
“டிலே பண்ணலன்னா கண்டிப்பா நார்மல் தான்..” என்றவள் செவிலியரிடம்,
“இவங்க ஹஸ்பன்ட்கிட்ட ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு லேபர் ஷிப்ட் பண்ணிடுங்க,” என்றாள்.
அடுத்த சில மணி நேரங்களில், வசீகரன் துணை நிற்க, சுகப்பிரசவத்தில் இழை அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
ஊரிலுள்ள தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டுதல் வைத்திருந்த குடும்பத்தினருக்கு, பெண் குழந்தை என்றதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.
குழந்தையோடு வந்த வசீகரன், திருவின் கையில் கொடுக்க, அதன் பின் அறைக்கு திரும்பிய இழையின் கைகளுக்கு குழந்தை வந்து சேர சில மணி நேரங்கள் ஆனது.
தொடர்ந்த நன்னாளில், குழந்தைக்கு “திகழினி” என்று பெயரிட, இழையைப் போலவே மொத்த குடும்பமும் அவர்களின் செல்ல இளவரசியை ஆராதித்து கொண்டாடியது.
மேலும் சில வருடங்கள் கழிந்த நிலையில்…
மகளை அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்த இழையின் நெற்றியில் குளிர்ந்த இதழ்கள் பதிய, கணவனின் ஸ்பரிசத்தில் கண்விழித்தவள் கண்டதென்னவோ, திகழினியின் நெற்றியில் அவள் உறக்கம் கலையாதவாறு முத்தமிட்ட கணவனைத்தான்.
ஒரு மாதம் கழித்து காண்பவளுக்கு கனவா நிஜமா என்ற குழப்பத்தில் கண்களை கசக்கி, நிஜத்தை உணர்ந்ததில் விழித்திரை மறைத்தது கண்ணீர்.
“அடுத்த வாரம் தான் வருவேன்னு சொன்னீங்க. இப்போ…” என்றவளின் துடித்த இதழ்களை சிறை பிடித்து, அவளருகே படுத்தவன், முழுதாய் மனைவியை தனக்குள் சுருட்டியிருந்தான்.
“என்னங்க சாப்பிட்டீங்களா?”
“ஷ்ஷ்… கொஞ்சம் அமைதியா இருடி,” என்றவன் இன்னும் அவளை இறுக்கிக்கொண்டு, அவளில் புதைய, வசீயின் குளிர்ச்சி இழைக்கும் பகிரப்பட்டது. “ஹாப்பி பர்த்டேடி,” என்றவனின் அதரங்கள் அவள் செவியை குளிர்வித்தது.
“மூச்சு விட முடியலைங்க,” என்றதும் தன் அணைப்பை தளர்த்தி,
“நீ மெசேஜ் பார்க்கலையா?” என்றான்.
“இல்லையே. பாப்பாவை தூங்க வச்சுட்டு அப்படியே தூங்கிட்டேன்.”
“சரி, சீக்கிரம் கிளம்பு. நேரமாச்சு,” என்றவன் மீண்டும் ஜெர்க்கின் அணிவதை கண்டவள்,
“இப்போவா? எங்கங்க?” என்று கேட்கும் போதே அவர்களின் அறைக் கதவு தட்டப்பட்டது.
“போச்சு… ஏன்டி சொன்னா கேட்கமாட்டியா?”
“நீங்க எப்படி இவ்வளோ சீக்கிரம் வந்தீங்க…” என்றவளை இழுத்து நிறுத்தி, அவளுக்கும் ஒரு ஜெர்க்கினை மாட்டிவிட்டவன், மின்னல் வேகத்தில் கதவைத் திறந்து, எதிரே இருந்த தம்பிகளை இடித்துக்கொண்டே,
“ஜீவி பார்த்துக்கோ,” என்று வெளியேறினான்.
“அண்ணா… தம்பு… பிங்கி…” என்ற குரல்கள் துரத்த, கண்டுகொள்ளாமல் புல்லட்டை கிளப்பி, காற்றைவிட வேகமாக பயணித்தான்.
“என்ன பண்றீங்க? பாப்பா தனியா இருக்கா? எங்க போறோம்?” என்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் போக, இழைக்கோ ஒன்றும் புரியவில்லை.
பின்னே, திருமணத்திற்கு பிறகான இழையின் மூன்றாவது பிறந்தநாள் இன்று.
சென்ற பிறந்தநாளில் வளைகாப்பு செய்து இருவரும் சென்னையில் இருக்க, மொத்த குடும்பமும் நள்ளிரவில் வந்திறங்கி, கொண்டாட்டம் என்ற பெயரில் நாள் முழுக்க மனைவியை அவர்களுடனே வைத்து சுற்றினர். அதில் சுதாரித்த வசீகரன், இம்முறை தன் வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு, நள்ளிரவில் மனைவியை கடத்திக்கொண்டு செல்கிறான்.
நள்ளிரவு குளிரில் பற்கள் கிடுகிடுக்க, வசீயை முதுகோடு கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளால் எதுவும் பேச முடியவில்லை. ஒருவழியாக அவர்களின் கெஸ்ட் ஹவுசுக்குள் வந்ததும், வசீ ஹீட்டரை ஆன் செய்து, கம்பளிக்குள் நுழைந்த மனைவியோடு தானும் நுழைந்து, அவள் மடியில் சாய்ந்தான்.
“அத்தை மாமா என்ன நினைப்பாங்க. இப்படி சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு வந்திருக்கீங்களே. உங்களுக்கே நியாயமா?” என்று முறைத்தவளின் கரங்களோ, தன் போக்கில் வசீயின் சிகையில் அலைபாய்ந்தது.
“சொந்த பொண்டாட்டியையே கடத்திட்டு போற அளவுக்கு வீட்டை கெடுத்து வச்சுட்டு என்னடி பார்வை?” என்றவன் தன் பரிசை கொடுக்க, இழை அமைதியாக பார்த்தாள்.
“ஏன்டி, வேண்டாமா?” என்று வசீகரன் நெற்றி முட்ட,
“பேசாதீங்க நீங்க. போன பர்த்டேக்கும், வெட்டிங் டேக்கும் எல்லார் முன்னாடியும் இப்படிதான் உங்க ஷேர்ட்டை கிஃப்ட் பண்ணி என் மானத்தை வாங்கினீங்க. புதுசா இருந்திருந்தா கூட ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்பேன். ஆனா யார் கேள்விக்கும் பதிலே சொல்ல முடியலை தெரியுமா? அதுவும் ஜீவி என்னை குடைஞ்சு எடுத்துட்டா. ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்..” என்றவளின் விழிகளின் அபிநயத்தில் தன்னை தொலைத்தவன் அவளில் தொலைந்து மீள, இப்போது வசீகரனின் சட்டை இடம் மாறியிருந்தது.
“நீ கேட்டதைத்தானேடி கொடுத்தேன். அதை விட மஸாஜ் செய்ய இது தான் வசதி,” என்றவன் சிரிப்போடு கண் சிமிட்ட, சுவரில் சாய்ந்து அமர அவன் மார்போடு ஒன்றினாள் இழையாள்.
மீண்டும் அவள் முன் பரிசை நீட்டி, “பிரிச்சு பாருடி..” என்றான்.
“ஏங்க, இந்தமுறை வித்யாசமா ஷேர்ட்டுக்கு பதிலா ஷார்ட்ஸ் வச்சிருக்கீங்களா?” என்று பிரித்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது. அதனுள் இருந்த நகை பெட்டியை கண்டு.
“என்னங்க, இது இரண்டு இருக்கு?” என்று கையில் எடுக்கவும், தங்கத்திலானதை இழைக்கு அணிவித்தவன், வெள்ளியில் இருந்ததை அவளிடம் நீட்டினான்.
“என்னங்க, இது எனக்கு மட்டும் கோல்டு. உங்களுக்கு வெள்ளியில வாங்கியிருக்கீங்க?”
“இது உன்னோட கொலுசு. அதை ப்ரெஸ்லெட்டா மாத்தியிருக்கேன். போட்டுவிடு..” என்றவன் அன்றைய நாளை நினைவுகூர,
“இத்தனை வருஷமா வச்சிருந்தீங்களா?”
“ஆமா. முதல்ல உன்கிட்ட கொடுக்க நினைச்சேன். ஆனா அப்போ இருந்த கோபத்துல கொடுக்கலை. இப்போலாம் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி. அதான் உன்னை எப்பவுமே என்னோட வச்சுக்கணும்னு ப்ரெஸ்லெட்டா மாத்திட்டேன்..” என்றதும் அவனை கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தவளிடம்,
“ஆர் யூ ஹாப்பி, இழை?” என்றவன் அவளின் இமைகளில் முத்தமிட,
“என்ன கேள்வி இது. உங்களுக்கு தெரியாதா? இப்போ நான் எவ்வளோ சந்தோஷமா இருக்கேன்னு?”
“தெரியும்டி. உன் கையில இருக்கிறதைவிட, என் கையில இருக்கிறதுதான் உனக்கு அதிக சந்தோஷம்னு தெரியும். ஆனா நான் கேட்டது இது இல்லை…”
“வேறென்ன?”
“அது…” என்று வசீ தயங்க, “என்ன சொல்லுங்க?” என்றவளின் கரம், அவன் கரத்தில் இருந்த ப்ரெஸ்லெட்டை மெதுவாக வருடியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1

