Loading

கிஷோரின் விடியலே ஐஐடியில் தான்.  இப்பொழுது எங்கும் கணினி மயம் தானே.  சில நொடிகளில் எட்டு வருடம் முன்பு பயின்ற மாணவனின் விவரத்தை அறிந்து கொண்டு அவர்கள் கொடுத்த தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள, எடுத்ததோ வேறு நபர்.  உடனே தனது நண்பனுக்கு அழைத்தான். 

 

சைதன்யா “என்னாடா எதாவது தெரிந்ததா”  என்றதும்,  “அவங்க நெம் விவான் டா. நம்பர் கூடுதாங்க பட் வேற நம்பர் மாற்றிட்டாங்க  போல டா.  அட்ரஸ் இருக்கு டா” என

 

“சொல்லு கிஷோர் எங்க இருந்தாலும் பரவாயில்லை டா” என்றதும் கிஷோர் கூறிய முகவரியை குறித்து கொண்டு கிளம்பிவிட்டான். 

 

கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரம். பாதி விமானம் மீதி தனியார் கார் ஒன்றை வாடகை எடுத்து என்று எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மங்களூர் சென்று அடைந்தான். மங்களூரின் அழகையும் சூழலையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. 

 

நேராக நண்பன் கொடுத்த முகவரிக்கு செல்ல, அந்த வெள்ளை நிற பங்களா அவனை வரவேற்றது. இதயம் ஏன் என்று தெரியாமல் படபடப்பாக இருக்க, அடங்க மறுக்கும் படபடப்புடனே உள்ளே சென்றவன் மெதுவாக “சார்…. ஹலோ!!” என,  குரல் கேட்டு வெளியே வந்த வெற்றி  “யாருப்பா   யாரை பார்க்கனும்”  என்க, 

 

“விவான்”  என்று தயக்கமாக சொல்ல,  “இதோ வர நேரம் தான். உள்ள வாங்க” என்ற சிறிது நேரத்திலே விவான் வர, 

 

புதிதாக அமர்ந்து இருக்கும் நபரை கேள்வியாக பார்க்க,  அவனது தந்தையோ  “வாடா.. உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார்.  சாப்பிட கொடுத்தாலும் வேண்டாம் சொல்லிட்டார்” என்று உள்ளே செல்ல, 

 

“சரிப்பா நான் பார்த்துக்கிறேன். அபி எங்க” என்றதுக்கு “வெளியே போனா வருவாடா” என்று தன் வேலை பார்க்க சென்றுவிட்டார். 

 

“ஹாய் நீங்க” என்று எதிரே இருப்பவன் யாரு என்று தெரியாததால் விவான் கேட்க, 

 

“சார் நா.. நான் சைதன்யா. என் கூட வாங்க ப்ளீஸ் நீங்க வந்தா தான் என் அக்கா எங்களுக்கு கிடைப்பா   உங்க மேல உயிரே வைத்து இருக்காள்” என்று அவனை பார்த்த பதட்டத்தில் முழுதாக சொல்லாமல் சைதன்யா சொல்ல, 

 

“ஹாலோ நீங்க யாருனே தெரியாது இதில் உங்க அக்காவை மட்டும் எனக்கு தெரியுமா. நீங்க வேற யாரோனு நினைச்சி என் கிட்ட பேசறீங்க” என்று பொறுமையாக சொல்ல, 

 

“இல்ல சார்.  நீங்க விவான் தானே. நீங்க மறந்து இருக்கலாம் ஆனா என் அக்கா உங்க நினைப்பில் தான் வாழ்கிறா. நீங்க ஒரே ஒரு முறை வந்தா மட்டும் போது அதுக்கு அப்புறமா நாங்க யாரும் தொல்லை பண்ண மாட்டோம்.  அவள் அங்க உயிருக்கு போராடிட்டு இருக்கா” என்று சைதன்யா கெஞ்ச, 

 

“முதலில் வெளியே போங்க யாருனே தெரியாமல்” என்று விவான் கோபமாக உள்ளேயே போகும் முன்,  வெற்றி  “தம்பி அந்த பையன் சொல்றதை கொஞ்சம் கேட்கலாம்ல. உயிர் சம்மந்தப்பட்ட விசயம்” என்றதும், 

 

“அப்பா முதலில் அவங்களை வெளியே போக சொல்லுங்க” என்று உள்ளே சென்றவன் மேல் கோபம் கொண்ட சைதன்யா “ச்சை…. நீங்க எல்லாம் என்ன மனுஷன். எப்படி உங்க கிட்ட என்ன நல்லதை பார்த்தானு தெரியலை என் அக்கா பைத்தியம் மாதிரி எட்டு வருசமா காத்திட்டு இருக்கா” என்று கத்த, 

 

எட்டு வருடம் என்றதும் விவானின் கால்கள் நின்றுவிட்டது.  தான் கேட்டது உண்மையா.  நாம் நினைப்பவர் தானா என்று உறுதியாக தெரியாததால் வேகமாக சைதன்யாவை நெருங்கி, 

 

“யாரு…. யாரு எட்டு வருசமா காத்திருக்கிறா… எனக்கா… எட்டு வருசமாவா” என்று எதோ கண்ணில் தவிப்போடு கேட்க, 

 

அவன் கண்ணில் எதை கண்டானோ உடனே  “ஆமாம் சார் உங்களுக்காக தான் என் அக்கா ஹர்ஷிகா எட்டு வருசமா காத்திருக்கா” என்றதும் தான் கேட்டதை நம்ப முடியாமல் கண்ணில் கண்ணீரோடு தொப் என்று சோபாவில் அமர்ந்தான். 

 

எதோ புரிவது போல் இருந்தது வெற்றிவேலுக்கு.  சிறிது நேரத்தில் விவான்  “ஹரி… நல்லா இருக்கிறாள் தானே, உங்க கூட வந்து இருக்காளா நான் பார்க்கலாமா” என்று ஏக்கமாக கேட்க, 

 

“நீங்க வந்தா தான் அவளை உயிரோடவே பார்க்க முடியும்” என்று கண்ணீரோடு சொல்ல, 

 

“என்ன” என்று புரியாமல் விழித்தவனிடம் நேற்று நடந்தது, தான் தன் தமக்கையுடன் பேசியது அவளின் விபத்து, தற்போதைய நிலை என்று விளக்க,  விவான் கேட்டதும் உறைந்துவிட்டான். 

 

நிலைமையை புரிந்து கொண்ட வெற்றி  “டேய் நீ முதலில் கிளம்பு நான் அபி வந்ததும் வரேன்” என இருவரும் சைதன்யா வந்த காரில் கிளம்பினர். 

 

வழியில் தன் மனதில் உறுத்திய கேள்வியை கேட்டான் சைதன்யா. “நான் கேட்கறேனு தப்பா நினைக்காதீங்க.. அபி யாரு”  என்றதும்  “என் தங்கை”  என்ற பின் தான் சைதன்யாவிற்கு நிம்மதியானது.  இவரது வாழ்வில் வேறு பெண் இருந்தால் தன் அக்கா உடைவது உறுதி.  

 

தற்போது மருத்துவமனையில், அவளின் நிலையை காண முடியாமல் வெளியே செல்ல நினைத்த விவான் அதிர்ந்து திரும்பினான். காரணம் அவனது கையை மெதுவாக பற்றி இருந்தாள் அவனது தேவதை. 

 

“திரும்ப…. விட்டு போறீங்களா” என்று பேச முடியாமல் கஷ்டப்பட்டு பேச,  அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து கையை பற்றி “இனி உன்னை பார்க்கவே முடியாதுனு நினைச்சேன். ஆனால் இது மாதிரி ஒரு சூழலில் பார்ப்பேன்னு  நினைச்சு கூட பார்க்கலை. எட்டு வருசம் முன்ன சொன்னது தான் இருந்தாலும் திரும்ப சொல்றேன் லவ் யூ!!!!   வாழ்க்க முழுக்க நீ.. இல்ல நான் உன் கூடவே இருக்கனும்”  என 

 

“எட்டு வருசமா நானும் சொல்லனும்னு நினைச்சதை இப்ப சொல்றேன்.  ஐ லவ் யூ!!!  நீங்க அப்ப லவ் சொல்லும் போது தெரியலை என் வாழ்க்கையில் முக்கியமான நபராக நீங்க இருப்பீங்கனு. ஆனால் இப்ப என் வாழ்க்கையில் நீங்க ரொம்ப முக்கியமான இடத்தில் இருக்கீங்க” என்னும் போது மருத்துவர் உள்ளே வர விவான் எழுந்து கொண்டான். 

 

வெளியே இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் முழிக்கும் குடும்பத்தாருக்கு நடந்ததை சைதன்யா விளக்கி கொண்டு இருந்தான்.  மருத்துவர் வந்ததும் வெளியே வந்த விவான் ஹர்ஷி குடும்பத்தை பார்த்து சிறிதாக சிரித்து வைத்தான். 

 

வெளியே வந்த மருத்துவர் “பயப்படும் படி எதுவும் இல்லை. ஆனால் தலையில் கொஞ்சம் பலத்த அடி தான். ரொம்ப யோசிக்காமல் பார்த்துக்கோங்க.  காலில் இருக்கிற எலும்பு முறிவு மட்டும் இன்னும் மூன்று இல்ல நான்கு மாதங்கள் ஆகும் கட்டு பிரிக்க, முன்ன மாதிரி நடக்க கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகலாம்.  இந்த வீக் ஹாஸ்பிடலில் இருக்கட்டும் அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் பற்றி யோசிக்காமல்” என்று சென்றதும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது. 

 

உடனே ஜீவிகா  “நான் மில்கிவே கிட்ட சொல்லிட்டு வரேன். அவ வேற கவலையில் இருப்பா” என்று கையில் அலைபேசியை எடுத்துக்கிட்டு ஒட, 

 

பிரகாசம் ஒரமாக நிற்கும் விவானிடம் “தம்பி இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு. ஒரு நல்ல நாள் பார்த்து அப்பா அம்மாவை கூப்பிட்டு வாங்க மேற்கொண்டு பேசலாம்.  எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம். இந்த விசயத்தை முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு கஷ்டத்தை நீங்க இரண்டு பேரும் மனதோடு அனுபவிச்சு இருக்க வேண்டாம்” என

 

“எனக்கு தெரியாதே சார். அவங்க கிட்ட என் விருப்பத்தை சொன்ன போது ‘எனக்கு விருப்பம் இல்லை இனி என்னை தொந்தரவு செய்யாதீங்கனு’ சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறமா நான் எப்படி அவங்களை டிஸ்டர்ப் பண்ணுவேன்.  வாழ்க்கை முழுக்க என் மனசுல  இருக்கிற காதல் போதும் என்று நினைச்சிட்டேன். திரும்ப அவங்களை தேட சொல்லி மனசு அடிச்சிக்கும் ஆனால் ஒரு வேலை அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தா  கண்டிப்பா அதை நேரில் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை” என்னும் போதே வெளியே வந்த நர்ஸ் “பெசன்டை டிஸ்டர்ப் பண்ணாமல் பார்த்துட்டு சீக்கிரமா வாங்க நாளைக்கு அவங்களை ரூமிற்கு மாற்றிடுவாங்க” என்ற அடுத்த நொடி மொத்த கூட்டமும் உள்ளே சென்றது. 

 

“என்ன புள்ள சத்தநேரத்தில் இப்படி அலற விட்டுட்ட.  சின்ன பிள்ளையில் இருந்து உன் விருப்பத்திற்கு மாற எதாவது வீட்டில் நடந்து இருக்கா.  இப்ப மட்டும்  எப்படி புள்ள உனக்கு பிடிக்காததை நாங்க பண்ணுவோம்” என்று ஜோதி கலங்க,  “அக்கா விடுங்க நம்ம கிட்ட சொல்ல முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ. இருந்தாலும் என் கிட்ட கூட சொல்லலை பார்த்தியா . நான் என்ன உனக்கு சித்தியாக  மட்டுமா இருந்து இருக்கேன்.  போடி ஒரு நிமிசம் உசுரே போய்டுச்சு” என்று சித்ராவும், 

 

“நான் தான் முட்டாள் தனமான உன் கிட்ட கேட்காமல் முடிவு எடுத்துட்டேன் என்னை மன்னித்து விடுமா” என்று தந்தையும்,  “குட்டி கழுதைக்கு திமிரு அதிகமாகிடுச்சு. அதான் நம்முடைய நினைப்பே இல்லாமல் சாக துணிச்சிட்டா” என்று அருளும், 

 

“அக்கா!!!  மாமா சூப்பர் ரொம்ப அமைதி போல மிஷ்கா கிட்ட சொன்னால் நம்பவே இல்லை” என்று ஜீவிகா என அனைவரும் ஒரே மூச்சாக பேச ஆனால் அதை எல்லாம் சற்று தள்ளி வேடிக்கை பார்க்கும் தன் தம்பியிடம் பார்வையை செலுத்தினாள்.  ஆனால் அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று ஒதுங்கியே இருந்தது ஹர்ஷியை காயப்படுத்தியது.  அனைவரும் இதை கண்டாலும் எதுவும் கேட்கவில்லை. 

 

இரவு ஒருவரே இங்கே தங்க வேண்டும் என்பதால்,  சித்ரா “நான் இருக்கேன் நீங்க எல்லாம் வீட்டிற்கு போங்க” என்ற அடுத்த நொடி, விவான் “நான் இருக்கலாமா??” என்று தயக்கமாக கேட்க, 

 

சைதன்யா “பரவாயில்லை நீங்க வீட்டிற்கு வாங்க. ரொம்ப தூரம் வந்த களைப்பு இருக்கும்ல.  என் அம்மா இங்க இருக்க போறாங்க தானே அப்ப கண்டிப்பா என் டேட் இங்க தான் இருப்பார்.  அவங்க பார்த்துப்பாங்க” என்றதும்

 

விவான் பாவமாக ஹர்ஷி இருக்கும் அறையை பார்க்க, அதை கண்ட அருள்  “டேய் மாப்பிள்ளையும்  இருக்கட்டும் டா.  அங்க போனாலும் அவருக்கு ஹர்ஷி நினைப்பு தான் மனச அழுத்தும். அதுக்கு இங்கவே இருக்கலாம்” என்று அவன் மனம் புரிந்து சொல்ல,

 

“அப்ப நீங்க வாங்க” என்று தந்தையை அறிந்தே கேட்க,  “இதோட… சீதை இருக்கிற இடம் தான் ராமனுக்கு அயோத்தி.  அவன் அவனுக்கு காதல் வந்தா தான் தெரியும்”  முதல் பாதியை சத்தமாகவும் பின் பாதியை முணுமுணுப்பாக கூற அது அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டு அனைவர் முகத்திலும் புன்னகையை வர வைத்தது. 

 

காதல் இருபதில் வந்தாலும் அழகு தான் அறுபதில் வந்தாலும் அழகு தான். காதல் என்றாலே அழகு தானே?

 

மந்திரங்கள் தொடரட்டும் 

நிலானி 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்