Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 22

 

(I)

 

அவளைத் தேடிட வேறிடம் இல்லை என்றதும் சத்திமாய் உள்ளுக்குள் முழுதாய் சோர்ந்து போனான்,பையன்.

 

எதையும் தெளிவாக யோசித்திடும் அளவு நிதானமும் அவனிடத்தில் இல்லாதிருக்க,மண்டபத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு விநாயகர் சிலையின் முன்னே நின்று கை கூப்பியிருந்தான்,தொண்டைக்குழி ஏறி இறங்கிட.

 

“அவள என் கண்ணுல காட்டு சாமி..” மனமுருக வேண்டியவனுக்கு,விநாயகரின் காதில் இரகசியம் பேசும் அவள் விம்பம் தோன்றிட,ஆழப் பெருமூச்சொன்று.

 

“மச்சி லேட் பண்ணாம போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ணிர்லாம்..வீடு சொந்தக்கராங்கன்னு யார் வீட்டுக்கும் யாழ் போகல..”

 

தோழனின் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதைக் கூரிட,விழிகளை அழுந்த மூடித் திறந்தவன்,முற்றாய் உடைந்திருந்தான்.

 

மண்டபத்தின் கதவை மூடி விட்டு வெளியேறுகையிலும் அவன் மனம் கேட்காது,உள்ளுணர்வு அவளின் இருப்புக்காக அடித்துக் கொண்டது.

 

வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிய போதிலும்,அவன் நடையின் வேகம் தேய்ந்து பாதங்கள் நின்றிட,என்ன தோன்றியதை தெரியவில்லை,பையனுக்கு.

 

மூடிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவனின் செயலில்,அவர்களை அழைத்து வந்த காவலாளியின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.

 

வேக நடையுடன் இரண்டடுக்கு மண்டபத்தில் மாடியேறி ஓய்வறைக்குள் நுழைந்திட, ஆண்களுக்கான பகுதியில் இருந்து வந்த, தடதடவென்ற சத்தமும் அவளின் கத்தலும் போதும்,அவனை ஆசுவாசப்படுத்த.

 

செவி வழி ஊடுருவிய ஓசை,அவனின் ஜீவனை நிம்மதிக்குள் தள்ளியது.

 

ஒரு அழுகைக்குரலும் ஆசுவாசத்தை தந்திடக் கூடும் என்று அவன் காதல் உணர்த்தி விட்டிருக்க,அதை அவன் உணர்ந்து தொலைத்தானா என அவனிடம் தான் கேட்டிட வேண்டும்.

 

“யாழ் எங்க இருக்க..?” தவிப்பும் ஆசுவாசமும் சரிவிகிதமாய் அவன் வார்த்தைகளில் தேய்ந்திருக்க,எத்தனை முயன்றும் குரலில் நடுக்கத்தை அவனால் மறைத்திட இயலவில்லை.

 

அவன், முன்னிலையில் அவள் மட்டும் என்பதால்,திரையிட்டு மறைத்த உள்ளத்து உணர்வுகள் தங்கு தடையின்றி கொட்டி தீர்த்ததோ என்னவோ..?

 

பாதச்சத்தங்களில் யாரேனுமாக இருக்கக் கூடும் என பயந்தவளுக்கு,அவன் குரலை கேட்டதும் தான் உயிரே வந்தது.

 

“சீனியர்..” அழுகையில் தோய்ந்து வந்த குரலில்,அவனுக்கும் தவிப்பு.

 

“பயப்டாத..” அவளுக்கென, அவனுக்கும் சேர்த்து கூறிக் கொண்டான்,அவ்விடத்தில் மின் விளக்குகளை ஒளிர விட்டு வெளிச்சத்தை பரப்பியவாறு.

 

“நா..” என்று அவள் இருக்கும் இடத்தை கூறிடும் முன்பே,வெளியால் பூட்டப்பட்டிருந்த கதவை அவன் திறந்திருக்க,இமைவழி நுழைந்த உருவம் உயிருக்குள் பாய,பையனின் தவிப்பது முற்றாய் அடங்கிப் போனது.

 

அவளின் கலங்கிய விழிகளுடன்,அவனின் கருவிழிகளுடன் கலந்து விலக,அந்த ஒற்றை நொடியில் அவன் ஜீவனில் நிம்மதியின் வழித்தடம்.

 

அவளும் நிதானமாய் இருந்தால் கண்டிருக்கலாம்.அவளுக்கெ அவளுக்கென,ஆரி அவனின் ஆழத்தில் உருவெடுத்து விழிகளில் படம் விரித்து இருக்கும் உணர்வலைகளை;உயிரில் பரவியிருக்கும் திரிபிழைகளை.

 

உயிரில் உண்டான நடுக்கத்துக்கு முற்றுப் புள்ளியை அவள் தரிசனம் வைத்திருக்க,அவளைக் கண்டதும் அவன் அகத்தில் எழுந்து தேகம் முழுவதும் வழிந்த அவ்வுணர்வை என்னவென்று சொல்ல..?

 

வெறுமேன காதல் என்று சொல்ல இயலாது;அப்படிச் சொன்னால் அடுக்கவே அடுக்காது.

 

பரபரவென அவளைத் தழுவி நலமறிந்து மீண்ட விழிகளில் உணர்வுகள் பிளம்பாய் இருக்க,அவளை அள்ளி தன்னோடு சேர்த்துக் கொள்ளும் புதியதோர் தவிப்பு,உயிர் முழுவதும் பரவிக் கிடக்க,அதை உணர்ந்தவனின் ஜீவனின் மின்னல் கீற்று.

 

இத்தவிப்புக்கள் அவன் அகராதியில் இதுவரை இருந்தது இல்லை.இப்போது,அதை தகர்த்து எறியும் தைரியம் அவனுக்கு இல்லவும் இல்லை.

 

தவிப்பது பேரலையென அடித்திட,தகித்தவனோ லாவகமாய் மறைத்து, அழைத்து வந்தான்,அவளை வெளியே.ஓரவிழிகள் அவளை மட்டுமே தழுவி இருந்தன.

 

அவளோ கலங்கிய விழிகளை சிமிட்டி,கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்திட,”அழாத..” என கனிவு மிஞ்சிய வார்த்தைகளையும் அவனிதழ்கள் உதிர்த்தது.

 

அவனுக்கு இத்தனை மென்மையாய் பேச வரும் என்று அவனுக்கு இன்று தான் தெரியும்.அவளிருந்த மனநிலைக்கு அவனின் அக்கறையையும் கரிசனையும் அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

 

அவளோ அழுகையை நிறுத்தாது இருக்க,”அழாதன்னு சொல்றேன்ல..” அதட்டியதும் தான் அழுகை மட்டுப்பட்டது.

 

“திரும்ப அழுதன்னா கொன்னுருவேன்..” மிரட்டியவனின் உள் மனமோ,அவள் கண்ணீரில் சிதறும் தன்னை ஏற்காது வியந்து கொண்டிருந்தது.

 

அதுவும்,”அழுது வடியாதடி..என் மனசு என்னமோ பண்ணுது..” நெஞ்சத்தை தொட்டுக் காட்டி ஏதோ ஒரு வேகத்தில் கூறிட முயன்று நூலிழையில் சுதாரித்து இருந்தான்,மனதின் கூவலில்.

 

அதன் பின்னர் தன்னை நிதானித்து,அவளை வெளியே அழைத்து வந்திட,வாயலில் இருந்த மித்ராவைப் பாய்ந்து கட்டிக் கொண்டு மீண்டும் அவள் அழுதிட,ஐயோவென்றிருந்தது பையனுக்கு.

 

காவலாளியை சமாளித்து விட்டு,இருவரும் படியேறுகையில் போதுமென்றாகி விட்டது.இவர்களின் நிலமை புரியாது,அந்த மனிதரும் பாடு படுத்தி விட்டார்,கேள்விக் கணைகளால்.

 

“இப்போ எதுக்கு திரும்ப அழற..?” அவனுக்கு அவன் தவிப்பு.அவள் கண்ணீரை அவன் உயிரை அசைத்திட,அவனும் என்ன செய்வதாம் அதில் இருந்து தப்பித்திட..?

 

அவளோ,அவனின் அதட்டலுக்கு பயந்து விழிகளில் இருந்து நீரை ஒற்றி எடுத்தவாறு சம்மதமாய் தலையசைத்திட,மித்ராவின் விழிகளில் பல்வேறு கேள்விகள்.

 

அவன் கருவிழிகளை களவாடியிருந்த உணர்வொன்று அவளுக்கு புதிதாய்த் தெரிந்தது.

 

அதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று பேரூந்து ஓட்டுனர் கூறிட,அவர்களை கிளம்பச் சொன்னான்,பையன்.அவனுடன் துணைக்கு வந்த மற்றவர்களும்,வெளிக்கிடுவதாய் உரைத்திட,நன்றி கூறி தலையசைத்திருந்தான்.

 

“ஆட்டோ வர சொல்லி இருக்கேன்..அதுல போலாம்..” பேரூந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த டீக்கடையின் முன்னே அமர்ந்து இருந்தவளிடம் தன்மையாய் உரைத்தவனின், குரலில் இல்லாத மென்மையும் பனிக்கட்டியின் தண்மையும்.

 

மித்ராவின் அருகே அமர்ந்து இருந்தவளோ,சரியென தலையசைத்து வைத்திட,பையனுக்கு அவளிடம் என்ன நடந்ததென்று கேள்வி கேட்க வேண்டிய தேவை.

 

“ஆமா நீ எதுக்கு ஜென்ட்ஸ் வாஷ் ரூம்கு போன..?” என்கவும்,சத்யாவும் அவ்விடம் வந்தான்.

 

அவளைக் காணவில்லை என்று அவனின் பெரியப்பாவின் மகனிடம் தான் அழைத்து கூறியிருந்தது.அவர்களின் எல்லைப் பிரிவில் தான் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறான்,அவன்.

 

இப்போது,அவள் கிடைத்து விட்டதும் அவனுக்கு தகவல் சொல்ல அழைப்பு எடுத்திருக்க,அதை பேசி விட்டு வந்திருந்தான்.

 

“அங்க சிம்பள் இல்லல..அதான் அதுக்குள்ள பொய்ட்டேன்..”

 

“அஹ்ஹான்ன்ன்ன்..” பற்களை நறநறத்தவாறு உரைத்தவனுக்கு தெரியாது போகாதே,அவள் பொய் உரைப்பது.

 

“பொய் சொன்னா எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா..? உண்மய சொல்லு என்ன தான் ஆச்சு..?” அவ்வளவு கடுப்பு அவன் குரலில்.தன்னிடம் மறைக்கிறாள் என்கின்ற ஆதங்கம் சிறு நூலிழையாய் மனதை தொட்டது.

 

அவனின் அதட்டலில் பயந்தவளோ,வழமை போல் அனைத்தையும் கடகடவென ஒப்பிக்க,பையனின் விழிகளில் அனலேறிற்று.

 

“எது லேடீஸ் வாஷ்ரூம்னு கேட்டேன்..சஞ்சய் தான் காட்டுனான்..உள்ளப் போனதும் டோர லாக் பண்ணிட்டான்..” என்றவளின் விழிகளில் அப்பட்டமான பயம்.

 

“எதுக்கு தனியா போன..?யாரயாச்சும் கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தான..?” எகிறியவனும் அவள் விழிகளில் தெரிந்த மிரட்சியில் மௌனமானான்.அவனின் பார்வை மித்ராவையும் சுட்டெரிக்க,அவள் பதில் சொல்லத் தெரியாது விழித்தாள்.

 

கிறுக்குத் தனமாக யோசித்து கதவை அடைத்தது பெரிய விடயம் இல்லையென்றாலும்,அவளிடம் அத்து மீறியிருந்தால்..?நினைத்திடுகையில் அவள் விழிகளில் தன்னை மீறிய கலவரம்.

 

“அப்டிலாம் பண்ண மாட்டான் அந்த பன்னாட..அந்த தைரியம் எல்லாம் அவனுக்கு இல்ல..நீ பயப்டாத..” அவளுக்கு ஆறுதல் மொழிய சரியென ஆமோதிப்பாய் கேட்டுக் கொண்டாலும்,அத்தனை சீக்கிரம் இயல்பு மீளவில்லை,அவள்.

 

மித்ராவோ,பையனின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்திருக்க,அவளுக்குள் சிறு சந்தேகம்.கோர்வையாய் இன்று அவன் நடந்து கொண்டது அனைத்தையும் உருப்போட்டுப் பார்த்திட,விழிகளில் மெல்லிய அதிர்வலைகள்.

 

அவளோ அதே அதிர்வுடன் விழிகளை நிமிர்த்திட,கண்ட காட்சியில் சந்தேகம் உறுதியாவது போல்.

 

“இந்தா இத குடி ஃபர்ஸ்டு..” கையில் இருந்த டீ க்ளாசை தோழியை நோக்கி நீட்டியவாறு நின்றிருந்தவனின் விழிகளில் அத்தனை கனிவு.பூவிதழின் மென்மையுடன் அவளை வருடியது,அவன் பார்வை.

 

அந்தப் பார்வையில் புதிதாய்..அழகாய்..ஆழமாய்..ஆத்மார்த்தமாய் ஏதோ ஒன்று!

 

அவள் முன் அவன் தழைந்து சிதைந்து தளர்ந்திருக்க,அவனின் மாற்றம் தோழியவளுக்கு தெளிவாகப் புரிந்தது.

 

ஆமோதிப்பான தலையசைப்புடன் பாவையவள் வாங்கிக் கொள்ள,அவளிடமும் நீட்டினான்,ஒரு க்ளாசை.நடப்பதை நம்பவும் முடியாமல்,அதை ஏற்க மறுக்கவும் வழியின்றிப் போக,வியப்புடன் தான் வாங்கிக் கொண்டாள்,தோழியவள்.

 

ஆட்டோவை வரவழைத்து அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டு விட்டு தான் இல்லம் விரைந்தான்,பையன்.

 

●●●●●●●●

 

“அப்பு எதுக்கு சாப்டாம போற..?” கையில் நீட்டிய தட்டுடன் வேல்முருகன் இடை மறித்திட,தானும் விரதம் என்றா சொல்லிட முடியும் பையனால்.

 

இலேசாக தலை சரித்து கழுத்தை வருடியவனோ,மறுப்பாய் தலையசைத்திட,அவர் விடுவதாய் இல்லை.அவனுக்கும் ஒப்புக் கொள்ள மனமில்லை.உண்மை தெரிந்தால்,தன்னை கலாய்த்து ஒரு வழி செய்து விடுவார் என்று அவனுக்கு தெரியுமே.

 

“இன்னிக்கி சீக்ரம் கெளம்பனும்பா..கட்டிக் கொடு நா அங்க போய் சாப்புர்ரேன்..” மழுப்பிட,அவரும் நம்பி உணவை கட்டிக் கொடுத்திருந்தார்,சாப்பிட வேண்டும் என்கின்ற கட்டளையுடன்.

 

“என்னிக்கிம் இல்லாம எதுக்குடா அப்பா எனக்கு இன்னிக்கி சாப்பாடு கட்டியெல்லாம் கொடுத்து இருக்காரு..?அவரு தான் விடிஞ்சதுமே சாப்டனும்னு உனக்கே கட்டித் தர மாட்டாரு..என்னயும் சாப்டு தான் போ சொல்லுவாரு..அதான் டவுட்..” அவனுக்கு கட்டிக் கொடுத்த உணவை விழுங்கியவாறு வினவினான்,தோழன்.

 

“ஒரு நாள் கட்டித் தந்தாருன்னா இவ்ளோ கேள்வி கேக்கற..?” தண்ணீரை வாய்க்குள் சரித்தவாறு அவன் அங்கலாய்த்திட,தோழனுக்கும் அவன் நடத்தையில் சந்தேகம் வரவில்லை.

 

பையனோ,அவளுக்கென விரதம் இருக்க,இங்கு அவளோ சிற்றுண்டிச்சாலையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள்,பயம் முழுவதும் நீங்கப் பெற்றிருக்க.

 

“ஒன்னும் பயப்டாத..உன் வீட்டாளுங்க டென்ஷன் ஆயிடுவாங்கன்னும் சொல்ற..கொஞ்சம் ஆறப் போட்டு விஷயத்த சொல்லு..இனிமே அந்த சஞ்சய் எந்த டிஸ்டர்பும் பண்ணாம நா பாத்துக்கறேன்..பயப்டாத..”

 

அவளின் இயல்பு நிலைக்கு காரணம்,அவன் நேற்று அவளிடம் மென்மையாய் தன்மையாய் மொழிந்த இந்த வார்த்தைகள் தான்.

 

அவளும் நம்பினாள்,அவன் நிச்சயம் ஏதேனும் தீர்வை ஏற்படுத்தி தருவான் என்று.அந்த நம்பிக்கை அவளின் பயத்தை நீக்கி நிம்மதியைத் தந்திட்டது.

 

தனிச்சையாய் சுழன்ற விழிகள்,அவளைக் கண்டதும் விரிந்து கொள்ள,அவளின் இமை சிமிட்டலில் அருந்த நீர் புரையேறியது,பையனுக்கு.

 

தலையில் தட்டி இருமியவாறு பையன் நிமிர,இதழ்களில் புன்னகையுடன் தோழன்,அவனைப் பார்த்திருந்தான்.

 

“இவன் வேற..” தோழனைத் திட்டியவனோ,”நா இவளுக்காக விரதம் இருந்தா இவ நல்லா வெட்டுறா..” அவளை அர்ச்சிக்கவும் மறந்திடவில்லை.

 

அவனோ,அவளைக் கடந்து,வெளியே வந்திட,அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றவளை வேண்டுமென்றே அலட்சியம் செய்தவனின் மீசைக்கடியில் அழகான புன்னகை.

 

அதே புன்னகையுடன் ஓய்வறைக்குள் நுழைந்தவனின் விழிகளோ,தன் முகத்தை ஆராய்ந்து பார்த்தது.

 

கற்றை மீசை சுமந்த இதழ்களினோரம் மெல்லிய புன்னகை கண்ணுக்கே தெரியாமல் தேங்கியிருக்க,விழிகளில் புதிதாய் ஒரு மினுமினுப்பு.

 

அவன் நினைத்தது போல,அவள் மீது அவனுக்கு இருப்பது வெறும் ஈர்ப்பல்ல என்பது புரிந்தது பையனுக்கு.ஏற்கவும் செய்திருந்தான்,அவன்.

 

அவளைக் காணாது தேடிய நொடிகளில் இதயம் அடித்த அடிப்பும்,உயிருக்குள் பிரசமாகிய துடிப்பும் ஒட்டு மொத்தமாய் அவனின் மனதை அவனுக்கே கண்ணாடியெனக் காட்டியிருக்க,இரவு முழுக்க அதே யோசனை தான்.

 

உருண்டு புரண்டு விட்டத்தை வெறித்தவாறு விழித்திருந்தவனோ,அனைத்தையும் கோர்த்துப் பார்த்திட,அதன் பின்பும் அவனால் அவள் மீதான உணர்வை வெறும் ஈர்ப்பென புறந்தள்ளிட முடியவில்லை.

 

அவளைத் தேடிடும் விழிகளும்,அவள் விம்பம் நிலைத்ததும் அதில் ஏறிடும் மினுமினுப்பும்,இரவுகளின் நீளத்தை கூட்டும் அவளின் நினைவுகளும்,அவனையே ஆட்டிப் பார்த்திடும் இம்சையான கனவுகளும்,அவளுக்கென வந்த பின் அவனுள் உண்டாகிடும் பிறழ்வுகளும்,அவளால் அவனுக்குள் புதிதாய் வேர் விடும் தவிப்புக்களும் எல்லாம் ஒன்று சேர்ந்து,அவனைத் தாக்க,சிதறியவனுக்கு மனதின் எண்ணமதை ஏற்றே ஆக வேண்டிய நிலை.

 

நேற்று அவன் தவித்த தவிப்பு எவ்வளவென்று தெரியும்.அதன் ஆழம் அவன் அறிந்திருக்க,இதே தவிப்பை மாதங்கிக்காக வேல் முருகனிடம் கண்டு காதல் என உணர்ந்திருந்தவனுக்கு,அவனுள் நிகழ்ந்ததின் பின் புலத்தை மறுக்க இயலுமா என்ன..?

 

காதலென்று புரிந்து விட்டது.அழுத்தக்காரன் ஏற்கவும் செய்து விட்டான்,அதிசயத்திலும் அதிசயமாய்.ஆனால்,மனதில் சிறு சஞ்சலம்.

 

அவன் தனக்கான மனைவியைத் தேடி இருந்தால்,அவனுள் இவ்வாறு இருந்து இருக்காது.அவன் தேடுவது அவனின் தாயுமானவருக்குமான மகளையும் அல்லவா..?

அது தான் மனம் நெருடியது.

 

யாழவளை தந்தைக்கு தெரியும் என்பது அவன் அறிந்ததே.அவள் மீது அவருக்கு விருப்பம் இருப்பதும் அவனுக்குத் தெரியும்.ஆனால்,அது தனக்கான அவர் உருவாக்கிக் கொண்டதோ என்கின்ற சிந்தனை எழாமல் இல்லை.

 

அவள் மீது அளவு கடந்த காதல்,தூது சொல்லியே துளிர்த்து விட்டிருந்தாலும்,அவரின் விருப்பமின்றி அவளைத் திருமணம் செய்திட முடியாது,அவளால்.விருப்பமென்றால் வெறும் விருப்பம் அல்ல,ஆழ் மனதில் இருந்து அவரின் பரிபூரண சம்மதம் வேண்டும் அவனுக்கு.

 

அவனுக்காக,அவருக்கென்று வாழாதவர் அவர்.அவருக்காக அவன் கொஞ்சமேனும் யோசிக்காது இருப்பது எந்த விதத்தில் நியாயம்..?

 

மனம் குழம்பிய குட்டையாய் மாறி, அவனையும் சஞ்சலப்படுத்த,அவன் முகம் யோசனையைத் தத்து எடுத்தது.மறுநாள் கோயிலுக்குச் சென்றிட வேண்டும் என்கின்ற எண்ணம் மனதில்.

 

மறுநாள் சனிக்கிழமை.

 

முற்பகல் வேளையதில் கோயிலுக்கு வந்து சாமி சன்னிதியில் கை கூப்பி நின்றிருந்தான்,பையன்.

 

தோழனொருவனின் அண்ணனின் திருமணத்துக்கு செல்ல வேண்டி இருக்க,அதற்கும் தாயாராகி வழமைக்கு மாற்றமாய் வேஷ்டி சட்டையில் வந்திருந்தவனின் தோற்றம் ஆளை அசத்தியது.

 

கற்றை மீசை இன்னும் தடித்து வளர்ந்திருக்க,வெள்ளே வேஷ்டியும் கருநீல நிற சட்டையும் அணிந்து இருந்தவனோ,சட்டைக் கையை முட்டி வரை மடித்து விட்டிருக்க,நெற்றியில் கீற்றாய் குங்குமம்.

 

இதழ்களுடன் தாடையும் இறுகிப் போய் கிடக்க,அழுத்தமான தோற்றம் என்றாலும்,நெற்றியில் வீற்றிருந்த குங்குமக் கீற்று தனி அழகை கொடுத்தது,அழுத்தக்காரனுக்கு.

 

“எனக்கு யாழ புடிச்சி இருக்கு..அவள தவிர வேற யாரயும் என்னால நெனச்சி கூட பாக்க முடியாதா என்னன்னு எனக்கு தெரில..ஆனா கல்யாணம்னு வரும் போது என்னோட விருப்பத்த மட்டும் பாக்கற நெலமைல நா இல்ல..எங்கப்பாவுக்கு அவள புடிச்சி இருக்கா இல்லியா எதுவும் தெரியல..”

 

“கண்டிப்பா அவ எங்கப்பாவுக்கு மகளா இருப்பா..அதுல டவுட்டே இல்ல..ஆனாலும் மனசு ஒரு மாதிரி அலக்கழியுது..ஒரு வழியா காட்டு சாமி..” மானசீகமாய் வேண்டுதல் வைத்து விட்டு விழிகளை திறந்தவனின் இமைகளில் இமைக்க மறந்தன.

 

●●●●●●●●

 

(II)

 

தென்றல் தந்த இதமது,அவனுக்குள் இதமான சில நினைவலைகளை கொண்டு சேர்த்திட,மெல்லிய புன்னகைத் துகள்கள் இதழோரம்.

 

பத்து நிமிடங்கள்.முழுதாய் பத்து நிமிடங்கள் ஆர்ப்பரிக்கும் அலைகளை பார்த்தவாறு நின்று இருந்தான்,அவன்.ஆர்ப்பரித்த அவன் மனம் அந்த அலைகளிடம் அமைதியைத் தேடியது போலும்.

 

“சார்..” என்ற பவ்யமான குரலில் அழைத்தவாறு பின்னே வந்து நின்றான்,ஆர்னவ்.அவனின் பிரத்தியேக காரியதரிசி.

 

“என்ன ஆர்னவ்..?”

 

“மீட்டிங்கு டைமாச்சி சார்..” கோபப்படுவானோ என்கின்ற பயத்தில் மெதுவாய் எடுத்துரைத்திட,அடுத்த நொடி அவனின் நடை வேகமெடுத்தது.

 

பதினைந்து நிமிடங்களில் அலுவலகத்தை அடைய வேண்டிய கட்டாயம் இருக்க,அவன் சென்ற வேகத்தில் ஐந்து நிமிடங்களில் அது சாத்தியமாகக் கூடும்.

 

பாதையில் சீறிப் பாய்ந்த வண்டி,ஓரிடத்தில் சடாரென்று நிறுத்தப்பட,இருக்கைப் பட்டி அணிந்து இருந்ததால் தப்பித்தான்,ஆர்னவ்.

 

நீண்ட கால்களுடன் வேக நடையில் அந்த தெருவோரக் கடையை அடைந்தவனின் கருத்த கவர்ந்தது,அந்த கறுப்பு நிற குடை ஜிமிக்கி.

 

“சின்னதும் இல்லாம பெருசும் இல்லாம மீடியம் சைஸ்ல ஒரு ஜிமிக்கி வேணும்..” அசரீரியாய் அவள் வார்த்தைகள் செவியுரசிட,அவனிதழ்களில் கசந்த புன்னகை.

 

நொடியில் அதை உள்ளிழுத்தவனோ,அதை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி,பத்திரப்படுத்திட ஆர்னவ்வுக்கு மனம் வலித்தது.

 

அவனைப் பற்றிய அவனுக்கு தெரியாது.ஆனால்,அவனின் காதலைப் பற்றி கொஞ்சம் தெரியும்.அந்த கொஞ்சமே,அத்தனை நெகிழ்த்தி இருந்தது,அவனை.

 

இமைக்காமல் அவனைப் பார்த்திட,அவனோ ஏதேதோ எண்ணங்களுடன் வண்டியைக் கிளப்பி இருந்தான்.

 

இங்கோ,

 

அமைதியான பயணம்.அகல்யாவின் மகனும் உறங்கியிருக்க,அவனின் தலை கோதியவாறு விழி மூடியிருந்தாள்,தென்றல்.

 

“இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துல விருப்பமான்னே தெரிலியே..” அகல்யா மனதுக்குள் புலம்பிட,அதற்குள் அன்பரசன் அழைத்திருந்தார்.

 

அவருடன் பேசி விட்டு வைத்தவளுக்கு மனமெல்லாம்,அத்தனை கனம்.அவரின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாய் இங்கு சூழ்நிலை இருப்பதாய் எண்ணம் மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

 

அதற்குள் அவளின் மகன் சிணுங்க,”துருவ் குட்டி பேசாம தூங்குங்க..” என்று தட்டிக் கொடுத்தாள்,தென்றல்.

 

அவளின் வார்த்தைகளில் அவனிதழ்கள் புன்னகை பூத்திட்ட நொடி தான் நினைவில் வந்தது,அவளின் அவனின் பெயரும் அதுவென்று.

 

விழிகள் விரிய,டாக்டரின் இதழ்கள் அப்படியே பூட்டுப் போட்டுக் கொண்டன.

 

காதல் தேடும்.

 

2025.04.23

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்போ ரெண்டும் வேற வேற கதை தானா .. இங்க ஹீரோ பேரு துருவ் .. அங்க ஆரி .. பார்க்கலாம் ரெண்டு கதையும் ஒன்னு சேருதா இல்லையான்னு